திரியம்பகபுரம் - 0833. உரை ஒழிந்து
அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உரை ஒழிந்து (த்ரியம்பகபுரம்)

முருகா!
விலைமாதர் மயல் அற அருள்வாய்.
                 

தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன
     தனன தந்தனந் தனதன தனதன ...... தனதான


உரையொ ழிந்துநின் றவர்பொரு ளெளிதென
     வுணர்வு கண்டுபின் திரவிய இகலரு
     ளொருவர் நண்படைந் துளதிரள் கவர்கொடு ....பொருள்தேடி

உளம கிழ்ந்துவந் துரிமையில் நினைவுறு
     சகல இந்த்ரதந்த் ரமும்வல விலைமக
     ளுபய கொங்கையும் புளகித மெழமிக ...... வுறவாயே

விரக வன்புடன் பரிமள மிகவுள
     முழுகி நன்றியொன் றிடமல ரமளியில்
     வெகுவி தம்புரிந் தமர்பொரு சமயம ...... துறுநாளே

விளைத னங்கவர்ந் திடுபல மனதிய
     ரயல்த னங்களுந் தனதென நினைபவர்
     வெகுளி யின்கணின் றிழிதொழி லதுவற ......அருள்வாயே

செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
     ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
     செகம டங்கலும் பயமற மயில்மிசை ...... தனிலேறித்

திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
     தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
     திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென ...... வருபூதங்

கரையி றந்திடுங் கடலென மருவிய
     வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
     கலவி யன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே

கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
     கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
     கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல .....பெருமாளே.


பதம் பிரித்தல்


உரை ஒழிந்து நின்றவர் பொருள் எளிது என
     உணர்வு கண்டு, பின் திரவிய இகலருள்
     ஒருவர் நண்பு அடைந்து, ள திரள் கவர்கொடு ......பொருள்தேடி,

உளம் மகிழ்ந்து வந்து உரிமையில் நினைவுறு
     சகல இந்த்ர தந்த்ரமும் வல விலைமகள்,
     உபய கொங்கையும் புளகிதம் எழ, மிக ...... உறவுஆயே,

விரக அன்புடன், பரிமள மிக உளம்
     முழுகி நன்றி ஒன்றிட,மலர் அமளியில்
     வெகு விதம் புரிந்து, மர்பொரு சமயம்......அது உறுநாளே,

விளை தனம் கவர்ந்திடு பல மனதியர்,
     அயல் தனங்களும் தனது என நினைபவர்,
     வெகுளியின்கண் நின்று இழிதொழில் அது உற ......அருள்வாயே.

செரு நினைந்திடும் சினவலி அசுரர்கள்
     உகம் முடிந்திடும் படி ஏழு பொழுது இடை,
     செகம் அடங்கலும் பயம் அற மயில்மிசை ......தனில் ஏறித்

திகு திகுந் திகுந் திகுதிகு திகுதிகு
     தெனதெனந் தெனந் தெனதென தெனதென
     திமிதி மிந்திமிந் திமிதிமி திமி என ...... வருபூதம்

கரை இறந்திடும் கடல் என மருவிய
     உதிரம் மொண்டும் உண்டிட, அமர் புரிபவ!
     கலவி அன்புடன் குறமகள் தழுவிய ...... முருகோனே!

கனம் உறும் த்ரியம்பகபுரம் மருவிய
     கவுரி தந்த கந்த! அறுமுக! எனஇரு
     கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழவல .....பெருமாளே.


பதவுரை


      செரு நினைந்திடும் சின வலி அசுரர்கள் --- போர் புரிவதையே நினைந்து இருந்த சினமும் வலிமையும் கொண்ட அசுரர்கள்,

     உகம் முடிந்திடும் படி எழு பொழுது இடை --- யுகம் முடியும்படி போருக்கு எழுந்த காலத்தில்,

     செகம் அடங்கலும் பயம் அற --- உலகம் முழுவதும் அச்சம் அ,

     மயில் மிசை தனில் ஏறி --- மயிலின் மேலே ஏறி,

      திகுதிகுந் திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமித மிந்திமிந் திமிதிமி திமி என வரும் பூதம் --- திகுதிகுந் திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமித மிந்திமிந் திமிதிமி திமி என்ற தாளவொத்துடன் ஆடி வந்த பூதங்கள்

      கரை இறந்திடும் கடல் என மருவிய உதிர(ம்) மொண்டும் உண்டிட அமர் புரிபவ --- கரையற்ற கடலைப் போல உள்ள இரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் புரிந்தவரே!

      கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே --- அன்புடன் கூட விரும்பிய குறமகளான வள்ளிநாயகியைத் தழுவிய முருகப் பெருமானே!

      கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய கவுரி தந்த கந்த --- பெருமை தங்கிய திரியம்பகபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும், உமாதேவியார் பெற்றெடுத்த கந்தக் கடவுளே!

     அறுமுக என ---அறுமுகப் பரம்பொருளே! என்று,

     இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல பெருமாளே --- இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

      உரை ஒழிந்து நின்றவர் --- (தனது) அழகில்) மயங்கி பேச்சற்று நிற்கின்றவரிடம்

     பொருள் எளிது என உணர்வு கண்டு --- பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்வு கொண்டு,

      பின் --- பின்னர்,

     திரவிய இகலருள் ஒருவர் நண்பு அடைந்து --- செல்வச் செருக்கினால் தம்முள் மாறுபட்டு நின்றவருள், ஒருவரது நட்பினை அடைந்து,

     உள திரள் கவர்கொடு பொருள் தேடி --- அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி,

      உளம் மகிழ்ந்து உவந்து --- உள்ளம் மகிழ்ச்சியில் களிப்புற்று,

     உரிமையில் நினைவு உறு சகல இந்த்ர தந்த்ரமும் வல்)ல விலைமகள் --- (அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான மாயங்களையும் காட்டவல்ல விலைமாதரின்

      உபய கொங்கையும் புளகிதம் எழ --- இரு மார்பகங்களும் புளகாங்கிதம் கொள்ள,

     மிக உறவாயே --- அவர்களுடன் நெருங்கிய உறவாகி,

     விரக அன்புடன் --- விரக தாபத்துடன்,

     பரிமள மிக உள முழுகி நன்றி ஒன்றிட --- மிகுந்த நறுமணப் பொருள்களை நன்றாகப் பூசி,

      மலர் அமளியில் வெகு விதம் புரிந்து --- மலர்ப் படுக்கையில் பலவித காம லீலைகளைப் புரிந்து,

     அமர் பொரு சமயம் அது உறு நாளே --- கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில்,

      விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர் --- (தம்மை நாடினோரின்) பெருகிய செல்வத்தைக் கவர்ந்திடும் பலவித எண்ணங்களை உடைய வேசியர்கள்,

     அயல் தனங்களும் தமது என நினைபவர் --- பிறர் பொருளும் தமது என நினைப்பவர்களின்,

     வெகுளியின் கண் நின்று இழி தொழில் அது அற அருள்வாயே ---   கோப மொழிகளில் அகப்பட்டு, செய்யும் எனது இழிவுள்ள செயல்கள் அற்றுப் போக அருள் புரிவீராக.


பொழிப்புரை

         போர் புரிவதையே நினைந்து இருந்த சினமும் வலிமையும் கொண்ட அசுரர்கள், யுகம் முடியும்படி போருக்கு எழுந்த காலத்தில், உலகம் முழுவதும் அச்சம் அ, மயிலின் மேலே ஏறி, திகுதிகுந் திகுந் திகுதிகு திகுதிகு தெனதெ னந்தெனந் தெனதென தெனதென திமித மிந்திமிந் திமிதிமி திமி என்ற தாளவொத்துடன் ஆடி வந்த பூதங்கள், கரையற்ற கடலைப் போல உள்ள இரத்தத்தை மொண்டு உண்ணும்படி போர் புரிந்தவரே!

