அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மனைமாண் சுதரான
(மதுராந்தகம்)
முருகா!
திருவடி இன்பத்தை அருள்வாயாக
தனதாந்தன
தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன
தனதாந்தன தான தனந்தன ...... தந்ததான
மனைமாண்சுத
ரான சுணங்கரு
மனம்வேந்திணை யான தனங்களு
மடிவேன்றனை யீண அணங்குறு ...... வம்பராதி
மயமாம்பல
வான கணங்குல
மெனப்ராந்தியும் யானெ னதென்றுறு
வணவாம்பிர மாத குணங்குறி ......
யின்பசார
இனவாம்பரி
தான்ய தனம்பதி
விடஏன்றெனை மோன தடம்பர
மிகுதாம்பதி காண கணங்கன ......
வும்பரேசா
இடவார்ந்தன
சானு நயம்பெறு
கடகாங்கர சோண வியம்பர
இடமாங்கன தாள ருளும்படி ......
யென்றுதானோ
தனதாந்தன
தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம்பர மான நடம்பயில் ......
எம்பிரானார்
தமதாஞ்சுத
தாப ரசங்கம
மெனவோம்புறு தாவ னவம்படர்
தகுதாம்பிர சேவி தரஞ்சித ......
வும்பர்வாழ்வே
முனவாம்பத
மூடி கவந்தன
முயல்வான்பிடி மாடி மையைங்கரர்
முகதாம்பின மேவு றுசம்ப்ரம ......
சங்கணாறு
முககாம்பிர மோட மர்சம்பன
மதுராந்தக மாந கரந்திகழ்
முருகாந்திர மோட மரும்பர்கள் ......
தம்பிரானே.
பதம் பிரித்தல்
மனை
மாண் சுதர் ஆன சுணங்கரும்,
மனம் வேம் திணை ஆன தனங்களும்,
மடிவேன் தனை ஈண அணங்கு, உறு ......
வம்பர் ஆதி
மயமாம்
பல ஆன கணம், குலம்
என ப்ராந்தியும், யான் எனது என்று உறு
வணவாம் பிரமாத குணம், குறி, ...... இன்பசார
இனவாம்
பரி தான்ய தனம் பதி
விட ஏன்று, எனை மோன தடம்பர
மிகுதாம் பதி காண கணம் கன ...... உம்பர்
ஏசா
இட
ஆர்ந்தன சானு நயம்பெறு
கடகாம் கர சோண வியம் பர
இடமாம் கன தாள் அருளும்படி ...... என்றுதானோ?
தனதாந்தன
தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட
தனவாம் பரமான நடம்பயில் ......
எம்பிரானார்,
தமதாம்
சுத! தாபர சங்கமம்
என ஒம்புறு தாவன அம்பு அடர்
தகு தாம்பிர சேவித, ரஞ்சித ...... உம்பர்வாழ்வே!
முன்அவாம்
பத மூடிக வந்தன,
முயல்வான் பிடி மாடு இமை ஐங்கரர்
முகதா ஆம் பின மேவுறு சம்ப்ரம! ......
சம்கண ஆறு
முக
காம்பிரமோடு அமர் சம்பன!
மதுராந்தக மா நகரம் திகழ்
முருகா! அம் திரமோடு அமர் உம்பர்கள்
....தம்பிரானே.
பதவுரை
தனதாந்தன தான தனந்தன
தெனதோங்கிட தோன துனங்கிட தன ஆம் பரமான நடம் பயில் எம்பிரானார் தமது ஆம் சுத --- தனதாந்தன தான
தனந்தன தெனதோங்கிட தோன துனங்கிட தன என்ற தாள ஒத்துடன் மேலான திருநடனத்தைப் புரிகின்ற
எம்பிரானாகிய சிவபெருமானுடைய திருக்குழந்தையே!
தாபர சங்கமம் என
ஓம்புறு தாவன
--- அசையாப் பொருள், அசையும் பொருள் என்று
காக்கப்பட வேண்டிய அனைத்துப் பொருள்களையும் படைத்தவரே!
