50. காலத்தில் உதவாதவை

 


            50. காலத்தில் உதவாதவை

                              -----


"கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்

     கட்டிவைத் திடுகல்வியும்

காலங்க ளுக்குதவவேண்டும்என் றன்னியன்

     கையிற் கொடுத்தபொருளும்


இல்லாளை நீங்கியே பிறர்பாரி சதம்என்

     றிருக்கின்ற குடிவாழ்க்கையும்

ஏறுமா றாகவே தேசாந் தரம்போய்

     இருக்கின்ற பிள்ளை வாழ்வும்


சொல்லான தொன்றும்அவர்மனமான தொன்றுமாச்

     சொல்லும்வஞ் சகர்நேசமும்

சுகியமாய் உண்டென் றிருப்பதெல் லாம்தருண

     துரிதத்தில் உதவா துகாண்


வல்லான கொங்கைமட மாதுதெய் வானைகுற

     வள்ளிபங் காளநேயா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வல்ஆன் கொங்கை மடமாது தெய்வானை குறவள்ளி பங்காள நேயா - சூதாடு கருவிபோன்ற கொங்கைகளை உடைய இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும் பங்காளனான காதலனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கல்லாது புத்தகந்தனில் எழுதி வீட்டினில் கட்டி வைத்திடு வித்தையும் - கற்காமலே ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், 

காலங்களுக்கு உதவ வேண்டும் என்று அந்நியன் கையில் கொடுத்த பொருளும் - விரும்பியபோது பயனடைய வேண்டும் என்று அயலானிடம் கொடுத்த பணமும், 

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடிவாழ்க்கையும் - தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலை என்று நினைத்து வாழும் வாழ்க்கையும், 

ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் - மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச் சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும், 

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றும் ஆ சொல்லும் வஞ்சகர் நேசமும் - சொல்வது ஒன்றும் நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர்களிடத்தில் கொண்ட நட்பும், 

சுகியமாய் உண்டு என்று இருப்பதெ எல்லாம் துரித தருணத்தில் உதவாது - நன்மையாகக் கிடைக்கும் என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கண் வந்த காலத்தில் விரைவாகப் பயன்படமாட்டா.

     (விளக்கவுரை) வல்-சூதாடு கருவி. பாரி-மனைவி. தேச - அந்தரம்: தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு. அந்தரம் - முடிவு. சுகியம் (வட) - நன்மை.


49. வீண் போகாமல் பயன் விளைப்பவை

49.  வீண் போகாமல் பயன் விளைப்பவை

                                    -----


"பருவத்தி லேபெற்ற சேயும், புரட்டாசி

     பாதிசம் பாநடுகையும்,

பலம்இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே

     பயிர்கொண்டு வருகரும்பும்,


கருணையொடு மிக்கநாணயம் உளோர் கையினில்

     கடன்இட்டு வைத்த முதலும்,

காலம்அது நேரில் தனக்கு உறுதியாக முன்

     கற்று உணர்ந்திடு கல்வியும்,


விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும்,

     விவேகிகட்கு உபகாரமும்,

வீண் அல்ல, இவை எலாம் கைப்பலன் அதாக,அபி

     விர்த்தியாய் வரும் என்பர்காண்,


மரு உலாவிய நீப மாலையும் தண் தரள

     மாலையும் புனை மார்பனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மரு உலாவிய நீபமாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே --- மணம் பொருந்திய கடப்பமலர் மாலையையும் குளிர்ந்த முத்துமாலையையும் அணிந்த திருமார்பனே! 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

பருவத்திலே பெற்ற சேயும் --- நல்ல இளமைப் பருவத்திலே பெற்றுடுத்த குழந்தையும்,

புரட்டாசி பாதி சம்பா நடுகையும் --- புரட்டாசி மாத நடுவினில் நடவு செய்த சம்பா பயிரும், 

பலம் இனிய ஆடிதனில் ஆனைவால் போலவே பயிர் கொண்டுவரு கரும்பும் --- நன்மை தரும் ஆடி மாதத்தில் யானையின் வாலைப் போலக் குருத்துக் கொண்டு விரிந்து வரும் கரும்பும், 

கருணையொடு மிக்க நாணயம் உளோர் கையினில் கடன் இட்டு வைத்த முதலும் --- உள்ளத்தில் அருளும் மிகுந்த நல்லொழுக்கமும் உடைய நல்லோரிடம் கடனாகக் கொடுத்து வைத்த முதல் பொருளும், 

காலம் அது நேரில் தனக்கு உறுதியாக முன் கற்று உணர்ந்திடு கல்வியும் --- துன்பம் நேர்ந்த காலத்தில் இளமையிலேயே தனக்கு இறுதி வேண்டிக் கற்று உணர்ந்த கல்வியும், 

விருது அரசரைக் கண்டு பழகிய சிநேகமும் --- சிறப்புகள் மிக்க அரசர்களைக் கண்டு அவரோடு பழகிய நட்பும், 

விவேகிகட்கு உபகாரமும் --- அறிவு உள்ளவர்களுக்குச் செய்த உதவியும், 

வீண் அல்ல --- வீணாகப் போவன அல்ல.

இவையெலாம் கைப்பலன் அது ஆக அபிவிர்த்தியாய் வரும் என்பர் --- இவைகள் எல்லாம் கைமேல் பலன் தருவனவாக வளர்ச்சி அடையும் என்பர் மேலோர்.

     (விளக்கம்) மரு - மணம். தரளம் - முத்து. புரட்டாசி பாதி - புரட்டாசி பதினைந்து நாட்களுக்குள். விருது - கொடி. குடை முதலிய அடையாளங்கள். 'அறுநான்கிலே பெற்ற பிள்ளையும் முன்னாளில் இட்ட பொருளும் பின்னாளிலே பயன்படும்' என்பது பழமொழி


48. நல்லோர் நட்பு

 


                        48. நல்லோர் நட்பு

                                    -----


"மாமதியில் முயல் ஆனது அது தேயவும் தேய்ந்து,

     வளரும் அப்போது வளரும்;

வாவிதனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர்வற்றில்

     வற்றிடும், பெருகில்உயரும்;


பூமருவு புதல்பூடு கோடையில் தீய்ந்திடும்,

     பொங்கு காலம் தழைக்கும்;

புண்டரிகம் இரவிபோம் அளவில் குவிந்திடும்,

     போது உதயம் ஆகில்மலரும்;


தேம்உடல் இளைக்கில்உயிர் கூடவும் இளைக்கும்,அது

     தேறில் உயிரும் சிறக்கும்;

சேர்ந்தோர்க்கு இடுக்கண் அது வந்தாலும் நல்லோர்

     சிநேகம் அப்படி ஆகுமே;


வாமன சொரூபமத யானைமுக னுக்கு இளைய

     வால! குருபர! வேலவா!

மயில் ஏறி விளையாடு குகனே! புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

வாமன சொரூப மதயானை முகனுக்கு இளைய --- குறுகிய தோற்றமும் மதம் பொருந்திய யானையின் முகமும் உடைய மூத்த பிள்ளையாருக்கு இளையபிள்ளையாரே!

வால --- குமாரக் கடவுளே!

குருபர --- குருநாதனே!

வேலவா --- வேலாயுதக் கடவுளே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

மாமதியில் முயல் ஆனது அது தேய்வுழித் தேய்ந்து, வளரும் அப்போது வளரும் --- பெருமை மிக்க சந்திரனில் காணப்பெறும் முயல் கறையானது, சந்திரன் தேயும்போது தேய்ந்து, வளரும் போது வளரும்; 

வாவி தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும், பெருகில் உயரும் --- குளத்தில் இருக்கும் அல்லியும் கொட்டியும் அந்தக் குளத்தில் நீர் வற்றினால் வற்றிக் கிடக்கும், நீர் பெருகினால் உயர்ந்து வளரும்; 

பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும், பொங்கு காலம் தழைக்கும் --- நிலத்திலே பொருந்தியுள்ள புதரும் பூண்டும் வெயில் காலத்திலே தீய்ந்து விடும், மழையாலே செழிப்புறும் காலத்திலே செழித்து நிற்கும்; 

புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும், போது உதயம் ஆகில் மலரும் --- தாமரை மலரானது சூரியன் மறையும் மாலை நேரத்தில் குவிந்து விடும்;  சூரிய உதய காலத்தில் மலர்ந்து விடும்; 

தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும், அது தேறில் உயிரும் சிறக்கும் --- இனிய உடம்பானது வாடினால் உயிரும் சோர்வு அடையும்,  உடம்பு தெளிவு பெற்றால் உயிரும் தெளிவு பெறும்; 

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகும் --- தன்னை அடைந்தோர்களுக்குத் துன்பம் வந்தாலும் நல்லோர் தானும் துன்புறுவர், இன்பம் வந்துற்ற போது தானும் இன்புறுவர்.

விளக்கம்

ஒரு குளத்தில் நீர் நிறைந்திருந்த பொழுது தவளைகள் பல வந்து சேரும்.  அங்கே நீர் வற்றியவுடன் அவை யாவும் அதனை விட்டு அகன்று போகும். செல்வம் உள்ள பொழுது இல்லாத உரிமைகளை எல்லாம் எடுத்துக் கொண்டாடி எல்லாரும் வந்து ஒருவனை அடுத்து நிற்பர். அவனது செல்வம் ஒழிய நேர்ந்தால் யாவரும் ஒருங்கே ஒழிந்து போவர். கிளைஞர் மாத்திரம் பரிவுடன் பழைய உரிமையாளராய்க் கெழுமி வளமை தோய்ந்து நிற்பர். 

"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் 

உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்-அக்குளத்தில் 

கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே

ஒட்டி உறுவார் உறவு."

என்னும் ஔவையாரின் முதுரை இங்கு நினைவு கூரத்தக்கது.

நீர் உற்றபொழுது கொக்கு நாரை முதலிய பறவைகள் குளத்தில் வந்து கூடி நிற்கும்; அது அற்றபோது அவை அயலே பறந்துபோம்: குமுதம் நெய்தல் முதலிய மலர்கள் நீர் உற்ற போதும் அற்ற போதும் அலர்ந்தும் புலர்ந்தும் அங்கேயே தங்கியிருக்கும். இந்த மலர்கள் போல்பவரே நல்ல உறவினர் என ஒளவையார் இவ்வாறு சுவையாய் உணர்த்தி இருக்கின்றார். 

பற்று அற்ற நிலைக்கு நீர் அற்ற குளமும், பழமை அற்ற நிலைக்குப் பறந்துபோன பறவைகளும், கிழமை உற்ற கேண்மைக்கு மேன்மையான மலர்களும் இதில் ஒப்பாய் வந்துள்ளன. கொட்டி என்பது நீரில் நிலவும் கொடி. பழமை பாராட்டும் பண்பு கிழமையான சுற்றத்தாரிடமே வளமையாய் வலிமை வாய்ந்துள்ளது என்பதை உவமானத்தால் இது தெளிவா விளக்கியுளது. எத்தகைய நிலையிலும் மாறாமல் அன்பு புரிகிற இத்தகைய உறவினரைப் பேணி வருபவர் பெருமை உறுவர். உறவு உரமாய் வரின் அரசு உயர்வாய் வரும். 


"பற்றும் வெறுக்கை ஒழிந்துழியும் 

பழைமை எடுத்துப் பாராட்டும் 

சுற்றம்; அதனைப் பெருங்கொடையால் 

தூய மொழியால் தழுவல்உறின், 

அற்றம் அவனுக்கு ஒருகாலும் 

அணுகாது; ஆக்கம் மிகப்பெருகும்; 

முற்ற நினைக்கும் பகைவர் தொழில் 

முற்றாது; ஏம கண்டனே!"       --- விநாயக புராணம்.


பின்வரும் நாலடியார் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


"பலநாளும் பக்கத்தார் ஆயினும், நெஞ்சில்

சிலநாளும் ஒட்டாரோடு ஒட்டார்; பலநாளும்

நீத்தார் எனக் கை விடல் உண்டோ, தம் நெஞ்சத்து 

யாத்தாரோடு யாத்த தொடர்பு."


பலகாலம் நெருக்கமாக இருந்தவர்கள் ஆனாலும், உள்ளன்பு இல்லாதவர்களுடன் பெரியோர் நட்பாக இருக்கமாட்டார்கள். ஆனால், தம்மைப் பிரிந்து சென்று வெகுநாள் ஆகி இருந்தாலும், தம்மோடு ஒத்த நல்லியல்பு உடையவர் நேசத்தை விட்டுவித மாட்டார்கள்.


"கோட்டுப் பூப் போல மலர்ந்து, பின் கூம்பாது,

வேட்டதே வேட்டதாம் நட்பு ஆட்சி;- தோட்ட

கயப்பூப்போல் முன்மலர்ந்து பின் கூம்புவாரை

நயப்பாரும் நட்பாரும் இல்."

மரத்தின் உச்சியில் பூத்த மலர் ஒரு முறை மலர்ந்தால், பின் குவியாது மணம் வீசிக் கொண்டே இருக்கும். அது போலவே, விரும்பி நட்புக் கொண்டவர்கள் நட்பானது நாளும் வளர்ந்தபடியே இருக்கும். ஆனால், குளத்தில் பூத்த சிறுமலர்கள், பூத்த சமயத்தில் பார்த்தால் அழகாக இருக்கும். பிறகு போகப் போகப் பொலிவினை இழக்கும். இப்படிப்பட்ட இயல்பு உடையவர்களை எவரும் விரும்பவும் மாட்டார். நட்பாக ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்.


47. அகந்தை அழிவைத் தரும்

 

            47.  அகந்தை அழிவைத் தரும்

                                -----


"சூரபதுமன் பலமும், இராவணன் தீரமும்,

     துடுக்கான கஞ்சன்வலியும்,

துடியான இரணியன் வரப்ரசா தங்களும்,

     தொலையாத வாலி திடமும்,


பாரமிகு துரியோத னாதி நூற் றுவரது

     பராக்ரமும், மதுகைடவர்

பாரிப்பும், மாவலிதன் ஆண்மையும், சோமுகன்

     பங்கில்உறு வல்லமைகளும்,


ஏரணவு கீசகன் கனதையும், திரிபுரர்

     எண்ணமும், தக்கன் எழிலும்,

இவர்களது சம்பத்தும் நின்றவோ? அவரவர்

     இடும்பால் அழிந்த அன்றோ?


மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன்தந்த

     வரபுத்ர! வடிவேலவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மாரனைக் கண்ணால் எரித்தருள் சிவன் தந்த வரபுத்திர --- மன்மதனைத் தனது நெற்றிக் கண்ணால் எரித்து அருள் புரிந்த சிவபெருமான் அருளால் வந்தவரே!

வடிவேலவா --- கூர்மையான வேலை உடையவரே!

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

சூரபத்மன் பலமும் --- சூரபதுமனுடைய வலிமையும், 

இராவணன் தீரமும் --- இராவணனுடைய நெஞ்சுறுதியும், 

துடுக்கான கஞ்சன் வலியும் --- துடுக்குத்தனம் மிகுந்த கஞ்சனுடைய ஆற்றலும், 

துடியான இரணியன் வரப் பிரசாதங்களும் --- துடிப்புடைய இரணியன் தனது வரத்தினால் பெற்ற ஆற்றலும், 

தொலையாத வாலி திடமும் --- வாலியின் அழிவற்ற வல்லமையும், 

பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்கிரமமும் --- கூட்டமாக இருந்த துரியோதனன் முதலான கவுரவர் நூற்றுவரின் ஆற்றலும், 

மதுகைடவர் பாரிப்பும் --- மதுகைடவருடைய பெருமையும், 

மாவலி தன் ஆண்மையும் --- மாபலியின் வீரமும், 

சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் --- சோமுகனிடத்தில் இருந்த வலிமையும், 

ஏர் அணவு கீசகன் கனதையும் --- அழகு பொருந்திய கீசகனின் பெருமையும், 

திரிபுரர் எண்ணமும் --- முப்புராதிகளின் நினைவும், 

தக்கன் எழிலும் --- தக்கனுடைய அழகும், 

இவர்களது சம்பத்தும் நின்றவோ --- இவர்களுடைய செல்வமும் நிலைபெற்று இருந்தனவோ?

அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ? --- அவரவர்கள் கொண்டு இருந்த அகந்தையால் அழிந்தன அல்லவா?


46. விதிவழியே எல்லாம் ஆகும்

 

46.  தன் அளவே ஆகும் தனக்கு.

விதி வழியே எல்லாம் ஆகும்.

                        -----


"வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு

     மட்டன்றி அதிகம் ஆமோ?

வான்ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி

     வண்ணப் பருந்து ஆகுமோ?


கங்கா சலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்

     காய்நல்ல சுரை ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின்

     காணுமோ நால்நாழிதான்?


ஐங்காதம் ஓடினும் தன்பாவம் தன்னோடே

     அடையாமல் நீங்கிவிடுமோ?

