திரு இடும்பாவனம்





                                             திரு இடும்பாவனம்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         திருத்துறைப்பூண்டியில் இருந்து தென்மேற்கே 16 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் உள்ளது. திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை போன்ற இடங்களில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன. திருத்துறைப்பூண்டியில் இருந்து தொண்டியக்காடு செல்லும் நகரப் பேருந்து இத்திருத்தலத்திற்குச் செல்கிறது. முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்து சாலையில் பயணித்தும் இத்திருத்தலத்தை அடையலாம். திருக்கடிக்குளம் இத்திருத்தலத்திலிருந்து 1 கி.மி. தொலைவில் உள்ளது.


இறைவர்              : சற்குணேசுவரர், சற்குணநாதர்மணக்கோலநாதர், கல்யாணநாதர்இடும்பாவனேசுவரர்.

இறைவியார்           : மங்களவல்லி, மங்களநாயகி,  கல்யாணேசுவரி.

தல விநாயகர்        : வெள்ளை விநாயகர்.

தல மரம்              : வில்வம்.

தீர்த்தம்                : பிரமதீர்த்தம், அகத்தியதீர்த்தம்எமதீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - மனமார்தரு மடவாரொடு.

         இயற்கை வளம் மிக்க சோழ வளநாட்டில், தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களுள் ஒன்று இடும்பாவனமாகும். மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இத்தலம் "இடும்பாவனம்" எனப் பெயர் பெற்றது. பஞ்ச பாண்டவர்களுள் ஒருவனான பீமன் "தலைமறைவு" வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் வந்தபோது இடும்பாவனத்துக்கு வந்தார். அருகில் உள்ள இடும்பனின் தலைநகரமாகிய குன்றளூரில் இடும்பியைக் கண்டு மணம் புரிந்தார். பின்னர் பீமன் இடும்பியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி, சிவனாரை வணங்கி மகிழ்ந்தார். மிகப் பழமை வாய்ந்த இத்தலத்தில் பிரம்மதேவர், ராமபிரான், எமதர்மன் போன்றோர் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர்.

         பிரம்மதேவர் சத்வகுணங்கள் பெற வேண்டித் தவம் புரிந்து, சிவபெருமானை இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் இத்தல ஈசர் சற்குணேசர், சத்குண நாதர் என்று அழைக்கின்றனர். அகத்திய மாமுனிவர் இறைவனின் மணக்கோலம் கண்ட தலங்களுள் ஒன்றாக "இடும்பாவனம்" புகழப்படுகின்றது. இறைவனுக்குப் பின்புறம் கருவறைச் சுவற்றில் இந்த மணவாளக்கோலம் உள்ளதைக் காணலாம். இத்தலம் பிதுர்முக்தித் தலங்களுள் ஒன்றாகும். ஆகவே பிதுர்க்கர்மாக்களைச் செய்வதற்கு இத்தலம் மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

         ஆலய அமைப்பு: நந்தி, பலிபீடம், கொடிமரம் ஆகியன ஆலயத்தின் வெளியே காணப்படுகின்றன. கோயில் மூன்று நிலை ராஜகோபுரத்துடனும், ஒரு பிராகாரத்துடனும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோபுர மாடத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் முருகர் மற்றும் விநாயகர் உள்ளனர். நாற்புறமும் அகலமான மதில்கள் சூழ ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே சென்றவுடன் இருபுறமும் முன் வரிசையில் இடும்பன், அகத்தியர், சூரியன், சந்திரன், நால்வர், பைரவ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரே பெரிய பிரகாரத்துடன் ஆலயம் விளங்குகிறது. முதலில் ராஜகோபுரத்திற்கு நேராக பிரம்மாண்டமான சபா மண்டபம், மூடுதளமாக உள்ள மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என இறைவன் சந்நிதி அமைந்துள்ளது. சுயம்பு லிங்கமான மூலவரின் கருவறை உயர்ந்த அடித்தளத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகின்றார்  சற்குணேசுவரர். சத்வ குணம் (நல்லியல்புகள்) கொண்ட இவரை வழிபட்டால் மன அமைதியும், அற்புத வரங்களையும் பெறலாம். வாழ்வில் ஏற்படக் கூடிய இடர்களை நீக்க வல்லவர் இந்த இடும்பாவனேசுவரர் என்னும் சற்குணேசுவரர். "இடுக்கண் பல களைவான் இடம் இடும்பாவனம்" என்று திருஞான சம்பந்தர் தனது பதிகத்தின் 10-வது பாடலில் இக்கருத்தினை உறுதிப்படுத்துகின்றார். லிங்க மூர்த்திக்கு பின்புறம் சுவரில் ஆதி தம்பதியான அம்மையும், அப்பனும் எழில் வடிவோடு திருமணக் கோலத்தில் தரிசனம் தருகின்றனர். சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் தியாகராஜர் சந்நிதி, முக மண்டபத்துடன் விளங்குகின்றது. சந்நிதிக்குள் தியாகேசர், அம்மையோடு திருவாபரணங்கள் ஜொலிக்க அற்புத தரிசனமளிக்கின்றார்.

