எட்டிகுடி - 0839. உரமுற்று இருசெப்பு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உரமுற்று இருசெப்பு (எட்டிகுடி)
  
முருகா!
விலைமாதர் மீது வைத்த ஆசையால்,
தவநிலை கெட்டு உழலாமல் அருள்புரிவாய்.

தனனத் தனனத் தனனத் தனனத்
     தனனத் தனனத் ...... தனதான

உரமுற் றிருசெப் பெனவட் டமுமொத்
     திளகிப் புளகித் ...... திடமாயே

உடைசுற் றுமிடைச் சுமையொக் கஅடுத்
     தமிதக் கெறுவத் ...... துடன்வீறு

தரமொத் துபயக் களபத் தளமிக்
     கவனத் தருணத் ...... தனமீதே

சருவிச் சருவித் தழுவித் தழுவித்
     தவமற் கவிடுத் ...... துழல்வேனோ

அரிபுத் திரசித் தசஅக் கடவுட்
     கருமைத் திருமைத் ...... துனவேளே

அடல்குக் குடநற் கொடிகட் டியனர்த்
     தசுரப் படையைப் ...... பொருவோனே

பரிவுற் றவருக் கருள்வைத் தருள்வித்
     தகமுத் தமிழைப் ...... பகர்வோனே

பழனத் தொளிர்முத் தணியெட் டிகுடிப்
     பதியிற் குமரப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்

உரம் உற்று, ரு செப்பு என வட்டமும் ஒத்து,
     இளகிப் புளகித் ...... திடமாயே,

உடை சுற்றும் இடைச் சுமைஒக்க, அடுத்து
     அதமிதக் கெறுவத் ...... துடன்வீறு

தரம்ஒத்து உபயக் களபத் தளம் மிக்க
     வனத் தருணத் ...... தனமீதே

சருவிச் சருவி, தழுவித் தழுவி,
     தவம் அற்கவிடுத்து ...... உழல்வேனோ?

அரி புத்திர சித்தச அக் கடவுட்கு
     அருமைத் திரு மைத் ...... துன வேளே!

அடல் குக்குட நல் கொடி கட்டி, அனர்த்த
     அசுரப் படையைப் ...... பொருவோனே!

பரிவு உற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்-
     தக! முத்தமிழைப் ...... பகர்வோனே!

பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப்
     பதியில் குமர! ...... பெருமாளே!


பதவுரை

      அரி புத்திர சித்தசன் --- திருமாலின் மனதில் தோன்றிய மகனான மன்மதன் என்னும்

     அக் கடவுட்கு --- அந்தக் கடவுளுக்கு,

     அருமைத் திரு மைத்துன வேளே --- அருமையான அழகிய மைத்துனராகிய செவ்வேள் பரமரே!,

      அடல் குக்குட நல் கொடி கட்டி --- வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி,

     அனர்த்த அசுரப் படையைப் பொருவோனே --- துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் போர் புரிந்து அழித்தவரே!

      பரிவு உற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக --- அன்பு வைத்த அடியார்களுக்கு திருவருட்கருணை வைத்து அருளைப் பொழியும் ஞானமூர்த்தியே!

    முத்தமிழைப் பகர்வோனே --- திருஞானசம்பந்தராக வந்து முத்தமிழில் தேவாரத் திருப்பதிகங்களை அருளியவரே

     பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமர --- வயல்களில் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி என்னும் திருத்தலத்தியல் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
    
     பெருமாளே ---பெருமையில் மிக்கவரே!

      உரம் உற்று இரு செப்பு என --- மார்பிலே இரண்டு சிமிழ்கள் போல

     வட்டமும் ஒத்து இளகி --- வட்ட வடிவோடு குழைந்து,

     புளகித் திடமாயே --- புளகாங்கிதம் தருவதாய், வலிமையோடு,

      உடை சுற்றும் இடைச் சுமை ஒக்க --- ஆடையைச் சுற்றி அணியப்படும் இடைக்கு பாரம் தருவதாகவும்,

     அடுத்து அமிதக் கெறுவத்துடன் வீறு தரம் ஒத்து --- --- அளவு மீறிய கருவத்துடன் பொலிவு மிக்க தன்மை கொண்டு,  

     உபயக் களபத் தள மிக்க --- இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் பூசப்பட்ட,

     வனத் தருணத் தனம் மீதே --- அழகான,  இரண்டு இளைய மார்பகங்கள் மீது (ஆசை வைத்து),

      சருவிச் சருவித் தழுவித் தழுவி --- கொஞ்சிக் கொஞ்சித் தழுவித் தழுவி,

     தவம் அற்க விடுத்து உழல்வேனோ --- தவ நிலை என்பதை அடியோடு விட்டுவிட்டு அடியேன் உழல்வேனோ?