ஆரிடம் சென்றாலும் வெகுதொலைவு சுற்றினும்

     அமைத்தபடி அன்றிவருமோ?


மங்காத செந்தமிழ் கொண்டுநக் கீரர்க்கு

     வந்ததுயர் தீர்த்தமுருகா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---

மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா! --- நக்கீரதேவர் பாடி அருளிய அழியாத செந்தமிழ்ப் பாடலாகிய திருமுருகாற்றுப்படையை ஏற்றுக்கொண்டு அவருக்கும், அவரோடு இருந்த மற்றவர்க்கும்  நேர இருந்த துயரத்தைத் தீர்த்து அருளிய முருகப் பெருமானே!, 

மயில் ஏறி விளையாடு குகனே ---  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே --- திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டன்றி அதிகம் ஆமோ? --- ஐம்பத்தாறு தேசங்களில் ஒன்றான  வங்காள தேசத்திற்குச் சென்றாலும்  துடைப்பமானது ஒருகாசு அளவு அல்லாமல், பெரிய விலைக்குப் போகுமோ? (அங்கேயும் துடைப்பம் இருக்குமே. இல்லாத பொருள் அல்லவே)

வான் ஏறி உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப் பருந்து ஆகுமோ? --- வானத்திலே மிக உயர்ந்த இடத்திலே பறந்து சென்றாலும் ஊர்க்குருவி அழகிய பருந்தாகுமோ? 

கங்கா சலம் தன்னில் மூழ்கினும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ? --- கங்கை நீரிலே மூழ்கி இருந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகுமோ?

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் நால் நாழி தான் காணுமோ --- நாழி என்னும் அளவை உள்ள ஒரு பாத்திரத்தைக் கடலிலே முழுக அமுக்கி அமுக்கி மொண்டாலும் அது நான்கு நாழி நீரைக் கொள்ளுமோ?

ஐங்காதம் ஓடினும் தன் வினைகள் தன்னோடே அடையாமல் நீங்கி விடுமோ? --- ஐந்து காத தூரம் சென்றாலும் ஒருவன் செய்த வினைகள் அவனைச் சேராமல் நீங்கி விடுமோ?, 

ஆர் இடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றிலும் அமைத்தபடி அன்றி வருமோ? --- யாரிடத்திலே சென்று சேர்ந்தாலும்,  நீண்ட தொலைவு சுற்றி அலைந்தாலும் நமக்கு விதிக்கப்பட்டது அல்லாமல் தான் எண்ணிய வேறு ஒன்று வருமோ?

விளக்கம் --- உலகில் உள்ள உயிர்கட்கு எப்போதும் இன்பதுன்பங்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கின்றன. சிலர் வாழ்வதும், சிலர் தாழ்வதும், சிலர் சுவர்க்கம் புகுவதும், சிலர் நரகம் புகுவதும், சிலர் உயர்குடி பிறப்பதும், சிலர் இழிந்தகுடிப் பிறப்பதும் ஏன்? உயிர்கள் தன் விருப்பப்படி செய்யுமாயின் எல்லா உயிர்களும் தனவந்தர் வீட்டில்தானே பிறக்கும்?  உயர்குடியில் தானே பிறக்கும்?

இறைவன் ஆணையின் வழி இவை நிகழ்கின்றன.  அங்ஙனமாயின், இறைவன் பட்சபாதம் உள்ளவன் ஆகின்றான்.  இறைவனுடைய அருட்குணத்திற்கு இது முரணாக அமையும் என்று தோன்றலாம். உயிர்களின் இருவினைக்கு ஏற்பவே, இறைவன் இவ்வாறு ஐந்தொழில்களையும் புரிகின்றான். அதனால் இறைவனுக்குப் பட்சபாதம் இல்லை என்று அறிக. நிமித்தகாரணன் ஆகிய இறைவனுக்கு, ஆணையே அன்றி வினையும் துணைக் காரணம் ஆகும்.

வினையின் வண்ணமே எல்லாம் நடக்கும் என்றால், இறைவன் எதற்கு? என்றும் தோன்றலாம்.  வினை சடப்பொருள் ஆதலின், தானே வந்து செய்தவனைப் பொருந்தாது.  ஆதலின், அந்தந்தக் காலத்தில், அவ்வவ் வினையை அறிந்து பொருத்துவதற்கு இறைவன் வேண்டும் என்று உணர்க.

இனி, உயிர்கள் சித்துப்பொருள் தானே? அவ் உயிர்களே அவ்வினைகளை எடுத்து நுகருமே? வினைகளை ஊட்டுவதற்கு இறைவன் எதற்கு? எனவும் தோன்றலாம். உயிர்கள் தாமே அறியா.  அறிவித்தால் மட்டுமே அறியும். ஆதலின், அறிந்து ஊட்டுவதற்கு இறைவன் இன்றியமையாதவன் ஆகின்றான்.

அப்படி ஆயின், வினையின் வழியே உயிர்கட்கு, இறைவன் சுகதுக்கங்களைத் தருகின்றான் என்றால், இறைவனுடைய சுதந்திரத்துக்கு இழுக்கு எய்துமே என்றால், எய்தாது. குடிகளுடைய குணம் குற்றங்கட்கு ஏற்ப அரசன் அருளும் தண்டமும் செய்வதனால், அரசனுடைய சுதந்திரத்திற்கு இழுக்கு இல்லை, அல்லவா?

வினை ஆதியா அநாதியா என்று ஐயம் நிகழ்வது இயல்பு. ஆதி ஆயின், இல்லது தோன்றாது என்ற சற்காரிய வாதம் பிழைபடும்.  ஆகவே, வினை அநாதியே உண்டு என்க. அது எதுபோல் எனின், நெல்லிற்கு உமியும், செம்பிற்குக் களிம்பும்போல், உயிர்கட்கு வினை தொன்மை என அறிக.

"நெல்லிற்கு உமியும், நிகழ்செம்பினில் களிம்பும்,

சொல்லில் புதிதுஅன்று, தொன்மையே, ---  வல்லி

மலகன்மம் அன்று உளவாம், வள்ளலால் பொன்வாள்

அலர்சோகம் செய்கமலத்து ஆம்."

வினையானது, ஈட்டப்படுங்கால் மந்திர முதலிய அத்துவாக்களிடமாக, மனவாக்குக் காயங்கள் என்ற மூன்று காரணங்களால் ஈட்டப்பட்டுத் தூல கன்மமாய் ஆகாமியம் எனப் பெயர் பெறும். பின்னர், பக்குவம் ஆகும் வரை புத்தி தத்துவத்தினை இடமாக மாயையில் கிடந்து, சாதி, ஆயு, போகம் என்னும் மூன்றற்கும் ஏதுவாகி, முறையே சனகம், தாரகம், போக்கியம் என்ற மூவகைத்தாய், அபூர்வம் சஞ்சிதம், புண்ணிய பாவம் என்னும் பரியாயப் பெயர் பெறும்.

    வினை பக்குவமாதல் என்பது அவ்வப் பயன்களைத் தோற்றுவித்தற்கு உரிய துணைக் கருவிகள் எல்லாவற்றோடும் கூடுதல் ஆகும். அது, பின்னர்ப் பயன்படுங்கால், ஆதிதைவிகம், ஆதிஆண்நிகம், ஆதிபௌதிகம் என்ற முத்திறத்தால் பலவகைப்பட்டு, பிராரத்தம் எனப் பெயர் பெறும். எனவே ஆகாமியம், சஞ்சிதம், பிராரத்தம் என வினை மூவுருவம் கொள்ளும்.


ஆகாமியம் - செய்யப்படுவது.

சஞ்சிதம் - பக்குவப் படாமல் இருப்பாக இருப்பது.

பிராரத்தம் - அநுபவிப்பது.


    இனி, பிராரத்தம்  ஆதிதைவிகம், ஆதிஆன்மிகம், ஆதிபௌதிகம் என்ற மூன்று வழியாக வரும் என்றோமே, அதன் விவரம் வருமாறு....

(1) ஆதி தைவிகம் --- தெய்வத்தால் வரும் இன்பதுன்பங்கள். அவை ---  கருவில் சேர்தல், பிறக்கும்போது எய்தும் இடர், நரை திரை மூப்பு முதலியன, நரகத்தில் ஆழ்தல், உலகை அரசு புரிதல் முதலிய இன்ப துன்பங்களாம்.

"கருவினில்துயர், செனிக்கும் காலைத் துயர்,மெய்

திரைநரைமூப்பில் திளைத்து, செத்து --- நரகத்தில்

ஆழும்துயர், புவியைஆள் இன்பம் ஆதிஎல்லாம்

ஊழ்உதவு தைவிகம்என்று ஓர்."


(2) ஆதி ஆன்மிகம் --- தன்னாலும், பிறராலும் வரும் இன்ப துன்பங்களாம். அவை --- மனத்துயர், பயம், சந்தேகம், கோபம்,  மனைவி மக்கள் கள்வர், பகைவர், நண்பர், விலங்கு, பேய், பாம்பு, தேள், எறும்பு, கரையான், அட்டை, நண்டு, முதலை, மீன் முதலியவைகளால் வரும் துன்ப இன்பங்களாம்.

"தன்னால் பிறரால் தனக்குவரும் தீங்குநலம்

இன்னா விலங்குஅலகை தேள்எறும்பு – செல்முதல்நீர்

அட்டை அலவன் முதலை மீன் அரவம் ஆதியின்ஆம்

கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்."


(3) ஆதிபௌதிகம் ---  மண் முதலிய பூதங்களால் வரும் இன்ப துன்பங்கள். அவை ---  குளிர்ச்சி, மழை, வெயில், கடும்காற்று, இருள், மின்னல், இடி,  தென்றல் முதலியன.

"பனியால் இடியால் படர்வாடை யினாலும்

துணிதென்றலினாம் சுகமும் --- தனைஅனைய

நீரினாம், இன்பு,இன்னலும் நெருப்பின் ஆம்துயர்இன்பு

ஓரில் பவுதிகம் ஆகும்."

இன்னும் உலகம், வைதிகம், அத்தியான்மிகம், அதிமார்க்கம், மாந்திரம் என வினை ஐவகைப்படும்.

1. உலக வினை ---  கிணறு, குளம், தண்ணீர்ப்பந்தல் முதலியன செய்தலால் உண்டாவதாய், நிவிர்த்தி கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

2. வைதிக வினை --- வேதத்துள் விதித்த அக்கினிட்டோமம் முதலிய வேள்வி முதலியன செய்வதால் உண்டாவதாய், பிரதிட்டா கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

3. அத்தியான்மிக வினை ---  வேதநெறியால் செய்யும் பூசனை துறவு முதலியவற்றால் உம்டாவதாய், வித்தியாகலையில் அடங்கிய புவன போகங்களைத் தருவது.

4. அதிமார்க்க வினை ---  இயமம் நியம் முதலிய யோகப் பயிற்சியால் உண்டாவதாய், சாந்திகலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

5. மாந்திர வினை ---  சுத்த மந்திரங்களைக் கணித்தல் முதலிய ஞானப்பயிறிச் விசேடங்களால் உண்டாவதாய், சாந்தியாதீத கலையில் அடங்கிய புவனபோகங்களைத் தருவது.

இதுகாறும் ஆராயந்தவற்றால் அறியப்படுவது, பிறவிக்கு வினை காரணம். அவற்றை உயிரானது அனுபவித்துக் கழிக்க வேண்டும். மாற்று இல்லை. அவ்வினை அற்றால் அன்றி பிறவி அறாது எனத் தெளிக.


"செங்காவி மலர்த்தடம்சூழ் தண்டலைநீள்

     நெறியே! நின் செயல் உண்டு ஆகில்

எங்கு ஆகில் என்ன? அவர் எண்ணியது எல்-

     லாம் முடியும்!, இல்லை ஆகில்,

பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்

     வெள் எலும்பாய்ப் போக ஓடி

ஐங்காதம் போனாலும் தன்பாவம்

     தன் உடனே ஆகும் தானே." --- தண்டலையார் சதகம்.

"பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்

     கேட்டாலும், பணிந்து வேத

மார்க்கமுடன் நடந்தாலும், சிறியவர்க்குப்

     பெரியவர்தம் மகிமை உண்டோ?

ஆர்க்கும் அரும் கதி உதவும் தண்டலையா

     ரே! சொன்னேன்! ஆகாயத்தில்

ஊர்க்குருவி தான் உயரப் பறந்தாலும்

     பருந்து ஆகாது உண்மை தானே." --- தண்டலையார் சதகம்.

"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்

நாழி முகவாது நால்நாழி, - தோழி!

நிதியும் கணவனும் நேர்படினும் தம்தம்

விதியின் பயனே பயன்." ---  மூதுரை

"எழுதியவாறே காண் இரங்குமட நெஞ்சே!

கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப்போய்க்

கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்,

முற்பவத்தில் செய்த வினை." ---  மூதுரை.

"வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது." --- திருக்குறள்.


63. சகுனம் - 2

 


                            63. சகுனம் - 2


"நரிமயில் பசுங்கிள்ளை கோழிகொக் கொடுகாக்கை

     நாவிசிக் சிலியோந் திதான்

  நரையான் கடுத்தவாய்ச் செம்போத் துடன்மேதி

     நாடரிய சுரபி மறையோர்


வரியுழுவை முயலிவை யனைத்தும்வலம் ஆயிடின்

     வழிப்பயணம் ஆகை நன்றாம்;

  மற்றும்இவை அன்றியே குதிரைஅனு மானித்தல்,

     வாய்ச்சொல்வா வாவென் றிடல்,


தருவளை தொனித்திடுதல், கொம்புகிடு முடியரசு

     தப்பட்டை ஒலிவல் வேட்டு

  தனிமணி முழக்கெழுதல் இவையெலாம் ஊர்வழி

     தனக்கேக நன்மை யென்பர்!


அருணகிர ணோதயத் தருணபா னுவையனைய

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

      இதன் பொருள் ---

    அருணகிரண உதயம் தருண பானுவை அனைய அண்ணலே - சிவந்த கதிர்களை உடைய காலை இளஞாயிறு போன்ற பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, 

    நரி மயில் பசுங்கிள்ளை கோழி கொக்கொடு காக்கை நாவி சிச்சிலி ஓந்திதான் - நரியும் மயிலும் பச்சைக்கிளியும் கோழியும் கொக்கும் காக்கையும் கத்தூரி மிருகமும் சிச்சிலிப் பறவையும் ஓணானும், 

    நரையான் கடுத்தவாய்ச் செம்போத்துடன் மேதி நாட அரிய சுரபி மறையோர் - வல்லூறும் விரைந்து கத்தும் செம்போத்தும் எருமையும் சிந்தித்தற்கு அருமையான பசுவும் அந்தணரும், 

    வரி உழுவை முயல்இவை அனைத்தும் - வரிப்புலியும் முயலும் (ஆகிய) இவை யாவும் 

    வலம் ஆயிடின் வழிப்பயணம் ஆகை நன்று ஆம் - வலமாக வந்தால் வழிச்செலவு நன்மை தரும், 

    மற்றும் - மேலும், 

    இவை அன்றியே - இவையல்லாமலும், 

    குதிரை அனுமானித்தல் - குதிரை கனைத்தலும், 

    வாய்ச்சொல் வாவா என்றிடல் - வாய்ச்சொல்லாக வாவா என்று (காதிற் படும்படி) கூறுதலும், 

    தருவளை தொனித்திடுதல் - கொடுக்கின்ற சங்கு ஒலித்தலும், 

    கொம்பு கிடுமுடி முரசு தப்பட்டை ஒலி - கொம்பும் கிடு முடியும் முரசும் தப்பட்டையும் ஆகிய இவற்றின் ஒலியும் 

    வல்வேட்டு தனிமணி முழக்கு எழுதல் - விரைந்து மணந்து கொண்ட ஒப்பற்ற மங்கல வாத்தியம் முழங்குதலும், 

    இவையெலாம் ஊர்வழி தனக்கு ஏக நன்மை என்பர் - இவை யாவும் ஊர்ச்செலவுக்கு நல்லது என்று அறிஞர் கூறுவர்.


