திரு ஏகம்ப மாலை - 6

 



"பிறக்கும்பொழுது கொடுவந்தது இல்லை, பிறந்து மண்மேல்

இறக்கும்பொழுது கொடுபோவது இல்லை, இடைநடுவில்

குறிக்கும்இச் செல்வம் சிவன்தந்தது என்று, கொடுக்க அறியாது

இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை :  திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, உலகத்தில் பிறக்கும் காலத்தில் ஒரு பொருளையும் உடன் கொண்டு வந்தது இல்லை.  பிறந்து, பிறகு இறக்கும் காலத்திலும் ஒரு பொருளையும் கொண்டு போவது இல்லை. இடைக் காலத்தில் தோன்றும் பொருட்செல்வம், நமது வினைப்பயன் காரணமாக, சிவபெருமானால் அளிக்கப் பெற்றது என்று உறுதியாக நம்பி,  அப்பொருளைக் கொண்டு உயிருக்கு உறுதி தரும் நல்வினையை, பிறவியை அறுக்கும் பெருமருந்தாகிய பதிபுண்ணியத்தை ஆற்றி வருவதே நல்வழி என்று கொண்டு,  இல்லை என்று இரப்பவருக்கு இல்லை என்னாமல் கொடுத்து உதவத் தெரியாமல், வாழ்நாளை வீழ்நாளாக்கி மாண்டுபோகும் கீழ்மக்களுக்கு என்ன சொல்வேன்.  


விளக்கம் : ஆன்மா, கன்மவயத்தால் ஒரு உடம்பை விட்டு, மற்றொரு உடம்பில் சேருமிடத்து, மண், பெண், பொன் முதலிய சகல பொருள்களையும் விட்டுப், புரியட்டகத்துடன் அடைகிறது.  எனவே, "பிறக்கும்பொழுது கொண்டு வந்தது எதுவும் இல்லை".  அங்ஙனம் பூமியில் பிறந்து, தனதானியாதிகளைத் தேடி, அனுபவித்து, இன்னும் நீண்ட நாள் இருப்போம், நாமே அனுபவிப்போம் என்னும் ஆசையால் பொருளைக் குவித்து, இறப்பு வந்தபோது, அந்த ஆன்மா தான் தேடிய பொருள்களை எல்லாம் கொள்ளாது, உடம்பை விட்டுப் போதலின், "இறக்கும்பொழுது கொடு போவது இல்லை" என்றார்.   


பிறக்கும்பொழுது, இறக்கும்பொழுது என்றதனால், பிறவிகள் தோறும் என்று கொள்ள வேண்டும். செல்வமானது இடையில், ஆன்மா பூர்வ சன்மத்தில் ஆர்ச்சித்த புண்ணிய புவத்தின் அளவு, இடையில் பட்டது. தவிர, ஆன்ம முயற்சியினாலேயே எல்லாம் வந்ததும் இல்லை.  அதனால் "இடைநடுவில் குறிக்கு இச்செல்வம்" என்றார். ஆன்மா ஈட்டிய இச் செல்வமானது, சடம் ஆதலால், தாமே குறித்த இடத்திற்குச் செல்லாது.  ஆனால், ஆன்மா ஈட்டிய கன்மமானது செல்லுமாயின், அதுவும் சிவாஞ்ஞையால் புண்ணிய பாவத்தின் அளவே ஆகும் என்பதால் "சிவன் தந்தது" என்றார்.


இறைவன் புண்ணியத்திற்கு ஈடாகத் தந்தது. ஆதலால், அச் செல்வம் தோன்றியபோது,  நாலடியார் உணர்த்துவது......


"நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து,

ஒன்றின ஒன்றின வல்லே, செயின்,செய்க;

சென்றன சென்றன, வாழ்நாள், செறுத்துஉடன்

வந்தது வந்தது கூற்று." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


வாழ்நாள் - உடம்போடு கூடி வாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான். (ஆதலால்) நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றன என்று நினைத்துக் கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என உணர்ந்து - நிலைபெறா என்று தெரிந்து, ஒன்றின ஒன்றின செயின் - இசைந்தன இசைந்தனவாகிய அறங்களைச் செய்யக் கருதுவீர்களானால்,  வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக.


(கருத்து.) வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும்.


ஒல்லும் அளவு அறம் செய்க என்பதற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவும் கூறினார். ‘செல்கின்றன' என்னும் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லும் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியர் உரை இங்கே நினைவு கூரற்பாலது.


"என்ஆனும் ஒன்றுதம் கைஉறப் பெற்றக்கால்,

பின்ஆவது என்று பிடித்துஇரா, - முன்னே

கொடுத்தார் உயப்போவர், கோடுஇல்தீக் கூற்றம்

தொடுத்துஆறு செல்லும் சுரம்." --- நாலடியார்.


இதன் பதவுரை ---


என் ஆனும் ஒன்று தம் கை உற பெற்றக்கால் - யாதாயினும் ஒரு பொருளைத் தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று பிடித்து இரா - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார்.


(கருத்து.) இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர்.


சிறிது கிடைத்தாலும் அறம் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாய் இருத்தலின், கிடைத்த உடனே அறத்திற்குச் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கம் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது; அஃதாவது, பெற்ற உடனே என்பது; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.


இவ்வாறு செய்யாதவர், "சிவன் தந்தது என்று கொடுக்க அறியாது இறக்கும்" என்றார். இறைவன் தந்த அறிவினைப் பெற்றிருந்தும், அந்த அறிவினைச் செல்வம் சேகரிக்கப் பயன்படுத்திக் கொண்டு, செல்வத்தால் பெறவேண்டிய பயனைக் கருதாது, அந்த அறிவு மட்டும் இல்லாது இருத்தலின், அவர்களைக் கீழ்மக்கள் எனக் குறிக்க, "குலாமர்" என்றார்.  


செல்வம் நிலையாமையையும், அதைக் கொண்டு அனுபவிக்கும் யாக்கை நிலையாமையையும் கண்கூடாகக் கண்டும், சுருதி, புராணங்களாலும், அருள் நூல்களாலும்,  நல்லோர் உரையாலும் அறிந்து இருந்தும், பிறர்க்குக் கொடாது முற்பிறப்பில் செய்த புண்ணியத்தை இழந்து, இனி மறுமைக்கும், வேண்டிய புண்ணியத்தைப் பெறாது, வாளா இறந்துபோகும் மனிதர்கள் மேல் இரக்கம் கொண்டு அடிகளார் "என் சொல்லுவேன்" என்றார்.


No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...