திருச் சிக்கல் - 0834. கன்னல் ஒத்தமொழி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கன்னல் ஒத்த (சிக்கல்)

முருகா!
விலைமாதர் ஆசையில் விழாமல் அருள்வாய்.

தன்ன தத்த தனத்த தானன
     தன்ன தத்த தனத்த தானன
          தன்ன தத்த தனத்த தானன ...... தனதான


கன்ன லொத்த மொழிச்சொல் வேசியர்
     வன்ம னத்தை யுருக்கு லீலையர்
          கண்வெ ருட்டி விழித்த பார்வையர் ...... இதமாகக்

கையி லுற்ற பொருட்கள் யாவையும்
     வையெ னக்கை விரிக்கும் வீணியர்
          கைகள் பற்றி யிழுத்து மார்முலை ...... தனில்வீழப்

பின்னி விட்ட சடைக்கு ளேமலர்
     தன்னை வைத்து முடிப்பை நீயவி
          ழென்னு மற்ப குணத்த ராசையி ...... லுழலாமற்

பெய்யு முத்தமி ழிற்ற யாபர
     என்ன முத்தர் துதிக்க வேமகிழ்
          பிஞ்ஞ கர்க்குரை செப்பு நாயக ...... அருள்தாராய்

வன்னி யொத்த படைக்க லாதிய
     துன்னு கைக்கொ ளரக்கர் மாமுடி
          மண்ணி லற்று விழச்செய் மாதவன் ....மருகோனே

மன்னு பைப்பணி யுற்ற நீள்விட
     மென்ன விட்டு முடுக்கு சூரனை
          மல்லு டற்று முருட்டு மார்பற ...... அடைவாகச்

சென்னி பற்றி யறுத்த கூரிய
     மின்னி ழைத்த திறத்த வேலவ
          செய்ய பொற்புன வெற்பு மானணை ....மணிமார்பா

செம்ம னத்தர் மிகுத்த மாதவர்
     நன்மை பெற்ற வுளத்தி லேமலர்
          செல்வ சிக்கல் நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கன்னல் ஒத்த மொழிச்சொல் வேசியர்,
     வன் மனத்தை உருக்கு லீலையர்,
          கண் வெருட்டி விழித்த பார்வையர், ...... இதமாகக்

கையில் உற்ற பொருட்கள் யாவையும்
     வை எனக் கை விரிக்கும் வீணியர்,
          கைகள் பற்றி இழுத்து, மார்முலை ...... தனில்வீழ,

பின்னி விட்ட சடைக்கு உளே, மலர்
     தன்னை வைத்து, "முடிப்பை நீ அவிழ்"
          என்னும் அற்ப குணத்தர், சையில் ...... உழலாமல்,

பெய்யும் முத்தமிழில் தயாபர
     என்ன, முத்தர் துதிக்கவே மகிழ்
          பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக! ...... அருள்தாராய்.

வன்னி ஒத்த படைக்கல ஆதிய
     துன்னு கைக்கொள் அரக்கர் மாமுடி
          மண்ணில் அற்று விழச்செய் மாதவன் .....மருகோனே!

மன்னு பைப்பணி உற்ற நீள்விடம்
     என்ன விட்டு, முடுக்கு சூரனை
          மல் உடற்று முருட்டு மார்புஅற, ...... அடைவாக,

சென்னி பற்றி அறுத்த, கூரிய
     மின் இழைத்த திறத்த வேலவ!
          செய்ய பொன்புன வெற்பு மான்அணை ....மணிமார்பா!

செம் மனத்தர், மிகுத்த மாதவர்,
     நன்மை பெற்ற உளத்திலே மலர்
          செல்வ! சிக்கல் நகர்க்குஉள் மேவிய ...... பெருமாளே.

பதவுரை

      வன்னி ஒத்த --- நெருப்புக்கு ஒப்பான

     படைக்கல ஆதிய --- படைக்கலங்கள் முதலியவை

     துன்னு கைக் கொள் --- பற்றிய கைகளை உடைய

     அரக்கர் மாமுடி மண்ணில் அற்று விழச்செய் --- அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்று விழும்படி செய்த,

     மாதவன் மருகோனே --- திருமாலின் திருமருகரே!

