பெரியமடம் - 0831. கலகவிழி மாமகளிர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ் 
கலகவிழி மாமகளிர் (பெரியமடம்)

முருகா!
வீணே காலத்தைக் கழிக்காமல்,
அடியேன் சிவநெறியில் நின்று உய்ய
தீட்சை தந்து அருளுவீர்.


தனதனன தானதன தத்தனா தாத்த
     தனதனன தானதன தத்தனா தாத்த
     தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான


கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய்
     களவுமத னூல்பலப டித்தவா வேட்கை
     கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார்

கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து
     நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய்
     கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ......கருதாதே

தலமடைசு சாளரமு கப்பிலே காத்து
     நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த
     தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை...தடுமாறித்

தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை
     தனையுமரு நாளையும வத்திலே போக்கு
     தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீட்சை ......தரவேணும்

அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி
     அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி
     அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ......அவதான

அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி
     அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி
     அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர்

பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி
     கரதலக பாலிகுரு வித்தனே போற்றி
     பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி .....பெருவாழ்வாம்

பிரமனறி யாவிரத தட்சிணா மூர்த்தி
     பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த
     பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ....பெருமாளே.


பதம் பிரித்தல்

கலகவிழி மாமகளிர் கைக்குளே ஆய், பொய்
     களவு மதன் நூல் பல படித்து, வா வேட்கை
     கனதனமும் மார்பும்உறல் இச்சையால் ஆர்த்து ......கழுநீர் ஆர்

கமழ்நறை சவாது புழுகைத் துழாய் வார்த்து,
     நில அரசு நாடு அறிய கட்டில் போட்டார்ச் செய்,
     கருமம் அறியாது, சிறு புத்தியால் வாழ்க்கை .....கருதாதே,

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து,
     நிறை பவுசு, வாழ்வு அரசு சத்யமே வாய்த்தது
     என உருகி ஓடி ஓரு சற்றுளே வார்த்தை .....தடுமாறி.

தழுவி அநுராகமும் விளைத்து, மா யாக்கை
     தனையும் அரு நாளையும் அவத்திலே போக்கு,
     தலை அறிவு இலேனை, நெறி நிற்க நீ தீட்சை....தரவேணும்.

அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி,
     அருணைநகர் கோபுர விருப்பனே போற்றி,
     அடல்மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி, .....அவதான

அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி,
     அகிலதலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி,
     அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி, ...... அசுரேசர்

பெலம் மடிய வேல்விடு கரத்தனே போற்றி,
     கரதல கபாலி குரு வித்தனே போற்றி,
     பெரிய குறமாது அணை புயத்தனே போற்றி, ......பெருவாழ்வாம்

பிரமன் அறியா விரத தட்சிணா மூர்த்தி
     பரசமய கோள் அரி தவத்தினால் வாய்த்த
     பெரியமடம் மேவிய சுகத்தனே யோக்யர் ......பெருமாளே.


பதவுரை

      அலகு இல் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி --- அளவு இல்லாத தமிழ்ப் பாடல்களால் புகழ்ந்து போற்றப்பட்ட ஆற்றல் உடையவரே! போற்றி,

      அருணை நகர் கோபுர விருப்பனே போற்றி --- திருவண்ணாமலையில் விளங்கும் திருக்கோபுரத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே! போற்றி,

      அடல் மயில் நடாவிய ப்ரியத்தனே போற்றி --- வலமை மிக்க மயிலை நடாத்தி வருகின்ற அன்புடையவரே! போற்றி,

      அவதான அறுமுக சுவாமி எனும் அத்தனே போற்றி --- மேன்மை பொருந்திய ஆறு திருமுகங்களை உடைய தலைவரே என்று வேதாகமங்கள் கூறும் கடவுளே! போற்றி!

