திரு ஆரூர் - 0830. மகரம் அதுகெட

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

மகரம் அதுகெட (திருவாரூர்)

முருகா!
மாதர்மேல் படிந்த எனது மனம்,
தேவரீரின் திருவடித் தாமரையில் படியுமாறு அருள்வாய்.


தனதன தனன தனதன தனன
     தானான தந்த ...... தனதான

மகரம துகெட இருகுமி ழடைசி
     வாரார்ச ரங்க ...... ளெனநீளும்

மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்
     வாணாள டங்க ...... வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப
     பாடீர கும்ப ...... மிசைவாவிப்

படிமன துனது பரிபுர சரண
     பாதார விந்த ...... நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய
     நானாவி லங்கல் ...... பொடியாக

நதிபதி கதற வொருகணை தெரியு
     நாராய ணன்றன் ...... மருகோனே

அகனக கனக சிவதல முழுது
     மாராம பந்தி ...... யவைதோறும்

அரியளி விததி முறைமுறை கருது
     மாரூர மர்ந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


மகரம் அது கெட இரு குமிழ் அடைசி
     வார்ஆர் சரங்கள் ...... எனநீளும்

மதர்விழி வலைகொடு, உலகினில் மனிதர்
     வாழ்நாள் அடங்க ...... வருவார்தம்,

பகர்தரு மொழியில், ம்ருகமத களப
     பாடீர கும்ப ...... மிசை வாவிப்

படி மனது, னது பரிபுர சரண
     பாதார விந்தம் ...... நினையாதோ?

நகமுக சமுக நிருதரும் மடிய,
     நானா விலங்கல் ...... பொடியாக,

நதிபதி கதற, ஒருகணை தெரியும்
     நாராயணன் தன் ...... மருகோனே!

அகல் நக கனக சிவதலம் முழுதும்
     ஆராம பந்தி ...... அவைதோறும்,

வரி அளி விததி முறைமுறை கருதும்
     ஆரூர் அமர்ந்த ...... பெருமாளே.

பதவுரை


         நகமுக சமுக நிருதரும் மடிய --- மலை இடங்களில் கூட்டமாக வாழ்ந்திருந்த அசுரர்கள் அனைவரும் மடி,

       நானா விலங்கல் பொடியாக --- பல மலைகளும் பொடியா,

      நதிபதி கதற ---  கடல்கள் கதற,

      ஒரு கணை தெரியும் நாராயணன் தன் மருகோனே ---
 ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமபிரானின் திருமருகரே!

        அகல் நக --- அகன்ற மலை இடங்களுக்கு உரியவரே!

      கனக --- பொன் வடிவானவரே!

      சிவ தலம் முழுதும் --- சிவத் திருத்தலங்கள் அனைத்திலும்,

      ஆராம பந்தி அவை தோறும் --- வரிசையாக அமைந்துள்ள பூஞ்சோலைகள் தோறும்,

      வரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே --- வரிகளை உடைய வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த் தேனை நாடி) முரலுகின்ற திருவாரூரிலும் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!


        மகரம் அது கெட --- மகரம் என்னும் மீனும் தனது நிலையில் கெ,

      குமிழ் அடைசி --- குமிழம் பூவைப் போன்ற மூக்கை நெருங்கி,

      வார் ஆர் சரங்கள் என நீளும் --- நீண்ட அம்புகளைப் போல விளங்கும்,

      மதர் இருவிழி வலை கொ(ண்)டு --- அழகிய இரு கண்கள் என்னும் வலையைக் கொண்டு,

         உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரும் மொழியில் --- உலகில் உள்ள மனிதர்களின் வாழ்நாள் சுர்ங்கிப் போகும்படி வருகின்ற (விலைமாதர்கள்) பேசுகின்ற பேச்சிலும்,

       ம்ருக்மத களப பாடீர கும்பம் மிசை ---  கத்தூரி - சந்தனக்
குழம்பு பூசப்பட்டு உள்ள கும்பம் போன்ற முலைகளின் மீதும்,

      வாவிப் படி மனது --- தாவிப் படிகின்ற எனது மனமானது,

      உனது பரிபுர சரண பாத அரவிந்தம் நினையாதோ --- தேவரீரது சிலம்பணிந்த திருவடித் தாமரைகளை நினையாதோ? (நினையுமாறு திருவருள் புரியவேண்டும்)  


பொழிப்புரை

     மலை இடங்களில் கூட்டமாக வாழ்ந்திருந்த அசுரர்கள் அனைவரும் மடி, பல மலைகளும் பொடியா, கடல்கள் கதற, ஒப்பற்ற அம்பைச் செலுத்திய இராமபிரானின் திருமருகரே!

     அகன்ற மலை இடங்களுக்கு உரியவரே!

     பொன் வடிவானவரே!

     சிவத் திருத்தலங்கள் அனைத்திலும், வரிசையாக அமைந்துள்ள பூஞ்சோலைகள் தோறும், வரிகளை உடைய வண்டுகளின் கூட்டம் வரிசை வரிசையாக (மலர்த் தேனை நாடி) முரலுகின்ற திருவாரூரிலும் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

         மகரம் என்னும் மீனும் தனது நிலையில் கெ, குமிழம் பூவைப் போன்ற மூக்கை நெருங்கி, நீண்ட அம்புகளைப் போல விளங்கும், அழகிய இரு கண்கள் என்னும் வலையைக் கொண்டு, உலகில் உள்ள மனிதர்களின் வாழ்நாள் சுர்ங்கிப் போகும்படி வருகின்ற விலைமாதர்கள் பேசுகின்ற பேச்சிலும், கத்தூரி - சந்தனக் குழம்பு பூசப்பட்டு உள்ள கும்பம் போன்ற முலைகளின் மீதும், தாவிப் படிகின்ற எனது மனமானது,
தேவரீரது சிலம்பணிந்த திருவடித் தாமரைகளை நினையாதோ? (நினையுமாறு திருவருள் புரியவேண்டும்)  

விரிவுரை

மகரம் அது கெட ---

மகரம் கடலில் வாழும் மீன் வகைகளில் ஒன்றானதும் ஒப்பற்றதுமான சுறா மீன் ஆகும். இங்கும் அங்குமாகச் சுழல்வதால், பெண்களின் கண்ணுக்கு மகர மீன் ஒப்பாகச் சொல்லப்பட்டது.

வார் ஆர் சரங்கள் என நீளும் மதர் இருவிழி வலை கொ(ண்)டு உலகினில் மனிதர் வாழ் நாள் அடங்க வருவார் தம் பகர் தரும் மொழியில் ---

விலைமாதர்கள் தமது கண் வலையை வீசியும், சொல் வலையை வீசியும் காமுகரைத் தன்வசப் படுத்துவார்கள்.

பெண்களின் எழிலானது ஆடவரின் உள்ளத்தை மயக்கும். அவர் தரும் இன்பத்திற்காக உள்ளமானது ஏங்கி வருந்தும். இது இறுதியில் துன்பத்திற்கே ஏதுவாகும்.

இந்த மயக்கத்தினால் வரும் துன்பமானது தீரவேண்டுமானால், அதற்கு ஒரே வழி, இறையருள் பெற்ற அடியார்களின் திருக்கூட்டத்தில் இருப்பது தான். பெண்மயலானது எப்பேர்ப் பட்டவரையும் விட்டு வைத்தது இல்லை.