வம்பு அடர் தகு தாம்பிர சேவித --- புதுமை
நிறைந்ததும், தக்கதும் ஆன, தாம்பிரசூடம் எனப்படும் சேவலால் வணங்கப்
படுபவரே!
ரஞ்சித --- இன்பத்தைத் தருகின்றவரே!
உம்பர் வாழ்வே --- தேவர்கள் போற்றும்
செல்வமே!
முன் அவா(வு)ம் பத
மூடிக வந்தன(ம்) முயல்வான் --- நினைக்கும் முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை
உடையவரும், பெருச்சாளி வணக்கம்
செய்யும்படி அதனை வாகனமாகக் கொண்டவரும்,
பிடி மாடு இமை ஐங்கரர் முகதா ஆம் பி(ன்)ன
--- பெண்யானை போன்ற வள்ளிநாயகியின் பக்கத்தில் இமைப்பொழுதில், காட்டு யானையாக
விளங்கியவருமான, ஐங்கரர் ஆகி விநாயகமூர்த்தியின்
எதிரில் தோன்றிய தம்பியே!
மேவுறு சம்ப்ரம சம்
கண ஆறுமுக காம்பிரமோடு அமர் சம்ப(ன்)ன --- பொருந்திய களிப்பு நிறைந்த, அழகு விளங்குகின்ற
ஆறுதிருமுகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே!
மதுராந்தக மாநகரம்
திகழ் முருகா ---
மதுராந்தகம் என்னும் திருத்தலத்தில் விளங்குகின்ற முருகப் பெருமானே!
அம் திரமோடு அமர் உம்பர்கள் தம்பிரானே ---
நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தனிப்பெரும் தலைவரே!
மனை மாண் சுதர் ஆன
சுணங்கரும்
--- உயிருக்குச் சோர்வைத் தருகின்ற மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகியவர்களும்,
மனம் வேம் திணையான தனங்களும் --- மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருகின்ற செல்வங்களும்,
மடிவேன் தனை ஈண
அணங்கு
--- இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய்,
உறு வம்பர் ஆதி மயமாம் பல பலவான கணம்
குலம் என ப்ராந்தியும் --- உற்றாராக அமைந்த பயனற்றவர்கள் முதலான பலவகைப்பட்ட
கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மனமயக்கமும்,
யான் எனது என்று
உறுவனவாம் பிரமாத குணம் --- நான் எனது என்று அமைந்துள்ள அளவு
கடந்த குணமும்,
குறி --- எனது குறிக்கோளும்,
இன்ப சார இன வா(வு)ம்பரி தான்ய தனம் பதி
விட --- இன்பம் தருவதாகப் பொருந்திய தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவைகளின் மேல் வைத்த
பற்று நீங்கும்படி,
எனை ஏன்று --- அடியேனே ஏற்றுக்
கொண்டு,
மோன தடம் பர மிகுதாம் பதி காண --- மோன
நிலையில் விளங்கும் பரம்பொருளை அடியேன் காணுமாறு,
கணம் கன உம்பர் ஏசா
இட ஆர்ந்தன சானு --- பெருமை பொருந்திய, ஏசுதல் அற்ற தேவர்கள் கூட்டம் பொருந்தி
விளங்குகின்ற முழந்தாள்களையும்,
நயம் பெறு கடகாம் கர --- நன்மை
பொருந்திய கடகங்களை அணிந்துள்ள திருக்கைகளையும்,
வியம் பர இடமாம் கன தாள் அருளும்படி என்று
தானோ --- ஒப்பற்ற மேலான இடமாக விளங்கும் பெருமை பொருந்திய திருவடிகளை அருள் புரிவது எந்த நாளோ?
பொழிப்புரை
தனதாந்தன தான தனந்தன தெனதோங்கிட தோன
துனங்கிட தன என்ற தாள ஒத்துடன் மேலான திருநடனத்தைப் புரிகின்ற எம்பிரானாகிய
சிவபெருமானுடைய திருக்குழந்தையே!
அசையாப் பொருள், அசையும்பொருள் என்று காக்கப்பட
வேண்டிய அனைத்துப் பொருள்களையும் படைத்தவரே!
