அருணகிரிநாதர்
அருளிய
திருப்புகழ்
அடல்வடி வேல்கள்
(திரு ஆமாத்தூர்)
முருகா! விலைமாதர் வயப்பட்டு
அடியேன் உழலாமல்,
தேவரீரது ஆறுதிருமுகங்களையும்,
பன்னிரு திருத்தோள்களையும்
வழிபட்டு உய்ய அருள்.
தனதன
தான தானன, தனதன தான தானன
தனதன தான தானன ...... தனதான
அடல்வடி
வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
மயில்விழி யாலு மாலெனு ...... மதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலை
யதின்முக மூடு மாடையி ...... னழகாலுந்
துடியிடை
யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொரு
துணிவுட னூடு மாதர்கள் ...... துணையாகத்
தொழுதவர்
பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்
துலையலை மாறு போலுயிர் ...... சுழல்வேனோ
அடவியி
னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியு
மடிதொழு தாடு மாண்மையு ...... முடையோனே
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனை
அறிவுட னோது மாதவர் ...... பெருவாழ்வே
விடையெறு
மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினை
யுகநெடி தோட மேலணை ...... பவர்மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அடல்
வடிவேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர்படும்
அயில் விழியாலும், மால் எனும் ...... மதவேழத்து
அளவிய கோடு போல் வினை அளவு அளவான கூர்முலை
அதின் முகம் மூடும் ஆடையின் ...... அழகாலும்,
துடி
இடையாலும், வாலர்கள் துயர் உற
மாயமாய் ஒரு
துணிவுடன் ஊடு மாதர்கள் ...... துணையாக,
தொழுது
அவர் பாதம் ஓதி, உன் வழிவழி யான் எனா
உயர்
துலை அலை மாறு போல் உயிர் ......
சுழல்வேனோ?
அடவியின்
ஊடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும்,
அடிதொழுது
ஆடும் ஆண்மையும் ...... உடையோனே!
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேள் எனா,
உனை
அறிவுடன் ஓதும் மாதவர் ...... பெருவாழ்வே!
விடை
ஏறும் ஈசர் நேசமும், மிக நினைவார்கள்
தீவினை
உக, நெடிது ஓட மேல் அணை- ...... பவர் மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடு மாதையில்
விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.
பதவுரை
அடவியின் ஊடு
வேடர்கள் அரிவையொடு --- காட்டினுள் இருந்த வேடர்களின் மகளான வள்ளிநாயகியுடன்
ஆசை பேசியும் --- அன்பாகப் பேசி,
அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே
--- அவளுடைய திருவடிகளைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தை உடையவரே!
அழகிய தோள் இராறு
உடை அறுமுக வேள் எனா --- அழகிய பன்னிரு திருத்தோள்களை உடைய ஆறுமுகப்
பரம்பொருளே என்று
உனை அறிவுடன் ஓது மாதவர் பெரு வாழ்வே ---
தேவரீரை ஞானத்தால் வழிபடுகின்ற பெருந்தவர்களுக்குப் பெரு வாழ்வினை அருள்பவரே!
விடை எறும் ஈசர்
நேசமும் மிக
--- விடையினை ஊர்ந்து வரும் சிவபெருமானிடத்தில் அன்பு மிகும்படியாக,
நினைவார்கள் தீ வினை உக நெடிது ஓட ---
உள்ளத்தில் நினைத்துத் தொழுபவர்களுடைய தீவினையானது விலகி, தூரத்தே போக,
மேல் அணைபவர் மூதூர்
விரை செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் --- தன்னை வந்து அடைந்து
அடியார்கள் தொழுகின்றதும், நறுமணம் நிறைந்த கூந்தலை உடைய பெண்கள்
ஆர்வத்துடன் திருநடனம் புரிகின்ற பழமையான திருவாமாத்தூர் என்னும் திருத்தலத்தில்
விறல் மயில் மீது
மேவிய பெருமாளே --- வீரம் வாய்ந்த மயிலின் மேல் வீற்றிருக்கும் பெருமையில்
மிக்கவரே!
அடல் வடி வேல்கள்
வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் --- வலிமை வாய்ந்த
கூரிய வேல்கள், அம்புகள் ஆகியவற்றைக்
காட்டிலும், இங்கும்
அங்குமாய் ஓடுவதில்
வல்ல கூர்மையான கண்களாலும்,
மால் எனும் மத வேழத்து
அளவிய கோடு போல் --- பெருமை பொருந்தியதும், மதம் மிக்கதுமான யானையின் அளவான தந்தத்தினைப்
போன்று
வினை அளவு அளவான கூர் முலை ---
கருத்து அளவாக அமைந்து, மிக்கெழுந்துள்ள
கூர்மையான முலைகள்,
அதின் முகம் மூடும்
ஆடையின் அழகாலும் --- அவற்றை மூடி மறைக்கும் ஆடையின் அழகாலும்,
துடி இடையாலும் --- உடுக்கை போன்ற
இடையாலும்,
வாலர்கள் துயர் உற --- வாலிபர்கள்
துயரம் அடையுமாறு
மாயமாய் --- மாய வித்தைகளைச்
செய்து,
ஒரு துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாகத் தொழுது அவர் பாதம் ஓதி --- ஒப்பற்ற துணிவுடன் உள்ளத்தை ஊடறுக்கின்ற
விலைமாதர்களைத் துணையாக எண்ணி, அவர்களைப்
புகழ்ந்து பணிந்து,
உன் வழி வழி யான் எனா
---
உனது ஏவல் வழி நான் ஒழுகுவேன் என்று கூறி இருந்து,
உயர் துலை அலை மாறு போல் உயிர்
சுழல்வேனோ --- நீர் இறைக்கும் பெரிய துலையில் அகட்டுச் சுழலும் துடைப்பக்
குச்சியைப் போல அடியேன் துன்பத்தில் சுழலுவேனோ?
பொழிப்புரை
காட்டினுள் இருந்த வேடர்களின் மகளான
வள்ளிநாயகியுடன் அன்பாகப் பேசி, அவளுடைய திருவடிகளைத் தொழுது விளையாடும் ஆண்மைக் குணத்தை உடையவரே!
அழகிய பன்னிரு திருத்தோள்களை உடைய ஆறுமுகப்
பரம்பொருளே என்று தேவரீரை ஞானத்தால் வழிபடுகின்ற
பெருந்தவர்களுக்குப் பெரு வாழ்வினை அருள்பவரே!
விடையினை ஊர்ந்து வரும்
சிவபெருமானிடத்தில் அன்பு மிகும்படியாக, உள்ளத்தில்
நினைத்துத் தொழுபவர்களுடைய தீவினையானது விலகி, தூரத்தே போக, தன்னை வந்து அடைந்து அடியார்கள்
தொழுகின்றதும், நறுமணம் நிறைந்த கூந்தலை உடைய பெண்கள்
ஆர்வத்துடன் திருநடனம் புரிகின்ற பழமையான திருவாமாத்தூர் என்னும் திருத்தலத்தில் வீரம்
வாய்ந்த மயிலின் மேல் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!
வலிமை வாய்ந்த கூரிய வேல்கள், அம்புகள் ஆகியவற்றைக் காட்டிலும், இங்கும் அங்குமாய் ஓடுவதில் வல்ல கூர்மையான
கண்களாலும், பெருமை பொருந்தியதும், மதம் மிக்கதுமான யானையின் அளவான
தந்தத்தினைப் போன்று, கருத்து அளவாக
அமைந்து, மிக்கெழுந்துள்ள
கூர்மையான முலைகளாலும், அவற்றை மூடி
மறைக்கும் ஆடையின் அழகாலும்,
உடுக்கை
போன்ற இடையாலும், வாலிபர்கள் துயரம்
அடையுமாறு மாய வித்தைகளைச்
செய்து, ஒப்பற்ற துணிவுடன்
உள்ளத்தை ஊடறுக்கின்ற விலைமாதர்களைத் துணையாக எண்ணி, அவர்களைப் புகழ்ந்து பணிந்து, உனது ஏவல் வழி நான் ஒழுகுவேன் என்று
கூறி இருந்து, நீர் இறைக்கும் பெரிய
துலையில் அகட்டுச் சுழலும் துடைப்பக் குச்சியைப் போல அடியேன் துன்பத்தில்
சுழலுவேனோ?
விரிவுரை
அடல்
வடி வேல்கள் வாளிகள் அவைவிட ஓடல் நேர் படும் அயில் விழியாலும் ---
பெண்களின்
கண்களை வேலுக்கும் வாளுக்கும் ஒப்பாகக் கூறுவர் புலவர்.
வேல்
வெல்லும் தன்மையை உடையது. வாள் ஒளியைக் குறித்து நின்றது.
பக்குவப்பட்ட
ஆன்மாக்களே பெண்பிறவியை எய்தும். அவைகளால் பக்குவப்படாத ஆன்மாக்களாகிய ஆண்கள்
பக்குவம் எய்துவர். உயிருக்கு இயல்பாகவே ஆணவமலம் உண்டு. அது உண்மை அறிவு தோன்றாமல்
மறைக்கும். ஆணவ மலத்தை இருளுக்கு ஒப்பிடுவர். அறிவுக்கு ஒளியைக் காட்டுவர். அஞ்ஞான
இருளை நீக்கி அறிவை நிரப்புவது பெண்களின் கண் பார்வை. அது ஞானநோக்கு. ஒரு
பார்வையால் உயிருக்குத் துன்பத்தை விளைவித்து, இன்னொரு பார்வையால் அத் துன்ப நீக்கத்திற்கு
வழிகாட்டுவது. "இருநோக்கு இவள்உண்கண் உள்ளது, ஒருநோக்கு நோய்நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து"
என்னும் திருவள்ளுவ நாயனாரி்ன் அருள் வாக்கை இங்கு வைத்து எண்ணுதல் நலம்.
ஆனால், பொருள்
இச்சையும் காம உணர்வும் கொண்ட பொதுமகளிரின் கண்கள் துன்பத்தையே மிகுக்க வல்லன.
அந்தத் துன்பத்தையே
இன்பமாக எண்ணி,
அவர்
வலையில் விழுந்து அவதி உறுவர் காமுகர். "வென்றதூஉம் தூண்டில் பொன் மீன்
விழுங்கி அற்று" என்று நாயனார் இதனைக் காட்டினார்.
விலைமகளிர்
தமது கூர்மையான கண் பார்வையால் ஆடவர்பால் கலகத்தை விளைவிப்பார்கள். அன்றியும்
அந்தக் கரணங்களுக்குள் மாறுபாட்டை விளைவிப்பார்கள். அதனால் உள்ளத்திலும் ஒரு கலகம்
ஏற்படுகின்றது.
“கலகவிழி மாமகளிர்
கைக்குளே யாய்” --- திருப்புகழ்
வீரர்கள்
வில் அம்பால் போர் புரிவார்கள். இம்மகளிர் கண் அம்பால் போர் புரிகின்றார்கள்.
மால்
எனும் மத வேழத்து அளவிய கோடு போல் வினை அளவு அளவான கூர் முலை ---
மால்
- பெருமை.
வேழம்
- யானை.
அளவிய
கோடு - அளவாக வளர்ந்துள்ள தந்தம்.
வினை
- கருத்து, எண்ணம்.
பெண்களின்
மார்பகங்களை யானையின் தந்தத்திற்கு ஒப்பிடுவர்.
விலைமாதர்கள், "முலையில் உறு துகில் சரிய நடுவீதி
நிற்பவர்கள்" என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.
மாய
வாடை திமிர்ந்திடு கொங்கையில்
மூடு சீலை திறந்த மழுங்கிகள்,
வாசல் தோறும் நடந்து சிணுங்கிகள், .....பழையோர்மேல்
வால
நேசம் நினைந்து அழு வம்பிகள்,
ஆசை நோய் கொள் மருந்துஇடு சண்டிகள்,
வாற பேர் பொருள் கண்டு விரும்பிகள்,...... எவரேனும்
நேயமே
கவி கொண்டு சொல் மிண்டிகள்,
காசு இலாதவர் தங்களை அன்புஅற,
நீதி போல நெகிழ்ந்த பறம்பிகள், ...... அவர்தாய்மார்
நீலி
நாடகமும் பயில் மண்டைகள்,
பாளை ஊறு கள்உண்டிடு தொண்டிகள்,
நீசரோடும் இணங்கு கடம்பிகள் ...... உறவு ஆமோ? --- திருப்புகழ்.
ஒரு
துணிவுடன் ஊடு மாதர்கள் துணையாகத் தொழுது அவர் பாதம் ஓதி, உன் வழி வழி யான் எனா, உயர் துலை அலை மாறு போல் உயிர் சுழல்வேனோ ---
பொருளைக்
கைக்கொள்ள வேண்டும் என்னும் துணிவுடன், விரக
தாபத்தில் சுழலும் ஆடவரின் உள்ளத்தைத் துணிந்து வளைத்துப் பிடித்துக் கொள்ளும்
ஆற்றல் வாய்ந்தவர் விலைமாதர். அவர்கள் வலையில் விழுந்தவர்கள், விலைமாதர்
துருகின்ற இன்பமே இன்பம் எனக்கருதி, இரவு பகல் எனப் பாராமல், அவரிடத்து இருந்து
பொன்னை எல்லாம் இழந்து, அவர்கள் காலால் இடுகின்ற ஏவலைத் தலையால் செய்து, அதில் இருந்து
மூள வழி தெரியாமல், நீர் இறைக்கும் ஏற்றச்சாலில் அகப்பட்ட துடைப்பக் குச்சியைப்
போலச் சுழன்று துன்பத்தை அடைவர். அப்படி
எல்லாம் அழியாமல் முருகப் பெருமான் திருவருள் காத்து அருள் புரிய வேண்டுகின்றார்
அடிகளார்.