"துறந்தோர் உளத்தை வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே" என்று முருகப் பெருமானிடம் அருணையடிகள் கந்தர் அலங்காரத்தில் முறையிடுகின்றார்.

உலகப் பற்றுக்களை நீத்து, இறைவனது திருவடியைச் சார, பெருந்தவம் புரியும் முனிவரும் விலைமாதரின் அழகைக் கண்டு மனம் திகைப்பு எய்தி, அவர் தரும் இன்பத்தை நாடி வருகின்ற மான் போன்றவர்கள் விலைமாதர்கள். விலைமாதரின் மான் போலும் மருண்ட பார்வையானது துறந்தோர் உள்ளத்தையும் மயக்கும்.

துறவிகளுடைய உள்ளமும் நினைந்து நினைந்து உருகி வருந்துமாறு, பொதுமகளிர் நகைத்து கண்பார்வையால் வளைத்துப் பிடிப்பர்.

கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்பு உடன் கிரி ஊடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே! துறந்தோர் உளத்தை
வளைத்துப் பிடித்து, பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு
இளைத்து, தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே?          
                                                                               ---  கந்தர் அலங்காரம்.

வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்ணகைச் செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ்நெஞ்சே!
ஊன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வானுளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே.    ---  திருவாசகம்.

அரிசன வாடைச் சேர்வை குளித்து,
     பலவித கோலச் சேலை உடுத்திட்டு,
     அலர்குழல் ஓதிக் கோதி முடித்துச் ...... சுருளோடே 
அமர்பொரு காதுக்கு ஓலை திருத்தி,
     திருநுதல் நீவி, பாளித பொட்டு இட்டு,
     அகில் புழுகு ஆரச் சேறு தனத்துஇட்டு, ...... அலர்வேளின்

சுரத விநோதப் பார்வை மை இட்டு,
     தருண கலாரத் தோடை தரித்து,
     தொழில்இடு தோளுக்கு ஏற வரித்திட்டு,.....இளைஞோர்மார்
துறவினர் சோரச் சோர நகைத்து,
     பொருள்கவர் மாதர்க்கு ஆசை அளித்தல்
     துயர் அறவே, பொன் பாதம் எனக்குத் ...... தருவாயே.   --- திருப்புகழ்.

மாயா சொரூப முழுச் சமத்திகள்,
     ஓயா உபாய மனப் பசப்பிகள்,
      வாழ்நாளை ஈரும் விழிக் கடைச்சிகள், ......முநிவோரும்  
மால்ஆகி வாட நகைத்து உருக்கிகள்,
     ஏகாசம் மீது தனத் திறப்பிகள்,
     'வாரீர் இரீர்' என் முழுப் புரட்டிகள், ...... வெகுமோகம்

ஆயாத ஆசை எழுப்பும் எத்திகள்,
     ஈயாத போதில் அறப் பிணக்கிகள்,
     ஆவேச நீர் உண் மதப் பொறிச்சிகள், ...... பழிபாவம்
ஆமாறு எணாத திருட்டு மட்டைகள்,
     கோமாளம் ஆன குறிக் கழுத்திகள்,
     ஆசார ஈன விலைத் தனத்தியர், ...... உறவுஆமோ?   --- திருப்புகழ்.

பெண்ஆகி வந்து, ஒரு மாயப் பிசாசம் பிடுத்திட்டு, என்னை
கண்ணால் வெருட்டி, முலையால் மயக்கி, கடிதடத்துப்
புண்ஆம் குழியிடைத் தள்ளி, என் போதப் பொருள் பறிக்க,
எண்ணாது உனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

சீறும் வினை அது பெண் உருவாகி, திரண்டு உருண்டு
கூறும் முலையும் இறைச்சியும் ஆகி, கொடுமையினால்,
பீறு மலமும், உதிரமும் சாயும் பெருங்குழி விட்டு
ஏறும் கரை கண்டிலேன், இறைவா! கச்சி ஏகம்பனே!   --- பட்டினத்தார்.

பால்என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர்கண்
சேல் என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை
வேல்என்கிலை, கொற்றமயூரம் என்கிலை, வெட்சித்தண்டைக்
கால் என்கிலை, நெஞ்சமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?.
                                                                ---  கந்தர் அலங்காரம்.

மண்காட்டிப் பொன்காட்டி மாயஇருள் காட்டிச்
செங்காட்டில் ஆடுகின்ற தேசிகனைப் போற்றாமல்,
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி,மிக
அங்காடி நாய்போல் அலைந்தனையே நெஞ்சமே.   --- பட்டினத்தார்.

மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,
பீதிதரும் அல்குல் பெருநகரம், - ஓதில்அதில்
வீழ்ந்தோர்க்கும் ஏற விரகுஇல்லை, போரூரைத்
தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு.         --- திருப்போரூர்ச் சந்நிதி முறை.                                            
விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். 

ஆனால், இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை. காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான். அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்
கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க
ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக
நீடுவார் துகில் அசைய நிற்பாரும் ஆயினார்.    ---  பெரியபுராணம்.

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. உமக்கு இங்கு என்ன வேலை? போமின்என்று அருளிச் செய்தார்.

ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள் என்பதை அறிக.


உனது பரிபுர சரண பாத அரவிந்தம் நினையாதோ ---

பரிபுரம் - சிலம்பு.

அரவிந்தம் - தாமரை.

மாதர்மேல் வைத்த சிந்தையை மாற்றி, இறைவன் திருவடித் தாமரைகளைச் சிந்தித்து உய்யவேண்டும்.

விலைமாதர்களைப் புகழ்ந்தால் உள்ளதும் போகும்.

இறைவனைப் புகழ்ந்தால், இயல்பாகவே உள்ள மும்மலங்களும், வினைகளும் நீங்கி, வாலாத செல்வமாகிய திருவடிப் பேறு வாய்க்கும்.

"அன்ன விசாரம் அதுவே விசாரம், அது ஒழிந்தால்,
சொன்ன விசாரம் தொலையா விசாரம், நல் தோகையரைப்
பன்ன விசாரம் பலகால் விசாரம், இப் பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சிஏகம்பனே".  --- பட்டினத்தார்.
                                             
திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! பொய்யாகிய உடம்பைப் போற்றி வளர்க்கும் பொருட்டு மனிதனுக்கு முதலில் எழுகின்ற கவலை உணவைப் பற்றியது.  அந்தக் கவலை எவ்வகையிலாவது நீங்கினால், அடுத்து உடம்பைக் கிடத்த நல்ல படுக்கை, இருக்க வீடு, உடுத்த உடை தேவைப்படுவதால், அதற்கான பொருளைத் தேடுவது அடுத்த கவலை ஆகிறது. இவையெல்லாம் வாய்த்துவிட்டால், அழகு மிக்க மயில் போலும் சாயலை உடைய இளம்பெண்களைப் புகழ்ந்து பேசும் இந்த விசாரம் பலகாலத்து விசாரமாக உள்ளது.  சித்த சாந்தம் அடையாத, இந்தப் பாவியின் மனத்திற்கு  வேறு என்ன கவலையை வைத்தாய்.

