சிறுவாபுரி - 0737. சீதள வாரிச





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சீதள வாரிஜ (சிறுவை-சிறுவாபுரி)

முருகா!
திருவருள் புரிவாய்.


தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன ...... தனதான


சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
     சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
     தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்

பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
     பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
     பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
     பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா

போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
     பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
     மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
     வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சீதள வாரிஜ பாதா! நமோ நம,
     நாரத கீத விநோதா! நமோ நம,
     சேவல மாமயில் ப்ரீதா! நமோ நம, ...... மறைதேடும்

சேகரம் ஆன ப்ரதாபா! நமோ நம,
     ஆகம சார சொரூபா! நமோ நம.
     தேவர்கள் சேனை மகீபா! நமோ நம, ...... கதிதோயப்

பாதக நீவு குடாரா! நமோ நம,
     மா அசுரேச கடோரா! நமோ நம,
     பாரினிலே ஜய வீரா! நமோ நம, ...... மலைமாது

பார்வதியாள் தரு பாலா! நமோ நம,
     நாவல ஞான மனோலா! நமோ நம,
     பால குமார சுவாமீ! நமோ நம, ...... அருள்தாராய்.

போதக மாமுகம் நேரான சோதர!
     நீறுஅணி வேணியர் நேயா! ப்ரபாகர
     பூமகளார் மருகேசா! மகா உததி ...... இகல்சூரா!

போதக மாமறை ஞானா! தயாகர!
     தேன்அவிழ் நீப நறா ஆரும் மார்பக!
     பூரண மாமதி போல் ஆறு மாமுக! ...... முருகேசா!

மாதவர் தேவர்களோடே முராரியும்,
     மாமலர் மீது உறை வேதாவுமே புகழ்,
     மாநிலம் ஏழினும் மேலான நாயக! ...... வடிவேலா!

வானவர் ஊரினும் வீறுஆகி வீறு, ள-
     காபுரி வாழ்வினும் மேலாகவே திரு
     வாழ் சிறுவாபுரி வாழ்வே! சுர அதிபர் ...... பெருமாளே.


பதவுரை

      போதக மாமுகம் நேரான சோதர --- சிறந்த யானைமுகத்தர் ஆகிய விநாயகப் பெருமானுக்கு நேர் இளைய சகோதரரே!

      நீறு அணி வேணியர் நேயா --- திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்கு நேயமானவரே!

     ப்ரபாகர --- ஞான ஆதித்தரே!

      பூமகளார் மருக --- இலக்குமிதேவியின் திருமருகரே!

     ஈசா --- ஐசுவரியங்களை அருள்பவரே!

      மகா உததி இகல் சூரா --- பெருங் கடலுடன் மாறுபட்டு வேலை விடுத்து அருளிய சூரரே!

      போதக மாமறை ஞானா --- சிறந்த வேதங்களின் பொருளாக உள்ள ஞானமே வடிவானவரே!

     தயாகர --- கருணை புரிபவரே!

      தேன் அவிழ் நீப நறா ஆரும் மார்பக ---  கடப்பமலர் மாலையிருந்து சொட்டும் தேன் பொருந்திய திருமார்பரே!

     பூரண மாமதி போல் ஆறு மாமுக --- நிறைமதியை ஒத்த ஆறு திருமுகங்களை உடையவரே!

     முருக ஈசா  --- முருகக் கடவுளே!

      மாதவர் தேவர்களோடே முராரியும் --- தவமுனிவர்கள், தேவர்களோடு  திருமாலும்,

      மாமலர் மீது உறை வேதாவுமே புகழ் --- தாமரை மலரின் மீதுள்ள பிரமதேவனும் புகழுகின்ற

      மாநிலம் ஏழினும் மேலான நாயக --- பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவரே!

     வடிவேலா --- கூரிய வேலாயுதரே!

