எட்டிகுடி - 0841. கடல்ஒத்த விடம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கடல்ஒத்த விடம் (எட்டிகுடி)

முருகா!
திருவடித் தாமரைகளை அடியேன் அடைந்து
உய்ய அருள்வாய்.


தனதத்த தனதத்த தனதத்த தனதத்த
     தனதத்த தனதத்த ...... தனதானா


கடலொத்த விடமொத்த கணையொத்த பிணையொத்த
     கயலொத்த மலரொத்த ...... விழிமானார்

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர்செப்பு
     கதிர்முத்து முலைதைக்க ...... அகலாதே

மிடலுற்ற கலவிக்கு ளுளநச்சி வளமற்று
     மிடிபட்டு மடிபட்டு ...... மனமாழ்கி

மெலிவுற்ற தமியற்கு னிருபத்ம சரணத்தை
     மிகநட்பொ டருள்தற்கு ...... வருவாயே

தடையற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து டையதுட்ட ...... னுயிர்போகச்

சலசத்து மயிலுற்ற சிறைவிட்டு வருவெற்றி
     தருசக்ர தரனுக்கு ...... மருகோனே

திடமுற்ற கனகப்பொ துவில்நட்பு டனடித்த
     சிவனுக்கு விழியொத்த ...... புதல்வோனே

செழுநத்து மிழுமுத்து வயலுக்குள் நிறைபெற்ற
     திகழெட்டி குடியுற்ற ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கடல்ஒத்த விடம்ஒத்த கணைஒத்த பிணைஒத்த
     கயல்ஒத்த மலர்ஒத்த ...... விழிமானார்,

கனசெப்பு நளினத்து முகைவெற்பை நிகர் செப்பு
     கதிர்முத்து முலை தைக்க ...... அகலாதே,

மிடல் உற்ற கலவிக்குள் உளம் நச்சி, வளம்அற்று
     மிடிபட்டு, மடிபட்டு, ...... மனம் மாழ்கி,

மெலிவுற்ற தமியற்கு, உன்இருபத்ம சரணத்தை
     மிகநட்பொடு அருள்தற்கு ...... வருவாயே.

தடைஅற்ற கணைவிட்டு மணிவஜ்ர முடிபெற்ற
     தலைபத்து உடைய துட்டன் ...... உயிர்போகச்

சலசத்து மயில்உற்ற சிறைவிட்டு வரு,வெற்றி
     தரு சக்ரதரனுக்கு ...... மருகோனே!

திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த
     சிவனுக்கு விழிஒத்த ...... புதல்வோனே!

செழு நத்து உமிழு முத்து வயலுக்குள் நிறைபெற்ற
     திகழ்எட்டி குடிஉற்ற ...... பெருமாளே.


பதவுரை

         தடை அற்ற கணை விட்டு --- தடையின்றி விரைந்து செல்லுகின்ற அம்பை விடுத்து,,

     மணி வஜ்ர முடி பெற்ற --- மாணிக்கம், வயிரம் ஆகியவை பதிக்கப்பட்ட மகுடத்தை அணிந்துள்ள

     தலை பத்து உடைய துட்டன் உயிர் போக --- பத்துத் தலைகளை உடைய  துட்டனாகிய இராவணனுடைய உயிரைப் போகச் செய்து,

      சலசத்து மயில் உற்ற சிறை விட்டு வரு --- தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதாதேவியை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து வந்த,

     வெற்றி தரு சக்ரதரனுக்கு மருகோனே --- வெற்றியைக் கொண்ட, சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் திருமருகரே!

      திடம் உற்ற கனகப் பொதுவில் --- மெய்ம்மை வாய்ந்த பொன்னம்பலத்தில்,

     நட்புடன் நடித்த சிவனுக்கு விழி ஒத்த புதல்வோனே --- உயிர்களின் மீது வைத்த அன்பு காரணமாக அருளானந்தத் திருநடனம் புரிந்தருளும் சிவபெருமானுக்கு கண் போன்ற திருமகனாரே!