         மங்கள நாயகி அம்பாள் தெற்கு நோக்கி தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கின்றாள். சர்வ மங்களங்களையும் அருளும் வல்லமை மிக்கவள் இந்தத் தாயார். அழகிய தூண்களும், சிலைகளும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. முறையான சிவாலய கோஷ்ட மூர்த்தங்களோடு, பின்புற வரிசையில் மகாகணபதி, கஜலட்சுமி, சனீசுவரர், நவக்கிரகங்கள் ஆகியோரின் திருவடிவங்கள் அருள் செய்கின்றன. இங்குள்ள வெண்மை நிறமுடைய சுவேத விநாயகர் மிகவும் பிரசித்தமானவர். கணபதி சந்நிதி, ஆலயத்தின் தென்புறத்திலும், வள்ளி-தெய்வானையுடன் கூடிய கந்தன் சந்நிதி வடபுறமும் அமைந்துள்ளன.

         ஆலயத்தின் எதிரே உள்ள பிரம்ம தீர்த்தம், எமன் ஏற்படுத்திய எம தீர்த்தம் மற்றும் அகத்திய முனிவர் உண்டாக்கிய அகஸ்திய தீர்த்தம் ஆகியன இத்தலத்தின் தீர்த்தங்களாக உள்ளன. தலமரமாக வில்வம் விளங்குகிறது.

         இத் திருக்கோயில் காலை 7-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "பொங்கு பவ அல்லல் இடும் பாவ நத்தமட்டொளி செய்கின்ற திரு மல்லல் இடும்பாவனத்து மாட்சிமையே" என்று போற்றி உள்ளார்.

  
திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெ. பு. பாடல் எண் : 623
கண்ஆர்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி,
எண்ஆர்ந்த திருஇடும்பா வனம் ஏத்தி எழுந்து அருளி,
மண்ஆர்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கி,
பண்ஆர்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருக்கடிக்குளம்' என்ற பதியை வணங்கி, மக்களின் மனம்நிறைந்த `திருஇடும்பாவனம்' என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிறபதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன்பினால் வணங்கி, அங்கங்கே பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடிய வண்ணமே செல்பவராய்,
        
         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருக்கடிக்குளம் (தி.2 ப.104) - பொடிகொள்மேனி - நட்டராகம்.
2.    திருஇடும்பாவனம் (தி.1 ப.17) - மனமார்தரு - நட்டபாடை.

        `பதிபிறவும்' என்பன தில்லைவளாகம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.



திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

1. 017  திருஇடும்பாவனம்                 பண் -  நட்டபாடை
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மனம்ஆர்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனம்ஆர்தரு சங்கக்கடல் வங்கத்திரள் உந்திச்
சினம்ஆர்தரு திறல்வாள்எயிற்று அரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :மனத்தால் விரும்பப் பெற்ற மனைவியரோடு மகிழ்ச்சிமிக்க இளைஞர்களால் மலர்தூவி வழிபட்டுச் செல்வம் பெறுதற்குரியதாய் விளங்குவதும், சங்குகளை உடைய கடலில் உள்ள கப்பல்களை அலைகள் உந்தி வந்து சேர்ப்பிப்பதும் ஆகிய இடும்பாவனம், சினம் மிக்க வலிய ஒளிபொருந்திய பற்களை உடைய இடும்பன் என்னும் அரக்கனுக்குரிய வளம்மிக்க குன்றளூர் என்னும் ஊரில் முனிவர் குழாங்களால் வணங்கப்பெறும் சிவபிரானுக்குரிய இடம் ஆகும்.


பாடல் எண் : 2
மலைஆர்தரு மடவாள்ஒரு பாகம்மகிழ்வு எய்தி
நிலைஆர்தரு நிமலன்,வலி நிலவும்புகழ் ஒளிசேர்
கலைஆர்தரு புலவோர்அவர் காவல்மிகு குன்றில்
இலைஆர்தரு பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :இமவான் மகளாய் மலையிடைத் தோன்றி வளர்ந்த பார்வதி தேவியை ஒரு பாகமாகக் கொண்டு மகிழ்ந்து நிலையாக வீற்றிருந்தருளும் குற்றமற்ற சிவபிரானது வென்றி விளங்குவதும், புகழாகிய ஒளி மிக்க கலை வல்ல புலவர்கள் இடைவிடாது பயில்வதால் காவல்மிக்கு விளங்குவதுமான குன்றளூரை அடுத்துள்ள இலைகள் அடர்ந்த பொழில் சூழ்ந்த இடும்பாவனம் இதுவேயாகும்.