"உடுக்கத் துகில் வேணும், நீள்பசி
     அவிக்கக் கனபானம் வேணும், நல்
     ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய் ......உறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்
     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்
     படுக்கத் தனிவீடு வேணும், இவ் ...... வகை யாவும்

கிடைத்துக் க்ருகவாசி ஆகிய
     மயக்கக் கடல்ஆடி, நீடிய
     கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ...... அவமே போம்.
க்ருபைச் சித்தமும், ஞான போதமும்
     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ
     கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ...... ஒருநாளே".    ---  திருப்புகழ்.

"வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கில் சென்று
சரிக்கு ஓதுவேன், அஞ்செழுத்தும் சொலேன், தமியேன் உடலம்
நரிக்கோ, கழுகு, பருந்தினுக்கோ, வெய்ய நாய்தனக்கோ,
எரிக்கோ, இரை எதுக்கோ, இறைவா, கச்சிஏகம்பனே".  --- பட்டினத்தார்.

திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! செவ்வரிகளை உடையதும், அழகிய வேலை ஒத்ததும் ஆகிய கண்களை உடைய பெண்களின் காம மயக்கத்தில் போய், அவருடைய நட்பு வேண்டி, அவர்களைப் புகழ்ந்து பேசுவேன்.  உனது மந்திரமாகிய திருவைந்தெழுத்தை ஓதமாட்டேன். ஆதலால், அடியேனது உடம்பானது, விழுந்தால், நரிக்கு உணவாகுமா? கழுக்குக்கா?, பருந்தினுக்கா?, கொடிய நாயினுக்கா? அல்லது நெருப்பில் தான் இட்டு சுடப்படுமா?   வேறு எதற்கு இரை ஆவேன்.

"வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு, உன் நெறி மறந்து, மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன்" என்று பாடினார் சுந்தரர் பெருமான். 

"வைப்பு மாடு என்று, மாணிக்கத்து ஒளி என்று மனத்திடை உருகாதே, செப்புநேர் முலை மடவரலியர் தங்கள் திறத்திடை நைவேனை" என்றும், "குரவு வார் குழலார் திறத்தே நின்று குடி கெடுகின்றேனை" என்றும் மணிவாசகப் பெருமான் பாடியருளியதையும் கருத்தில் கொள்க.

"வேனில்வேள் மலர்க்கணைக்கும், வெண்நகை, செவ்வாய், கரிய
பானலார் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே,
உன்எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான், இன்றுபோய்
வான்உளான் காணாய், நீ மாளா வாழ்கின்றாயே."

என்ற மணிவாசகப் பெருமான் பாடினார்.

சுடர்இலை நெடுவேல் கருங்கணார்க்கு உருகித்
      துயர்ந்துநின்று அலமரும் மனம்,நின்
நடம்நவில் சரண பங்கயம் நினைந்து
      நைந்துநைந்து உருகுநாள் உளதோ;
மடல்அவிழ் மரைமாட்டு எகின்என அருகு
      மதியுறக் கார்த்திகை விளக்குத்
தடமுடி இலங்க வளர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே.                

என்றும சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.

இதன் பொருள் ---

இதழ் விரிந்த செந்தாமரையின் அருகில் அன்னம் இருப்பதைப் போல, திருக்கார்த்திகை விளக்கின் அருகில் சந்திரன் இருக்குமாறு உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலை நாயகனே!  இலை வடிவை ஒத்து ஒளி பொருந்திய கருநிறத்தோடு கூடிய கண்களை உடைய பெண்களின் மயக்கத்தால் துன்புறுகின்ற எனது மனமானது, நடனமிடும் நினது திருவடி மலரை நினைந்து, நைந்து நைந்து உருகுகின்ற நாளும் உளதாகுமோ.  அறியேன்.

மேலும்,

பெண்அருங் கலமே, அமுதமே எனப்பெண்
      பேதையர்ப் புகழ்ந்து,அவம் திரிவேன்,
பண்உறும் தொடர்பில் பித்தஎன் கினும்,நீ
      பயன்தரல் அறிந்து,நின் புகழேன்;
கண்உறும் கவின்கூர் அவயவம் கரந்தும்
      கதிர்கள் நூறுஆயிரம் கோடித்
தண்நிறம் கரவாது உயர்ந்துஎழும் சோண
      சைலனே கைலைநா யகனே. 

என்றும் சோணசைமாலை என்னும் நூலில் சிவப்பிரகாச சுவாமிகள் பாடியுள்ளதையும் நோக்குக.
              
இதன் பொருள் ---

காணக்கூடிய அழகிய உறுப்புக்களை மறைத்தும், இலக்கம் கோடி சூரியர்களுடைய ஒளியை மறைக்காது உயர்ந்து விளங்கும் சோணசைலப் பெருமானே!  திருக்கயிலையின் நாயகனே!  பெண்களுக்குள் அழகிய அணிகலன் போன்றவளே, அமுதம் நிகர்த்தவளே என்று பேதைகளாகிய அவர்களைப் புகழ்ந்து வீணே திரிகின்றேன்.  இனிய பாடலால் பித்தா என்று உன்னைப் பழித்தாலும் நீர் நன்மை செய்வதை அறிந்து உம்மைப் புகழேன். என் அறியாமை என்னே.


"தத்தை அங்கு அனையார் தங்கள் மேல் வைத்த
     தயாவினை நூறு ஆயிரம் கூறு இட்டு,
அத்தில் அங்கு ஒரு கூறு உன்பால் வைத்தவருக்கு
     அமர் உலகு அளிக்கும் நின் பெருமை;
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும்,
     பிழைத்தவை பொறுத்து அருள், பூங்
கைத்தலம் அடியேன் சென்னிமேல் வைத்த
     கங்கை கொண்ட சோளேச்சரத்தனே!"

என்னும் திருவிசைப்பாப் பாடல் வரிகளையும் நோக்குக.

இறைவன் திருவருளால் பெற்றது இந்த அருமையான உடம்பு. அதனைக் கொண்டு நல்வழியில் வாழ்ந்து, இறையருளைப் பெற வேண்டுமானால், இறைவன் பொருள்சேர் புகழைப் பேச வேண்டும். ஆனால்,  பொருள் கருதி அது உள்ளவர்களைப் புகழ்ந்து பேசியும், இன்பம் கருதி, பொருள் கொண்டு, அதைத் தரும் பொதுமகளிரைப் புகழ்ந்து கொண்டும் வாழ்நாளை வீணாள் ஆக்கி, முடிவில் பயனில்லாமல் இறப்பில் படுகிறோம். பிறகு இந்த உடம்பு என்னாகும் என்று சுவாமிகள் கவலைப் படுகின்றார். நாமும் படவேண்டும்.

"முப்போதும் அன்னம் புசிக்கவும், தூங்கவும், மோகத்தினால்
செப்புஓது இளமுலையாருடன் சேரவும், சீவன்விடும்
அப்போது கண்கலக்கப் படவும் வைத்தாய், ஐயனே,
எப்போது காணவல்லேன், திருக்காளத்தி ஈச்சுரனே".  --- பட்டினத்தார்.