விடம்-அடைசு
வேலை, அமரர் படை, சூலம்,
விசையன் விடு பாணம் ...... எனவேதான்,
விழியும்
அதிபார விதமும் உடை மாதர்
வினையின் விளைவு ஏதும் ...... அறியாதே,
கடிஉலவு
பாயல் பகல் இரவு எனாது
கலவிதனில் மூழ்கி, ...... வறிதுஆய,
கயவன், அறிவு ஈனன், இவனும் உயர் நீடு
கழல்இணைகள் சேர ...... அருள்வாயே..
--- திருப்புகழ்.
கலகக்
கயல்விழி போர்செய, வேள்படை
நடுவில் புடைவரு பாபிகள், கோபிகள்,
கனியக் கனியவுமே மொழி பேசிய ...... விலைமாதர்,
கலவித் தொழில் நலமே இனிது ஆம் என
மனம் இப்படி தினமே உழலாவகை
கருணைப் படி எனை ஆளவுமே அருள் ....தரவேணும். --- திருப்புகழ்.
இந்த
மனித உடம்பு மிகமிக அருமையினும் அருமையாயது.
பிறப்பின் நோக்கம் பிறவாமையே. அப் பிறவாமையைப் பெறுதற்குரியது மனிதப்
பிறப்பே ஆம். எத்தனையோ காலம் ஈட்டிய நற்பயனால் வருவது இம்மானுடம். அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம் என்ற நால்வகைப் பிறப்புக்களில்
மாறிமாறி பிறந்து இறந்து இம் மனித உடம்பு எடுப்பது கடலைக் கையால் நீந்திக் கரை சேர்வது
போலாகும்.
அண்டசம்
சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோடு
எண்தரு
நால்எண்பத்து நான்குநூறு ஆயிரம்தான்
உண்டுபல்
யோனி எல்லாம் ஒழித்து மானுடத்து உதித்தல்
கண்டிடில்
கடலைக் கையால் நீந்தினன் காரியம்காண். --- சிவஞான சித்தியார்.
“அரிது
அரிது மானிடர் ஆதல் அரிது” என்பார் ஔவையார்.
எண்ணரிய
பிறவிதனில் மானுடப் பிறவிதான்
யாதினும்
அரிதுஅரிது காண்
இப்பிறவி
தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ
யாது
வருமோ அறிகிலேன்...
என்று
கல்லும் கனியக் கூறுவார் அநுபூதிச் செல்வராகிய தாயுமானார்.
பெறுதற்கரிய
பிறவியைப் பெற்றும்
பெறுதற்கரிய
பிரான்அடி பேணார்..
என்பார்
சைவத்தின் கருவூலமாகிய திருமூலர்.
நமது
வாழ்நாள் மிகவும் சிறந்தது. ஒவ்வொரு கணமும் விலை மதிக்க முடியாத மாணிக்கமாகும்.
சிறந்த இந்த உடம்பையும் உயர்ந்து வாழ்நாளையும் வீணில் கழித்தல் கூடாது. பயனுடையவாகப் புரிதல் வேண்டும். களியாடல்களிலும், வீண் பேச்சுக்களிலும், வம்புரைகளிலும், வழக்காடுவதிலும் நம் நாளைக் கழிப்பது
பேதைமையாகும். காமதேனுவின் பாலைக் கமரில் விடுவதுபோல் ஆகும். தனியே இருந்து இதனைச்
சிந்தித்தல் வேண்டும். பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரே ஈசன் கீழ்க்கணக்கில்
எழுதுவான். சென்ற வாழ்நாளை மலையளவு செம்பொன் கொடுத்தாலும் திரும்ப அடைதல் இயலாது.
ஓடுகின்றனன்
கதிரவன் அவன்பின்
ஓடுகின்றன
ஒவ்வொரு நாளாய்...
என்பர்
இராமலிங்க அடிகள்.
இத்தகைய
சிறந்த நேரத்தைச் சிலர், பொழுதே போகவில்லை, பாழும்பொழுது என்று கூறி அல்லல்
உறுகின்றனர். இவரது மடமை இருந்தவாறுதான் என்னே?
நின்றாலும்
இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும்
மென்றாலும்
அயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும்
மன்றாடு
மலர்ப்பாதம் ஒருபோதும் மறவாமல்
குன்றாத
உணர்வுஉடையார் தொண்டராம் குணமிக்கார்.
என்ற
தெய்வச் சேக்கிழாரின் அருமைத் திருவாக்கை நன்கு சிந்தித்து உய்க.
எந்நேரமும்
நன்னேரமாகக் கழிய வேண்டும். திருவருள் தாகம் இருத்தல் வேண்டும். எடுத்த இப்பிறப்பிலேயே பிறப்பின் இலட்சியத்தைப்
பெறப் பெரிதும் முயலுதல் வேண்டும்.
அடவியின்
ஊடு வேடர்கள் அரிவையொடு ஆசை பேசியும், அடி தொழுது ஆடும் ஆண்மையும் உடையோனே ---
முருகப் பெருமான்
வள்ளி நாயகியைத் திருமணம் புரிந்த வரலாறு
தீய
என்பன கனவிலும் நினையாத் தூய மாந்தர் வாழ் தொண்டை நன்னாட்டில், திருவல்லம் என்னும் திருத்தலத்திற்கு
வடபுறத்தே,
மேல்பாடி
என்னும் ஊரின் அருகில், காண்பவருடைய கண்ணையும் கருத்தையும் ஒருங்கே
கவரும் அழகு உடைய வள்ளிமலை உள்ளது. அந்த மலையின் சாரலில் சிற்றூர் என்னும் ஒரு ஊர்
இருந்தது. அந்த ஊரில் வேடர் தலைவனும், பண்டைத் தவம் உடையவனும் ஆகிய நம்பி
என்னும் ஒருவன் தனக்கு ஆண்மக்கள் இருந்தும் பெண் மகவு இன்மையால் உள்ளம் மிக
வருந்தி,
அடியவர்
வேண்டும் வரங்களை நல்கி அருளும் ஆறுமுக வள்ளலை வழிபட்டு, குறி கேட்டும், வெறி ஆட்டு
அயர்ந்தும்,
பெண்
மகவுப் பேற்றினை எதிர்பார்த்து இருந்தான்.
கண்ணுவ
முனிவருடைய சாபத்தால் திருமால் சிவமுனிவராகவும், திருமகள் மானாகவும், உபேந்திரன்
நம்பியாகவும் பிறந்து இருந்தனர். அந்தச் சிவமுனிவர், சிவபெருமானிடம்
சித்தத்தைப் பதிய வைத்து, அம்மலையிடம் மாதவம் புரிந்து கொண்டு இருந்தார்.
பொன் நிறம் உடைய திருமகளாகிய அழகிய மான், சிவமுனிவர் வடிவோடு இருந்த திருமால்
முன்னே உலாவியது. அம்மானை அம்முனிவர் கண்டு உள்ளம் விருப்புற்று, தெய்வப்
புணர்ச்சி போலக் கண்மலரால் கலந்தார். பிறகு தெளிவுற்று, உறுதியான தவத்தில்
நிலைபெற்று நின்றார்.
ஆங்கு
ஒரு சார், கந்தக்
கடவுளைச் சொந்தமாக்கித் திருமணம் செய்துகொள்ளும் பொருட்டுத் தவம் புரிந்து கொண்டு
இருந்த சுந்தரவல்லி, முன்னர் தனக்கு முருகவேள் கட்டளை இட்டவாறு, அந்த மானின்
வயிற்றில் கருவில் புகுந்தாள். அம்மான் சூல் முதிர்ந்து, இங்கும் அங்கும் உலாவி, உடல் நொந்து, புன்செய்
நிலத்தில் புகுந்து, வேட்டுவப் பெண்கள் வள்ளிக் கிழங்குகளை அகழ்ந்து எடுத்த
குழியில் பல்கோடி சந்திரப் பிரகாசமும், மரகத வண்ணமும் உடைய சர்வலோக மாதாவைக்
குழந்தையாக ஈன்றது. அந்தப் பெண் மானானாது, குழந்தை தன் இனமாக
இல்லாமை கண்டு அஞ்சி ஓடியது. குழந்தை தனியே அழுதுகொண்டு இருந்தது.
அதே
சமயத்தில்,
ஆறுமுகப்
பெருமானுடைய திருவருள் தூண்டுதலால், வேட்டுவ மன்னனாகிய நம்பி, தன் மனைவியோடு
பரிசனங்கள் சூழத் தினைப்புனத்திற்குச் சென்று, அக் குழந்தையின் இனிய
அழுகை ஒலியைக் கேட்டு, உள்ளமும் ஊனும் உருகி, ஓசை வந்த வழியே போய், திருப்பாற்கடலில்
பிறந்த திருமகளும் நாணுமாறு விளங்கும் குழந்தையைக் கண்டான். தனது மாதவம் பலித்தது
என்று உள்ளம் உவந்து ஆனந்தக் கூத்து ஆடினான். குழந்தையை எடுத்து, தன் மனைவியாகிய
கொடிச்சியின் கரத்தில் கொடுத்தான். அவள் மனம் மகிழ்ந்து, குழந்தையை மார்போடு
அணைத்தாள். அன்பின் மிகுதியால் பால் சுரந்தது. பாலை ஊட்டினாள். பிறகு யாவரும்
சிற்றூருக்குப் போய், சிறு குடிலில் புகுந்து, குழந்தையைத் தொட்டிலில்
இட்டு,
முருகப்
பெருமானுக்கு வழிபாடு ஆற்றினர். மிகவும் வயது முதிர்ந்தோர் வந்து கூடி, வள்ளிக் கிழங்கை
அகழ்ந்து எடுத்த குழியில் பிறந்தமையால், குழந்தைக்கு வள்ளி என்று பேரிட்டனர். உலக
மாதாவாகிய வள்ளிநாயகியை நம்பியும் அவன் மனைவியும் இனிது வளர்த்தார்கள்.
வேடுவர்கள்
முன் செய்த அருந்தவத்தால், அகிலாண்டநாயகி ஆகிய எம்பிராட்டி, வேட்டுவர்
குடிலில் தவழ்ந்தும், தளர்நடை இட்டும், முற்றத்தில் உள்ள வேங்கை மர நிழலில்
உலாவியும், சிற்றில்
இழைத்தும்,
சிறு
சோறு அட்டும்,
வண்டல்
ஆட்டு அயர்ந்தும், முச்சிலில் மணல் கொழித்தும், அம்மானை ஆடியும் இனிது
வளர்ந்து, கன்னிப்
பருவத்தை அடைந்தார்.
தாயும்
தந்தையும் அவருடைய இளம் பருவத்தைக் கண்டு, தமது சாதிக்கு உரிய
ஆசாரப்படி,
அவரைத்
தினைப்புனத்திலே உயர்ந்த பரண் மீது காவல் வைத்தார்கள். முத்தொழிலையும், மூவரையும்
காக்கும் முருகப் பெருமானுடைய தேவியாகிய வள்ளி பிராட்டியாரை வேடுவர்கள்
தினைப்புனத்தைக் காக்க வைத்தது, உயர்ந்த இரத்தினமணியை தூக்கணங்குருவி, தன் கூட்டில்
இருள் ஓட்ட வைத்தது போல் இருந்தது.
வள்ளி
நாயகியாருக்கு அருள் புரியும் பொருட்டு, முருகப் பெருமான், கந்தமாதன மலையை நீங்கி, திருத்தணிகை
மலையில் தனியே வந்து எழுந்தருளி இருந்தார். நாரத மாமுனிவர் அகிலாண்ட நாயகியைத்
தினைப்புனத்தில் கண்டு, கை தொழுது, ஆறுமுகப்
பரம்பொருளுக்குத் தேவியார் ஆகும் தவம் உடைய பெருமாட்டியின் அழகை வியந்து, வள்ளி நாயகியின்
திருமணம் நிகழ்வது உலகு செய்த தவப்பயன் ஆகும் என்று மனத்தில் கொண்டு, திருத்தணிகை
மலைக்குச் சென்று, திருமால் மருகன் திருவடியில் விழுந்து வணங்கி நின்றார்.
வள்ளிமலையில் தினைப்புனத்தைக் காக்கும் பெருந்தவத்தைப் புரிந்துகொண்டு இருக்கும்
அகிலாண்ட நாயகியைத் திருமணம் புணர்ந்து அருள வேண்டும் என்று விண்ணப்பித்தார். முருகப்பெருமான் நாரதருக்குத் திருவருள்
புரிந்தார்.
வள்ளிநாயகிக்குத்
திருவருள் புரியத் திருவுள்ளம் கொண்டு, கரிய திருமேனியும், காலில்
வீரக்கழலும்,
கையில்
வில்லம்பும் தாங்கி, மானிட உருவம் கொண்டு, தணியா அதிமோக தயாவுடன், திருத்தணிகை
மலையினின்றும் நீங்கி, வள்ளிமலையில் வந்து எய்தி, தான் சேமித்து வைத்த
நிதியை ஒருவன் எடுப்பான் போன்று, பரண் மீது விளங்கும் வள்ளி நாயகியாரை அணுகினார்.
முருகப்பெருமான்
வள்ளிநாயகியாரை நோக்கி, "வாள் போலும் கண்களை உடைய பெண்ணரசியே! உலகில் உள்ள
மாதர்களுக்கு எல்லாம் தலைவியாகிய உன்னை உன்னதமான இடத்தில் வைக்காமல், இந்தக் காட்டில், பரண் மீது
தினைப்புனத்தில் காவல் வைத்த வேடர்களுக்குப் பிரமதேவன் அறிவைப் படைக்க மறந்து
விட்டான் போலும். பெண்ணமுதே, நின் பெயர் யாது? தின் ஊர் எது? நின் ஊருக்குப்
போகும் வழி எது?
என்று
வினவினார்.