பாடல் எண் : 3
சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்துஎழும் எந்தை,
ஞாலம்மிகு கடல்சூழ்தரும் உலகத்தவர், நலம்ஆர்
கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை – தவ ஒழுக்கத்தால் மேம்பட்ட முனிவர்களால் சிந்தித்து வணங்கப்பெறும் எம் தந்தையாகிய சிவபிரான் எழுந்தருளிய தலம், நிலப்பரப்பினும் மிக்க பரப்புடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகச் சான்றோர்களும், நற்குணங்களும் அழகும் மலர்போலும் மென்மையான தனங்களும் உடைய பெண்களும் மிக்குள்ள குன்றளூரைச் சார்ந்த ஏல மணங்கமழும் பொழில் சூழ்ந்த இடும்பாவனம் எனப்படும் தலம் இதுவேயாகும்.


பாடல் எண் : 4
பொழில்ஆர்தரு குலைவாழைகள் எழில்ஆர்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டர்அவர் தொழுதுஆடிய முன்றில்
குழல்ஆர்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில்
எழில்ஆர்தரும் இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை –  குலைகள் தள்ளிய வாழைகள் செழித்துள்ள பொழில்கள் சூழப்பெற்றதும், அழகு திகழும் காலை மாலைப் பொழுதுகளில் பணி செய்வதால் சிறப்பு மிகுந்து விளங்கும் தொண்டர்கள் தொழுது ஆடி மகிழும் முன்றிலை உடையதும் மலர் சூடிய கூந்தலை உடைய மென்முலை மடவார் சூழ்ந்துள்ளதுமான குன்றளூரை அடுத்துள்ள இடும்பாவனம் அழகுக்கு அழகு செய்யும் இறைவர்க்குரிய இடமாகும்.


பாடல் எண் : 5
பந்துஆர்விரல் உமையாள்ஒரு பங்கா,கங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல்
கொந்துஆர்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில்
எந்தாய்என இருந்தான்இடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :பந்தாடும் கை விரல்களை உடைய உமையவள்பங்கனே எனவும், கங்கை அணிந்த சடைமுடியோடு செந்தாமரை மலர்கள் நிறைந்த நீர் நிரம்பிய வளமான வயல்களின் கரைமேல் கொத்துக்களாக மலர்ந்த புன்னை, மகிழ், குரா ஆகியவற்றின் மணம் கமழ்கின்ற குன்றளூரில் எழுந்தருளிய எந்தாய் எனவும், போற்ற இருந்த இறைவனது இடம், இடும்பாவனம்.


பாடல் எண் : 6
நெறிநீர்மையர் நீள்வானவர் நினையும்நினைவு ஆகி
அறிநீர்மையில் எய்தும்அவர்க்கு அறியும்அறிவு அருளிக்
குறிநீர்மையர் குணம்ஆர்தரு மணம்ஆர்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :தவ ஒழுக்கத்தால் சிறந்த முனிவர்கள், உயர்ந்த தேவர்கள் ஆகியோர் நினையும் நினைவுப் பொருளாகி, ஞானத்தால் தொழும் மேலான ஞானியர்கட்குத் தன்னை அறியும் அறிவை நல்கிச் சிவலிங்கம் முதலான குறிகளில் இருந்து அருள் புரிபவனாகிய சிவபெருமான் இடம், தூய சிந்தனையைத் தரும் மணம் கமழ்கின்ற குன்றளூரில் வரப்பை மோதும் நீர் நிரம்பிய வயல்கள் புடைசூழ்ந்து விளங்கும் இடும்பாவனமாகிய இத்தலமேயாகும்.


பாடல் எண் : 7
நீறுஏறிய திருமேனியர், நிலவும்உலகு எல்லாம்
பாறுஏறிய படுவெண்தலை கையிற்பலி வாங்கா,
கூறுஏறிய மடவாள்ஒரு பாகம்மகிழ்வு எய்தி
ஏறுஏறிய இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :நீறணிந்த திருமேனியராய், விளங்கும் உலகெங்கணும் சென்று, பருந்து உண்ணவரும் தசையோடு கூடிய காய்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அன்பர்கள் இடும் உணவைப்பெற்று உமையம்மையைத் தன் மேனியின் ஒரு கூறாகிய இடப்பாகமாக ஏற்று மகிழ்ந்து விடைமீது வரும் சிவபெருமானுக்குரிய இடமாகிய இடும்பாவனம் இதுவேயாகும்.


