செய்யூர் - 0732. முகிலாமெனும்

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

முகிலாமெனும் வார் (சேயூர்)

முருகா!
விலைமாதர் வயப்பட்டு அடியேன் அழியாமல் அருள்வாய்.


தனனாதன தானன தானன
     தனனாதன தானன தானன
          தனனாதன தானன தானன ...... தனதான

முகிலாமெனும் வார்குழ லார்சிலை
     புருவார்கயல் வேல்விழி யார்சசி
          முகவார்தர ளாமென வேநகை ...... புரிமாதர்

முலைமாலிணை கோபுர மாமென
     வடமாடிட வேகொடி நூலிடை
          முதுபாளித சேலைகு லாவிய ...... மயில்போல்வார்

அகிசேரல்கு லார்தொடை வாழையின்
     அழகார்கழ லார்தர வேய்தரு
          அழகார்கன நூபுர மாடிட ...... நடைமேவி

அனமாமென யாரையு மால்கொள
     விழியால்சுழ லாவிடு பாவையர்
          அவர்பாயலி லேயடி யேனுட ...... லழிவேனோ

ககனார்பதி யோர்முறை கோவென
     இருள்காரசு ரார்படை தூள்பட
          கடலேழ்கிரி நாகமு நூறிட ...... விடும்வேலா

கமலாலய நாயகி வானவர்
     தொழுமீசுர னாரிட மேவிய
          கருணாகர ஞானப ராபரை ...... யருள்பாலா

மகிழ்மாலதி நாவல்ப லாகமு
     குடனாடநி லாமயில் கோகில
          மகிழ்நாடுறை மால்வளி நாயகி ...... மணவாளா

மதிமாமுக வாவடி யேனிரு
     வினைதூள்பட வேயயி லேவிய
          வளவாபுரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


முகிலாம் எனும் வார் குழலார், சிலை
     புருவார், கயல் வேல் விழியார், சசி
          முகவார், தரளாம் எனவே நகை ...... புரிமாதர்,

முலைமால் இணை கோபுரமாம் என,
     வடம் ஆடிடவே, கொடி நூல்இடை,
          முதுபாளித சேலை, குலாவிய ...... மயில்போல்வார்,

அகி சேர் அல்குலார், தொடை வாழையின்
     அழகார், கழல் ஆர் தர, வேய்தரு
          அழகார், கன நூபுரம் ஆடிட ...... நடைமேவி,

அனம் ஆம்என யாரையும் மால்கொள,
     விழியால் சுழலா விடு பாவையர்,
          அவர் பாயலிலே அடியேன் உடல் ......அழிவேனோ?

ககன ஆர் பதியோர் முறை கோ என.
     இருள் கார அசுரார் படை தூள்பட,
          கடல் ஏழ்கிரி நாகமும் நூறிட ...... விடும்வேலா!

கமலாலய நாயகி, வானவர்
     தொழும் ஈசுரனார் இடம் மேவிய
          கருணாகர ஞான பராபரை ......அருள்பாலா!

மகிழ், மாலதி, நாவல், பலா, கமுகு
     உடன் ஆட நிலா மயில் கோகில
          மகிழ்நாடு உறை மால் வளி நாயகி ...... மணவாளா!

மதி மா முகவா! அடியேன் இரு
     வினை தூள் படவே அயில் ஏவிய
          வளவா புரி வாழ்மயில் வாகன ...... பெருமாளே.


பதவுரை

      ககனார் பதியோர் முறை கோ என --- விண்ணுலகில் உள்ளவர்கள் கோ என்று முறையிட,

     இருள்கார் அசுரார் படை தூள்பட --- இருளைப் போலக் கரிய நிறமுடைய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும்

     கடல் --- ஏழு கடல்களும்,

     ஏழ்கிரி --- சூரபன்மனுக்குத் துணையாக இருந்த ஏழு மலைகளும்,

     நாகமும் நூறிட விடும் வேலா --- பிற மலைகளும் பொடிபடும்படியாக விடுத்தருளிய வேலாயுதத்தை உடையவரே!