நாந்தகம்
அனைய உண்கண் நங்கை கேள், ஞாலம் தன்னில்
ஏந்திழையார்கட்கு
எல்லாம் இறைவியாய் இருக்கும்நின்னைப்
பூந்தினை
காக்க வைத்துப் போயினார், புளினர் ஆனோர்க்கு
ஆய்ந்திடும்
உணர்ச்சி ஒன்றும் அயன் படைத்திலன் கொல்
என்றான்.
வார்
இரும் கூந்தல் நல்லாய், மதி தளர்வேனுக்கு
உன்தன்
பேரினை
உரைத்தி, மற்று உன் பேரினை உரையாய்
என்னின்,
ஊரினை
உரைத்தி, ஊரும் உரைத்திட முடியாது
என்னில்
சீரிய
நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.
மொழிஒன்று
புகலாய் ஆயின், முறுவலும் புரியாய் ஆயின்,
விழிஒன்று
நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்வேன், உய்யும்
வழி
ஒன்று காட்டாய் ஆயின், மனமும் சற்று உருகாய்
ஆயின்
பழி
ஒன்று நின்பால் சூழும், பராமுகம் தவிர்தி என்றான்.
உலைப்படு
மெழுகது என்ன உருகியே, ஒருத்தி காதல்
வலைப்படுகின்றான்
போல வருந்தியே இரங்கா நின்றான்,
கலைப்படு
மதியப் புத்தேள் கலம் கலம் புனலில் தோன்றி,
அலைப்படு
தன்மைத்து அன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்.
இவ்வாறு
எந்தை கந்தவேள், உலகநாயகியிடம்
உரையாடிக் கொண்டு இருக்கும் வேளையில், வேட்டுவர் தலைவனாகிய நம்பி தன் பரிசனங்கள்
சூழ ஆங்கு வந்தான். உடனே பெருமான் வேங்கை மரமாகி நின்றார். நம்பி வேங்கை
மரத்தைக் கண்டான். இது புதிதாகக் காணப்படுவதால், இதனால் ஏதோ விபரீதம்
நேரும் என்று எண்ணி, அதனை வெட்டி விட வேண்டும் என்று வேடர்கள் சொன்னார்கள். நம்பி, வேங்கை மரமானது
வள்ளியம்மையாருக்கு நிழல் தந்து உதவும் என்று விட்டுச் சென்றான்.
நம்பி
சென்றதும்,
முருகப்
பெருமான் முன்பு போல் இளங்குமரனாகத் தோன்றி, "மாதரசே! உன்னையே
புகலாக வந்து உள்ளேன். என்னை மணந்து இன்பம் தருவாய். உன் மீது காதல் கொண்ட என்னை
மறுக்காமல் ஏற்றுக் கொள். உலகமெல்லாம் வணங்கும் உயர் பதவியை உனக்குத்
தருகின்றேன். தாமதிக்காமல் வா"
என்றார். என்
அம்மை வள்ளிநாயகி நாணத்துடன்
நின்று,
"ஐயா, நீங்கு உலகம்
புரக்கும் உயர் குலச் செம்மல். நான் தினைப்புனப் காக்கும் இழிகுலப் பேதை. தாங்கள்
என்னை விரும்புவது தகுதி அல்ல. புலி பசித்தால் புல்லைத் தின்னுமோ?" என்று கூறிக்
கொண்டு இருக்கும்போதே, நம்பி உடுக்கை முதலிய ஒலியுடன் அங்கு வந்தான். எம்பிராட்டி
நடுங்கி,
"ஐயா!
எனது தந்தை வருகின்றார். வேடர்கள் மிகவும் கொடியவர். விரைந்து ஓடி
உய்யும்" என்றார். உடனே, முருகப்
பெருமான் தவவேடம் கொண்ட கிழவர் ஆனார்.
நம்பி, அக் கிழவரைக்
கண்டு வியந்து நின்றான். பெருமான் அவனை நோக்கி, "உனக்கு வெற்றி
உண்டாகுக.
உனது குலம் தழைத்து ஓங்குக. சிறந்த வளம் பெற்று வாழ்க" என்று வாழ்த்தி, திருநீறு தந்தார். திருநீற்றினைப்
பெருமான் திருக்கரத்தால் பெறும் பேறு மிக்க நம்பி, அவர் திருவடியில்
விழுந்து வணங்கி, "சுவாமீ! இந்த மலையில் வந்த காரணம் யாது? உமக்கு
வேண்டியது யாது?" என்று
கேட்டான்.
பெருமான் குறும்பாக, "நம்பீ! நமது
கிழப்பருவம் நீங்கி, இளமை அடையவும், உள்ளத்தில் உள்ள மயக்கம் நீங்கவும் இங்குள்ள
குமரியில் ஆட வந்தேன்" என்று அருள் செய்தார். நம்பி, "சுவாமீ! தாங்கள்
கூறிய (குமரி - தீர்த்தம்) தீர்த்தத்தில் முழுகி சுகமாக இருப்பீராக. எனது
குமரியும் இங்கு இருக்கின்றாள். அவளுக்குத் தாங்களும், தங்களுக்கு அவளும் துணையாக
இருக்கும்" என்றான். தேனையும் தினை மாவையும் தந்து, "அம்மா! இந்தக்
கிழ முனிவர் உனக்குத் துணையாக இருப்பார்" என்று சொல்லி, தனது ஊர் போய்ச்
சேர்ந்தான்.
பிறகு, அக் கிழவர், "வள்ளி மிகவும்
பசி" என்றார். நாயகியார் தேனையும்
தினைமாவையும் பழங்களையும் தந்தார். பெருமான் "தண்ணீர் தண்ணீர்" என்றார்.
"சுவாமீ!
ஆறு மலை தாண்டிச் சென்றால், ஏழாவது மலையில்
சுனை இருக்கின்றது. பருகி வாரும்" என்றார் நாயகியார். பெருமான், "வழி அறியேன், நீ வழி
காட்டு" என்றார். பிராட்டியார் வழி காட்டச் சென்று, சுனையில் நீர் பருகினார்
பெருமான்.
(இதன்
தத்துவார்த்தம் --- வள்ளி பிராட்டியார் பக்குவப்பட்ட ஆன்மா. வேடனாகிய முருகன் -
ஐம்புலன்களால் அலைக்கழிக்கப்பட்டு நிற்கும் ஆன்மா. பக்குவப்பட்ட ஆன்மாவைத் தேடி, பக்குவ அனுபவம்
பெற,
பக்குவப்படாத
ஆன்மாவாகிய வேடன் வருகின்றான். அருள் தாகம் மேலிடுகின்றது. அந்தத் தாகத்தைத்
தணிப்பதற்கு உரிய அருள் நீர், ஆறு ஆதாரங்களாகிய மலைகளையும் கடந்து, சகஸ்ராரம்
என்னும் ஏழாவது மலையை அடைந்தால் அங்கே அமுதமாக ஊற்றெடுக்கும். அதனைப் பருகி
தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று பக்குவப்பட்ட ஆன்மாவாகிய வள்ளிப்
பிராட்டியார்,
பக்குவப்
படாத ஆன்மாவாகிய வேடனுக்கு அறிவுறுத்துகின்றார். ஆன்மா பக்குவப்பட்டு உள்ளதா
என்பதைச் சோதிக்க, முருகப் பெருமான் வேடர் வடிவம் காண்டு வந்தார் என்று கொள்வதும் பொருந்தும்.)
வள்ளிநாயகியைப்
பார்த்து,
"பெண்ணே!
எனது பசியும் தாகமும் நீங்கியது. ஆயினும் மோகம் நீங்கவில்லை. அது தணியச்
செய்வாய்" என்றார். எம்பிராட்டி சினம் கொண்டு, "தவ வேடம் கொண்ட உமக்கு இது தகுதியாகுமா? புனம் காக்கும்
என்னை இரந்து நிற்றல் உமது பெருமைக்கு அழகோ? எமது குலத்தார் இதனை
அறிந்தால் உமக்குப் பெரும் கேடு வரும். உமக்கு நரை வந்தும், நல்லுணர்வு
சிறிதும் வரவில்லை. இவ்வேடருடைய கூட்டத்திற்கே பெரும் பழியைச் செய்து
விட்டீர்" என்று கூறி, தினைப்புனத்தைக் காக்கச் சென்றார்.
தனக்கு
உவமை இல்லாத தலைவனாகிய முருகப் பெருமான், தந்திமுகத் தொந்தியப்பரை
நினைந்து,
"முன்னே
வருவாய், முதல்வா!"
என்றார்.
அழைத்தவர் குரலுக்கு ஓடி வரும் விநாயகப்பெருமான் யானை வடிவம் கொண்டு ஓடி வந்தனர்.
அம்மை அது கண்டு அஞ்சி ஓடி, கிழமுனிவரைத்
தழுவி நின்றார். பெருமான் மகிழ்ந்து, விநாயகரைப் போகுமாறு திருவுள்ளம் செய்ய
அவரும் நீங்கினார்.
முருகப்
பெருமான் தமது ஆறுதிருமுகம் கொண்ட திருவுருவை அம்மைக்குக் காட்டினார். வள்ளநாயகி, அது கண்டு
ஆனந்தமுற்று,
ஆராத
காதலுடன் அழுதும் தொழுதும் வாழ்த்தி, "பெருமானே! முன்னமே இத்
திருவுருவைத் தாங்கள் காட்டாமையால், அடியாள் புரிந்த அபசாரத்தைப் பொறுத்து
அருளவேண்டும்" என்று அடி பணிந்தார். பெருமான் பெருமாட்டியை நோக்கி அருள்
மழை பொழிந்து, "பெண்ணே! நீ
முற்பிறவியில் திருமாலுடைய புதல்வி. நம்மை மணக்க நல் தவம் புரிந்தாய். உன்னை மணக்க
வலிதில் வந்தோம்" என்று அருள் புரிந்து, பிரணவ உபதேசம் புரிந்து, "நீ தினைப்புனம்
செல். நாளை வருவோம்" என்று மறைந்து
அருளினார்.
அம்மையார்
மீண்டும் பரண் மீது நின்று "ஆலோலம்" என்று ஆயல் ஓட்டினார். அருகில் உள்ள
புனம் காக்கும் பாங்கி வள்ளிநாயகியிடம் வந்து, "அம்மா!
தினைப்புனத்தை
பறவைகள் பாழ் படுத்தின. நீ எங்கு சென்றாய்" என்று வினவினாள். வள்ளியம்மையார், நான் மலை மீது உள்ள சுனையில் நீராடச்
சென்றேன்" என்றார்.
"அம்மா!
கருமையான கண்கள் சிவந்து உள்ளன. வாய் வெளுத்து உள்ளது. உடம்பு வியர்த்து உள்ளது.
முலைகள் விம்மிதம் அடைந்து உள்ளன. கையில் உள்ள வளையல் நெகிழ்ந்து உள்ளது. உன்னை
இவ்வாறு செய்யும் குளிர்ந்த சுனை எங்கே உள்ளது? சொல்லுவாய்" என்று பாங்கி வினவினாள்.
மை
விழி சிவப்பவும், வாய் வெளுப்பவும்,
மெய்
வியர்வு அடையவும், நகிலம் விம்மவும்,
கை
வளை நெகிழவும் காட்டும் தண் சுனை
எவ்விடை
இருந்து உளது? இயம்புவாய் என்றாள்.
இவ்வாறு
பாங்கி கேட்க, அம்மையார், "நீ என் மீது
குறை கூறுதல் தக்கதோ?" என்றார்.
வள்ளியம்மையாரும்
பாங்கியும் இவ்வாறு கூடி இருக்கும் இடத்தில், ஆறுமுகப் பெருமான் முன்பு போல் வேட வடிவம் தாங்கி, வேட்டை ஆடுவார்
போல வந்து,
"பெண்மணிகளே!
இங்கு எனது கணைக்குத் தப்பி ஓடி வந்த பெண் யானையைக் கண்டது உண்டோ? என்று வினவி
அருளினார். தோழி, "ஐயா! பெண்களிடத்தில் உமது வீரத்தை விளம்புவது
முறையல்ல" என்று கூறி, வந்தவர் கண்களும், இருந்தவள் கண்களும்
உறவாடுவதைக் கண்டு, "அம்மை ஆடிய சுனை இதுதான் போலும்" என்று
எண்ணி,
புனம்
சென்று இருந்தனள். பெருமான் பாங்கி இருக்கும் இடம் சென்று, "பெண்ணே! உன்
தலைவியை எனக்குத் தருவாய். நீ வேண்டுவன எல்லாம் தருவேன்" என்றார். பாங்கி, "ஐயா! இதனை
வேடுவர் கண்டால் பேராபத்தாக முடியும். விரைவில் இங்கிருந்து போய் விடுங்கள்"
என்றாள்.
தோட்டின்
மீது செல் விழியினாய் தோகையோடு என்னைக்
கூட்டிடாய்
எனில், கிழிதனில் ஆங்கு அவள்
கோலம்
தீட்டி, மா மடல் ஏறி, நும் ஊர்த் தெரு அதனில்
ஓட்டுவேன், இது நாளை யான் செய்வது"
என்று உரைத்தான்.
பாங்கி
அது கேட்டு அஞ்சி, "ஐயா! நீர் மடல்
ஏற வேண்டாம். அதோ தெரிகின்ற மாதவிப் பொதும்பரில் மறைந்து இருங்கள். எம் தலைவியைத்
தருகின்றேன்" என்றாள். மயில் ஏறும் ஐயன், மாதவிப் பொதும்பரில்
மறைந்து இருந்தார். பாங்கி வள்ளிப்பிராட்டியிடம் போய் வணங்கி, அவருடைய காதலை
உரைத்து,
உடன்பாடு
செய்து,
அம்மாதவிப்
பொதும்பரிடம் அழைத்துக் கொண்டு போய் விட்டு, "நான் உனக்கு
மலர் பறித்துக் கொண்டு வருவேன்" என்று சொல்லி மெல்ல நீங்கினாள். பாங்கி
நீங்கவும், பரமன்
வெளிப்பட்டு,
பாவையர்க்கு
அரசியாகிய வள்ளிநாயகியுடன் கூடி, "நாளை வருவேன், உனது இருக்கைக்குச்
செல்" என்று கூறி நீங்கினார்.