      செழு நத்து உமிழும் முத்து --- செழுமையான சங்குகள் ஈன்ற முத்துக்கள்

     வயலுக்குள் நிறை பெற்ற --- வயலில் நிறைந்துள்ள,

     திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே --- புகழ் விளங்கும் எட்டிகுடியில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     கடல் ஒத்த --- கருமையால் கடலை ஒத்தும்,

     விடம் ஒத்த --- கொல்லுகின்ற தன்மையால் விடத்தை ஓத்தும்,

     கணை ஒத்த --- கூர்மையான பார்வையால் அம்பினை ஒத்தும்,

     பிணை ஒத்த --- மருண்டு நோக்குவதால் மானை ஒத்தும்,

     கயல் ஒத்த --- இங்கும் அங்குமாகச் சுழலுவதால் கயல் மீனை ஒத்தும்,

     மலர் ஒத்த விழி மானார் ---    அழகுடன் விளங்குவதால் தாமரை மலரை ஒத்தும் விளங்குகின்ற கண்களை உடைய விலைமாதர்களின்

      கன செப்பு --- பொன்னாலான சிமிழ் போன்றும்,

     நளினத்து முகை --- தாமரையின் மொட்டு போன்றும்,

     வெற்பை நிகர் செப்பு --- மலைக்கு நிகர் என்று சொல்லப்படுவதும் ஆகிய,

     கதிர் முத்து முலை தைக்க அகலாதே --- ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான முலைகளின் தன்மை மனத்தில் அழுந்தியதால், (அதன் மீது வைத்த எண்ணம் மனதை விட்டு அகலாமல்)

      மிடல் உற்ற கலவிக்குள் உளம் நச்சி --- வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி,

     வளம் அற்று --- உடல் வளம் அற்று,

     மிடி பட்டு --- செல்வ வளமும் இழந்து வறுமைப்பட்டு,
    
     மடி பட்டு --- சோம்பல் மிகுந்து,

     மனம் மாழ்கி --- மனம் மயங்கி அழிந்து

      மெலிவு உற்ற தமியற்கு --- மெலிவு அடைந்த, துணை ஏதும் அற்றவனாகிய அடியேனுக்கு

     உன் இரு பத்ம சரணத்தை மிக நட்பொடு அருள்தற்கு வருவாயே --- தேவரீருடைய இரண்டு திருவடித் தாமரைகளை மிகுந்த அன்பு வைத்து அருள்வதற்கு வருவீராக.

பொழிப்புரை

         தடையின்றி விரைந்து சொல்லுகின்ற அம்பை விடுத்து, மாணிக்கம், வயிரம் ஆகியவை பதிக்கப்பட்ட மகுடத்தை அணிந்துள்ள பத்துத் தலைகளை உடைய  துட்டனாகிய இராவணனுடைய உயிரைப் போகச் செய்து, தாமரையில் வீற்றிருக்கும் மயில் போன்ற சீதாதேவியை அவள் இருந்த சிறையினின்றும் விடுவித்து, வெற்றியைக் கொண்டவனும், சக்ராயுதத்தை ஏந்திய திருமாலின் திருமருகரே!

         மெய்ம்மை வாய்ந்த பொன்னம்பலத்தில், உயிர்களின் மீது வைத்த அன்பு காரணமாக அருளானந்தத் திருநடனம் புரிந்தருளும் சிவபெருமானுக்கு கண் போன்ற திருமகனாரே!

         செழிமையான சங்குகள் ஈன்ற முத்துக்கள் வயலில் நிறைந்துள்ள, புகழ் விளங்கும் எட்டிகுடியில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கும் பெருமையில் சிறந்தவரே!

     கருமையால் கடலை ஒத்தும், கொல்லுகின்ற தன்மையால் விடத்தை ஓத்தும், கூர்மையான பார்வையால் அம்பினை ஒத்தும், மருண்டு நோக்குவதால் மானை ஒத்தும்,  இங்கும் அங்குமாகச் சுழலுவதால் கயல் மீனை ஒத்தும்,  அழகுடன் விளங்குவதால் தாமரை மலரை ஒத்தும் விளங்குகின்ற கண்களை உடைய விலைமாதர்களின் பொன்னாலான சிமிழ் போன்றும், தாமரையின் மொட்டு போன்றும், மலை என்றும் சொல்லப்படுவதும், ஒளி கொண்ட முத்து மாலை அணிந்ததுமான முலைகளின் தன்மை மனத்தில் அழுந்தியதால், அதன் மீது வைத்த எண்ணம் மனதை விட்டு அகலாமல், வலிமை வாய்ந்த புணர்ச்சி இன்பத்தை உள்ளம் விரும்பி,  உடல் வளமும்,செல்வ வளமும் இழந்து, வறுமை அடைந்து, சோம்பல் மிகுந்து, மனம் மயங்கி அழிந்து, மெலிவு அடைந்த, துணை ஏதும் அற்றவனாகிய அடியேனுக்கு தேவராருடைய இரண்டு திருவடித் தாமரைகளை மிகுந்த அன்பு வைத்து அருள்வதற்கு வருவாயாக.