      அகில தலம் ஓடி வரு நிர்த்தனே போற்றி --- எல்லா உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதுக்குள் விரைந்து வலம் வந்த நிருத்த மூர்த்தியே! போற்றி,

      அருணகிரி நாத எனும் அப்பனே போற்றி --- அடியேனை அருணகிரிநாதா என்று அழைத்த தந்தையே! போற்றி,

      அசுரேசர் பெல(ம்) மடிய வேல் விடு கரத்தனே போற்றி --- அசுரர் தலைவர்களாகிய சூரபன்மன், தாரகன், என்பவர்களுடைய வலிமை குன்ற வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தினரே! போற்றி,

      கரதல கபாலி குரு வித்தனே போற்றி --- திருக்கையில் பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமானுடைய குருநாதராக விளங்கும் ஞானமூர்த்தியே! போற்றி,

      பெரிய குறமாது அணை புயத்தனே போற்றி --- தவத்தில் பெருமை வாய்ந்த குறப்பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவரே! போற்றி,

      பெரு வாழ்வாம் பிரமன் அறியா விரத --- அடியார்களுக்குப் பெருவாழ்வாக விளங்கும், பிரமதேவனால் அறியப்படாத ஞான விரத பலனாக உள்ளவரே!

      தட்சிணா மூர்த்தி --- தென்முகப் பரமாசாரியரே!

      பர சமய கோள் அரி --- பிற சமயங்களுக்குச் சிங்கம் போன்றவரே!

      தவத்தினால் வாய்த்த பெரிய மடம் மேவிய சுகத்தனே --- அடியார்களது தவத்தின் பயனாக வாய்த்த பெரியமடத்தில் எழுந்தருளி உள்ள இன்ப வடிவினரே!

      யோக்யர் பெருமாளே --- யோகிகள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

      கலக விழி மா மகளிர் கைக்குளே ஆய் --- கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு,  

      பொய் களவு மதன் நூல் பல படித்து --- பொய்ம்மையாகிய களவியலை எடுத்துக் கூறும் மதன சாத்திரங்களை நிரம்பவும் படித்து,

     அவா வேட்கை --- மிகுந்த காம தாகம் உடையவனாகி,

     கன தனமும் மார்பும் உறல்--- பெரிய தனங்களும் மார்பும் பொருந்தவேண்டும் என்ற

     இச்சையால் ஆர்த்து --- ஆசையினால் கட்டுண்டு,

      கழு நீர் ஆர் --- செங்கழுநீர் மலரின் மணமும், சந்தன மணமும்,

     கமழ் நறை சவாது புழு கைத் துழாய் வார்த்து --- அருமையாக மணக்கும் ஜவ்வாது, புனுகு முதலிய வாசனைப் பொருள்களைக் கலந்து தெளித்து,

      நில அரசு --- நிலத்தை ஆளுகின்ற அரசனும்

     நாடு அறிய --- நாட்டாரும் தெரிந்துகொள்ளுமாறு

     கட்டில் போட்டார்ச் செய் ---  கட்டிலைப் போட்டவர்களாகிய பரத்தையர்கள் செய்கின்ற

     கருமம் அறியாது --- வஞ்சனைச் செயல்களைத் தெரிந்து கொள்ளாமல் படிக்கு,

      சிறு புத்தியால் வாழ்க்கை கருதாதே --- எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல்,

      தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து --- அந்த வேசியரின் வீட்டிலே நெருங்கிய பலகணி வாசலில் காத்திருந்து,

     நிறை பவுசு வாழ்வு --- நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்வும்

     அரசு சத்யமே வாய்த்தது என உருகி ---  பதவியும் உண்மையாக எனக்கு வந்து வாய்த்து விட்டதாக எண்ணி உள்ளம் உருகி,

      ஓடி ஒரு சற்றுளே வார்த்தை தடுமாறி --- அவர்கள் இருக்கும் இடம்தோறும் விரைந்து சென்று, ஒரு சிறிது நேரத்திற்குள் சொற்கள் யாவும் தடுமாறி,

     தழுவி அநுராகமும் விளைத்து --- அப் பொருட்பெண்டிரை மருவி, இன்ப நுகர்ச்சியைப் புரிந்து,

      மா யாக்கை தனையும் --- பெருமை மிக்க இந்த உடம்பையும்,

     அரு நாளையும் --- அருமையான வாழ்நாளையும்

     அவத்திலே போக்கு --- வீணில் கழிக்கின்றவனும்,

     தலை அறிவிலேனை --- சிறந்த அறிவும் இல்லாதவனுமாகிய என்னை,

      நெறி நிற்க ---  சிவநெறியில் நின்று உய்யுமாறு,

     நீ தீட்சை தரவேணும் --- தேவரீர் தீட்சை செய்து அருள வேண்டும்.