இவ்வாறு
பல பகல் கழிந்தன. தினை விளைந்தன. குன்றவாணர்கள் ஒருங்கு கூடி விளைவை நோக்கி
மகிழ்ந்து,
வள்ளியம்மையை
நோக்கி,
"அம்மா!
மிகவும் வருந்திக் காத்தனை. இனி உன் சிறு குடிலுக்குச் செல்வாய்" என்றனர்.
வள்ளிநாயகி
அது கேட்டு வருந்தி, "அந்தோ என் ஆருயிர் நாயகருக்கு சீறூர்க்கு வழி
தெரியாதே! இங்கு வந்து தேடுவாரே" என்று புலம்பிக் கொண்டே தனது சிறு
குடிலுக்குச் சென்றார்.
வள்ளிநாயகியார்
வடிவேல் பெருமானது பிரிவுத் துன்பத்திற்கு ஆற்றாது அவசமுற்று வீழ்ந்தனர்.
பாவையர்கள் ஓடி வந்து, எடுத்து அணைத்து, மேனி மெலிந்தும், வளை கழன்றும் உள்ள
தன்மைகளை நோக்கி, தெய்வம் பிடித்து உள்ளது என்று எண்ணினர். நம்பி முதலியோர்
உள்ளம் வருந்தி,
முருகனை
வழிபட்டு,
வெறியாட்டு
அயர்ந்தனர். முருகவேள் ஆவேசம் ஆகி, "நாம்
இவளைத் தினைப்புனத்தில் தீண்டினோம். நமக்குச் சிறப்புச் செய்தால், நம் அருளால் இது நீங்கும்" என்று
குறிப்பில் கூறி அருளினார். அவ்வாறே செய்வதாக வேடர்கள் சொல்லினர்.
முருகவேள்
தினைப்புனம் சென்று, திருவிளையாடல்
செய்வார் போல்,
வள்ளியம்மையைத்
தேடிக் காணாது நள்ளிரவில் சீறூர் வந்து, குடிலுக்கு வெளியே நின்றார். அதனை உணர்ந்த
பாங்கி,
வெளி
வந்து,
பெருமானைப்
பணிந்து,
"ஐயா!
நீர் இப்படி இரவில் இங்கு வருவது தகாது. உம்மைப் பிரிந்த எமது தலைவியும் உய்யாள்.
இங்கு நீர் இருவரும் கூட இடம் இல்லை. ஆதலால், இவளைக் கொண்டு உம்
ஊர்க்குச் செல்லும்" என்று தாய் துயில் அறிந்து, பேய் துயில் அறிந்து, கதவைத்திறந்து, பாங்கி
வள்ளிப்பிராட்டியாரைக் கந்தவேளிடம் ஒப்புவித்தாள்.
தாய்துயில்
அறிந்து,
தங்கள்
தமர்துயில் அறிந்து, துஞ்சா
நாய்துயில்
அறிந்து,
மற்றுஅந்
நகர்துயில் அறிந்து, வெய்ய
பேய்துயில்
கொள்ளும் யாமப் பெரும்பொழுது அதனில், பாங்கி
வாய்தலில்
கதவை நீக்கி வள்ளியைக் கொடுசென்று உய்த்தாள்.
(இதன்
தத்துவார்த்த விளக்கம் --- ஆன்மாவை வளர்த்த திரோதமலமாகிய தாயும், புலன்களாகிய தமரும், ஒரு போதும் தூங்காத மூலமலமாகிய நாயும், தேக புத்தியாகிய நகரமும், சதா அலைகின்ற பற்று என்ற பேயும், இவை எல்லாம் துயில்கின்ற வேளையில்
திருவருளாகிய பாங்கி, பக்குவ ஆன்மா ஆகிய வள்ளியம்மையாரை முருகப்
பெருமான் கவர்ந்து செல்லத் துணை நின்றது. தாய் துயில் அறிதல் என்னும் தலைப்பில்
மணிவாசகப் பெருமானும் திருக்கோவையார் என்னும் ஞானநூலில் பாடியுள்ளார்.)
வள்ளி
நாயகியார் பெருமானைப் பணிந்து, "வேதங்கள் காணாத உமது விரை மலர்த்தாள் நோவ, என் பொருட்டு
இவ்வேடர்கள் வாழும் சேரிக்கு நடந்து, இவ்விரவில் எழுந்தருளினீரே" என்று
தொழுது நின்றார்.
பாங்கி
பரமனை நோக்கி,
"ஐயா!
இங்கு நெடிது நேரம் நின்றால் வேடர் காண நேரும். அது பெரும் தீமையாய் முடியும்.
இந்த மாதரசியை அழைத்துக் கொண்டு, நும் பதி போய், இவளைக் காத்து
அருள்வீர்" என்று அம்மையை அடைக்கலமாகத் தந்தனள். எம்பிரான் பாங்கிக்குத்
தண்ணருள் புரிந்தார். பாங்கி வள்ளநாயகியைத் தொழுது அணைத்து, உன் கணவனுடன்
சென்று இன்புற்று வாழ்வாய்" என்று கூறி, அவ்விருவரையும் வழி
விடுத்து,
குகைக்குள்
சென்று படுத்தாள். முருகப் பெருமான் வள்ளிநாயகியுடன் சீறூரைத் தாண்டிச் சென்று, ஒரு பூங்காவில்
தங்கினார்.
விடியல்
காலம்,
நம்பியின்
மனைவி எழுந்து,
தனது
மகளைக் காணாது வருந்தி, எங்கும் தேடிக் காணாளாய், பாங்கியை வினவ, அவள் "நான்
அறியேன்" என்றாள். நிகழ்ந்த்தைக் கேட்ட நம்பி வெகுண்டு, போர்க்கோலம்
கொண்டு தமது பரிசனங்களுடன் தேடித் திரிந்தான். வேடர்கள் தேடுவதை அறிந்த வள்ளிநாயகி, எம்பெருமானே! பல
ஆயுதங்களையும் கொண்டு வேடர்கள் தேடி வருகின்றனர். இனி என்ன செய்வது. எனது உள்ளம் கவலை கொள்கின்றது" என்றார்.
முருகவேள், "பெண்ணரசே!
வருந்தாதே. சூராதி அவுணர்களை மாய்த்த வேற்படை நம்மிடம் இருக்கின்றது. வேடர்கள்
போர் புரிந்தால் அவர்களைக் கணப்பொழுதில் மாய்ப்போம்" என்றார். நம்பி
வேடர்களுடன் வந்து பாணமழை பொழிந்தான். வள்ளிநாயகியார் அது கண்டு அஞ்சி, "பெருமானே! இவரை மாய்த்து
அருள்வீர்" என்று வேண்டினாள். பெருமான் திருவுள்ளம் செய்ய, சேவல் கொடி
வந்து கூவியது. வேடர் அனைவரும் மாய்ந்தனர். தந்தையும் உடன் பிறந்தாரும் மாண்டதைக்
கண்ட வள்ளிநாயகியார் வருந்தினார். ஐயன் அம்மையின் அன்பைக் காணும் பொருட்டு சோலையை
விட்டு நீங்க,
அம்மையாரும்
ஐயனைத் தொடர்ந்து சென்றார்.
இடையில்
நாரதர் எதிர்ப்பட்டார். தன்னை வணங்கி நின்ற நாரதரிடம் பெருமான் நிகழ்ந்தவற்றைக்
கூறி அருளினார். நாரதர், "பெருமானே! பெற்ற தந்தையையும் சுற்றத்தாரையும்
வதைத்து,
எம்பிராட்டியைக்
கொண்டு ஏகுதல் தகுதி ஆகுமா? அது அம்மைக்கு வருத்தம் தருமே" என்றார். முருகப் பெருமான்
பணிக்க, வள்ளிநாயகியார்
"அனைவரும் எழுக" என்று அருள் பாலித்தார். நம்பி தனது சேனைகளுடன்
எழுந்தான். பெருமான் ஆறு திருமுகங்களுடனும், பன்னிரு திருக்கரங்களுடனும்
திருக்காட்சி தந்தருளுனார். நம்பிராசன் வேடர்களுடன், அறுமுக வள்ளலின்
அடிமலரில் விழுந்து வணங்கி, உச்சிக் கூப்பிய கையுடன், "தேவதேவா! நீரே
இவ்வாறு எமது புதல்வியைக் கரவு செய்து, எமக்குத் தீராப் பழியை நல்கினால் நாங்கள்
என்ன செய்வோம்? தாயே தனது குழந்தைக்கு
விடத்தை ஊட்டலாமா? எமது குல தெய்வமே! எமது சீறூருக்கு வந்து, அக்கினி சான்றாக
எமது குலக்கொடியை திருமணம் புணர்ந்து செல்வீர்" என்று வேண்டினான். முருகப்
பெருமான் அவன் முறைக்கு இரங்கினார்.
கந்தக்
கடவுள் தமது அருகில் எழுந்தருளி உள்ள தேவியைத் திருவருள் நோக்கம் செய்ய, வள்ளிநாயகியார்
தமது மானுட வடிவம் நீங்கி, பழைய வடிவத்தைப் பெற்றார். அதனைக் கண்ட, நம்பி முதலியோர், "அகிலாண்ட
நாயகியாகிய வள்ளிநாயகியார் எம்மிடம் வளர்ந்த்து, நாங்கள் செய்த
தவப்பேறு" என்று மகிழ்ந்தான். முருகப் பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்து, திருத்தணிகையில்
வந்து உலகம் உய்ய வீற்றிருந்து அருளினார்.
முருகப்
பெருமான் வள்ளிநாயகியைத் திருமணம் புணர்ந்த வரலாறு, பெரும் தத்துவங்கள்
பொதிந்தது. தக்க ஞானாசிரியர் வாய்க்கத் தவம் இருந்தால், அவர் மூலம் உண்மைகள்
வெளிப்படும். நாமாக முயன்று பொருள் தேடுவது பொருந்தாது. அனுபவத்துக்கும் வராது.
அழகிய தோள் இராறு உடை அறுமுக வேள் எனா உனை அறிவுடன் ஓது மாதவர் பெரு வாழ்வே ---
அறிவு
- ஞானம். மேலான ஞானத்தால் இறைவனைத் தொழுது வணங்கவேண்டும்.
சைவ
நாற்பாதங்கள் என்பது சைவ மக்கள் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் பாதங்களை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய
படிமுறைகள் ஆகும். இதன் மறுபெயர்களாக சைவ நன்னெறிகள், சைவ நாற்படிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் என்பன அறியப்படுகின்றன.
சைவ
நாற்பதங்கள் பின்வருமாறு ----
சரியை - தாதமார்க்கம் (தாச மார்க்கம்)
கிரியை - சற்புத்திர மார்க்கம்
யோகம் - சகமார்க்கம்
ஞானம் - சன்மார்க்கம்
சரியை
சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால்
செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவில் செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான
இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறை அம்சமும் துணை நிற்கவேண்டும்.
ஆலயங்களில்
இறைவனை வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத்
திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி
அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.
சரியையில் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில்
திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
சரியையில் கிரியை - ஒரு மூர்த்தியை வழிபடல்.
சரியையில் யோகம் - வழிபடும் கடவுளையும் சிவனையும்
தியானித்தல்.
சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம்
வாய்க்கப் பெறுவது.
அப்பர்
பெருமான் இந்த நெறியை நமக்குக் காட்டினார் என்பர்.
கிரியை
சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு
மூலமாக அறிந்து சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்றோர் மேற்கொள்ளும்
வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம் அளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும்
பரார்த்த பூசையும் இந்நெறியுள் அடங்கும். மந்திரங்களை ஓதுவதும் கிரியை ஆகும்.
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி
நிற்றல்(பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும்.
கிரியையில் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
கிரியையில் கிரியை - புறத்தில் பூசித்தல்.
கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.
கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர்
அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
திருஞானசம்பந்தப்
பெருமான் இதனைக் காட்டினார் என்பர்.
யோகம்
சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி
சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அட்டாங்க யோக உறுப்புக்கள் உள்ளன.
இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க
முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்தம் உடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.
யோகத்தில் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.
யோகத்தில் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.
யோகத்தில் யோகம் - தியானம்.
யோகத்தில் ஞானம் - சமாதி.
சுந்தரமூர்த்தி
நாயனார் யோக நெறி நின்று இறைவனை வழிபாடு செய்தார்.
ஞானம்
சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பதிதம்
செய்தல். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும்
கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் வழிபடுதலாகும்.
கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு
உண்டு. முன்னைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே
வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
ஞானத்தில் சரியை - ஞானநூல்களைக் கேட்டல்.
ஞானத்தில் கிரியை - ஞானநூல்களைச் சிந்தித்தல்.
ஞானத்தில் யோகம் - ஞானநூல்களைத் தெளிதல்.
ஞானத்தில் ஞானம் - ஞான நிட்டை கூடல்.
மாணிக்கவாசகர்
ஞான நெறி நின்று இறைவனை வழிபாடு செய்தார் என்பர்.
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டு இல்லை,
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று,
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்,
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே."
என்ற திருமூலரின் திருவாக்கையும் காண்க.
ஞானத்தை விட மேலான மார்க்கம் இல்லை. வேறு எதுவும் முத்திக்குக் கொண்டு செல்லாது. உண்மையான அறிவாகிய ஞானத்தில்
திளைத்தவர்கள். உண்மையிலேயே சிறந்தவர்கள் என்பது தெளிவு.