62. சகுனம் - 1

 

                           62. சகுனம் - 1


"சொல்லரிய கருடன்வா னரம்அரவம் மூஞ்சிறு

     சூகரம் கீரி கலைமான்

  துய்யபா ரத்வாசம் அட்டைஎலி புன்கூகை

     சொற்பெருக மருவும் ஆந்தை


வெல்லரிய கரடிகாட் டான்பூனை புலிமேல்

     விளங்கும்இரு நா உடும்பு

  மிகவுரைசெய் இவையெலாம் வலம்இருந் திடமாகில்

     வெற்றியுண் டதிக நலம்ஆம்;


ஒல்லையின் வழிப்பயணம் ஆகுமவர் தலைதாக்கல்,

     ஒருதுடை யிருத்தல், பற்றல்,

  ஒருதும்மல், ஆணையிடல், இருமல், போ கேலென்ன

     உபசுருதி சொல்இ வையெலாம்


அல்லல்தரும் நல்லஅல என்பர்; முதி யோர்பரவும்

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

முதியோர் பரவும் அமலனே --- அறிவில் சிறந்த பெரியோர் வணங்கித் துதிக்கின்ற தூயவனே!, 

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,   சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

சொல்அரிய கருடன் --- சொல்லுதற்கு அரிய கருடன், 

வானரம் --- குரங்கு, 

அரவம் --- பாம்பு, 

மூஞ்சிறு --- மூஞ்சுறு, 

சூகரம் --- பன்றி, 

கீரி - கீரி, 

கலைமான் --- கலைமான், 

துய்ய பாரத்வாசம் --- தூய்மை பொருந்திய கரிக்குருவி என்றும், வலியன் குருவி என்றும் அழைக்கப்படுகின்ற ஆனைச் சாத்தன் என்னும் பறவை,

அட்டை --- அட்டை, 

எலி --- எலி, 

புன்கூகை --- இழிந்த கோட்டான், 

சொல்பெருக மருவும் ஆந்தை --- அதிகம் பேசப்படும் ஆந்தை, 

வெல் அரிய கரடி --- வெல்லுதற்கு அரிய கரடி, 

காட்டு ஆன் --- காட்டுப் பசு, 

பூனை --- பூனை, 

புலி --- புலி,  

மேல் விளங்கும் இரு நா உடும்பு --- மேலாக விளங்குகின்ற இரண்டு நாக்குகளை உடைய உடும்பு, 

மிக உரைசெய் இவையெலாம் --- என்று மிகுதியாகச் சொல்லப்படும் இவை யாவும், 

வலம் இருந்து இடம் ஆகில் வெற்றி உண்டு --- வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கம் சென்றால் வெற்றி உண்டாகும்.

அதிக நலம் ஆம் --- மிகுந்த நலமும் உண்டாகும், 

ஒல்லையின் வழிப்பயணம் ஆகும் அவர் தலை தாக்கல் --- விரைந்து வழிப்பயணம் செல்வோரின் தலையில் இடித்தல், 

ஒரு துடை இருத்தல் --- ஒற்றைக் காலில் நிற்றல், 

பற்றல் --- வந்து கையைப் பிடித்தல், 

ஒரு தும்மல் --- ஒற்றைத் தும்மல், 

ஆணையிடல் --- ஆணையிடுதல், 

இருமல் --- இருமுதல், 

போகேல் என்ன உப சுருதி சொல் --- போகாதே என்று காதில் விழும்படியாகக் கூறுதல்,

இவை எல்லாம் அல்லல் தரும் --- இவைகள் எல்லாம் அல்லலைத் தருபவை, 

நல்ல அல என்பர் --- நன்மையை விளைப்பன அல்ல என்று (அறிவில் சிறந்த முதியோர்) கூறுவர்.

விளக்கம் - சகுனம் என்னும் சொல்லுக்கு பறவை என்பது பொருள். பறவைகள் வலம் இருந்து இடமாதல் முதலிய நன்மை தீமைக் குறி என்று பொருள். நிமித்தம் என்றும் பொருள்படும். துர் நிமித்தம், நல்நிமித்தம் என்று சொல்லப்படும். 

உற்பாதம் என்பது விளையப் போகும் தீமைகளை அறிவிக்கும் குறி என்று சொல்லப்படும்.


"நான்" கலந்து பாடவேண்டும்.

 

"நான்" கலந்து பாட வேண்டும்

-----

தம்மைச் சார்ந்தவர்கள் இன்பம் அடைய வேண்டுமென்று பல வகையிலே ஞானிகள் உபதேசம் செய்வார்கள். "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்று நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் இதற்கு வழிகாட்டி அருளினார். குருவாக உள்ளவர்கள் தம்முடைய சீடர்களுக்கு மந்திரோபதேசம் செய்வதன் மூலம் அருள் பாலிக்கலாம். கண்களினால் அவர்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களுக்கு ஞானம் உண்டாகும்படியும் செய்யலாம். அவர்களைத் தொட்டு அருள் ஊட்டலாம். நலம் ஏற்பட வேண்டுமென்று நினைத்தும் அருளை வழங்கலாம். இவை யாவும் அவர்கள் காலத்திலேயே வாழ்ந்த மக்களுக்குத்தான் பயன்படும். இறைவனைப் பாமாலைகளால் வழிபட்டுத் தமது காலத்தில் வாழ்ந்திருந்த மக்களை நல்வழிப்படுத்தி ஈடேற்றி, எதிர்காலத்தில் தோன்றக் கூடிய மக்களுக்கும் பயன்படும் வகையில் பாமாலைகள் பலவற்றைத் தொடுத்து வைத்துச் சென்று இருக்கிறார்கள் அருளாளர்கள். பூமாலைகள் சிறிது நேரத்தில் வாடிவிடும். பாமாலைகள் என்றுமே வாடாத மாலைகள். அவற்றை "மாத்ருகா புஷ்ப மாலை" என்று சிறப்பித்துப் பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான். அவற்றின் வாயிலாக நாம் பெறும் உபதேசங்களும் அறிந்து கொள்ளும் நுட்பங்களும் பல.

உபதேசம் பெறுவதற்குத் தகுதி உள்ளவர் இன்னார் என்ற வரையறை உண்டு. எந்த உபதேசத்தைச் சொன்னாலும், இதற்கு முன் இன்ன இன்ன தெரிந்து கொண்டவன் இதற்கு அதிகாரியாவான் என்று சொல்வது பெரியவர்கள் வழக்கம். அருணகிரிநாதரும் பாமாலைகளைக் கற்றுக் கொள்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் இந்த முறையில் பாமாலையைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கிறீர்களே!" என்ற போக்கில் சொல்லி, அந்தத் தகுதி இன்னதென்று "அழித்துப் பிறக்க ஒட்டா அயில்வேலவன் கவியை அன்பால் எழுத்துப் பிழ அறக் கற்கின்றிலீர்" என்னும் அருள்வாசகத்தின் மூலம் புலப்படுத்துகிறார்.

பாமாலை சூட்டப் பெறுபவன் இறைவன். அகத்திய முனிவருக்குத் தமிழ் இலக்கணத்தைச் சொன்ன பெருமான். பார்வதி திருமணத்தின்போது எல்லா மக்களும், எல்லாத் தேவர்களும் திருக்கயிலைக்குச் சென்றார்கள். கூட்டம் அதிகமானதால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்து போயிற்று. பூமியைச் சமநிலையில் வைக்க எண்ணிய இறைவன் அகத்திய முனிவரைத் தென்திசைக்குப் போகும்படி பணித்து அருளினான்.  தமிழ் பேசவும், தமிழ் பேசுகிறவர்களின் கருத்தைப் புரிந்து கொள்ளவும் வல்லவராய் அவர் வடக்கே இருந்து தெற்கே வந்தார். இலக்கண அறிவு இல்லாவிட்டால் ஒரு மொழியிலுள்ள குறைபாடு தெரியாது. எந்த சமயத்தில் நாம் வழுக்கி விழுவோமோ தெரியாது. உடலுக்கு எலும்பு பலம் அளிப்பது போல இலக்கணம் மொழிக்குப் பலம் அளிக்கும். அத்தகைய இலக்கண அறிவை அகத்திய முனிவர் வேண்ட, அதனை அவருக்கு முருகப் பெருமான் அருளினான். சிவபெருமான் அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான். அவர் பிள்ளையாகிய முருகன் அந்த மொழியின் இலக்கணத்தை அவருக்கு அருளினான். "குறுமுனிக்கும் தமிழ் உரைக்கும் குமர! முத்தம் தருகவே" என்பது பிள்ளைத்தமிழ். "சிவனை நிகர் பொதியவரை முனிவன் அகம் மகிழ, இரு செவி குளிர இனிய தமிழ் பகர்வோனே" என்று பாடி உள்ளார் அருணகிரிநாதப் பெருமான்.

"ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பேதையில் பேதையர் இல்" என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஓதிய நூல்களை உணரவேண்டும். உணராமலேயே ஓதிக் கொண்டு இருப்பதில் பயனில்லை. உணர்ந்ததைப் பிறருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். சொல்லுபவர் மனம் அடங்கியவராக இருக்க வேண்டும். “சினம் அடங்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் அடங்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே” என்று, மனம் செம்மை பெறாதவர்கள் பேசுவதால் என்ன பயன் என்று வினவுகிறார் தாயுமான அடிகளார். அந்த வகையில், முருகப்பெருமானிடம் இலக்கணத்தைக் கற்றுக் கொண்டு தமிழ் மொழியிலே பெரிய புலவரான அகத்தியர் அழகிய இலக்கணம் ஒன்றைத் தமிழில் வடித்துத் தந்தார். அதற்கு அகத்தியம் என்று பெயர்.

அகத்தியருக்குத் தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொடுத்த முருகப் பெருமானைப் பற்றிய தமிழ்ப் பாட்டைப் பாடும்போது பிழையோடு பாடலாமா? அருணகிரிநாதப் பெருமான் தமிழிலே வல்லவர். "அருணதள பாதபத்மம் அது நிதமுமே துதிக்க அரிய தமிழ்தான் அளித்த மயில்வீரா" என்று தமக்கு அருள் புரிந்த முருகனைப் போற்றி உள்ளார். அந்த முருகன் அகத்திய முனிவருக்கே இலக்கணம் கற்றுக் கொடுத்தவன். அத்தகைய முருகன் மீது பாடப் பெற்றப் பாட்டைப் பிழையின்றிப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

"அழித்துப் பிறக்க ஒட்டாஅயில் வேலன் கவியை, அன்பால்

எழுத்துப் பிழைஅறக் கற்கின்றிலீர்! எரிமூண்டது என்ன

விழித்துப் புகைஎழப் பொங்குவெங் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே?"

என்று அருணகிரிநாதர் பாடி உள்ள கந்தர் அலங்காரப் பாடலைக் கருத்து ஊன்றி ஓதிச் சிந்திக்க வேண்டும். "பழுது அற ஓதிக் கடந்து, பவ வினை தீரத் துறந்து" என்றும் திருப்புகழில் அருணகிரிநாதர் அறிவுறுத்துகின்றார்.

அஞ்ஞானம் அல்லது அவித்தையினால் நாம் உலகத்தில் பிறக்கின்றோம். அவித்தை அழிந்தால், அறியாமை ஒழிந்தால், ஞானம் பிறந்து, பிறப்பு ஒழியும். ஞானமே முருகன் திருக்கரத்தில் வேலாக அமைந்து இருக்கிறது. அந்த ஞானவேலினால் அஞ்ஞானம் தொலையும்; அதனால் பிறவி போகும். "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்பது கந்தர் அனுபூதி. "வேலுண்டு வினை இல்லை" என்பது ஆத்த வாக்கியம். "எனது தீவினை எல்லாம் மடிய நீடுதனி வேல்விடு மடங்கல் வேலா?" என்கிறார் பழனித் திருப்புகழில். மடங்கல் என்பதை, மடம்+கல் என்று பிரித்துப் பொருள் கொள்வோமானால், (மடம்-அறியாமை; கல்-தோண்டி எடுத்து நீக்குகின்ற) அறியாமையை நீக்குகின்ற  வேலை உடையவரே என்று பொருள்படும். “மடங்கல் வேலா” என்பதற்கு சிங்கத்திற்கு நிகரான வேலாயுதரே என்றும் பொருள் கூறலாம்.

கற்பது எப்படி என்று சற்று சிந்திக்க வேண்டும். ஒரு முறை படிப்பது, பலமுறை படித்து மனனம் பண்ணுவது, பொருளைத் தெரிந்து கொள்வது முதலாகக் கற்பதில் பல படிகள் உண்டு. கல்வி அனுபவமாக மாறும் போதுதான் அது முற்றுப் பெறும். உண்மையான படிப்பு, படித்த உண்மையைத் தெளிந்து அடங்கும்போது தான் நிறைவேறும். இறைவனுடைய பொருள்சேர் புகழைக் கற்றுக் கேட்டு உணர்ந்து, அதனால் இன்பத்தை அனுபவிப்பது கல்வியால் ஆய பயன். அந்த அனுபவ நிலை வந்துவிட்டால் கல்வி நிறைவை அடைந்துவிட்டதாகக் கொள்ளலாம்.

பழங்காலத்தில் சனகாதியர் என்று நான்கு ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் கல்லாதது, கேளாதது ஒன்றுமே இல்லை. நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள்  முதலாக அனைத்தையும் கற்றவர்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு ஐயம் நீங்கினபாடில்லை. அனுபவ நிறைவு உண்டாகவில்லை. ஐயத்தைத் தெளிவிக்க வேண்டும் என்று கற்றவர்களை நாடிச் சென்றால், அவர்கள் எல்லாம் தாம் கற்றதையே விரித்துக் கூறிக் கொண்டு இருப்பார்கள். அறிவு நிறையப் பெற்றவர்களால் மட்டுமே ஐயத்தை நீக்கித் தெளிவு உண்டாக்க முடியும். நிறை அறிவு அல்லது பரிபூரண அறிவு வடிவாக உள்ளவன் இறைவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி என்று உன் அருண சரணாரவிந்தம் என்று பணிவேனோ" என்று பாடுகிறார் அருணை அடிகள்.  முருகப் பெருமானை  "முதுஞான சொருபகிரி" என்கிறார். ஞானம் - அறிவு. அறிவு சிறிது சிறிதாக நமக்கு வளர்ச்சி உறுகின்றது. இறைவனிடம் உள்ளது முற்றறிவு, பேரறிவு. தானே எல்லாவற்றையும் அறிவது முழுஞானம். பழுத்தஞானம். அந்த ஞானமே இறைவனுக்கு வடிவம். நம்மைப் போன்று, ஏழு தாதுக்களால் ஆன உடம்பு இறைவனுக்கு இல்லை.

"ஞானந்தான் உருவாகிய நாயகன் இயல்பை

யானும் நீயுமாய் இசைத்தும் என்றால் அஃது எளிதோ?

மோனம் தீர்கலா முனிவரும் காண்கிலர், முழுவதும்

தானும் காண்கிலன் இன்னமும் தன் பெரும் தன்மை".   --- கந்தபுராணம்.


அறிவே சொரூபமாகிய ஆண்டவனை அறிவினாலேயே தான் அறியவும் அடையவும் முடியும்.

"ஞானமே வடிவாய்த் தேடுவார் தேடும்

      நாட்டமே! நாட்டத்துள் நிறைந்த

வானமே! எனக்கு வந்துவந்து ஓங்கும்

      மார்க்கமே! மருளர்தாம் அறியா

மோனமே! முதலே! முத்திநல் வித்தே!

      முடிவிலா இன்பமே! செய்யும்

தானமே! தவமே! நின்னைநான் நினைந்தேன்,

      தமியனேன் தனை மறப்பதற்கே."        --- தாயுமானார்.

சனகாதியர் அறிவு வடிவாகிய, ஞானமே வடிவாகிய இறைவனைச் சரண் அடைந்தார்கள்.  கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து அவர்களுடைய சந்தேகத்தைச் சின்முத்திரையினால் விளக்கினான் இறைவன். பேசாத பேச்சினாலே அந்த முனிவர்களுடைய சந்தேகம் தீர்ந்தது. வாக்குக்குள் அகப்பட்ட எல்லாவற்றையும் கல்வி கேளிவியால் உணர்ந்திருந்த அந்த நால்வரும், வாக்கு இறந்த மோன உபதேசத்தால் தெளிவு பெற்றார்கள்.

“கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறை 

ஆறங்கம் முதல் கற்ற கேள்வி

வல்லார்கள் நால்வருக்கும் வாக்ககு இறந்த 

பூரணமாய் மறைக்கு அப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய் இருந்த த(ன்)னை 

இருந்தபடி இருந்து காட்டிச்

சொல்லாமல் சொன்னவரை நினையாமல் 

நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்"

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் பாடுகிறார்.

கேள்வி எப்பொழுது முடிவு பெறும்? கேளாத நிலையில் தான் முடிவு பெறும். வாக்கு எப்பொழுது முடிவு பெறும்? வாக்கு இல்லாத இடத்திலேதான் முடிவு பெறும். ஆகவே அந்த நிலையை அடைகின்ற வரையிலும் நாம் கற்கின்ற கல்வி எல்லாம் முடிவு பெறவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இறைவன், கல்வியினால் அறிந்துகொள்ள முடியாத பொருள். அறிந்தேன் என்று கூறிக் கொள்பவர்களாலும் அறியப்படாத பொருள். 'அறியவில்லையே, அறியவில்லையே' என்று ஏங்கி அவனை அறிய வேண்டுமென்ற ஆர்வத்தோடு அலைந்து கொண்டு இருக்கிறவர்களுடைய அறிவுக்குப் புலனாகின்ற பொருள். எவன் எல்லாவற்றையும் நன்றாகப் படித்து விட்டேன் என்று சொல்லுகிறானோ அவன்தான் உண்மைப் பொருளை அறியாதவன். அறிந்தபோது அனுபவம் தோற்றி, மோனம் தலைப்படும். "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்" என்றார் மணிவாசகப் பெருமான். "கற்ற கலையால் நிலைதான் காணுமோ? காண்பது எல்லாம் அற்ற இடத்தே வெளி ஆம் அன்றோ பராபரமே" என்கிறார் தாயுமான அடிகளார். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்கிறார் மணிவாசகப் பெருமான். எனவே, கற்பது எப்படி என்று இப்போது விளங்கும்.