காலை, பகல், இரவு என்னும் மூன்று வேளையும், எப்போதும் தூராத குழியாகிய வயிற்றை நிரப்புதற்கு சோற்றை உண்ணவும்,  உண்டபின் உறங்கவும், காம மயக்கத்தால் செப்புக் கலசங்கள் போலும் தனங்களை உடைய இளமாதர்களுடன் புணரவும், உயிர் நீங்குகின்ற காலத்திலே இவற்றையெல்லாம் எண்ணி வருத்தப்படவும் வைத்தாய். சுவாமீ!  திருக்காளத்தியில் எழுந்தருளிய பெருமானே! உமது திருவடியை எப்போது காணத் தக்கவன் ஆவேன்.

"இரைக்கே இரவும் பகலும் திரிந்து இங்கு இளைத்து, மின்னார்
அரைக்கே அவலக் குழியருகே அசும்பு ஆர்ந்து ஒழுகும்
புரைக்கே உழலும் தமியேனை ஆண்டு அருள், பொன்முகலிக்
கரைக்கே கல்லால நிழல்கீழ் அமர்ந்துஅருள் காளத்தியே".  ---  பட்டினத்தார்.

சொர்ணமுகி என்னும் பெயர் அமைந்த பொன்முகலி ஆற்றின் கரையிலே, கல்லால மரத்தின் நிழலிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள திருக்காளத்தி நாதா! வயிறு புடைக்க உண்பதற்கே இரவும் பகலும் உழன்று, இளைத்து, மாதரின் கடிதடத்திலே உள்ள துன்பத்திற்கு இடமான வழுவழுப்பு நீர் பொருந்திக் கசிகின்ற பள்ளத்திலே ஆசை வைத்து உழலும், அடியேனை ஆண்டு அருள் புரிவாயாக.

, இந்தக் கருத்துகளை எல்லாம் மனத்தில் வைத்துக் கொண்டு, இறைவன் தந்த அருமையான இந்த உடம்பினைச் சுமந்து வாழவேண்டும்.


நகமுக சமுக நிருதரும் மடிய ---

நகம் --- மலை.

சமுகம் --- கூட்டம்.


நானா விலங்கல் பொடியாக ---

விலங்கல் - மலை.  நானா விலங்கல் - பல மலைகள்.

நதிபதி கதற --- 

நதிபதி --- கடல்.

அகல் நக ---

நகம் --- மலை.

ஆராம பந்தி அவை தோறும் வரி அளி விததி முறை முறை கருதும் ஆரூர் அமர்ந்த பெருமாளே ---

ஆராமம் --- உபவனம், உவவனம், மலர்ச்சோலை, நந்தவனம், பூந்தோட்டம்.

வரி அளி - வரிகளை உடைய வண்டு.

விததி - கூட்டம், பரப்பு, விரிவு.
திருவாரூர் சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் - திருத்துறைப்பூண்டி இரயில் பாதையில் உள்ள நிலையம். தஞ்சாவூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.

இறைவர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகைநீலோத்பலாம்பாள்
தல மரம் : பாதிரி 
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயாதீர்த்தம், வாணி தீர்த்தம்

திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தான். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. (இத்துடன் வழங்கப்பட்ட மேலும் ஆறு தியாகராச மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடனே இவை சப்த விடங்கத் தலங்கள் எனப்படும்.

இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.

 கமலை என்னும் பராசத்தி தவம் செய்த பதி.

எல்லாச் சிவாலயங்களின் சந்நிதித்தியமும் சாயரக்ஷை எனப்படும் திரு அந்திக்காப்பு நேரத்தில் இத்தலத்தில் விளங்குவதாக ஐதீகம்.

இத்தலம் பிறக்க முத்தி தருவது என்று புகழப்படும் சிறப்பினை உடையது.

 இத்தலத்தின் தேர், திருவிழா, திருக்கோவில், திருக்குளம் ஆகியன மிகப் பெருமை வாய்ந்தது. திருவாரூர்த் தேர் அழகு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி (கோயில் ஐந்துவேலி, குளம் ஐந்துவேலி, ஓடை ஐந்துவேலி என்பது இங்கு வழங்கப்படும் பழமொழி) என்று போற்றப்படும் மிகப் பெரிய சிவாலயமும், கமலாலயம் என்ற தீர்த்தமும் உடைய தலம்.

தியாகேசர் எழுந்தருளும் ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று (வீதி விடங்கர்); ஆதாரத் தலங்களுள் இது "மூலாதார"த் தலம்.

சப்தவிடங்கத் தலங்கள் -----

1.    திருவாரூர் – வீதிவிடங்கர் -  அசபா நடனம்
2.    திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3.    நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4.    திருகாறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5.    திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6.    திருவாய்மூர் – நீலவிடங்கர் – கமல நடனம்.
7.    திருமறைக்காடு – புவனிவிடங்கர் – அம்சபாத நடனம்.

பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.

தியாகேசப் பெருமான் இராஜாதி ராஜர். ஆதலின், அவர் தனியாக வீதிகளில் எழுந்தருள்வதில்லை; அவருடன் 1. அருளிப்பாடியார், 2. உரிமையில் தொழுவார், 3. உருத்திரப் பல்கணத்தார், 4. விரிசடை மாவிரதிகள், 5. அந்தணர்கள், 6. சைவர்கள், 7. பாசுபதர்கள், 8. கபாலியர்கள் ஆகிய எட்டுக் கணங்கள் சூழ வருவாராம்.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெற்ற திருவாதிரைத் திருநாளில் இந்த எண்கணங்களும் பெருமானுடன் பவனி வந்ததை அப்பர் பெருமான் தமது தேவாரத்தில் கீழ் கண்டவாறு சொல்லோவியமாகத் தீட்டுகிறார்.

அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.
                                                                                   
"மணிமுத்தாற்றில் இப்பொன்னை இட்டு, ஆரூர் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்துக் கொள்" என்று திருமுதுகுன்றத்து ஈசரால் சுந்தரரைப் பணிக்கப்பட்டு, அதன்படி கமலாலயத் திருக்குளத்தில் பொன் எடுக்கப்பட்டத் திருத்தலம்.

சுந்தரர் வேண்டிக் கேட்டுக் கொண்டதன் பேரில், அவருக்காக இத்தல தியாகேசப் பெருமானார் நள்ளிரவில் பரவை நாச்சியாரிடம் தூது செல்ல இவ்வூர்த் தெருக்களில் நடந்து சென்ற பெருமையுடையத் திருத்தலம். பரவை நாச்சியார் வாழ்ந்த பதி. சுந்தரர் இழந்த வலக் கண்ணைப் பெற்ற பதி.

சுந்தரர், "திருத்தொண்டத் தொகை"யைப் பாடுவதற்கு, அடியார்களின் பெருமைகளை விளக்கிய பெருமை இப்பதிக்கே உரியது.

 இது முசுகுந்த சோழன், மனு நீதிச் சோழன் ஆகியோர் ஆட்சி (வாழ்ந்த) செய்த சீர்மையுடைய பதி.

தண்டியடிகள் அவதரித்து, முத்தி அடைந்தத் திருத்தலம். இத்திருக்கோயில் வளாக மூன்றாவது சுற்றில் மூலாதார கணபதிக்கு அருகில் தண்டியடிகள் நாயனாரின் திருவுருவச் சிலை உள்ளது.