      வானவர் ஊரினும் வீறாகி வீறு --- தேவலோகத்தினைக் காட்டிலும் பெருமையுற்று விளங்குகின்ற

     அளகாபுரி வாழ்வினும் மேலாகவே --- குபேரப் பட்டணமாகிய அளகாபுரிக்கு மேலாக

      திருவாழ் சிறுவாபுரி வாழ்வே --- திருமகள் வாசம் செய்யும் சிறுவாபுரி என்னும் திருத்தலத்தின் வாழ்வானவரே!

      சுர அதிபர் பெருமாளே --- தேவர்கள் தலைவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

      சீதள வாரிஜ பாதா நமோ நம --- குளிர்ந்த தாமரை மலர்ப் பாதரே! உமக்கு வணக்கம், வணக்கம்.

      நாரத கீத விநோதா நமோ நம ---  நாவில் ஊறும் இனிய இசையில் மகிழ்பவரே! உமக்கு வணக்கம், வணக்கம்.

      சேவல மாமயில் ப்ரீதா நமோ நம --- பிரியத்துடன் சேவலைக் கொடியாகவும்,  சிறந்த மயிலை வாகனமாகவும் உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      மறைதேடும் சேகரமான ப்ரதாபா நமோ நம --- வேதங்கள் தேடுகின்ற சிறந்த பெருமையை உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      ஆகம சார சொரூபா நமோ நம --- ஆகமங்களின் சாரத்தையே உண்மை வடிவாகக் கொண்டவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      தேவர்கள் சேனை மகீபா நமோ நம --- தேவர்களின் சேனைத் தலைவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      கதி தோயப் பாதகம் நீவு குடாரா நமோ நம --- உயிர்கள் நற்கதியினை அடைய,  அவைகள் புரிந்த பாதகங்களைப் பிளக்கும் கோடரி ஆனவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      மா அசுரேச கடோரா நமோ நம --- பெரிய அசுரர்களுக்குக் கொடியவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      பாரினிலே ஜய வீரா நமோ நம --- இவ்வுலகில் விளங்கும் வெற்றி வீரரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோ நம --- மலைமகளாகிய பார்வதிதேவியார் அருளிய செல்வமே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      நாவல ஞான மனஉலா நமோ நம --- சாம்பூநதம் என்னும் பொன்னைப் போன்றவரே!  ஞானிகள் மனத்தில் உலவுகின்றவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      பாலகுமார சுவாமீ நமோ நம --- இளங்குமர நாயகரே! என்னை உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

     அருள் தாராய் --- அருள் புரிந்து அருளுவீராக.


பொழிப்புரை

     சிறந்த யானைமுகத்தர் ஆகிய விநாயகப் பெருமானுக்கு நேர் இளைய சகோதரரே!

      திருநீறு அணிந்த சடைப் பெருமானுக்கு நேயமானவரே!

     ஞான ஆதித்தரே!

      இலக்குமிதேவியின் திருமருகரே!

     ஐசுவரியங்களை அருள்பவரே!

     பெருங் கடலுடன் மாறுபட்டு வேலை விடுத்து அருளிய சூரரே!

     சிறந்த வேதங்களின் பொருளாக உள்ள ஞானமே வடிவானவரே!

     கருணை புரிபவரே!

      கடப்பமலர் மாலையிருந்து சொட்டும் தேன் பொருந்திய திருமார்பரே!

     நிறைமதியை ஒத்த ஆறு திருமுகங்களை உடையவரே!

     முருகக் கடவுளே!

     தவமுனிவர்கள், தேவர்களோடு  திருமாலும், தாமரை மலரின் மீதுள்ள பிரமதேவனும் புகழுகின்ற, பெரிய உலகங்கள் ஏழிலும் மேலான தலைவரே!

     கூரிய வேலாயுதரே!

      தேவலோகத்தினைக் காட்டிலும் பெருமையுற்று விளங்குகின்ற குபேரப் பட்டணமாகிய அளகாபுரிக்கு மேலாக திருமகள் வாசம் செய்யும் சிறுவாபுரி என்னும் திருத்தலத்தின் வாழ்வானவரே!