புதுமை நிறைந்ததும், தக்கதும் ஆன, தாம்பிரசூடம் எனப்படும் சேவலால் வணங்கப்
படுபவரே!
இன்பத்தைத் தருகின்றவரே!
தேவர்கள் போற்றும் செல்வமே!
நினைக்கும் முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை
உடையவரும், பெருச்சாளி வணக்கம்
செய்யும்படி அதனை வாகனமாகக் கொண்டவரும், பெண்யானை போன்ற வள்ளிநாயகியின்
பக்கத்தில் இமைப் பொழுதில், காட்டு யானையாக விளங்கியவருமான, ஐங்கரர் ஆகி விநாயகமூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே!
பொருந்திய களிப்பு நிறைந்த, அழகு விளங்குகின்ற
ஆறுதிருமுகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற பாக்கியவானே!
மதுராந்தகம் என்னும் திருத்தலத்தில்
விளங்குகின்ற முருகப் பெருமானே!
நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தனிப்பெரும்
தலைவரே!
உயிருக்குச் சோர்வைத் தருகின்ற மனைவி, பெருமை பொருந்திய மக்கள் ஆகியவர்களும், மனம் நொந்து வெந்து போவதற்கு இடம் தருகின்ற செல்வங்களும், இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற
தெய்வத்துக்கு ஒப்பான தாய்,
உற்றாராக
அமைந்த பயனற்றவர்கள் முதலான பலவகைப்பட்ட கூட்டத்தார், குலத்தார் என்கின்ற மனமயக்கமும், நான் எனது என்று
அமைந்துள்ள அளவு கடந்த குணமும், எனது குறிக்கோளும், இன்பம் தருவதாகப் பொருந்திய
தாண்டிச் செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவைகளின் மேல் வைத்த
பற்று நீங்கும்படி, அடியேனே ஏற்றுக் கொண்டு, மோன நிலையில்
விளங்கும் பரம்பொருளை அடியேன் காணுமாறு, பெருமை
பொருந்திய, ஏசுதல் அற்ற தேவர்கள் கூட்டம் பொருந்தி விளங்குகின்ற முழந்தாள்களையும்,
நன்மை பொருந்திய கடகங்களை அணிந்துள்ள திருக்கைகளையும் கண்டு, ஒப்பற்ற
மேலான இடமாக விளங்கும் பெருமை பொருந்திய திருவடிகளை அருள் புரிவது எந்த நாளோ?
விரிவுரை
மனை
மாண் சுதர் ஆன சுணங்கரும் ---
மனை
--- மனைவி,
மாண்
சுதர் - மாட்சிமை பொருந்திய புதல்வர்கள். இல்லறத்திற்கு நன்கலமாக அமைந்தவர்கள்.
"நன்கலம் நன்மக்கள் பேறு" என்னும் நாயனார் அருள்வாக்கை உன்னுக.
சுணங்கல்
- சோர்வு அடைதல், தடைப்படுதல்,
மனைவி,
மக்கள் எட்டும் சுற்றத்தார் மீது வைத்த பற்றானது, ஆன்மா முத்தி பெறத் தடையாக
உள்ளவை.
தந்தை, தாய், மனைவி, மக்கள் மற்றும் உள்ள சுற்றம் ஆகிய எல்லாமும்
உயிர்களின் வல்வினை தீவினைக்கு ஏற்ப வருபவையே. அவை என்றும் நிலைத்து இருப்பவையும்
அல்ல. நிலையான இன்பத்தைத் தருபவையும்
அல்ல. அல்லலுக்கு இடமானவையே ஆகும்.
மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுஉள சுற்றம் என்னும்
வினைஉளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத் தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யலாம் நெஞ்சி னீரே. --- அப்பர்.
தாயே தந்தை என்றும் தாரமே கிளை மக்கள் என்றும்
நோயே பட்டொழிந்தேன் நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்-
வேய்ஏய் பூம்பொழில் சூழ் விரைஆர் திருவேங்கடவா!-
நாயேன் வந்து அடைந்தேன் நல்கி ஆள் என்னைக் கொண்டருளே.
---திருமங்கை
ஆழ்வார்.