பாடல் எண் : 8
தேர்ஆர்தரு திகழ்வாள்எயிற்று அரக்கன்சிவன் மலையை
ஓராதுஎடுத்து ஆர்த்தான்முடி ஒருபஃதுஅவை நெரித்துக்
கூர்ஆர்தரு கொலைவாளொடு குணநாமமும் கொடுத்த
ஏர்ஆர்தரும் இறைவர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :வானவெளியில் தேர்மிசை ஏறிவந்த ஒளி பொருந்திய வாளையும் பற்களையும் உடைய அரக்கனாகிய இராவணன், சிவபிரான் எழுந்தருளிய கயிலை மலையின் சிறப்பை ஓராது, தன்தேர் தடைப்படுகிறது என்ற காரணத்திற்காக மலையைப் பெயர்த்துச் செருக்கால் ஆரவாரம் செய்ய, அவன் பத்துத் தலைமுடிகளையும் நெரித்தபின் அவன் வருந்திவேண்ட, கருணையோடு கூரிய கொலைவாள், பிற நன்மைகள், இராவணன் என்ற பெயர் ஆகியவற்றைக் கொடுத்தருளிய அழகனாகிய இறைவற்கு இடம் இடும்பாவனம்.


பாடல் எண் : 9
பொருள்ஆர்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலிமலிசீர்த்
தெருள்ஆர்தரு சிந்தையொடு சந்தம்மலர்பலதூய்
மருள்ஆர்தரு மாயன்அயன் காணார்மயல்எய்த
இருள்ஆர்தரு கண்டர்க்குஇடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :தருக்கு மிகுந்த மாயனும் அயனும் காணாது மயங்கப் பொருள் நிறைந்த வேதங்களைக் கற்றுணர்ந்த அந்தணர்களால் புகழ்ந்து போற்றப் பெறும் பழமையானவரும், புகழ்மிக்க அம்மறையோர்களால் தெளிந்த சிந்தையோடு பல்வகை நிறங்களுடன் கூடிய மலர்களைத்தூவி வழிபடப் பெறுபவரும் ஆகிய அருள் நிறைந்த கண்டத்தை உடைய சிவபிரானுக்குரிய இடமாக விளங்கும் இடும்பாவனம், இதுவேயாகும்.


பாடல் எண் : 10
தடுக்கையுடன் இடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைகள் உடம்புஇட்டுஉழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவான்இடம் இடும்பாவனம் இதுவே.

         பொழிப்புரை :பனை ஓலையால் செய்த தடுக்கைத் தம்கையில் இடுக்கிக்கொண்டு தலையிலுள்ள உரோமங்களைப் பறித்து முண்டிதமாக நடக்கும் சமணரும், உடுத்துவதற்குரிய காவியுடைகளை அணிந்து திரியும் புத்தரும் அறிய இயலாதவனாய், துன்பம் நீக்கி இன்பம் அருளும் இறைவனது இடம், தாமரை செங்கழுநீர் போன்ற மலர்களை உடைய மடுக்களும், செந்நெல் வயல்களும் சூழ்ந்த, நீர்மலர் மிக்க நீர்நிலைகளின் கரைமேல் விளங்கும் இடும்பாவனம் இதுவேயாகும்.


பாடல் எண் : 11
கொடிஆர்நெடு மாடக்குன்ற ளூரில்கரைக் கோல
இடிஆர்கடல் அடிவீழ்தரும் இடும்பாவனத்து இறையை
அடிஆயும்அந் தணர்காழியுள் அணிஞானசம் பந்தன்
படியால்சொன்ன பாடல்சொலப் பறையும் வினை தானே.

         பொழிப்புரை :கொடிகள் கட்டிய நீண்ட மாடங்களோடு கூடிய குன்றளூரில் கரைமீது இடியோசையோடு கூடிய அழகிய கடல் தன் அலைகளால் அடிவீழ்ந்து இறைஞ்சும் இடும்பாவனத்து இறைவனை, திருவடிகளையே சிந்தித்து ஆய்வு செய்யும் அந்தணர்கள் வாழும் காழிப்பதிக்கு அணியாய ஞானசம்பந்தன் முறையோடு அருளிய இப்பாடல்களை ஓத, வினைகள் நீங்கும். தானே - அசை.


                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...