"பொல்லாதவன், நெறிநில்லாதவன், ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்அடியவர்பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்குஅன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன், கச்சிஏகம்பனே."
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நான் கொடியவன், சன்மார்க்கத்தில் ஒழுகாதவன், ஐம்புலன்களை வெல்லாதவன், ஞானநூல்களைப் படித்து நிற்காதவன், உண்மை அடியவர்களிடம் சேராதவன், மெய் பேசாதவன், உனது திருவடிக்கு அன்பு இல்லாதவன். இத்தகைய கொடியேன் இந்த உலகில் ஏன் பிறந்தேன்.
விளக்கம் : மக்களாகப் பிறவி தாங்கியவர்கள் கடைப் பிடித்து ஒழுக வேண்டிய நல்ல நெறிகளை உணர்ந்து, அதைத் தாங்கும் அருள் நூல்களை ஓதி அறிந்து, அறிந்தார்பால் மேல் விளக்கம் பெற்றுத் தெளிந்து, ஞானத்தை அடைந்து, ஞான நிட்டை கூடி, இறைவன் திருவடியை அடையவேண்டும். ஒழுக வேண்டிய நெறிகளை எதிர்மறை முகத்தால் அடிகள் தெளிவாக்கினார்.
அப்பர் பெருமான் பாடியருளிய திருத்தாண்டகப் பாடல் ஒன்றைக் காண்போம்....
குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
குற்றமே பெரிதுஉடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
நல்லாரோடுஇசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன் அல்லேன்
வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
என்செய்வான் தோன்றினேன் ஏழையேனே.
இதன் பொருள் ---
சார்ந்த கூட்டத்தால் நான் தீயேன்; குணத்தாலும் தீயேன்; குறிக்கோளாலும் தீயேன். குற்றமாகிய செயலே பெரிது உடையேன்; நலம் பயத்தற்குரிய வேடத்தாலும் தீயேன். எல்லாவற்றாலும் நான் தீயேன். ஞானியல்லேன்; நல்லாரோடு கூடிப் பழகிற்றிலேன்; மறவுணர்வு, பாவ உணர்வு உடைய மக்கட்கும், அது இல்லாத பிற உயிர்கட்கும் இடைநிற்கின்ற ஒரு சார் விலங்கும் அல்லேன்; மன உணர்வு பெற்றும் அம் மன உணர்வால் பயன் கொள்ளாமையின் விலங்கு அல்லாது ஒழிந்தேனும் அல்லேன்; வெறுக்கத்தக்க பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்பனவற்றையே மிகப் பெரிதும் பேசும் ஆற்றலினேன். நல்ல குடியில் பிறந்தேன் ஆயினும், என்செயலால் அதுவும் பொல்லேனாக இகழப்பட்டேன். பிறர்பால் இரப்பதனையே மேற்கொண்டு என்பால் இரப்பவர்க்கு யாதும் ஈய மாட்டேன். இந்நிலையில் அறிவற்ற நான் என் செய்வதற்காக மனிதனாகத் தோன்றினேன்.
வள்ளற்பெருமான் பாடியருளிய திருவருட்பாப் பாடல் ஒன்றையும் இங்கே சிந்திப்போம்.....
"குலத்திடையும் கொடியன், ஒரு குடித்தனத்தும் கொடியேன்,
குறிகளிலும் கொடியன், அன்றிக் குணங்களிலும் கொடியேன்,
மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,
வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்,
நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா
நாய்க்குநகை தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,
நிலத்திடைநான் ஏன்பிறந்தேன், நின்கருத்தை அறியேன்,
நிர்க்குணனே, நடராஜ நிபுணமணி விளக்கே."
இதன் பொருள் ---
குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மையில்லாதவனாகிய யான் மலத்திற் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன்; வன்மையுற்ற மனத்தையுடைய பெரும்பாவி; வஞ்சம் நிறைந்த நெஞ்சினையுடைய புலைத்தன்மை கொண்டவன்; நலமாகியவற்றைச் சிறிதும் நெருங்குதல் இல்லாதவன்; பொல்லாத நாயும் கண்டு நகைக்கத்தக்க கீழ்மையுற்றுள்ளேன்; பேயினும் இழிக்கத் தக்க யான் இந்நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியேன்; பிறப்பித்த நின் திருவுள்ளம் யாதென்று அறியேன்; நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே எனக்கு உரைத்தருள்க.
No comments:
Post a Comment