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில்மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை?
தினையாம் அளவு எள் அளவாகிலும் முன்பு செய்ததவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே.
அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே, விழி அம்பு ஓழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே,விம்மி விம்மி இரு
கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே!
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே!
மாடுஉண்டு; கன்றுஉண்டு; மக்கள்உண்டு என்று மகிழ்வதுஎல்லாம்,
கேடு உண்டு எனும்படி கேட்டு விட்டோம் இனிக் கேள்மனமே!
ஓடு உண்டு; கந்தை
உண்டு, உள்ளே எழுத்து ஐந்தும் ஓத உண்டு,
தோடு உண்ட கண்டன் அடியார் நமக்குத் துணையும் உண்டே! ---
பட்டினத்தார்.
அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வர் ......
உடன்ஆகி,
அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல்
அற்று, நின்னை வல்ல ...... படிபாடி,
முத்தன் என்ன, வல்லை
அத்தன் என்ன, வள்ளி
முத்தன்என்ன உள்ளம் ......
உணராதே,
முட்ட வெண்மை உள்ள பட்டன், எண்மை கொள்ளு
முட்டன் இங்ஙன் நைவது ......
ஒழியாதோ? --- திருப்புகழ்.
உலகபசு பாச தொந்தம் ...... அதுவான
உறவுகிளை தாயர் தந்தை ......
மனைபாலர்
மலசலசு வாச சஞ்ச ...... லம்அதால், என்
மதிநிலைகெ டாமல் உன்தன் ......
அருள்தாராய். ---
திருப்புகழ்.
மனம்
வேம் திணையான தனங்களும் ---
வேம்
- வேகின்ற. துயரத்தைத் தருகின்ற.
திணை
- நிலம், குலம், இடம், வீடு.
தனங்கள்
- செல்வங்கள்.
செல்வமும் அல்லலையே தரும் என்பதால், மணிவாசகப் பெருமான், "செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்" என்றார்.
கொடுத்தலும், துய்த்தலும்
தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால்,
ஏதிலான் துய்க்கப்படும்.
ஈட்டலும் துன்பம்; மற்று ஈட்டிய ஒண் பொருளைக்
காத்தலும் ஆங்கே கடுந் துன்பம்; காத்த
குறைபடின், துன்பம்; கெடின், துன்பம்; துன்பக்கு
உறைபதி, மற்றைப்
பொருள். ---
நாலடியார்.
மடிவேன்
தனை ஈண அணங்கு
---
என்றாவது
ஒரு நாள் இறந்து விடப் போகின்ற என்னைப் பெற்ற தெய்வத்துக்கு ஒப்பான தாய்.
உறு
வம்பர் ஆதி மயமாம் பல பலவான கணம் குலம் என ப்ராந்தியும் ---
வம்பர்
- பயனற்றவர்கள்.
கணம்
- கூட்டம்.
பிராந்தி
- மனமயக்கம்.
யான்
எனது என்று உறுவனவாம் பிரமாத குணம் ---
பிரமாதம்
- அளவில் மிக்கது.
நான்
என்பது தான் அல்லாத உடம்பின் மீது வைத்திருக்கும் பற்று. இது நான் என்னும்
அகங்காரம் அல்லது அகப்பற்று ஆகும்.
எனது
என்பது தன்னோடு இயைபு அல்லாத, உயிருடைய,
உயிரற்ற பொருள்களின் மூது கொள்ளும் பற்று.
இது எனது என்னும் மமகாரம் அல்லது புறப்பற்று ஆகும்.
இந்த
இரண்டு குணங்களும் அளவின்றி எப்போதும் பெருகிக் கொண்டு, உயிரை மீளாது துயரில்
ஆழ்த்துவன. பேரின்பப் பெருநிலையில் உயிரைக் கொண்டு சேர்க்காதன.
எனவேதான்,
யான்
எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த
உலகம் புகும்
என்று
அருளினார் திருவள்ளுவ நாயானார்.
மனைவி, மக்கள், தாய், தமக்குதவிய உலகினர் மீதுள்ள பற்று தொலைந்தால் ஒழிய இறைவனை அடைதல் இயலாது.