அறுபத்து மூவருள் ----

நமிநந்தி அடிகள், (நீரால் விளக்கெரித்தவர்)

செருத்துணை நாயனார், (கழற்சிங்க நாயனாருடைய மனைவி சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக அவருடைய முக்கை அரிந்தவர்)

கழற்சிங்கர், (சிவபூசைக்குரிய பூவை மோந்ததற்காக தன் மனைவியின் மூக்கை அறுத்த தண்டனை போதாதென்று அவள் கையையும் வெட்டியவர்)

விறன்மிண்டர் (சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடக் காரணமாய் இருந்தவர்)

ஆகியோரின் முக்தித் தலம்.

சுந்தரமூர்த்தி நாயனாரின் தாயாரான இசைஞானியார் அவதரித்தத் (கமலாபுரம்) தலம். இஃது திருவாரூரிலிருந்து மன்னார்குடி பாதையில் 7கி.மீ. தொலைவில் உள்ளது.  திருவாரூர் தெற்குக் கோபுரத்திற்கு வெளியே, பரவையார் வாழ்ந்த கிழக்கு நோக்கிய மாளிகை வளாகத்தில் இசைஞானியாருக்குத் திருவுருவச் சிலை உள்ளது.

          இசைஞானியார்
          அவதாரத் தலம்       : திருவாரூர் (கமலாபுரம்).
          வழிபாடு                 : லிங்க வழிபாடு.
          முத்தித் தலம்          : திருநாவலூர்
          குருபூசை நாள்        : சித்திரை - சித்திரை.


நமிநந்தி அடிகள் வரலாறு

சோழநாட்டிலே ஏமப்பேறூரிலே தோன்றியவர் நமிநந்தி அடிகள். அவர் அந்தணர். வாய்மையில் சிறந்தவர். திருநீற்று அன்பர். இரவும் பகலும் ஆண்டவன் அடியை நினைப்பதையே பேரின்பமாகக் கொண்டவர். அவர் திருவாரூருக்குச் சென்று இறைவனை வழிபடுவது வழக்கம்.

ஒருநாள் புற்றிடங்கொண்ட புனிதரைப் பணிந்து, அருகே உள்ள அரனெறி என்னும் கோயிலை அடைந்து திருத்தொண்டுகள் செய்தார். ஆங்கே தீபத் தொண்டு செய்தல் வேண்டும் என்னும் விருப்பம் அவருக்கு எழுந்தது. அவ் வேளை, மாலைக் காலமாய் இருந்தமையால் அவர், வேறிடம் செல்ல மனம் கொண்டாரில்லை. அருகே இருந்த வீட்டிற்குள் நுழைந்தார்.  திருவிளக்கு ஏற்ற நெய் கேட்டார். அவ் வீட்டில் உள்ளவர்கள் சமணர்கள்.

சமணர்கள் அடிகளை நோக்கி, "கையிலே கனல் உடைய கடவுளுக்கு விளக்கு எதற்கு? இங்கு நெய்யில்லை. நீரை முகந்து விளக்கு எரியும்" என்றார்கள். அவ் உரையைக் கேட்ட நாயனார் மனம் வருந்தினார். மன வருத்தத்தோடு சிவசந்நிதியை அடைந்து, பெருமானை வணங்கி விழுந்தார். அச் சமயத்தில், "கவலை ஒழி. அருகே உள்ள குளத்து நீரை முகந்து விளக்கு ஏற்று" என்று ஒரு வானொலி எழுந்தது. நாயனார்க்கு அளவில்லா இன்பம் உண்டாயிற்று.

நமிநந்தியடிகள் குளத்தில் இறங்கி, நீரை முகந்து கொண்டு வந்து, திரியிட்ட அகலிலே வார்த்து ஒரு விளக்கை ஏற்றினார். அது சுடர் விட்டு எரிந்தது. அடியவர் மகிழ்ந்து, திருக்கோயில் முழுவதும் தண்ணீரால் விளக்கு எரித்தார். சமணர்கள் நாணுற்றார்கள்.   

நமிநந்தியடிகள் நாள்தோறும் திருவிளக்குத் தொண்டு செய்து வந்தார். அவர், திருவிளக்கினுள் விடியுமளவும் நின்று எரியும் பொருட்டு நீர் குறையும் தகழிகளுக்கு எல்லாம் நீர் வார்ப்பார். இரவில் தம் ஊருக்குச் செல்வார். மனையில் நியதி தவறாமல் சிவபிரானை அர்ச்சிப்பார். திருவாரூரை அடைந்து தொண்டு செய்வார்.

திருவாரூர் சிவமயமாக விளங்கிற்று. நமிநந்தியடிகளின் திருத்தொண்டு குறைவு அற நிகழ்ந்து வர, சோழ மன்னன் அமுதுபடி முதலான நிபந்தங்கள் அமைத்தான். நாயனார், வீதிவிடங்கப் பெருமானுக்குத் திருவிழாச் செய்ய, அப் பெருமான் திருவடியை நோக்கி முறையிட்டார். ஆண்டவன் அருளால் பங்குனி உத்திரத் திருவிழா நன்கு நடைபெற்றது.

அவ் விழாவிலே ஒருநாள் சிவபெருமான் திருமணலிக்கு எழுந்தருளினார். எல்லாக் குலத்தவர்களும் ஆண்டவனைத் தொழுது உடன் சென்றார்கள். அவர்களோடு நமிநந்தியடிகளும் சென்று ஆண்டவன் திருவோலக்கத்தைக் கண்டு ஆனந்தம் உற்றார். பொழுது போயிற்று. சிவபெருமான் திருமணலியில் இருந்து திருவாரூருக்கு எழுந்தருளினார். நாயனார் சிவபெருமானை வணங்கித் தம் ஊரை அடைந்தார். அடைந்தவர் மனைக்குள் நுழைந்தாரில்லை. புறக்கடையிலே துயின்றார்.

மனைவியார் வந்து நாயனாரைப் பார்த்து, "வீட்டுக்குள் வந்து சிவபூசை முதலியன முடித்துத் துயிலும்" என்றார். அதற்கு நாயனார், "இறைவனார் இன்று திருமணலிக்கு எழுந்தருளினார்.  எல்லாச் சாதியாருடன் நானும் போனேன். பிராயச்சித்தம் செய்து மனைக்குள் நுழைந்து பூசை செய்தல் வேண்டும். தண்ணீர் கொண்டு வா" என்றார். அம்மையார் வீட்டிற்குள் சென்றார்.  அதற்குள் சிவபெருமான் திருவருளாலோ, அயர்வாலோ நாயனாருக்கு உறக்கம் வந்தது. சிவபெருமான் அவர் கனவிலே தோன்றித் "திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாரும் நம் கணங்கள். அத் தன்மையை நீ காண்பாய்" என்று அருளி மறைந்தார். உடனே நாயனார் துயில் நீங்கி, "இரவில் சிவபூசை செய்தேனில்லை. நான் நினைத்தது குற்றம்" என்று எழுந்தபடியே சிவ வழிபாடு செய்தார். நிகழ்ந்ததை மனைவியாருக்குச் சொன்னார். விடிந்ததும் அவர் திருவாரூரை அடைந்தார். அங்கே எல்லாரும் சிவகணங்களாக விளங்குதலைக் கண்டார். விழுந்து விழுந்து அவர்களை வணங்கினார். அவர்கள் எல்லாரும் பழையபடியே ஆயினர். அதையும் நாயனார் கண்டார். "என் பிழை பொறுத்து அருளல் வேண்டும்" என்று நாயனார் ஆண்டவனைத் தொழுதார்.