பின்வரும் சிஎஞானசித்தியார் பாடல்களின் குரத்தை இங்கு வைத்து எண்ணுதல் நலம்
பயக்கும்.
புறச்சமய
நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்,
புகல்மிருதி
வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம
அறத்துறைகள்
அவை அடைந்தும், அருந்தவங்கள்
புரிந்தும்,
அருங்கலைகள்
பலதெரிந்தும், ஆரணங்கள் படித்தும்,
சிறப்புடைய
புராணங்கள் உணர்ந்தும், வேத
சிரப் பொருளை மிகத்
தெளிந்தும் சென்றால், சைவத்
திறத்தடைவர்; இதில் சரியை கிரியா
யோகம்
செலுத்தியபின்
ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்.
இவ்வுலகத்து
மாந்தர் பல பிறப்புகள் எடுத்த பிறகே உண்மை ஞானம் கைவரப் பெற்று வீடுபேற்றை அடைவர்.
அது படிப்படியே நிகழும். புறச் சமய நெறியிலே நின்று ஒழுகியும், அதன் பிறகு அகச் சமயத்திலே புகுந்தும்.
அதன் பின்னர் மிருதி நூல் ஒழுக்கங்களைக் கைகொண்டும், மாணவ நிலை. இல்லற நிலை மனைவியோடு
காட்டில் சென்று வாழும் நிலை துறவற நிலை ஆகியவற்றில் படிப்படியே பயின்றும், அரிய தவங்களை ஆற்றியும், அரிய கலைகளைக் கற்றும், நான்மறைகளைப் படித்தும், சிறப்பான புராணங்களை உணர்ந்தும், மறைமுடிவு எனக் கூறப்பட்ட உபநிடதங்களைக்
கற்றும், தெளிந்தும்
படிப்படியாக முன்னேறிச் சென்றவர்கள் சைவசித்தாந்தச் செம்மை நெறியில் வந்து
அடைவார்கள். சைவ சித்தாந்தத்தில் விதிக்கப்பட்ட சீலம், நோன்பு, செறிவு என்னும் மூன்று ஒழுக்கங்களையும்
முறைப்படி நிறைவேற்றிய பிறகு மெய்யறிவு எனப்படும் ஞானத்தை அடைந்த பின் சிவபெருமானின்
திருவடி நிழலை எய்துவதாகிய வீடுபேற்றினைப் பெறுவர்.
ஓது
சமயங்கள் பொருள் உணரும் நூல்கள்
ஒன்றோடு ஒன்று
ஒவ்வாமல் உளபலவும், இவற்றுள்
யாது
சமயம்? பொருள்நூல் யாது
இங்கு? என்னின்
இதுஆகும், அது அல்லது எனும் பிணக்கு
அது இன்றி,
நீதியினால்
இவை எல்லாம் ஓரிடத்தே காண
நின்றது யாதொரு சமயம்? அதுசமயம், பொருள்நூல்;
ஆதலினான்
இவை எல்லாம் அருமறை ஆகமத்தே
அடங்கியிடும், இவை இரண்டும் அரன்
அடிக்கீழ்அடங்கும்,
உலகத்தில்
கணக்கற்ற சமயங்கள் உள்ளன. அவ்வச் சமயத்தில் கூறப்படும் பொருள்களும் அவற்றை
விளக்கும் நூல்களும் பற்பல உள்ளன. இவை தமக்குள் ஒன்றோடு ஒன்று ஒவ்வாமல்
பிணங்குவனவாகும். இவற்றுள்ளே எந்தச் சமயம் முதன்மையானது? அச்சமயத்தின் பொருள்களை உணர்த்தும் நூல்
எது? என்ற வினாக்கள்
எழுவது இயல்பே இருக்கருத்துப் பொருந்தும், அது பொருந்தாது என்று பிணங்குவது
இல்லாமல் முறையாக இவை அனைத்தும் எச்சமயத்தில் காணப்படுமோ அதுவே முதன்மையான சமயம்
என்று கொள்ளல் தகும். அச்சமயத்தின் பொருள்களைத் தெளிவுற உணர்த்தும் நூலே
மெய்ம்மையான நூலாகும். எனவே எல்லாச் சமயங்களும் அருமறைகளிலும் ஆகமங்களிலும்
அடங்கும். மறைகளும், ஆகமங்களும்
சிவபிரானின் இரண்டு திருவடிகளிலும் அடங்கும்.
வேதநூல்
சைவநூல் என்று இரண்டே நூல்கள்,
வேறு உரைக்கும் நூல்
இவற்றின் விரிந்த நூல்கள்,
ஆதி
நூல், அநாதி அமலன் தருநூல்
இரண்டும்
ஆரணநூல், பொதுசைவம், அரும்சிறப்பு நூலாம்,
நீதியினால்
உலகர்க்கும் சத்திநிபாதர்க்கும்
நிகழ்த்தியது
நீள்மறையின் ஒழிபொருள், வேதாந்தத்
தீதுஇல்பொருள்
கொண்டு உரைக்கும் நூல்சைவம்;
பிறநூல்
திகழ்பூர்வம், சிவாகமங்கள்
சித்தாந்தம் ஆகும்.
உலகத்தில்
உயர்ந்த நூல்கள் எனக் கூறப்படுவன மறைகளும் சிவாகமங்களுமாகிய இரண்டேதாம் . இவற்றின்
வேறாக எழுந்த நூல்கள் எல்லாம் இவற்றின் கருத்துக்களை விரித்துரைக்கும் நூல்களே
ஆகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவினை உடையவனும் இயல்பாகவே பாசங்களில்
நீங்கியவனுமாகிய சிவபெருமானால் அருளப்பட்டவை இவை இரண்டும் ஆகும். இவ்விரு
நூல்களும் முதல் நூல்களேயாம். இவை முறையே உலகத்தவர்க்கும் சத்திநிபாதம்
எய்தியவர்க்கும் என இறைவனால் அருளப்பட்டன. இவற்றுள் மறைகள் பொது என்றும்
சிவாகமங்கள் சிறப்பு என்றும் கூறப்படும். விரிந்த வேதத்துள் கூறப்பட்டவற்றைத் தவிர
எஞ்சி நின்ற பொருள்களையும். வேத முடிபாகிய உபநிடதங்களின் சாரமாகிய குற்றமற்ற
பொருள்களையும் தனித்து எடுத்துக் கொண்டு இனிதே விளக்குவது சிவாகமம். எனவே பிற
நூல்கள் எல்லாம் பூர்வ பக்கம் எனவும் சிவாகமங்கள் சித்தாந்தம் என்றும்
கொள்ளப்படும்.
சன்மார்க்கம் சகமார்க்கம் சற்புத்திர
மார்க்கம்
தாதமார்க்கம் என்றும்
சங்கரனை அடையும்
நன்மார்க்கம்
நால், அவைதாம் ஞானம் யோகம்
நல்கிரியா சரியைஎன
நவிற்றுவதும் செய்வர்;
சன்மார்க்க
முத்திகள் சாலோக்கிய சாமீப்பிய
சாரூப்பிய
சாயுச்சியம் என்று சதுர் விதமாம்;
முன்மார்க்க
ஞானத்தால் எய்தும் முத்தி
முடிவு என்பர்; மூன்றினுக்கும்
முத்திபதம் என்பர்
சிவபெருமானை
அடையும் நெறிகள் நான்கு என்பர். அவை தொண்டு நெறி(தாதமார்க்கம்) மகன்மை நெறி
(சற்புத்திரமார்க்கம்) தோழமை நெறி (சகமார்க்கம்) நன்நெறி(சன்மார்க்கம்) என்று
பெயர் பெறும். இவற்றையே சீலம்(சரியை) நோன்பு(கிரியை) செறிவு(யோகம்), அறிவு(ஞானம்) என்றும் வழங்குவர்.
இங்குக் கூறப்பட்ட நால்வகை நெறிகளிலும் நிற்பவர்களுக்கு முறையே எய்துகின்ற பயன்கள்
இறைவனோடு ஓர் உலகத்தில் இருத்தல் (சாலோகம்) இறைவனுக்கு அருகிருத்தல்(சாமீபம்)
நெற்றியில் கண்ணரும், நாற்பெரும் தோளரும், நீறணிமேனியரும் ஆக அவன் வடிவத்தைப்
பெறுதல் (சாரூபம்) இறைவனோடு இரண்டறக் கலத்தல்(சாயுச்சியம்) என்பனவாகும். இவற்றுள்
முதலில் கூறப்பட்ட மூன்றும் பதமுத்திகள் எனப்படும். நான்காவதாகக் கூறப்பட்டது
பரமுத்தியாகும்.
தாதமார்க்கம்
சாற்றில், சங்கரன்தன் கோயில்
தலம் அலகு இட்டு, இலகு திரு மெழுக்கும்
சாத்தி,
போதுகளும்
கொய்து, பூந்தார் மாலை கண்ணி
புனிதற்குப்
பலசமைத்து, புகழ்ந்து பாடி,
தீதுஇல்
திரு விளக்குஇட்டு, திருநந்த வனமும்
செய்து திருவேடம் கண்டால்
அடியேன் செய்வது
யாது? பணியீர்! என்று
பணிந்து, அவர்தம் பணியும்
இயற்றுவது; இச்சரியை செய்வோர்
ஈசன் உலகு இருப்பர்.
சிவபெருமானுடைய
திருக்கோயிலைத் திருஅலகிட்டும்,
திருமெழுக்கிட்டும், மொட்டறா மலர் பறித்து இறைவனுக்கெனத்
தாரும் மாலையும் கண்ணியும் தொடுத்தும், இறைவன்
பெருமைகளைப் புகழ்ந்து பாடியும்,
இருளகற்றும்
திருவிளக்கு ஏற்றியும், திருநந்தவனங்களை
அமைத்துக் காத்தும், திருவேடம் கொண்ட
அடியார்களைக் கண்டால் தங்களுக்கு நான் செய்யும் பணயாது என்று கேட்டு அவர்கள் இடும்
பணியை உவந்து இயற்றியும் வருவது தாதமார்க்கம் ஆகும், இதுவே சரியை நெறி, இந்நெறியில் ஒழுகுவோர் ஈசன் உலகத்தில்
இருப்பர்.
புத்திரமார்க்கம்
புகலின், புதிய விரைப் போது
புகை ஒளி மஞ்சனம்
அமுது முதல்கொண்டு ஐந்து
சுத்திசெய்து, ஆசனம், மூர்த்தி மூர்த்தி
மானாம்
சோதியையும் பாவித்து, ஆவாகித்து, சுத்த
பத்தியினால்
அருச்சித்து, பரவிப் போற்றி,
பரிவினொடும் எரியில் வரு
காரியமும் பண்ணி,
நித்தலும்
இக் கிரியையினை இயற்று வோர்கள்
நின்மலன்தன்
அருகிருப்பர், நினையுங் காலே.
புதிய
மனம் உள்ள மலர்கள், நறும்புகை, திருவிளக்கு, திருமஞ்சனப் பொருள்கள், திருஅமுது ஆகிய வழிபாட்டுக்கு உரிய
பொருள்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு ஐந்து வகைத் தூய்மைகளையும் செய்து இருக்கை
இட்டு, திருமேனியை
எழுந்தருளச் செய்து திருமேனியை உடையானாகிய பேரொளி வடிவாகிய இறைவனைப் பாவித்து
அதில் எழுந்தருளச் செய்து தொழுது தூமலர் தூவித் துதித்து நின்று, அழல் ஓம்பி நாள்தோறும் வழிபடுவது மகன்மை
நெறி எனப்படும். இதனை வழுவாது இயற்றி வருபவர்கள் சிவபெருமானின் அருகில் இருக்கும்
பேற்றினைப் பெறுவார்கள். இந்நெறி கிரியை நெறி எனப்படும்.
சகமார்க்கம்
புலன் ஒடுக்கித் தடுத்து,
வளி
இரண்டும்
சலிப்பு அற்று, முச்சதுர முதல்
ஆதாரங்கள்
அகமார்க்கம்
அறிந்து ,அவற்றின்
அரும்பொருள்கள் உணர்ந்து, அங்கு
அணைந்துபோய் மேல்ஏறி, அலர்மதிமண் டலத்தின்
முகமார்க்க
அமுதுஉடலம் முட்டத் தேக்கி,
முழுச் சோதி
நினைந்திருத்தல் முதலாக வினைகள்
உக
மார்க்க அட்டாங்க யோகம் முற்றும்
உழத்தல், உழந்தவர் சிவன் தன்
உருவத்தைப் பெறுவர்.
ஐம்புலன்களையும்
ஒடுக்கி உள் மூச்சு, வெளிமூச்சு
இரண்டனையும் அடக்கி உயிர்க் காற்றைக் கட்டுப் படுத்தி, முக்கோணம் சதுரம் முதலிய வடிவினைக்
கொண்ட ஆறு ஆதாரங்களையும் உணர்ந்து அந்தந்த ஆதாரத்தில் அதனதற்குரிய அதி தெய்வங்களை
வழிபட்டு மேலேறிச் சென்று பிரமரந்திர தானத்தில் சென்றெய்தி அதில் உள்ள தாமரை
மொட்டை மலர்வித்து அங்குள்ள திங்கள் மண்டலத்தினை இளகச் செய்து அதன் அமுதத்தை உடல்
முழுவதும் தேக்கிப் பேரொளி வடிவாகிய இறைவனை இடையீடின்றி நினைந்திருப்பது தோழமை
நெறியாகும். இதில் நிற்போர் எட்டு உறுப்புக்கள் கொண்ட யோக நெறியை மேற்கொண்டு
ஒழுகுவோராவர். இவர்கள் சிவபெருமானின் உருவத்தைப் பெறுவர். இது யோக நெறி எனப்படும்.