பொழிப்புரை

         அளவு இல்லாத தமிழ்ப் பாடல்களா புகழ்ந்து போற்றப்பட்ட ஆற்றல் உடையவரே! போற்றி,

         திருவண்ணாமலையில் விளங்கும் திருக்கோபுரத்தில் விரும்பி எழுந்தருளி இருப்பவரே! போற்றி,

         வலமை மிக்க மயிலை நடாத்தி வருகின்ற அன்புடையவரே! போற்றி,

         மேன்மை பொருந்திய ஆறு திருமுகங்களை உடைய தலைவரே என்று வேதாகமங்கள் கூறும் கடவுளே! போற்றி,!

         எல்லாப் உலகங்களையும் ஒரு நொடிப் பொழுதுக்குள் விரைந்து வலம் வந்த நிருத்த மூர்த்தியே! போற்றி,

         அடியேனை அருணகிரிநாதா என்று அழைத்த தந்தையே! போற்றி,

         அசுரர் தலைவர்களாகிய சூரபன்மன், தாரகன், என்பவர்களுடைய வலிமை குன்ற வேலாயுதத்தை விடுத்தருளிய திருக்கரத்தினரே! போற்றி,

          திருக்கையில் பிரமகபாலத்தை ஏந்திய சிவபெருமானுடைய குருநாதராக விளங்கும் ஞானமூர்த்தியே! போற்றி,

         தவத்தில் பெருமை வாய்ந்த குறப்பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவரே! போற்றி,

         அடியார்களுக்குப் பெருவாழ்வாக விளங்கும், பிரமதேவனால் அறியப்படாத ஞான விரத பலனாக உள்ளவரே!

         தென்முகப் பரமாசாரியரே!

         பிற சமயங்களுக்குச் சிங்கம் போன்றவரே!

         அடியார்களது தவத்தின் பயனாக வாய்த்த பெரியமடத்தில் எழுந்தருளி உள்ள இன்ப வடிவினரே!

         யோகிகள் போற்றும் பெருமையில் சிறந்தவரே!

         கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு,  பொய்ம்மையாகிய களவியலை எடுத்துக் கூறும் மதன சாத்திரங்களை நிரம்பவும் படித்து, மிகுந்த காம தாகம் உடையவனாகி, பெரிய தனங்களும் மார்பும் பொருந்தவேண்டும் என்ற ஆசையினால் கட்டுண்டு,
செங்கழுநீர் மலரின் மணமும், சத்நன மணமும், அருமையாக மணக்கும் ஜவ்வாது, புனுகு முதலிய வாசனைப் பொருள்களைக் கலந்து தெளித்து, நிலத்தை ஆளுகின்ற அரசனும் நாட்டாரும் தெரிந்து கொள்ளுமாறு கட்டிலைப் போட்டவர்களாகிய பரத்தையர்கள் செய்கின்ற வஞ்சனைச் செயல்களைத் தெரிந்து கொள்ளாமல் படிக்கு, எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், அந்த வேசியரின் வீட்டிலே நெருங்கிய பலகணி வாசலில் காத்திருந்து, நிறைந்த மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்வும் பதவியும் உண்மையாக எனக்கு வந்து வாய்த்து விட்டதாக எண்ணி உள்ளம் உருகி, அவர்கள் இருக்கும் இடம்தோறும் விரைந்து சென்று, ஒரு சிறிது நேரத்திற்குள் சொற்கள் யாவும் தடுமாறி, அப் பொருட் பெண்டிரை மருவி, இன்ப நுகர்ச்சியைப் புரிந்து, பெருமை மிக்க இந்த, அருமையான வாழ்நாளையும் வீணில் கழிக்கின்றவனும், சிறந்த அறிவும் இல்லாதவனுமாகிய என்னை,  சிவநெறியில் நின்று உய்யுமாறு, தேவரீர் தீட்சை செய்தருள வேண்டும்.


விரிவுரை

கலக விழி மாமகளிர் ---

விலைமகளிர் தமது கண் பார்வையால் அகத்தும் புறத்தும் பெரும் கலகத்தை விளைவிப்பவர். தந்தைக்கும் மகளுக்கும் கலகம். கணவனுக்கும் மனைவிக்கும் கலகம். இன்னும் பலருக்கும் கலகம். இதுவேயும் அன்றி, அகத்துக்குள் அந்தக்கரணங்களுக்குள் கலகம். பொறி புலன்களுக்குள் கலகம்.  விழியால் மருட்டி தனத்தையும் மனத்தையும் ஒருங்கே பறிப்பர்.

விழையும் மனிதரையும் முநிவரையும் அவர் உயிர் துணிய
வெட்டிப் பிளந்துஉளம் பிட்டுப் பறித்திடும் செங்கண்வேலும்..
                                                                                 ---  திருப்புகழ்.
 
