திருவள்ளுவர் காட்டும் சமயநெறி

 


 

திருவள்ளுவர்காட்டும் சமயநெறி

-----

 

            திருக்குறள் ஓர் அறிவு நூல்திருக்குறள் ஓர் அற நூல்அறத்திலும் சிறந்து விளங்கும் ஞானத்தை வழங்கும் மெய்ஞ்ஞான நூல் ஆகும். திருக்குறளை வடமொழி வேதத்தோடு ஒப்பிட்டுக் கூறுவார் உண்டு. சிந்தித்துப் ஆர்த்தால் ஓர் உண்மை விளங்கும். சிறு தெய்வங்களையும்இயற்கை ஐம்பூதங்களையும் அஞ்சித் தொழும் நெறிகளைக் கூறுவன் வடமொழி வேதங்கள்.  ஆனால்அச்சமின்றிப் பரம்பொருளைத் தொழும் ஞானநெறியைக்  காட்டுவது திருக்குறள். திருக்குறளைசமயச் சான்றோர்களும், ஞானிகளும் போற்றி உள்ளனர். உமாபதி சிவம்திருக்குறளை உளங்குளிரப் பாராட்டுகின்றார். "நிலைத் தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்தமெய் வைத்த சொல்” என்று "நெஞ்சு விடு தூது" என்னும் மெய்கண்ட சாத்திர நூலில் சொல்லி இருப்பதில் இருந்து இது விளங்கும். 

 

     மனித வாழ்க்கை அருமையானது. சாவதற்காக மனிதன் படைக்கப்படவில்லை. சாதாரண மனித நிலையில் இருந்து,  மாமனித நிலைக்கு உயிர்ந்து,அதனினும் மேலான தெய்வ நிலையை அடைந்துபிறவி நோயானது நீங்கப் பெற்றுப் பேரானந்தப் பெருவாழ்வில் திளைப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த மனிதப் பிறவி. இது மதிக்கத்தக்க பிறவி என்பதால்"வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவிமதித்திடுமின்" என்றும்,"மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே" என்றும் பாடினார் அப்பர் பெருமான். மனிதப் பிறவி எப்போது இனிமை உடையதாக இருக்கும்என்றால்,"தெள்நிலா மலர்ந்த வேணியாய்! உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளியதை எண்ணுதல் வேண்டும்.

 

     அப்படி ஆயின்உடம்பைப் பழித்து அருளாளர்கள் பாடி உள்ளார்களே என்று தோன்றலாம். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டுதுயரம் மனை வாழ்க்கை" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,"காயமே இது பொய்யடா! வெறும் காற்று அடைத்த பையடா!" என்று சித்தர்களும் பாடுவதும்  உடம்பின் நிலையாமையை அறிவுறுத்த வந்தவை. மானுட வாழ்க்கையைக் குறித்தவை அல்ல. நிலையாமையை உணர்ந்து ஒழுக வேண்டும் என்பது கருத்து. 

 

     அச்சம் இன்மைக்கும்வீரத்திற்கும் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டியது சமயம்."ஈர அன்பினர் யாதும் குறைவிலார்வீரம் என்னால் விளம்பும் தகையதோ?"என்று தெய்வச் சேக்கிழார் பெருமான் போற்றுகிறார். எனவேஅச்சத்தோடு வாழ்வதற்கு உரியது இல்லை சமயநிலை.  அச்சத்தில் தோன்றிய சமயம் மானுட வாழ்க்கைக்குப் பயன் தாராது. அச்சம்  கீழ்மையானதுஎன்பதைக் காட்ட "அச்சமே கீழ்களது ஆசாரம்"என்றார் திருவள்ளுவ நாயனார்.

 

     சமய வாழ்க்கையில் மேம்பட்டு விளங்கிய அப்பர் பெருமான்"அஞ்சுவது யாது ஒன்றும் இல்லைஅஞ்ச வருவதும் இல்லை" என்று கூறிய உயர்ஞான மொழியையும்தேசியக் கவிஞராகவும் சமய வாழ்க்கை உடையவராகவும் விளங்கிய பாரதியார் "அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையேஎன்று பாடியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அச்சம் என்பது அன்பு நெறிக்குப் பொருந்தாதது. ஆக்கத்திற்கு மாறுபாடாக இருப்பது.

அச்சத்தின் வழிப்பட்ட சமய வாழ்க்கைமானிடச் சாதியை அடிமை ஆக்கும்குற்றவாளிகள் ஆக்கும்பிச்சைக்காரர்கள் ஆக்கும்.

 

     அப்படியானால் அப்பர் பெருமான்"அஞ்சி ஆயினும் அன்புபட்டு ஆயினும்நெஞ்சம் வாழிநினை நின்றியூரை நீ" பாடி உள்ளாரே என்று கருதக் கூடும். அச்சம் என்று அப்பர் பெருமான் குறிப்பிட்டது மரணத்தால் உண்டாகும் அச்சம். கடவுள் இல்லை என்று வீரத்தோடு முழங்குபவர் கூடமரணம் என்றால் அச்சும் கொள்வது கண்கூடு. "பெருநோய்கள் மிக நலியபெயர்த்து செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றாரே" என்று அப்பர் பெருமான் இரங்கிய இழிநிலைக்கு மனிதன் ஆளாவது அஞ்ச வேண்டியது. பிறவியின் குறிக்கோள்பிறவி அற்ற நிலையை அடைவதே. 

