வீட்டுக்குப் போக எளிய வழி

 


 

வீட்டுக்குப் போக எளிய வழி

-----

 

     வீடு என்பதுஅழியாத இன்பநிலையில் உயிர்களை வைக்கின்ற மோட்சத்தைக் குறிக்கும். "வீடு" என்னும் சொல்லுக்குவிடுகைவிடுதலைவினைநீக்கம்முடிவுஅழித்தல்வீடுபேறு என்று பொருள்கள் உண்டு. விட வேண்டியதை விட்டு விட்டால்வீடுபேறு நிச்சயம். அது இல்லறத்தில் தொடங்கும் என்பதால்அதற்காக ஒருவன் வாழ்ந்து பயிலும் இடம் "வீடு" எனப்பட்டது. "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்பது ஆழ்வார் அமுதமொழி. "பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்" என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     முருகனை வாழ்த்தி வாழ்கின்ற வாழ்வுதான் கைவரும் தொண்டு என்று சொன்ன அருணகிரிநாதர்அடயோகம் செய்பவர்களைப் பார்த்து இரங்குகிறார். யாரேனும் ஒருவருக்கு ஒரு காரியம் எளிதில் கைவரப் பெற்றால்அதனை முடிப்பதற்கு மிகவும் தொல்லைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துஇப்படித் துன்பப்படுவதை விடுத்து,  நான் சொல்வது போல் செய்தால் காரியம் எளிதில் கைகூடிவிடுமே என்று சொல்லத் தோன்றும். அந்த வகையில் இறைவன் திருவருளைப் பெறுவதற்குயோகநெறியைக்  கடைப்பிடித்து, அது எளிதில் கைகூடாமல் துன்பப்படுகிறவர்களைப் பார்த்து அருணகிரிநாதர், "இறைவனை எண்ணி உருகி அன்பு செய்யும் வழி இருக்கும்போது இப்படித் துன்பப்படுகிறீர்களே" என்று இரங்குகிறார். 

 

     பத்தியில் ஈடுபட்டுப் படிப்படியாகத் தியானம் செய்து அனுபவத்தில் உயர்ந்தவர்கள் யோக மார்க்கத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது இல்லை. நாயன்மார்களும்ஆழ்வார்களும் யோகத்தைப் பாராட்டவில்லை. யோகம் செய்வதாக எண்ணிக்கொண்டு, பலர் இடையில் சோரம் போய்விடுகிறார்கள். மனத்தை இறைவனுடைய திருவடியில் வைக்காமல்சுவாசபந்தனம் என்னும் மூச்சடக்கலைச் செய்துஅதனாலேயே எல்லாம் அடைந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். பிறருக்கு அவ்வாறே போதிக்கவும் செய்கிறார்கள். 

 

     யோகமுறை நாம் நினைக்கிறது போல அத்தனை எளிதானது அல்ல. சிலகாலம் அதனைப் பின்பற்றினால் போதாது. இளமை தொடங்கி அதற்கேற்ற வாய்ப்பு வேண்டும். நேற்று வரையிலும் உலக இயலில் ஈடுபட்டுக் கிடக்கிறவன்,தொண்டர் கூட்டத்தில் பயின்று மனம் மாறி நெஞ்சு உருகி அடியவன் ஆகவிடலாம். யோகம் அப்படி வாராது. உடம்பை வளைத்து வித்தை காட்டுகிறவனுக்குக் கூட சிலநாட்களிலேயே அந்தப் பயிற்சி உண்டாகாது. இளமை தொடங்கியே உடம்பை வளைத்தும்நிமிர்த்தியும் உடல் உறுப்புகளைத் தான் நினைத்தபடி இயக்கப் பழக வேண்டும். யோகத்தை எட்டு நிலைகளாகப் பிரிப்பார்கள். அதனால் அட்டாங்க யோகம் என்று பெயர் பெறும். இயமம்நியமம்ஆசனம்பிராணாயாமம்பிரத்தியாகாரம்தாரணைதியானம்சமாதி என்று எட்டாகச் சொல்வார்கள்.

 

     யோக மார்க்கத்தில் முதல் படியாக இருப்பது இயமம். தவிர்க்கவேண்டியவைகளைத் தவிர்ப்பது இது. மனிதன் அடிப்படையான பல நல்ல குணங்களோடு இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. இன்சொல் பேச வேண்டும். எல்லோருடனும் அன்பாக இருக்க வேண்டும். 

