அடியவர்களுக்குச் சாதி இல்லை




சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நமிநந்தி அடிகள் பிறந்த குலத்தின் சார்பாகச் சில நடைமுறைகள் அக்காலத்தில் வகுக்கப்பட்டன. அதன்படி, வெளியில் எங்காவது சென்று வந்தால், குளித்து முடித்தே வீட்டுக்குள் புகவேண்டும் என்பது நியதியாக இருந்தது.

அடியவர்களுக்கு இந்த நியதி எல்லாம் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டவே, நமிநந்தி அடிகள் வாழ்வில் இந்த நிகழ்வு காட்டப்பட்டது. இது இறைவன் திருவிளையாடல்.

இறைவனுக்கு அடியவராக இருப்பவர் யாவராயினும் அவர் நம்மால் வணங்கத் தக்கவர். அடியாராக இல்லாதார் எப்படிப்பட்டவர் ஆயினும் அவர் நம்மால் போற்றத் தக்கவர் அல்லர் என்னும் கருத்து அமைந்த, அப்பர் பெருமான் திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்.

"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;
         நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்;
         இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை;
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான
         சங்கரன் நல் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
         கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே".

இதன் பொழிப்புரை :

தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.

ஆதலின் .நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் இதனையே தமது திருப்பாடல்களில் வலியுறுத்திக் காட்டினார்.

அடிமையில் குடிமை இல்லா

     அயல் சதுப்பேதிமாரில்

குடிமையில் கடைமை பட்ட

     குக்கரில் பிறப்பரேலும்,

முடியினில் துளபம் வைத்தாய்!

     மொய்கழற்கு அன்பு செய்யும்*

அடியரை உகத்தி போலும்

     அரங்கமா நகர் உளானே.


இதன் பொழிப்புரை ---

திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! எனக்குக் கைங்கரியம் செய்வதில் ஊற்றம் இல்லாதவர்களாய், அடிமைக்க் மாறுபட்டவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கூழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புபவன் நீ.

குக்கர் - நாய்.

வேத அத்யயனம் (கற்பதன்) பண்ணுவதன் மூலம் அவர்கள் உண்மையில் அறிய வேண்டியது என்ன? என்றால் எம்பெருமான் நாராயணனே எல்லா உலகுக்கும் ஜகத் காரணன், ரக்ஷகன், ஸ்வாமி. நாம் அவனுக்கு சொத்து போல உடைமை. நமது ஆத்ம சொரூபத்தின் பலனே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்வது தான் என்கிற உணர்வு, ஞானம் வர வேண்டும். வந்தால்தான் வேதம் அறிந்தவர்களுக்கு வர வேண்டிய ஞானமாகிய உணர்வு வந்த்தாக அர்த்தம். அப்படி வந்தவர்கள் தான் சதுர்வேதிகள்.

ஆழ்வார் சதுப்பேதிமார்கள் என்கிறார். இந்த ஞானம் வராதும்- அதனை அறியாமலும், வேறு பயன்களைப் பெற்று வாழ இருப்பவர்களை "அயல் சதுப்பேதிமார்கள்" என்று பாசுரத்தில் சொல்லுகிறார்.

விஷ்ணு பக்தி இல்லாது, வேதம் அறிந்தாலும் வீண் என்கிறது சாஸ்திரம். இப்படி கைங்கர்யத்தில் நாட்டம் இல்லது நாலு வேதங்களையும் கற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் யார்? என்பதை அருளுகிறார்.

வேதநெறி காட்டிய வழிகளைக்  கடைப்பிடிக்காது,
வேதம் செய்யாதே என்று விலக்கி வைத்தது எல்லாம் செய்தும், பகவானுக்கு எதிராக இருந்தும், பலபல பாவங்களைச் செய்து, அதனால் பல பல தாழ்ந்த பிறவிகளில் மீண்டும் பிறந்து உழல்கிறோம். அப்படி மிகவும் கீழான தாழ்ந்த சண்டாள ஜாதியைத் தான் "குக்கர்" என்கிறார். இப்படி குடிப்பிறப்பால் மிகவும் சண்டாளனாக பிறந்தாலும், அரங்கனிடத்தில் அன்பு பூண்டு, வாழும் சோம்பராக நல்ல ஞானம் கொண்டவரானால் அவரது பிறப்பு தாழ்ந்தது அல்ல என்கிறார் ஆழ்வார்

இராமன் காட்டில் இலக்குவமனிடம் ஜடாயுவைப் பார்த்த பின்பு, "லக்ஷ்மணா! நல்ல சாதுக்கள்-, தர்மம் அறிந்தவர்கள், சூரர்கள், எல்லாம் சரணம் அடையத் தகுந்த மஹா புருஷர்களே. அவர்கள் விலங்குகளாயும் இதர தாழ்ந்த யோநிகளிலும் உண்டு" என்றார். இதனால், பகவானைப் பற்றிய ஞானம் விலங்குகள் பறவைகளுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது.

வேதத்தின் பொருளை விளக்க வந்த இராமாயணத்தில், காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவச்சிகளும், அனுமான், சுக்ரீவன் போன்ற வானரங்களும், ஜடாயு போன்ற பறவைகளும், விபீடணன் போன்ற அரக்கர்ர்களும் எம்பெருமானைப் பற்றிய ஞானத்தோடு இருந்தார்கள் என்பது தெரியும்.

மற்றொரு இதிகாசமான மகாபாரதத்திலும், தாழ்ந்த ஜாதியில் பிறந்த விதுரர், வேடனாய் மாமிச வியாபாரம் செய்து வந்த தர்மவ்யாதன்,  ஆய்ப்பாடியில் வாழ்ந்த எல்லா இடைச்சியர்கள் போன்ற அனைவரும் எம்பெருமானை உணர்ந்து, எல்லாம் கண்ணன் என்று இருந்தார்கள்.

அடியவர்களைப் பழிப்பவர்கள், உயர்ந்த சாதியர் ஆனாலும், அவர்களைப் புலையர் என்கின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

"அமர ஓர் அங்கம் ஆறும்,

     வேதம் ஓர் நான்கும் ஓதி,

தமர்களில் தலைவர் ஆய

     சாதி அந்தணர்களேலும்,

நுமர்களைப் பழிப்பர் ஆகில்,

     நொடிப்பதோர் அளவில் ஆங்கே

அவர்கள் தாம் புலையர் போலும்,

     அரங்கமா நகர் உளானே".


இதன் பொழிப்புரை ---

அரங்க மாநகர் உள்ளானே! ஒப்பற்ற சிட்சை, வியாபகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறு வகையான வேத அங்கங்களையும், நிகர் அற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி, உன் அடியார்களில் முதல்வராய் பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், தேவரீருடைய அடியார்களை, அவர்களுடைய பிறப்பு நோக்கிப் பழித்தால், அந்த நொடியிலேயே, அப்போதே, அந்தப் பிராமணர்கள் சண்டாளர்கள் ஆவார்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...