இறைவன் அருட்புகழை நூல்களின் வாயிலாகக் கற்றதுமே பாட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். நாம் பாடினால் அவ்வளவாக இனிக்கிறது இல்லை. ஆனால் இறைவனைப் பாடினால் இனிக்கிறது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பாடுகின்ற பாடலின் பொருளை உணர்ந்து, அதன் கருத்தாக உள்ள இறைவன் நமது கருத்தோடு இணைந்து நிற்கும்படி நாமும் பாடினால் அப்போது நமக்கும் இனிக்கும். அவர்கள் சொன்னது உண்மை என்று விளங்கும்.

மணிவாசகர் பாடி அருளிய திருவாசகப் பாடல்களை பலரும் பாடிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்றும் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்களில் பலரும் உருகித்தான் பாடினார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விதவிதமான மெட்டுகளில் பாட வேண்டும் என்ற முனைப்பு இருப்பதால், பாடலின் பொருள் உள்ளத்தில் விளங்குவது இல்லை. திருவாசகம் திருவாசகமாக இருக்கின்றது. பாடுபவர் பாடுபவராக இருக்கின்றார். பாடுபவர் திருவாசகத்தோடு ஒன்றவில்லை, கலக்கவில்லை.

  வள்ளல்பெருமான் திருவாசகத்தை அனுபவித்தார். திருவாசகம் அவருக்கு இனித்தது, உவட்டாமல் இனித்தது. நான் பாடுகின்றேன் என்ற எண்ணம் இல்லாமல், பாடலின் பொருளிலே உள்ளம் தோய்ந்ததால் இனித்தது என்கிறார்.

"வான் கலந்த மாணிக்க வாசக! நின் வாசகத்தை

நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே

தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவை கலந்துஎன்

ஊன்கலந்து, உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே"

அவருக்கு மட்டும் இனிக்கின்றது திருவாசகம்.  நமக்கு அப்படி இனிக்காமல் போவது ஏன்?

நான் அன்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றேன். அவர்கள் எனக்குக் குடிக்கக் காபி தந்தார்கள். அதைக் கொஞ்சம் குடித்தபோது இனிப்புத் தெரியவில்லை. எனது முகக் குறிப்பை அறிந்து கொண்ட அன்பர், “சர்க்கரை அடியில் இருக்கும். கலந்திருக்காது.  கலந்து குடியுங்கள்" என்றார். காபியை இன்னொரு குவளைக்கு மாற்றியபோது, அடியில் சர்க்கரை இருப்பது தெரிந்தது. கலக்கினேன். சர்க்கரை தன் உருவம் தோற்றாமல் பாலிலே கலந்துவிட்டபோது காபி இனித்தது. சர்க்கரை வேறு, காபி வேறாக இருந்தால் இனிக்காது. 'நான் பாடுகின்றேன்' என்ற முனைப்பு இல்லாமல், பாடலின் பொருளோடு கலந்து யார் பாடுகிறார்களோ அவர்களுக்கு பாட்டு இனிக்கும். "நான் கலந்து பாடுங்கால்” என்று வள்ளல்பெருமான் சொல்வதை ஊன்றிக் கவனிக்க வேண்டும்.

மனிதனுக்கு மரணத்தைவிட மிகத் துன்பமானது எதுவும் இல்லை. "சாதலின் இன்னாதது இல்லை" என்று திருவள்ளுவ நாயனார் பேசுகிறார். சாகிறவன் மரணத் தருவாயில் எப்படித் துன்பப்படுவானோ நமக்குத் தெரியாது. செத்தவர்கள் யாரும் தாங்கள் பட்ட வேதனையைத் திரும்பி வந்து சொன்னது இல்லை. ஆனால் சாகும் தறுவாயில் இருக்கிறவன் படுகிற பாட்டைக் கண்ணால் பார்க்கிறவர்களுக்கு மரண அவத்தை எவ்வளவு கடுமையானது என்று ஒரளவு ஊகிக்க முடியும். இறக்கும் நிலையில் இருப்பவன் வாயில் நுரை வருகின்றது. கண் பிதுங்குகிறது. நாக்கு வெளியே தள்ளுகிறது. காது கேளாமல் போய் விடுகிறது. கழுத்திலே கயிற்றைப் போட்டு முறுக்கினால் அப்படித்தான் நுரை தள்ளும் - கண் பிதுங்கும். மரண வேதனையில் தோற்றும் அறிகுறிகளும் கழுத்தில் கயிற்றை இறுக்கி முறுக்கினால் உண்டாகும் அறிகுறிகளும் ஒரே மாதிரியானவை.

தெரியாத பொருளையும், நுட்பமான பொருளையும் நாம் உணர்ந்து கொள்ளும்படி பருப்பொருளாகச் சொல்வது பெரியவர்கள் வழக்கம். மரணத்தை விளைவிக்கிறவன் இயமன் என்று சொல்வது மரபு. அவனுக்குக் கூற்றுவன் என்றும் ஒரு பெயர் உண்டு. கூறு போடுதல் என்றால் பிரித்து வைத்தல் என்று பொருள்.  உடம்பிலிருந்து உயிர் போகும் நேரம் வரும்போது, அது தானாகப் போகாது. உடம்பில் இருந்து கூறுபடுத்திக் கொண்டு போவது இயமனுக்கு விதிக்கப்பட்ட தொழில். இயமன் தனக்கு விதிக்கப்பட்ட தொழிலைச் செய்கிறான். அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். ஆனால், பெரியவர்கள் அவனைத் தருமராஜன் என்று சொல்வார்கள். அவர்கள் மரணத்தை வரவேற்கிறவர்கள். உடம்பினின்றும் உயிரைப் பிரிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றவன். ஆதலால் தருமராஜா என்கிறார்கள். நாமோ மரணத்தைக் கண்டு பயப்படுகிறோம். அதனால் அவனை வைகிறோம்.

இயமன் எருமைக் கடாவின் மீது ஏறி வருவான். அவனுக்குக் கோரப் பற்கள் இருக்கும். அவன் பார்க்கும் போதே கண்கள் நெருப்புக்  கொப்புளிக்கும் - புகைவிடும். அவன் நம் கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கப் பாசக் கயிற்றைக் கையில் வைத்திருக்கிறான் என்றெல்லாம் சொல்லும்போதே நமது உள்ளத்தில் பயம் உண்டாகிறது. மரணம் பயம் உடையது என்று எண்ணுகிற நமக்குக் இயமனும் அச்சம் தரும் கோலத்துடன் இருக்கிறான்.

"தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்பது சுந்தரர் தேவாரம். அப்படி இருக்க மரணத்தைக் கண்டு ஏன் பயப்பட வேண்டும்? மரணத்தை வரவேற்கத் தானே வேண்டும்  என்று கூறலாம். மரணத்தைப் பற்றிய பயன் உண்டானால்தான் அதில் இருந்து விடுதலை பெறவேண்டும் என்ற ஆசை தோன்றும். மரணம் இல்லாப் பெருவாழ்வை அருள்கின்ற இறைவனிடத்தில் பத்தி உண்டாகும். காலனால் உண்டாகும் பயத்தை எடுத்துச் சொல்லி, அந்தப் பயத்தைப் போக்குகின்ற  இறைவனிடத்தில் பத்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் பெரியோர்கள். பத்தியை மிகுவிப்பவை அருளாளர்கள் பாடிய அருட்பாடல்கள்.

பத்திச் சுவை ததும்ப அருளாளர்கள் பாடி வைத்துச் சென்ற அருட்பாடல்களை அவற்றின் பொருளை உணர்ந்து ஓதி வழிபடுதல் வேண்டும். வித்தையைக் காட்டுவது கூடாது. 'நான் பாடுகின்றேன்' என்பதை மறந்து, பாடலோடு ஒன்றிப் பாடுதல் வேண்டும். 'நான்' என்பது தோன்றக் கூடாது. அது பாடலின் பொருளோடு கலந்துவிட வேண்டும். "நான் கலந்து பாடுங்கால்" என்று வள்ளல்பெருமான் அருளியதைச் சிந்திக்கவேண்டும். பொருள் உணர்ந்து ஓதி நாம் உருகுவதோடு கேட்பவர்களையும் உருகச் செய்தல் வேண்டும். "படித்தாலும், படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும், பரிந்து உள் உணர்ந்தாலும் ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும் இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே" என்கிறார் வள்ளல்பெருமான்.

எனவே, எழுத்துப் பிழை இன்றி, பாடலின் பொருளை உணர்ந்து ஓதி நலம் பெறுதல் வேண்டும். பிறரையும் நலம் பெறுவித்தல் வேண்டும். "சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர்" என்பது மணிவாசகம். பொருள் உணர்ந்து ஓதி, அருள்நலத்தைப் பெறுவோம்.

நாட்டின் சிறப்பு

 

நாட்டின் சிறப்பு.

----

"தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச்

செல்வரும் சேர்வது நாடு".

இத் திருக்குறளின் வழி, ஒரு நாடு என்பது எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும் என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். 

நுகர்வுக்குரிய குறையாத விளைபொருள்களும், தகுதி உடைய சான்றோரும், குறைவில்லாத செல்வம் படைத்தவர்களும் ஒருங்கு சேர்ந்து இருப்பது நாடு ஆகும். கேடு இல்லாத செல்வம் என்றால், வழங்க வழங்கக் குறையாத செல்வம் என்று பொருள். "கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடு" என்று பிறிதொரு திருக்குறளில் நாயனார் காட்டினார். மாடு என்றால், செல்வம் என்று பொருள். மற்றைய பொருட்செல்வமோ கீழ்மக்களிடத்தும் உள்ளது என்பதைக் காட்ட, "பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள" என்றார். "பூரியார்" என்றது அறிவு ஒழுக்கங்களால் மேன்மை பெறாதவர் என்று பொருள்.

"வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

சோழவளநாடு சோறு உடைத்து; --- பூழியர்கோன்

தென்னாடு முத்து உடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சன்றோர் உடைத்து".

சேர, சோழ, பாண்டிய மற்றும் தொண்டை நாடுகளின் சிறப்புக் குறித்து, ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது. சேரநாடு யானைகள் மிகுந்து இருப்பது. மேன்மை உடைய சோழவளநாடு நெல்வளத்தை உடையது. பாண்டியனது தென்னாடு முத்து விளையும் சிறப்பை உடையது. நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டு உள்ள தொண்டை நாடு சான்றோரை உடையது என்பது இப் பாடலின் வெளிப்படையான பொருள்.

ஔவைப் பிராட்டி, நம்மை உய்த்து உணரச் செய்த பொருள் ஒன்று இப் பாட்டில் உள்ளது. தொட்ணை நாட்டில் வாழும் சான்றோர்களைக் குறித்துப் பாடிய ஔவையார், மற்ற நாடுகளில் உள்ள விளைபொருள்கைக் குறித்துப் பாடினார் என்பது ஏற்புடைதாக இல்லை. "தொண்டை நாடு சான்றோர்களை உடையது" என்று வெளிப்படையாகச் சொன்னதை வைத்து,  மற்றதை உய்த்து உணரச் செய்தார். தொண்டை வளநாட்டின் அருமை பெருமைகளைப் பலவாறாகப் பாடிய தெய்வச் சேக்கிழார் பெருமான், தொண்டை நாட்டின் பெருமை சொல்லளவில் அடங்காது என்பதால், "தீய என்பன கனவிலும் நினையாச் சிந்தைத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டு இயல்பு சொல் வரைத்தோ?" என்று முடித்தார். விளக்கத்தை, பெரியபுராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் வரலாற்றில் காண்க.

மலைநாடு என்பது சேரநாடு எனப்படும். இப்போதைய கேரளம் இது. வேழம் உடைத்து. வேழம் என்றால் யானை மட்டும் அல்ல, கரும்பு என்றும், இசை என்றும் பொருள் உண்டு. இனிமையான மக்களை உடையது சேரநாடு. நடுநாட்டில் அவதரித்து, சோழ நாட்டுத் திருத்தலமாகிய திருவாரூரில் வாழ்ந்திருந்த சுந்தரமூர்த்தி நாயனார், சேரநாட்டில் அவதரித்த, சேரமான் பெருமாள் நாயானர் என்று போற்றப்பெறும் பெருமாக்கோதையார் என்பவருக்கு இனிய நண்பராக இருந்தார். 

மேன்மை பொருந்திய சோழநாடு சோறு உடைத்து. "அன்னமய கோசம்" என்னும் தூல உடம்பைப் பெற்றுள்ள மக்களுக்கு, சோறு என்றவுடன், இந்த உடம்பு வளரத் துணைபுரியும் சோறு நினைவுக்கு வருவது இயல்பு.. ஆனால் அந்தச் சோறு, உடம்பு வளரத் துணை புரிவதுடன், உயிர் உணர்வும் வரளத் துணைபுரிவது என்பதுதான் உண்மை. சோழநாட்டில் நெல் நிறைய விளைவதால், சோறு உடையது என்பது அல்லாமல், அதற்கு ஒரு உள்ளுறை பொருளும் உள்ளது என்று அறிதல் வேண்டும். "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது மணிமேகலைக் காப்பியம். உண்டி என்றால் உணவு என்று பொருள். உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ இயலாது. உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உணவு. மேலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லாத நாடு, பொருளியல் வளம்பெற்ற நாடாகக் கருத இயலாது. உணவுப் பற்றாக் குறையே, நாட்டின் அமைதி இன்மைக்கும், சமூக விரோதச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம். இது குறித்தே சோழநாட்டின் பெருமையைப் பின்வருமாறு கூறுகிறது "சோழமண்டல சதகம்" என்னும் நூல்.

"வேழம் உடைத்து மலைநாடு

மிகுமுத்து உடைத்து தென்னாடு;

தாழ்வில் தொண்டை வளநாடு

சான்றோர் உடைத்து என்று உரைத்தது அல்லால்

சோழன் புவிசோறு உடைத்து என்னும்

     துதியால் எவர்க்கும் உயிர்கொடுத்து

வாழும் பெருமைத் திருநாடு

      வளம்சேர் சோழ மண்டலமே."   --- சோழமண்டல சதகம்.

மலைநாடாகிய சேரநாடு யானைகளை உடையது. தென்னாடாகிய பாண்டி நாடு முத்து உடையது. தொண்டை நாடு சான்றோர் உடையது. சோழ வளநாடு சோறு உடையது. சோறு உயிர் கொடுப்பதால் எல்லாருக்கும் உயிர் கொடுத்து வாஅழும் பெருமையை உடையது சோழநாடு என்கிறது இப்பாடல்.

"சோறு" என்ற சொல்லுக்கு, "வீட்டின்பம்", "மோட்சம்" "முத்தி" என்றும் பொருள் உண்டு. "பாதகமே சோறு பற்றினவா தோள்நோக்கம்" என்பது மணிவாசகம். சோழநாட்டில்தான் சிவத் தலங்கள்,  முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன. சைவத்தின் இராஜதானியான திருவாரூரும் உள்ளது. அங்கே கமலாலயம் உள்ளது. கமல+ஆலயம். ஆன்மாக்களின் இதய கமலத்தில் அஜபா நடனம் புரிபவர் தியாகராஜர். சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் திருவாரூருக்கு வா என்று அழைத்து, பரவை நாச்சியாரை மணம் முடித்தான் இறைவன். பரவை நாச்சியார் கொண்ட ஊடலை மாற்ற,  இறைவன் இருமுறை தூதனாக திருவாரூர்த் திருவீதிகளில் நடந்ததால், அன்றைய இரவில் திருவாரூர் வீதிகள் சிவலோகமாக விளங்கின என்பார் தெய்வச் சேக்கிழார் பெருமான். வேதநெறிகளின் உண்மைப் பொருளின் படி வாழ்ந்து காட்டிய மனுநீதிச் சோழன் அரசு புரிந்தது திருவாரூரைத் தலைநகராக் கொண்டுதான். அப்பருக்கு திருக்கயிலைக் காட்சி கிட்டிய திருவையாறு என்னும் திருத்தலமும் இந்த நாட்டில் உள்ளது. சைவமுதல்வராகிய திருஞானசம்பந்தர் அவதரித்த சீகாழி உள்ளது. பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274-ல், 190 திருத்தலங்கள் சோழநாட்டில்தான் உள்ளன. பெருஞ்சிறப்பாக, சைவர்களுக்குக் கோயில் எனப்படும் "சிதம்பரம்" உள்ளது. வைணவர்களுக்குக் கோயில் எனப்படும் "திருவரங்கம்" உள்ளது. இன்னும் சொல்லிக் கோண்டே போகலாம். 