      மன்னு பைப்பணி உற்ற --- பொருந்திய படத்தை உடைய பாம்பின் நச்சுப்பையில் உள்ள

     நீள்விடம் என்ன --- கொடிய விடம் என்று சொல்லும்படி

     விட்ட --- வேலினை விட்டுப் போரிட

     முடுக்கு சூரனை --- விரைவாக எதிர்வந்த சூரனை, 

      மல் உடற்று முருட்டு மார்பு அற ---  மல்போர் செய்யும் கரடுமுரடான மார்பானது பிளவு படுமாறு,

     அடைவாகச் சென்னி பற்றி அறுத்த --- அவனது தலையைப் பற்றி அறுத்த

     கூரிய மின் இழைத்த திறத்த வேலவ --- கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல் படைத்த வேலாயுதத்தை உடையவரே!

      செய்ய பொன் புன வெற்பு --- செம்மையான அழகிய தினைப்புனம் இருந்த மலையில் இருந்த

     மான் அணை மணி மார்பா --- மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய திருமார்பரே!

      செம் மனத்தர் --- செம்மை வாய்ந்த மனம் உடையவர்கள்,

     மிகுத்த மாதவர் --- பெருந்தவம் மிக்கவர் ஆகியவர்களின்

     நன்மை பெற்ற உளத்திலே மலர் செல்வ --- நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தில் விளங்கி நிற்கும் செல்வரே!

     சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே --- சிக்கல் நகரில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

      கன்னல் ஒத்த மொழிச் சொல் வேசியர் --- கற்கண்டினைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் பொதுமகளிர்.

     வன் மனத்தை உருக்கு லீலையர் --- கடினமான மனத்தையும் உருக்க வல்ல லீலைகளைச் செய்பவர்கள்.

     கண் வெருட்டி விழித்த பார்வையர் --- கண்களைக் கொண்டு மயக்கும் விழிக்கின்ற பார்வையர்.

      இதமாகக் கையில் உற்ற பொருட்கள் யாவையும் வை எனக் கை விரிக்கும் வீணியர் --- இனிமையாகப் பேசி, "கையில் உள்ள எல்லா பொருட்களையும் வைத்திடு" என்று கூறி கையை விரித்து நீட்டுகின்ற பயனற்றவர்கள். 

      கைகள் பற்றி இழுத்து --- (தம்மை நாடி வருபவரின்) கைகளைப் பிடித்து இழுத்து

     மார்முலை தனில் வீழ --- மார்பிலே உள்ள முலைகளின் மீது விழும்படி செய்து,

     பின்னிவிட்ட சடைக்குளே மலர் தன்னை வைத்து --- பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்து

     "முடிப்பை நீ அவிழ்" என்னும் அற்ப குணத்தர் --- "பண முடிப்பை நீ அவிழ்ப்பாயாக" என்று கூறுகின்ற அற்பகுணம் படைத்தவர்கள்.

     ஆசையில் உழலாமல் --- இத்தகைய விலைமாதர்கள் மீது வைத்த ஆசையில் உழலாமல்,

      பெய்யு(ம்) முத்தமிழில் தயாபர என்ன --- சொல்லப்படும் இயல், இசை, நாடகம் என்று மூவகைப்பட்ட தமிழில் "தயாபரரே" என்று

     முத்தர் துதிக்கவே மகிழ் --- முத்தர்கள்கள் போற்றி செய்ய மகழ்கின்ற,

     பிஞ்ஞகர்க்கு --- பிஞ்ஞகம் என்னும் தலைக் கோலத்தை உடைய சிவபெருமானுக்கு

     உரை செப்பு நாயக அருள் தாராய் --- உபதேசம் செய்தருளிய நாயகரே! அருள் தரவேண்டும்.


பொழிப்புரை


     நெருப்புக்கு ஒப்பான படைக்கலங்கள் முதலியவற்றைப் பற்றிய கைகளை உடைய அரக்கர்களின் பெரிய தலைகள் பூமியில் அற்று விழும்படி செய்த திருமாலின் திருமருகரே!

       பொருந்திய படத்தை உடைய பாம்பின் நச்சுப்பையில் உள்ள கொடிய விஷம் என்று சொல்லும்படி வேலினை விட்டுப் போரிட விரைவாக எதிர்வந்த சூரனை, மல்போர் செய்யும் வலிமையான மார்பானது பிளவு படுமாறு, அவனது தலையைப் பற்றி அறுத்த கூர்மை வாய்ந்த, மின் போல் ஒளிரும் ஆற்றல் படைத்த வேலாயுதத்தை உடையவரே!

       செம்மையான அழகிய தினைப் புனம் இருந்த மலையில் இருந்த மான் போன்ற வள்ளி நாயகியை அணைந்த அழகிய திருமார்பரே!