 

     கல்விச் சாலையை ஒருவன் அடைவதன் குறிக்கோள்அறியமையினின்றும் நீங்கிநல்லறிவு பெற்று வாழ்வாங்கு வாய்வதற்கே. மருத்துவமனையில் ஒருவன் நாடுவதன் நோக்கம்நோய் நீங்கி நலமாக வாழவேண்டியே. எனவேவாழ்க்கையில் யாராலும் அச்சம் கொள்ளவேண்டிய மரணம் என்னும் பெருந்துன்பத்திற்கு அச்சம் கொண்டாவதுஇறைவன் மீது உண்மையான அன்பு கொண்டாவது வழிபாடு இயற்றுவாயாக என்றுதான் அப்பர் பெருமான் அறிவுறுத்தினார். அஞ்சுதல்அன்பு என்னும் இரண்டு நிலையும் வேறு இயல்பினை உடையன என்பதை அப்பர் பெருமான் பாடிய பாடல் உணர்த்துகிறது.

 

     மதம் - சமயம் ஆகிய சொற்கள் ஒரு பொருள் உடையன போலத் தோன்றலாம். மதத்திற்கும் சமயத்திற்கும் வேறுபாடு உண்டு. 'மதம்'என்ற சொல்லுக்குக் 'கொள்கை'என்பதே பொருள். 

ஒரு கொள்கை உடையார்,பிறிதொரு கொள்கை உடையார் மீது தமது கொள்கையைத் திணிக்க முற்படுவது உலக இயல்பு. அதற்குக் கடவுள் கொள்கையையும் சேர்த்துப் பயன்படுத்துதல் கூடாது. தமது கொள்கையை அடுத்தவர் மீது திணித்து விடவேண்டும் என்று வெறிபிடித்து அலையும் பெரியர்(வெறியர்)களைப் பார்த்து"மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்" என்று தன்மீது வைத்து வள்ளல் பெருமான் பாடுகிறார். சமயம் என்பது வாழ்வியல் நெறியையும்இறையியல் நெறியையும்காட்டுவது. சமயநெறிகளில் கொள்கை வேறுபாடுகள் உண்டு. மனித இனத்திற்குத் தேவையானது சமயம்தான். மதவெறி அல்ல.

 

     சமயம் என்பது ஒருவனை வாழ்வாங்கு வாழ்த் துணை செய்வது. புலன்களைத் திருத்தத் துணைசெய்வது. உள்ளத் தூய்மைக்கு உதவுவது. சமய ஒழுக்கங்கள் பொறிகளோடு தொடர்புடையன அல்லபொறிகள் தூய்மைக் கேடு அடைந்தால்புலனும் தூய்மைக் கேட்டினை அடையும். புலன்கள் அழுக்கு அறுவதற்குப் பொறிகள் வாயிலாக அமைந்தவை. புலன்கள் தூய்மையானால் பொறிகள் துய்மை நெறியில் இயல்பாக இயங்கும். புலன்களை வெற்றி கொள்ளத் துணை புரிவதே சமயநெறி ஆகும். மனத்தில் உள்ள மாசு நீங்கி ஆன்மை தூய்மை நிலையை அடைவதற்கு சமயநெறி துணைபுரிய வேண்டும். வெற்று ஆரவாரத்துக்கு இடம் துருதல் கூடாது. "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்ஆகுல நீர பிற" என்று  திருவள்ளுவ நாயனார் கூறுகிறார்.

 

"பொறிப் புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை

நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள்

அறிப்பு உறும் அமுது ஆயவன் ஏகம்பம்

குறிப்பினால் சென்று கூடித் தொழுதுமே".

 

என்று உலகவரை நெறிப்படுத்துகிறார் அப்பர் பெருமான்.

 

            மெய்வாய்கண்மூக்குசெவிஎன்னும்பொறிகளைப் புலன்களின் வழிப் போகாமல் தவிர்த்து ஒருநெறிய மனம் வைத்து இறைவனை நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறியப்படுகின்ற அமுதாக உள்ளவன் சிவபெருமான் இறைவனும் அவர்க்கு அங்கே வெளிப்பட்டுத் தேனுய் இன்னமுதாய்த் தெரிவரிய சிவானந்தத்தை நல்குவான். 

 

     சமய வாழ்க்கையின் அடிப்படையில் துய்த்தல் நெறிக்கு மாறான - துய்த்தல் நெறியை அடக்குகின்ற பொறிகளைபுலன்களை அழிக்கின்ற - வறட்சித் தன்மையுடைய துறவை உயர்ந்த சமயம் ஏற்பதில்லை. அதனால்சமய நெறியில் துறவே இல்லை என்று பொருள் கொள்ளுதல் கூடாது. வாழ்க்கையிலும் துறவு இருத்தல் வேண்டும். வாழ்க்கையானது துறவுடன் தொடர்பு கொண்டிருந்தால்தான் இன்பம் கிடைக்கும். துறவு என்பது பற்று அற்று இருத்தலே ஆகும். 