விரிவுரை

கடல் ஒத்த விடம் ஒத்த கணை  ஒத்த பிணைஒத்த கயல் ஒத்த 
மலர் ஒத்த விழிமானார் ---

விலைமாதர்களின் கண்களை சுவாமிகள் வருணனை செய்தார். கருநிறம் உடையதால் கடல் என்றார். விடமானது உண்டாரைக் கொல்லும். விலைமாதர்களின் கண்கள் கண்டாரைக் கொல்லும் தன்மை உடையவை. அதனால் விடம் ஒத்தது என்றார்.  விரைந்து தாக்கக் கூடிய தன்மை உடையதால் அம்பு என்றார். மருண்டு நோக்குவதால் பெண்மான் என்றார். இங்கும் அங்குமாகப் பிறழ்வதால் மீன் என்றார். அழகாக உள்ளதால் மலர் என்றார். இவை விலைமாதரின் கண்கள்.

மணிவாசகப் பெருமான், திருக்கோவையாரில்......

ஈசற்கு யான் வைத்த அன்பின்
    அகன்று, வன் வாங்கிய என்
பாசத்தில் கார்என்று, வன்தில்லை
    யின்ஒளி போன்று, வன்தோள்
பூசு அத் திருநீறு எனவெளுத்து
    ஆங்கு அவன் பூங்கழல்யாம்
பேசுஅத் திருவார்த்தையில் பெரு
    நீளம் பெருங்கண்களே.

என்று தலைவியின் கண்களைத் தலைவன் வியந்து உரைத்ததாகப் பாடி உள்ளார்.

தலைவியின் கண்கள் தான் சிவபெருமான் மீது வைத்துள்ள அன்பினைப் போல அகன்றது.  இறைவனால் என்னிடத்தில் இருந்து (அடியவர்களிடம் இருந்து) வாங்கப் பெற்ற ஆணவ இருளைப் போல கருநிறம் உடையது. அவனுடைய தில்லையைப் போல ஒளி பொருந்தியது.  அவனுடைய திருத்தோள்களில் பூசப் பெற்ற திருநீற்றைப் போல வெளுத்தது.  அவனுடைய திருவடித் தாமரைகளின் சிறப்பைப் புகழ்ந்து நான் பேசுகின்ற திருவார்த்தைகளைப் போல நீண்டது.

எண்ணி எண்ணி இன்புறத் தக்கது.

திடம் உற்ற கனகப் பொதுவில் நட்புடன் நடித்த சிவனுக்கு ---

உயிர்களின் மீது வைத்த பெருங்கருணையால், அவைகளைப் பற்றியுள்ள ஆணவ வல்லிருள் நீங்கி, ஞான ஒளியைப் பெற்று, பேரானந்தப் பெருவாழ்வை அடைய, அனவரதமும் பெருமான் பொன்னம்பலத்தில் ஆனந்தத் திருநடனம் புரிகின்றான்.

வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் வேண்ட, அவர் மீது கொண்ட அன்பு காரணமாக கனகசபையில் நடித்தார் என்றும் கொள்ளலாம்.

செழு நத்து உமிழும் முத்து வயலுக்குள் நிறை பெற்ற, திகழ் எட்டிகுடி உற்ற பெருமாளே ---

எட்டிகுடி என்னும் திருத்தலத்தின் இயற்கை அழகை சுவாமிகள் காட்டினார்.

எட்டிகுடி நாகப்பட்டினத்துக்கு அருகே கீழ்வேளூர் இரயில் நிலையத்திற்குத் தெற்கே பத்து கி.மீ. தொலைவில் உள்ளது.


கருத்துரை

முருகா! திருவடித் தாமரைகளை அடியேன் அடைந்து உய்ய அருள்வாய்.


No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...