தகர நறுமலர் பொதுளிய குழலியர்
கலக கெருவித விழி....                   --- திருப்புகழ்.

வாதினை அடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயம் அதுஒழிந்து தெளியேனே...        ---  திருப்புகழ்.

களவு மதன் நூல் படித்து ---

ஆவி ஈடேறுதற்கு உரிய சிவ நூங்களைக் கற்று கதிபெறுதல் வேண்டும்.  அதனைக் கல்லாமல் மதன நூல்களைப் படித்து மனம் தடுமாறுதல் கூடாது.

…..             …..                      …...            மதன்நூலே
சுருதி எனவே நினைந்து, அறிவிலிகளோடு இணங்கு
தொழில் உடைய யானும், இங்குஉன்     அடியார்போல்
அருமறைகளே நினைந்து, மனுநெறியிலே நடந்து
அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி.....        --- (சுருளளக) திருப்புகழ்.

தலம் அடைசு சாளர முகப்பிலே காத்து ---

இறைவனுடைய திருக்கோயிலின் வாசலிலும், ஆன்றோர்களது திருமுன்னிலையிலும் காத்திருப்பவர் கதி பெறுவர். அங்ஙனம் அன்றி, சிலர் தமது அறிவின்மையால் விலைமகளிரது வீட்டின் சாளரத்தின் முன் அவர்களது அனுமதியை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

ஒருவரைச் சிறுமனைச் சயன மெத்தையில், வைத்து
ஒருவரைத் தம தலைக் கடையினில் சுழலவிட்டு
ஒருவரைப் பரபரப்பொடு தெருத் திரியவிட்டு  அதனாலே...--- திருப்புகழ்.

மா யாக்கை தனையும் …........ அவத்திலே போக்கும் ---

இந்த மனித உடம்பு மிகமிக அருமையினும் அருமையாயது.  பிறப்பின் நோக்கம் பிறவாமையே. அப் பிறவாமையைப் பெறுதற்குரியது மனிதப் பிறப்பே ஆம். எத்தனையோ காலம் ஈட்டிய நற்பயனால் வருவது இம்மானுடம். அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம் என்ற நால்வகைப் பிறப்புக்களில் மாறிமாறி பிறந்து இறந்து இம் மனித உடம்பு எடுப்பது, கடலைக் கையால் நீந்திக் கரை சேர்வது போலாகும்.

அண்டசம் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோடு
எண்தரு நால்எண்பத்து நான்குநூறு ஆயிரம்தான்
உண்டுபல் யோனி எல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியம்காண்.
                                                                        ---  சிவஞான சித்தியார்.
 
பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர்உயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி
 
 ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
 ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அசைவுஇல அசைவுஉள ஆருயிர்த் திரள்பல
 அசல்அற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அறிவுஒரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வாறு அமைத்த அருட்பெருஞ் ஜோதி.......
.....       .....       .....       .....       .....
பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை
அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி..--- அருட்பெருஞ்சோதி அகவல்.

“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது” என்பார் ஔவையார்.

எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும் அரிதுஅரிது காண்
இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
யாது வருமோ அறிகிலேன்...

என்று கல்லும் கனியக் கூறுவார் அநுபூதிச் செல்வராகிய தாயுமானார்.

பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற்கரிய பிரான்அடி பேணார்..

என்பார் திருமூல நாயனார்.

நமது வாழ்நாள் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு கணமும் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும். சிறந்த இந்த உடம்பையும் உயர்ந்து வாழ்நாளையும் வீணில் கழித்தல் கூடாது.  பயனுடையவாகப் புரிதல் வேண்டும். களியாடல்களிலும், வீண் பேச்சுக்களிலும், வம்புரைகளிலும், வழக்காடுவதிலும் நம் நாளைக் கழிப்பது பேதைமையாகும். காமதேனுவின் பாலைக் கமரில் விடுவதுபோல் ஆகும். தனியே இருந்து இதனைச் சிந்தித்தல் வேண்டும். பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரே ஈசன் கீழ்க்கணக்கில் எழுதுவான். சென்ற வாழ்நாளை மலையளவு செம்பொன் கொடுத்தாலும் திரும்ப அடைதல் இயலாது.