     கமல ஆலய நாயகி --- அன்பர்களின் இதயத் தாமரையில் குடிகொண்டு இருக்கும் தலைவியும்,

     வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய --- வானவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய திருமேனியின் இடப்பாகத்தில் பொருந்தி உள்ளவரும்,

     கருணாகர ஞான பராபரை அருள்பாலா --- கருணைக்கு இருப்பிடமானவளும், ஞானசிவசத்தியும் ஆகிய உமாதேவியார் அருளிய திருக்குழந்தையே!

      மகிழ் --- மகிழ மரம்,

     மாலதி --- மல்லிகை,

     நாவல் --- நாவல் மரம்,

     பலா --- பலா மரம்,

     கமுகு உடன் ஆட நிலா மயில் கோகில(ம்) மகிழ் --- பாக்கு மரம் ஆகியவைகளில் படர்ந்து இருக்கும் நிலவு ஓளியும், மயில், குயில் ஆகிய பறவைகள் மகிழ்ந்து இருக்கும்

     நாடு உறை மால் வ(ள்)ளிநாயகி மணவாளா --- தொண்டை நன்னாட்டில் உள்ள வள்ளிமலையில் வாழ்ந்திருந்த பெருமை மிக்க வள்ளிநாயகியின் மணவாளரே!

      மதி மாமுகவா --- சந்திரனைப் போன்ற முகத்தை உடையவரே!

     அடியேன் இருவினை தூள்படவே --- அடியேனுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் பொடிபடுமாறு

     அயில் ஏவிய வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே --- கூர்மையான வேலை விடுத்து அருளி, வளவாபுரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே!

      முகில் ஆம் எனும் வார்குழலார் --- மேகம் போன்றது என்று சொல்லத்தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள்,

     சிலை புருவார் --- வில்லை ஒத்த புருவத்தை உடையவர்கள்,

     கயல்வேல் விழியார் --- கயல் மீனைப் போன்றும், வேலைப் போன்றும் கண்களை உடையவர்கள்,

     சசி முகவார் --- சந்திரனை ஒத்த முகத்தை உடையவர்கள்,

     தரளாம் எனவே நகை புரி மாதர் --- முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள்.

      முலை மால் இணை கோபுரமாம் என --- முலைகள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்கள் போல் விளங்க

     வடம் ஆடிடவே --- மணி வடங்கள் மார்பில் ஆ,

     கொடி நூல் இடை --- கொடியைப் போன்றதும், நூலைப் போன்றதும் ஆகிய இடுப்பு,

     முதுபாளித சேலை குலாவிய மயில் போல்வார் --- சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள்.

      அகி சேர் அல்குலார் --- பாம்புப் படம் போன்ற அல்குலை உடையவர்கள்,

     தொடை வாழையின் அழகு --- வாழைத் தண்டினை ஒத்த அழகிய தொடையினை உடையவர்கள்,

     ஆர் கழல் ஆர் தர --- காலில் பொருந்தி உள்ள சிலம்புகள் ஒலிக்க

     ஏய்தரு அழகார் கன நூபுரம் ஆடிட நடை மேவி ---அழகு பொருந்திய பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடை பயின்று,

      அ(ன்)னமாம் என யாரையும் மால் கொள --- அன்னப் பறவை என்று சொல்லும்படியாக விளங்கி, எவரையும் காம மயக்கம் கொள்ளும்படி,

     விழியால் சுழலாவிடு பாவையர் --- கண் பார்வையால் மனதைச் சுழல விடுகின்ற பாவையர்கள்,

     அவர் பாயலிலே அடியேன் உடல் அழிவேனோ --- அவரோடு படுக்கையில் அடியேன் உடல் அழிந்து படுவேனோ?


