இறைவனை எப்படி வழிபட வேண்டும்.

 


இறைவனைவழிபடுவதுஎப்படி?

-----

 

"கடிகமழ் மாமலர் இட்டுக் கறைமிடற்றான் அடி காண்போம்.

விரைகமழ் மாமலர் தூவி விரிசடையான் அடி சேர்வோம்.

தாள்நெடு மாமலர் இட்டுத் தலைவன தாள்நிழல் சார்வோம்.

கார்இடு மாமலர் தூவிக் கறைமிடற்றான் அடி காண்போம்.

இனமலர் ஏய்ந்தன தூவி எம்பெருமான் அடி சேர்வோம்.

தளைஅவிழ் மாமலர் தூவித் தலைவன தாள்இணை சார்வோம்.

தடமலர் ஆயின தூவித் தலைவன தாள்நிழல் சார்வோம்.

சயவிரி மாமலர் தூவித் தாழ்சடையான் அடி சார்வோம்.

விரிமலர் ஆயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம்'.

 

எனவரும் திருஞானசம்பந்தப்பெருமான் அருள்வாக்குகள்இறைவன் திருவடியை மலர் இட்டு வழிபட வேண்டும் என்பதை உணர்த்துகின்றன. "புண்ணியம் செய்வார்க்குப் பூஉண்டுநீர்உண்டுஅண்ணல் அது கண்டு அருள் புரியா நிற்கும்என்றார் நமது கருமூலம் நீக்க வந்த திருமூல நாயனார். "பூவொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார்அவர் பின் புகுவேன்என்று பாடினார் அப்பர்பெருமான்அப்படி வழிபடுகின்ற அடியவர்க்கு இறைவன் அருள் புரிவான் என்பதைக் காட்ட, "தொண்டர்கள் மாமலர் தூவத் தோன்றி நின்றான் அடி சேர்வோம்என்று பாடினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

 

            எனவேமலர்வழிபாடு அவசியமானது என்று அறியலாம்பொதுவாகவேஇறைவனுக்கு எட்டு வகையான மலர்கள் உகந்தவை என்று நூல்களில் சொல்லப்பட்டு உள்ளது. "புட்பவிதிஎன்று ஒருநூல் உள்ளதுஅதில்காலைமதியம்மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் எந்தெந்த விதமான எட்டு மலர்களைக் கொண்டு வழிபட வேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளதுஅந்த மலர்களை எல்லாம் அவை மலரும் பக்குவத்தில் பறித்துச் சாத்த வேண்டும் என்பதுதான் விதிஅன்று அலர்ந்த மலர்கள் என்று சொல்லப்படும்வழிபாட்டிற்கு முந்திய நாளில் மலர்ந்த மலர்கள் உகந்தவை அல்ல.அப்போது அலர்ந்த மலர்களும்பூச்சிக்கடிவண்டுக்கடிமயிர்ச்சுற்று இல்லாமல் இருக்கவேண்டும்மலர்களை எப்போதுஎப்படிக் கொய்ய வேண்டும் என்பது குறித்துபெரியபுராணத்தில் ஒரு பாடல்...

 

"வைகறை உணர்ந்து போந்து

            புனல்மூழ்கி வாயும் கட்டி

மொய்ம்மலர்நெருங்குவாச

            நந்தன வனத்து  முன்னிக்

கையினில் தெரிந்து நல்ல

            கமழ்முகை அலரும் வேலைத்

தெய்வ நாயகர்க்குச் சாத்தும்

            திருப்பள்ளித் தாமம் கொய்து".

 

இதன்பொருள்---

 

            விடியற்காலையில் துயில் எழுந்துதிருக்குளத்திற்குச் சென்று நீராடிவாயையும் கட்டிக்கொண்டுதிரளான மலர்கள் நெருங்கிய நறுமணம் கமழும் திருநந்தனவனத்தை அடைந்துகையினால் ஆராய்ந்துநல்ல மணம் உடையனவும்அன்று அலரும் பருவம் உடையனவும் ஆகிய அரும்புகளைஅவை மலர்தற்கு உரிய சமயத்தில் தெய்வங்களுக்கு எல்லாம் தலைமையானவராகிய சிவபெருமானுக்கு அணிவித்தற்குரிய திருமாலைக்கு ஆகின்ற மலர்களைக் கொய்து.