 

     மூச்சை அடக்கிக் காயசித்தி பெற்று உடம்பைப் பொன் மயமாக வைத்திருப்பதாகச் சொல்லிபிறரையும் மயக்குவதற்காக  விளம்பரப்படுத்திக் கொள்வது யோகத்தின் இலக்கணம் அல்ல. உடற்பயிற்சி செய்து வித்தை காண்பிக்கிறவர்களைப் போல வேண்டுமானால்ஆசனம் முதலியவைகளைப் போட்டு காட்டிக் கொண்டிருக்கலாம். சில ஆசனங்களைப் பிராணாயாமத்தோடு பழக்கிக் கொள்ளலாம். அதோடு நின்றுவிட்டவரை யோகம் கைவரப் பெற்றவர் என்று சொல்ல முடியாது. இறைவனிடத்தில் ஈடுபடுகிற அடியவர்கள் எப்படித் தம்மை மறந்து சமாதி நிலையில் இருக்கிறார்களோஅதுபோல்யோகநிட்டையில் இருப்பவர்கள்முடிந்த முடிவில் அந்த அனுபவத்தைப் பெறுகிறார்கள். ஞானியானாலும்பக்தனானாலும்கர்மயோகியானாலும்அட்டாங்க யோகியானாலும்முடிந்த முடிபாகச் சரீர அபிமானத்தை மறந்து, மேல் நிலையில் உலவுகிற கதியைப் பெற வேண்டும். அதற்குக் கீழே உள்ள படிக்கட்டுகள் பலவகை. அந்தப் படிக்கட்டுகளில் ஏறுவதற்கு மிகவும் அரிதாக இருப்பது யோகப் படிக்கட்டு. அந்த யோகப் படிக்கட்டில் ஏறுகிறவன் முதலில் நல்லவனாக இருக்க வேண்டும். அவன் குணம் தூயதாக இருக்க வேண்டும். அதைத் தான் இயமம் என்கிறார்கள். 

 

     நியமம் என்பது வரையறை. இன்ன காரியத்தை இப்படிச் செய்ய வேண்டும்இன்ன உணவு சாப்பிட வேண்டும்இப்படி நீராட வேண்டும் என்று யோகம் செய்பவர்களுக்குச் சில நியதி உண்டு. வாழ்க்கையில் நாம் நியமத்துடன் இருக்க வேண்டும். இயமம் நியமம் ஆகிய இரண்டும் யோகிகளுக்கு மாத்திரம் உள்ளன அல்லமனிதனாக உள்ள யாவருக்குமே அந்த இரண்டும் வேண்டும். நல்ல குணங்களும்வரையறையான வாழ்க்கையும் மனிதனுக்கு இன்பம் தரும் என்பதில் ஐயமில்லை. உடம்பை வைத்துக் கொண்டு வாழ்கிற நாம் உடம்பை நோய்க்கு உட்படுத்தாமல் இருக்கச் சில நியமங்களுடன் இருக்க வேண்டும். பேச்சில் வரையறைஉணவில் வரையறைநீராடுவதில் வரையறை ஆகியவை இருந்தால்தான் இந்த உடம்பை வலியதாக வைத்திருக்க முடியும். மனத்தையும் தெளிவு உடையதாக வைத்திருக்கலாம். இத்தகைய நியமங்களைப் பின்பற்ற வேண்டியது யோகிகளுக்கு மிகவும் அவசியமாகும். தியானம் செய்வதற்கு உட்கார்ந்தால் வயிறு நிரம்பச் சாப்பிட்டவனுக்குத் தூக்கம்தான் வரும். தியானம் கைகூடாது. தேர்வுக்குப் படிக்கும் மாணவன் கூட வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டானானால்,புத்தகத்தைத் தலையணையாக வைத்துத் தூங்கத்தான் செய்வான். ஏதேனும் ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கே உணவில் வரையறை வேண்டுமானால்மூச்சை அடக்கி யோகம் செய்பவர்களுக்கு நிச்சயமாக உணவில் வரையறை வேண்டும். தாமச குணம் இல்லாத உணவை உட்கொள்ள வேண்டும்.