பொழிப்புரை

         விண்ணுலகில் உள்ளவர்கள் கோ என்று முறையிட, இருளைப் போலக் கரிய நிறமுடைய அசுரர்களுடைய சேனைகள் தூளாகவும், ஏழு கடல்களும், சூரபன்மனுக்குத் துணையாக இருந்த ஏழு மலைகளும், பிற மலைகளும் பொடிபடும்படியாக விடுத்தருளிய வேலாயுதத்தை உடையவரே!

         அன்பர்களின் இதயத் தாமரையில் குடிகொண்டு இருக்கும் தலைவியும், வானவர்கள் தொழுகின்ற சிவபெருமானுடைய திருமேனியின் இடப்பாகத்தில் பொருந்தி உள்ளவரும், கருணைக்கு இருப்பிடமானவளும், ஞானசிவசத்தியும் ஆகிய உமாதேவியார் அருளிய திருக்குழந்தையே!

         மகிழ மரம், மல்லிகை, நாவல் மரம், பலா மரம், பாக்கு மரம் ஆகியவைகளில் படர்ந்து இருக்கும் நிலவு ஓளியும், மயில், குயில் ஆகிய பறவைகள் மகிழ்ந்து இருக்கும் தொண்டை நன்னாட்டில் உள்ள வள்ளிமலையில் வாழ்ந்திருந்த பெருமை மிக்க வள்ளிநாயகியின் மணவாளரே!

         சந்திரனைப் போன்ற முகத்தை உடையவரே!

     அடியேனுடைய நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் பொடிபடுமாறு கூர்மையான வேலை விடுத்து அருளி, வளவாபுரி என்னும் சேயூரில் வாழும் மயில் வாகனப் பெருமாளே!

         மேகம் போன்றது என்று சொல்லத்தக்க நீண்ட கூந்தலை உடையவர்கள். வில்லை ஒத்த புருவத்தை உடையவர்கள். கயல் மீனைப் போன்றும், வேலைப் போன்றும் கண்களை உடையவர்கள். சந்திரனை ஒத்த முகத்தை உடையவர்கள். முத்துப் போன்ற பற்களைக் கொண்டு சிரிக்கின்ற விலைமாதர்கள். முலைகள் பெருமை பொருந்திய இரண்டு கோபுரங்கள் போல் விளங்க மணி வடங்கள் மார்பில் ஆ, கொடியைப் போன்றதும், நூலைப் போன்றதும் ஆகிய இடுப்பு, சிறந்த பட்டுப் புடைவை விளங்கிய, மயில் போன்ற சாயலை உடையவர்கள். பாம்புப் படம் போன்ற அல்குலை உடையவர்கள்.
வாழைத் தண்டினை ஒத்த அழகிய தொடையினை உடையவர்கள். காலில் பொருந்தி உள்ள சிலம்புகள் ஒலிக்க, அழகு பொருந்திய பொன்னாலாகிய பாத கிண்கிணி ஒலி செய்ய நடை பயின்று, அன்னப் பறவை என்று சொல்லும்படியாக விளங்கி, எவரையும் காம மயக்கம் கொள்ளும்படி, கண் பார்வையால் மனதைச் சுழல விடுகின்ற பாவையர்கள்,
அவரோடு படுக்கையில் கிடந்து, அடியேன் உடல் அழிந்து படுவேனோ?


விரிவுரை

இத் திருப்புகழில் அடிகளார் விலைமாதர்களின் உடலழகையும், அவர்கள் மீது கொள்ளும் காம மயக்கத்தால் விளையும் கேட்டையும் எடுத்துக் கூறி, உயிர்க்கு அழிவு வராமல் காத்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு முருகப் பெருமானின் திருவருள் துணை புரிய வேண்டும் என்றும் விளக்கி அருளினார்.

விடம்-அடைசு வேலை, அமரர் படை, சூலம்,
     விசையன் விடு பாணம் ...... எனவேதான்,
விழியும் அதிபார விதமும் உடை மாதர்
     வினையின் விளைவு ஏதும் ...... அறியாதே,

கடிஉலவு பாயல் பகல் இரவு எனாது
     கலவிதனில் மூழ்கி, ...... வறிதுஆய,
கயவன், அறிவு ஈனன், இவனும் உயர் நீடு
     கழல்இணைகள் சேர ...... அருள்வாயே.   --- திருப்புகழ்.