         அன்புடன் கூட விரும்பிய குறமகளான வள்ளிநாயகியைத் தழுவிய முருகப் பெருமானே!

         பெருமை தங்கிய திரியம்பகபுரம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும், உமாதேவியார் பெற்றெடுத்த கந்தக் கடவுளே!

     அறுமுகப் பரம்பொருளே! என்று, இரண்டு திருவடிகளையும் வணங்கி நின்று தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

         தமது) அழகில் மயங்கி பேச்சற்று நிற்கின்றவரிடம் உள்ள பொருளை அபகரிப்பது எளிது என்று தமது உணர்வு கொண்டு, பின்னர், செல்வச் செருக்கினால் தம்முள் மாறுபட்டு நின்றவருள், ஒருவரது நட்பினை அடைந்து, அவரிடம் உள்ள திரண்ட பொருளைக் கவரும் எண்ணம் கொண்டு, அவருடைய பொருளைத் தேடி, உள்ளம் மகிழ்ச்சியில் களிப்புற்று, அவரது சொத்துக்களின் மீது) தமக்குள்ள உரிமையை நிலைநாட்ட நினைத்து, எல்லாவிதமான மாயங்களையும் காட்டவல்ல விலைமாதரின் இரு மார்பகங்களும் புளகாங்கிதம் கொள்ள, அவர்களுடன் நெருங்கிய உறவாகி, விரக தாபத்துடன், மிகுந்த நறுமணப் பொருள்களை நன்றாகப் பூசி,  மலர்ப் படுக்கையில் பலவித காம லீலைகளைப் புரிந்து, கலவிப் போர் செய்யும் சமயம் வாய்க்கும் அந்த நாளில், தம்மை நாடி வந்தவரின் பெருகிய செல்வத்தைக் கவர்ந்திடும் பலவித எண்ணங்களை உடைய வேசியர்கள், பிறர் பொருளும் தமது என நினைப்பவர்களின், கோப மொழிகளில் அகப்பட்டு, செய்யும் எனது இழிவுள்ள செயல்கள் அற்றுப் போக அருள் புரிவீராக.


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதரின் செயல்களை விளக்கிக் காட்டி, நம்மை நல்வழிப்படுத்துகின்றார் அடிகளார்.

திரவிய இகலருள் ஒருவர் நண்பு அடைந்து ---

செல்வச் செருக்கால் தம்முள் மாறுபட்டுக் கொள்பவர்களில் ஒருவரிடம் முதலில் நட்புக் கொண்டு, அவர் பொருள்களைக் கவர்வதில் நாட்டம் மிக உடையவர்கள் விலைமாதர்கள்.

"ஒருவரொடு கண்கள், ஒருவரொடு கொங்கை,
     ஒருவரொடு செங்கை ...... உறவாடி,

ஒருவரொடு சிந்தை, ஒருவரொடு நிந்தை,
     ஒருவரொடு இரண்டும் ...... உரையாரை"

என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டியுள்ளது காண்க.


உரிமையில் நினைவு உறு சகல இந்த்ர தந்த்ரமும் வல்)ல விலைமகள்.....  விளை தனம் கவர்ந்திடும் பல மனதியர் .....அயல் தனங்களும் தமது என நினைபவர் ---

விலைமாதரின் மனம் படம் பிடித்துக் காட்டப்பட்டது.

"பொன்னை விரும்பிய பொதுமாதர்" எட்று அடிகளார் பொறிதோரிடத்தில் காட்டி உள்ளது போ, பொருளையே விரும்புகின்ற விலைமாதர்கள் அதனை அடைவதற்கு உரிய மாய லீலைகள் அனைத்தையும் செய்வதில் வல்லவர்கள்.