 

     நியமத்திற்கு அடுத்த படியாக வருவது ஆசனம். ஆசனம் என்றால் இருக்கை உட்காருகிற முறை என்று பொருள். நாம் ஒரிடத்தில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்க முடியவில்லை. கால்களைச் சம்மணம் போட்டு உட்காருகிற வழக்கம் வர வர நமக்கு மறந்துவிட்டது. நாற்காலியும் கட்டிலும் பிறவும் பயன்படுத்துகிற நாம் தரையில் வெகுநேரம் உட்கார ஆற்றல் இல்லாமல் இருக்கிறோம். நாற்காலியில் அமர்ந்து இருப்பதால்சில நோய்கள் வருகின்றன.  ஆனால்நம் நாட்டுக்கு ஏற்றபடி சம்மணம் போட்டு உட்கார்ந்தால் நோய் எதுவும் வருவது இல்லை. யோக மார்க்கத்தில் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது பத்மாசனம் முதலான சில ஆசனங்களே. இப்பொழுதெல்லாம் ஆசனம் போடத் தெரிந்தவர்களைப் பார்த்துயோகிஎன்று நாம் நினைக்கிறோம். ஆசனத்தோடு நின்றுவிடுவது யோகம் ஆகாது. பலர் ஆசனப் பயிற்சியைக் காட்டி அதனால் பொருளை ஈட்டுகிறார்கள். உடம்பிலுள்ள உறுப்புகள் நல்ல வகையில் இயங்குவதற்கு மட்டுமே ஆசன வகை பயன்படும். 

 

     நம்முடைய உள்ளம் இறைவனிடத்தில் ஈடுபடுவதற்குச் சுவாச பந்தனம் என்னும் மூச்சடக்கலைச் செய்ய வேண்டுமென்று யோகிகள் கூறுகிறார்கள்.மனம் வாயுவின் அம்சம் உடையது. மூச்சைக் கட்டினால் மனம் சங்கடப்படும். மனம் தொழில் செய்யாமல் இருக்கிற மயக்க நிலை,மூச்சிலே மயக்க மருந்தை ஊட்டினால் உண்டாகிறது. மூச்சுக்கும் மனத்திற்கும் தொடர்பு உண்டு. 

 

     ஆசனத்திற்கு அடுத்தபடி உள்ளது பிராணாயாமம். சுவாசத்தை உள்ளே இழுத்து நிறுத்தி வெளியில் விடுவதுதான் பிராணாயாமம். நாம் இப்போது உள்ளே இழுத்து வெளியில் விடுவதோடு நிற்கிறோம். அதை உள்ளே கும்பிக்க வேண்டும். எவ்வளவு நேரம் உள்ளே இழுக்க வேண்டும்எவ்வளவு நேரம் அடக்க வேண்டும்எவ்வளவு வெளிவிட வேண்டுமென்று யோகத்தில் கணக்கு உண்டு. பிராண ஆயாமத்தை முறையாகச் செய்துமூலாதாரத்தில் இருக்கும் அக்கினியை மேலே எழுப்புவதற்குரிய வழியில் பயிற்சி செய்பவன் யோகி ஆகிறான். 

 

     மூலாதாரத்தில் இருந்து சகஸ்ராரம் வரைக்கும் மூன்று நாடிகள் இருக்கின்றன. இடப் புறம் இருப்பதை "இடைகலைஎன்றும்வலப்புறம் இருப்பதைப் "பிங்கலைஎன்றும்இரண்டிற்கும் நடுவில் இருப்பதைச்  "சுழுமுனை" என்றும் சொல்வார்கள். இடைகலையில் ஒடும்போது சுவாசம் இடப்பக்கம் ஒடும். பிங்கலையில் ஒடும்போது வலப்பக்கத்தில் ஒடும். சுழுமுனையில் சுவாசம் ஒடும்போது இரண்டு பக்கத்திற்கும் சமமாக ஒடும். இரண்டு பக்கத்திலும் சமமாக ஒடும்போதுதான் நம் மனத்தில் தெளிவு உண்டாகும். சுழுமுனை யில் மூச்சு ஓடவேண்டுமானால்,நாம் நினைத்தவுடன் செய்யமுடியாது. சுவாசத்தை இடைகலை பிங்கலை என்று மாற்றி மாற்றிப் பயிற்சி செய்ய வேண்டும். 

 

     இப்படிச் சுழுமுனையில் மூச்சு ஒடப் பழகி பிறகு சுவாச பந்தனம் செய்தால் மூலாதாரத்தில் சூடு எழும். அங்குள்ள மூலாக்கினியை எழுப்ப வேண்டும். மூலாதாரம் முதல் ஆதாரம். அங்கே அக்கினி எழும்பியவுடன் குண்டலினி சக்தி நீண்டு வழிகாட்டும். இந்த யோக மார்க்கத்தைக் குண்டலினி யோகம் என்றும் சொல்வார்கள்.