 

     இயற்கையோடு இசைந்த வாழ்க்கையே இறைநெறி சார்ந்த வாழ்க்கை. தமிழர்கள் தம் வாழ்க்கையில் மேற்கொண்டு ஒழுகிய சமயநெறியில் பெண்ணை வெறுத்தலும்மனையறத்தை வெறுத்தலும் இல்லை. மற்ற புறச்சமயங்கள் இந்த நெறிக்கு மாறுபட்டு நின்று,கேடு தந்து வந்ததை மாற்றவேண்டிய அவசியம் நமது முன்னோர்க்கு ஏற்பட்டது. "அசைவு இல் செழ்ந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்லவேண்டும்" என்பதற்காகவே அவதரித்தவர் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

     இல்லறத்தை அறத்துப்பாலின் முதல் நிலையில் வைத்து அருளினார் திருவள்ளுவ நாயனார்."அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை"என்று அழுத்தமாகக் கூறுகிறார்."இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலை"என்று இல்லறத்தைப் பாராட்டுகின்றார். 

 

     மனையற வாழ்க்கையில் நின்று "வாழ்வாங்கு வாழ்பவன்வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான்" என்று  திருவள்ளுவ நாயனார் உறுதி கூறுகிறார். "அன்பின் வழியது உயிர் நிலை"என்றார் திருவள்ளுவ நாயனார். உயிர்அன்பில் வளர மனையறம் துணை செய்கிறது. திருவள்ளுவர் கூறும் துறவறம் பெண்ணை வெறுப்பது அல்ல. பற்றை அறுப்பது. நாயன்மார் யாரும் பெண்ணைத் துறந்ததாக வரலாறு இல்லை. "காவி உடுத்தும்தாழ்சடை வைத்தும்காடுகள் புக்கும் தடுமாறிகாய்கனி துய்த்தும்காயம் ஒறுத்தும்காசினி முற்றும் திரியாதேஎன்றுதான் அருணகிரிநாதரும் நம்மை நெறிப்படுத்தினார். ஆனால், பின்னே தோன்றிய துறவு நெறிகள் நடைமுறைக்கு வந்தன. 

 

     சமயம் சார்ந்து வாழும் சமுதாயம் அன்பினால் தழைத்து வளரும்ஒழுக்கக் கேடுகள் தலைகாட்ட மாட்டா சிறைச்சாலைகள் இருக்கமாட்டா. எங்கும் அறச்சாலைகளே நிறைந்து இருக்கும். மனித குலத்தை வேறுபடுத்துகிற புன்மை இருக்காது. அதுவே சமயநெறி சார்ந்த சமுதாயமாக இருக்கும்.வாழ்வியலோடு ஒன்றிய சமயம்காலப் போக்கில் மெய்ஞ்ஞானத்தை வளர்க்கும். 

 

     உலகில் படைக்கப் பெறாமல்என்றும் உள்ளனவாகஇயல்பாகவே அமைந்த பொருள்கள் இரண்டு பொருளின் தன்மை இரண்டு. ஒன்று கடவுள்.  மற்றொன்று உயிர்.  பிறிதொன்று உயிரை இயல்பாகவே பற்றி உள்ள அறியாமை. இவை மூன்றும் படைக்கப் பட்டனவும் அல்லதோன்றியனவும் அல்லஅழியக் கூடியனவும் அல்ல. அனாதியானவை. "பதிபசுபாசம் எனப் பகர் மூன்றில்  பதியினைப் போலபசு பாசம் அனாதிஎன்னும் திருமூலர் திருவாக்கினை ஒட்டிமெய்கண்ட சாத்திர நூல்களால் அறிந்து கொள்ளலாம்.

 

     இம் மூன்றனுள்கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவன். உயிர்களுக்குப் பிறவிக்கடலை நீந்துவதற்குத் துணையானவன் என்று திருவள்ளுவ நாயனார் நாட்டுகிறார். மேலும் தனக்கு உவமை இல்லாத அவன் ஒருவனே தன்னைச் சார்ந்தாரின் மனக் கவலையை மாற்றும் வல்லமை படைத்தவன் என்கிறார்.திருவள்ளுவ நாயனார் காட்டிய கடவுளுக்கு உருவமில்லை. ஒரு நாமம்,ஓர் உருவம் ஒன்றும் இல்லாத அந்தப் பரம்பொருளை"வாலறிவன்" என்றார்.

 

     உயிரும் அறிவுப் பொருள்தான். அது அறிவு பெறுதற்கு உரியது. ஆனாலும்அது இயல்பில் அறியாமையைத் தழுவிக் கிடக்கிறது. தழுவிக் கிடக்கும் அறியாமையில் இருந்து நீங்கி அறிவினைப் பெறும் முயற்சியே மனித வாழ்க்கை. பிறப்பு என்பது பேதைமையை உடையது. அது நீங்சிறப்பு என்னும் செம்பொருளைக் காணும் அறிவை அது பெறவேண்டும். இந்த உண்மையைத் திருவள்ளுவ நாயனார் "பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்செம்பொருள் காண்பது அறிவுஎன்னும் திருக்குறளால் நிறுவினார்.