நமிநந்தியடிகள் தம் ஊரை விடுத்துத் திருவாரூரிலே குடி புகுந்து, அடியவர்களுக்கு வேண்டுவன எல்லாம் செய்து வந்தார்.  அவர், தொண்டர்க்கு ஆணி என்று அப்பர் பெருமானாரால் சிறப்பிக்கப் பெற்றார்.

நமிநந்தியடிகள் முறைப்படி திருத்தொண்டுகளைச் செய்து தியாகேசப் பெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

நமிநந்தி அடிகள் பிறந்த குலத்தின் சார்பாகச் சில நடைமுறைகள் அக்காலத்தில் வகுக்கப்பட்டன. அதன்படி, வெளியில் எங்காவது சென்று வந்தால், குளித்து முடித்தே வீட்டுக்குள் புகவேண்டும் என்பது நியதியாக இருந்தது.

அடியவர்களுக்கு இந்த நியதி எல்லாம் பொருந்தாது என்பதை எடுத்துக் காட்டவே, நமிநந்தி அடிகள் வாழ்வில் இந்த நிகழ்வு காட்டப்பட்டது. இது இறைவன் திருவிளையாடல்.

இறைவனுக்கு அடியவராக இருப்பவர் யாவராயினும் அவர் நம்மால் வணங்கத் தக்கவர். அடியாராக இல்லாதார் எப்படிப்பட்டவர் ஆயினும் அவர் நம்மால் போற்றத் தக்கவர் அல்லர் என்னும் கருத்து அமைந்த, அப்பர் பெருமான் திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்.

"நாம்ஆர்க்கும் குடிஅல்லோம்; நமனை அஞ்சோம்;
         நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணிஅறியோம்; பணிவோம் அல்லோம்;
         இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை;
தாம்ஆர்க்கும் குடிஅல்லாத் தன்மையான
         சங்கரன் நல் சங்கவெண் குழைஓர் காதில்
கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்
         கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே".

இதன் பொழிப்புரை :

தான் யார்க்கும் அடிமையாகாத தன்மையனும், நல்ல சங்க வெண்குழையை ஒரு காதில் உடைய கோமானும் ஆகிய சங்கரனுக்கு நாம் என்றும் மீளாத அடிமையாய், அப்பொழுது அலர்ந்த மலர் போன்ற அவன் உபய சேவடிகளையே அடைக்கலமாக அடைந்தோம்.

ஆதலின் .நாம் வேறு யார்க்கும் அடிமை அல்லோம் ; இயமனை அஞ்சோம் ; நரகத்தில் புக்கு இடர்ப்படோம் ; பொய்யும் இல்லோம் ; என்றும் களிப்புற்றிருப்போம் ; பிணியாவது இது என அறியோம் ; வேறு யாரையும் பணிவோம் அல்லோம் ; எந்நாளும் எமக்குள்ளது இன்பமே அன்றித் துன்பமில்லை.

தொண்டர் அடிப்பொடி ஆழ்வாரும் இதனையே தமது திருப்பாடல்களில் வலியுறுத்திக் காட்டினார்.

அடிமையில் குடிமை இல்லா
     அயல் சதுப்பேதிமாரில்
குடிமையில் கடைமை பட்ட
     குக்கரில் பிறப்பரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய்!
     மொய்கழற்கு அன்பு செய்யும்*
அடியரை உகத்தி போலும்
     அரங்கமா நகர் உளானே.

இதன் பொழிப்புரை ---

திருமுடியில் திருத்துழாய் மாலையை அணிந்தவனே! எனக்குக் கைங்கரியம் செய்வதில் ஊற்றம் இல்லாதவர்களாய், அடிமைக்க் மாறுபட்டவர்களாய், நான்கு வேதங்களையும் ஓதிய வேதியர்களைக் காட்டிலும், குடிப்பிறப்பினால் கீழான சண்டாளருக்கும் கூழ்ப்பட்ட சாதியில் பிறந்தவர்களே ஆனாலும், உன் நெருங்கிய திருவடிகளுக்கு அன்பு செய்யும்படியான அடியவர்களையே விரும்புபவன் நீ.

குக்கர் - நாய்.

வேத அத்யயனம் (கற்பதன்) பண்ணுவதன் மூலம் அவர்கள் உண்மையில் அறிய வேண்டியது என்ன? என்றால் எம்பெருமான் நாராயணனே எல்லா உலகுக்கும் ஜகத் காரணன், ரக்ஷகன், ஸ்வாமி. நாம் அவனுக்கு சொத்து போல உடைமை. நமது ஆத்ம சொரூபத்தின் பலனே அவனுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்வது தான் என்கிற உணர்வு, ஞானம் வர வேண்டும். வந்தால்தான் வேதம் அறிந்தவர்களுக்கு வர வேண்டிய ஞானமாகிய உணர்வு வந்த்தாக அர்த்தம். அப்படி வந்தவர்கள் தான் சதுர்வேதிகள்.

ஆழ்வார் சதுப்பேதிமார்கள் என்கிறார். இந்த ஞானம் வராதும்- அதனை அறியாமலும், வேறு பயன்களைப் பெற்று வாழ இருப்பவர்களை "அயல் சதுப்பேதிமார்கள்" என்று பாசுரத்தில் சொல்லுகிறார்.

விஷ்ணு பக்தி இல்லாது, வேதம் அறிந்தாலும் வீண் என்கிறது சாஸ்திரம். இப்படி கைங்கர்யத்தில் நாட்டம் இல்லது நாலு வேதங்களையும் கற்றவர்களைக் காட்டிலும் மேலானவர்கள் யார்? என்பதை அருளுகிறார்.

வேதநெறி காட்டிய வழிகளைக்  கடைப்பிடிக்காது,
வேதம் செய்யாதே என்று விலக்கி வைத்தது எல்லாம் செய்தும், பகவானுக்கு எதிராக இருந்தும், பலபல பாவங்களைச் செய்து, அதனால் பல பல தாழ்ந்த பிறவிகளில் மீண்டும் பிறந்து உழல்கிறோம். அப்படி மிகவும் கீழான தாழ்ந்த சண்டாள ஜாதியைத் தான் "குக்கர்" என்கிறார். இப்படி குடிப்பிறப்பால் மிகவும் சண்டாளனாக பிறந்தாலும், அரங்கனிடத்தில் அன்பு பூண்டு, வாழும் சோம்பராக நல்ல ஞானம் கொண்டவரானால் அவரது பிறப்பு தாழ்ந்தது அல்ல என்கிறார் ஆழ்வார்

இராமன் காட்டில் இலக்குவமனிடம் ஜடாயுவைப் பார்த்த பின்பு, "லக்ஷ்மணா! நல்ல சாதுக்கள்-, தர்மம் அறிந்தவர்கள், சூரர்கள், எல்லாம் சரணம் அடையத் தகுந்த மஹா புருஷர்களே. அவர்கள் விலங்குகளாயும் இதர தாழ்ந்த யோநிகளிலும் உண்டு" என்றார். இதனால், பகவானைப் பற்றிய ஞானம் விலங்குகள் பறவைகளுக்கும் ஏற்படும் என்பது தெரிகிறது.