 

            இன்றைய சூழலில்ஊர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு அன்று அலர்ந்த மலர்கள் கிடைக்க வாய்ப்பு உண்டுநகர்ப்புறங்களில் உள்ளவர்களுக்கு இது சாத்தியம் இல்லைகடைகளில் விற்கும் மலர்களைக் கொண்டுதான் செய்யவேண்டி இருக்கும்இவைகள் அன்று அலர்ந்த மலர்கள் அல்லவாடியும் வதங்கியும் இருக்கும்வேறு வழியில்லாமல்ஒன்றுக்குப் பத்தாக விலைகொடுத்து வாங்கி வருவோம்

 

            மலர் இல்லையானால்இறைவனுக்கு அபசாரம் செய்த்தாக ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டுஎன்ன செய்யலாம்குழப்பமாகஉள்ளதுஅல்லவாகுழப்பமே வேண்டாம்சிரமம் ஏதும் இல்லாமல் இறைவனை வழிபட வழி உண்டுஎளிமையான வழியை நமது முன்னோர் நமக்கு வகுத்துக் காட்டி உள்ளார்கள்விதி என்று ஒன்று இருந்தால்விதிவிலக்கும் இருக்கும் அல்லவா?

 

            மலர்கள் இல்லை என்றால் கலவைப்பட வேண்டாம்ஒரு செடியில் சில மலர்கள் என்றால்பல இலைகள்இருக்கும்இலைகளும் இறையருளால் வந்தவையேஇலைகள் இல்லாமல் மலர்கள் இல்லைஇலைகளை இட்டே வழிபடலாம் என்பதற்குப் பிரமாணமாகப் பின்வரும் பாடல்களைக் காட்டுகின்றேன்.

 

            "பத்தியுடன் நின்று பத்தி செயும் அன்பர் பத்திரம் அணிந்த கழல் வீரா". இது அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ்ப் பாடல் ஒன்றில் வருவதுபத்திரம் என்றால் இலை என்றும் ஒரு பொருள் உண்டுஅன்பு நெறியில் உறுதியுடன் நிற்கின்ற அடியார்கள்அன்புடன் முருகன் திருவடியில் பச்சிலைகளை அருச்சித்தால்அப் பச்சிலைக்கு மெச்சி அருள் புரியும் கருணைத்தெய்வம் முருகன் என்பது இதன் பொருள்.

 

            அடுத்துஎல்லார்க்கும் இயல்கின்ற எளிமையான வழி முறையைத் திருமூலர் அறிவுறுத்துகின்றார்.

 

"யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாய்உறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒருகை ப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே".            ---திருமந்திரம்.

 

இதன்பொருள்---

 

    இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்கவேண்டும் என்பதில்லைஎளிமையாகப் பச்சிலை இட்டு வணங்கினாலே போதும்பசுப் பூசை செய்யவேண்டும் என்பதில்லைபசுவுக்கு ஒரு கைப்பிடி புல்லைக் கொடுத்தாலும் போதும்பசித்திருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்கவேண்டும் என்பதில்லைநாம் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும்பதாகைகள் வைத்து யாரையும் வாயாரப் புகழ்ந்துதான் பேசவேண்டும் என்பதில்லையாரிடத்திலும் இனிய சொல்லைச் சொன்னாலே போதும்.

 

            மலர் இல்லையானால்இலை உண்டுஅதுவும் இல்லையானால், நமது உள்ளத் தாமரை உள்ளதுஇறைவனை எப்படியும் வழிபடலாம் என்கிறார் பட்டினத்து அடிகளார்.

 

"போதும் பெறாவிடில் பச்சிலைஉண்டு,

            புனல்உண்டுஎங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சு உண்டு அன்றே,

            இணையாகச் செப்பும்

சூதும் பெறா முலை பங்கர்தென்

            தோணி புரேசர்வண்டின்

தாதும் பெறாத அடித் தாமரை

            சென்று சார்வதற்கே".                                ---  பட்டினத்தார்.

