திருவக்கரை - 0734. கலகலெனச் சில





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கலகலெனச் சில (திருவக்கரை)

முருகா!
நாயடியேனை தேவரீரது அடியவர் திருக்கூட்டத்தில் சேர்த்து
 திருவடியைத் தந்து அருள்.


தனதன தத்தன தனதன தத்தன
     தனதன தத்தன ...... தனதானா
  
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
     தொழிவ துனைச்சிறி ...... துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
     கடுநர குக்கிடை ...... யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
     வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
     வுபய மலர்ப்பத ...... மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
     நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
     குறமக ளைப்புணர் ...... மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
     மணிதிரு வக்கரை ...... யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
     அவைதரு வித்தருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


கலகல எனச் சில கலைகள் பிதற்றுவது
     ஒழிவது, னைச் சிறிது ...... உரையாதே,

கருவழி தத்திய மடு அதனில் புகு
     கடு நரகுக்கு இடை ...... இடைவீழா,

உலகு தனில் பல பிறவி தரித்து,
     உழல்வது விட்டு, இனி ......அடிநாயேன்

உனது அடிமைத் திரள் அதனினும் உட்பட
     உபய மலர்ப்பதம் ...... அருள்வாயே.

குலகிரி பொட்டு எழ, அலைகடல் வற்றிட,
     நிசிசரனைப் பொரு ...... மயில்வீரா!

குணதர! வித்தக! குமர! புனத்து இடை
     குறமகளைப் புணர் ...... மணிமார்பா!

அலைபுனலில் தவழ் வளை நிலவைத் தரும்
     அணி திரு வக்கரை ...... உறைவோனே!

அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன,
     அவை தருவித்து அருள் ...... பெருமாளே.


பதவுரை

      குலகிரி பொட்டு எழ --- எட்டுக் குல மலைகளும் பொடியாகி விழவும்,

     அலைகடல் வற்றிட --- அலைவீசும் கடலானது நீரின்றி வற்றிப் போகும்படியும்,

      நிசிசரனைப் பொரும் அயில்வீரா --- அசுரனாம் சூரபதுமனோடு போர் புரிந்த வேல் வீரரே!

      குணதர --- அருட்குணங்கள் பொருந்தியவரே!

     வித்தக --- ஞானமூர்த்தியே!

     குமர --- குமாரக் கடவுளே!

      புனத்திடை குறமகளைப் புணர் மணிமார்பா --- தினைப்புனத்தில் வாழ்ந்து இருந்த குறமகளாகிய வள்ளிநாயகியை மணந்த அழகிய மார்பரே!

      அலை புனலில் தவழ் வளை நிலவைத் தரு --- அலைகள் வீசுகின்ற நீரிலே தவழுகின்ற சங்குகள் ஒளிவிடுகின்,

      மணி திருவக்கரை உறைவோனே --- அழகிய திருவக்கரை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

      அடியவர் இச்சையில் எவை எவை உற்றன --- உன் அடியவர்களுடைய என்னென்ன விருப்பங்கள் எழுந்தனவோ

      அவை தருவித்து அருள் பெருமாளே --- அவைகளை எல்லாம் தந்து அருள் புரிகின்ற பெருமையில் மிக்கவரே!

      கலகல எனச் சில கலைகள் பிதற்றுவது ஒழிவது --- ஆரவாரத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவதை ஒழித்து,

      உனைச் சிறிது உரையாதே --- தேவரீருடைய திருப்புகழைச் சிறிதாவது சொல்லித் துதிக்காமல்,

      கருவழி தத்திய மடு அதனில் புகு --- கரு உண்டாகின்ற வழியாகிபள்ளத்தில் வேகமாகப் புகுந்து