சோறு என்னும் சொல்லுக்கு, "அன்னம்" என்று வெளிப்படையாக ஒரு பொருள் உள்ளது. சோறு என்னும் சொல்லுக்கு, "வீட்டின்பம்" "மோட்சம்" என்றும் பொருள் உள்ளது என்று மேலே குறித்தேன். "அமுதம்" என்றும் ஒரு பொருள் உள்ளது. சோறு இடுவதை, "அமுது படைத்தல்" என்றுதான் வழங்குகின்றன நமது அருள்நூல்கள். அடியார்களுக்கு அமுது படைத்தலை, "அன்னம் பாலிப்பு" என்று உயர்வாகச் சொல்லுவர். விட்டின்பத்தை அருளுகின்ற இறைவனை "அமுதே, அமுதமே" என்றும் போற்றுதல் காண்க.

"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என்று பாடினார். "தில்லையைத் தரிசிக்க மோட்சம்" என்னும் வழக்குச் சொல் இதற்குச் சான்று. "பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம்" என்னும் திருவாசகச் சொற்றொடரில், "சோறு" என்னும் சொல், "விட்டின்பம்" அல்லது "மோட்சம்" என்பதையே பொருளாக உடையது. 

தில்லையை வணங்க முத்தி. திருவாரூரில் பிறக்க முத்தி. சோழ நாட்டின் பெருமைக்கு இன்னும் என்ன வேண்டும்?. இத் தகைய சோழநாட்டில் வாழ்பவருக்கு வீட்டின்பம் அல்லது மோட்சம் உறுதி என்பதால், "சோழநாடு சோறு உடைத்து" எனப்பட்டது.

"பூழியர் கோன்" என்பது பாண்டிய மன்னனைக் குறிக்கும். தென்+நாடு = தென்னாடு. "தென்" என்றால் தெற்குத் திசை என்று பொதுவாகச் சொல்லுவர். அது பொருந்துமாயினும், அழகு அல்லது ஞானம் என்று பொருள்தான் சிறப்புடையது. ஞானம் விளைகின்ற நாடு பாண்டி நாடு. பாண்டி நாடு முத்து உடைத்து. பாண்டிய நாட்டின் ஒரு பகுதியான தூத்துக்குடியில் முத்துக் குளித்தல் இன்றும் நடைபெறுவதை அறிவோம். முத்து என்னும் சொல்லுக்கு, "வெளிப்படுவது" "விடுபடுவது" என்றும் பொருள் உண்டு. சிப்பியில் இருந்து வெளிப்படுவது முத்து எனப்பட்டது. 

"முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள். பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும். வாயிதழில் இருந்து அன்பின் வெளிப்பாடாக ஓசையுடன் வருவது "முத்தம்" எனப்படும். "முத்து" என்னும் சொல்லுக்கு, அழகு, அன்பு, கண்ணீர் என்றும் பொருள் உண்டு.

சிப்பியில் இருந்து விடுபட்டு வருகின்ற, வெளிப்படுகின்ற மணிக்கு "முத்து" என்று பெயர். உடல் சூட்டை வெளியேற்றுவது. கறையில்லாத மழைநீர்த் துளியானது, ஆவணிச் சுவாதியில், சிப்பியின் வயிற்றில் புகுந்து, கட்டித் தன்மையுடன் முத்தாக வெளிவரும். நவமணிகளில் மற்ற மணிகளை அணிவதில் குற்றம் உண்டாதலும் உண்டு. ஆனால், முத்து எல்லோரும் அணியும் அற்புத நலம் வாய்ந்தது.

கறையற்ற தெய்வநலம் பொருந்திய திருஞானசம்பந்தப் பெருமானுக்கு, இறைவன் முத்துப் பந்தரும், முத்துச் சிவிகையும், முத்துக் குடையும் அளித்த அருள்நலத்தை எண்ணிப் பார்த்தால் முத்தின் நலமும், சிறப்பும் விளங்கும்.

பிற மணிகள் பட்டை தீட்டினால் அன்றி ஒளி விடா. முத்து இயல்பாகவே ஒளி விடும். பட்டை தீட்ட வேண்டுவது இல்லை. முத்து நவமணிகளுள் சிறந்தது. முத்தினை உடம்பில் அணிந்து கொள்வதால் நன்மைகள் பல உண்டு. 

பலவிதமான முத்துக்களால் ஆன மாலைகளை அணிந்து கொண்டு, முருகப் பெருமான், தனது தேவிமார்களோடும், தனது அடியார்களோடும் எழுந்தருளி வந்து அருள் புரியவேண்டும் என்று அருணகிரிநாதப் பெருமான், ஒரு திருப்புகழ்ப் பாடலில் வேண்டி உள்ளார். இதனால் முத்தின் சிறப்பு விளங்கும்.

    

"கழைமுத்து மாலை, புயல்முத்து மாலை,

     கரிமுத்து மாலை, ...... மலைமேவும்

கடிமுத்து மாலை, வளைமுத்து மாலை,

     கடல்முத்து மாலை, ...... அரவு ஈனும்


அழல்முத்து மாலை, இவைமுற்றும் மார்பின்

     அடைவு ஒத்து உலாவ, ...... அடியேன்முன்,

அடர் பச்சை மாவில், அருளில் பெணோடும்,

     அடிமைக் குழாமொடு ...... அருள்வாயே."

இதன் பதவுரை ---

கழை முத்து மாலை --- கரும்பு தரும் முத்தால் ஆன மாலை, புயல் முத்து மாலை --- மேகம் தரும் மழைத் துளிகளால் ஆன முத்து மாலை, கரி முத்து மாலை --- யானையின் தந்தத்தில் பிறந்த முத்தால் ஆன மாலை, மலை மேவும் கடிமுத்து மாலை --- மலையில் உள்ள மூங்கில்களில் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை, வளை முத்து மாலை --- சங்கிலிருந்து கிடைக்கும் முத்தால் ஆன மாலை, கடல் முத்து மாலை --- கடலில் பெறப்படும் சிப்பியின் முத்தால் ஆன மாலை, அரவு ஈனும் அழல் முத்து மாலை --- பாம்பு தரும் ஒளியுள்ள முத்தால் ஆன மாலை, இவை முற்றும் மார்பின் அடைவு ஒத்து உலாவ --- ஆக, எல்லா மாலைகளும் திருமார்பிலே முறையாகப் புரண்டு அசைய, அடியேன் முன் ---  அடியேனின் எதிரே  அடர் பச்சை மாவில் --- வலிமை மிக்க பச்சை நிறபுடைய குதிரை போன்ற மயிலில் அருள் இல் பெணோடும் --- அருளையே குடியாகக் கொண்ட வள்ளியம்மையாருடனும், தேவயானை அம்மையாருடனும், அடிமைக் குழாமொடு அருள்வாயே --- அடியார் திருக் கூட்டத்துடனும் வந்து அருள் புரிவாயாக

முருகவேள் உமைக்கும் ஒரு முத்தாய் முளைத்த முத்துக்குமாரசுவாமி. ஆதலின், இத்தனை விதமான முத்து மாலைகளுடன், தனியாக வராமல், தனது தேவிமார்களுடனும், தன்னை வழிபடும் அடியார் திருக்கூட்டத்துடனும் எழுந்தருளி வரவேண்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான். உமாதேவியார் திருவுள்ளம் மகிழ்ந்து முருகப் பெருமானின் திருமேனி முழுதும் முத்தங்களைப் பொழிகின்றார். அந்த அன்பு முத்தங்களால் அகம் மகிழ்ந்த திருத்தணிகைப் பெருமான், தனக்கும் முத்தம் (முத்தி) தந்து அருளவேண்டும் என்பதாக, திருத்தணிகை முருகன் பிள்ளைத் தமிழில் ஒரு பாடல் பின்வருமாறு அமைந்துள்ளது.


"கஞ்ச முகத்தில் முழுமுத்தம்,

கண்ணில் ப(ன்)னிரண்டு உயர் முத்தம்,

கன்னத்தினில் ஆறு இருமுத்தம்,

கனிவாயினில் மூவிரு முத்தம்,


அஞ்சல் கரத்து ஆறு இரு முத்தம்,

அகன்ற பார்பில் ஓர் முத்தம்,

அம்பொன் புயத்து ஆறு இரு முத்தம்,

அழகுஆர் உந்திக்கு ஒரு முத்தம்,


தஞ்சத்து அருள் சேவடி மலரில்

தகவு ஆர் இரண்டு முத்தம் எனத்

தழுவிக் கவுரி அளித்து மகிழ்

தனயா! எனை ஆள் இனியோனே!


செஞ்சல் குறமின் முத்து உகந்த

சேயே! முத்தம் தருகவே!

தெய்வத் தணிகை மலைவாழும்

தேவே! முத்தம் தருகவே."

எல்லாவிதமான முத்துக்களுக்கும் விலை உண்டு. ஆனால், முருகப் பெருமான் தந்து அருளுகின்ற முத்தத்திற்கு (முத்திக்கு) விலைமதிப்பு இல்லை. ஒப்பற்றதும் விலைமதிப்பு அற்றதும் ஆனதொரு முத்தத்தை முருகப் பெருமான் தனக்குத் தந்து அருளவேண்டும் என்பதாக, திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழில் அமைந்துள்ளது ஒரு பாடல்.


"கத்தும் தரங்கம் எடுத்து எறியக்

கடுஞ்சூல் உளைந்து, வலம்புரிகள்

கரையில் தவழ்ந்து வாலுகத்தில்

கான்ற மணிக்கு விலை உண்டு;


தத்தும் கரட விகடதட

தந்திப் பிறைக்கூன் மருப்பில்விளை

தரளம் தனக்கு விலை உண்டு;

தழைத்துக் கழுத்து வளைந்தமணிக்


கொத்தும் சுமந்த பசுஞ்சாலிக்

குளிர் முத்தினுக்கு விலை உண்டு;

கொண்டல் தரு நித்திலம் தனக்குக்

கூறும் தரம் உண்டு; உன் கனிவாய்


முத்தம் தனக்கு விலைஇல்லை,

முருகா! முத்தம் தருகவே!

முத்தம் சொரியும் கடல் அலைவாய்

முதல்வா! முத்தந் தருகவே."


முருகப் பெருமானைப் புகழ்ந்து போற்றிய அருணகிரிநாதர், முருகப் பெருமான் தனது மணிவாயினால் முத்தம் தந்து அருளவேண்டும் என்றும் ஒரு திருப்புகழ்ப் பாடலில் "மணிவாயின் முத்தி தரவேணும்" என்று வேண்டி உள்ளார். இதற்கு, உபதேசப் பொருளை குருவாக எழுந்தருளி அருள் புரிந்து, முத்திக்கு வழிகாட்டவேண்டும் என்று பொருள்.

ஆன்மாவுக்கு இயற்கையாய் அமைந்துள்ள பாசபந்தங்களில் இருந்து விடுபடுகின்ற நிலையை "முத்தி" நிலை என்று சாத்திரங்கள் கூறும். ஞானமுத்தமிழை, சங்கப் புலவர்கள் நாற்பத்தொன்பதின்மரோடு, பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில், தலைமைப் புலவனாய் இருந்து ஆய்ந்தவன் சிவபெருமான். முருகப் பெருமானும் உருத்திரசன்மராக இருந்து தமிழை விளக்கம் காண வைத்தவர். முருகப் பெருமானைத் தமிழால் திட்டினாலும் கூட வாழவைப்பார். "முத்தமிழால் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்றார் அருணகிரிநாதர். "வைதல்" என்னும் சொல் பாண்டி நாட்டில் இன்றும் வழங்கப்படுகிறது.

அந்த ஞானமுத்தமிழ் ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கும். தமிழ் மிக இனிமையான அருள்மொழி. "இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்" என்பது நிகண்டு. அந்த சீர்மிகு பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மணிவாசகர் இறையருளால் முத்தி நிலையைப் பெற்றார். அந்த மதுரையில் தான், தனது தொன்மைக் கோலத்தினை விடுத்து, சோமசுந்தரனாக சிவபெருமான் ஆட்சி புரிந்தான். அறுபத்துநான்கு திருவிளையாடலைப் புரிந்த சொக்கேசனுடைய அன்பு மீனாட்சி இன்றும் இன்றும் அருளாட்சி புரிகின்றாள். மீன் தனது பார்வையாலேயே முட்டையில் இருந்து குஞ்சுகளை விடுவிப்பது போல், அங்கயற்கண்ணி அம்மை தனது அருட்பார்வையால் ஆன்மாக்களை பந்தபாசங்களில் இருந்து விடுவித்து அருள் புரிகின்றாள். "பாண்டியனார் அருள்கின்ற முத்திப் பரிசு இதுவே" என்பது மணிவாசகம். எனவே,  பாண்டி நாடு முத்து உடைத்து எனப்பட்டது. 


இறைவனை அன்பினால் எளிதில் கட்டலாம்

 


அன்பினால் இறைவனைக் கட்டிப் போடலாம்

-----


"அன்பு எனும் பிடியுள் அகப்படும் மலையே!

     அன்பு எனும் குடில்புகும் அரசே!

அன்பு எனும் வலைக்குள் படுபரம் பொருளே!

     அன்பு எனும் கரத்து அமர் அமுதே!

அன்பு எனும் கடத்துள் அடங்கிடும் கடலே!

     அன்பு எனும் உயிர் ஒளிர் அறிவே!

அன்பு எனும் அணுவுள் அமைந்த பேரொளியே!

     அன்பு உருவாம் பரசிவமே."


இது வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய "திருவருட்பா".

இதன் பொருள் ---

     அன்பு எப்படும் கைப்பிடியின் அகத்துள் அடங்கும் மலையும். அன்பு எனப்படும் குடிசைக்குள் புகுந்து உறையும் அரசரும், அன்பு எனப்படும் வலையில் சிக்கும் மேலான பெரிய பொருளும், அன்பு எனப்படும் கைக்கிண்ணத்தில் அடங்கும் அமுதமும், அன்பு எனப்படும் சிறுகுடத்துள் ஒடுங்கும் கடலும், அன்பாகிய உயிரின்கண் விளங்குகிற ஒளிர்கின்ற அறிவுப் பொருளும், அன்பாகிய அணுவுக்குள் ஒடுங்கும் பேரொளியும், அன்பு உருவாகிய பரசிவம் ஆகும்.

      “அன்பே சிவம்” என்கிறார் திருமூல நாயனார். வள்ளல் பெருமான் “அன்பு உருவாம் பரசிவமே” என வள்ளல்பெருமான் மொழிகின்றார். தத்துவ உலகில் வழங்கும் சிவமூர்த்தங்களில் மேலான சிவத்தைப் "பரசிவம்" என்பர். இறைவன் மலையினும் மிகப் பெரியவன். மலையைப் போலத் திண்மையும் வல்லமையும் மிக்கவன். திண்மையும் வல்லமையும் உள்ள மலை போல் ஓங்கி உயர்ந்ததாய் சிவம் இருந்தாலும், அன்பு என்னும் ஒரு கைப்பிடிக்குள் அடங்கும் அளவில் சுருங்கிப் பேரின்பத்தை அளிப்பது என்பதால், “அன்பு என்னும் பிடியுள் அகப்படும் மலையே” என்கின்றார். அரசர்க்கு எல்லாம் ஒப்பற்ற தனி பேரரசாய், பெரியதோர் அரண்மனையில் இறைவன் வாசம் செய்து கொண்டு இருந்தாலும், அன்பர் அன்பாகிய எளிய சிறிய குடிசையுள்ளும் புகுந்து மகிழும் எளிமை உடைய இயல்பினை உடையவன், அன்பர்க்கு எளியவன் என்பதை உணர்த்த,  “அன்பு என்னும் குடில் புகும் அரசே” என்கின்றார். "இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா எம்மானை, எளிவந்த பிரானை" என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இறைவனுடைய இந்த எளிவந்த தன்மையைப் பின்வருமாறு பாடுகின்றார் வள்ளல்பெருமான்.

"வான்இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்

     மாதவம் பன்னாள் புரிந்து, மணிமாடம் நடுவே

தேன்இருக்கும் மலர்அணைமேல் பளிக்கு அறையின் ஊடே

     திருவடி சேர்த்து அருள்கஎனச் செப்பி வருந்திடவும்,

நான்இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து, எனக்கே

     நல்லதிரு அருளமுதம் நல்கியது அன்றியும், என்

ஊனஇருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன்

     உள்ளம் எனும் சிறுகுடிசை உள்ளும் நுழைந்தனையே."