"ஓடு கின்றனன் கதிரவன் அவன்பின்
     ஓடு கின்றன ஒவ்வொரு நாளாய்
வீடு கின்றன என்செய்வோம் இனிஅவ்
     வெய்ய கூற்றுவன் வெகுண்டிடில் என்றே
வாடு கின்றனை அஞ்சலை நெஞ்சே
     மார்க்கண் டேயர்தம் மாண்பறிந் திலையோ
நாடு கின்றவர் நாதன்தன் நாமம்
     நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே".

என்பர் இராமலிங்க அடிகள்.

இத்தகைய சிறந்த நேரத்தைச் சிலர், பொழுதே போகவில்லை, பாழும்பொழுது என்று கூறி அல்லல் உறுகின்றனர். சிலர் வீண்பொழுது கிழிக்கின்றனர்.

நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும் அயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடு மலர்ப்பாதம் ஒருபோதும் மறவாமல்
குன்றாத உணர்வுஉடையார் தொண்டராம் குணமிக்கார்.

என்ற தெய்வச் சேக்கிழாரின் அருமைத் திருவாக்கை நன்கு சிந்தித்து உய்க.

மெய்த்தவர் அடிக்குற் றேவலின் திறத்தும்,
      விளங்கும் ஆகமஉணர்ச் சியினும்,
புத்தலர் கொடுநின் பரவுபூ சையினும்
      பொழுதுபோக்கு எனக்குஅருள் புரிவாய்;
முத்தமும் அரவ மணிகளும் எறிந்து
      முதிர்தினைப் புனத்துஎயின் மடவார்
தத்தைகள் கடியும் சாரல்அம் சோண
      சைலனே கைலைநா யகனே.

என்பார் "சோணசைல மாலை" என்னும் நூலில் பொழுதுபோக்கு எவ்வாறு அமைதல் வேண்டும் என்ற அறிவுறுத்துகின்றார் சிவப்பிரகாச சுவாமிகள்.

இதன் பொருள் ---

முதிர்ந்த தினைப்புனத்தைக் காவல் செய்யும் வேடர் மகளிர், முத்துக்களையும், மணிகளையும் எறிந்து கிளிகளைத் துரத்துகின்ற சாரலோடு விளங்கும் சோணசைலப் பெருமானே! திருக்கயிலையின் நாயகனே!  உண்மைத் தவம் உடையவர்களின் திருவடிகளை வழிபடுதலிலும், சிவாகமங்களை ஆய்ந்து ஓதி உணர்தலிலும், அன்று அலர்ந்த மலர்களால் உம்மை வழிடுகின்ற திறத்திலுமே எனது பொழுது கழியுமாறு அருள் புரவீராக.

எந்நேரமும் நல் நேரமாகக் கழிய வேண்டும். திருவருள் தாகம் இருத்தல் வேண்டும். எடுத்த இப்பிறப்பிலேயே பிறப்பின் இலட்சியத்தைப் பெறப் பெரிதும் முயலுதல் வேண்டும்.

"பொய்திகழும் உலகநடை என்சொல்கேன், என்சொல்கேன்,
             பொழுதுபோக்கு ஏது என்னிலோ,
  பொய்உடல் நிமித்தம் புசிப்புக்கு அலைந்திடல்,
             புசித்தபின் கண்ணுறங்கல்,
கைதவம் அலாமல் இது செய்தவம் அதுஅல்லவே,
             கண்கெட்ட பேர்க்கும்வெளியாய்க்
  கண்டது இது விண்டு இதைக் கண்டித்து நிற்றல்எக்
              காலமோ அதை அறிகிலேன்"

என்று அறிவுறுத்துகின்றார் தாயுமானார்.

இதன் பொருள் ---

நிலை இல்லாது சென்று கொண்டிருக்கின்ற இந்த உலகமே பெரிது எனக்கொண்ட, உலகத்து வாழும் மதியிலா மாந்தர்தம் உலக ஒழுக்கத்தினை என்னவென்று சொல்லுவேன், என்னவென்று சொல்லுவேன். அம் மக்கட்குப் பொழுது எவ்வாறு போகின்றது என்னில், நிலையாத தத்தம் உடலின்பொருட்டு உண்ணவேண்டிய உணவினுக்கு ஓயாது அங்கும் இங்கும் அலைந்து திரிந்து ஐயம் ஏற்று உண்பதும். உண்ட களைப்பு நீங்கியிட நன்றாய்க் கண்ணுறக்கம் கொள்ளுதலும், ஆகிய பிறப்பிற்குரிய இவைகள் வஞ்சனைச் செய்கைகள் அல்லாமல், நல்ல செய்தவம் ஆகாதல்லவா? கண்ணில்லாத குருடர்க்கும் வெட்ட வெளியாகக் கண்ட செய்தியாகும் இது. இப் பொய் ஒழுக்கினை உளமாரக் கண்டித்து விலகி அடியேன் நிற்றற்குரிய காலம் எக்காலம் என்பதை அறிகிலேன்.