 

     எட்டு வகையாகச் செய்கிற அட்டாங்க யோகத்தின் இறுதி நிலை சமாதி. அது கைகூடுகிற வரைக்கும் யோகிகள் பயிற்சி செய்துகொண்டு வரவேண்டும். யோக முறையில் ஈடுபடுகிறவர்களுக்கு, சமாதி நிலைக்குச் செல்வதற்குரிய வாய்ப்புக் கிடைப்பது இல்லை. சில சமயங்களில் இடையில் சில அதிசயங்கள் அவர்களுக்குப் புலனாகும். சில அற்புதங்கள் செய்கிற ஆற்றல் வரும். அந்த அளவில் நின்று தாம் பெறவேண்டியவற்றைப் பெற்றுக்கொண்டவர் போல அவர்கள் ஏமாந்து போவார்கள். சித்தர்கள் என்றும் சொல்லிக் கொள்வார்கள். பெரும்பாலும் ஆசனத்தோடு நின்றுஅதைக் காட்டியே தம்மைப் பெரிய சக்தி உள்ளவர்களைப் போல மக்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்கிறார்கள். எத்தனைதான் யோகம் செய்தாலும் மனம் இறைவனிடத்தில் அன்பு கொண்டிருந்தால் அன்றி அது கைகூடாது. 

 

     அடித்துச் சிங்கத்தை மடக்கலாம் என்றால்அந்தச் சிங்கம் எந்தச் சமயத்தில் தப்பலாம் என்றே எண்ணும். தப்புவதற்கு வழி இருந்தால் தன்னை அடக்குபவனையும் அது கொன்று விடும். அதுபோலத்தான் யோகத்தினால் மனத்தை அடக்குவது. யோகநிலையில் அல்லமால் இறைவனிடத்தில் பத்தி செய்து மனத்தை உருகச் செய்து நிறுத்தினால்அது என்றும் மாறாமல் ஒரே நிலையில் இருக்கும். இந்த நாட்டில் யோக நெறியில் போகிறவர்கள் மிகச் சிலர். யோகத்தைப் பற்றிப் பேசுகின்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள். யோக நெறியில் சென்று நோய்வாய்ப்பட்டு உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொண்டு திண்டாடுகிறவர்கள் பலர். யோகம் கைவரப் பெற்றவர்கள் என்று சொல்கிறவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கலாம். அவரையும் எளிதில் காண முடியாது. 

 

     அருணகிரிநாத சுவாமிகள் கண்டிப்பது அடயோகத்தை. இந்தக் ஒருவன் ஒரு காரியத்தைப் பிடிவாதமாகச் செய்தால் அவனை 'அடம்பிடிக்கிறான் என்று சொல்வது வழக்கம். அடயோகத்தைச் சாதிப்பது மிகவும் அரிய காரியம். யோக நெறியின் அங்கமாகிய ஆசனம் செய்கின்ற எல்லோருமே இறைவனிடம் பக்தியோடு இருப்பவகள் என்று சொல்ல முடியாது. யோக நெறியில் செல்கிற எல்லோருமே ஆன்ம இன்பத்தைப் பெறுவார்கள் என்றும் சொல்ல இயலாது. உடம்பைப் பலவகையில் சிரமப்படுத்தி மூச்சை அடக்கி ஒடுக்கிக் கோடியில் ஓரிருவர் முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெறுகிறார்கள். அத்தகைய கடுமையான செயலில் பல்லாண்டுகள் முயலாமல்எளிதாக இறைவன் திருவருளைப் பெறலாம் என்று அருணகிரிநாதர் சொல்கிறார். 

 

     தாய் மாடியில் நிற்கிறாள். குழந்தை கீழே நிற்கிறது. தாயிடம் செல்ல வேண்டும் என்று எண்ணிச் சின்னக் குழந்தை ஒவ்வொரு படியாக மெல்ல மெல்ல ஏற முற்படுகிறது. ஏறுவதற்குக் காலில் திண்மை வேண்டும்அந்தக் குழந்தை தன் காலைத் தவறி அவசரப்பட்டுக் கீழே வைத்துவிட்டால் உருண்டு உருண்டு கீழே விழநேரும். படியேற வலியில்லாத இல்லாத குழந்தை கீழே இருந்தபடியே அம்மா அம்மா என்று அழுது கொண்டிருக்கும். அப்போது குழந்தையின் அழுகை ஒலியினைக் கேட்டுத் தாய் கீழே இறங்கி வந்து அதை அணைத்துக் கொள்வாள். உடனே இறங்கி வரவில்லையானாலும் குழந்தைக்கு ஆபத்து ஏதும் இல்லை. எப்படியும் தாய் வந்து அணைத்துக் கொள்ளத்தான் போகிறாள்.