         தேவர்கள் தலைவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

         குளிர்ந்த தாமரை மலர்ப் பாதரே! உமக்கு வணக்கம், வணக்கம்.

         நாவில் ஊறும் இனிய இசையில் மகிழ்பவரே! உமக்கு வணக்கம், வணக்கம்.

         பிரியத்துடன் சேவலைக் கொடியாகவும்,  சிறந்த மயிலை வாகனமாகவும் உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

         வேதங்கள் தேடுகின்ற சிறந்த பெருமையை உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

     ஆகமங்களின் சாரத்தையே உண்மை வடிவாகக் கொண்டவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      தேவர்களின் சேனைத் தலைவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      உயிர்கள் நற்கதியினை அடைய,  அவைகள் புரிந்த பாதகங்களைப் பிளக்கும் கோடரி ஆனவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      பெரிய அசுரர்களுக்குக் கொடியவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      இவ்வுலகில் விளங்கும் வெற்றி வீரரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

     மலைமகளாகிய பார்வதிதேவியார் அருளிய செல்வமே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      சாம்பூநதம் என்னும் பொன்னைப் போன்றவரே!  ஞானிகள் மனத்தில் உலவுகின்றவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

      இளங்குமர நாயகரே! என்னை உடையவரே! உமக்கு வணக்கம். வணக்கம்.

     அருள் புரிந்து அருளுவீராக.


விரிவுரை


சீதள வாரிஜ பாதா நமோ நம ---

சீதளம் - குளிர்ச்சி. 

வாரிசம் - வாரி - நீர், சம் - பிறத்தல். குளிர்ந்த நீர் நிறைந்த தடத்தில் பிறப்பதால் தாமரை வாரிசம் எனப்பட்டது.

பாதம் - திருவடி.

நமோ - வணக்கம், வணங்குகின்றேன்.
நமோநம - வணக்கம். வணக்கம்.

தாமரைக்கு கமலம் என்று ஒரு பெயரும் உண்டு. குளிர்ச்சியும், அழகும், விரிந்து மலரும் தன்மையும், அடுக்கடுக்காக இதழ்களைக் கொண்டதாகவும், பிற சிறப்புக்களும் உள்ளதால், தாமரை சிறப்பிடம் பெறுகின்றது. பூ என்று சொன்னால் அது தாமரையைத் தான் குறிக்கும்.

தெய்வத் திருவுருவங்களுக்கும், தெய்வத் தன்மை பொருந்தியவர்களுக்கும் தாமரையைக் குறிப்பிடுவது உண்டு. முகம் கமலம். கண்கள் கமலம். வாய் கமலம். கைகள் கமலம். வயிறு கமலம். தாள்கள் கமலம்.

கைகளைக் குவித்து ஐந்து விரல்களையும் விரித்துக் காட்டும் இணைக்கைக்கு "கமலகோசிகம்" என்று பெயர். கூத்தின் விகற்பங்களுள் ஒன்று "கமலநிருத்தம்". தாமரை வடிவில் அமைந்த கோட்டிற்கு "கமலரேகை" என்று பெயர். தாமரை வடிவில் அமர்ந்து இருத்தலுக்கு "கமலாசனம்" அல்லது "பதுமாசனம்" என்ற பெயர். "கமலத்தோன்" என்றும் "கமலயோனி" என்றும் பிரமதேவனுக்குப் பெயர். "கமலத்தேவி" என்று திருமகளைக் குறிப்பிடுவர். தொழுவதற்கு அறிகுறியாகத் தாமரை மொட்டைப் போலக் கைகளைக் குவித்தலுக்கு "கமலவருத்தனை" என்று பெயர். படைகளின் அணிவகுப்புகளில் ஒன்றுக்கு "பதுமவியூகம்" என்று பெயர். புத்த தேவரது திருவடிப்பீடத்திற்கு "தாமரைப் பீடிகை" என்ற பெயர். இதயத்திற்குத் தாமரை என்று பெயர். கலைமகளுக்கு இருப்பிடம் வெண்தாமரை. திருமாலுக்குக் கமலக்கண்ணன், தாமரைக் கண்ணன், கமலநாபன், பதுமநாபன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. சிவபெருமானுடைய திருவடிகள் ஆயிரம் தாமரை போன்றவை.