 

இதன்பொருள்---

 

            கிண்ணமும்சொக்கட்டான் காயும் கூட ஒப்பு ஆகாதவாறு அழகாக அமையப் பெற்ற முலைகளை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியில் ஒரு பாகத்தில் கொண்டவரும்சீகாழி என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவரும் ஆகிய சிவபெருமானுடைய திருவடித் தாமரைகளைச் சென்று அடைவதற்குஇப்போதுநல்ல மலர்களைப் பெற முடியாவிட்டால்பச்சிலை உண்டுஅந்தப் பச்சிலையும் இல்லையானால்எல்லா இடங்களிலும் நீர் உண்டுஇவை ஏதும் கிடைக்கப் பெறாதபோதுமனம் உள்ளதேஅதைக் கொண்டு வழிபட்டால் போதும்.

 

"பத்தி அடியவர் பச்சிலை இடினும்

முத்தி கொடுத்து முன்நின்று அருளித்

திகழ்ந்து உளது ஒருபால் திருவடி..."

 

என்றுபதினோராம் திருமுறையில் வரும் "திருவிடைமருதூர் மும்மணிக் கோவை"யில் பட்டினத்து அடிகளார் பாடி உள்ளார்.

 

இதன் பொருள்--- 

 

            அன்பு உள்ள அடியவர்கள் ,மலர் கிடைக்காத போதுபச்சிலையை இட்டு வணங்கினாலும்அவர்களுக்குத் தரிசனம் தந்துஇந்தப் பிறவியில் அவர்களுடைய இஷ்ட காமியங்களை அருளிச் செய்வதோடுமோட்சத்தையும் அருள் புரிகின்ற சிவபெருமானது திருவடி ஒருபுறம் திகழ்ந்து உள்ளது.

 

            எந்த எந்த இலையைப் பறித்து வழிபடலாம் என்னும் ஐயம் தோன்றும்அதற்கும் விடை பகருகிறார் பட்டினத்து அடிகளார்.

 

"பத்தி ஆகிப் பணைத்த மெய் அன்பொடு 

நொச்சி ஆயினும், கரந்தை ஆயினும்

பச்சிலை இட்டுப் பரவும் தொண்டர் 

கரு இடைப் புகாமல் காத்து அருள் புரியும்

திருவிடை மருததிரிபுராந்தக",..      

 

இதன்பொருள்---

 

            பத்தியால் கிளைத்த உண்மையான அன்போடுநொச்சி இலையையாவது ,கரந்தை என்னும் திருநீற்றுப் பச்சை இலையையாவது கொண்டு பச்சிலையால் அருச்சனை புரிந்து வணங்குகின்ற தொண்டர்கள்,கருவில் சேராதபடி (மறுபிறவி இல்லாதபடிகாத்து அருள் புரிகின்ற திருவிடைமருதூரில் எழுந்தருளிய இறைவாமுப்புரங்களை எரித்தவனே!.

 

மேலும்பாடுகிறார்.....

 

பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி,

மெச்சிசிவபதவீடு அருள்பவனை,

முத்தி நாதனைமூவா முதல்வனை,

அண்டர் அண்டமும் அனைத்துஉள புவனமும்

கண்ட அண்ணலைகச்சியில் கடவுளை,

ஏகநாதனை இணைஅடி இறைஞ்சுமின்.  --- கச்சித்திருஅகவல்.

 

இதன்பொருள்---

 

            பச்சிலையைக் கிள்ளி அருச்சித்தாலும்அடியார்கள் மீது இரக்கம்கொண்டுஅவர்களுடைய பத்திக்கு மெச்சிசிவபதம் ஆகிய மோட்சத்தை அருள் புரிகின்றவனைமுத்திக்குத் தலைவனைநித்தியமாய் உள்ள முதற்பொருளைவானுலகும் மண்ணுலகும் எல்லாமும் படைத்த பெரியவனைதிருக்கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் எழுந்தருளி இருக்கின்ற ஏகாம்பர நாதனை ,தனி முதலாக உள்ள இறைவனை வணங்கிப் பணியுங்கள்.

 

            பச்சிலை இட்டு வழிபட்டாலும் உள்ளன்போடுதான் வழிபட வேண்டும்அந்த அன்பும் இல்லாத நான் என்ன செய்வேன் என்று தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றார் தாயுமான அடிகளார்.

 

"கல்லால் எறிந்தும்கைவில்லால் அடித்தும்கனிமதுரச்

சொல்லால் துதித்தும்நல்பச்சிலை தூவியும்,தொண்டர் இனம்

எல்லாம் பிழைத்தனர்அன்பு அற்ற நா ன்இனி ஏது செய்வேன்?