இதன் பொருள் ---

     மேலுலகில் இருக்கும் பிரமன், நாரணன் முதலிய தேவர்களும், மற்றவர்களும் பல்லாண்டுகள் பெரிய தவம் செய்து இறைவன் எழுந்தருளும் மணிகள் இழைத்த நெடிய வானத்தின் நடுவில் அமைந்த பளிங்குப் பாறை மேல் பரப்பிய தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த அணை மேல் இருந்தருளும் திருவடிக்கண் எம்மைச் சேர்த்தருள்க எனத் துதித்து வருந்தவும், நான் இருக்கும் குடிசை வீட்டிற்குத் தானே வலிய வந்து உள்ளே நுழைந்து, எளியவனாகிய எனக்கு நல்ல திருவருள் ஞானமாகிய அமுதத்தைத் தந்தருளியதோடு, என் தசையோடு கூடிய உடம்பாகிய குடிசைக்குள் மனம் உவந்து நுழைந்து, அடியேனுடைய இல்லம் என்னும் சிறு குடிசைக்கு உள்ளும் புகுந்து அருளினாய்.  இறைவா! உனது இவ்வருட்செயலை என்ன என்று புகழ்வேன்.

எத்தகைய வலைக்கும் அகப்படாத பெரும்பொருளாக இருப்பினும் அன்பு என்னும் மெல்லிய வலைக்குள் எளிதில் அகப்படுவான் இறைவன் என்பதற்கு “அன்பு என்னும் வலைக்குள் படு பரம்பொருள்” என்கின்றார். ஒன்றின் உள்ளும் அடங்குதல் இல்லாத பேரமுதமாய் இறைவன் விளங்கினாலும், அன்பர் அன்புக் கையில் இனிது வந்து அமர்வான் என்கிறார். பரம் என்னும் தன்மையால் அளப்பருங் கடலாக விளங்கினும், அன்பாகிய சிறு குடத்துள் அடங்கி இன்புறுத்துவான் என்கின்றார். அன்பு செய்யும் உயிர்க்கு உணர்வு ஒளியாகவும், சிறுமையால் அணுத் தன்மை உடைந்து உள்ள ஆன்மாவுக்குள், ஆன்ம சிற்சத்தியாய் அமைந்து ஞானவொளியைப் பரப்புவதாக விளங்கும் இயல்பை, "அன்பு என்னும் உயிர் ஒளிர் அறிவே” எனவும், "அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே” எனவும் கூறுகின்றார்.

அன்பு என்னும் பிடியில் அகப்படுகின்ற மலையாக இறைவன் விளங்குகின்றான் என்பதற்கு மகாபாரத்ததில் ஒரு நிகழ்வு சான்றாக அமைந்து உள்ளது.

பஞ்சபாண்டவர்கள் காட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒர் ஆண்டு தலைமறைவாக இருந்துவிட்டு வெளி வந்தார்கள். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்கு உரிய நாட்டை மீட்டும் தங்களுக்குக் கொடுக்கும் படியாகக் கேட்டு வரும்படி தருமபுத்திரர் ஒரு முனிவரைத் துரியோதனனிடம் தூது அனுப்பினார். துரியோதனன் கொடுக்கச் சம்மதிக்கவில்லை. திருதராஷ்டிரன் அந்த முனிவரைப் பார்த்து, 'என் பிள்ளைகள் பொல்லாதவர்கள். தருமன் நல்லவன் ஆயிற்றே. அவன் எங்கே வாழ்ந்தாலும் அதுதான் அத்தினாபுரம். இத்தனை ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்து பழகினவர்களுக்கு அங்கேயே இருப்பதில் துன்பம் ஒன்றும் இல்லை. எதற்காக மறுபடியும் இந்தப் பொல்லாத பிள்ளைகளோடு சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்?' என்று சொல்லி அனுப்பினான். அதனைக் கேட்ட தருமபுத்திரர், 'பெரியப்பா சொல்வது நியாயந்தானே?  நாம் உறவினர்களோடு சண்டை போட்டுக் கொண்டு அவர்களை அழித்து விட்டு ஏன் நாட்டில் வாழவேண்டும்? காட்டில் வாழ்ந்தால் நல்லதுதான்' என்று கூறினார்.

"குரவரையும், கிளைஞரையும், குலத்து உரிய துணைவரையும், கொன்று, போர் வென்று,

அரவ நெடுங் கடல் ஆடை அவனி எலாம் தனி ஆளும் அரசுதன்னில்,

கரவு உறையும் மனத் தாதை முனிக்கு உரைத்த மொழிப்படியே, கானம்தோறும்,

இரவு பகல் பல மூல சாகம் நுகர்ந்து, உயிர் வாழ்தல் இனிது, நன்றே!"       --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

பெரியோர்களையும், உறவினரையும், ஒரு குலத்திலே பிறந்த, அன்பு செய்தற்கு உரிய தம்பிமார்களையும், போரிலே கொன்று, வெற்றி கொண்டு, ஆரவாரத்தையுடைய பெரிய கடலை ஆடையாகவுடைய பூமி முழுவதையும், மற்றொருவரும் இன்றித் தனியே அரசாளுகின்ற, அரசாட்சியைக் காட்டிலும், வஞ்சனை பொருந்திய மனத்தையுடைய பெரிய தந்தையான திருதராட்டிரன், சஞ்சய முனிவனிடத்துச் சொல்லியனுப்பிய சொல்லின்படியே காடுகள்தோறும் சென்று  இரவிலும் பகலிலும் பழங்களையும் கிழங்குகளையும் இலைகளையும் உண்டு, உயிர் வாழ்தல் மிகவும் நல்லதே ஆகும்.

கண்ணபிரான் அவருடைய பேச்சைக் கேட்டான். நீ சொல்வது சரிதான். ஆனால் உன்னுடைய தம்பிமார்கள் என்ன சொல்வார்களோ? அன்று பாஞ்சாலியின் துகிலைத் துச்சாதனன் உரிந்தபோது அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சபதம் செய்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம் முற்றுப் பெற வேண்டும். பாஞ்சாலி தன் கூந்தலை விரித்துக்கொண்டு நிற்கிறாள். அந்தக் கூந்தலை அவள் முடித்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் செய்யாமல் நீங்கள் மீட்டும் காட்டுக்குப் போய் விட்டால், உலகத்தில் உள்ளவர்கள் ஏசமாட்டார்களா?' என்று கேட்டான். தருமபுத்திரர் யோசித்து, "அப்படியானால் நீ ஒரு முறை தூது போய்விட்டு வா. அவர்கள் பாதி நாடு தரட்டும். இல்லாவிட்டால் ஐந்து ஊர் தரட்டும். அவையும் இல்லாவிட்டால் ஐந்து வீடுகள் தரட்டும். ஒன்றும் இல்லை என்று மறுத்தால் போர் செய்வோம் என்று சொல்லிவிட்டு வா" என்றார். 

கண்ணபிரான் தருமபுத்திரருடைய தம்பிகளின் கருத்தைக் கேட்கத் தொடங்கினான். வீமனைக் கேட்டபோது அவன் மிகவும் சினந்து, "என்னைத் தூது அனுப்புங்கள். எல்லோரையும் என் கதைக்கு இரையாக்கி வருகிறேன். போர்தான் எனது தவம்" என்று கோபத்தோடு சொன்னான். அருச்சுனனும் மிக்க வீறுடன் பேசினன். நகுலனும் சினந்து அப்படியே சொன்னான். பிறகு சகாதேவனிடம் வந்து, "உன் கருத்து என்ன அப்பா?" என்று கேட்டான் கண்ணன். 

சகாதேவன் சிறந்த ஞானி.  சத்தியத்தை உணர்ந்தவன். அவன் சொன்னான்,  "கோபாலா!  இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா?  உன் எண்ணம் எதுவோ அதுதான் என்னுடைய எண்ணம்" என்று சொன்னான். இதைக் கேட்ட கண்ணன், 'எல்லோரையும் போல இவன் பேசவில்லையே! இவனிடம் ஏதோ நுட்பமான கருத்து இருக்கிறது. அதை இரகசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்' என்று எண்ணி அவனைத் தனியே அழைத்துச் சென்றான்.

சென்று, அவன் கருத்தைக் கேட்டபோது, சகாதேவன் பின்வருமாறு சொன்னான்.

"சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்? செறிந்த நூறு

மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால் என்? வழங்கினால் என்?

கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால் என்? குறித்த செய்கை

அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத் தெரியுமோ? ஆதிமூர்த்தி!"   --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே! இப்பொழுது தருமபுத்திரன் கருத்தின்படி  நீ தூதுபோனாலும் என்ன? போகாமல் இருந்தாலும் என்ன?  நெருங்கின உறவாகவுள்ள நூறு குமாரர்களுள் முதல்வனாகிய துரியோதனன்  எங்களுக்கு உரிய நிலத்தை வழங்காமல் இருந்தால் என்ன? கொடுத்தால்தான் என்ன?  இந்தப் பாஞ்சலியும்  கூந்தலை எடுத்து முடித்து அலங்கரித்தால் என்ன?  விரித்தபடியே இருந்தால்தான்  என்ன? நீ நினைத்த காரியம் கடைசியில் முடியும் விதம்  அடியேனுக்குத் தெரியுமோ? (எது எப்படி நடந்தாலும் எல்லாம் உனது சங்கற்பத்தின்படியே முடியும்)

"முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று அலகை முலைப்பால் உண்டு,

மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து, பொதுவர் மனை வளர்ந்த மாலே!

ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான் அறிவேன், உண்மையாக;

திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!' என்றான், தெய்வம் அன்னான்."

                                           --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

நறுமணத்தை  வெளிப் பரப்புகின்ற, பசுநிறமான திருத்துழாய் மாலையை அணிந்த  திருமுடியை உடையவனே! குழந்தையாய் இருந்த அந்தக் காலத்தில், பூதனை என்னும் பேய்மகளது முலையின் பாலைப் பருகி அருளியும், இரட்டை மருத மரத்தின் நடுவிலே தவழ்ந்து சென்றும், உயர்ந்த சகடாசுரனை இறந்து கீழ்விழும்படி காலால் உதைத்தும், இடையர்களது மாளிகையிலே வளர்ந்தருளிய, திருமாலே! உனது மாயை  இங்கு ஒருவருக்கும் தெரியாது. நான்  உள்ளபடி அறிவேன். ஆதலால், உனது மனத்தில் நிகழ்கிற எண்ணம் யாதோ அதுவே எனது எண்ணமும் ஆகும் என்று முக்காலத்துச் செய்திகளையும் அறிதலில் கடவுளை  ஒத்தவனான சகதேவன் சொன்னான்.

"நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,

பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!

கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,

மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?" --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

மேகம்போலக் கரிய திருநிறம் உடையவனே! பசுக்களைக் காக்கும் இடையர் சாதியில் வளர்ந்தவனே! போரில் ஆண்சிங்கம் போன்றவனே! கோவிந்தன் என்னும் திருநாமம் உடையவனே! நீ பாரதப் போரில் எல்லாரையும் அழியச் செய்து, பூமிதேவியின் சுமை மிகுதியை ஒழிக்க விரும்பி அருளினாய். ஆதலால், உன் கருத்துப்படி நிகழும் பெரிய பாரதப் போரை,  அதனை நடத்தப் போகும் நீயே அல்லாமல்,  ஒழிக்க வல்லவர்  வேறு எவருமில்லை.

"ஆனாலும், ஒரு செயலைச் செய்தால் பாரதப் போர் வாராமல் காக்கலாம், கண்ணா! துரியோதனனோ, தருமனோ அரசாள்வது என்று இல்லாமல், கர்ணன் அரசாள வேண்டும். அதற்கு முன்பு, அவன் அருச்சுனனைக் கொல்லவேண்டும். பாஞ்சாலியின் கூந்தலை முடிப்பதா, விரிப்பதா என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் அவளது கூந்தலைக் களையவேண்டும். பின்பு நான் உன்னைக் கட்டவேண்டும். இவை நடைபெற்றால் பாரதப் போர் வராமல் காக்கலாம்" என்றான் சகாதேவன்.

"பார் ஆளக் கன்னன், இகல் பார்த்தனை முன் கொன்று, அணங்கின்

கார் ஆர் குழல் களைந்து, காலில் தளை பூட்டி

நேராகக் கைப் பிடித்து, நின்னையும் யான் கட்டுவனேல்,

வாராமல் காக்கலாம் மாபாரதம்' என்றான்."  --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

கர்ணன் பூமியை அரசாட்சி  செய்யும்படி  அவனிடத்துப் பகைமையை உடைய அருச்சுனனை முன்னே கொன்றுவிட்டு, சிறந்த மகளான பாஞ்சாலியினது கருநிறம் பொருந்திய கூந்தலை அரிந்துவிட்டு,  உனது கால்களிலே விலங்கு பூட்டி, உனது கைகளையும் பிடித்து உன்னையும் நான் தகுதியாகக் கட்டி வைப்பேனானால், பெரிய பாரதப்போர் நடந்திடாதபடி தடுத்திடலாம் என்று சொன்னான் சகாதேவன்.

சகாதேவன் சொன்னதைக் கேட்ட கண்ணன் சிரித்துக் கொண்டான். இப்படி வேறு யாராவது சொல்லி இருந்தால், நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறானே என்று தோன்றும். பற்றுக்களை விட்ட ஞானி சகாதேவன் ஒருவனால்தான் இப்படிப் பேசமுடியும். அவனுடைய உயர்ந்த நிலையைக் கண்ணபிரான் தெரிந்து கொண்டு அவனைத் தனியே அழைத்துக் கேட்டான்?  "நீ சொன்னது எல்லாம் சரி. ஒருகால் முன் சொன்ன எல்லாம் நடந்தாலும் நடக்கலாம். என்னை நீ எப்படிக் கட்டுவாய்?" என்று கேட்டான். சகாதேவன் உடனே விடை சொன்னான். 'மற்ற எல்லாம் தெரிந்து கொண்டாய். ஆனால் உன்னை நீ தெரிந்து கொள்ளவில்லையே, கண்ணா! யசோதையால் உன்னைக் கட்ட முடியாமல் போயிற்று என்பதைக் கருதி இப்படிப் பேசுகின்றாய் போலும்! நீ கண்ணனாக எழுந்தருளி இருக்கும் இந்த உருவம் மாத்திரம் அல்ல. உன்னுடைய இயல்பான உருவத்தையும் எனக்குக் காட்டு. நான் கட்டி விடுகிறேன்'  என்றான். கண்ணன் சகாதேவனுடைய மன வலிமையைத் தெரிந்து கொள்ளும் பொருட்டுப் பலப்பல வடிவங்களைக் கொண்டு நின்றான். கண்ணன் பலப்பல வடிவங்களை எடுத்துக் கொள்ள, சகாதேவன் தனது மனக் கருத்தினால்  மூலவடிவைப் பிணித்து விட்டான்.

"மாயவனும் அன்பன் மனம் அறிவான், 'கட்டுக!' என்று,

ஆய வடிவு பதினாறாயிரம் கொண்டான்;

தூயவனும், மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து, எவ் உலகும்

தாய அடி இணைகள் தன் கருத்தினால் பிணித்தான்."    --- வில்லிபாரதம்.

இதன் பொருள் ---

விசித்திர ஆற்றலை உடையவனான கண்ணனும், தன்னிடத்து மிக்க பத்தி உடையவனான  சகாதேவனது கருத்து நிலையை  அறிதற்பொருட்டு, என்னை நீ கட்டுவாயாக என்று சொல்லி, பொருந்திய பதினாறாயிரம் திருவுருவங்களை ஒருங்கே எடுத்துக்கொண்டான். அப்பொழுது, பரிசுத்தனான  சகாதேவனும்,  அவ்வடிவங்கட்கு எல்லாம் முதன்மையான திருவுருவத்தை இன்னதென்று தனது தத்துவஞானத்தால் அறிந்து, எல்லாவுலகங்களையும் தனது திருவடியால் அளந்த  அப் பெருமானது உபய பாதங்களைத்  தனது மனமாகிய கயிற்றினால் கட்டினான்.

கண்ணபிரான் பலப்பல உருவங்களிலும் தோற்றம் அளித்தபோதும், சகாதேவன் அந்த வடிவங்களை எல்லாம் கண்டு, 'நாம் தெரியாமல் சொல்லிவிட்டோமே எப்படிக் கட்டுவது? என்று மயங்கவில்லை. ஆலமரம் நெடுந்தூரம் தழைத்துப் பரவிக் கிளை விட்டிருந்தாலும் அதன் அடிமரத்தில் கோடரியால் வெட்டினால் மரமே பட்டுவிடும். அப்படி, அத்தனை உருவங்களுக்கும் மூலமாக உள்ள தோற்றம் எது என்பதைச் சகாதேவன் நன்கு உணர்ந்தவன். அதுமாத்திரம் அல்ல.  எங்கே கட்ட வேண்டுமென்பதையும் தெரிந்து கொண்டிருந்தான். மூலமாகிய தோற்றத்தை உள்ளத்தில் வைத்து அந்தப் பெருமானுடைய திருவடிகளைத் தன்னுடைய கருத்தினால் பிணைத்துவிட்டான். 