      கடு நரகுக்கு இடை இடை வீழா --- கடுமையான நரகத்தில் இடைஇடையே சென்று விழுந்து,

      உலகு தனில் பல பிறவி தரித்து --- இந்த உலகத்தில் பல பிறவிகளை எடுத்து

      அற உழல்வது விட்டு --- முற்றிலுமாக மண்ணுலகிற்கும் நரகத்திற்குமாக உழலுவதை விட்டு,

     இனி --- இனிமேலாவது

      அடி நாயேன் உனது அடிமைத்திரள் அதனினும் உட்பட --- நாயில் கடைப்பட்ட அடியேன் தேவரீரது அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாகச் செய்து

      உபய மலர்ப்பதம் அருள்வாயே --- மலர்ப் பாதங்களை அருள்வாயாக.



பொழிப்புரை


      எட்டுக் குல மலைகளும் பொடியாகி விழவும், அலைவீசும் கடலானது நீரின்றி வற்றிப் போகும்படியும், அசுரனாம் சூரபதுமனோடு போர் புரிந்த வேல் வீரரே!

      அருட்குணங்கள் பொருந்தியவரே!

     ஞானமூர்த்தியே!

     குமாரக் கடவுளே!

     தினைப்புனத்தில் வாழ்ந்து இருந்த குறமகளாகிய வள்ளிநாயகியை மணந்த அழகிய மார்பரே!

     அலைகள் வீசுகின்ற நீரிலே தவழுகின்ற சங்குகள் ஒளிவிடுகின், அழகிய திருவக்கரை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!

     உன் அடியவர்களுடைய என்னென்ன விருப்பங்கள் எழுந்தனவோ, அவைகளை எல்லாம் தந்து அருள் புரிகின்ற பெருமையில் மிக்கவரே!

         ஆரவாரத்துடன் சில நூல்களை ஓதிப் பிதற்றுவதை ஒழித்து, தேவரீருடைய திருப்புகழைச் சிறிதாவது சொல்லித் துதிக்காமல், கரு உண்டாகின்ற வழியாகிபள்ளத்தில் வேகமாகப் புகுந்து கடுமையான நரகத்தில் இடைஇடையே சென்று விழுந்து, இந்த உலகத்தில் பல பிறவிகளை எடுத்து, முற்றிலுமாக மண்ணுலகிற்கும் நரகத்திற்குமாக உழலுவதை விட்டு, இனிமேலாவது நாயில் கடைப்பட்ட அடியேன் தேவரீரது அடியார் திருக்கூட்டத்தில் ஒருவனாகச் செய்து மலர்ப் பாதங்களை அருள்வாயாக.


விரிவுரை

கலகல எனச் சில கலைகள் பிதற்றுவது ஒழிவது ---

பிறவியாகிய பெருங்கடலில் வாழும் உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும்.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி, சிவப் பேற்றை அளிக்கும்.

நூல்களை ஓதுவதன் பயன் வீடுபேற்றை அடைவதே ஆகும். எனவே தான், "அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்றது நன்னூல்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள்,"மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல.

அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. 

ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கு ஏற்ற, வீட்டுலகினை உடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மை நூலை அடையலாம். கண் சென்று பார்த்ததையே விரும்பி உண்மை எனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் என இவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள் உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

கற்றதனால் ஆய பயன் கடவுளைக் கருதுவதே. கற்றதும் கேட்டதும் கொண்டு கற்பனை கடந்த காரணனைக் கசிந்து உருகி நினைந்து உய்தல் வேண்டும். அவ்வாறு இறைவனை நினைந்து நெஞ்சம் நெகிழாது சிறிது படித்த மாத்திரத்தே தலை கிறுகிறுத்து, தற்செருக்கு உற்று தன்னைப் போல் படித்தவரிடம் தர்க்கித்து மண்டையை உடைத்து வறிதே கெடும் வம்பரை இடித்துரைக்கின்றனர்.

கற்றதும் கேட்டதும் தானே ஏதுக்காக?
கடபடம் என்று உருட்டுதற்கோ? கல்லால் எம்மான்
குற்றம்அறக் கைகாட்டும் கருத்தைக் கண்டு
குணம் குறி அற்று இன்பநிலைகூட அன்றோ.  --- தாயுமானார்.

அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது,
உலகநூல் ஓதுவது எல்லாம், - கலகல
கூஉந் துணையல்லால், கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்.                --- நாலடியார்.

ஆய்ந்து அறிந்து நல்ல அறிவு நூல்களைக் கற்காது, இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான நூல்களைப் படிப்பது எல்லாம், இவ்வுலகில் கலகல எனக் கூவித் திரியும் ஆரவார வாழ்க்கைக்கு உதவலாமே அல்லாது, அந்த நூல்கள் பிறவித் துயரில் தடுமாறும் துன்பத்தில் இருந்து விடுபடத் துணையாக மாட்டா.

உனைச் சிறிது உரையாதே ---

இறைவனுடைய திருப்புகழைச் சிறிதாவது சொல்லி நாளும்  துதிக்கவேண்டும்.

வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும்
தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை,
சூழ்த்த மாமலர் தூவித் துதியாதே,
வீழ்த்தவா வினையேன் நெடுங்காலமே.   --- அப்பர்.

வாய் என்பது எல்லா உயிர்களுக்கும் உள்ளது. உணவை உண்டு உயிரை வளர்க்க இறைவன் தந்த கருணை அது. பிற உயிர்கள் எவற்றாலும் பேச முடியாது. வாயினால் உணர்வை வெளிப்படுத்த முடியாது. அது மனிதப் பிறவி ஒன்றுக்கே கிடைத்தது. அந்த வாயைக் கொண்டு, உணவை உண்டு உடல் கொழுப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதும், வீண் பேச்சுக்களைப் பேசி வினையைப் பெருக்குவதற்கும் உண்டானது அல்ல. இறைவன் திருப்புகழைப் பாடித் துதிப்பதற்கு அமைந்த கருவி ஆகும் என்பதை உணர வேண்டும்.

கைப்பன, கார்ப்பு, துவர்ப்பு, புளி, மதுரம்,
உப்பு, இரதம் கொள்வன நா அல்ல --- தப்பாமல்
வென்றவன் சேவடியை வேட்டு உவந்து, எப்பொழுதும்
நின்று துதிப்பதாம் நா.                   --- அறநெறிச்சாரம்.

கசப்பு, உறைப்பு, துர்ப்பு, குளிப்பு, இனிப்பு, உவர்ப்பு என்னும் ஆறுவகைச் சுவைகளையும் நுகர்ந்து இன்புறுவது நாக்கு அல்ல. தவறாமல் காமம் வெகுளி மயக்கங்களை வென்ற இறைவனுடைய சிவந்த திருவடிகளை எப்போதும் மிக்க விருப்பத்தோடு நின்று துதிப்பதுவே நாக்கு ஆகும்.

மனம், உயிரை வளப்படுத்தும் தலைவாயில். மனத்தின் வாயிலாகத்தான் உயிர், சிறப்பினை அல்லது இழிவினை அடைகிறது. மனம் ஒயாது தொழிற்படும் இயல்பினது; உறக்கத்திற்கூட அது தொழிற்படும். அதன் தொழில் இயக்க விரைவுக்கு ஏற்றவாறு அதற்கு நன்னெறிகளை நற்பணிகளை வழங்காவிடில், அது சைத்தானாக மாறித் தொல்லை கொடுக்கும்.

மனத்தை நற்சிந்தனையில், நற்செயலில் பழக்கப்படுத்தி விட்டால் அதைவிடச் சிறந்த துணை வேறு இல்லை. மனத்தை நறுமணமிக்க மலர்ச் சோலையாகவும் ஆக்கலாம்.  நரகமாகவும் ஆக்கலாம். இதற்கு ஆற்றலுடைய மனத்தை நெறிப்படுத்தி நினைப்பிக்கவே வழிபாட்டு முறைகள் தோன்றின.

இறைவனை நாள்தோறும் மனதாரத் துதித்து வழிபடவேண்டும். எவ்வளவு நாள் நாம் வாழ்வோம் என்பதோ, எப்போது சாவோம் என்பதோ நமக்குத் தெரியாது. இந்த நாள் நம்முடைய நாள். எனவே, விடிந்தவுடன் இறைவனைத் துதித்து வழிபடவேண்டும்.

காலையில் எழுந்து, உன் நாமமெ மொழிந்து,
     காதல் உமை மைந்த ...... என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞானவெளி கண்கள்
     காண அருள் என்று ...... பெறுவேனோ?

என்று, "மாலைதனில் வந்து" எனத் தொடங்கும் திருப்புகழில் அடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

மனக் கவலையை மாற்ற வேண்டுமானால், தனக்கு உவமை இல்லாத இறைவனின் திருவடியை வணங்கவேண்டும்.

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்,
மனக் கவலை மாற்றல் அரிது.

"காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக் கண்டா" என்று பாடினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

நீ நாளும், நன்னெஞ்சே! நினை கண்டாய், ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும், சாய்க்காட்டுஎம் பெருமாற்கே
பூநாளும் தலை சுமப்ப, புகழ்நாமம் செவிகேட்ப,
நா நாளும் நவின்று ஏத்தப் பெறலாமே நல்வினையே.

என்று பாடி அருளினார் திருஞானசம்பந்தப் பெருமான்.

நல்ல நெஞ்சமே! நாள்தோறும் நினைந்து எம்பெருமான் ஈசனை வணங்குவாயாக. இறக்கின்ற நாளும், உலகினிலே வாழ்கின்ற நாளையும் யாராரும் கணக்கிட்டுக் கூற முடியாது. திருச் சாய்க்காட்டில் அமர்ந்திருக்கும் எம்பெருமானுக்கு நாள்தோறும் பூக்களைச் சுமந்து சென்றும், அப்பெருமானது திரு நாமங்களைக் காதுகள் நன்கு கேட்குமாறும் செய்வாயாக. நாவானது நாள்தோறும் அச்சிவனது திருநாமங்களை சொல்லி ஏத்தி வழிபட்டால், நல் வினையைப் பெறலாம்.

"அரை நிமிட நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி" என்றனர் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.

எனவே, இறைவழிபாட்டில் நாளும் சிறிது நேரமாவது நிற்பது நன்மையைத் தரும் என்று தெளிதல் வேண்டும்.
  
கருவழி தத்திய மடு அதனில் புகு, கடு நரகுக்கு இடை இடை வீழா, உலகு தனில் பல பிறவி தரித்து, அற உழல்வது விட்டு ---

அருள் நூல்ளை ஓதித் தெளிந்து, இறை வழிபாட்டில் மனத்தைப் பழக்கவில்லையானால், தீவினைகளையே பெருக்கி, இறந்து, நரகில் புகுந்து, மீளவும் இந்த மண்ணுலகில் பிறந்து துன்புற வேண்டிவரும்.

உலகு தனில் பல பிறவி தரித்து,  நரகுக்கு இடை இடை விழுந்து, உழலுகின்ற நிலையை விட்டுவிட முயல வேண்டும்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பார் ஆகில்,
    தீவண்ணர் திறம் ஒருகால் பேசார் ஆகில்,
ஒருகாலும் திருக்கோயில் சூழார் ஆகில்,
    உண்பதன்முன் மலர்பறித்து இட்டு உண்ணார் ஆகில்,
அருநோய்கள் கெடவெண்ணீறு அணியார் ஆகில்,
    அளி அற்றார் பிறந்தவாறு ஏதோ என்னில்,
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்தும் செத்தும்
    பிறப்பதற்கே தொழில்ஆகி இறக்கின்றாரே.     --- அப்பர்.
   
இனி, அடி நாயேன் உனது அடிமைத்திரள் அதனினும் உட்பட ---

அடியவர் திருக்கூட்டத்தில் சேர்ந்து நாளும் ஒருவன் இருப்பானாயின், அவன் தானாகவே மெய்யடியவனாக மாறி விடுவான். அடியவர் திருக்கூட்டத்தில் இருத்தல் என்ன பயனை இயல்பாகவே தரும் என்பதை, "சிதம்பர மும்மணிக் கோவை"யில், குமரகுருபர அடிகள் கூறுமாறு காண்க.

"செய்தவ வேடம் மெய்யில் தாங்கி,
கைதவ ஒழுக்கம் உள் வைத்துப் பொதிந்தும்,
வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன
கடவுள் மன்றில் திருநடம் கும்பிட்டு
உய்வது கிடைத்தனன் யானே. உய்தற்கு
ஒருபெருந் தவமும் உஞற்றிலன், உஞற்றாது
எளிதினில் பெற்றது என் எனக் கிளப்பில்,
கூடா ஒழுக்கம் பூண்டும், வேடம்
கொண்டதற்கு ஏற்ப, நின் தொண்டரொடு பயிறலில்
பூண்ட அவ் வேடம் காண்தொறுங் காண்தொறும்
நின் நிலை என் இடத்து உன்னி உன்னி,
பல்நாள் நோக்கினர், ஆகலின், அன்னவர்
பாவனை முற்றி, அப் பாவகப் பயனின் யான்
மேவரப் பெற்றனன் போலும், ஆகலின்
எவ்விடத்து அவர் உனை எண்ணினர், நீயும் மற்று
அவ்விடத்து உளை எனற்கு ஐயம் வேறு இன்றே, அதனால்
இருபெரும் சுடரும் ஒருபெரும் புருடனும்
ஐவகைப் பூதமோடு எண்வகை உறுப்பின்
மாபெரும் காயம் தாங்கி, ஓய்வு இன்று
அருள் முந்து உறுத்த, ஐந்தொழில் நடிக்கும்
பரமானந்தக் கூத்த! கருணையொடு
நிலைஇல் பொருளும், நிலைஇயல் பொருளும்
உலையா மரபின் உளம் கொளப் படுத்தி,
புல்லறிவு அகற்றி, நல்லறிவு கொணீஇ,
எம்மனோரையும் இடித்து வரை நிறுத்திச்
செம்மை செய்து அருளத் திருவுருக் கொண்ட
நல் தவத் தொண்டர் கூட்டம்
பெற்றவர்க்கு உண்டோ பெறத் தகாதனவே".       

அடியேன் புறத்தே தொண்டர் வேடம் தாங்கி, அகத்தே தீய ஒழுக்கம் உடையவனாக இருந்தும், நின் தொண்டர்களோடு பழகி வந்த்தால், அவர்கள் என் புற வேடத்தை மெய் என நம்பி, என்னைத் தக்கவனாகப் பாவித்தனர். என்பால் தேவரீர் எழுந்தருளி இருப்பதாக அவர் பாவித்த பாவனை உண்மையிலேயே நான் உய்யும் நெறியைப் பெறச் செய்தது என்கின்றார் இந்த அகவல் பாடலில்.

வெள்ள வேணிப் பெருந்தகைக்கு யாம் செய் அடிமை மெய்யாகக், கள்ள வேடம் புனைந்து இருந்த கள்வர் எல்லாம் களங்கம் அறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்து உள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தள் தலையால் வணங்குவாம்என்று பிரபுலிங்கலீலை என்னும் நூலில் வரும் அருமைச் செய்யுள் இதனையே வலியுறுத்தியது.

இதன் உண்மையாவது, சிவபெருமானை மெய்யடியார்கள் எவ்விடத்தில் பாவனை செய்கின்றார்களோ, அவ்விடத்திலே அவன் வீற்றிருந்து அருள்வான். அதனால், பொய்த் தொண்டர்களும் மெய்த்தொண்டர் இணக்கம் பெற்றால், பெற முடியாத பேறு என்பது ஒன்று இல்லை. இது திண்ணம்.

குருட்டு மாட்டை, மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.

முத்தி வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத் தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய எளியவழி. திருவாசகத்தில் மணிவாசகப் பெருமான் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று வியந்து பாடுகின்றார்.

திரைவார் கடல்சூழ், புவி தனிலே, உலகோரொடு
     திரிவேன், உனை ஓதுதல் ...... திகழாமே,
தின நாளும் உனே துதி மனது ஆர பினே சிவ
     சுதனே! திரி தேவர்கள் ...... தலைவா! மால்

வரை மாது உமையாள் தரு மணியே! குகனே! என
     அறையா, அடியேனும் ...... உன் அடியாராய்
வழிபாடு உறுவாரொடு, அருள் ஆதரம் ஆயிடும்
     மக நாள் உளதோ? சொல ...... அருள்வாயே. --- திருப்புகழ்.
  
அலை புனலில் தவழ் வளை நிலவைத் தரு மணி திருவக்கரை உறைவோனே ---

அலைகள் வீசுகின்ற நீர்நிலைகள் சூழ்ந்து உள்ளன. அதில் சங்குகள் பிறந்து ஒளி வீசுகின்றன. இத்தகு அழகு பொருந்திய திருத்தலம் திருவக்கரை என்பது. அத் திருத்தலத்தில் எழுந்தருளிய எள்ள முருகப் பெருமானை அடிகளார் இத் திருப்புகழில் வைத்துப் பாடித் துதித்து அருளினார்.

         திருவக்கரை என்னும் திருத்தலம் தொண்டை நாட்டில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து மயிலம், வானூர் வழியாகப் பாண்டிச்சேரி செல்லும் பாதையில் சென்று 'பெரும்பாக்கம்' என்ற ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைப் பாதையில் 7 கி.மீ. சென்றால் திருவக்கரையை அடையலாம். திண்டிவனத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. விழுப்புரத்திலிருந்து திருவக்கரை செல்ல நகரப்பேருந்து வசதி உள்ளது. வராகநநி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்கோயில்.

இறைவர் திருநாமம், சந்திரசேகரேசுவரர், சந்திரமௌலீசுவரர்.
இறைவியார் திருநாமம் அமிர்தேசுவரி, வடிவாம்பிகை.

திருஞானசம்பந்தப் பெருமான் திருப்பதிகம் அருளிய திருத்தலம்.

வக்கிராசுரனை திருமால் போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசுரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்வகுருதியைக் காளி தன் வாயால் உறிஞ்சினாள். வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷ்டபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.

அஷ்டபுஜ காளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்ள காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேரே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரிய கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.

சிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட இலிங்கம் மும்முகலிங்கம் எனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.

வக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் இரண்டாவது திருச்சுற்றில் மேற்கு நோக்கியவாறு வரதராஜப்பெருமாள் என்ற பெயருடன் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.

வக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தலத்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர் கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.

அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்து அருள் பெருமாளே ---

இறைவன் பெருங்கருணையாளன். "கருணையே உருவம் ஆகி" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். உண்மை அடியவர்கள் வேண்டியதை வேண்டியவாறு அளித்து அருள் புரிபவன் இறைவன். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்றார் அப்பர் பெருமான். "வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ" என்றார் மணவாசகப் பெருமான். "வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே" என்றார் அடிகளார் பிறிதொரு திருகப்புகழில்.

கருத்துரை

முருகா! நாயடியேனை தேவரீரது அடியவர் திருக்கூட்டத்தில் சேர்த்து, திருவடியைத் தந்து அருள்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 14

"வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்குஉரைப்பார், தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடிஒன்று மாதுக்கு அளித்து மயங்கிடுவார்...