பற்று அற்றவரே பரம ஞானிகள் ஆவார். அவரே பரகதி அடைவார். "அற்றது பற்று எனில் உற்றது வீடு”. அப்பற்று, அகப்பற்று, புறப்பற்று
என இருவகைப்படும். நான், எனது எனப்படும்.
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின்திருப்
பாதமே மனம் பாவித்தேன்.. --- சுந்தரர்.
மற்றுநான் பற்றிலேன் கண்டாய் --- மணிவாசகர்.
இக் கருத்தைப் பற்று அற்றவராகிய தாயுமானார் பகருமாறு கண்டு மகிழ்க.
படிப்பு அற்றுக் கேள்வி அற்று பற்று அற்றுச் சிந்தைச்
துடிப்பு அற்றோர்க்கு அன்றோ சுகம்காண் பராபரமே.
பற்று அற்று இருக்கு நெறி பற்றில், கடல்மலையும்
சுற்ற நினைக்கு மனம் சொன்னேன் பராபரமே.
பற்றிய பற்று அற, உள்ளே - தன்னைப்
பற்றச் சொன்னான், பற்றிப் பார்த்த இடத்தே
பெற்றதை ஏதென்று சொல்வேன், - சற்றும்
பேசாத காரியம் பேசினான் தோழி.
நாம் பற்றெனக் கருதி நிற்போர் எல்லாம் நமக்குப் பேரிடர் வருங்கால் கைவிட்டு
ஏகுவர். நமனுடைய பாசக்கயிறு வந்து மரண யாத்திரை செல்லும்போது, யாரே துணை செய்வார். சற்று சிந்தித்து
நோக்குமின்.
என்பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போஎன்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம்உடைத்தார்
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே. --- பட்டினத்தார்.
ஆதலினால், உலகவர்
மீதுள்ள பற்றை ஒழித்து, உயிர்க்குத் துணையாய் இறைவனைப் பற்றி நிற்றல் வேண்டும். அவ்வாண்டவனே இம்மைக்கும் மறுமைக்கும்
பற்றாவான்.
இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி --- ஆண்டாள்.
பற்றற்ற கண்ணே பிறப்பு அறுக்கும், மற்று
நிலையாமை காணப் படும். --- திருக்குறள்.
பற்று
என்னும் பாசத் தளையும், பலவழியும்
பற்றறாது
ஓடும் அவாத்தேரும் – தெற்றெனப்
பொய்த்துரை
என்னும் பகைஇருளும் இம்மூன்றும்
வித்துஅற
வீடும் பிறப்பு. ---
திரிகடுகம்.
இப்
பாடலின் பொருள் ---
பற்று
என்று சொல்லப்படுகின்ற, கயிற்று விலங்கும், பல பொருள்களிலும் பிடிப்பு நீங்காமல் ஓடுகின்ற, அவா ஆகிய தேரும், தெளிவாகப் பிறருக்குப்
பொய்ம்மை உரைப்பதாகிய சொல் என்று சொல்லப்படும், அறிவுக்குப் பகையாகிய ஆணவ இருளும் ஆகிய இம்
மூன்றும், தனக்குக் காரணமாகிய அவிச்சை
கெட பிறப்பு அழியும்.
யான், தான் எனும்சொல் இரண்டும் கெட்டால் அன்றி யாவருக்கும்
தோன்றாது
சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய்
கீன்றான்
மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால்
சான்று
ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.
என்று
அருணை வள்ளல் கந்தர் அலங்காரத்தில் காட்டினார்.
இதையே
தாயுமான அடிகள், "யான்தான் எனல் அறலே இன்ப நிட்டை என்று அருணைக் கோன் தான்
உரைத்த மொழி கொள்ளாயோ" என்று போற்றினார்.
குறி ---
குறிப்பது
குறி. குறித்து அறிவது குறி. குறிக்கோள் எனப்பட்டது.
நான்
எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் உள்ள வரையில் குறிக்கோள் சிறக்காது.