 

            உயிரைப் பிணித்து உள்ள இந்த அறியாமையை விளக்குவதற்குத்தான் கல்வி,கேள்விஅறிவுடைமை மெய்யுணர்தல் போன்ற பல்வேறு அரிய முயற்சிகளையும்பிற வாழ்க்கை முயற்சிகளையும் அமைத்துக்காட்டுகிறது திருக்குறள். அறியாமை உடைய உயிர்,  அறிவுத் திருவுருவான கடவுளின் துணையை நாடி,  அறிவினைப் பெற்று வளர்தற்குத் துணை செய்தலே வழிபாடு. 

 

     உயிர்கள் தொழிற்படுதல் இயற்கை. மனிதன் அவ்வாறு தொழிற்படுதலை வினைசெய்தல் என்னும் சொல்லால் குறித்தனர்.  உயிர்உயிர்ப்போடு உள்ளமைக்கு அதன் தொழிற்பாடே அடையாளம். வினை செய்தல் நன்மையும் வரும்தீமையும் வரும். நன்மையும் தீமையும்,வினை செய்யும் நோக்கங்களினால் உண்டாவன. வினைகளைச் செய்யும் நோக்கம்வினைகளைச் செய்யும் பொழுது உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் இவைகளுக்குத்தான் பயன்செயலால் நல்வினை போலத் தோன்றும். ஆனால் வழிபாடு செய்யப்புகும் ஒருவன்,அன்பு நிலையைத் தவிரப் பிறிது ஒன்றைப் பெற விரும்பிச் செய்தால்,அவன் எல்லையற்ற இன்பநிலை அடையமாட்டான். அவன் எதை நினைத்துச் செய்தானோ,அதன் பயனே அவனுக்கு வரும். 

 

     நோயின் கொடுமையால் ஒருவன் துன்புறுகிறான். மருத்துவர்அறுவை முதலியன செய்யும்போது நோயாளி இறந்து விடலாம். காட்சியளவில் இது கொலை போலத் தோன்றும். ஆனால்மருத்துவரின் நோக்கம் நோய் நீக்கமாக இருந்தது. எனவேஅதுகொலை ஆகாது.  இது தீவினை ஆகாது. ஆனாலும்பொருள் ஒன்றையே கருதிகவனக் குறைவாக மருத்துவம் செய்ததால் நோயாளார் இறந்துபட நேர்ந்தால்அதுதான் தீவினையாகும். அதன் பயனை மருத்துவன் அனுபவித்தே தீரவேண்டும். அவ்வாறு அனுபவத்திற்கு வரும் வினையின் பயனே "ஊழ்" என்பது.

 

     ஊழின் வலிமை பெரிது. என்பர். ஊழின் பயனை யாரும் தட்டிக் கழிக்க முடியாது. ஆனால் ஊழின் தடத்தை அழித்து எழுத முடியாது என்பது பொருள் அல்ல. நல்வினைகளை அயர்வு இல்லாமல் செய்து வந்தால்ஊழையும் உப்பக்கம் காணலாம். அனுபவத்திற்கு வந்த ஊழை அனுபவித்து நீக்காலம்.

 

     வினைகளின் பயன் மீண்டும் சுழற்சியாக வாராமல் தடுத்து நிறுத்தி உயிரை,இனிய அன்பில் நிறுத்துவதற்குரிய ஒரே வழி வினைகள் செய்யாது இருப்பது அல்ல. ஓயாது வினைகள் இயற்றி உயிர்ப்பாக வாழ்தலே வாழ்க்கை. சமய வாழ்க்கையில்இறைநெறியில் நின்று மனித உலகத்தை நேசித்துத் தூய்மையான நோக்கத்துடன், 'இறைவனின் கருவியாக நாம் தொழிற்படுகிறோம்'  என்ற உணர்வுடன் வினைகளைச் செய்தும்,அவைகளின் பயனை இறைவனுக்கும் மக்களுக்கும் என்று அர்ப்பணித்தால் அவ்வினைகள் அருள்சேர் வினைகளாகும். இத்தகு வினைகளுக்கு உயிரைக் கறைப்படுத்தும் குணம் இல்லை. அல்லாதவை எல்லாம் இருள்சேர் இருவினைகள். இதுதான்திருவள்ளுவர் காட்டும் ஊழியல். 

 

     ஊழ் அனுபவத்திற்கு வருவதற்கும்,உயிர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கும் தொடர்பில்லை. ஊழிற்குக் காரணமான பழைய பழக்கம். அதாவது உழுத கால்வழி உழுதல் போன்ற பழக்க வாசனை. கற்றல்கேட்டல்சிந்தித்தல்தெளிதல் முதலிய முயற்சிகள் மூலமும்பகுத்தறிவைப் பெற்றுப் புதிய பழக்கங்களை ஏற்றுக் கொள்வதன் மூலமும்பழைய பழக்கத்தை மாற்ற முடியும்.ஆனால்அது எளிதானது அல்ல. அதற்கு விலை கொடுக்க வேண்டும். எளிதில் செரிமானம் ஆகாத உணவைச் சுவை காரணமாக உண்டுவிட்டால் கொஞ்சம் வயிற்று வலியைத் தாங்கித்தான் ஆகவேண்டும். ஒரு வேளைக்கு உணவை மறந்து வாயைக் கட்டிப்போடத்தான் வேண்டும். இது நடைமுறைப் பழக்கம்தான். 

