"கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும், காலத் தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார், மயானம் குறுகி, அப்பால்
எட்டி அடி வைப்பரோ, இறைவா கச்சிஏகம்பனே."
பொழிப்புரை : இறைவா - இறைவனே! கச்சி ஏகம்பனே - திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி உள்ளவனே! காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால் - காலன் என்னும் தச்சன், வெட்டி முறித்துத் தள்ளும் மரத்தைப் போல உடலைக் கீழே தள்ளி வீழ்த்திவிட்டால், கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் கொட்டி முழக்கி அழுவார் - கட்டித் தழுவும் மனைவியரும், பிள்ளைகளும் (பறைகளை அடிப்பித்து, வாத்தியங்களை முழக்குவித்துப்) புலம்பி அழுவார்கள். மயானம் குறுகி, அப்பால் எட்டி அடி வைப்பரோ - இடுகாடு வரையிலும் போய்த் திரும்பி விடுவார்கள். அதற்குமேல் ஓர் அடியாகிலும் எடுத்து வைப்பார்களோ, (வைக்கமாட்டார்கள்).
விளக்கம் : இறைவன் என்பது எங்கு தங்கும் பொருளைக் குறித்தது. இறை, இறைத்தல் என்னும் சொல்லடியாக வந்தது. பெண்டிரையும் மக்களையும் கட்டி அணைப்பது அன்பால். மிக நெருங்கிய உறவு முறை இது. நெருங்கிய உறவினரே சுடுகாடு வரையில் வந்து, அதற்கு மேல் நம்மோடு வரமுடியாது என்னும்போது, அவர்களே அதற்குமேல் உதவ முடியாது என்னும்போது, நாம் தேடிக்கொண்ட ஏனைய உறவினர்கள், நண்பர்கள் எவ்வளவு தூரம் துணை போவார் என்பதையும், நாம் தேடி வைத்த அஃறிணைப் பொருள்கள் எத்துணை உதவி செய்யும் என்பதையும் ஆராய்ந்து தெளிந்துக் கொள்ளவே, அடிகள் இவ்வாறு அறிவுறுத்தினார்.
காலன் - உயிர்களின் காலம் அறிந்து வருபவன். தச்சன் மரத்தை வெட்டிச் சாய்ப்பது போல், காலனும் சரீரத்தைக் கொன்று சாய்ப்பதால், அவன் தச்சன் எனப்பட்டான்.
இதைப் பின்வரும் அப்பர் தேவாரத்தாலும் தெளியலாம்...
"எத்தாயர், எத்தந்தை, எச்சுற்றத்தார்,
எம்மாடு சும்மாடாம், ஏவர் நல்லார்,
செத்தால்வந்து உவுவார் ஒருவர் இல்லை,
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்,
சித்தாய வேடத்தாய், நீடு பொன்னித்
திருவானைக்கா உடைய செல்வா, என்தன்
அத்தா, உன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டம் கொண்டுஅடியேன் என்செய் கேனே."
பொழிப்புரை : எத்தனை மேம்பட்ட நற்றாய் செவிலித்தாயர், தந்தை, சுற்றத்தார் என்று நம்மால் போற்றப்படுபவருள் எவர் நமக்கு நல்லவர்கள்? எந்தச் செல்வம் நம்மைத் தாங்கக் கூடியது ஆகும்? நாம் இறந்தால் நம் தேகபந்துக்களோ, நாம் ஈட்டி வைத்த செல்வமோ நமக்கு உதவும் வாய்ப்பு இல்லை. சிறிய விறகால் தீ மூட்டி இறந்த உடலைக் கொளுத்தி விட்டு, எல்லோரும் பிரிந்து செல்வர். ஆதலின், ஏனைய தேகபந்துக்களை விடுத்து, `என் தலைவனே! ஞானவடிவினனே! நீர்வளம் மிக்க காவிரிக் கரையில் அமைந்த திருவானைக்காவை விரும்பி எழ்ந்தருளியிருக்கும் இடமாக உடைய செல்வனே! உன் பொலிவுடைய திருவடிகளைச் சரணாக அடையப்பெற்றால், துன்பத்தால் வருந்தும் நிலையை யான் அடைவேனோ?` எனக்குத் துன்புறும் நிலை ஏற்படாது.
விளக்கம் : மாடு - செல்வம். சும்மாடு - நல்ல செல்வம். எது நல்ல செல்வம். நாம் போனவுடன் நமக்கு வேறாகின்றவை எல்லாம் நல்ல செல்வமா? அவை நம்மோடு வருவதில்லையே. அவை நம்மைத் தாங்குமா?
சும்மாடு - வருத்தம் தராமல் தாங்குவது என்று ஒரு பொருளும் உண்டு. பொருள் சுமை வருத்தாதபடி, தலையில் வைப்பது சும்மாடு. நாம் தேடி வைத்த செல்வம் நம்மைத் தாங்காது.
சிறுவிறகு - எளிதில் தீப்பற்றுவதான விறகு. பிணம் எளிதில் எரிந்து போகவேண்டுமென்றால் இந்த விறகு தான் தேவை. நேரிதின் வெட்டப்படாத விறகும் கூட.
பிணமானது வெந்து தணிந்து போகும் வரை கூட அங்கே நில்லாது, தீயை மூட்டி விட்டு விரைந்து திரும்பிக் கூடப் பார்க்காமல் செல்வர் என்பதைச் செல்லா நிற்பர் என்றார். ஏற்கெனவே, பெற்றிருப்பது எல்லாம் உயிர்த்துணையாக வராது என்பதால், உன் பொற்பாதம் அடையப்பெற்றால் என்றார். அடைய முயற்சிப்பது நமது கடமை. எதை எதையோ அடைய முயற்சித்தோம். திருவருளை அடைய முயற்சித்தோமா?
No comments:
Post a Comment