இந்த
நிலையை,
பாலனாய்க்
கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க்
கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க்
கழிந்தநாளும், குறிக்கோள் இலாதுகெட்டேன்,
சேல்உலாம்
பழனவேலித் திருக்கொண்டீச்சரத்து உளானே.
என்று
அப்பர் பெருமான் காட்டி அருளினார்.
இப்
பாடலின் பொழிப்புரை ---
சேல்கள்
உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப்
பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை
அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக்
கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.
உயர்ந்த
நிலையை அருளுவதான ஒன்றைக் குறிக்கோளாகக் கொள்ளுதல் வேண்டும். அதைக் குறித்தே வாழ்க்கை
அமையவேண்டும். இறைவனுடைய திருவடி இன்பத்தை அடைவதே சிறந்த குறிக்கோள் ஆகும்.
பின்வரும்
அருட்பாடல்களின் கருத்தினை உன்னி ஓர்க.
மான்ஏர்
நோக்கி உமையாள் பங்கா!
வந்து இங்கு ஆட்கொண்ட
தேனே!
அமுதே! கரும்பின் தெளிவே!
சிவனே! தென்தில்லைக்
கோனே!
உன்தன் திருக்குறிப்புக்
கூடுவார் நின் கழல்கூட,
ஊன்ஆர்
புழுக்கூடு இதுகாத்து இங்கு
இருப்பது ஆனேன் உடையானே. --- திருவாசகம்.
குதுகுதுப்பு
இன்றி நின்று, என் குறிப்பே செய்து, நின்குறிப்பில்
விதுவிதுப்பேனை
விடுதி கண்டாய்! விரை ஆர்ந்து இனிய
மதுமதுப்
போன்று என்னை வாழைப் பழத்தின் மனம்கனிவித்து
எதிர்வது
எப்போது? பயில்விக் கயிலைப் பரம்பரனே. --- திருவாசகம்.
தாமே
தமக்குச் சுற்றமும்,
தாமே தமக்கு விதிவகையும்,
யாம்
ஆர்? எமது ஆர்? பாசம் ஆர்?
என்ன மாயம்? இவைபோகக்
கோமான்
பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமாறு
அமைமின் பொய்நீக்கி,
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. --- திருவாசகம்.
செறிவுஇலேன்,
சிந்தை உள்ளே சிவன்அடி தெரிய மாட்டேன்,
குறிஇலேன்,
குணம்ஒன்று இல்லேன், கூறுமா கூற மாட்டேன்,
நெறிபடு
மதி ஒன்று இல்லேன், நினையுமா நினைய மாட்டேன்,
அறிவிலேன்
அயர்த்துப் போனேன் ஆவடுதுறை உளானே. --- அப்பர்.
எய்தானைப்
புரமூன்றும் இமைக்கும் போதில்,
இருவிசும்பில் வரும்புனலைத் திருஆர்
சென்னிப்
பெய்தானை,
பிறப்பு இலியை, அறத்தில் நில்லாப்
பிரமன்தன் சிரம்ஒன்றைக் கரம்ஒன் றினால்
கொய்தானை,
கூத்துஆட வல்லான் தன்னை,
"குறிஇலாக் கொடியேனை அடியேனாகச்
செய்தானை",
திருநாகேச்சரத்து உளானைச்
சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே. --- அப்பர்.
குலத்திடையும்
கொடியன், ஒரு குடித்தனத்தும் கொடியன்,
குறிகளிலும்
கொடியன், அன்றிக் குணங்களிலும் கொடியன்,
மலத்திடையே
புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்,
வன்மனத்துப்
பெரும்பாவி, வஞ்சநெஞ்சப் புலையேன்,
நலத்திடைஓர்
அணுஅளவும் நண்ணுகிலேன், பொல்லா
நாய்க்குநகை
தோன்றநின்றேன், பேய்க்கும்மிக இழிந்தேன்,
நிலத்திடைநான்
ஏன்பிறந்தேன்? நின்கருத்தை அறியேன்,
நிர்க்குணனே!
நடராஜ நிபுணமணி விளக்கே. --- திருவருட்பா.