"அரவிந்தம்" என்பது தாமரையின் இன்னொரு பெயர். தாமரை தெய்வத் தன்மையைக் குறிக்கும் ஒரு மலர் ஆகும்.

"திணி ஆன மனோ சிலை மீது உன தாள் அணி ஆர் அரவிந்தம் அரும்பும் அதோ" என்றார் அடிகளார் கந்தர் அனுபூதிப் பாடல் ஒன்றில். தாமரை நீர் மிகுந்த சேற்றில் தான் மலரும். நீர் என்பது அன்பைக் குறிக்கும். மனம் கல்லாக இருந்தால், அதில் தாமரை மலராது. நெஞ்சம் என்னும் கனமாகிய கல்லானது அன்பினால் உருகிக் குழைந்து நின்றால், அங்குதான் இறைவனுடைய திருவடியாகிய தாமரை மலரும். 

கருணை பொழியும் கண்கள் கொண்ட அழகிய சிலை ஒன்று உள்ளது. அச் சிலையின் முன்பு என்ன நடந்தாலும் அது உணர்ச்சியைக் காட்டது இருக்கும். அந்தச் சிலையைப் போன்று, இறைவனை எண்ணும்போதும், அவன் திருவுருவைக் காணும்போதும், அவன் திருப்பெயரைச் சொல்லும்போதும், கேட்கும்போதும், குழைவு பெறாத உள்ளமும், உருகாத கண்களும் இருக்குமானால், அது திண்மையான கல் ஒன்றினால் செதுக்கப்பட்ட சிலையே ஆகும். அப்படிப்பட்ட வன்மை மிகுந்த நெஞ்சத்தில், இறைவனுடைய திருவடித் தாமரை ஆகிய மலர் மலராது.

எனவே, இத் திருப்புகழ்ப் பாடலில், அடிகளார் முருகப் பெருமான் திருவடியைக் கண்டு உருகிய உள்ளத்துடன், குளிர்ச்சி பொருந்திய தாமரை போலும் திருவடிகளை உடைய பெருமானே, உம்மை வணங்குகின்றேன் என்று வணக்கத்தைச் செலுத்துகின்றார்.

பின்வரும் மேற்கோள் பாடல்களைக் காண்க.

ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்,
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்,
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடியானும்,
ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே .    --- அப்பர்.

குமுதமே திருவாய், குவளையே களமும்,
    குழையதே இருசெவி, ஒருபால்
விமலமே கலையும் உடையரே, சடைமேல்
    மிளிருமே பொறிவரி நாகம்,
கமலமே வதனம், கமலமே நயனம்,
    கனகமே திருவடி நிலை, நீர்
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை
    அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  --- திருமாளிகைத் தேவர்.

"திருவளர் தாமரை"                                      --- திருக்கோவையார்.

சித்தத்து எழுந்த செழுங்கமலத்து அன்ன சேவடிகள்
வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்,
முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கியதூ
மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.    --- அப்பர்.

போர்மிகுத்த வயல் தோணிபுரத்து உறையும் புரிசடை எம்
கார்மிகுத்த கறைக்கண்டத்து இறையவனை வண்கமலத்
தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்தன் உரைசெய்த
சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகம் சேர்வாரே.     --- திருஞானசம்பந்தர்.

"சீதக் களபச் செந்தாரமைப் பூம்பாத"  --- ஔவையார்.


நாரத கீத விநோதா நமோ நம ---

நா + ரதம் = நாரதம்.

ரதம் என்னும் சொல் ரசம் அல்லது இனிமை என்பதையும் குறிக்கும். நாவில் இருந்து பிறக்கின்ற இனிமையாம் இசை நாரத கீதம் எனப்பட்டது.