சன்மார்க்கம்
சகலகலை புராணம் வேதம்
சாத்திரங்கள்
சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து,
பன்மார்க்கப்
பொருள் பலவும் கீழாக, மேலாம்
பதிபசுபாசம் தெரித்து, பரசிவனைக் காட்டும்
நன்மார்க்க
ஞானத்தை நாடி, ஞான
ஞேயமொடு ஞாதிருவும்
நாடா வண்ணம்
பின்மார்க்கச்
சிவன் உடனாம் பெற்றி, ஞானப்
பெருமை உடையோர்
சிவனைப் பெறுவர் காணே.
எல்லாம்
கலை ஞானங்களையும், புராணங்களையும், சாத்திரங்களையும் புறச்சமய நூல்களையும்
நுணுகி ஆராய்ந்து பொய்யைப் பொய் என்று தள்ளி இறை உயிர்தளை என்ற முப்பொருள்களின்
உண்மையை உணர்ந்து சிவபெருமானை அடைவதற்குரிய மெய்ஞ்ஞானத்தைப் பெற்று, அறிவு அறிபவன் அறியப்படும் பொருள் என்ற
வேறுபாடு இல்லாமல் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து நிற்பதுவே நன்னெறி எனப்படும்.
இந்த நெறியில் நிற்கும் பெருமை உடையவர்கள் சிவனை அடைவார்கள். இது ஞானநெறி
எனப்படும்.
ஞானநூல்
தனைஓதல் ஓதுவித்தல்
நல்பொருளைக்
கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனம்இலாப்
பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன் அடி
அடைவிக்கும் எழில்ஞான பூசை;
ஊனம்இலாக்
கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்
ஒன்றுக்கு ஒன்று
உயரும்; இவை ஊட்டுவது போகம்;
ஆனவையால்
மேலான ஞானத்தால் அரனை
அருச்சிப்பர்
வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்.
சிவஞானப்
பொருளை விளக்குகின்ற நூல்களைத் தான் ஓதுதலும் பிறர்க்கு ஓதுவித்தலும், நலம் தரும் அந்நூற் பொருள்களை நன்கு
உணர்ந்து பிறர்க்கு உரைத்தலும்,
தான்
அதனை ஆசிரியர்பால் கேட்டலும் குறைவிலாத அப்பொருளைத் சிந்தித்தலும் ஆகிய இவை
ஐந்தும் சிவபெருமான் திருவடியை அடைவிக்கும் அழகிய ஞான வேள்வி என்று போற்றப்படும்.
குறைவிலாத கன்மவேள்வி, தவவேள்வி, சிவவேள்வி, தியான வேள்வி, என்ற நான்கும் நூல்களால்
கூறப்படுவனவாகும். இவை ஒன்றுக்கொன்று உயர்ந்ததாகக் கூறப்படும். ஆயினும் இவை
நான்கானும் பெறுகின்ற பயன் இன்ப நுகர்வே ஆகும். எனவே வீடுபேற்றை அடைய விரும்பும்
பெரியோரெல்லாம் மேம்பட்ட ஞான வேள்வியினாலே சிவபெருமானை வழிபடுவர்.
கேட்டலுடன்
சிந்தித்தல் தெளிதல் நிட்டை
கிளத்தல் எனஈர்
இரண்டாம் கிளக்கில் ஞானம்;
வீட்டை
அடைந் திடுவர் நிட்டை மேவி னோர்கள்;
மேவாது தப்பினவர்
மேலாய பதங்கட்கு
ஈட்டிய
புண்ணிய நாதர் ஆகி, இன்பம்
இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப்
பார்மேல்
நாட்டியநல்
குலத்தினில் வந்து அவதரித்து,
குருவால்
ஞானநிட்டை அடைந்து
அடைவர் நாதன் தாளே,
ஞானவேள்வியில்
நான்கு வகைகள் கூறப்பட்டன. அவற்றுள் இறுதியாகக் கூறப்பட்டது கேட்டல், கேட்டலுடன் கேட்ட பொருளைப் பற்றிச்
சிந்தித்தலும் சிந்தனையின் பயனாகத் தெளிவு பெறுதலும் அதன் பின்னர் நிட்டை
கூடுவதும் என்று இவ்வாறு நான்கு வகையாக ஞானம் நிகழும். நிட்டை கை கூடியவர்கள்
மேலாகிய வீட்டின்பத்தினைத் தலைப்படுவர். நிட்டை கைகூடாது முதல் மூன்று படிகளில்
நின்று தாம் தாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப மேலான உலகங்களுக்குச் சென்று அங்குள்ள
இன்பத்தை இனிது நுகர்ந்து மீண்டும் சிவபெருமான் அருளால் இந்த உலகில் நல்ல குடியில்
வந்து பிறப்பார்கள். அதன் பின்னர் அருளாசிரியர்களிடம் பயின்று ஞானநிட்டை பொருந்தி
இறைவன் திருவடியை அடைவார்கள்.
தானம்
யாகம் தீர்த்தம் ஆச்சிரமம் தவங்கள்
சாந்தி விரதம் கன்ம
யோகங்கள் சரித்தோர்
ஈனம்
இலாச் சுவர்க்கம்பெற்று இமைப்பு அளவில் மீள்வர்;
ஈசன் யோகக் கிரியா
சரியையினில் நின்றோர்
ஊனம்
இலா முத்திபதம் பெற்று உலக மெல்லாம்
ஒடுங்கும் போது
அரன்முன் நிலாது ஒழியின் உற்பவித்து,
ஞானநெறி
அடைந்து அடைவர் சிவனை அங்கு
நாதனே முன்னிற்கின்
நணுகுவர் நற்றாளே.
கொடை, வேள்வி, புண்ணியத்துறைகளில் ஆடுதல், மாணவநெறி இல்லறநெறி கானகத்தவம், துறவு ஆகியவற்றின் வழி ஒழுகுதல், தவஞ்செய்தல், கழுவாய் செய்தல், நோன்பு நோற்றல், யோகநெறி நிற்றல் ஆகிய இவை எல்லாம்
நல்வினைகளே. ஆயினும் இத்தகைய நோன்புகளை மேற்கொண்டவர்கள் குறைவற்ற துறக்க உலகினைச்
சென்று இன்பங்களை நுகர்ந்து இமைப்பளவில் இவ்வுலகில் மீண்டும் வந்து பிறப்பர்.
ஆனால் இறைவன் அருளிய ஆகமநெறியில் கூறப்பட்ட மேம்பட்ட சரியை கிரியை யோகம் என்னும்
சிவபுண்ணியங்களை இயற்றினோர் பதமுத்திகளை அடைந்து அங்கு நெடுங்காலம் வாழ்வர்.
உலகமெலாம் ஒடுங்கும் சங்கார காலத்தில் சிவபெருமான் இவர்களுக்கு முன்னின்று
அருளானாகில், மீண்டும் இவ்வுலகில்
பிறந்து ஞான நெறியைத் தலைப்பட்டு வீடுபெறுவர். பதமுத்திகளில் வைகுவோர்க்கு இறைவன்
திருவருள் கிட்டுமாயின் அங்கிருந்தே அவன் திருவடியில் கலப்பர்.
சிவஞானச்
செயல் உடையோர் கையில் தானம்
திலம் அளவே
செய்திடினும், நிலம்மலைபோல்
திகழ்ந்து,
பவமாயக்
கடலின் அழுந்தாவகை எடுத்து,
பரபோகம் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்
தவம்ஆரும்
பிறப்புஒன்றின் சாரப் பண்ணி,
சரியைகிரி யாயோகம்
தன்னிலும் சாராமே,
நவம்ஆகும்
தத்துவ ஞானத்தை நல்கி,
நாதன் அடிக் கமலங்கள்
நணுகுவிக்கும் தானே.
சிவஞானிகளின்
கையிலே அளித்த கொடை எள்ளளவே ஆயினும் நிலம் போல் அகன்றும் மலைபோல் ஓங்கியும்
திகழும். அவ்வாறு வழங்கிய கொடை மீண்டும் பிறவிக் கடலுள் அழுந்தாதபடி எடுத்து மேலான
இன்பங்களையும் நுகர்வித்து, பாசத்தை அறுப்பதற்கு
ஏற்ற பிறப்பிலே சாருமாறு செய்து,
சரியை
கிரியை யோகம் என்பனவற்றை எளிதாக முற்றுவித்து, உண்மை ஞான நெறியை அடைவித்துச்
சிவபெருமானுடைய செந்தாமரை மலர் போலும் திருவடியாகிய வீட்டின்பத்தினை
எய்துவிக்கும். திலம் - எள்.
ஞானத்தால்
வீடு என்றே நான்மறைகள் புராணம்
நல்ல ஆகமம்சொல்ல, அல்லவாம் என்னும்
ஊனத்தார்
என்கடவர்; அஞ்ஞானத்தால்
உறுவதுதான் பந்தம், உயர் மெய்ஞ்ஞானந்தான்
ஆனத்தால்
அதுபோவது, அலர்கதிர்முன்
இருள்போல்
அஞ்ஞானம் விடப் பந்தம்
அறும், முத்தி ஆகும்;
ஈனத்தார்
ஞானங்கள் அல்லா ஞானம்
இறைவன் அடி ஞானமே
ஞானம் என்பர்.
எல்லாவற்றிலும்
மேலான சிவஞானத்தினாலேயே வீடுபேற்றை அடையமுடியும் என்று நான்மறைகளும் புராணங்களும்
சிவாகமங்களும் முழங்குகின்றன. அதற்கு மாறாக வேறு வகை முயற்சிகளாலும் வீடுபேற்றை
அடையலாம் எனக் கூறும் புறச் சமயத்தார் கூற்று குறைபாடு உடையது. உயிருக்கு
அறியாமையினால் விளைவதே கட்டுநிலை. கட்டுநிலையிலிருந்து விடுபட வேண்டுமானால்
உயர்ந்த மெய்ஞ்ஞானம் தோன்றுதல் வேண்டும். மெய்ஞ்ஞானம் தோன்றவே கதிரவன் முன் இருள்
போல அறியாமை விலகும். அறியாமை நீங்கிய உடனே பாசப் பிணிப்பு அகலும். வீடுபேறும்
வாய்க்கும். மற்றையோர்கூறும் ஞானங்கள் எல்லாம் ஞானம் ஆகாது. சிவபெருமான் திருவடி
ஞானமே மெய்ஞ்ஞானம் என்று மேலோர் கூறுவர்.
அறியாமை
அறிவு அகற்றி, அறிவின் உள்ளே
அறிவுதனை அருளினால்
அறியாதே அறிந்து,
குறியாதே
குறித்து, அந்தக் கரணங்க
ளோடும்
கூடாதே வாடாதே
குழைந்து இருப்பை ஆயின்,
பிறியாத
சிவன்தானே பிரிந்து தோன்றி,
பிரபஞ்ச பேதம்எல்லாம்
தானாய்த் தோன்றி,
நெறியாலே
இவையெல்லாம் அல்ல ஆகி
நின்றுஎன்றும்
தோன்றிடுவன் நிராதாரன் ஆயே.
திருவருளின்
துணை கொண்டு அறியாமை எனப்படும் கேவல நிலையிலிருந்தும், அறிவு எனப்படும் சகல நிலையிலிருந்தும்
நீங்கி அறிவுக்கு அறிவாக இருக்கிற இறைவனைச் சுட்டறிவினால் அல்லாமல் திருவருளால்
தன் முனைப்பின்றி அறிந்து அடங்கி நிற்கப் பெறுவாரானால், தம்மை விட்டு ஒரு போதும் பிரியாத
முதல்வன் பொருள் தன்மை பற்றிப் பிரிந்து தோன்றி, சிந்தித்தற் காலத்து உலகத்துப்
பொருள்கள் யாவையினும் கலப்புப் பற்றி அவையேயாய்த் தோன்றி, அதன் பின்னர் தெளிந்த பின் இவ்விரண்டு
மன்றி இவையாவும் அல்லவாகி ஒன்றிலும் தோய்வு இன்றி அருளுவான்.
பாசஞா
னத்தாலும் பசுஞானத் தாலும்
பார்ப்பரிய பரம்பரனை, பதிஞானத் தாலே
நேசமொடும்
உள்ளத்தே நாடி, பாத
நீழல்கீழ் நில்லாதே
நீங்கி, போதின்
ஆசைதரும்
உலகம்எலாம் அலகைத் தேராம் என்று
அறிந்து அகல, அந்நிலையே ஆகும், பின்னும்
ஓசைதரும்
அஞ்சு எழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்து
அளிப்பன் ஊனமெலாம் ஓட.
சிவபெருமான்
பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் அறிய இயலாத தன்மையினை உடையவன். அப்பெருமானை
அவனுடைய திருவருள் வழியில் நின்று பதிஞானத்தால் தன் உள்ளத்தின் உள்ளே அன்பினோடும்
தேடி வழிபடுதல் வேண்டும். அவ்வாறு இல்லாத போது இவ்வுலகியல் உணர்வு மேல் எழுதல்
கூடும். உலகியல் உணர்வை வெறும் கானல் நீர். நொடிப் பொழுதில் மறையும் தன்மை உடையது
என்று உணர்ந்து அதனை விட்டு நீங்கி இறைவன் திருவடியை விட்டு விலகாத ஆற்றலைத்
தரவல்ல திருவைந்தெழுத்தை விதிப்படி உச்சரித்தல் வேண்டும். அந்நிலையில் திருவடி
ஞானம் விளங்கி உயிரின் குற்றம் எல்லாம் நீங்குமாறு இறைவன் திருவருள் பாலிப்பான்.
"ஞானத்தால்
தொழுவார் சில ஞானிகள்,
ஞானத்தால்
தொழுவேன் உனை நான் அலேன்,
ஞானத்தால்
தொழுவார்கள் தொழக்கண்டு,
ஞானத்தாய்
எனை நானும் தொழுவனே"
என்னும்
அப்பர் பெருமான் அருட்பாடல் சிந்தனைக்கு உரியது.