கொல்லா விரதியர் நேர்நி ன்ற முக்கண் குருமணியே".          ---தாயுமானார்.

                                                                                                        

 

இதன்பொருள்---

 

            உயிர்களைக்  கொல்லாமையை விரதமாகக் கொண்டுள்ள அடியவர்கள் காணுமாறு அருட்காட்சி கொடுத்து  அருள் புரிகின்றமுக்கண்களை உடைய குருநாதனேஉன்னைக் கல்லால்  எறிந்து வழிபட்டார் சாக்கியநாயனார்கையில் இருந்த வில்லால் அடித்தான் அருச்சுனன்இனிமையான கனிரசம் துதும்பும் பாடல்களால் துதித்தார்கள் பலர்நல்ல பச்சிலைகளைத்  தூவி வழிபட்டனர் சிலர்.  இவ்வாறு உனது தொண்டர்கள் எல்லாம் ஈடேறினார்கள்.  (அவர்களிடத்தே உண்மை அன்பு இருந்ததுஉன்னிடத்தில் அன்பு இல்லாதவனாகிய  நான் இனி  என்ன செய்வேன்?

 

"எல்லாம் உதவும் உனை ஒன்றில் பாவனையேனும் செய்து,

புல் ஆயினும்ஒரு பச்சிலை ஆயினும் போட்டு இறைஞ்சி

நில்லேன்,  நல்யோக நெறியும் செயேன்அருள்நீதி ஒன்றும்

கல்லேன்எவ்வாறுபரமேபரகதி காண்பதுவே".                     ---  தாயுமானார்.                                                                                                                       

 

இதன்பொருள்---

 

            பரம்பொருளே!  உயிர்களுக்கு  எல்லாவற்றையும் உதவி அருள்புரிகின்ற உன்னை,  நான் ஒன்றிலாவது பாவனையாவது செய்துபுல்லையாவதுபச்சிலையையாவது உனது திருவடியில் போட்டுவணங்கி நிற்கவில்லையோகநெறியில் பயிலவில்லை.  அருள்நூல்களையும்நீதிநூல்களையும் கற்கவும் இல்லை.  நான் எப்படிபரகதியைக் காணமுடியும்?

 

            "எவன் பத்தியோடுபயனை எதிர்பார்க்காமல்எனக்கு இலைமலர்பழம்நீர் முதலிவற்றை அர்ப்பணம் செய்கின்றானோஅன்பு நிறைந்த அந்த அடியவன் அளித்த காணிக்கையான இலைமலர் முதலியவற்றை நான் சகுணசொருபமாக வெளிப்பட்டு அன்புடன் அருந்துகின்றேன்என்று பகவத்கீதை ஒன்பதாம் அத்தியாயத்தில் 26 - ஆவது சுலோகத்தில் கூறப்பட்டு இருப்பதும் எண்ணுதற்கு உரியது.

 

            இறைவனை நிறைய மலர்களை இட்டுத்தான் வழிபட வேண்டும் என்பதாக எங்கும் சொல்லப்படவில்லைஇறைவனும் அவ்வாறு விரும்பியதாகவும் எங்கும் சொல்லப்படவில்லைநிறைய மலர்களைக் கொண்டு வழிபடுவது அவரவருடைய செல்வ நிலையைப்   பொறுத்தது.

 

            வசதி இல்லாதவர் என்ன செய்வார்?அடுத்த வேளை உணவுக்கே வழி இல்லாதவர் இறைவனை வழிபட முடியாதா ?எண்ணிப் பாருங்கள்.

 

            நிரம்ப மலர்களை கொண்டு வழிபட்டாலும்ஒரே ஒரு மலரை இட்டு வழிபட்டாலும்உள்ளத்தில் அன்பு இருக்க வேண்டும்உள்ளத்தில் அன்பு இல்லாதபோதுநான் நிறைய மலர்களைக் கொண்டு வழிபட்டேன் என்னும் செருக்கு இருக்கும். "நான்என்பது இருந்தால்அது பயன் தராது

 

            இந்தக் கருத்தை மிக அழகா கவைத்துஅருணகிரிநாதர் திருப்புகழில் பாடி உள்ளதைக் காண்போம்....