விநோதம் - அழகு.  இனிமை.

முருகப் பெருமான் இசைப்பிரியர் என்பதை, "திருப்புகழை உரைப்பவர்கள், படிப்பவர்கள், மிடிப்பகைமை செயித்து அருளும் இசைப் பிரிய" என்று பழநித் திருப்புகழில் காட்டினார் அருணகிரிநாதப் பெருமான்.

சிவபெருமான் இசைப்பிரியர். சுந்தரர் பாடலில் மகிழ்ந்து, சேரமான் பெருமாள் நாயனாருக்குச் சிலம்பு ஒலி காட்டத் தாழ்த்தினார் என்பதைப் பெரியபுராண வாயிலாக அறியலாம். "கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடியாக, பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி" எனவும், "பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடியாக, மண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன்" எனவும் திருஞானசம்பந்தப் பெருமான் போற்றிப் பாடி உள்ளதைக் கொண்டும் இறைவன் பாட்டில் மகிழ்பவர் என்பது அறியப்படும். 


மறைதேடும் சேகரமான ப்ரதாபா நமோ நம ---

மறை - வேதங்கள்.

சேகரம் - சிகரம் - உயர்ந்த.  ப்ரதாபம் - பெருமை.

ஆகம சார சொரூபா நமோ நம ---

ஆகமங்களின் சாரத்தையே உண்மை வடிவாகக் கொண்டவன் இறைவன்.

 
தேவர்கள் சேனை மகீபா நமோ நம ---

கமிபன் - அரசன், தலைவன்.

கதி தோயப் பாதகம் நீவு குடாரா நமோ நம ---

நீவுதல் - அழித்தல்.

குடாரம் - கோடரி.

இந்த அடி, திருஞானசம்பந்தப் பெருமானைக் குறித்ததாகவும் கொள்ள இடமுண்டு.

வேதநெறி தழைத்து ஓங்க, மிகு சைவத் துறை விளங்க, பரம்பரை பொலிய, அருக்கன் முதல் கோள் அனைத்தும் அழகிய உச்சங்களிலே பெருக்க வலியுடன் நிற்க, பேணிய நல் ஓரை எழ, திருக்கிளரும் ஆதிரைநாள் திசைவிளங்க, பரசமயத் தருக்கு ஒழிய, சைவமுதல் வைதிகமும் தழைத்து ஓங்க, தொண்டர் மனம் களி சிறப்ப, தூய திருநீற்று நெறி எண்திசையும் தனி நடப்ப, ஏழ்உலகும் களி தூங்க, அண்டர் குலம் அதிசயிப்ப,
அந்தணர் ஆகுதி பெருக, வண்தமிழ் செய் தவம் நிரம்ப, மாதவத்தோர் செயல் வாய்ப்ப. திசை அனைத்தின் பெருமை எல்லாம் தென்திசையே வென்று ஏற, மிசைஉலகும் பிறவுலகும் மேதினியே தனிவெல்ல, அசைவு இல் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல, இசை முழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருக, தாள் உடைய படைப்பு என்னும் தொழில் தன்மை தலைமை பெற, நாள் உடைய நிகழ்காலம் எதிர்காலம் நவை நீங்க, வாள் உடைய மணி வீதி வளர் காழிப்பதி வாழ, ஆள் உடைய திருத்தோணி அமர்ந்தபிரான் அருள் பெருக, அவம் பெருக்கும் புல் அறிவின் அமண் முதலாம் பர சமயப் பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட, நல் ஊழிதொறும் தவம் பெருக்கும் சண்பையிலே தா இல் சராசரங்கள் எல்லாம் சிவம் பெருக்கும் பிள்ளையார் ஆகத் திருஅவதாரம் செய்தார்.