அம்மா இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று மாடிப்படி ஏற ஆரம்பித்தால்,ஒழுங்காக ஏறினால்தான் தாய் உள்ள இடத்தை அடையலாம். பெரும்பாலும் அது குழந்தையால் முடிவது இல்லை.  

 

     நாமே பலப்பல படிகளைக் கடந்து ஏறுவது மிகவும் கடினம். அம்மாவைக் கீழே வரும்படியாகச் செய்யக் குழந்தை போல அழுது புலம்பு என்று சொல்வது போல அருணகிரிநாதர் யோகிகளைப் பார்த்துச் சொல்கிறார்.  "அழுதால் உன்னைப் பெறல் ஆமே"  என்றார் மணிவாசகப் பெருமான். அப்படியானால் யோகம் செய்வதே தவறு என்று பொருள் கொள்ளக் கூடாது. யோகம்,செய்வதற்கு அரிதுதான். செய்து முடிக்கலாம் என்று நினைக்கிறவர்கள் அதற்குரிய தகுதிகளை எண்ணிப் பார்க்க வேண்டும். தகுதியோடு நம்மை வழி காட்டி அழைத்துச் செல்லும் குருநாதர் வேண்டும். யோகம் செய்யத் தொடங்கும் பலரும் ஆசனத்தோடு வரை கூடச் செல்வதில்லை.  பிரணாயாமம் வரை செல்கிறவர் வெகுசிலர். அதற்குமேல் உள்ள படியை அடைய முயன்று மூச்சுத் திணறி வயிறு வெடித்து இறந்து போகிறவர்கள் சிலர். அதனால்தான்,உயிரின் மீதுள்ள இரக்கத்தால் இந்த யோகநெறியைப் பக்தர்கள் அருளாளர்கள் கண்டிக்கின்றார்கள்.

 

     உடம்பை விரதங்களால் வாட்டுவதையே வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

"வீடும் ஞானமும் வேண்டுதிரேல்விரதங்களால்

வாடின் ஞானம் என் ஆவதும்எந்தை வலஞ்சுழி

நாடிஞானசம்பந்தன செந்தமிழ்கொண்டு இசை

பாடு ஞானம் வல்லார்அடி சேர்வது ஞானமே". 

 

என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

 

இதன் பொருள் ---

 

     வீடும் அதற்கு ஏதுவாகிய ஞானமும் பெறவிரும்புவீரானால்விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்து கூடுமோ திருவலஞ்சுழியை அடைந்து திருஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவது ஒன்றே ஞானத்தைத் தருவதாகும்.

 

     மேலும்தவம் என்பது என்ன என்று அறிவுறுத்த வந்த திருஞானசம்பந்தப் பெருமான், "ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே" என்று காட்டினார். அடியார்களின் திருவடிகளை வழிபடுவதே தவம் என்றார்.

 

     கடுமையான தவத்தைப் புரிந்தவர்க்கும் காணமுடியாத பரம்பொருள் எளிதாக வந்து தம்மை ஆட்கொண்ட தன்மையை நினைந்து உருகிமணிவாசகப் பெருமான்தமக்கு உண்டான அருள் அனுபவத்தைப் பாடி மகிழ்கிறார்.

 

"வான்வந்த தேவர்களும் மால்அயனோடு இந்திரனும் 

கான்நின்று வற்றியும் புற்றுஎழுந்தும் காண்பரிய 

தான்வந்து நாயேனத் தாய்போல் தலையளித்திட்டு

ஊன்வந்து உரோமங்கள் உள்ளே உயிர்ப்பெய்து

தேன்வந்து அமுதின் தெளிவின் ஒளிவந்த 

வான்வந்த வார்கழலே பாடுதும்காண் அம்மானாய்" --திருவாசகம்.