 

     நேற்றைய பழக்கத்தின் வழித் தவறுகளை இன்றைக்குத் திருத்தம் உறச் செய்ய வேண்டுமானால்கடுமையான விலை கொடுத்தே ஆக வேண்டும். அது "உலைவு இன்றித் தாழாது உஞற்றுதல்" ஆகும். ஊழை மாற்றும் ஆற்றல் தளர்ச்சி இல்லாத உழைப்புக்கே உண்டு. அதனால் "மெய் வருத்தக் கூலி தரும்"என்றார். 


     உயிர்கள்பல்வேறு பிறப்புக்களை உடையன என்பது வழிவழி வரும் ஒரு கொள்கை. உயிருக்குத் தோற்றமும் இல்லைஅழிவும் இல்லை. அப்படியானால் பிறப்பு என்பது உயிர் தன்னுடைய நிகழ்கால நோக்காகிய இன்ப அமைதியைப் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபடப் போர்த்திக் கொள்வதுதான் உடல்உயிர் உடம்பினை உடுத்தி கொள்ளும்உடம்பினைப் பொருந்துகின்ற நிகழ்வுதான் பிறப்பு. உயிர் எடுத்துக்கொண்ட உடம்புபல்வேறு காரணங்களால் பயன்படாது ஒழியும்போது அதை நீக்குதல் இறப்பு. இது தொடர்ச்சியாக வரும்.

 

     மெய்வாய்கண்மூக்கு,செவி என்னும் பொறிகள் ஐந்தும் உடம்பினைச் சார்ந்தவைபுலன்கள் உயிரினைச் சார்ந்தவை. இவை ஞானேந்திரியங்கள் எனப்படும். தொழிற்கருவிகள் எனப்படும் கர்மேந்திரியங்கள் உடலினைச் சார்ந்தவைஇக்கருவிகளை இயக்கிச் செய்விக்கும் அறிவுக் கருவிகள் உயிரைச் சார்ந்தவை. 

 

     "எழுபிறப்பு"திருக்குறளில் சொல்லப்பட்டு உள்ளது. ஓர் உயிர்தன் குறைகளில் இருந்து நீங்கி,நிறைபெற்று வளர்ந்து,இன்ப அன்பை அடை,ஏழு தடவை பொதுவாக முயற்சி செய்கிறது என்பது பொதுவிதிஉயிரின் படிமுறை வளர்ச்சியில் ஆறுவகைப் பிறப்புகளைப் பொதுவாகத் தொல்காப்பியம் கூறும்.

 

"ஒன்று அறிவு அதுவே,உற்று அறிவதுவே;

இரண்டு அறிவு அதுவே,அதனொடு நாவே;

மூன்று அறிவு அதுவே,அவற்றொடு மூத்கே;

நான்கு அறிவு அதுவே,அவற்றொடு கண்ணே;

ஐந்து அறிவு அதுவே,அவற்றொடு செவியே;

ஆறு அறிவு அதுவே,அவற்றொடு மனனே;

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே".

 

என்னும் தொல்காப்பியத்தின்படிபடிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கிஆறறிவு வரை வளர்ந்துஅதனைக் கடந்த பெருநிலை எய்துதல் ஏழாவது நிலை. இந்தப் படிமுறைகளை நினைவில் கொண்டு "எழுபிறப்புஎன்று சொன்னதாகவும் கொள்ளலாம். இடையீடு இல்லாமல்புதிதாகத் தோன்றி வரும் பிறப்பு என்றும் பொருள் கொண்டால்எழுகின்ற பிறப்பு என்னும் பொருள்பட "எழுபிறப்பு" என்றும் கொள்ளலாம்.

 

      "உறங்குவது போலும் சாக்காடுஉறங்கி விழிப்பது போலும் பிறப்பு" என்று நாயனார் அருளியதை வைத்துஉயிர்க்கு இறப்பு என்பது களைப்பாறும் நிலையே தவிர,அதுவே முடிவு அல்ல என்பது விளங்கும். களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சியோடு எழுந்து நடமாடுதலே புதிய பிறப்பு. பல்வேறு பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சி அடைந்து வரும். சிலரிடத்தில் இயல்புக்கு மாறான நுண்ணறிவு உள்ளது. சிலரிடத்தில் இயல்பாகவே சான்றாண்மை குடிகொண்டு இருக்கிறது. இவையிரண்டும் எடுத்த பிறப்புக்களில் எல்லாம் உயிரால் ஈட்டப் பட்டவை. எடுத்த அந்த ஒரு பிறப்பிலேயே ஈட்டப் பெற்றவை அல்ல.

 

     பல்கலைக் கழகங்களின் வாயிற்படிக்கே போகாதவர்கள் கூட சீரிய சிந்தனைத் திறனுடனும் செயல் திறனுடனும் விளங்குவதை வைத்தேஅவர்கள் முற்பிறவியிலேயே கற்றுத் தேடி வைத்து இருக்கிறார்கள் என்பதை"ஒருமைக்கண் தாம் கற்ற கல்விஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று நாட்டினார் நாயனார்.