 

"வெகுமல ர்அதுகொடு வேண்டி ஆகிலும்,

     ஒருமலர் இலை கொடும் ஓர்ந்துயான்உனை

     விதம் உறு பரிவொடு வீழ்ந்துதாள்தொழ...அருள்வாயே!"

 

இதுஅருணகிரிநாதர் பாடி அருளிய "தரையினில் வெகுவழிஎன்று தொடங்கு ம்திருப்புகழ்ப் பாடல் வரிகள்.

 

இதன்பதவுரை---

 

            வெகுமலர்அதுகொடுவேண்டிஆகிலும் அநேக விதமான மலர்களைக் கொண்டு உனது அருளை விரும்பியாகிலும்ஒருமலர் இலை கொடும் ஒரு பூவோ ஒரு பச்சிலையோ கொண்டாகிலும், ஓர்ந்து யான் உனை நான் தேவரீரை உளமா ரநினைத்து,  விதம் உறு பரிவொடு வீழ்ந்து--- நல்ல வகையில் அன்போடு விழுந்துதாள் தொ ழஅருள்வாயே--- தேவரீரது திருவடிகளைத் தொழுமாறு அருள் புரிவீர்(விதம்--- வகைபரிவு--- அன்பு.)

 

     அன்புபத்தி என்ற சொற்கள் ஒரு பொருளைக் குறிப்பனஅன்பு என்பது உள்ளத்தில் நிகழும் நெகிழ்ச்சி ஆகும்அன்பு ஒருவர் வெளிப்படையாகக் காணக்கூடியது அல்லகுடத்துள் விளக்கும்,உறையுள் வாளும் போல் கிடப்பதுஅன்பு மேலிடும் போது தன்வசம்அழிதலும்மயிர்க்கால்கள் தோறும் திவலை உண்டாகப் புளகம் எய்துதலும்கண்ணீர் மல்குதலும்விம்மலும்நாக்கு தழுதழுத்தலும்உரை தடுமாறலும் பிறவும் நிகழும்இந்த அன்பினால் அன்றிவேறு எந்த வகையாலும் அன்பு வடிவாகிய இறைவனைஅடைய முடியாதுதிருமூல நாயனார் கூறுவதை அறிதல் வேண்டும்.

 

 

"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டு,

பொ ன்போல் கனலில் பொரிய வறுப்பினும்,

அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி

என்போன் மணியினை எய்த ஒண்ணாதே".     ---  திருமந்திரம்.

 

இதன்பொருள்---

 

     தனது உடம்பின் எலும்பையே விறகாக இட்டுதசையினை அறுத்துப் போட்டுபொன் வடிவமான வேள்வித் தீயில் பொரியும்படி வறுத்தாலும்இறைவனை அடைய முடியாதுஆனால்அன்புடன் உள்ளம் உருகுபவர்கள் என்னைலப் போல  மனமணியாகிய இறைவனை அடையலாம்.

 

     தவம் செய்பவர்உடல் தசைகளை அறுத்துத் தவம் செய்வர்சூரபதுமன் இவ்வாறு தவம் செய்தான்பசுவை வேட்டு யாகம் செய்வதும் உண்டுஎனவேஇறைச்சி அறுத்திட்டுப் பொரிய வறுப்பினும் என்றார் என்றும் கொள்ளலாம்யாகமும் தவமும் செய்தாலும்இறைவனை அடைய முடியாதுஇறைவனிடத்தில் உள்ளம் உருகி அன்புடன் இருந்தால் போதும்அவனை அடைந்து விடலாம் என்பது இதனால் தெளிவாகும்.

 

     அன்பு மூன்று வகைப்படும் இறைவனது நாமத்தைக் கேட்டவுடன் வசம்  அழியும்அன்பர்கட்குகண்டவுடனும்கூடியவுடனும் எய்தும் அன்பின்  பெருக்கை அளவிடமுடியாதுதலைஅன்பு தைலதாரை போல்  எப்போதும் இடையறாது  உள்ளம் உருகி  நெகிழ்ந்துகொண்டு  இருக்கும்.  இடை அன்பு அனல் இடைப்பட்ட  மெழுகுபோல்  சிறிது  தாமதமாக உருகுவதுகடை அன்பு,  வெயிலில் அரக்கு  உருகுவதுபோல  நெடுநேரம் இறைவன் சிந்தனையாலும்இறைவன்  திருவுலாக்  காட்சியாலும்  மிகவும்  தாமதமாக  உருகுவது.

