"நல்நாரில் பூட்டிய சூத்திரப் பாவை, நல்நார் தப்பினால்
தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ, அந்தத் தன்மையைப் போல்
உன்னால் யானும் திரிவது அல்லால், மற்று, உனைப் பிரிந்தால்
என்னால் ஆவது உண்டோ, இறைவா கச்சிஏகம்பனே."
பதவுரை --- இறைவா, கச்சி எகம்பனே - திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனே, நல் நாரில் பூட்டிய சூத்திரப் பாவை - நல்ல நாரினால் கட்டப்பெற்ற சூத்திரப் பதுமையானது, நல் நார் தப்பினால் - அந்த நார் அறுந்தால், தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ -தானே இயங்கி ஓய்ந்து போகுமோ? இயங்காது. அந்தத் தன்மையைப் போல் - அதுபோல, உன்னால் யானும் திரிவது அல்லால் - தேவரீர் திருவருள் துணையால் அடியேன் நடமாடுவது அல்லால், மற்று உனைப் பிரிந்தால் - ஆட்டுவிக்கும் தேவரீரைப் பிரிந்து நின்றால், என்னால் ஆவது உண்டோ - ஏளியேனால் இங்கே ஒரு செயல் நிகழ்வது உண்டோ. (நிகழாது)
விளக்கம் : ஒரு பொம்மையைக் கயிற்றினால் கட்டி, அதை ஆட்டுவிப்பர். ஆட்டுவிப்பவர் ஆட்டும் வரை பொம்மை ஆடும். பொம்மலாட்டம் என்பது இதுவே. ஆட்டுவிக்கின்ற கயிறு அறுந்து போனால், பொம்மை தானாக ஆடாது. அதுபோல, இருவினை என்னும் கயிற்றினால், இந்த உலக உயிர்களை இறைவன் ஆட்டுவிக்கின்றான். இல்லையாயின், உயிரின் இயக்கம் இருக்காது. உயிர் தானாக இயங்க முடியாது. ஆகவே, அவனருளையே எப்போதும் நாடியிருக்கவேண்டும்.
தாயுமான சுவாமிகள் பின் வருமாறு பாடினார்.....
"சாட்டையில் பம்பர சாலம் போல்எலாம்
ஆட்டுவான் இறை, என அறிந்து, நெஞ்சமே,
தேட்டம்ஒன்று அறஅருட் செயலில் நிற்றியேல்
வீட்டுஅறம் துறவுஅறம் இரண்டும் மேன்மையே."
இதன் பொருள் ---
(எனக்கு ஒப்பில்லாத உறுதுணையாக வேண்டிய என்) மனமே! கயிற்றினால் சுழற்றப்பட்டுக் கிறுகிறு எனச் சுற்றி நிற்கும் பம்பரக் கூட்டங்கள் போன்று உயிர்களை இயக்குபவன் இறைவனே என்றும் உனக்கு என்று ஒரு செயல் திருவருளால் வகுக்கப்படவில்லை என்றும் உணர்ந்து, உனக்கென எவ்வகைத் தேட்டம் இமில்லாமல் திருவருட் செயலின்வழி நிற்பாயானால் இல்லற வாழ்க்கையும், தனை நிகர் துறவற வாழ்க்கையும் திருவடிப் பேறு எய்துதற்கு ஒத்த மேம்பாடு உடையனவே ஆகும்.
பின்வரும் சிவஞானசித்தியார் சுபக்கப் பாடல் இதனை மேலும் தெளிவாக்கும்....
"நாடுகளில் புக்கு உழன்றும், காடுகளில் சரித்தும்,
நாகமுழை புக்குஇருந்தும், தாகமுதல் தவிர்ந்தும்,
நீடுபல காலங்கள் நித்தராய் இருந்தும்,
நின்மல ஞானத்தை இல்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பில்,
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும், இறைஞானம்
கூடும் அவர் கூட அரிய வீடும் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்."
இதை அப்பர் பெருமான் பின்வரும் திருத்தாண்டகப் பாடலால் மேலும் தெளிவாக்கினார்....
"ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகு வித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே."