       செம்மை வாய்ந்த மனம் உடையவர்கள், பெருந்தவம் மிக்கவர் ஆகியவர்களின் நல்ல உள்ளத்தில் விளங்கி நிற்கும் செல்வரே!

     சிக்கல் நகரில் வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     கற்கண்டினைப் போல் இனிக்கும் பேச்சுக்களைப் பேசும் பொதுமகளிர். கடினமான மனத்தையும் உருக்க வல்ல லீலைகளைச் செய்பவர்கள். கண்களைக் கொண்டு மயக்கும் விழிக்கின்ற பார்வையர். இனிமையாகப் பேசி, "கையில் உள்ள எல்லா பொருட்களையும் வைத்திடு" என்று கூறி கையை விரித்து நீட்டுகின்ற பயனற்றவர்கள். தம்மை நாடி வருபவரின் கைகளைப் பிடித்து இழுத்து, மார்பிலே உள்ள முலைகளின் மீது விழும்படி செய்து, பின்னி வைத்துள்ள கூந்தலிலே மலர்களை வைத்து "பண முடிப்பை நீ அவிழ்ப்பாயாக" என்று கூறுகின்ற அற்ப குணம் படைத்தவர்கள். இத்தகைய விலைமாதர்கள் மீது வைத்த ஆசையில் உழலாமல், சொல்லப்படும் இயல், இசை, நாடகம் என்னும் முத் தமிழில் "தயாபரரே" என்று முத்தர்கள்கள் போற்றி செய்ய மகழ்கின்ற,பிஞ்ஞகம் என்னும் தலைக் கோலத்தை உடைய சிவபெருமானுக்கு உபதேசம் செய்தருளிய நாயகரே, அருள் தரவேண்டும்.

விரிவுரை


இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்களின் தன்மையை அடிகளார் எடுத்துக் காட்டினார்.

"பெய்யு(ம்) முத்தமிழில் தயாபர" என்ன முத்தர் துதிக்கவே மகிழ் பிஞ்ஞகர்க்கு உரை செப்பு நாயக! ---

உலகில் பேசப்படும் மொழிகளுக்குள் தலை சிறந்தது தமிழ் மொழியே ஆகும். இறைவனருளை எளிதில் பெறுதற்கு ஏற்ற மொழியும் தீந்தமிழே. இறைவன் சங்கப் புலவரில் தானும் ஒருவனாய் இருந்து தமிழ் ஆராய்ந்தமையாலும், பெற்றான் சாம்பான் பொருட்டு உமாபதி சிவத்தினிடம் சீட்டு எழுதியனுப்பியது தமிழிலே ஆதலானும், சுந்தரருக்கும் சேக்கிழாருக்கும் அருணகிரிநாதருக்கும் அடியெடுத்துக் கொடுத்தது தமிழிலேயே என்பதனாலும் இதன் பெருமை நன்கு விளங்குகின்றது. முதலை வாய்ப்பட்ட மகனுக்கு உயிர் கொடுத்தது தமிழ். கற்புணையை நற்புணையாக்கியது தமிழ். எலும்பைப் பெண்ணாக்கியது தமிழ். இறைவனை இரவில் இருமுறை நடந்து தூது போகச் செய்தது தமிழ். குதிரைச் சேவகனாக வரச்செய்தது தமிழ். கற்றூணில் காட்சிதரச் செய்தது தமிழ். பற்பல அற்புதங்களைச் செய்ய வைத்தது தமிழ். இயற்கையான மொழி தமிழ். பேசுந்தோறும் பேரின்பத்தை வழங்குவது தமிழ். 

சிவபெருமான் தமிழ்ப் பாடலில் காதல் உடையவர்.  சுந்தர்மூர்த்தி சுவாமிகள் பாடலை மிகவும் விரும்பியவர்.

"மற்று,நீ வன்மை பேசி, வன்தொண்டன் என்னும் நாமம் 
பெற்றனை; நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டே ஆகும்;  ஆதலால் மண்மேல் நம்மைச்
சொல்தமிழ் பாடுக' என்றார் தூமறை பாடும் வாயார்".

"சொல்ஆர் தமிழ் இசைபாடிய தொண்டன் தனை இன்னும்   
பல்லாறு உலகினில் நம்புகழ் பாடு' என்று உறு பரிவின்
நல்லார் வெண்ணெய் நல்லூர் அருள் துறை மேவிய நம்பன்
எல்லா உலகு உய்யப் புரம் எய்தான் அருள் செய்தான்".