வேதத்தின் பொருளை விளக்க வந்த இராமாயணத்தில், காட்டில் திரியும் குகப்பெருமாள் போன்ற வேடர்களும், சபரி போன்ற வேடுவச்சிகளும், அனுமான், சுக்ரீவன் போன்ற வானரங்களும், ஜடாயு போன்ற பறவைகளும், விபீடணன் போன்ற அரக்கர்ர்களும் எம்பெருமானைப் பற்றிய ஞானத்தோடு இருந்தார்கள் என்பது தெரியும்.

மற்றொரு இதிகாசமான மகாபாரதத்திலும், தாழ்ந்த ஜாதியில் பிறந்த விதுரர், வேடனாய் மாமிச வியாபாரம் செய்து வந்த தர்மவ்யாதன்,  ஆய்ப்பாடியில் வாழ்ந்த எல்லா இடைச்சியர்கள் போன்ற அனைவரும் எம்பெருமானை உணர்ந்து, எல்லாம் கண்ணன் என்று இருந்தார்கள்.

அடியவர்களைப் பழிப்பவர்கள், உயர்ந்த சாதியர் ஆனாலும், அவர்களைப் புலையர் என்கின்றார் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார்.

"அமர ஓர் அங்கம் ஆறும்,
     வேதம் ஓர் நான்கும் ஓதி,
தமர்களில் தலைவர் ஆய
     சாதி அந்தணர்களேலும்,
நுமர்களைப் பழிப்பர் ஆகில்,
     நொடிப்பதோர் அளவில் ஆங்கே
அவர்கள் தாம் புலையர் போலும்,
     அரங்கமா நகர் உளானே".

இதன் பொழிப்புரை ---

அரங்க மாநகர் உள்ளானே! ஒப்பற்ற சிட்சை, வியாபகரணம், சந்தசு, நிருத்தம், சோதிடம், கல்பம் என்ற ஆறு வகையான வேத அங்கங்களையும், நிகர் அற்ற நான்கு வேதங்களையும் நெஞ்சில் பதியும்படி ஓதி, உன் அடியார்களில் முதல்வராய் பிராமண சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், தேவரீருடைய அடியார்களை, அவர்களுடைய பிறப்பு நோக்கிப் பழித்தால், அந்த நொடியிலேயே, அப்போதே, அந்தப் பிராமணர்கள் சண்டாளர்கள் ஆவார்.


நாட்டமிகு தண்டியடிகள் வரலாறு

தண்டியடிகள் சோழநாட்டிலே திருவாரூரிலே தோன்றியவர்.  பிறவிக் குருடர். அகக் கண்ணினாலே ஆண்டவனை வழிபடுவார்.  அவர் திருவாரூர்த் திருக்கோயிலை வலம் வருவார். திருவைந்தெழுத்தை ஓதுவார். திருக்கோயிலுக்கு மேல்பால் ஒரு குளம் உண்டு. அதன் பக்கமெல்லாம் சமண மடங்கள். நிரம்பி இருந்தன. அதனால், திருக்குளம் இடத்தால் சுருக்கமுற்று இருந்தது.

தண்டியடிகள், திருக்குளத்தைப் பெருக்க முயன்றார். அவர் திருக்குளத்தின் உள்ளே ஒரு தறி நட்டார். கரையிலே மற்றொரு தறி நட்டார். இரண்டுக்கும் இடையே ஒரு கயிறு கட்டினார்.  கயிற்றைத் தடவிக்கொண்டே போவார். மண்ணை வெட்டுவார்.  அதைக் கூடையிலே சுமந்து வருவார், கொட்டுவார்.

இச் செயலைச் சமணர்கள் கண்டார்கள். பொறாமை கொண்டார்கள். அவர்கள் நாயனாரைப் பார்த்து, "மண்ணைக் கல்லாதீர், பிராணிகள் இறக்கும். அவைகளை வருத்த வேண்டாம்" என்று சொன்னார்கள். அதற்கு அடிகள், "அறிவு கெட்டவர்களே! இது சிவத்தொண்டு. அறத்தொண்டு. இதன் பெருமை உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். சமணர்கள் வெகுண்டு, "நாங்கள் சொன்னது அறவுரை. அதைக் கேட்கின்றாய் இல்லை.  உனக்குச் செவியும் இல்லை போலும்" என்றார்கள். நாயனார், "மந்த உணர்வும், குருட்டு விழியும், கேளாச் செவியும் உங்களுக்கே உண்டு. சிவனடியை அன்றிப் பிறிது ஒன்றை என் கண் பாராது. அந்த நுட்பம் உங்களுக்கு விளங்காது. புற உலகம் எல்லாவற்றையும் நான் காணக் கண் பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேட்டார். சமணர்கள், "நீ உன் தெய்வ வல்லமையால் கண் பெறுக. பார்ப்போம். பெற்றால் நாங்கள் இந்த ஊரில் இருப்பதில்லை" என்று கூறினார்கள். அத்தோடு நில்லாமல், நாயனாருடைய மண்வெட்டியையும், குறித் தறிகளையும், கயிற்றையும் பறித்துப் பிடுங்கி எறிந்தார்கள். தண்டியடிகளுக்கு வெகுளி மேலிட்டது. அவர் திருக்கோயில் திருவாயிலுக்குச் சென்று ஆண்டவனை இறைஞ்சினார்.  "ஐயனே! இன்று சமணர்கள் என்னை அவமானம் செய்தார்கள் அதனால் நான் மிகவும் வருந்துகிறேன். அதை ஒழித்தருள்க" என்று வேண்டி, அவர் தமது திருமடத்தை அடைந்தார்.  துன்பத்தில் மூழ்கித் துயின்றார்.

சிவபெருமான் அன்றிரவு நாயனார் கனவிலே தோன்றி, "அன்பனே! கவலை வேண்டாம். உன் கண் காணவும், சமணர்கள் கண் குருடாகவும் அருள் செய்வோம்" என்று திருவாய் மலர்ந்து அருளினார். அப்பொழுதே சிவபெருமான் சோழமன்னன் கனவிலும் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளம் கல்லினான். அதற்குச் சமணர்கள் இடையூறு செய்தார்கள். நீ அவனிடம் சென்று, அவன் கருத்தை முடிப்பாயாக" என்று கட்டளையிட்டார். மன்னன் விழித்து ஆண்டவன் அருளைப் போற்றினான்.

பொழுது விடிந்ததும் மன்னன் நாயனார்பால் அணைந்தான்.  அவன் தான் கண்ட கனவை நாயனாருக்குத் தெரிவித்தான்.  நாயனாரும் சமணர்கள் செய்ததையும், அதன் பொருட்டுத் தாம் ஏற்ற சூளையும் மன்னனுக்கு விளங்க உணர்த்தினார். மன்னன் சமணர்களை அழைப்பித்து விசாரணை புரிந்தான். சமணர்கள், தண்டி கண் பெற்றால், தாங்கள் இவ் ஊரை விட்டுப் போவதாக உறுதி கூறினார்கள்.