தலை அறிவு இலேனை ---

தலை அறிவு --- முதன்மையான அறிவு. அது பதியை அறியும் அறிவு.

பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.      

என்பார் திருவள்ளுவ நாயனார்.

நெறி நிற்க நீ தீட்சை தரவேணும் ---

தீட்சை என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்:

1.   நயனம் (கண்களால்),

2.   ஸ்பரிசம் (தொடுவதால்),

3.   மானசம் (மன உணர்வுகளால்),

4.   வாசகம் (சொல்லால்),

5.   சாஸ்திரம் (வேத நூல்களால்),

6.   யோகம் (யோகாப்பியாசத்தால்),

7.   ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக) என்பனவாகும்.

அலகு இல் தமிழ் --- 

அலகு - கணக்கு. கணக்கற்ற தமிழ்ப் பாடல்கள் முருகவேளது அளப்பற்ற புகழை இனிது கூறுகின்றன. முருகவேள் செந்தமிழ்ப் பரமாசிரியர் ஆவார்.

அருணை நகர் கோபுர விருப்பன் ---

திருவண்ணாமலையில் வல்லாள மன்னன் புதுக்கிய கோபுரக் குடவரையின் வடக்கே உள்ள முருகன் மிகவும் வரதர். அந்த மூர்த்தி தான் அருணகிரியார்க்கு வெளிப்பட்டு அருள் புரிந்தது.  ஆதலின், அடிகள் அம் மூர்த்தியை மிகவும் பாராட்டிப் பேசுவர்.

அடல்அருணைத் திருக்கோபுரத்தே அந்தவாயிலுக்கு
வடஅருகில் சென்று கண்டுகொண்டேன்.....---  கந்தர் அலங்காரம்.

அகில தலம் ஓடி வரு நிர்த்தனே ---

முருகவேள் கனி காரணமாக எல்லா உலகங்களையும் நொடிப் பொழுதுக்குள் ஓடி வந்தனர்.

அதன் உட்பொருள்... முருகன் பிரமமாய் நின்ற ஜோதிப் பிழம்பு.  ஆதலின், அவருடைய அருட்பிரகாசம் எங்கும் உலாவியது என்பதேயாம்.

ஆகமம் விளைத்து அகில லோகமும் நொடிப்பளவில்
ஆசையொடு சுற்றும்அதி வேகக்காரனும்....
                                                               ---  திருவேளைக்காரன் வகுப்பு.

அருணகிரி நாத எனும் அப்பனே ---

அடிகளுக்கு தாயார் இட்ட நாமம் "அருணகிரி" என்பதேயாம்.  இவர் நாதத்தை உணர்ந்து, நாதத்தைக் கடந்த நவநாதர்களினும் சிறந்தவராதலின் முருகவேள் தமது திருவாக்கால், "நாதா" என்று சிறந்த பட்டத்தைச் சேர்த்து, "அருணகிரிநாதா" என்று அழைத்து அருளினார்.

பரசமய கோளரி ---

திருஞானசம்பந்தருக்கு பரசமய கோளரி என்பது ஒரு திருநாமம்.  முருகன் திருவருள் அதிஷ்டித்தவர் அவராதலின், அந் நாமத்தை முருகனுக்கே சூட்டுகின்றனர்.


பெரிய மடம் ---

பெரிய மடம் என்பது குடந்தையிலே மகாமக குளத்தின் வடகரையிலே மிகத் தொன்மையும் ஒப்பற்ற தன்மையும் உடையதாய் விளங்கும் வீரசைவ மடத்தைக் குறிக்கின்றது.

அன்றித் துறையூரிலும் பெரியமடம் என்ற ஒரு வீரசைவ மடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

யோக்யர் ---

யோகியர் என்பது யோக்யர் என்று வந்தது. சிவயோகிகளால் காணத் தகுந்தவர் முருகவேள்.

கருத்துரை

  முருகா! வீணே காலத்தைக் கழிக்காமல், அடியேன் சிவநெறியில் நின்று உய்ய தீட்சை தந்து அருளுவீர்.

No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...