அழகிய ஈராறு தோள் உடை
அறுமுகவேளே என்னும் அற்புத வாக்கியத்தின் பொருளைச் சிந்தித்தல் நலம்.
"ஆதியொடும்
அந்தம் ஆகிய நலங்கள் ஆறுமுகம் என்று தெளியேனே" என்று பழமுதிர்சோலைத்
திருப்புகழில் அருளினார் அடிகளார். உயிருக்கு எல்லாவிதமான நலங்களையும் அருள்வது
முருகப் பெருமானுடைய
ஆறுதிருமுகங்களே ஆகும்.
கந்தபெருமானுடைய
கருணைகூர் முகங்கள் ஆறும் ஆறுகுணங்களே ஆகும். அவ் அருட்குணங்கள் ஏனைய தேவர்களிடம்
இல்லை.
ஏவர்
தம் பாலும்இன்றி எல்லைதீர் அமலற்கு உள்ள
மூவிரு
குணனும் சேய்க்கு முகங்களாய் வந்தது என்னப்
பூவில்
சரவணத் தண் பொய்கையில் வைகும் ஐயன்
ஆவிகட்கு
அருளும் ஆற்றால் அறுமுகம் கொண்டான் அன்றே. --- கந்தபுராணம்.
ஆறு
அருட்குணங்கள் ஆவன:-
1.முற்றறிவு உடைமை
2.வரம்பபு இல் இன்பம் உடைமை
3.இயல்பாகவவே
பாசங்களில் நீங்குதல்,
4.தம்வயம் உடைமை
5.பேரருள் உடைமை
6.முடிவு இல் ஆற்றல் உடைமை
இதனை
வடமொழியில் முறையே சருவஞ்ஞதை, திருப்தி, அநாதிபோதம், சுவதந்திரத்வம், அலுப்தசக்தி, அநந்தசக்தி என்பர்.
1.நிராமயாத்மா என்ற
குணம் அநாதிபோதத்திலும் விசுத்த தேஹம் என்ற குணம் அலுப்தசக்தியிலும் அடங்கி
எண்குணம் ஆறாகுமாறு காண்க.
2. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களே ஆண்டவனுக்கு
ஆறுமுகங்கள்.
3. திக்தி, பராசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி, குடிலாசக்தி என்ற ஆறு சக்திகளே
ஆறுமுகங்கள்.
4. அகர உகர மகர நாத
விந்து கலை என்ற ஆறுமே ஆறுமுகங்கள்.
5. மந்திரம், பதம், வன்னம், புவனம், கலை, தத்துவம், என்ற அத்துவாக்கள் ஆறுமே ஆறுமுகங்கள்.
6. ஐஸ்வரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம், என்ற மற்றொருவகையான குணங்கள் ஆறுமே
ஆறுமுகங்கள்.
7. சைவம், வைணவம், காணாபத்யம், கௌமாரம், சௌரம், சாக்தம் என்ற ஆறு சமயங்கட்கும் தானே
தலைவன் என்று இறைவன் ஆறுதலையோடு விளங்குகின்றவன்.
8. ஆறுமுகங்களில் இருந்து
வெளிப்படும் பிரகாசங்களாவன; ஞானப்ரகாசம், ஞானானந்தப்ரகாசம், சர்வஞான வியாபகப்ரகாசம், சுத்தஞான சாட்சிப்ரகாசம், சர்வபரிசுத்த பிரம ஞானானந்த
அருட்ப்ரகாசம், அநாதிநித்ய
ப்ரமஞானானந்வ சிவப்ரகாசம்.
9. சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிடம், கல்பம் என்ற அங்கங்கள் ஆறுமே ஆறுமுகங்கள்.
10. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, கீழ், மேல், என்ற ஆறு திசைகளுமே ஆறுமுகங்கள்.
"வரைவறு
ஷாட்குண்ய வஸ்து" என்பார் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்.
அன்றியும்
திருவைந்தெழுத்து ஆகிய சிவயநம ஐந்தும், ஓங்காரமாகிய பிரணவம்
ஒன்றும் ஆகிய ஆறு எழுத்தும் முருகப் பெருமானுக்கு ஆறு திருமுகங்களாயும் அமைந்தன
எனவும் கொள்ளலாம்.
இங்ஙனம்
ஆறுமுகங்கட்கு எண்ணில்லாத விளக்கங்கள் உள. அவற்றையெல்லாம் அவன் அருளறிவுகொண்டு
ஆய்ந்து உணர்க.
ஏறு
மயில் ஏறி விளையாடு முகம் ஒன்றே,
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே,
கூறும்
அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே,
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே,
மாறுபடு
சூரரை வதைத்த முகம் ஒன்றே,
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே,
ஆறுமுகம்
ஆன பொருள் நீ அருளல் வேண்டும்,
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.--- திருப்புகழ்.
என்னும்
திருப்புகழ்ப் பாடலின் கருத்தையும் உன்னி உணர்க.
"..... ..... வில்மலிதோள்
வெவ்வசுரர்
போற்று இசைக்கும் வெஞ் சூரனைத் தடிந்து,
தெவ்வர்
உயிர் சிந்தும் திருமுகமும்,
- எவ்உயிர்க்கும்
ஊழ்வினையை
மாற்றி, உலவாத பேரின்ப
வாழ்வுதரும்
செய்ய மலர் முகமும், - சூழ்வோர்
வடிக்கும்
பழமறைகள் ஆகமங்கள் யாவும்
முடிக்கும்
கமல முகமும், - விடுத்து அகலாப்
பாசஇருள்
துரந்து பல்கதிரில் சோதிவிடும்
வாசமலர்
வதன மண்டலமும், - நேசமுடன்
போகம்
உறும் வள்ளிக்கும், புத்தேளிர் பூங்கொடிக்கும்
மோகம்
அளிக்கும் முகமதியும்,
- தாகமுடன்
வந்து
அடியில் சேர்ந்தோர் மகிழ,
வரம்
பலவும்
தந்து
அருளும் தெய்வமுகத் தாமரையும்...."
--- வில்படை ஏந்திய தோள்களைக் கொண்ட கொடிய
அசுரர்கள் துதித்துப் புகழும் கொடிய சூரபன்மனைக் கொன்று, மற்றுமுள்ள பகைவர்களுடைய உயிரைப்
போக்கிய வீரத் திருமுகம் ஒன்றும்,
--- மலபக்குவம் அடைந்த எல்லா உயிர்க்கும், அவ் அவற்றின் பழவினைகளைப் போக்கி, என்றும் அழியாத பேரின்பப் பெருவாழ்வைத்
தரும் செந்தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும்,
--- ஐயம்
திரிபு அற ஆராயும் தன் அடியார்கள் குற்றம் அறக் கற்றுத் தெளிந்து
எடுக்கின்ற பழமையான வேதங்கள் சிவாகமங்கள் ஆகிய அனைத்தையும், ஐயம் இன்றித் திருவாய் மலர்ந்து, நிறைவு பெறச் செய்யும் தாமரை மலர் போன்ற
திருமுகம் ஒன்றும்,
--- உயிர்களை விட்டு நீங்காத ஆணவமலமாகிய பாச
இருளைப் போக்கி, பல சூரியர்கள் ஒருங்கு சேர்ந்தால் போல
ஒளி வீசும் நன்மணம் கமழ்கின்ற தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும்,
--- அன்புடன் தன்னை அனுபவிக்க எண்ணும்
வள்ளியம்மையார்க்கும், தேவர்களது அழகிய கொடி
போல்பவளாகிய தெய்வயானை அம்மையார்க்கும், ஆசையைப்
பெருக்கும் சந்திரன் போன்ற குளிர்ந்த திருமுகம் ஒன்றும்,
--- திருவருளைப் பெறும் வேட்கையுடன் வந்து தன்
திருவடியே தஞ்சமென அடைந்தவர்கள் உள்ளம் மகிழும் வண்ணம் பலவரங்களையும் கொடுத்து
அருளுகின்ற, தெய்வத் தன்மை மிக
வாய்ந்த தாமரை மலர் போன்ற திருமுகம் ஒன்றும், ஆக ஆறு
திருமுகங்களையும் உடையவர் முருகப் பெருமான் என்று "கந்தர் கலிவெண்பா"வில்
குமரகுருபர அடிகள் அருளி இருப்பதை அறிக.
ஆறு
திருமுகங்களின் செயல்களை, பின் வரும்
திருமுருகாற்றுப்படை அடிகளாலும் அறியலாம்.
மாஇருள்
ஞாலம் மறுஇன்றி விளங்கப்
பல்கதிர்
விரிந்துஅன்று ஒருமுகம், ஒருமுகம்
ஆர்வலர்
ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி
காதலின்
உவந்து வரம் கொடுத்து அன்றே,
ஒருமுகம்
மந்திர
விதியின் மரபுஉளி வழாஅ
அந்தணர்
வேள்வி ஓர்க்கும்மே, ஒருமுகம்
எஞ்சிய
பொருள்களை ஏம்உற நாடித்
திங்கள்
போலத் திசை விளக்கும்மே,
ஒருமுகம்
செறுநர்த்
தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள்
நெஞ்சமொடு களம்வேட்டு அன்றே,
ஒருமுகம்
குறவர்
மடமகள் கொடிபோல் நுசுப்பின்
மடவரல்
வள்ளியொடு நகைஅமர்ந்து அன்றே, ஆங்குஅம்
மூஇரு
முகனும் முறைநவின்று ஒழுகலின்,
முருகனின்
பன்னிரு திருக்கரங்களின் அருள்நலச் செயல்கள்.
"– கொந்து அவிழ்ந்த
வேரிக்
கடம்பும் விரைக்குரவும் பூத்து அலர்ந்த
பாரப்
புயசயிலம் பன்னிரண்டும்,
- ஆர்அமுதம்
தேவர்க்கு
உதவும் திருக்கரமும், சூர்மகளிர்
மேவக்
குழைந்து அணைந்த மென்கரமும், - ஓவாது
மாரி
பொழிந்த மலர்க்கரமும், பூந்தொடையல்
சேர
அணிந்த திருக்கரமும், - மார்பு அகத்தில்
வைத்த
கரதலமும், வாமமருங்கில் கரமும்,
உய்த்த
குறங்கில் ஒருகரமும்,
- மொய்த்த
சிறுதொடிசேர்
கையும், மணிசேர்ந்த
தடம்கையும்,
கறுவுசமர்
அங்குசம் சேர் கையும், – தெறுபோர்
அதிர்கேடகம்
சுழற்றும் அம்கைத் தலமும்,
கதிர்வாள்
விதிர்க்கும் கரமும்..."
என்னும்
கந்தர் கலிவெண்பாப் பாடல் வரிகளைச் சிந்திக்கவும்.
--- கொத்தாக விரிதலால் தேன் நிறைந்த கடப்ப
மலர் மாலையும், மணம் வீசும் குராமலர் மாலையும், பூத்து விளங்குகின்ற
பெரும் சுமையினை உடைய மலை போன்ற பன்னிரண்டு தோள்கள் பொருந்திய பரம்பொருள் முருகப் பெருமான்.
--- நிறைந்த அமுதத்தை தேவர்களுக்குக் கொடுத்து
அருளுகின்ற ஒரு திருக்கரமும், தேவமகளிர் தழுவ வந்து
அணுக, அவர்களைத் திருவுளம்
குழைந்து அணைத்துக் கொண்டு அருளும் மெல்லிய திருக்கரமும், இடைவிடாமல் மழையைப்
பெய்வித்து அருளுகின்ற தாமரை மலர் போன்ற ஒரு திருக்கரமும், பூமாலைகளை ஒருங்கே அணிந்த ஒரு
திருக்கரமும், தமது திருமார்பின்
மீது வைத்துக் கொண்டு இருக்கும் ஒரு திருக்கரமும், இடப்பக்கத்து இடுப்பில் வைத்து அருளிய
ஒரு திருக்கரமும், திருத் துடையின்மேல்
ஊன்றி அருளிய ஒரு திருக்கரமும்,
ஓசை
பொருந்திய சிறிய வீரவாளை அணிந்த ஒரு திருக்கரமும், ஒலி மிகுந்த மணி பிடித்து அருளிய
விசாலமான ஒரு திருக்கரமும், பெரும் கோபத்துடன்
போர் செய்தற்கு அங்குசம் என்னும் ஆயுதத்தைத் தாங்கிய ஒரு திருக்கரமும், பகைவரை அழிக்கின்ற போரில்
அதிர்ச்சியுடன் கேடயம் என்னும்
படைக்கலத்தைச் சுழற்றுகின்ற அழகிய ஒரு திருக்கரமும், ஒளி வீசுகின்ற வாட்படையினை அசைக்கும்
ஒரு திருக்கரமும், ஆகப் பன்னிரண்டு
திருக் கரங்கள் முருகப் பெருமானுக்கு அமைந்துள்ளன.
முருகப்
பெருமானின் பன்னிரண்டு திருக்கரங்களின் திருச்செயல்களை, பின் வரும் திருமுருகாற்றுப்படை
வரிகளால் அறியலாம்--
விண்செலல்
மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை, உக்கம் சேர்த்தியது
ஒருகை,
நலம்பெறு
கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை,
அங்குசம்
கடாவ ஒருகை, இருகை
ஐஇரு
வட்டமொடு எஃகு வலம் திரிப்ப,
ஒருகை
மார்பொடு
விளங்க, ஒருகை
தாரொடு
பொலிய, ஒருகை,
கீழ்வீழ்
தொடியொடு மீமிசைக் கொட்ப,
ஒருகை
பாடின்
படுமணி இரட்ட, ஒருகை
நீல்நிற
விசும்பின் மலிதுளி பொழிய,
ஒருகை
வானர
மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்கு
அப்
பன்னிரு
கையும் பால்பட இயற்றி...