சந்தனம் பரிமள புழுகொடு புனை
கொங்கை வஞ்சியர், சரியொடு கொடுவளை
தங்கு செங்கையர், அனம்என வருநடை ...... மடமாதர்,

சந்ததம் பொலிவு அழகுஉள வடிவினர்,
வஞ்சகம் பொதி மனதினர், ணுகினர்
தங்கள் நெஞ்சகம் மகிழ்வுற நிதி தர, ...... அவர்மீதே

சிந்தை வஞ்சக நயமொடு பொருள்கவர்
தந்த்ர மந்த்ரிகள், தரணியில் அணைபவர்
செம்பொன் இங்குஇனி இலைஎனில் மிகுதியும்....முனிவாகித்

திங்கள் ஒன்றினில் நெனல் பொருள் உதவிலன்
என்று சண்டைகள் புரி தரு மயலியர்,
    சிங்கியும் கொடு மிடிமையும் அகலநின் ...... அருள்கூர்வாய்.
                                                                                                            ---  திருப்புகழ்.

பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
     பரிவு போல்புணர் க்ரீடா பீடிகள்
     புருஷர் கோட்டியில் நாணா மோடிகள்......கொங்கைமேலே

புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
     மிடியர் ஆக்கு பொலா மூதேவிகள்
     புலையர் மாட்டு மறாதே கூடிகள் ...... நெஞ்சமாயம்

கருத ஒணாப்பல கோடா கோடிகள்
     விரகினால் பலர் மேல்வீழ் வீணிகள்
     கலவி சாத்திர நூலே ஓதிகள் ...... தங்கள்ஆசைக்

கவிகள் கூப்பிடும் ஓயா மாரிகள்
     அவசம் ஆக்கிடு பேய்நீர் ஊணிகள்
     கருணை நோக்கம் இலா மாபாவிகள் ...... இன்பம்ஆமோ?  ---  திருப்புகழ்.

"நெஞ்சமாயம் கருதொணாப்பல கோடாகோடிகள்" விலைமாதர்களின் நெஞ்சத்தில் எழும் வஞ்ச நினைவுகள் எண்ணில்லாதன என்று காட்டி உள்ளது கருதற்கு உரியது.
விரகுடன் நூறாயிர மனம் உடைய மாபாவிகள்” என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

வஞ்சகமே கோடிகோடிகள் நெஞ்சமே சேர மேவிய
     வன்கணார், கோடா கோடிய மனது ஆனார்”    --- திருப்புகழ்.

பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள்
     புழுகு அகில் சந்து ...... பனிநீர் தோய்
புளகித கொங்கை இளக, வடங்கள்
     புரள, மருங்கில் ...... உடைசோர,

இருள்வளர் கொண்டை சரிய, இசைந்து
     இணைதரு பங்க ...... அநுராகத்
திரிதல் ஒழிந்து, மனது கசிந்து,உன்
     இணையடி என்று ...... புகழ்வேனோ?     ---  திருப்புகழ்.

வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
     வன்கணஆர், ரவாரமும் ...... அருள்வோராய்,

வம்பிலே வாது கூறிகள், கொஞ்சியே காம லீலைகள்
     வந்தியா, ஆசையே தரு ...... விலைமாதர்,

பஞ்ச மாபாவமே தரு கொங்கைமேல் நேசமாய், வெகு
     பஞ்சியே பேசி நாள்தொறும் ...... மெலியாதே,

பந்தியாய் வான் உளோர் தொழ நின்ற, சீரே குலாவிய,
     பண்புசேர் பாத தாமரை ...... அருள்வாயே.       ---  திருப்புகழ்.

கனம் உறு த்ரியம்பக புர(ம்) மருவிய கவுரி தந்த கந்த, அறுமுக என, இரு கழல் பணிந்து நின்று அமரர்கள் தொழ வல பெருமாளே ---

 
திரியம்பகபுரம் திருவாரூருக்கு அருகில் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. சேங்காலிபுரத்திற்கு அருகில் உள்ளது மதுரமாணிக்கம் எனவும் வழங்கப்படும்.

கருத்துரை

முருகா! விலைமாதர் மயல் அற அருள்வாய்.
                 

No comments:

Post a Comment

வயலூர் --- 0910. இகல்கடின முகபட

      அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்   இகல்கடின முகபட (வயலூர்)   முருகா! விலைமாதர் பற்றை விடுத்து , தேவரீர...