திரு ஏகம்ப மாலை - 18

 


"கல்லார் சிவகதை, நல்லோர் தமக்குக் கனவிலும் மெய்

சொல்லார், பசித்தவர்க்கு அன்னம் கொடார், குருசொன்னபடி

நில்லார், அறத்தை நினையார், நின்நாமம் நினைவில்சற்றும்

இல்லார், இருந்துஎன்? இறந்துஎன்? புகல், கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனேக்!  சிவகதைகளைப் படிக்கமாட்டார்கள். நல்லவர்களிடத்தில் கனவிலும் உண்மை பேசமாட்டார்கள். குருவின் வார்த்தைகளை மதித்து நடக்கமாட்டார்கள். தருமத்தைச் செய்ய மனதாலும் நினைக்கமாட்டார்கள். உனது திருநாமத்தை சற்று நேரமும் நினைவில் வைக்கமாட்டார்கள். இவர்கள் உயிரோடு இருந்து என்ன பயன்.  இறந்தால் என்ன கெடுதி. சொல்வாயாக.


விளக்கம்: மேல்பாடலில் "கல்லாப் பிழை" என்று காட்டினார்.  ஒருவன் கற்க வேண்டியது, நெஞ்சை நல்வழிப்படுத்தி, நெஞ்சை உருக்கி, ஆணவமலத்தின் வலியை அடக்குகின்ற நல்ல நூல்களே. ஆகையால், பிற நூல்களை வேறு காரணம் பற்றிக் கற்றாலும், அருள் நூல்களைக் கல்லாமல் இருப்பது பிழை என்பதால், "கல்லாப் பிழை" என்று அதனைக் குறித்தார். மற்ற கதைகளைப் படித்தால் பல்விதமான உணர்வுகள் பிறக்கும். சிவகதைகளைப் படிக்கும்போது பத்தி உணர்வே மேலோங்கி நிற்கும். ஆகவே ஒருவன் கற்க வேண்டியது வெறும் அறிவு நூல்களை அல்லாமல், அருள் நூல்களே என்பதால், அவற்றைக் கல்லாதவரை, "கல்லார் சிவகதை" என்று காட்டினார். சிற்றின்ப உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் நூல்கள் யாரையும் மயக்கும்.  ஆனால், அறிவு மயக்கம் தீர்க்கும் நூல்களைப் பயிலுதல் பெரும்பயன் தரும்.   


"பால் ஆழி மீன் ஆளும் பான்மைத்து, அருள் உயிர்கள்

மால் ஆழி ஆளும் மறித்து."


என்று சித்தாந்த சாத்திர நூலாகிய திருவருட்பயன் சொல்லும்.


பாற்கடலிலே பிறந்து அதனுள் வாழும் மீன்களானாலும், தமக்குக் கிடைத்திருக்கும் மிகுதியான பாலை விரும்பாது, வேறு பொருள்களையே விரும்புவது போல, சைவசமயத்தில் பிறந்தும், சிவ சரிதங்களை விரும்பிக் கற்காமல், புறச்சமய நூல்களைக் கற்று பொழுது போக்குவது மானிட இயல்பு. அருளைப் பெற வேண்டிய உயிர்கள் மருளிலேயே மயங்கும்.


தமது செல்வக் களிப்பால், பெரியவர்களிடத்துப் பொய்கூறல் முதலிய பிழைகளைச் செய்வாரானால், பெரியவர்களின் கோபத் தீயே அச் செல்வத்தைக் கணநேரத்தில் அழித்துவிடும் உணராமல் இருப்பதால், "நல்லோர் தமக்குக் கனவிலும் மெய் சொல்லார்" என்றார்.


உடம்பு நிலைபெற அதனை வளர்க்க வேண்டியது, ஓம்ப வேண்டியது அவசியமே. உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வை வளர்ப்பதாக இருக்க வேண்டும். "உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூலர். உயிர் உணர்வு வளர வளர, எல்லா உயிர்களிடத்தும் கருணை பிறக்கும். "பசித்தோர் முகம் பார்" என்பது போல, "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்பதை உணர்ந்து, "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்பதை உணர்ந்து, பசித்தவர்க்கு அன்னம் கொடாதவரை இங்கு காட்டினார்.


குரு என்பவர், நம்மை நல்வழிப்படுத்தி நாளும் உணர்வால் வாழ்விப்பவர். இறைவனே, ஒருவருக்கு ஞானகுருவாக எழுந்தருளுவான். குரு வார்த்தைகளை மதித்து ஒருவன் நடந்தால் ஈடேறலாம். இல்லையேல், தீவினை வயப்பட்டு, நரகம் எய்துதல் கூடும்.  அதனால், "குருசொன்னபடி நில்லார்" என்றார்.


அறம் என்பது ஒருவனுக்கு இம்மை, மறுமை நலன்களையும்,  எல்லாவற்றிற்கும் மேலான வீட்டின்பத்தையும் வழங்க வல்லது.  அதை நினைக்காமல் வாழ்வோரை, "அறத்தை நினையார்" என்றார்.


"திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்.....பெருநோய்கள் மிக நலியப் பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றார்" என்று அப்பர் பெருமான் அருளினார் என்பதால், "நின் நாமம் நினைவில் சற்றும் இல்லார்" என்றார்.


இப்படிப்பட்டவர்கள் உலகில் வாழ்ந்தும், உயிருக்கு ஆக்கமாகிய யாதொரு பயனையும் அடையாதவர்கள். ஆகையால், இவர்கள் வாழ்வதால் என்ன நன்மை. இறப்பதால் என்ன கெடுதி என்பார், "இருந்து என், இறந்து என்" என்றார்.


No comments:

Post a Comment

பொது --- 1096. இருவினைகள் ஈட்டும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இருவினைகள் ஈட்டும் (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதனன தாத்த தனதனன தாத்த      தனதனன தாத்த ...... தன...