கமல ஆலய நாயகி ---

அன்பர்களின் இதயத் தாமரையைக் கோயிலாக் கொண்டு வீற்றிருப்பவர் உமாதேவியார்.

தழைக்கும் கொன்றையைச் செம்பொன்
     சடைக் கண்டு, ங்கியைத் தங்கும்
          தரத்து, ஞ்செம் புயத்து ஒன்றும் ...... பெருமானார்
தனிப் பங்கின் புறத்தின் செம்-
     பரத்தின் "பங்கயத்தின் சஞ்-
          சரிக்கும் சங்கரிக்கு" என்றும் ...... பெருவாழ்வே!    --- (குழைக்கும்) திருப்புகழ்.

வானவர் தொழும் ஈசுரனார் இடம் மேவிய கருணாகர ஞான பராபரை அருள்பாலா ---

வானவர்களால் வணங்கப்படுகின்ற சிவபெருமானுடைய திருமேனியின் இடப்பாகத்தில் பொருந்தி உள்ளவர் கருணைக்கு இருப்பிடமானவளும், ஞானசிவசத்தியும் ஆகிய உமாதேவியார்.

இமயவல்லி இடப்பாகம் பெற்ற வரலாறு

உமையம்மையார் சந்திர சூரியர் சிவபெருமானுடைய திருக்கண்களே என்பதை உலகம் அறியச் செய்யும் பொருட்டு, எம்பெருமானது திருக்கண்களைப் புதைத்தனர். அதனால் உலகங்கள் எல்லாம் இருண்டு விட்டன. உயிர்கள் அனைத்தும் தடுமாறித் துன்புற்றன. அக்காலை சிவபெருமான் நெற்றிக் கண்களைத் திறந்து ஒளியை உண்டாக்கினர். அது கண்ட அம்பிகை முக்கண்பெருமானைத் தொழுது, "எம்பெருமானே! உலகம் எல்லாம் இருண்டு மருண்டு துன்புறத் தங்கள் திருக்கண்களைப் புதைத்த பாவம் தீர மண்ணுலகில் சென்று தவம் புரியக் கருதுகின்றேன். அதற்குத் தக்க இடம் அருளிச் செய்வீர்" என்றனர்.

கண்ணுதற்கடவுள், "தேவீ ! உனை வினை வந்து அணுகாது எனினும், உலகம் உய்யத் தவம் புரியக் கருதினாய். மண்ணுலகில் மிகவும் சிறந்த தலம் காஞ்சியே ஆகும். ஆங்கு சென்று தவம் செய்தி" என்று அருளிச் செய்தனர். 

அம்மையார் பாங்கிகளும், அடியார்களும், விநாயகரும், முருகரும் சூழ, கச்சியம்பதி போந்து, வேதமே மாமரமாகி நிற்க, அதன் கீழ் மணலால் இலிங்கம் உண்டாக்கி வழிபாடு செய்தனர்.  அம்மையின் அன்பை உலகறியச் செய்ய இறைவன் கம்பை நதியில் பெருவெள்ளம் வரச்செய்தனர். அது கண்ட அம்மை தன்னைக் காத்துக் கொள்ளும் கருத்து இன்றி, சிவலிங்கத் திருமேனிக்குப் பழுது நேராவண்ணம் முலைத்தழும்பும், வளைச் சுவடும் உண்டாக சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டனர்.  இறைவன் அம்மையின் இணையற்ற அன்பின் பெருக்கை நோக்கி உருகி, விடைமீது காட்சி தந்தனர். உமாதேவி இறைவன் திருவடி மீது வீழ்ந்து, "இடப்புறம் தந்து என்னைக் கலந்து அருளும்" என்றனர். பெருமான், "உமையே! இங்கு தவம் புரிந்ததனால் கண் புதைத்த வினை கழிந்தது. இடப்பாகம் வேண்டுதியேல், நினைக்க முத்தியளிக்கும் திருத்தலமாகிய திருவருணைக்குச் சென்று தவம் செய்வாய். ஆங்கு அதனை அருள்வோம்" என்று அருள் புரிந்தனர்.

