"பொல்லா இருள்அகற்றும் கதிர் கூகைஎன் புள்கண்ணினுக்கு
அல்லாய் இருந்திடுமாறு ஒக்குமே, அறிவோர் உளத்தில்
வல்லார் அறிவார், அறியார் தமக்கு மயக்கம் கண்டாய்,
எல்லாம் விழிமயக்கே இறைவா, கச்சிஏகம்பனே".
பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே! ஞானத்தால் விடயஞான ஆராய்ச்சியை உணர்தற்கு உரிய மனக் கிளர்ச்சியில் வல்லவர்களாகிய ஞானிகள் உண்மைப் பொருளை, உள்ளபடி தமது ஞானக் கண்ணால் காண்பார்கள். அப்படிப் பார்ப்பதற்கு உரிய ஞானக்கண், அறிவுக்கண் இல்லாதவர்க்கு, அந்த உண்மைப் பொருள் உணர்ச்சி மயக்கமே ஆகும். அது எதுபோல என்றால், கொடிய இருளை ஒழிக்கும் சூரியனுடைய ஒளியானது, கூகை என்கிற பறவையின் கண்ணுக்கு இருளாய் இருக்கும் தன்மையை ஒத்தது. ஆதலால், எல்லாம் காட்சி மயக்கமே.
விளக்கம்: கூகை - கோட்டான். இந்தப் பறவைக்குப் பகலும் இருளாகவே தோன்றும். அதுபோல், அஞ்ஞானிகளுக்கு, எங்கும் நிறைந்த சிவஒளி புலனாகாது. "ஊமன் கண்போல ஒளியும் மிக இருளே, வாமன் கண் காணாதவை" என்பார் உமாபதி சிவாசாரியார். மக்களுக்கு இருவகைக் கண்கள் இருக்கின்றன. ஒன்று புறக்கண். மற்றொன்ரு அகக்கண். புறக்கண் ஊனக்கண் எனவும், அகக்கண் ஞானக்கண் எனவும் சொல்லப்படும். ஊனக்கண்ணுக்கு சிவம் தோன்றாது. ஞானக்கண்ணுக்கு மாயை தோன்றாது. சிவம் என்னும் பொருள் போக்கு வரவு கடந்தது. அதற்குத் தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை. எப்போதும் ஒரே பெற்றித்தாய் இருப்பது. அது தோன்றுவது போலவும் மறைவது போலவும் நிகழ்வது ஊனக்கண் மயக்கத்தால். இது குறித்தே அடிகளார், எல்லாம் விழி மயக்கே என்றார்.
"முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்,
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்,
மகட்குத் தாய்தன் மணாளோடு ஆடிய
சுகத்தைச் சொல்எனின் சொல்லுமாறு எங்ஙனே". --- திருமந்திரம்.
பதியாகிய சிவத்தை ஊனக்கண் உணராது. ஞானக்கண்ணினில் சிந்தை நாட வேண்டும் என்பதை, "ஊனக்கண் பாசம் உணராப் பதியை, ஞானக் கண்ணினில் சிந்தை நாடி" என்றார் மெய்கண்டார்.
கண்ஒளி உள்ளவர்களுக்குக் கதிரவன் ஒளி தோன்றும். கோட்டானுக்கு ஒளி தோன்றவில்லை என்பதால் கதிரவன் இல்லை என்று பொருளல்ல. கோட்டானுக்கு அதைக் காணும் திறன் இல்லை என்பதே பொருள். "அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரே" என்பார் அப்பர் பெருமான்.
"அருளால் எவையும் பார் என்றான், அத்தை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்,
இருள்ஆன பொருள் கண்டது அல்லால், கண்ட
என்னையும் கண்டிலேன் என்னடி தோழி!" --- தாயுமானார் சுவாமிகள்.
உயிருக்குத் தொன்றுதொட்டே உள்ள அவிச்சை என்னும் அஞ்ஞானமும், அந்த அஞ்ஞானம் பற்றி, நான் என மதிக்கும் அகங்காரமும், அந்த அகங்காரம் பற்றி எனக்கு இது வேண்டும் என்று தோன்றுகின்ற விருப்பும், அந்த விருப்பு பற்றி, அப் பொருளிடத்தே செல்லும் ஆசையும், அந்த ஆசை பற்றி, அந்தப் பொருள் கிடைக்காத போது உண்டாகும் கோபமும் உடையவர்கள், ஊனக் கண் கொண்டவர்களே. அவர்களுக்கு ஞானக் கண் இல்லையாதலால், மெய்ப்பொருளைக் காணமாட்டாமல் மயங்குவார்கள். இதனாலேயே, "அறியார் தமக்கு மயக்கம் கண்டாய், எல்லாம் விழிமயக்கே" என்றார் அடிகளார். அதற்குக் காரணம், அவர்களுக்கு உள்ள மனக்குற்றம்.
திருவள்ளுவ நாயனார் அருளிய "மெய்யுணர்தல்" என்னும் அதிகாரத்தை, மெய்யாகவே ஓதி, உணர்தல் வேண்டும்.
No comments:
Post a Comment