 

     இன்றைய உலகியலில் பெரிய விவாதத்திற்கு உரியது கடவுள் ஆகும். 'கடவுள் இல்லைஇல்லை! இல்லவே இல்லைஎன்று கூறி வருபவர் ஒரு புறம். திருக்கோயில்களின் பெருக்கமும்அவற்றில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களின் பெருக்கமும் இதற்கு மாறாக இருக்கின்றன. கடவுள் உண்டாஇல்லையாஎன்று தெளிவாகஅறிவுப் பூர்வமாக உறுதிப்படுத்தக் கூடிய விடையை யாராலும் கூற முடியாது. அனுமானப் பிரமாணங்களால் உண்டு என்று சொன்னவர்களும் கூடகண்டு காட்டவில்லை. "கேட்டு அறியோம் உன்னைக் கண்டு அறிவாரை" என்றார் மணிவாசகப் பெருமான். அவ்வாறு காட்ட முடியாமையை வைத்தே கடவுள் இல்லை என்று நிறுவுகின்றவர்களும் உண்டு. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கடவுளைப் பற்றிச் சொல்லும் இலக்கணத்தைப் பார்த்தால்அதனை ஆராய்ந்து அறிந்து 'உண்டுஅல்லது 'இல்லை'என்று எளிதில் கூற இயலாது. "வேதங்கள் ஐயா!  என,ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்என்பது மணிவாசகம். இங்கு ஒருவரும்,அங்கு ஒருவருமாகதாம் அறியாததனாலோ,வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளாலோகடவுள்இல்லை என்று கூறுவோர் உண்டு. கடவுள் இல்லை என்று கூறுவோர் உலகியலில்பொருளியலில் உயிர் இயலில் இருக்கும் வேறுபாடுகளையும் முரண்பாடுகளையும் காட்டிஇவைகளுக்குக் காரணமாக உள்ள பொருள் கடவுளாக இருக்க முடியாது என்கின்றனர். 

 

     திருவள்ளுவர் காட்டும் கடவுள்தூய்மையான அறிவுதனக்கு உவமை இல்லாத தன்மைமற்றும் எண் குணங்களின் உருவமே ஆகும். அது,வேண்டுதல் வேண்டாமை இல்லாதது. பொறிவாயில் ஐந்தையும் அவித்தது.பொறிவாயில் ஐந்தவித்தல் என்பது, மெய்வாய்கண்மூக்குசெவி என்னும் பொறிகள் ஐந்தின் உணர்வுகளை அழித்தல். இயற்கைக்கு முரணான செயல்முறையாலும்முறையற்ற வழியிலும் அடக்குதல் இயலாது. முறையற்ற வழியில் அடக்க முயன்றால் புறத்தோற்றத்தால் அடங்கியது போலத் தோற்றம் அளித்து அவ்வப்போது முறைபிறழ்ந்த வழிகளில் செல்லும்.  அழித்தல் என்பது இயற்கைக்கும் அறநெறிக்கும் உகந்தது அல்ல. "அவித்தல்" என்ற சொல் பக்குவப்படுத்துதல் என்று பொருள் தரும். நெல்கிழங்கு முதலியனவற்றைப் பக்குவப்படுத்தும் முறைக்கு "அவித்தல்என்பது வழக்கு. சுவைத்துப் பயன்படுத்துவதற்குத் தக்கவையாக இல்லாத பொருள்களைச் சுவைத்துப் பயன் கொள்ளத்தக்கவாறு பக்குவப்படுத்துதலை 'அவித்தல்என்று கூறுவது வழக்கம். அதுபோல உயிர்பயன்கொள்ளத் தக்கபடியும்,அவ்வுயிரைச் சார்ந்து வாழும் மற்றவர்கள் சுவைக்கும்படியும்பயன்படுத்துமாறும் இல்லாமல்கரடு முரடாக இருக்கும் புலங்களையும் பொறிகளையும் பக்குவப்படுத்தி நிறைநலம் பொருந்தியதாக மாற்றி அமைப்பதே "அவித்தல்"ஆகும்.  அவித்தல் என்னும் சொல்லைச் சுந்தரமூர்த்தி நாயானாரும் கையாண்டு உள்ளார். "பொறிவாயில் இவ் ஐந்தினையும் அவியப் பொருதுஉன் அடியே புகும் சூழல் சொல்லே" என்னும் ஏழாம் திருமுறைப் பாடல் வரிகள் காண்க.  

 

     இறைவன் அல்லது கடவுளின் இலக்கணத்தைக் கூறிய திருவள்ளுவ நாயனார்வேறு உறுப்புக்களைக் கூறாமல்,"நற்றாள்", "மாணடி", "அடி", "தாள்என்றெல்லாம் திருவடிகளை மட்டுமே குறிப்பிடுகிறார். பிற்காலத்தில் பொய்ம்மை நிறைந்ததாகவும்மனித குலத்துக்குத் தீமை செய்வதாகவும் புகுந்த நால்வருணக் கொள்கையின்படி பார்த்தால்இறைவன் திருவடியானது'சூத்திரர்கள்எனப்படும் இழிந்த மக்களையே தந்தன என்று கொள்ள வேண்டி உள்ளது.