 

இதன் பொருள் ---

 

    வானுலகத்தில் உள்ள தேவர்களும் திருமாலும் பிரமனும் இந்திரனும் காட்டில் பலகாலம் நின்று உணவில்லாமல் உடம்பு வற்றியும்,சுற்றிலும் புற்று எழுந்து நிற்கத் தவம் செய்தும் காண்பதற்கு அரிய இறைவன்அடியேன் இருக்கும் இடத்துக்கு வந்து,நாய் போல இழிந்த அடியேனைத் தாயைப் போலச் சிறந்த அன்பு காட்டிஎன் உடம்புக்குள் புகுந்துஎன் மயிர்க்கால்களுக்கு உள்ளே உயிரைப் புகுத்தி அவை புளகம் போர்க்கச் செய்துதேனின் சுவை வரவும்தெளிந்த அமுதத்தின் சுவையும் ஒளியும் வரவும் செய்த,தம்மைப் போற்றினவர்களுக்கு இன்பம் வரும்படி செய்யும் பெருமையை உடைய நீண்ட திருவடியைஅம்மானை ஆடும் பெண்ணேநாம் பாடுவோமாக!".

 

"ஊன் வாட உண்ணாது,உயிர் காவல் இட்டு

      உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து,

தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா;

      தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்!

கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே

      கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடைபோய்த்

தேன் ஆட மாடக் கொடி ஆடு தில்லைத்

      திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே! 

 

என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். உடலை வருத்தித் தவம் செய்யவேண்டாம். தில்லைச் சித்திரகூடத்தைச் சென்று வழிபடுங்கள்இமையோர் உலகை ஆளலாம் என்கின்றார் ஆழ்வார்.   

 

"துருத்தி எனும்படி கும்பித்து,வாயுவைச் சுற்றிமுறித்து 

அருத்தி,உடம்பை ஒறுக்கில் என் ஆம்சிவயோகம் என்னும் 

குருத்தை அறிந்து,முகம் ஆறு உடைக் குருநாதன் சொன்ன 

கருத்தை மனத்தில் இருத்தும் கண்டீர்முத்தி கைகண்டதே"

 

என்று யோகிகளை நோக்கி அருணகிரிநாதர் சொன்ன பாட்டைப் பார்த்தோம். இப்போது வேறு வகையில் யோகத்தில் முயல்பவர்களைப் பார்த்துக் கூறுகிறார்.

 

     யோகம் என்பது ஞானத்தை அடைவதற்கு உரிய படிநிலைகளில் ஒன்றுதான். சரியைகிரியையோகம்ஞானம் என்ற படிகளில் மூன்றாவது படியாக இருப்பது யோகம். யோகத்தின் முடிவில் ஞானம் வர வேண்டும். யோகத்தினால் உடம்பில் உண்டாகிற தடை முறியுமே ஒழிய,இறைவன் திருவருள் நேராகக் கைகூடாது. அந்த மூன்றாவது படியிலேயே அத்தகைய துன்பம் என்றால், அதற்குமேல் ஞானத்தை எப்படி அடைய முடியும் யோகத்தை மாத்திரம் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் உடம்புக்கும் உள்ளதிற்கும் கேடு. ஒரளவு அதில் வெற்றி பெற்றுவிட்டாலோ அகந்தை தலைக்கேறி விடும். 

 

     யோகமுயற்சியினால் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்குப் போய் அவன் திருவடியைச் சார்ந்துவிடலாம் என்று எண்ணுகிறார்கள். காலில் பலமுடைய குழந்தைகளாக எண்ணி,இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறார்கள். காலில் திண்மை இல்லாவிட்டாலும்மனத்தில் திண்மை இல்லாவிட்டாலும் தடுக்கி விழ நேரும். அப்போது உயிருக்கே ஆபத்து நேர்ந்துவிடலாம். குழந்தை அழும் சத்தம் கேட்டவுடனே தாய் எத்தனை வேலை இருந்தாலும்தான் எந்த இடத்தில் இருந்தாலும்வேலைகளை எல்லாம் விட்டுவிட்டுக் குழந்தை உள்ள இடத்திற்கு ஓடிவந்து வாரி அணைத்துக் கொள்வாள். அப்படி இறைவன் தன்னை நினைந்து புலம்புகிற அடியவரைக் காப்பாற்ற நிச்சயம் வருவான். குழந்தையாகி நாம் அவனை நினைந்து அழுதால், நாம் இருக்கும் இடத்திற்கே அவனை வரவழைத்துவிடலாம். அது எளிய காரியம். 

 

     மோட்ச வீட்டில் புகுவதற்காக மிகவும் அரிய காரியத்தைச் செய்கின்ற யோகிகளைப் பார்த்துபத்திநெறியில் நின்றால் வீட்டில் புகுதல் மிக எளிது என்கிறார். பத்திநெறியில் நிற்கவேண்டுமானால்தவிர்க்க வேண்டியது ஒன்று மட்டுமே உண்டு. முத்திநெறி அறியாத மூர்க்கரோடு முயலக் கூடாது.

 

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

பத்திநெறி அறிவித்துபழவினைகள் பாறும் வண்ணம்,

சித்தபலம் அறுவித்துசிவம் ஆக்கிஎன்னை ஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே"

 

என்று மணிவாசகப் பெருமான் பாடியருளியதை உள்ளத்தில் உறுதியாகப் பற்றிக் கொள்ளவேண்டும்.

 

     காட்டிலே வாழ்ந்திருந்த குறத்தியாகிய வள்ளியம்மைதான் வளர்ந்த குறவர் குலத்திற்கு ஏற்ற வகையில் முருகனை உள்ளத்தில் வைத்துப் பக்தி பண்ணினாள். அவள் இந்திரிய நிக்கிரகம் செய்ய வில்லைதவம் செய்யவில்லை. குலத்திற்கு ஏற்ற முறையில் முருகனை நினைந்து மனத்திற்குள் அன்பை வளர்க்கும் காரியத்தைத் தான் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு யோகம் தெரியாது. தவமுறைகளைத் தெரிந்த குலத்தில் அவள் வளரவில்லை. வேட்டுவ குலத்தைச் சார்ந்துபுன்செய்த் தானியமாகிய தினை முதலியவற்றைக் காப்பாற்றுவதற்காகக் கிளி ஒட்டிக் கொண்டிருந்தாள். ஒன்று மாத்திரம் அவளுக்குத் தெரியும். தன் குலத்திற்குத் தனித் தெய்வமாக இருப்பவன் முருகன் என்பதை நன்றாக உணர்ந்தும் நம்பியும் இருந்தாள். முருகனை எவ்வாறு வழிபடுவது என்னும் முறை அவளுக்குத் தெரியாது. குழந்தை தன் தாயை நினைந்திருப்பது போல எல்லாக் காலத்தும் முருகனை நினைந்திருக்க அவளுக்குத் தெரியும். கருத்தை முருகனிடத்தில் வைத்தபடிகாட்டில் குறத்தியாகத் தினைக் கொல்லையைக் காவல் செய்து வந்தாள். இறைவன் திருவருளுக்குப் பாத்திரம் ஆவதற்கு என்ன என்ன பயிற்சி வேண்டுமென்று சொல்லப்பட்டு உள்ளதோஅவற்றில் ஒன்றுகூட எம்பிராட்டி செய்யவில்லை. அவள் ஆசனம் பயிலவில்லை. ஆனால், தனது உள்ளத்தை இறைவன் இருக்கத் தகுந்த ஆசனமாக மாற்றி இருந்தாள். 

 

     அந்த ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு முருகப் பெருமான் அவளைத் தேடிக் கொண்டு ஓடி வந்தான். தன்னை உள்ளத் தாமரையில் வைத்து உண்மையாக வழிபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய நிலையைப் பாராமல் தானே வலிய வந்து ஆட்கொள்வான் முருகன் என்பதைக் காட்டுவதற்காகவே அந்தத் திருவிளையாடல் நிகழ்ந்தது. "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே அங்ஙனே நின்று வாழும் மயில்வீரனே" என்று முருகனின் பெருங்கருணையைப் போற்றிப் பாடினார் அருணகிரிநாதர். 

 

     வள்ளிநாயகியின் நிலையில் இருக்கிற நம்மைப் போன்றவர்களுக்கும்,தனது கருணை கிடைக்கும் என்பதைப் புலப்படுத்துவதே எம்பெருமான் புரிந்த அந்தத் திருவிளையாடல். அவனை அன்றி வேறு ஒன்றையும் நினையாமல் இருந்தால்அவன் நம்மையும் வந்து ஆட்கொள்வான்காட்டில் இருந்த குறத்தியாகிய வள்ளி நாயகியைப் போலபெரும் கருணையை உடைய பெருமானாகிய முருகன் திருவடியில் கருத்தை வைத்தால்,அவன் தானாக வந்து நம்மை ஆட்கொண்டு அருள் புரிவான்.

 

     முப்பத்து முக்கோடி தேவர்கள் இருக்கும் இடத்தில் கமழும் திருவடி அது. ஆனாலும் அடியார்கள் தலையிலும்உள்ளத்திலும் அது வந்துவிடும். அவர்களை ஆட்கொள்வதற்காக அவர்கள் நடமாடும் இடத்தில் வந்து விடும். வள்ளிநாயகியை ஆட்கொள்வதற்கா"சுனையோடு அருவித் துறையோடு பசுந் தினையோடு இதணோடு திரிந்தவனேஎன்று கந்தர் அனுபூதியில் பாடுகிறார். வள்ளிநாயகி சுனைக்குப் பக்கத்தில் இருக்கிறாளாஅருவியில் நீராடுகிறாளா என்று தேடித் திரிந்துதினைப் புனத்தில் பரண் (இதண்) மீது காவல் கொண்டு இருந்த பெருமாட்டியைக் கண்டானாம் முருகன்.

 

     "கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி,  நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி" என்றார் மணிவாசகப் பெருமான். தேவர்களுக்கு எல்லாம் அரியவன் ஆக இருக்கின்ற பெருமான்அடியவர்களை எளிவந்து இரங்கி ஆட்கொண்டு அருள்புரிகின்றான். பெருங்கருணை மிகுதியினால்அடியவர்களைத் தேடி வந்து ஆட்கொள்ளுகின்ற இறைவனைஅன்பு மிகுதியால் வழிபட்டு வந்தால்எளிதில் வீட்டின்பத்தைப் பெற்று விடலாம். எளிதான இந்த வழி இருக்கவும்உடம்பைப் பலவகையிலும் வருத்திஉணவை வெறுத்துயோகம் கைகூடுவதற்குத் திண்டாடுகின்றவர்கள் மீது கருணை நோக்கம் வைத்துதான் பெற்ற இன்பத்தை அவர்களும் பெறுதல் வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

 

     வீடு என்பது எந்த வழியில் சென்றாலும் ஒன்றுதான். அதன் உள்ளே நுழைந்தவர்களுக்குள் வேறுபாடு இல்லை. அந்த வீட்டுக்குள் நுழைவதற்குப் பல கதவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வாசலிலும் கதவு உண்டு. ஆனால் ஒவ்வொரு கதவுக்கும் நேரே ஒவ்வொரு வகையான பாதை இருக்கிறது.  உண்மையில் மற்ற நெறிகளை எல்லாம்விடப் பக்தி நெறிசெல்லும்போதே இன்பத்தைத் தருவது. முத்தி என்று தனியே ஒர் இன்பம் இருக்கிறதென்றும்பக்தி நெறியினாலே அடைவதற்கு உரியது அது என்றும் சிலர் சொல்வார்கள். ஆனால் பத்தி நெறியில் சென்றவர்கள் அப்படிச் சொல்வது இல்லை. பக்தியே முத்தி இன்பம் ஆகிவிடும் என்பது அவர்கள் கொள்கை. "இறவாத இன்ப அன்பு" என்றார் சேக்கிழார். இவ்வளவு எளிதான வழி ஒன்று இருக்கும்போதுஅரியவற்றுள் எல்லாம் அரிதான யோக நெறியில் சென்று மாட்டிக் கொண்டு வாடவேண்டாம் என்பதே அருணகிரிநாதருடைய கருத்து.

 

"காட்டில் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்,

வீட்டில் புகுதல் மிக எளிதேவிழி நாசி வைத்து

மூட்டிக் கபால மூலாதார நேர்அண்ட மூச்சை உள்ளே 

ஒட்டிப் பிடித்துஎங்கும் ஓடாமல் சாதிக்கும் யோகிகளே".    --- கந்தர் அலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

     கண் பார்வையை நாசியின் நுனியில் வைத்துமூலக்கனலை மூள்வித்துகபாலத்திற்கும் மூலாதாரத்திற்கும் நேரே பொருந்துமாறு சுவாசத்தை உள்ளிடத்தே உலாவுமாறு செய்துஅந்தப் பிராணவாயு வேறு எங்கும் ஓடிவிடாதபடி பிடித்து சாதிகம் செய்கின்ற யோகநெறியில் நின்றவர்களே! காட்டில் வாழுகின்ற வள்ளிநாயகியின் நலைவர் ஆகிய முருகப் பெருமானுடைய திருவடித் தாமரைகளில் உள்ளத்தைச் செலுத்தினால்முத்தி உலகில் செல்லுதல் மிகவும் எளிமையான காரியம் ஆகும்.

 

 

 

 

1 comment:

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...