இப்போது கண்ணன் கட்டுண்டு கிடந்தான். மற்றப் பெரியவர்களுடைய தந்திரத்தினாலே கட்டுப்படாத இறைவன், யசோதை கட்டிய கயிற்றுக்கு அகப்படாத ஆயன், வேதங்களினாலும் சாத்திரங்களினாலும் காண முடியாத கண்ணன், இப்போது மிக எளிதில் சகாதேவனால் கட்டுண்டு கிடந்தான். கண்ணனுக்கே வியப்பு உண்டாகிவிட்டது. நெடுநாள் காணமுடியாமல் கண்ட ஒருவர், தம்முடைய அன்பனை இறுக்கிப் பிணித்து அனைத்துக்கொண்டால் அந்த அணைப்பு ஒரு வகையில் இன்பமாக இருக்கும்; மற்றொரு வகையில் மூச்சுத் திணற அடிக்கும். இந்த நிலையில் கண்ணபிரான் இருந்தான். 'சகாதேவா, என்னை அன்பினாலே நன்கு அறிந்து எப்படிக் கட்டவேண்டுமென்ற உண்மையைத் தெரிந்து என்னைக் கட்டிவிட்டாயே! நீ கட்டினது மிகவும் நல்லது. நீ நல்லவன். நான் இப்போது அத்தினாபுரத்திற்குத் தூது போக வேண்டும். கட்டின காலை விடு' என்று கெஞ்சினான். 

"அன்பால் இன்று என்னை அறிந்தே பிணித்தமை நன்று;

என் பாதம்தன்னை இனி விடுக!' என்று உரைப்ப.."   --- வில்லிபாரதம்.

சகாதேவன் மிகச் சிறந்த தந்திரசாலி. கையிலே அகப்பட்டுக் கொண்ட பொருளைப் பயன்படுத்தாமல் விடுவானா?  சகாதேவன் கேட்கின்றான், "கண்ணா, இப்போது நீ எனக்கு ஒரு வரம் தரவேண்டும். பாரதப் போரில் எல்லோரையும் அழித்துப் பூபாரம் தீர்க்கத் திருவுள்ளம் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். இப்போது நான் கேட்கும் வரம் ஒன்று உண்டு. உன் திருவுள்ளக் கருத்தில் சற்றே நெகிழ்ச்சி கொள்ள வேண்டும். உன்னையே சரண் என்று அடைந்திருக்கிற எங்கள் ஐந்து பேரை மாத்திரம் உன்னுடைய கடைக் கண்ணால் காப்பாற்றி அருளவேண்டும்" என்று வேண்டிக் கொண்டான். 

"வன் பாரதப் போரில் வந்து அடைந்தேம் ஐவரையும்,

நின் பார்வையால் காக்க வேண்டும், நெடுமாலே!"   --- வில்லிபாரதம்.

யாருக்கும் கட்டுப்படாத பரம்பொருளாகிய கண்ணபிரானை உள்ளத்தில் தோன்றிய மெய்யன்பினாலே பிணைத்து அவன் திருவடியைக் கட்டி, அந்தச் சமயத்தில் வரம் கேட்டு வாங்கிக் கொண்டான் சகாதேவன். பின்னால் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் பதினெட்டு நாள் பெரிய போர் நடந்தது. மிகக் கடுமையாக நடந்த அந்தப் போரில் ஒவ்வொருவருடைய வீரமும் வெளியாயிற்று. போர் நடந்து அதில் அருச்சுனன் முதலியவர்கள் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த, அதனால் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது என்றுதான் பாரதத்தைப் படிக்கும்போது  தோன்றுகிறது. ஆனால் அந்தப் போர் நடப்பதற்கு முன்னாலேயே பாரதப் போரின் முடிவு ஒரு சிறிய அறையில் தீர்மானம் ஆயிற்று. கண்ணபிரானுடைய இரண்டு திருவடிகளைத் தன் கருத்தினாலே பிணைத்த சகாதேவன் அந்தப் பெருமானிடம் கேட்டுக் கொண்ட வரந்தான் பாரதப் போரில் பஞ்சபாண்டவர்களுக்கு வெற்றியை வாங்கித் தந்தது. அவன் அப்போது விண்ணப்பித்த விண்ணப்பமே பிறகு போர்க்களத்தில் அருச்சுனனின் காண்டீபத்திற்கும், தருமனின் அறத்திற்கும் வலிமை தந்தது. திரைக்கு மறைவில் பச்சைப் பசுங்கொண்டலைச் சகாதேவன் பிணித்து அவன் திருவடியைப் பற்றிக் கொண்டு அன்பின் வலிமையைக் காட்டிய செயல்தான் அந்த வெற்றிக்கு மூலம் தூயவனாகிய சகாதேவனுக்குத்தான் அந்தப் பெருமானுடைய மூலம் எங்கே இருக்கிறதென்று தெரிந்தது. எத்தனை ஆயிரம் திருவுருவங்கள் எடுத்தாலும் அவை எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பன இரண்டு திருவடிகள் என்பதை ஞானியும், அன்பனுமான சகாதேவன் நன்கு உணர்ந்து தன் கருத்தைச் செலுத்திக் கட்டினான். 

வள்ளல்பெருமான் பாடியருளிய பாடலின் பொருள் இப்போது நன்கு விளங்கும்.


இறைவனைப் புகழ்வது எப்படி?

 

இறைவனைப் பாடுவது எப்படி?

----

கற்றதனால் ஆய பயன்  இறைவன் நற்றாள் தொழுவது. கற்பதைக் கசடு அறக் கற்கவேண்டும். அதைவிட, கசடறக் கற்றபின் அதற்குத் தக நிற்க வேண்டும். இதுதான் அனுபவத்தில் இன்பத்தைப் பெறுவது. ஆகவே,  எல்லை இல்லாத பேரின்பத்தை அருளக் கூடிய இறைவனுடைய கவியை அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு அடிப்படை பிழையில்லாமல் கற்றுக் கொள்ள வேண்டும். இறைவனிடத்தில் அன்பு வளரத் துணையாக இருப்பது இறைவன் புகழைப் பாடுவது. அந்தப் பாட்டைப் பிழை இல்லாமல் சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். 

"அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலவன் கவியை, அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர்" என்கிறார் அருணகிரிநாதர். இது அவர் பாடியருளிய பாடல்களுக்கு மட்டும் அல்லாமல், அவருக்கு முன்னாலே தோன்றிய அருளாளர்கள் முருகப் பெருமானைப் பற்றியும், ஆழ்வாராதிகள் திருமாலைப் பற்றியும், திருஞானசம்பந்தர் முதலியவர்கள் சிவபரம்பொருளைப் பற்றியும் பாடியருளி உள்ள பாடல்கள் அத்தனைக்கும் பொருந்தும். இறைவனுடைய திருவருளிலே ஈடுபட்டுப் பலப்பல பாடல்கள் அருளாளர்கஙள் பாடி இருக்க, அவற்றை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் வீணே வாழ்நாளைக் கழிக்கின்ற மக்களை நினைந்து இரங்கி இவ்வாறு கந்தர் அலங்காரத்தில் பாடினார் அருணகிரிநாதர்.

தமிழுக்கும் பாட்டுக்கும் தொடர்பு அதிகம். பழந்தமிழ் நூல்கள் யாவுமே பாடல்களால் அமைந்தவை. "பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லை" என்பது பெரியபுராணம். மனிதனுடைய வாழ்நாளில் பல வகையில் பாட்டுக் கலந்திருக்கிறது. குழந்தை பிறந்தால் தாலாட்டுப் பாட்டு. குழந்தைக்குத் தொட்டில் போட்டால் பாட்டு. குழந்தை நடக்க ஆரம்பித்தால் பாட்டு. குழந்தை விளையாடும் விளையாடல்களுக்கு ஏற்ற பாட்டு.  திருமணம் வந்தால் பாட்டு. இறுதியில் இறக்கும்போது ஒப்பாரிப் பாட்டு. இப்படித் தமிழர் தம் வாழ்வு அளப்பரிய பாடல்களால் ஆனது. அந்தப் பாட்டுக்களை எல்லாம் மனிதர் கற்றுக் கொள்ளலாம். அவை யாவும் அவ்வப்போது இன்பம் தந்து ஒரளவு மனத்திலே அமைதியைத் தரத் தக்கன. ஆனால் அவற்றால் காலத்தை வெல்ல முடியாது. காலத்தை வென்றவன் ஆன இறைவன் திருவருளைப் பெற முடியாது.

பாடல்களைக் கற்றுக் சுவை காண்பதால் ஒருவகை அமைதி மனதில் உண்டாகிறது. மீட்டும் பிறவாத இன்ப நலம் மிக்க அமைதி வேண்டுமென்றால்  அயில்வேலன் கவியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும்? அன்பால் கற்றுக் கொள்ள வேண்டும். அவனைத் தியானிக்க அன்பு இருந்தால் போதும். அந்தத் தியானம் மனத்திலே நிலைக்க அவனைப் பாடித் துதிக்க வேண்டும். அதற்குத் தமிழறிவு வேண்டும்.

பாடலைப் பாடும்போது எழுத்துப் பிழை இல்லாமல் சொல்ல வேண்டும். எழுத்து ஒவ்வொன்றையும் சரியாக உச்சரிக்காவிட்டால் பயன் இல்லை. ஒவ்வொரு எழுத்தும் இறைவனிடம் இருந்தே தோன்றியது. எழுத்துக்களுக்குத் தனித்தனித் தேவதைகள் உண்டு என்று சாத்திரங்கள் கூறுகின்றன. "வாக்தேவதை" என்று சொல்வார்கள். ஏதேனும் ஒர் எழுத்தைத் தவறாக உச்சரித்தால் அந்த எழுத்துக்குரிய தேவதை கோபித்துக் கொள்ளும். ஒரு பெரிய அதிகாரியின் பெயரையோ, முகவரியையோ தவறாகச் சொன்னால் அவருக்குக் கோபம் வருகிறது அல்லவா? அதுபோலவே நம் நாவிலிருந்து நடமாடுகிற தேவதைகள் தங்களுக்கு உரிய எழுத்தைச் சரியாக உச்சரிக்காவிட்டால் கோபம் அடைகின்றன. சரியாக உச்சரித்தால்,  அதனால் கிடைக்கும் நன்மையைப் பெறலாம்; தேவதைகளும் மகிழ்ச்சி அடைவார்கள்.

அழுகையே தன் மொழியாகக் கொண்டு பிறக்கும் குழந்தை, பின்பு மழலை பேசுகிறது. வளர வளர நன்றாகப் பேசக் கற்றுக் கொள்கிறது. குழந்தைகளின் மழலைச் சொல் இசைக் கருவிகளை விட இனிமையானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். இளங் குழந்தை மழலை பேசினால் அது குறைபாடு ஆகாது. எழுத்தைத் தவறாக உச்சரித்ததாகவும் ஆகாது. குழந்தை சோறு என்பதை, 'சோச்சி' என்கிறது. பழம் என்பதைப் 'பயம்' என்கிறது. காபி என்பதை 'காவி' என்கிறது. அவை எழுத்து குறைபாடு உடையவை; ஆனாலும் இனிமையை உடையன. "குழல் இனிது, யாழ் இனிது என்ப, தம் மக்கள் மழலைச்சொல் கேளாதவர்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

  'திருவள்ளுவருக்கு இசை வராது போலிருக்கிறது. அதனால்தான் அவருக்கு யாழின் இனிமையும் தெரியவில்லை. குழலின் இனிமையும் தெரியவில்லை' என்று நாயனார் கருத்து இன்னதென்று அறியாதவர்கள் அப்படிச் சொல்லலாம். குழல் ஒலி இனிமையானது அல்ல, யாழ் ஒலி இனிமையானது அல்ல என்பது நாயனார் கருத்து அல்ல. முயற்சியும் பயிற்சியும் இருந்தால், சில ஆண்டுகளிலே குழலை மிக இனிமையாக வாசிக்கக் கற்றுக் கொள்ளலாம். வீணையும் அப்படியே. வித்தையில் எவ்வளவுதான் வல்லவனாக ஒருவன் இருந்தாலும், சின்னஞ்சிறு குழந்தையைப் போலப் பேச அவனுக்கு வராது. விகடம் பண்ணுகிறவர்கள் ஆடு மாதிரிக் கத்தலாம். யானை மாதிரி பிளிறலாம்.  வெவ்வேறு மனிதரைப் போலப் பேசலாம். ஆனால் குழந்தையைப் போலப் பேச முடியாது. முயற்சி செய்து கற்றுக் கொள்ளுகிற குழலையும் யாழையும் விட, கற்றுக் கொள்ள முடியாத மழலையே சிறந்தது, இனிமையானது. முழு வார்த்தையையும் பேச வராத குழந்தை மழலை பேசுகின்றது. அதைக் கேட்டு மகிழ்கின்றனர் தாயும், தந்தையும். எழுத்து நன்றாகத் தெரியாத மழலையில் இன்பம் இருக்கிறதென்றால், அந்தக் குழந்தை பதினாறு ஆண்டுகள் நிரம்பப் பெற்ற பிறகும் மழலையாகவே திக்கித் திணறிப் பேசினால் மகிழ்ச்சி அடைவதில்லை.  "குழந்தைக்கு ஏதோ என்னவோ!" என்று பயந்து, மருத்துவரிடம் அழைத்துப் போவார்கள். மழலைதான் இனிது என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே என்று எண்ணிப் பதினாறு வயதில் தம் மகன் மழலையாகப் பேசினால் பெற்றோர் மகிழமாட்டார்கள். அதனை ஒரு நோயாகவே கருதித் துடித்துப் போவார்கள்.

ஒரு விதையை நட்டால் முளை வெளியே வந்தவுடன் அது இனிச் செடியாகி நன்றாக வளரும் என எண்ணி மகிழுவது போல, அந்த மழலைச் சொல்லைக் கேட்டவுடன், இனி நன்றாக வளர்ந்து அழகாகப் பேசும் நிலையை அக்குழந்தை அடைந்து விடும் என்று எண்ணி தாய்தந்தையர் மகிழச்சி அடைகிறார்கள். மனிதன் வளர வளர மழலை மாறிப் பேசக் கற்றுக் கொள்கிறான். மழலை நிலை மாறிப் பேச்சு நிலை வருவதுதான் வளர்ச்சிக்கு அறிகுறி. மனிதன் பெற்ற பெருவரம் பேச்சு. பிறருக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்காக ஒருவன் வாயிலிருந்து வருகின்ற ஒலித்திரளே பேச்சு. வாயிலிருந்து வரும் ஒலி பொருளுடையதாக இருந்தால்தான் பேச்சாகும். ஊமையின் ஒலி பிறருக்கு எந்தக் கருத்தையும் தெரிவிக்காது. அவன் காகூ என்று உண்டாக்கும் ஒலி அவன் வாயிலிருந்து பிறந்தாலும் அது பேச்சல்ல. பேச்சிலும் நல்லது, பொல்லாதது உண்டு. பிறருடைய உள்ளத்துக்குத் தன் கருத்துப் புரியும்படி செய்து, அவர்களுக்கு இன்பம் உண்டாகும்படி பேசுகின்ற பேச்சுதான் பேச்சு; நல்ல பேச்சு, பிறருடைய உள்ளம் புண்படும்படியாகப் பேசுகின்ற பேச்சுத் தாழ்ந்தது. நம்மைப் படைத்துக் காக்கின்ற இறைவனுடைய உள்ளம் குளிரும்படியாகப் பேசுகின்ற பேச்சு எல்லாவற்றையும்விட மிகச் சிறந்த பேச்சு.

'நான் உனக்கு உதவுகிறேன்' ஒருவன் என்று சொன்னால் அந்தப் பேச்சினாலே ஒருவனுடைய உள்ளம் குளிருகின்றது. அவன் மேலும் நமக்கு உதவுவான் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஆனால் இறைவனுக்கு நாம் எதைத் தருவதாகச் சொல்லலாம்? நம்மிடம் அவனுக்கு அளிக்கத் தக்க பொருள் என்ன இருக்கிறது? இறைவன் நம்மால் பெறுவது ஒன்றும் இல்லை. அவன் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டிருக்கிறான். 

பலவகையான அணிகளைத் தங்கத்தினால் பண்ணி அணிந்து கொள்கிறோம். அந்தத் தங்கத்தினாலே நமக்குப் பலவிதமான பயன்கள் இருக்கின்றன. நம்மால் அந்தத் தங்கத்திற்கு என்ன பயன் இருக்கிறது?  இறைவன் தங்கம் போன்றவன். அவனுடைய அருளினாலே நாம் தனுகரணபுவன போகங்களைப் பெற்றிருக்கிறோம். ஆனால் நம்மாலே ஆண்டவனுக்கு ஏதாவது உபகாரம் உண்டா?  என்றால் இல்லை. இதைப் பட்டினத்து அடிகளார் ஒரு பாடலின் வழி காட்டி உள்ளார்.