இன்ப
சார இன வா(வு)ம்பரி தான்ய தனம் பதி விட ---
தாண்டிச்
செல்லும் குதிரைகள், தானியங்கள், சொத்துக்கள், இருக்கும் ஊர் இவைகளின் மேல் வைத்த
பற்று நீங்கவேண்டும்.
அக்
காலத்தில் விரைந்து செல்ல உதவிய குதிரையைச் செவாமிகள் காட்டினார். இக் காலத்தில் விரைந்து செல்ல உதவும் வாகனங்களைக்
கொள்ளலாம். இவைகள் தரும் இன்பத்தில் மயங்கி அவற்றின் மீது பற்று வைப்பது புறப்பற்று
எனப்படும். இந்தப் பற்றினை விடவேண்டும்.
எனை
ஏன்று, மோன தடம் பர மிகுதாம் பதி காண ---
ஏன்று
கொள்ளுதல் - ஏற்றுக் கொள்ளுதல்.
கடவும்
திகிரி கடவாது ஒழிய, கயிலை உற்றான்
படவும்
திருவிரல் ஒன்று வைத்தாய்! பனி மால்வரைபோல்
இடவம்
பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இருஞ் சோலைதிங்கள்
தடவும்
கடந்தைஉள் தூங்கானை மாடத்து எம் தத்துவனே. --- அப்பர்.
திருந்தா
அமணர் தம் தீநெறிப் பட்டுத் திகைத்து, முத்தி
தரும்தாள்
இணைக்கே சரணம் புகுந்தேன், வரைஎடுத்த
பொருந்தா
அரக்கன் உடல் நெரித்தாய்! பாதிரிப்புலியூர்
இருந்தாய்!
அடியேன் இனிப்பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே. --- அப்பர்.
இறுகிய
சிறுபிறை எயிறுஉடை யமபடர்
எனதுஉயிர் கொளவரின்,
யான்ஏங்குதல் கண்டுஎதிர் தான்ஏன்று கொளும்குயில்.. --- தேவேந்திர சங்க வகுப்பு.
மோன
தடம் பரம் மிகுதாம் கதி காண --- மோன நிலையிலே விளங்குகின்ற பரம்பொருளை அடையும் கதி.
அறிவு
வடிவாக நிளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில்
எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று
உபதேசிக்கின்றார் ஔவையார்.
மன
சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர்.
வாய்
பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது வாய்மௌனம்
எனப்படும்.
கைகால்
அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு காஷ்டமௌனம் என்று பேர்.
மனமே
அற்ற நிலைக்குத் தான் பூரண மௌனம் என்று பேர்.
அங்கே
தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.
அந்த
இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.
இந்த
மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை
வேண்டுகின்றார்.
அருவம்
இடைஎன வருபவர், துவர்இதழ்
அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார
அசல
முலைபுள கிதம்எழ, அமளியில்
அமளி படஅந வரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்
தருவை
நிகரிடு புலமையும் அலம்அலம்,
உருவும் இளமையும் அலம்அலம், விபரித
சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில
லிபியன சனனமும் அலம்அலம்,
இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் ......
அருள்வாயே.. --- திருப்புகழ்.
அகலம்
நீளம் யாதாலும், ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயில் ...... எனமேவி,
அசையவே
க்ரியா பீட மிசை புகா, மகா ஞான
அறிவின் ஆதர ஆமோத ...... மலர்தூவி,
சகல
வேதன அதீத, சகல வாசக அதீத,
சகல மா க்ரியா அதீத, ...... சிவரூப,
சகல
சாதக அதீத, சகல வாசனை அதீத
தனுவை நாடி, மா பூசை ...... புரிவேனோ? --- திருப்புகழ்.
மோனமாகிய
கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு
உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார்
கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...
ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடி வே.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுரு வே.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்றுஅறிந்தேன் ஆனந்த மே.
அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.
இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.
ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.
குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு
தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
கோயில்என வாழும் குரு.
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
மதுராந்தக
மாநகரம் திகழ் முருகா ---
மதுராந்தகம்
என்னும் திருத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது.
கருத்துரை
முருகா!
திருவடி இன்பத்தை அருள்வாயாக
No comments:
Post a Comment