 

     இந்த தலையாய அன்பு ஒன்றைத் தான் இறைவனிடம் வேண்டினார் மணிவாசகப் பெருமான். "இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்று உருகத் தந்து அருள்" என்பது மணிவாசகப் பெருமான் அருளிய திருவாசகம்.

 

     இத்தகைய அன்பையே வீரவாகுதேவர் முருகப்பெருமானிடம் வேண்டினார்  என்று  கந்தபுராணம் கூறும்.

 

"கோலம் நீடிய நிதிபதி வாழ்க்கையும் கருதேன்,

மேலை இந்திரன் அரசினைக் கனவினும் வெஃகேன்,

மால்அயன் பெறும் பதத்தையும் பொரு ள்என மதியேன்,

சால நின்பதத்து அன்பையே வேண்டுவன் தமியேன்".

 

இதன்பொருள்---

 

           முருகப்  பெருமானேஅடியவன் ஆகியதான்,செல்வத்தால் மிகுந்துள்ள குபேரனின் வாழ்க்கையை விரும்பவில்லைதேவேந்திர போகத்தையும் நான் விரும்பவில்லைதிருமால்பிரமன் ஆகிய பதவிகளையும் நான் விரும்பவில்லைஉன்னுடைய திருவடிகளில் வைக்கும் அன்பையே நான் மிகவும் விரும்புகின்றேன்.

 

            மலர்களை பலவிதமான மாலைகளாகத் தொடுத்து இறைவனுக்குச் சாத்துவது வழக்கம். மலர்மாலை விரைவில் வாடி வதங்கிப் போகும். வாடாத மலர் ஒன்று உண்டு. அது சொல்மலர் ஆகும். சொற்களால் ஆனது சொல்மாலை. மலர்களைக் கொண்டு வழிபட்டாலும்உள்ளன்போடு இறைவனை சொல்மலர்களால் துதித்து வழிபடவேண்டும். 

 

     வெறும் சொற்களால்வாயளவில் துதித்துப் பயன் இல்லை. அதி அற்புதமான சொல்மாலை எப்படி அமைந்திருக்க வேண்டும்?அருணகிரிநாதப் பெருமான் அருளிச் செய்கிறார் பாருங்கள்.

 

"ஆசைகூர் பத்தனேன் மனோ பத்மம்

     ஆன பூ வைத்து,...... நடுவே அன்பு

ஆன நூல் இட்டு,நாவிலே சித்ரம்

     ஆகவே கட்டி,...... ஒரு ஞான

வாசம் வீசிப்ரகாசியா நிற்ப,

     மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,

மாத்ருகா புஷ்ப மாலை கோல ப்ர-

     வாள பாதத்தில் ...... அணிவேனோ?"  --- திருப்புகழ்.

 

இதன் பதவுரை ---

 

     ஆசை கூர் பத்தனேன்--- ஆசை மிகுந்த அடியேனுடைய மனோ பத்மம் ஆன பூ நடுவே வைத்து--- மனமாகிய தாமரை மலரை மாலையின் நடுவே குஞ்சம் போல் வைத்து,

அன்பான நூல் இட்டு--- அன்பு என்னும் நூலைக் கொண்டுநாவிலே சித்ரமாகவே கட்டி--- நாக்கைக் கொண்டு அழகாகத் தொடுத்துஒரு ஞான வாசம்வீசி  ப்ரகாசியா நிற்ப---  ஒப்பற்ற ஞானமாகிய வாசனை வீசி ஒளிசெய்யமாசுஇல் ஓர் புத்தி அளிபாட--- அதைச் சுற்றி குற்றம் இல்லாத ஒருமைப்பட்ட அறிவு என்ற வண்டு மொய்த்து ஒலி செய்யமாத்ருகா புஷ்ப மாலை--- மாத்ருகா மந்திரமாகிய மலர் மாலையைகோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ--- அழகிய பவளம் போன்று திருவடிகளில் அடியேன் சூட்டி வழிபடுவேனோ?