"பொன்னால் பிரயோசனம் பொன்படைத்

தாற்கு உண்டு, அப் பொன்படைத்தான்

தன்னால் பிரயோசனம் பொன்னுக்கு அங்கு

  ஏது உண்டு, அத் தன்மையைப்போல்

உன்னால் பிரயோசனம் வேணது

  எல்லாம் உண்டு, இங்கு உன்தனக்கே

என்னாதல் பிரயோசனம் ஏது உண்டு

  காளத்தி ஈச்சுரனே"

நமக்கு எல்லா இன்ப நலங்களையும் அளிக்கின்ற இறைவனுக்கு நம்மால் உபகாரம் ஒன்றும் இல்லை என்று பட்டினத்து அடிகளார் சொல்கிறார். ஆனால், அபகாரந்தான் உண்டாகிறது. இறைவன் கொடுத்த நாக்கினால் வாய் கூசாது கடவுள் இல்லை என்று சொல்லித் தவறு செய்கிறோம். இறைவனைத் திட்டுகிறோம், அவன் குழந்தைகளாகிய மக்களை வைது பேசுகிறோம். இப்படி அவனுக்கு நாம் அபகாரம் செய்கிறோமே தவிர, ஒரு விதமான உபகாரமும் செய்யவில்லை.

குழந்தை தத்தித் தத்திக் கீழே விழாமல் நடக்கத் தெரிந்து கொண்டால் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். மழலைச் சொல்லாலே, அம்மா என்று குழந்தை கூப்பிட்டால் அதனைக் கேட்டு எல்லையில்லாத ஆனந்தம் அடைகிறாள். பள்ளியில் வகுப்பிலேயே முதலாக இருக்கிறான் என்று சொல்லக் கேட்டால் அவள் உள்ளமெல்லாம் குளிர்கிறது. அந்தக் குழந்தை படித்து விட்டு நல்ல வேலைக்குப் போய்விட்டால் அவள் அடைகின்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லாமல் போய்விடுகின்றது. தன் குழந்தை நல்லவன் என்று பிறர் கூறக் கேட்கும் பொழுதெல்லாம் அவள் அடைகிற இன்பம், அக் குழந்தையைப் பெற்ற காலத்தில் அடைந்த இன்பத்தையும்விட மிக அதிகமானது என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எல்லா உலகத்திற்கும், எல்லாக் காலத்திற்கும், எல்லா உயிர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் விளங்குகிறவன் இறைவன். இந்த உலகத்தில் எல்லா உயிர்களும் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் சிறந்து விளங்கினால் இறைவன் திருவுள்ளம் மகிழும்.

ஒரு தாய், தன் மகன் தினமும் பள்ளிக்குப் போகும் போது, மத்தியான்ன வேளையில் வயிறு பசித்தால் ஏதாவது வாங்கித் தின்னட்டும் என்று கைக்காசு கொடுத்து அனுப்புவாள்.  பள்ளியின் வாசலுக்கு எதிரே ஒரு கிழவி சுண்டலை விற்றுக் கொண்டிருந்தாள். அதனை வாங்கி இரண்டு மூன்று நாள் சாப்பிட்டான். உடனே அவனுக்கு உடல் நலிவு வந்துவிட்டது. தலைவலி என்றான்; உடம்பு வலி என்றான். பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே படுத்துக் கொண்டுவிட்டான். 'ஏதோ நல்ல பொருளாகப் பசி நேரத்திற்கு வாங்கிச் சாப்பிடட்டும் என்று காசு கொடுத்தால் இந்தப் பையன் உடம்புக்கு ஆகாத பொருளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டான் போலிருக்கிறது. வாந்தி எடுக்கிறான். இனி இவனுக்குக் காசு கொடுத்துப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பக் கூடாது'  என்றுதானே தாய் நினைப்பாள்?

இறைவன் நமக்கு நல்ல வாயைக் கொடுத்து, பேசும் ஆற்றலையும் கொடுத்து அனுப்புகிறான். அந்த நாக்கை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் அவன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். மேலும் மேலும் நன்றாகப் பேச்சு வளரும்படி செய்வான். பள்ளிக்குச் சென்ற பிள்ளையைப் போலச் செய்தால் எப்படி? தாய் தான் காசு கொடுத்ததை நிறுத்திக் கொண்டது போல, இறைவன் நமக்குக் கொடுத்தனுப்பிய நாவைக் கொண்டு அவனுடைய திருநாமத்தைப் பேசாமல், பேசத் தகாதன எல்லாம் பேசிப் பிறருடைய மனத்தைப் புண்படுத்திக் கொண்டிருந்தால், அவன் அடுத்த பிறவியில் நம்மை ஊமையாக்கி விடுவான்.

நாம் எதையேனும் வாயில் போட்டுக் கொண்டு அதைத் திரும்ப வெளியில் துப்பினால் அதனை எச்சில் என்று சொல்லுகிறோம். உடம்புக்குள் போன எந்தப் பொருளாகட்டும், எந்த வழியாக வெளியே வந்தாலும் அதனை எச்சில் என்றோ, மலம் என்றோதான் சொல்கிறோம். நம்மிடமிருந்து வெளிவரும் அழுக்கை நாமே அருவருத்து ஒதுக்குகிறோம். உடம்புக்குள் இருந்து வெளியே வருவனவற்றுள் சிறந்த ஒன்று, எச்சில் படாத ஒன்று, மலமாகாத ஒன்று பேச்சுத் தான். அந்தப் பேச்சை சரியானபடி சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். உடம்புக்குள் இருந்து வெளி வருகின்ற எல்லாவற்றையும் எச்சில் என்றும், மலம் என்றும் சொல்லி வெறுக்கும் மனிதர்கள் விரும்பிக் கேட்டு அனுபவிக்கக் கூடியது பேச்சு மட்டும்தான். அவ்வளவு அருமையாக நமக்குக் கிடைத்திருக்கும் பேச்சைப் பிறருடைய மனம் புண்படும்படியாகப் பலர் பயன்படுத்துகிறார்கள்.  இறைவனுடைய அருளினால் பெற்ற வாக்கை அவனுடைய திருவருளை நினைந்து பாடுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவே மிகச் சிறந்த பயன்.

இறைவன் நமக்கு வாய் தந்திருப்பது சாப்பிடுவற்காக மாத்திரம் என்றால், எல்லா உயிர்களுக்கும் வாய் இருக்கிறது. நம்மைக் காட்டிலும் யானைக்கு மிகப் பெரிய வாய் இருக்கிறது. ஆனால் அதை வாயில்லாப் பிராணி என்றுதான் சொல்கிறோம். நாம் ஒரு கவளம் சாப்பிட்டால் யானை நூறு கவளத்தை ஒரே வாயில் சாப்பிட்டுவிடும். பெரிய பிராணி.  ஆனாலும், அதனை நாம் வாயில்லாப் பிராணி என்றே சொல்கிறோம். எனவே, சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. பேசும் வாய்தான் வாய். யானைக்குப் பேசத் தெரியாது. ஆகையால் அது வாயில்லாப் பிராணி ஆயிற்று. 

"வாழ்த்த வாயும், நினைக்க மடநெஞ்சும்,

தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச்

சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே

வீழ்த்தவா வினையேன் நெடுங் காலமே."

என்று அப்பர் பெருமான் பாடி இருக்கிறார்.

நன்றாகப் பேசக் கூடிய வாயைப் பெற்றிருந்தும், அந்த வாயையும், நாவையும் கொடுத்த இறைவனைப் புகழாதவனுக்கு வாய் இருந்தும் என்ன பயன்?  அந்த வாய்க்குக் குடிக்கக் கூழும் கிடைக்காது என்கிறார் வள்ளல்பெருமான். "எந்தை! நினை வாழ்த்தாத பேயர்வாய் கூழுக்கும் ஏக்கற்று இருக்கும் வெறு வாய்”. எனவே, வாய் கொடுத்த இறைவனை வாழ்த்துவது நம்முடைய முதற்கடமை. நமக்கெல்லாம் அவன் வாய் கொடுத்தது தன்னை எல்லாரும் புகழ வேண்டுமென்ற எண்ணத்தினால் அல்ல. நாம் புகழ்ந்து அவனுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லை. ஆனாலும் புகழ வேண்டியது நம்முடைய கடமை. நாம் நம்முடைய நாவைக் கொண்டு மற்ற மக்களைப் புகழ்ந்து பேசினால் அவர்களுக்கு இன்பம் உண்டாகும். ஆனால் அவரிடம் விருப்பம் இல்லாதவர்களுக்குத் துன்பம் உண்டாகும். யார் நமக்கு உபகாரம் செய்கிறார்களோ, அவர்களைப் புகழ்கிறோம். உபகாரம் செய்பவரைப் புகழ வேண்டும் என்று தெரிந்து கொண்டது உண்மையானால், அப்போதும் இறைவனைப் புகழ வேண்டும்.

இறைவன் புகழ் ஒன்றே பொருள்சேர் புகழ். அவனைப் புகழ்ந்தார்க்கு இருள்சேர் இருவினையும் சேரா என்கிறார் திருவள்ளுவ நாயனார். "இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு" என்பது திருவள்ளுவர் வாய்மொழி. பொருள்சேர் புகழ் என்பதற்கு உண்மையான புகழ் என்பது பொருள். இறைவனுடைய புகழ் ஒன்றே உண்மையான புகழ்.  அவன் ஒருவனே புகழத் தக்கவன். எல்லாவற்றுக்கும் மூலப் பொருளாகிய ஆண்டவனைப் புகழ்ந்தால், உண்மையை நாம் உணர்ந்து கொண்டவர்களாகவும் ஆவோம்; எல்லோரையும் புகழ்ந்ததாகவும் ஆகும். இதனை அப்பர் பெருமான் அருளிய திருத்தாண்டகப் பாடல் வழி அறியலாம்.

"நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய்!

நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்!

மன் ஆனாய்! மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்!

மறைநான்கும் ஆனாய்! ஆறு அங்கம் ஆனாய்!

பொன் ஆனாய், மணி ஆனாய், போகம் ஆனாய்!

பூமிமேல் புகழ்தக்க பொருளே! உன்னை

என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே. "

இறைவனைப் புகழ்ந்து பாடும் நன்றி உணர்வால் வாய் பெற்ற பயன் பெற்றது அல்லமால், மற்றொரு பயனும் உண்டு. இறைவன் பாடலை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகும் காலத்தில் வந்து மிரட்டுகிடன்ற பாவி ஆகிய இயமனுக்கு அஞ்ச வேண்டாம். அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்று சொல்ல வராது. 

இறைவன் நினைப்புச் சாகிற காலத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். நம் நினைவில் என்ன என்ன எண்ணப்படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம். நம் நினைவில் உள்ள திருடன் கனவில் வரும்போது, தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். ஆனால், நாம் நினைப்பதில்லை.  அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகள் கனவில் தோன்றுகின்றன. கனவிலே இறைவனைக் காண வேண்டுமென்றால் நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

சுந்தரமூர்த்தி சுவாமிகள் "பிழைப்பன், ஆகிலும் திருவடிப் பிழையேன்; வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்" என்றும், "நற்றவா உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்று பாடுகிறார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கிறதாம். அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால், கழிந்த நாள் கிடக்கட்டும், இப்பொழுதிலிருந்தாவது இறைவன் திருப்புகழைச் சொல்லப் பழகி வரவேண்டும். 

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குக் கல்யாணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, 'ஆறுமுகம்'  என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில் சில்லென்று விழுகிறது. காரணம்? அந்தச் சொல் இப்போது அந்தப் பெண்ணுடைய நாயகனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள்.

இதைப் போலவேதான் இறைவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டுகிறது. அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். யமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.

"அழித்துப் பிறக்கவொட்டா அயில் வேலன் கவியை அன்பால்

எழுத்துப்பிழை அறக் கற்கின்றிலீர் எரி மூண்டது என்ன

விழித்துப் புகை எழப் பொங்கு வெம் கூற்றன் விடும் கயிற்றால்

கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே."  --- கந்தர் அலங்காரம்.

நாம் இயமன் வாயில்தான் தூங்குகிறோம். நம்மை அவன் எந்தச் சமயத்திலும் கொண்டு போய்விடுவான். அது இன்ன சமயம் என்று நமக்குத் தெரியாது. இயமன் முன் எச்சரிக்கை அனுப்பிவிட்டு வருகிற பேர்வழி அல்ல. அதனால் நாம் எப்போதுமே பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அந்தப் பாதுகாப்பு இறைவனை நினைந்து அவனை வாயாரப் பாடிப் பகழ்தலே. திருஞானசம்பந்தர், "நீ நாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யார் அறிவார் சாநாளும் வாழ்நாளும்?"

என்று நெஞ்சுக்கு உபதேசம் செய்கிறார்.


61. புத்தாடை உடுக்கும் நாள்

 

61.  புத்தாடை உடுக்கும் நாள்

-----


"கறைபடாது ஒளிசேரும் ஆதிவா ரந்தனில்

     கட்டலாம் புதிய சீலை;

  கலைமதிக்கு ஆகாது, பலகாலும் மழையினில்

     கடிது நனைவுற்று ஒழிதரும்;


குறைபடாது இடர்வரும், வீரியம்போம், அரிய

     குருதிவாரம் தனக்கு;

  கொஞ்ச நாளில் கிழியும், வெற்றிபோம் புந்தியில்;

     குருவாரம் அதில் அணிந்தால்,


மறைபடாது அழகுண்டு, மேன்மேலும் நல்லாடை

     வரும்; இனிய சுக்கிரற்கோ

  வாழ்வுண்டு, திருவுண்டு; பொல்லாத சனியற்கு

     வாழ்வுபோம், மரணம் உண்டாம்;


அறைகின்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்கு

     அமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அறைகின்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே --- புகழப்படுகின்ற வேதங்களின் வடிவாகவும் ஆகமங்களின் வடிவாகவும் விளங்கும் தூயவனே!

அருமை மதவேள் --- அருமை மதவேள் என்பான், 

அனுதினமும் மனதில் நினைதரு --- எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, 

சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே --- சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

ஆதிவாரம் தனில் புதிய சீலை கட்டலாம் --- ஞாயிற்றுக்கிழமையில் புதிய ஆடையை உடுக்கலாம். 

(அவ்வாறு உடுத்தால்) 

கறை படாது --- ஆடையில் கறை பிடிக்காது. 

ஒளி சேரும் ---  தூயதாக ஒளிரும், 

கலை மதிக்கு ஆகாது - கலைகளையுடைய திங்களுக்குப் புத்தாடை புனைவது ஆகாது.   (உடுத்தினால்), 

பலகாலும் மழையினில் கடிது நனைவுற்று ஒழிதரும் --- பல முறையும் மழையில் நன்றாக நனைந்து கிழிந்துபோகும், 

அரிய குருதிவாரம் தனக்குக் குறை படாது இடர்வரும் வீரியம் போம் --- நன்மைக்கு ஆகாத செவ்வாய்க்கிழமையில் புத்தாடை உடுத்தினால் மிகுந்த துன்பம் உண்டாவதோடு,  பெருமையும் நீங்கிவிடும், 

புந்தியில் கொஞ்ச நாளில் கிழியும்; வெற்றிபோம் --- புதன்கிழமையில் புத்தாடை உடுத்தினால் சிலநாளிலே கிழிந்து போகும்; வெற்றியும் நீங்கும், 

குருவாரம் அதில் அணிந்தால் மறைபடாத அழகு உண்டு; மேன்மேலும் நல்ல ஆடை வரும் --- வியாழக் கிழமைகளில் புத்தாடையை உடுத்தினால் நீங்காத அழகு உண்டாகும்; மேலும் மேலும் நல்ல ஆடைகள் கிடைக்கும், 

சுக்கிரற்கோ வாழ்வு உண்டு திரு உண்டு --- புத்தாடையை வெள்ளிக்கிழமையில் உடுத்தால் நல்வாழ்வும் செல்வமும் உண்டாகும், 

பொல்லாத சனியற்கு வாழ்வுபோம், மரணம் உண்டாம் --- பொல்லாப்பை உண்டாக்கும் சனிக்கிழமையில் புத்தாடையை உடுத்தினால் வாழ்வு சிதையும்; இறப்பும் உண்டாகும்.

        ஞாயிற்றுக் கிழமை, வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமை ஆகிய நாள்களில் புத்தாடை அணிவதால் நலம் உண்டாகும் என்றும் மற்ற நாள்களில் புத்தாடை அணியலாகாது என்றும் பெரியோர் கூறுவர்.


50. காலத்தில் உதவாதவை

              50. காலத்தில் உதவாதவை                               ----- "கல்லாது புத்தகந் தனில்எழுதி வீட்டினிற்      கட்டிவைத் திடுகல்வ...