"என்ற பொழுதில் இறைவர்தாம்
     எதிர்நின்று அருளாது எழும் ஒலியால்
மன்றின் இடை நம் கூத்து ஆடல்
     வந்து வணங்கி வன்தொண்டன்
ஒன்றும் உணர்வால் நமைப் போற்றி
     உரைசேர் பதிகம் பாடுதலால்
நின்று கேட்டு வரத் தாழ்த்தோம்
     என்றார் அவரை நினைப்பிப்பார்".

என வரும் பெரியபுராணப் பாடல்களையும், அவை சார்ந்த அருள் வரலாறுகளையும் எண்ணி இன்பம் உறுக.

இறைவன், "தண்ணார் தமிழ் அளிக்கும் தண்பாண்டி நாட்டான்" என்று போற்றினார் மணிவாசகப் பெருமான். பெருமானுக்கு, அவர் ஆய்ந்த தமிழில் விருப்பம் மிகுதி. ஆதலால்,

"சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்
    பலத்தும், என் சிந்தையுள்ளும்
உறைவான், உயர்மதிற் கூடலின்
    ஆய்ந்த ஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனையோ? அன்றி
    ஏழிசைச் சூழல்புக்கோ?
இறைவா! தடவரைத் தோட்கு என்கொல்
    ஆம் புகுந்து எய்தியதே"

என்று மணிவாசகப் பெருமான் திருக்கோவையாரில் வைத்துப் பாடி அருளினார். "தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன்" என்று பாடினார் அப்பர் பெருமான்.

கண்ணுதல் பெரும் கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்உறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ், ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்புஇலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும், முதலை
உண்ட பாலனை அழைத்ததும், எலும்பு பெண் உருவாக்
கண்டதும், மறைக் கதவினைத் திறந்ததும், கன்னித்
தண்தமிழ்ச் சொலோ, மறுபுலச் சொற்களோ சாற்றீரே.

எனத் திருவிளையாடல் புராணம் கூறுமாறு காண்க.

இவ்வாறெல்லாம் சிறப்புப் பெற்ற முத்தமிழால் பாடித் துதிக்கின்ற முத்தர்களின் துதியில் மகிழ்கின்றவர் சிவபெருமான். அவருக்கு உபதேசம் புரிந்து அருளியவர் முருகப் பெருமான் என்கின்றார் அடிகளார்.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் "தணிகைப் புராணம்" கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை "மலையிடை வைத்த மணி விளக்கு" என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர்.

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! "ஓம்" எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர்.

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிகைமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர்வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு
அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்
சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ
முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.--- தணிகைப் புராணம்.

நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ
 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.

நாதா குமரா நம என்று அரனார்
 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி

தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே”
                                                                   --- (கொடியனைய) திருப்புகழ்.

மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு
தந்த மதியாளா....               --- (விறல்மாரன்) திருப்புகழ்.

சிவனார் மனம் குளி, உபதேச மந்த்ரம் இரு
செவி மீதிலும் பகர்செய் குருநாதா...      --- திருப்புகழ்.

பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

அரவு புனிதரும் வழிபட
மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.
                                                           --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது.

உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,
தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,
தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்
தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்.   ---  தணிகைப் புராணம்.

மின் இடை, செம் துவர் வாய், கரும் கண்,
     வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!
என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன்,
     எம்பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
     தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,
பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்!
     பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்
அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன
கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்
துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

வாயும் மனமும் கடந்த மனோன்மனி
பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும் நல் தாரமும் ஆமே.           --- திருமந்திரம்.

கனகம் ஆர் கவின்செய் மன்றில்
அனக நாடகற்கு எம் அன்னை
மனைவி தாய் தங்கை மகள்....           --- குமரகுருபரர்.

பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்
காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு
மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,
மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.
                                         --- அபிராமி அந்தாதி.

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,
அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,
துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு  செய்தே.
                                         --- அபிராமி அந்தாதி.

சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,
உவந்து இருவரும் புணர்ந்து, ங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்
பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,
தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே.
                                                          --- சிவஞான சித்தியார்.

செம் மனத்தர், மிகுத்த மாதவர் நன்மை பெற்ற உளத்திலே மலர் செல்வ ---

உள்ளம் உருகி நினைப்பவர் உள்ளக் கோயிலில் இறைவன் உறைகின்றான் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் தெளிக.