அப்பொழுது, பொற்பு உறு திருக்கழுமலத்தோர், எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி, மெய்ப்படு மயிர்ப்புளகம் மேவி அறியாமே, ஒப்பு இல் களி கூர்வதொர் உவப்பு உற உரைப்பார், சிவன் அருள் எனப் பெருகு சித்தம் மகிழ் தன்மை இவண் இது நமக்கு வர எய்தியதது என் என்பார் சிலர். கவுணியர் குலத்தில் ஒரு காதலன் உதித்தான், அவன் வரு நிமித்தம் இது என்று அதிசயித்தார் பலர்.

அழிந்து புவனம் ஒழிந்திடினும்
     அழியாத் தோணி புரத்தின்மறை
யவர்கள் குலத்தின் உதித்து, அரனோடு
     அம்மை தோன்றி அளித்த வள்ளச்

செழுந்தண் முலைப்பால் குடித்து, முத்தின்
     சிவிகை ஏறி மதுரையில் போய்,
செழியன் பிணியும், சமண் பகையும்,
     தேவி துயரும் தீர்த்து அருளி,

வழிந்து நறுந்தேன் உகுவனபோல்
     மதுரம் கனிந்து கடைதுடிக்க
வடித்துத் தெளிந்த செந்தமிழ்த் தே-
     வாரப் பாடல் சிவன் கேட்க

மொழிந்து சிவந்த கனிவாய்ச்சண்
     முகனே! முத்தம் தருகவே.
முத்துக் குமரா! திருமலையின்
     முருகா! முத்தம் தருகவே.              --- திருமலை முருகன் பிள்ளைத்தமிழ்.

மா அசுரேச கடோரா நமோ நம ---

கடோரன் - கொடியவன்.

பெரிய அசுரர்களுக்குக் கொடியவராக விளங்கியவர் முருகப் பெருமான்.


நாவல ஞான மனஉலா நமோ நம ---

நாவலம் - சாம்பூந்தம் என்னும் பொன்வகைகளில் ஒன்று.

மன உலா -- தன்னை உணர்ந்த அடியவர்களின் மனத்தில் உலாவுகின்றவர் முருகப் பெருமான்.

போதக மாமுகம் நேரான சோதர ---

போதகம் - யானை.

ச + உதரன். உதரம் - வயிறு. ஒரு தாயின் ஒழிற்றில் பின் பிறந்தவர்கள் சகோதரர்.

யானை முகம் உடையவ விநாயகர் மூத்த பிள்ளையார்.
அவர் பின் வந்த முருகப் பெருமான் இளைய பிள்ளையார்.

ப்ரபாகர ---

ப்ரபை - ஒளி. கரன் - செய்பவன்.

அலகின் புற இருளைப் போக்கி ஒளியைத் தருபவன் அண்ட ஆதித்தன்.

உயிர்களின் அக இருளாகிய அறியாமையயை நீக்கி, அருள் ஒளியைப் பரப்புகின்றவர் ஞான ஆதித்தன்.

ஆதித்தன் என்பது,  அண்ட ஆதித்தன், பிண்ட ஆதித்தன், மன ஆதித்தன், ஞான ஆதித்தன், சிவ ஆதித்தன் என்று விரியும். விரிவைத் திருமந்திரத்தில் கண்டு கொள்க.

போதக மாமறை ஞானா ---

வேதங்களில் கூறப்பட்டுள்ள சிறந்த அறிவு வடிவாக உள்ளவர் முருகப் பெருமான்.

தயாகர ---

தயா - தயவு, கருணை.

கரன் - புரிபவன்.

வானவர் ஊரினும் வீறாகி வீறு, அளகாபுரி வாழ்வினும் மேலாகவே, திருவாழ் சிறுவாபுரி வாழ்வே ---

தேவலோகத்தினைக் காட்டிலும் பெருமையுற்று விளங்குகின்ற குபேரப் பட்டணமாகிய அளகாபுரிக்கு மேலாக, திருமகள் வாசம் செய்யும் சிறுவாபுரி என்னும் திருத்தலத்தில் உலகவர்களின் பெருவாழ்வாக எழுந்தருளி இருப்பவர் முருகப் பெருமான்.

கருத்துரை

முருகா! திருவருள் புரிவாய்.

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...