பொழிப்புரை

     திருமாலின் சித்தத்திலே தோன்றியவனான மன்மதனுக்கு அருமையான, அழகிய மைத்துனராகிய செவ்வேட்பரமரே!,

         வலிமை வாய்ந்த சேவல் என்னும் நல்ல கொடியைக் கட்டி,
துன்பம் விளைவித்த அசுர சேனையுடன் போர் புரிந்து அழித்தவரே!

         அன்பு வைத்த அடியார்களுக்கு கருணை சுரந்து அருளைப் பொழியும் ஞான மூர்த்தியே!

     திருஞானசம்பந்தராக வந்து முத்தமிழில் தேவாரத் திருப்பதிகங்களை அருளியவரே

     வயல்களில் ஒளி வீசுகின்ற முத்துக்களைக் கொண்ட எட்டிகுடி என்னும் திருப்பதியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
    
     பெருமையில் மிக்கவரே!

         பொது மாதர்களின் மார்பிலே இரண்டு சிமிழ்கள் போல வட்ட வடிவோடு குழைந்து, புளகாங்கிதம் தருவதாய், வலிமையோடு, ஆடையைச் சுற்றி அணியப்படும் இடைக்கு பாரம் தருவதாக,  அளவு மீறிய கருவத்துடன் பொலிவு மிக்க தன்மை கொண்டு,  இரண்டு கலவைச் சாந்தும் செஞ்சாந்தும் பூசப்பட்ட அழகான,  இரண்டு இளைய மார்பகங்கள் மீது ஆசை கொண்டு, கொஞ்சிக் கொஞ்சித் தழுவித் தழுவி, தவ நிலை என்பதை அடியோடு விட்டு விட்டு அடியேன் உழல்வேனோ?

விரிவுரை

அரி புத்திர சித்தச அக் கடவுட்கு அருமைத் திரு மைத்துன வேளே ---

திருமாலின் சித்தத்தில் தோன்றியவன் மன்மதன். அதனால், சித்தசன் எனப் பேர் பெற்றான். திருமாலின் மகளான வள்ளிப் பிராட்டியை முருகப் பெருமான் மணந்து கொண்டார். அதனால் முருகப் பெருமானுக்கு, மன்மதன் மைத்துன முறை ஆகின்றான்.

பரிவு உற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக ---

தன் மீது அன்பு வைத்து வழிபடும் அடியவர்க்கு அறக்கருணை புரிவதும், அல்லாதார்க்கு நிகரில்லாத மறக்கருணை புரிவதும் இறைவன் தன்மை.

அடல் குக்குட நல் கொடி கட்டி ---

அடல் - வலிமை.  குக்குடம் - சேவல்.

அனர்த்த அசுரப் படையைப் பொருவோனே ---

அனர்த்தம் - பொருள் இல்லாதது, பயனற்றது, துன்பம், கேடு.

பரிவு உற்றவருக்கு அருள் வைத்து அருள் வித்தக ---

பரிவு - அன்பு.

அன்பு இல்லாமல் அருள் பிறக்காது. அருள் என்பது அன்பு ஈன்ற குழந்தை. "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்றார் திருவள்ளுவ நாயனார். அன்பினில் விளைவது அருள். "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்றார் மணிவாசகப் பெருமான்.

எனவே, இறைவன் தன் மீது அன்பு வைத்து வழிபடும் அடியார்களுக்கு அருளைப் பொழிவான்.

வித்தகம் - அறிவு. இங்கே உண்மை அறிவைக் குறிக்கும்.

இறைவன் மெய்யறிவு வடிவானவன்.

முத்தமிழைப் பகர்வோனே --- திருஞானசம்பந்தராக வந்து முத்தமிழில் தேவாரத் திருப்பதிகங்களை அருளியவரே

பழனத்து ஒளிர் முத்து அணி எட்டிகுடிப் பதியில் குமர ---

பழனம் - வயல்.

எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்குத் தெற்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம்.


கருத்துரை

முருகா! விலைமாதர் மீது வைத்த ஆசையால், தவநிலை கெட்டு உழலாமல் அருள்புரிவாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...