ஆரணன் திருமால் தேட, அடிமுடி ஒளித்து, ஞானப்
பூரண ஒளியாய் மேல்கீழ் உலகெலாம் பொருந்தி நிற்போம்,
தாரணி யவர்க்கும் மற்றைச் சயிலமாய் இருப்போம், அங்கே
வார்அணி முலையாய்! பாகம் தருகுவோம் வருதி என்றார்.

அருளே வடிவாகிய அம்பிகை தனது பரிவாரங்கள் யாவும் சூழ, இரண்டு காவதம் சென்று ஒரு வெள்ளிடையில் சேர்ந்தனர்.  அங்கே முருகக் கடவுள் வாழைப்பந்தல் இட்டனர். அது கண்ட தாய்,

அன்னையும் குகனை நோக்கி, "அரம்பையால் பந்தர் செய்து
பன்னிரு கரமும் சால வருந்தினை" எனப் பாராட்டி,
"இன்னும் ஓர் கருமம் சந்தி முடிப்பதற்கு இனிய நன்னீர்
கைந்நிறை வேலை ஏவி அழைத்திடு கணத்தில்" என்றாள்.

அக்காலை ஆறுமுகப் பெருமான், தம் திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தை ஏவி, மேற்பால் உள்ள மலையைப் பிளந்து, அதனின்றும் ஒரு நதியைத் தருவித்தனர். சேய் தருவித்த காரணத்தால், அந்த நதி சேயாறு எனப்படுவதாயிற்று. தற்காலத்தில் செய்யாறு என வழங்கப்படுகின்றது.

வாழைப்பந்தல் என்ற திருத்தலமும் இன்று கண்கூடாக விளங்குகின்றது. அம்மை அந் நதியில் சந்தியாவந்தனம் செய்து, திருவண்ணாமலையை அடைந்தனர். அங்குத் தவம் புரியும் முனிவர்களுடன் கௌதமர் அம்மையின் வரவைத் தரிந்து அளவற்ற மகிழ்ச்சி உற்று, எதிர் ஓடி மண்மிசை வீழ்ந்து கண்ணருவியுடன் துதித்து, வாய் குழறி, மெய் பதைத்து நின்றனர்.  அம்மை அன்புருவாய கோதமனாதியர்க்கு அருள் புரிந்து, ஆங்கு ஒரு தவச்சாலை நியமித்து தவம் புரிவாராயினார்.

கொந்தளகம் சடைபிடித்து விரித்து, பொன்தோள்
         குழைகழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி,
உந்துமர வுரிநிகர் பட்டாடை நீக்கி,
         உரித்தமர வுரிசாத்தி, உத்தூ ளத்தால்
விந்தைதிரு நீறணிந்து, கனற்குள் காய்ந்து,
         விளங்கும் ஊசியின் ஒருகால் விரலை ஊன்றி,
அந்திபகல் இறைபதத்தின் மனத்தை ஊன்றி,
         அரியபெரும் தவம்புரிந்தாள் அகிலம் ஈன்றாள்.

ஆங்கு மிகப்பெரும் தவ வலிமை உடைய மகிடாசுரன் தன் சேனைகளுடன் வந்து, அம்மை தவத்திற்கு இடையூறு செய்ய, அம்மை துர்க்கையினால் மகிடாசுரனைக் கொல்வித்து அருளினர். இங்ஙனம் பரமேசுவரி நெடிது காலம் மாதவம் புரிந்து, கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நட்சத்திரத்தன்று நீராடி, அண்ணாமலை அண்ணலைத் தொழுது துதித்து நின்றனர்.  அதுசமயம், மலைமேல் ஒரு ஞானசோதி பல்லாயிரம் கோடி சூரியர் உதயம்போல் எழுந்து உலகமெல்லாம் உய்யத் தோன்றியது. அம்மை அதுகண்டு, மெய் சிலிர்த்து, உள்ளம் குளிர்ந்து வணங்கினர். "பெண்ணே! இம்மலையை வலமாக வருக" என்று சிவமூர்த்தி அசரீரியாகக் கூறியருளினர்.  அதுகேட்ட அம்மை ஞானதீபமுடன் விளங்கும் அண்ணாமலையைத் தமது பரிவாரங்களுடன் வேதங்கள் முழங்க வலம் வருவாராயினார்.