தண்டியடிகள் குளக்கரைக்குச் சென்றார். மன்னனும் உடன் போந்தான். மன்னன், கரையிலே நின்று தண்டியடிகளை நோக்கி, "சிவநேயரே சிவன் அருளால் கண்ணைப் பெறுதலைக் காட்டுக" என்றான். நாயனார், "சிவபெருமானுக்கு நான் தொண்டு செய்வது உண்மையாயின், மன்னன் எதிரே நான் கண் பெறுதல் வேண்டும்.  சமணர்கள் கண் இழத்தல் வேண்டும்" என்று சொல்லித் திருவைந்தெழுத்தை ஓதிக்கொண்டே திருக்குளத்தில் மூழ்கினார். கண் பெற்றே எழுந்தார். சமணர்கள் கண்ணிழந்து தடுமாறினர்.

அக் காட்சி கண்ட மன்னன், சமணர்களை ஊரை விட்டுத் துரத்தினான். சமணர்களுடைய பாழிகளையும் பள்ளிகளையும் இடித்தான். திருக்குளத்தை நாயனார் கருத்துப்படி ஒழுங்கு செய்தான். நாயனாரைப் பணிந்து விடைபெற்றுச் சென்றான்.   தண்டியடிகள் வழக்கம்போலத் தமது தொண்டைச் செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

செருத்துணை நாயனார் வரலாறு

செருத்துணை நாயனார் தஞ்சாவூரிலே, வேளாளர் மரபிலே தோன்றியவர். சிவபத்தி, சிவனடியார் பத்தியில் சிறந்தவர். அவர் திருவாரூரை அடைந்து திருத்தொண்டு செய்து வந்தார். அங்கே வழிபாட்டுக்கு வந்த கழற்சிங்க நாயனாருடைய மனைவியார், பூ மண்டபத்தின் பக்கத்திலே கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தார். அதைச் செருத்துணை நாயனார் பார்த்தார். விரைந்து ஓடினார். கத்தி எடுத்தார். அம்மையார் கூந்தலைப் பிடித்தார். கீழே தள்ளினார். அம்மையாரின் மூக்கை அறுத்தார். செருத்துணை நாயனார் பலநாள் தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

கழற்சிங்க நாயனார் வரலாறு

கழற்சிங்க நாயனார் பல்லவ குலத்திலே தோன்றியவர்.  சிவபத்தர். வடபுல மன்னர்கள் வென்று எங்கும் சைவம் தழைக்கச் செங்கோல் ஓச்சினார். பல திருப்பதிகளுக்குப் போய் ஆண்டவனை வழிபடுவது அவர்தம் வழக்கம்.

ஒருநாள் கழற்சிங்கர், தமது மனைவியாருடன் திருவாரூரை அடைந்து, தியாகேசப் பெருமானைத் தொழுதார். அவ் வேளையில், அம்மையார் திருக்கோயிலை வலம் வந்தார்.  அங்கே உள்ள பெருமைகளைத் தனித்தனிக் கண்டு மகிழ்வெய்தினார். பூ மண்டபத்தின் பக்கத்திலே புதுப் பூ ஒன்று விழுந்து கிடந்தது. அம்மையார் அப் பூவை எடுத்து மோந்தார்.

அங்கே தொண்டு செய்துகொண்டு இருந்த செருத்துணை நாயனார் அதைப் பார்த்தார். அவர், அம்மையார் பூ மண்டபத்து உள்ள பூவை எடுத்து மேந்தார் எனக் கருதி, விரைந்து ஓடி, அம்மையார் மூக்கை அறுத்தார். அம்மையார் மூக்கில் இருந்து உதிரம் சோர்ந்தது. கூந்தல் சோர்ந்தது.  அம்மையார் பூமியிலே விழுந்து புலம்பினார்.

கழற்சிங்க நாயனார் அங்கே வந்தார். "இச் செயலை அஞ்சாது செய்தவர் யார்" என்று கேட்டார். செருத்துணை நாயனார் போந்து, நிகழ்ந்ததைக் கூறினார். கழற்சிங்க நாயனார், "அப்படியா, பூவை எடுத்தது கை அல்லாவா. அதையே முதலில் துணித்தல் வேண்டும்" என்று சொல்லித் தம்முடைய உடைவாளை உருவினார். தேவியார் கையைத் துணித்தார். அச் செயற்கரும் செய்கை கண்ட அமரர்கள் பூ மழை பொழிந்தார்கள். கழற்சிங்க நாயனார் பன்னெடு நாள் சிவத்தொண்டு செய்து சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்.

விறல்மிண்ட நாயனார் வரலாறு

சேர நாட்டிலே, செங்குன்றூரிலே, வேளாள குலத்திலே தோன்றியவர் விறல்மிண்ட நாயனார். திருத்தொண்டர்களை வணங்கி பின்னரே சிவபெருமானைப் பணிவது அவருடை வழக்கம். அவர், பல திருப்பதிகளைத் தொழுது திருவாரூரை அடைந்த போது, அங்கே ஒருநாள் சுந்தரமூர்த்தி சுவாமிகள், தேவாசிரிய மண்டபத்தில் எழுந்தருளி உள்ள அடியார்களை வணங்காது, ஒருவாறு ஒதுங்கிச் சென்றதைக் கண்டு, "திருத்தொண்டர்களுக்கு வன்தொண்டனும் புறம்பு. அவனை ஆண்ட சிவனும் புறம்பு" என்றார். விறல்மிண்ட நாயனார் அடியவரிடத்துக் கொண்டுள்ள அன்பு உறுதியைக் கண்டு, நம்பியாரூரர் தம் கருத்து முற்றுப் பெறவும், உலகு உய்யவும் தியாகேசப் பெருமான் அருளால் திருத்தொண்டத் தொகையைப் பாடி அருளினார். அத் திருத்தொண்டத் தொகை விறல்மிண்ட நாயனாருக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டிற்று. சிவபெருமான், தம் கணங்களுக்குத் தலைவராய் இருக்கும் பெருவாழ்வை விறல்மிண்ட நாயனாருக்கு அளித்தருளினார்.

 திருவாரூர்க் கோயில் - தியாகராஜர் திருக்கோயில், திருமூலட்டானம், பூங்கோயில் என்றெல்லாம் சிறப்பிக்கப்படுகிறது.

 கிழக்குக் கோபுர வாயிலின் கோயிலுள் நுழைந்தால் வீதிவிடங்க விநாயகருக்குப் பின்னால் "பிரமநந்தி" எழுந்தருளியுள்ளார்; மழைவேண்டின் இப்பெருமானுக்கு நீர் கட்டுவதும், பால் கறக்க அடம்பிடிக்கும் பசுக்கள் நன்றாகப் பால் கறக்க, இப்பிரமநந்திக்கு அறுகுச் சாத்தி அதை பசுக்களுக்குக் கொடுக்கப்படும் வழக்கமும், நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகின்றது.

கருத்துரை

முருகா! மாதர்மேல் படிந்த எனது மனம், தேவரீரின் திருவடித் தாமரையில் படியுமாறு அருள்வாய்.

No comments:

Post a Comment

கேளுங்கள், அருமையான ஓர் வரம்.

  கேளுங்கள் ,  அருமையான ஓர் வரம் -----      வள்ளல்பெருமான் என வழங்கப்படும் ,  இராமலிங்க சுவாமிகள் ,  சென்னையில் ஏழுகிணறுப் பகுதியில் ,  விரா...