விளக்கம் : கண்ணுதல் பரம்பொருளே! உயிர்களை அவற்றோடு இரண்டறக் கலந்துள்ள ஆணவம் காரணமாக உண்டாகும் யான், எனது என்னும் அகப்பற்று, புறப்பற்று தீருவதற்காக, அவற்றைப் பல்வேறு உடம்பாகிய பாவையில் படுத்து, திருவருள் துணைக் கொண்டு இருவினையாகிய கயிற்றினால் கீழ், நடு, மேல் என்னும் மூவுலகங்களிலும், வினைகளை ஈட்டியும் அனுபவித்தும் வருதலாகிய கூத்தாட்டை நீ ஆட்டுவிப்பாயானால், ஆடாதவர் யார்?
"வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி
உனாகி, உயிராகி, உண்மையுமாய், இன்மையுமாய்,
கோனாகி, யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே"
என்றார் மணிவாசகப் பெருமான்.
உயிர்களுக்கு களைப்புத் தோன்றாதவாறு, இளைப்பாறும்படி நீ அடங்கச் செய்வாயானால், அடங்காதவர் யார்? ஆட்டுவிக்கின்ற உன்னை உணராதபடி, உயிர்கள் உலகப் பொருள்களின் போகத்திலேயே திளைத்திருக்கும்படி, திரோபவம் என்னும் மறைப்பத் தொழிலை நீ செய்யவில்லை என்றால், நீ ஓட்டுவிப்பாயானால் , உலக மாயையிலே உழலச் செய்வாயானால் , ஓடாதவர் யார்?
அப்படி உலக இன்பங்களிலேயே ஓடி ஓடி உழன்று, பயன் ஒன்றும் காணாது, உலக இன்ப துன்பங்களிலே உவர்ப்பினை அடைந்து, தன்னை உணருமாறு செய்து, பின் உன்னை உணர்ந்து, உனது பேரருளை எண்ணி, எண்ணி, மனம் உருகி வழிபாடு செய்து, உனதருளைப் பெறுமாறு, உயிர்கட்கு உள்ளிருந்து உணர்த்தி, உருகச் செய்வாய் என்றால், உருகாதவர் யார்?
மன உருக்கம் தோன்றிய வழி, உநது அருட்புகழை, பொருள்சேர் புகழை, அருட்பாடல்களைக் கொண்டு பாடுவிப்பாயானால், பாடாதவர் யார்?
அன்புமிக்கு மெய் உருகி, அகம் குழைந்து பாடும் அடியவர்களின் தன்முனைப்பு முற்றிலும் நீங்கி, உன்னடியையே பணிந்து உருகும்படி நீ செய்வாயானால், பணியாதவர் யார்?
உயிர்கள் தன்முனைப்பால் உன்னைக் காணமுடியாத போது, தன்முனைப்பையும் விட்டு, உன் அருளிலேயே திளைத்திருக்கும்படி செய்து, அறிவும், அறியாமையும் கடந்த அறிவு உனது திருமேனி என்று ஞானத்தால் உணர்ந்து, ஞானத்தால் தொழுமாறு, உனது சொரூப நிலையை நீ காட்டுவாயானால், காணாதவர் யார்?
நீ காட்டுவியாத பொழுது, உயிர்கள் தாமே தமது சிற்றறிவின் துணைக் கொண்டு உன்னைக் காணக் கூடிய வல்லமை அற்றவை. உயிர்களின் தன்மைக்கு இரங்கி, நீ காட்டினால் ஒழிய அவை உன்னைக் காணமுடியாது. நீயாக வந்து காட்டினால், காணாதவர் யார்?
இதையே, நேர்மறையாக ஒரு பாடலில் காட்டினார் வள்ளற்பெருமான்...
"பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்காது என்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ, இச்
சிறியேனால் ஆவது என்னே."
சிவபரம்பொருளே, நினது திருவருள் என்னைப் பாடச் செய்தலால் பாடுகின்றேன்; பணியச் செய்தலால் பணிகின்றேன்; நின் திருவடி நினைவில் சேர்த்தலால் யான் அதனைக் கூடுகின்றேன்; மனம் உருகச் செய்தலால் உருகுகின்றேன்; குறித்த உணவை உண்பித்தால் உண்கின்றேன்; உறங்கச் செய்தலால் உறங்குகின்றேன்; உறங்காமல் உலக வாழ்வில் ஆடச் செய்தலால் ஆடுகின்றேன்; ஐயோ, சிறியவனாகிய என்னால் தனிநிலையில் ஆவக் கூடியது ஒன்றுமில்லை.
No comments:
Post a Comment