"அகன்அமர்ந்த அன்பினராய் அறுபகைசெற்று
         ஐம்புலனும் அடக்கிஞானம்
புகல்உடையோர் தம்உள்ளப் புண்டரிகத்து
         உள்இருக்கும் புராணர்"கோயில்
தகவுஉடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
         கம் திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரிஅட்ட
         மணம்செய்யும் மிழலை ஆமே.  ---  திருஞானசம்பந்தர்.

நீர்உளான், தீ உளான், அந்தரத்து உள்ளான்,    
     "நினைப்பவர் மனத்து உளான்", நித்தமா ஏத்தும்   
ஊர்உளான், எனதுஉரை தனதுஉரையாக  
    ஒற்றை வெள் ஏறு உகந்து ஏறிய ஒருவன்,   
பார் உளார் பாடலோடு ஆடல் அறாத    
    பண்முரன்று அஞ்சிறை வண்டினம் பாடும்   
ஏர்உள் ஆர் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்   
    இருக்கையாப் பேணி என் எழில்கொள்வது இயல்பே. --- திருஞானசம்பந்தர்.

உளர்ஒளியை, "உள்ளத்தின் உள்ளே நின்ற
     ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை",
விளர்ஒளியை, விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும்
    விண்ணொடுமண் ஆகாசம் ஆயி னானை,
வளர்ஒளியை, மரகதத்தின் உருவி னானை,
    வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர்ஒளியை, கீழ்வேளூர் ஆளும் கோவை,
    கேடுஇலியை நாடும்அவர் கேடு இலாரே. --- அப்பர்.

பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்,
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைத்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ. ---  அப்பர்.
  
"ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை"
     சேயானைச் சேவகனைத் தென்னன் பெருந்துறையின்
மேயானை வேதியனை மாதிருக்கும் பாதியனை
     நாயான நந்தம்மை ஆட்கொண்ட நாயகனைத்
தாயான தத்துவனைத் தானே உலகேழும்
     ஆயானை ஆள்வானைப் பாடுதுங்காண் அம்மானாய். --- மணிவாசகர்.

"என் உள்ளத்துள் ஓங்காமராய் நின்ற மெய்யா"  ---  மணிவாசகர்.

"உருகுதலைச் சென்ற உள்ளத்தும், அம்பலத்தும், ஒளியே
பெருகுதலைச் சென்றுநின்றோன்" பெருந்துறைப் பிள்ளை, கள்ஆர்
முருகுதலைச் சென்ற கூழை முடியா, முலை பொடியா,
ஒரு குதலை, சில் மழலைக்கு, என்னோ? ஐய! ஓதுவதே. ---  மணிவாசகர்.

உளன்கண்டாய், நன்னெஞ்சே!. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்,
விண்ஒடுங்கக் கோடு உயரும் வீங்கு அருவி வேங்கடத்தான்,
மண்ஒடுங்கத் தான்அளந்த மன்.      --- பூதத்தாழ்வார்.

உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன் என்றும்
உளன்கண்டாய், உள்ளுவா ருள்ளத்து உளன்கண்டாய்,
வெள்ளத்தின் உள்ளானும், வேங்கடத்து மேயானும்,
உள்ளத்தின் உள்ளான் என்று ஓர்.    --- பொழ்கை ஆழ்வார்.


சிக்கல் நகர்க்குள் மேவிய பெருமாளே ---

சிக்கல், சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் திருவாரூர் செல்லும் சாலை வழியில் சிக்கல் திருத்தலம் உள்ளது.

நாகப்பட்டினம் - திருவாரூர் சாலையில் கீழ்வேளூருக்கும் சிக்கலுக்கும் இடையே உள்ள ஆழியூர் என்னும் தேவார வைப்புத் திருத்தலம் உள்ளது. இறைவன் பெயர் கங்காளநாதர். இறைவி பெயர் கற்பகவல்லி. சாலை ஓரத்திலேயே ஊர் உள்ளது. ஆழியூரிலிருந்து 2 கி.மி. தொலைவில் திருக்கண்ணங்குடி என்னும் வைணவத் தலமும் உள்ளது.

இறைவர்     : நவநீதேசுவரர், வெண்ணெய்ப்பிரான்
இறைவியார் : வேல்நெடுங்கண்ணி, சத்தியதாட்சி
தல மரம்     : மல்லிகை
தீர்த்தம்      : க்ஷீர புஷ்கரணி, கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம்.