 

     குண பேதத்தால் படைப்பு உண்டாகிறது. சத்துவ குணம் நிறைந்து இருக்கும் சீவன் பிராமணன். சத்துவ குணத்தோடு சிறிது ரசோகுணம் கூடி இருப்பவன் சத்திரியன். ரசோகுணம் பெரும்பகுதியும்சிறிது சத்துவம்தமோ குணம் கூடி இருப்பவன் வைசியன். தமோகுணம் பெரிதும்சிறிது ரசோகுணமும் கூடி இருப்பவன் சூத்திரன். சத்துவத்தின் நிறம் வெண்மை. ரசோகுணத்தின் நிறம் சிவப்பு. தமோகுணத்தின் நிறம் கறுப்பு. இந்த நிறங்கள் தூல உடலில் தோன்றுபவைகள் அல்ல. தூல உடலில் மேனாட்டார் பலரும் வெள்ளை நிறத்தினர் ஆகவே உள்ளனர். ஆனால்அவர்கள் அனைவரும் பிராமண இயல்பினை உடையவர் அல்ல. அமெரிக்க இந்தியர் சிவப்பு நிறம். ஆனாலும்அவர்கள் எல்லோரிடத்திலும் சத்திரிய இயல்பு இல்லை. மங்கோலியர் மஞ்சள் நிறம்இராமன்கிருஷ்ணன் போன்ற இந்தியர் கறுப்பு நிறம். இந்த தூல சரீரத்தின் நிறம்மனிதனது இயல்பை நிர்ணயிப்பது இல்லை. 

 

     நான்கு வருணங்கள் என்பவைஉயிரின் மனப் பக்குவத்தைஅறிவை ஒட்டிச் சொல்லப்பட்டவை. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த நான்கு சகோதரர்களுக்கு இடையில்மனப் பக்குவத்துக்கு ஏற்ப ஒருவன்பிராமண இயல்பினை உடையவனாகவும்இன்னொருவன் சத்திரிய இயல்பினை உடையவன் ஆகவும்மற்றொருவன் வைசிய இயல்பை உடையவன் ஆகவும்வேறு ஒருவன் சூத்திர இயல்பினை உடையவன் ஆகவும் இருப்பதை இன்றும் காணலாம்.

 

     வருணத்தில் மேல்நோக்கிப் போகப் போபரவித்தையில் ஈடுபாடு அதிகரிக்கிறது. வருணத்தில் கீழ்நோக்கிப் போகப் போககர்மபலனில் பற்று அதிகரிக்கிறது. சமுதாயத்தார் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் வருண தருமம் என்பது பரம்பொருளைக் குறித்ததாக இருக்குமானால்அந்தச் சமூகம் முன்னேற்றம் காணும். அல்லாத நிலையில் சீர்கேடு அடையும். 

 

     இறைவன் திருவருளைப் பெற்ற எந்த ஞானியும்அருளாளரும்இறைவனின் தலையை நினைந்து உருகிப் பாடியதாக இல்லை. ஆனால்சூத்திரன் பிறந்ததாகக் கூறப்படும் திருவடிகளையே அவர்கள் போற்றிப் புகழ்ந்து உள்ளனர். திருவள்ளுவர் கடவுளை நம்புகிறார். ஆனால் அது ஆணும் அல்லபெண்ணும் அல்ல. திருவள்ளுவர் திருக்கோயில்களையும்கோபுரங்களைக் காட்டவில்லை. வழிபாட்டு நிலைகளையும் காட்டவில்லை. சமயக் கொள்கை எவற்றையும் காட்டாது, "சமயம் கடந்த மோன சமரசம்" ஒன்றையே காட்டுவது திருவள்ளுவர் நெறி.

     "சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதம் இ(ல்)லி நாயேன்" என்று அன்றே மணிவாசகப் பெருமான் காட்டி விட்டார். வடநூல்களில் கூறப்படும் நால்வகை வருணங்களும்நால்வகை ஆசிரமப் பகுப்புக்களும், இவற்றுக்கு உரியவாக நியமித்துச் சொல்லப்படுகின்ற உலகியல் நடைமுறைகளும் முதலானவைகள் யாவும்அறிவாற்றல்களில் குறைந்த சிறுபிள்ளைகள் தம் விளையாட்டுக்களில் வரையறை செய்து கொள்ளும் விளையாட்டு விதிகளைப் போன்றவையே. அல்லாமல்மெய்ந் நெறிக்கு உரிய நடைமுறைகள் ஆகமாட்டா. மக்கள் உடம்பின் மேல் போர்த்தப் பெற்றுள்ள தோலின் நிறங்களைக் கொண்டு அவர்களது கல்வி நலம், பண்புநலம் முதலியவற்றைக் கண்டறிவார் ஒருவரும் இல்லை.வருணம்ஆசிரமம் ஆசாரம் முதலிய இவற்றின் பொய்ம்மையினை நீ அறிவுக் கண்ணைத்திறந்து கண்டு தெளிவாயாக என உயிர்க்கு உயிராகிய இறைவனே உள்நின்று உணர்த்தஉணர்ந்த அருளாளர் வற்றல் பெருமான் ஆவார். இவ்வுண்மையை

"நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
     
நவின்ற கலைச் சரிதம் எ(ல்)லாம் பிள்ளை விளையாட்டே;
மேல்வருணம் தோல் வருணம் கண்டு அறிவார் இ(ல்)லைநீ
     
விழித்து இது பார் என்று எனக்கு விளம்பிய சற்குருவே

எனவரும் வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

     "யாதும் ஊரேயாவரும் கேளிர்" என அன்பினால் ஒன்றிஒரு குடும்பத்தவராக வாழ்வதற்கு உரியது மக்கள் குலம். விலங்குகள் கூடதத்தமது இனத்தோடு கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. மக்கள் இனம் மட்டும் ஏன் இந்த நிலையில் உள்ளது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  இவர் இன்ன மதத்தினர்இன்ன சாதியினர்எனப் பல்வேறு வகையினராகப் பிரித்து வேறுபடுத்துதற்குக் காரணமாய் உள்ள சாதிமதங்கள் யாவும் ஆதியில் இல்லவே இல்லை. பின்னர் வந்தோரால் கற்பனை செய்து சொல்லப்பட்டனவே. இவ்வுண்மையை இறைவன் அருளால் இளம்பருவத்திலேயே உணரப் பெற்றவர் அருட்பிரகாச வள்ளலார். "சாதியும் மதமும் சமயமும் பொய் எனஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி"என்னும் அவரது அருள்வாக்கால் இந்த உண்மை புலன் ஆகும்.

     இன்றுஉலகெங்கும் வேறுபாடுகள் மலிந்துசமயங்களுக்கு இடையில்கொள்கை வேறுபாடுகளைக் கொண்ட மதங்கள் உருவாகிஅன்பு நெறியினை வளர்க்காமல்காழ்ப்புணர்ச்சியை வளர்த்து வருகின்றன. சென்றகால வரலாற்றினைக் கூர்ந்து கவனித்தால்மனித உலகத்தின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் சமயநெறிகள் செய்த நன்மைகள்  போற்றுதலுக்கு உரியன என்பது தெரியவரும். ஆனாலும்இடையிடையே சமய அமைப்புகள் மக்களிடையே பரப்பிய மூட நம்பிக்கைகளும். சமய நிறுவனங்களுக்கு இடையே நிகழ்ந்த போர்களும் அந்த நற்பணிகளை மறைத்து விட்டன. மூடநம்பிக்கை என்பது எல்லா மதங்களிலும் உண்டு. அறிவின்மை இருக்கின்ற இடங்களில் எல்லாம் மூடநம்பிகை இருக்கும். தமிழர்களிடையில் தான் மூட நம்பிக்கை இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான அறியாமை. 

 

     உண்மையாக சமயநெறியில் நிற்போர் இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பவேண்டி உள்ளது. தூய சமயநெறியில் நின்று மனிதகுலத்தை மேம்படுத்த விரும்பினால்சமய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத திருவள்ளுவர் காட்டும் சமயநெறி உலகம் முழுமையும் பரவுதல் வேண்டும்.  மனித குலத்தின் உரிமைகள் இயற்கையில் அமைந்தவை. அந்த உரிமைகளை நாடுகளின் அமைப்பின் மூலமோ,அரசியல்களின் மூலமோசமய அமைப்புகளின் மூலமோசாதி குல அமைப்புகளின் மூலமோ பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. உயிர்கள் பிறப்பிலேயே ஒத்த உரிமையை உடையன"பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான்"என்னும் திருக்குறளை ஆழ்ந்து சிந்தித்தால் இதன் உண்மை விளங்கும்.

 

     கறுப்பர்தீண்டத் தகாதவர் என்று மனித குலத்தினைப் பிரித்து ஆட்டிப் படைக்கும் தீமைகள் மறைய வேண்டும். கடவுள் அருச்சனைகளால்ஆராதனைகளால்படையல்களால் திருப்தி செய்யத்தக்க பொருள் அல்ல என்பதை மனித சமுதாயம் கருத்தில் கொள்ளவேண்டும். திருவள்ளுவர் காட்டும் சமயநெறி நன்றாக வேர் ஊன்றுமானால் தொண்டு நிறுவனங்கள் எங்கும் தோன்றும்தொண்டர்களே நிறைந்து இருப்பர். அதனால் மனிதகுலம் தழைக்கும். தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் இருக்கமாட்டார்கள். பெரியபுராணத்தில் அடியார்களைத் திருத்தொண்டர் என்றே கூறப்பட்டு உள்ளது. உயிர்க் குலத்திற்குத் தொண்டு செய்தவர்களே இறை அடியார்கள். 

 

     திருவள்ளுவர் தந்தருளிய திருக்குறள் ஒரு சமயத்திற்காகத் தோன்றிய நூல் அல்ல. அது சமயச் சார்பு அற்ற நூல்.  அது வாழ்வியல் நெறிகளைக் காட்டும் நூல். திருவள்ளுவர் காட்டும் சமயவியல்மானிடத்தை மேன்மை உறச் செய்வது. அங்கே சமயப் பூசல் இல்லை. நேசம் நிறைந்து இருக்கும். அன்பு நெறி உலகெலாம் தழைக்கும். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையில் உலகம் ஓங்கும். "இயல்பினால் ஒன்று காதலித்துஉள்ளமும் ஓங்கிடஎன்றும் இன்பம் பெருகும்".

 

     திருவள்ளுவர் தினம் என்று கொண்டாடப்படுகின்ற இந்த நாளில் திருவள்ளுவர் மனித குலத்துக்கு அறிவுறுத்திய அன்புநெறியை நினைவில் கொண்டு,புதியதோர் உலகம் செய்யவேண்டும். அங்கே சாதிகுலம்பிறப்புசமயம்மதம் என்னும் வேற்றுமைகளைக் கொண்டு கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்த்துமனித குலம் தழைக்கவேண்டும்.


 

 

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...