 

     அருணகிரிநாதப் பெருமான்திருஞானசம்பந்தப் பெருமான் முதலானோர்கள் அருளிச் செய்தபடிமுருகப் பரமனுடைய திருவடி மலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக் கருதுகின்றார். பூ மாலை வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும் உடைய மந்திர மலர்மாலை சூட்டத் துணிந்தனர். மலர்மாலைக்கு இடையே குஞ்சம் ஒன்று தொங்கவேண்டும்.  அதுதான் மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும்.அடிகளார் தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே மனம் என்ற தாமரைப் பூவை குஞ்சமாகக் கட்டித் தொங்க விடுகின்றனர். மனமே பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரை மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்துவிடுவதே துன்ப நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும்.  அதுவே எளிய வழியுமாகும்.காற்றும் காற்றாடியும் போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதுவே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத இடர்கள் எய்துகின்றன. ஆதலின்அம் மனதை இறைவன் திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் பயக்கும்.

 

     மந்திர மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும்.  அன்பு என்ற நூலினால் அழகுற மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு ஒன்றுடன் ஒன்றை இணைத்துவைக்கும் இயல்பு உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான் என்ற வரலாற்றையும் சிந்திக்க.

 

     அத் திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எதுஅதற்குரிய சிறந்த இடம் நாவே ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு அமைந்துள்ளது.  நன்கு பேசும் தகைமையுடன் கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார் அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அனுபூதியில் அருணகிரிநாதரும் கூறுமாறு காண்க.

 

     நாவினால் இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர்.

 

"பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,

நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,

ஆக்கைக்கே இரை தேடி அலமந்து,

காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே".  --- அப்பர் பெருமான்.

 

     நாவுக்கு முதலிடம் தந்து"கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகப் பெருமான் கூறுமாறும் காண்க.

 

     இம் மந்திரப் பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மலர்களின் மணம் சிலநேரமே கமழும்.  ஞானமணம் எப்போதும் இடையறாது கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம் அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது மணிவாசகம். ஞானவாசனை எவ்வுலகினும் பரிமளிக்கத் தக்கது.

 

     ஞானமணம் கமழும் இந்த ஒப்பு உயர்வு அற்ற மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருகபுத்தி என்ற வண்டு வந்து மொய்த்துஇனிய நாதத்துடன் ஒலிக்கின்றது.  மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும் வண்டுகளுக்கே உண்டு. வண்டின் உதவியால்தான் மக்களுக்கு இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமையாகச் சொல்லப்பட்டது. புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து உணரும். "புத்திமான் பலவான்" என்ற பழமொழியும் கருதத்தக்கது. புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புதன். ஏழு நாள்களின் தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதையும் எண்ணிப் பார்க்க.

 

     இறைவனும் அடியவர்களின் புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரிநாதர் முதல் பாடலில் கூறுகின்றனர். "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்பது அவரது அருள்வாக்கு.இங்கே புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அல்ல.

 

     ஆறு ஆதாரங்களிலும் அகாராதி க்ஷகாராந்தமாக ஐம்பத்தொரு அட்சரங்கள் (எழுத்துக்கள்) அடங்கி இருக்கின்றன. "அகரமுதல் என உரைசெய் ஐம்பத்தொரு அட்சரம்" என்பது அடிகளார் அருளிய திருப்புகழ். இந்த அட்சரங்களை மாத்ருகா மந்திரம் என்றும்மாலா மந்திரம் என்றும் கூறுவர். இந்த மாத்ருகா மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து மாலை புனையவேண்டும் என்கின்றார் அடிகளார்.இந்த மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அனுபூதி" ஆகும். ஐம்பத்தொரு பாடல்களாக அது அமைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு சிந்திக்கவேண்டும். "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே" என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.

 

     உடம்புக்குள் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம்சுவாதிட்டானம்மணிபூரகம்அனாகதம்விசுத்திஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள்ளும் அகரம் முதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தொரு அக்ஷரங்கள் (எழுத்துக்கள்) அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்களை மாத்ருகா மந்திரம் என்றும்மாலாமந்திரம் என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.

 

     எனவேஅளப்பரிய ஆற்றல் மிகுந்ததும்இறைவன் திருக்கருணையை எளிதில் பெற வழி வகுப்பதும் ஆகியவாடாமலர்கள் ஆகிய சொல்மலர்களால் இறைவனை வழிபட்டு நற்கதியைப் பெறுவோமாக.

 


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...