விடை
எறும் ஈசர் நேசமும் மிக,
நினைவார்கள்
தீ வினை உக நெடிது ஓட ---
சிவபெருமானிடத்தில்
நேசம் மிகுக்கின்ற நிலையிலேயே, உயிர்களின் வினையானது
தீயிடைப் பட்ட தூசு போலவும், நெருப்பிடைப் பட்ட பஞ்சுப் பொதி போலவும் பொடிபட்டுப்
போகும் என்பதைப் பின்வரும் அருட்பாடல்களால் தெளியலாம்.
விண்ணுற
அடுக்கிய விறகின், வெவ்வழல்
உண்ணிய
புகில்,அவை ஒன்றும் இல்லையாம்,
பண்ணிய
உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணிநின்று
அறுப்பது நமச்சி வாயவே. --- அப்பர்.
சந்திரற்
சடையில் வைத்த சங்கரன், சாம வேதி,
அந்தரத்து
அமரர் பெம்மான்,
ஆன்நல்வெள்
ஊர்தியான்தன்
மந்திரம்
நமச்சிவாய ஆக,
நீறு
அணியப் பெற்றால்
வெந்துஅறும்
வினையு நோயும் வெவ்வழல் விறகிட்டு அன்றே. ---
அப்பர்.
பவ்வம்
ஆர்கடல் இலங்கையர் கோன்தனைப்
பருவரைக் கீழ்ஊன்றி
எவ்வம்
தீரஅன்று இமையவர்க்கு அருள்செய்த
இறையவன் உறைகோயில்,
மவ்வம்
தோய்பொழில் அரிசிலின் வடகரை
வருபுனல் மாகாளம்
கவ்வையால்
தொழும் அடியவர் மேல்வினை
கனல்இடைச் செதிள்அன்றே. --- திருஞானசம்பந்தர்.
மாயனை
மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய
பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர்
குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக்
குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய்
வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால்
பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய
பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில்
தூசுஆகும் செப்பு, ஏல்ஓர் எம்பாவாய். --- ஆண்டாள் நாச்சியார்.
விரை
செறி தோகை மாதர்கள் விரகுடன் ஆடும் மாதையில் விறல் மயில் மீது மேவிய பெருமாளே ---
நறுமணம் நிறைந்த கூந்தலை உடைய பெண்கள்
ஆர்வத்துடன் திருநடனம் புரிகின்ற பழமையான திருவாமாத்தூர் என்னும் திருத்தலத்தில் முருகப்
பெருமான் திருக்கோயில் கொண்டு எழுந்தருள் புரிகின்றார்.
திருஞானசம்பந்தப்
பெருமான் பாடலுக்கு ஒத்த நிலையில்,
அடிகளார்
அருள் வாக்கும் அமைந்துள்ளது காண்க.
சேலின்
நேர்அன கண்ணி, வெண்ணகை,
மான்விழி, திரு மாதைப்
பாகம்வைத்து,
ஏல
மாதவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?
பாலின்
நேர் மொழி மங்கைமார் நடம்
ஆடி இன்னிசை பாட, நீள்பதி
ஆலை
சூழ்கழனி ஆமாத்தூர் அம்மானே.
பாலை
ஒத்த இனிய மொழி பேசும் மங்கையர் நடனம் ஆடி இன்னிசை பாட, கரும்பு ஆலைகள் சூழ்ந்த வயல் வளம் உடைய
நீண்ட பதியான ஆமாத்தூர் அம்மானே! சேல்போன்ற கண்ணையும் வெண்ணகையையும் மான்போன்ற
விழியையும் உடைய அழகிய உமையவளைப் பாகமாக வைத்துக் கொண்டு இயன்ற பெரிய தவத்தை
மேற்கொண்டுள்ள உன் வேடம் பொருந்துமாறு எங்ஙனம்?
திரு ஆமாத்தூர் தல வரலாறு
விழுப்புரம்
- திருவண்ணாமலை - செஞ்சி பேருந்துச் சாலையில், 2. கி.மீ. சென்றால்
"திருவாமாத்தூர்" கைகாட்டியில் இடப்புறமாகப் பிரிந்து செல்லும் பாதையில்
6 கி.மீ. சென்றால்
இத்தலத்தை அடையலாம். விழுப்புரம் - சூரப்பட்டு நகரப் பேருந்து திருவாமாத்தூர்
வழியாகச் செல்கிறது. விழுப்புரம் சென்னையில் இருந்து 160 கி.மி. தொலைவில் உள்ளது.
இறைவர்
: அழகிய நாதர், அபிராமேசுவரர்
இறைவியார்
: முத்தாம்பிகை
தல
மரம் : வன்னி மரம்
தீர்த்தம் : பம்பை ஆறு, ஆம்பலப்பொய்கை.
மூவர்
முதலிகள் வழிபட்டதும், திருப்பதிகங்கள்
பெற்றதும் ஆகிய அருமைத் திருத்தலம்.
ஆதி
காலத்தில் பசுக்கள் கொம்பில்லாமல் படைக்கப்பட்டிருந்தன. தெய்வப் பசுவாகிய
காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் சிங்கம், புலி முதலிய மிருகங்களிடம் இருந்து
தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட்டன. நந்திதேவரும்
அவைகள் வேண்டுவது சரியே என்று கூறி பம்பை நதிக்கரையிலுள்ள வன்னி வனத்தில் சுயம்பு
மூர்த்தியாக இருக்கும் அபிராமேசுவரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி
வழிபடும்படி கூறினார். அவ்வாறே பசுக்களும் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றன.
ஆக்கள் (பசுக்கள்) பூஜித்த காரணத்தால் இத்தலம் ஆமாத்தூர் என்று பெயர் பெற்றது.
இந்த திரு ஆமாத்தூர் தலத்தை யார் புகழ்ந்து பேசினாலும் அல்லது மற்றவர்கள் புகழக்
கேட்டாலும் அவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று தல புராண வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் உள்ள சிவாலயம் தலம்,
மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றினாலும்
சிறப்புடையது.
இறைவன்
கோயிலும், இறைவி கோயிலும்
தனித்தனியே சாலையின் இருபுறமும் எதிரெதிரே கோபுரங்களுடன் அமைந்துள்ளன. இறைவன் கோயில்
கோபுரம் 7 நிலைகளுடன் கிழக்கு
நோக்கி நல்ல சுற்று மதிலுடன் விளங்குகின்றது. அம்பாள் கோவில் கோபுரம் 5 நிலைகளுடன் மேற்கு நோக்கி உள்ளது.
சுவாமி கோவில் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தால் எதிரே பெரிய சுதை நந்தி நம்மை
வரவேற்கிறது. இறைவன் குடியிருக்கும் ஆலயம் இரண்டு பிரகாரங்கள் கொண்டது.
அச்சுதராயர் என்றவர் இந்த ஆலயத் திருப்பணி செய்தவர்களில் முதன்மையானவர். அவரின்
சிலை வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் அமைந்திருக்கிறது. மேலும் வெளிப்
பிராகாரத்தில் உள்ள சித்தி விநாயகர் சந்நிதியும், தனிக் கோயிலாகவுள்ள சண்முகர்
சந்நிதியும், ஈசான்ய லிங்கேஸ்வரர்
சந்நிதியும் தரிசிக்கத்தக்கது. வெளிப் பிரகார வலம் முடித்து சித்தி விநாயகர்
சந்நிதி அருகே உள்ள படிகளேறி உள்பிரகாரத்தை அடையலாம். நேரே தெற்கு நோக்கிய நடராச
சபை உள்ளது. உள்பிரகார சுற்றில் 63 மூவர், காலபைரவர், தேவ கோஷ்டத்தில் சனகாதி முனிவர்களுடன்
தட்சிணாமூர்த்தி, சப்த மாதர்கள், சிவபூஜை விநாயகர் ஆகியோரைக் காணலாம்.
கருவறை அகழி அமைப்புடன் உள்ளது. மூலவர் வாயிலில் இருபுறங்களிலும் துவார பாலகர்
வண்ணச் சுதையில் உள்ளனர். அபிராமேஸ்வரர் என்றும், அழகிய நாதர் என்றும் வழங்கும் இத்தலத்து
இறைவன் ஒரு சுயம்பு மூர்த்தியாவார். பசுக்கள் பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு
லிங்கத்தின் மேல் சந்திரனின் பிறை போல் வளைந்து பசுவின் கால் குளம்பின் சுவடு
தென்படுகிறது. இறைவன் சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படுகிறார். இரண்டாம்
பிரகாரத்தில் இராமர், முருகன், திருமகள் ஆகியோர் சந்நிதிகள்
இருக்கின்றன. மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்ற தீர்த்தம் ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.
இதில் நீராடாமல், நீரை எடுத்து தலையில்
தெளித்துக் கொண்டாலே சிவபுண்ணியம் கிட்டும் என்பது ஐதீகம்.
சாலையில்
எதிரே உள்ள அம்பாள் கோபுர வாயில் வழியாக உள்ள நுழைந்தால் கொடிமரம், பலிபீடம், சிம்மம் ஆகியவற்றைக் காணலாம். வெளிப்
பிரகாரத்தில் சந்நிதிகள் ஏதுமில்லை. உள் வாயிலின் இருபுறமும் வண்ணச் சுதையால்
அமைந்த துவாரபாலகியர் உருவங்கள் உள்ளன. அம்பாள் முத்தாம்பிகை மேற்கு நோக்கி
அருட்காட்சி தருகிறாள். இந்த அம்பாள் ஒரு வரப்பிரசாதி. அம்பாள் சந்நிதிக்கு
நுழையும் போதே வலதுபுறம் மூலையில் வட்டப்பாறை அம்மன் சந்நிதி (அம்பாளின்
சாந்நித்யரூபம்) உள்ளது. தற்போது இச் சந்நிதியில் சிவலிங்கமே உள்ளது.
வட்டப்
பாறை:
அம்பிகை சந்நிதியின் பிரகாரச் சுற்றில் தென் புறம் ஒரு வட்டப் பாறையும், அருகில் ஒரு சிவலிங்கமும் உள்ளது.
இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு
கொண்டபோது இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.
ஊரில் உள்ள எல்லோரும் வட்டப் பாறையின் மீது கை வைத்து சத்தியம் செய்து தங்கள்
வழக்குகளை தீர்த்துக் கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. இந்த வட்டப் பாறை
ஒரு சிறிய சந்நிதி. இதன் முன் பொய் சொல்வோர் மீளாத துன்பத்திற்கு ஆளாவார்கள் என்று
ஐதீகமுண்டு.
வட்டப்பாறை அம்மன்
சந்நிதி தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.
அண்ணன்
ஒருவன் இளையவனான தன் தம்பியை ஏமாற்றிச் சொத்தினைத் தனக்குச் சேர்த்துக் கொண்டான்.
வயது வந்து உண்மையறிந்த தம்பி அண்ணனிடம் சென்று தனக்குரிய சொத்தைத் தருமாறு
கேட்டான். அண்ணன் மறுக்க, தம்பி பஞ்சாயத்தைக்
கூட்டினான். பஞ்சாயத்தார் வட்டப்பாறை அம்பாள் சந்நிதியில் அண்ணனை சத்தியம் செய்து
தருமாறு கூறினர். அண்ணன் இதற்கென ஒரு சூழ்ச்சி செய்தான். தம்பியின் சொத்தால் பெற்ற
மதிப்பைத் திரட்டிப் பொன் வாங்கி அதைத் தன் கைத்தடியில் பூணுக்குள் மறைத்துக்
கொண்டான். அத்தடியுடன் பஞ்சாயத்து நடக்கும் அவைக்கு வந்து, தம்பியிடம் தடியைத் தந்துவிட்டு, அம்பாள் சந்நிதியில் இருகைகளாலும்
"‘தன்னிடம் தம்பியின் சொத்து ஏதுமில்லை, எல்லாம் அவனிடமே உள்ளது" என்று
சத்தியம் செய்து கொடுத்தான். சூழ்ச்சியறியாத அனைவரும் வேறுவழியின்றி அவனைத்
தம்பியுடன் அனுப்பி விட்டனர். தம்பியிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்ட
கைத்தடியுடன் சென்ற அண்ணன், இத்தலத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் நாகம்மன்
கோயிலை அடைந்தபோது அம்பாளின் தெய்வ சக்தி தன்னை ஒன்றும் செய்யவில்லை என்று
இறுமாப்புக் கொண்டு அம்பாளையும் சேர்த்துத் திட்டினானாம். அப்போது கரும்பாம்பு
ஒன்று தோன்றி அவனைக் கடித்துச் சாகடித்தது என்று வரலாறு சொல்லப்படுகிறது. அவ்வாறு
கடித்துச் சாகடித்த இடத்தில் இன்றும் பெரிய நாகச்சிலை ஒன்றுள்ளது. இந்நிகழ்ச்சியை
மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் முத்தாம்பிகை அம்பாளின் மார்பில் பாம்பின் வால்
சிற்பம் உள்ளது. தரிசிப்போர் சிவாச்சாரியாரிடம் கேட்டு நேரில் காணலாம்.
அம்பாளுக்குச் செய்த அலங்காரம் செய்யப்பட்ட வெள்ளிக் கவசத்திலும் சர்ப்பத்தின்
வால் செதுக்கப்பட்டுள்ளது.
வள்ளல்
பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சூர்ப் புடைத்தது ஆம் மா தூர் விழத் தடிந்தோன்
கணேசனோடும் ஆமாத்தூர் வாழ் மெய் அருட் பிழம்பே" என்று போற்றி உள்ளார்.
கருத்துரை
முருகா! விலைமாதர் வயப்பட்டு
அடியேன் உழலாமல், தேவரீரது ஆறுதிருமுகங்களையும்,
பன்னிரு திருத்தோள்களையும்
வழிபட்டு உய்ய அருள்.