திருஞானசம்பந்தப் பெருமான் வழிபட்டுத் திருப்பதிகம் அருளப் பெற்ற திருத்தலம்.

புராண காலத்தில் மல்லிகைவனம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்தில் வசிட்ட முனிவர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இத்தலத்து சிவபெருமானை வழிபட்டு வந்தார். அக்கால கட்டத்தில் தேவலோகத்துப் பசுவான காமதேனு நாயின் ஊனைத் தின்றதால் சாபம் பெற்று இத்தலத்திற்கு வந்தது. தற்போதுள்ள ஆலயத்தின் மேற்குப் பக்கம் உள்ள பாற்குளம் என்றும் க்ஷீரபுஷ்கரணி என்றும் சொல்லப்படும் தீர்த்தத்தில் தன் பாவம் தீர நீராடியது. காமதேனு குளித்தபோது அதனுடைய பால் பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அங்கு வந்த வசிட்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணையை எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூசை செய்தார். பூசையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை வேறு இடத்தில் வைக்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது இயலாமல் அந்த வெண்ணை இலிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத் திருத்தலம் "சிக்கல்" என்ற பெயருடன் விளங்குகிறது என்று புராண வரலாறு கூறுகின்றது. வெண்ணெய் இலிங்கத் திருமேனியான இறைவன் "வெண்ணெய்ப் பிரான்" என்ற  திருநாமத்தோடு விளங்குகின்றார்.

திலோத்தமையைக் கூடியதால் தன் தவவலிமையை இழந்த விசுவாமித்திர முனிவர் இழந்த தவவலிமையை திரும்பப் பெற்ற திருத்தலம் சிக்கல்

முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு ஒரு அந்தணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷமும் சாபமும் நீங்கிய தலம் சிக்கல்.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வேல் வாங்கும் விழாவில் சூரபத்மனை அழிப்பதற்காக தன் தாயிடம் வேல் வாங்கி முருகப்பெருமான் தன் கோவிலில் வந்து அமர்ந்த பிறகு, வேலின் வீரியம் தாங்காமல் சிக்கல் சிங்காரவேலருக்கு வியர்க்கும். பட்டுத்துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை துளிர்த்துக் கொண்டே இருக்கும் அற்புதம் இன்றளவும் நடைபெறும் தலம் சிக்கல். "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்" என்பது ஒரு பழமொழி. இத்தலத்தில் கோயில் கொண்டுள்ள அம்பாள் வேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார். இத்தலத்தில் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கோச்செங்கட்சோழ நாயனார் அமைத்தருளிய மாடக் கோயில்களில் ஒன்றாகும். கோவிலின் மையத்தில் 12 படிகள் கொண்ட ஒரு கட்டுமலை மேல் மூலவர் நவநீதநாதர் இலிங்க வடிவில் அருள் புரியும் சந்நிதியும், சிக்கல் சிங்காரவேலர் என்று பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சந்நிதியும் உள்ளன. கீழ்ப்படிக்குப் பக்கத்திலுள்ள சுந்தர கணபதியை தரிசித்த பிறகே கட்டுமலை மேலே செல்ல வேண்டும் என்பது வழக்கம். மேலே சென்று மண்டபத்தை அடைந்ததும் நேரே தியாகராஜ சந்நிதி உள்ளது. இது சப்தவிடங்கத் தலங்களுள் அடங்காது. இங்குள்ள மரகதலிங்கம் மிகவும் சிறப்புள்ளது. உள்ளே வெண்ணைப்பிரான் இருக்கும் கருவறை உள்ளது. சிக்கல் சிங்காரவேலர் வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். ஐப்பசி மாத விழாவில் வியர்வை சிந்தும் வேலவர் இவர்தான். கட்டுமலையின் கீழ்பக்கம் இறைவி வேல்நெடுங்கண்ணியின் சந்நிதி அமைந்துள்ளது. இறைவி முருகனுக்கு வேல் தருவது போன்ற சிற்பம் சந்நிதியின் மேல்பாகத்தில் இருக்கிறது. பிரகாரம் சுற்றி வரும்போது வடக்குச் சுற்றில் கோலவாமனப் பெருமாள் கோவில் தனியாக அமைந்திருக்கிறது. சீதேவி, பூதேவி சகிதம் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

கருத்துரை

முருகா! விலைமாதர் ஆசையில் விழாமல் அருள்வாய்.

திரு ஏகம்ப மாலை - 7

  "அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால், சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப் பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக...