திரு உசாத்தானம்





திரு உசாத்தானம்
(கோயிலூர் - கோவிலூர்)

        சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          தற்போது மக்கள் "கோயிலூர்" என்றழைக்கின்றனர். கோயிலூர் என்ற பெயரில் பலவூர்களிருப்பதாலும், இவ்வூர் முத்துபேட்டைக்கு அருகில் இருப்பதாலும் வழக்கில் இத்தலம் "முத்துப்பேட்டை - கோயிலூர்" என்று வழங்கப்படுகின்றனர்.

         தஞ்சை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை முதலிய ஊர்களிலிருந்து முத்துப்பேட்டைக்குப் பேருந்துகள் உள்ளன. முத்துப்பேட்டையிலிருந்து மன்னார்குடி சாலையில் 2 கி. மீ. சென்றால் கோயிலை அடையலாம்.


இறைவர்              : மந்திரபுரீசுவரர்.

இறைவியார்           : பிருகந்நாயகி, பெரியநாயகி.

தல மரம்               : மா.

தீர்த்தம்               : அநுமன் தீர்த்தம், மாக்கண்டேய தீர்த்தம், கௌதம தீர்த்தம்.

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நீரிடைத் துயின்றவன்

தல வரலாறு

          இராமர் சேது அணை கட்டுவதற்கு இத்தலத்து இறைவனிடம் மந்திர உபதேசம் பெற்றதாகக் கதை வழங்கப்பெறுகிறது. இதன் காரணமாகவே இறைவன் திருப்பெயர் மந்திரபுரீசுவரர் என்று வழங்குகிறது. மற்றும் கடலில் அணை கட்டுவதற்குரிய வழிமுறைகளை இராமபிரான், இப்பெருமானிடம் உசாவிய (கேட்டறிந்த) காரணத்தால் இத்தலம் 'உச்சாத்தானம்' என்று பெயர் பெற்றது. (இவ்வரலாற்றுக்கு ஆதரவாக இவ்வூருக்கு அருகில் இராமன் கோயில், சாம்பவான் ஓடை, அநுமன் காடு, சுக்ரீவன்பேட்டை, தம்பிக்குநல்லான் பட்டினம் முதலிய ஊர்கள் உள்ளன.) இறைவன் மாமரத்தினடியில் திகழ்வதால் இத்தலம் சூதவனம் என்றும் சொல்லப்படுகிறது.

          தில்லைக் கூத்தபிரான், இங்கு விரும்பி எழுந்தருளியிருக்கும் காரணத்தால் இது கோயிலூர் ஆயிற்று என்றும் கூறுவர்.

சிறப்புக்கள்

          விசுவாமித்திரருக்கு நடனக் காட்சி காட்டியருளிய தலம்.

          கருவறைச் சுவரில் ஜ்வரஹரேஸ்வரர் மூன்று முகங்களுடனும் மூன்று திருவடிகளுடனும் காட்சித் தருகிறார்- அழகான உருவம் தரிசிக்கத் தக்கது.

          கோயிலில் வருணன், இராமர், மார்க்கண்டேயர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.

          முன்மண்டபத்தில் தல வரலாறு வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

          மூலவர் - சுயம்பு மூர்த்தி; வெண்ணிறமாக காட்சித் தருகிறார்.

          விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், சுந்தரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.

          கல்வெட்டுக்களில் சுவாமியும் அம்பாளும் 'திருவுசாத்தானமுடைய நாயனார், பெரிய நாச்சியார் ' என்னும் திருநாமங்களால் குறிக்கப்படுகின்றனர்.

          இறையிலியாக நிலங்களும், தோப்புக்களும் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட செய்திகள் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகின்றன.

     தலபுராணம் - சூதவனப் புராணம் உள்ளது.

     இத் திருக்கோயில் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "கற்றவர்கள் எங்கும் உசாத்தானம், இருங்கழகம், மன்றம் முதல் தங்கும் உசாத்தானத் தனிமுதலே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 623
கண்ஆர்ந்த திருநுதலார் மகிழ்ந்தகடிக் குளம்இறைஞ்சி,
எண்ஆர்ந்த திருஇடும்பா வனம் ஏத்தி, எழுந்து அருளி,
மண்ஆர்ந்த பதிபிறவும் மகிழ்தரும்அன் பால்வணங்கி,
பண்ஆர்ந்த தமிழ்பாடிப் பரவியே செல்கின்றார்.

         பொழிப்புரை : நெற்றிக்கண்ணையுடைய இறைவர் மகிழ்ந்து வீற்றிருக்கும் `திருக்கடிக்குளம்' என்ற பதியை வணங்கி, மக்களின் மனம்நிறைந்த `திருஇடும்பாவனம்' என்ற பதியையும் ஏத்திச் சென்று, இவ்வுலகத்தில் நிறைந்துள்ள பிறபதிகளையும் மகிழ்வுடன் கூடிய அன்பினால் வணங்கி, அங்கங்கே பண்பொருந்திய தமிழ்ப் பதிகங்களைப் பாடிய வண்ணமே செல்பவராய்,

         குறிப்புரை : இப்பதிகளில் அருளிய பதிகங்கள்:

1.    திருக்கடிக்குளம் (தி.2 ப.104) - பொடிகொள்மேனி - நட்டராகம்.
2.    திருஇடும்பாவனம் (தி.1 ப.17) - மனமார்தரு - நட்டபாடை.

        `பதிபிறவும்' என்பன தில்லைவளாகம் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.


பெ. பு. பாடல் எண் : 624
திருவுசாத் தானத்துத் தேவர்பிரான் கழல்பணிந்து,
மருவியசெந் தமிழ்ப்பதிகம் மால்போற்றும் படிபாடி,
இருவினையும் பற்றுஅறுப்பார், எண்இறந்த தொண்டருடன்
பெருகுவிருப் பினர்ஆகி, பிறபதியும் பணிந்து அணைவார்.

         பொழிப்புரை : `திருவுசாத்தானம்' என்ற பதியில் இறைவரின் திருவடிகளைப் பணிந்து, பொருந்திய செந்தமிழ்ப் பதிகத்தை, அப் பதியில் திருமால் வழிபட்டவாற்றை வைத்துப் பாடி, தம்மை வந்தடையும் அடியார்களுக்கு நல்வினை தீவினை என்ற இரண்டின் பற்றுதலை அறுக்கும் ஞானசம்பந்தர், அளவில்லாத திருத்தொண்டர்களுடனே, பெருகும் விருப்பத்தை உடையவராய்ப் பிறபதிகளையும் வணங்கிச் செல்வாராய்,

         குறிப்புரை : திருவுசாத்தானத்தில் அருளிய பதிகம், `நீரிடைத் துயின்றவன்' (தி.3 ப.33) எனத் தொடங்கும் கொல்லிப் பண்ணி லமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில்,

நீரிடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீவன் அனுமான் தொழக்
காருடை நஞ்சுண்டு காத்தருள் செய்த எம்
சீருடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.  (தி.3 ப.33 பா.1)

எனவரும் முதல்பாடலைக் கொண்டே, `மால் போற்றும்படி பாடி\' என்றருளினார் ஆசிரியர். பிறபதிகள் என்பன திருக்களந்தை, திருக்களர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் கிடைத்தில.

திருஞானசம்பந்தர் திருப்பதிகம்

3. 033    திருவுசாத்தானம்            பண் - கொல்லி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நீர்இடைத் துயின்றவன் தம்பிநீள் சாம்புவான்,
போர்உடைச் சுக்கிரீ வன்,அநு மான்தொழக்
கார்உடை நஞ்சுஉண்டு காத்துஅருள் செய்தஎம்
சீர்உடைச் சேடர்வாழ் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :பாற்கடலில் பள்ளிகொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும், இலக்குமணனும், சாம்பவான், சுக்கிரீவன், அனுமன் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிற நஞ்சை உண்டு காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல்கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.

பாடல் எண் : 2
கொல்லைஏறு உடையவன், கோவண ஆடையன்,
பல்லைஆர் படுதலைப் பலிகொளும் பரமனார்,
முல்லைஆர் புறவுஅணி முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடம் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :முல்லைநிலம் சார்ந்த எருதை (திருமாலை) இறைவன் வாகனமாக உடையவன். கோவண ஆடை உடையவன். முன்பல்லிருந்த உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்கும் பரமன். முல்லைக்கொடிகளையுடைய முல்லை நிலத்தில், தேன் துளிக்கும் சோலைகளையுடைய அழகிய பழம்பதியான தில்லையில் விளங்குபவன். அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.


பாடல் எண் : 3
தாம்அலார் போலவே தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா ஆக்கினான் ஒருநொடி,
காமனார் உடல்கெடக் காய்ந்தஎம் கண்ணுதல்
சேமமா உறைவிடம் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :தான் அயலார் போலத் தன் மாமனான தக்கன் செய்த வேள்வியை ஊமன் கண்ட கனவு போலப் பயனற்றதாக்கினான். ஒரு நொடியில் மன்மதனின் உடல் எரிந்து சாம்பலாகு மாறு செய்த நெற்றிக் கண்ணுடைய கடவுளாவான். அப்பெருமான் அடியவர்கட்கு நன்மை தரும் பொருட்டு வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
   
பாடல் எண் : 4
மறிதரு கரத்தினான், மால்விடை ஏறியான்,
குறிதரு கோலநல் குணத்தினார் அடிதொழ,
நெறிதரு வேதியர் நித்தலும் நியமஞ்செய்
செறிதரு பொழில்அணி திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :இள மான்கன்றைத் திருக்கரத்தில் ஏந்தி, பெருமையுடைய இடப வாகனத்திலேறி, சிவவேடப் பொலிவுடைய நற்பண்புடைய அடியவர்கள் தன் திருவடியைத் தொழுது போற்றவும், சிவாகமநெறியில் ஒழுகும் அந்தணர்கள் நாள்தோறும் நியமத்துடன் பூசை செய்யவும் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அடர்ந்த சோலைகள் சூழ்ந்த அழகிய திருவுசாத்தானம் ஆகும்.


பாடல் எண் : 5, 6
* * * * * * *
பாடல் எண் : 7
பண்டுஇரைத்து அயனுமா லும்,பல பத்தர்கள்
தொண்டுஇரைத் தும்மலர் தூவித்தோத் திரஞ்சொல,
கொண்டுஇரைக் கொடியொடும் குருகினில் நல்இனம்
தெண்திரைக் கழனிசூழ் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :பண்டைக்காலம் முதல் மகிழ்ச்சியால் ஆரவாரித்துப் பிரமனும், திருமாலும், மற்றுமுள்ள பல பக்தர்களும் அடிமைத் திறத்தினால் மலர்களைத் தூவித் தோத்திரம் சொல்லி வழி பட, இறைவன் வீற்றிருந்தருளுவது, மீன் முதலிய இரைகளைக் கவரும் காக்கையோடு, நல்ல பறவை இனங்கள் தங்குகின்ற, நீர்வளமிக்க வயல்கள் சூழ்ந்த திருவுசாத்தானம் ஆகும்.


பாடல் எண் : 8
மடவரல் பங்கினன், மலைதனை மதியாது
சடசட எடுத்தவன் தலைபத்து நெரிதர,
அடர்தர ஊன்றி,அங் கேஅவற்கு அருள்செய்தான்
திடம்என ஊறைவிடம் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்கும் இறைவன், கயிலைமலையை மதியாது பெயர்த் தெடுத்த இராவணனின் பத்துத் தலைகளும் நெரியும்படி தன் காற் பெருவிரலை ஊன்றி அம்மலையின்கீழ் அவனை அடர்த்து, பின்னர் இராவணன் தன் தவறுணர்ந்து வழிபட அவனுக்கு அருள் செய்தவன். அப்பெருமான் உறுதியாக வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.


பாடல் எண் : 9
ஆண்அலார், பெண்அலார், அயனொடு மாலுக்கும்
காண்ஒணா வண்ணத்தான், கருதுவார் மனத்துளான்,
பேணுவார் பிணியொடும் பிறப்புஅறுப் பான்இடம்
சேண்உலா மாளிகைத் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :இறைவர் ஆணுமல்லர். பெண்ணுமல்லர். பிரமனும், திருமாலும் காணொணாத வண்ணம் விளங்குபவர். தம்மை நினைந்து வழிபடும் அன்பர்களின் மனத்தில் நிறைந்துள்ளவர். தம்மை வழிபடும் அடியவர்களின் உடல்நோயை நீக்குவதோடு பிறவி நோயையும் தீர்ப்பவர்.அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் ஆகாயமளாவிய மாளிகைகள் உடைய திருவுசாத்தானம் ஆகும்.

 
பாடல் எண் : 10
கானம்ஆர் வாழ்க்கையான், கார்அமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீர் உரைமின்உய்ய எனில்,
வானம்ஆர் மதில்அணி மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந்தோய் திருவுசாத் தானமே.

         பொழிப்புரை :சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை உணராது கூறும் சொற்கள் பயனற்றவை. நீங்கள் உய்ய வேண்டும் என்றால் சுடுகாட்டில் திருநடனம் செய்யும் இறைவன் வீற்றிருந் தருளுகின்ற, வானளாவிய உயர்ந்த மதில்களும், மாளிகைகளும், செழித்த சோலைகளும் சூழ்ந்த இனிய நிலவு தோயும் திருவுசாத்தானம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.


பாடல் எண் : 11
வரைதிரிந்து இழியுநீர் வளவயல் புகலிமன்
திரைதிரிந்து எறிகடல் திருவுசாத் தானரை,
உரைதெரிந்து உணரும்சம் பந்தன்ஒண் தமிழ்வல்லார்
நரைதிரை இன்றியே நல்நெறி சேர்வரே.

         பொழிப்புரை :மலையிலிருந்து தன் தன்மை மாறுபட்டுப் பாயும் காவிரியின் நீர் வளமும், வயல் வளமும் மிகுந்த புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன், அலைவீசுகின்ற கடலையுடைய திருவுசாத்தானத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை உணர்ந்து போற்றிய இந்த ஒண் தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்கள் நரை, திரை என வந்து தாக்கும் மூப்பின் தளர்ச்சியின்றி, இளமை மிடுக்குடன் வாழ்ந்து சிவஞான நெறியில் நிற்பர்.
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...