"அம்மே! உமது திருவடி சிவந்தன" என்று கங்கை கை கூப்பி வணங்க, உமாதேவியார், அக்கினி, தெற்கு, நிருதி என்ற திசைகளில் அண்ணாமலையைத் தொழுது மேல்திசையை அடைந்தனர். அங்கு சிவபெருமான் விடைமீது காட்சி தந்து மறைந்தனர். பின்னர், அம்மை வாயு மூலையில் உள்ள அணியண்ணாமலையைப் பணிந்து குபேர திசை, ஈசான திசைகளிலும் தொழுது, கீழ்த்திசை எய்தினார். தேவர் பூமழை பொழிய, மறைகள் முழங்க, ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் விடையின்மீது தோன்றி அம்மைக்குத் தன் உருவில் பாதியைத் தந்து கலந்து அருளினார்.

அடுத்த செஞ்சடை ஒருபுறம், ஒருபுறம் அளகம்
தொடுத்த கொன்றை ஓர்புறம், ஒருபுறம் நறுந்தொடையல்,
வடித்த சூலம்ஓர் புறம், ஒருபுறம் மலர்க்குவளை,
திடத்தில்ஆர் கழல் ஒருபுறம், ஒருபுறம் சிலம்பு.


அடியேன் இருவினை தூள்படவே அயில் ஏவிய வளவாபுரி வாழ் மயில்வாகன பெருமாளே ---

அடியேனுடைய தீவினைக் கூட்டங்களெல்லாம் அடியோடு நீங்குமாறு வேற்படையை விடுகின்ற பெருமானே!” என்றதனால் வினையாகிய மலையைத் துகளாக்கும் வண்மை வேற்படை ஒன்றுக்கே உளது என்பது விளங்குகின்றது.

பிறவிகள் தோறும் நம் வினைகள் நம்மைத் தாக்குகின்றன. ஓரறிவுப் பிறவிகளை வி, மேல் பிறவிகளில் மிகுந்த வினைகளை வேகமாகத் துய்க்கின்றோம். மனிதப் பிறவியில், அதிலும் சான்றாண்மை மிகுந்து வர வர, வினைகள் நுட்ப உருக் கொண்டு வேகமாக வந்து தாக்குகின்றன. சானறோர்கள் செய்யும் செயல்களும் வேகமாக நடைபெறும். வினைகளைத் தாங்கிக் கொள்ளும் திறனும், செயல் செய்யும் திறனும் அவர்களுக்கு மனத்தால் வருகின்றன.

மனம் சிறப்பாய் வேலை செய்வதே மனிதப் பிறவியில் பெறவேண்டிய மாட்சிமையாகும். மனத்தினால் செய்யப்படும் வேலைகளை வி, கையினால் செய்யப்படுபவை சிறியவையே.  அதனாலேயே சிறுமை என்னும் பொருளைத் தருகின்ற "கை" என்னும் பெயர் அதற்கு வைக்கப்பட்டு உள்ளது.

கை, கால்களால் செய்யப்படுனம் வேலைகள் வரம்புக்கு உட்பட்டவை. எவ்வளவு வேகமாக ஓடினாலும், மனிதக் கால்களால் குதிரையின் வேகத்தை எட்ட முடியாது. ஆனால், குதிரையை விட வேகமாக மனத்தால் ஓட முடியும்.

மனத்தை ஒரு செயலில் பதி வைப்பதற்குப் "பாவித்தல்" என்று பெயர். நிலத்தின் மேல் பதியும்படி வைக்கப்படுவது "பாதம்". பதியும்படி எட்டுவது "பாவனை". "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்" என்னும்போது, எண்ணத்தின் அழுத்தத்தால் எய்துவர் என்பது தெளியப்படும். எனவே, சான்றோர்களின் ஆழ்ந்த எண்ணத்தால், வினைகளைச் செய்வதும் துய்ப்பதும் வேகமாக நடைபெறுகின்றன.

நுட்பமான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் வேகம் தானாகவே மிகுந்து வரும். விஞ்ஞானத்தில் புதிய நுட்பமான கண்டுபிடிப்புக்கள் எவ்வளவு வேகமாகப் பரவுகின்றன என்பதை நாம் அறிவோம்.

எண்ணங்கள் தவறாகவும், தீமை பயப்பதாயும் இருந்தாலும் அவற்றின் வேகமும் மிகுந்தே இருக்கும். பெரியவர்கள் தவறு செய்து விட்டால், அது வேகமாகப் பரவும்.

வினை வேகம் கொள்வதன் நோக்கம் என்னவென்றால், அது விரைவில் துய்க்கப்பட்டு, ஓய்ந்து போய் முடிந்து விடவேண்டும் என்பதே ஆகும். நினைந்து உருகும் அடியார்களுக்கு வினைகளை வேகமாக ஓடவிட்டு, அவர்களை நைய வைக்கின்றான் இறைவன். பிறகு அவ்வினைகள் துய்க்கப்பட்டு, நில்லாமல் நீங்கும்படியாகவும் செய்கின்றான்.  எனவே தான், அடிகளார், "வினை ஓடவிடும் கதிர்வேல்" என்றார்.

வேலாகிய ஞானம் வந்துவிட்டால், தீவினைகள் எல்லாம் ஓடிவிடும். ஒரு கல்லைக் கொண்டு பல காகங்களையும் விரட்டுவதைப் போல், வேல் ஆகிய ஞானசத்தியால் வினைகள் எல்லாம் நீங்கி விடுகின்றன. "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்றார் பழநித் திருப்புகழில். வினை ஓடவிடும் கதிர் வேல் மறவேன்” என்றார் கந்தர் அநுபூதியில். "கூறும் அடியார்கள் வினை நீறு படவே, அரிய கோலமயில் ஆன பதம் அருள்வோனே" என்றார் திருவருணைத் திருப்புகழில்.

வீரவேல், தாரைவேல், விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல், செவ்வேள் திருக்கைவேல், வாரி
குளித்தவேல், கொற்றவேல், சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை.             

இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா! - முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுரு உவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.

செய்யூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும். சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது செய்யூர் சிவன் கோவில். சிவன் கோவில் அருகில், முருகன் கோவில் உள்ளது. சேயூர் முருகன் உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இவ்வூர் முருகன் மீது பாடப்பட்டவை. சேயூர், செய்யூர் என்று மருவி நின்றது.

வளவன் என்னும் பெயர் சோழமன்னர்களைக் குறிக்கும். சோழமன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இத் திருக்கோயில் அமைக்கப்பட்டதால்,  இவ்வூருக்கு "வளவாபுரி" என்னும் பெயர் வந்திருக்கலாம். எனவே, அடிகளார் வளவாபுரி என்னும் ஊர்ப்பெயரை வைத்து, இத் திருப்புகழ்ப் பாடலை அருளினார் என்று கொள்ள இடமுண்டு.

கருத்துரை

முருகா! விலைமாதர் வயப்பட்டு அடியேன் அழியாமல் அருள்வாய்.


No comments:

Post a Comment

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல

தொடர்ந்து வருவது அருளே - பொருள் அல்ல. -----        உலகத்தில் வாழத் தெரியாதவர்கள் யார் ?  வாழத் தெரிந்தவர்கள் யார் ?  என்று கேட்டால் ,  பணத்த...