மதுராந்தகம் - 0730. சயிலாங்கனைக்கு





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சயிலாங்கனைக்கு (மதுராந்தகம்)

முருகா!
சிவபெருமானுக்குச் செய்த உபதேசத்தை
அடியேனுக்கும்  உபதேசித்து அருள் புரிவீர்.


தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான
  
சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்
     கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி

சதிதாண்ட வத்தர் சடையி டத்துக்
     கங்கை வைத்த நம்பர் ...... உரைமாளச்

செயல்மாண்டு சித்த மவிழ நித்தத்
     த்வம்பெ றப்ப கர்ந்த ...... வுபதேசஞ்

சிறியேன்த னக்கு முரைசெ யிற்சற்
     றுங்கு ருத்து வங்கு ...... றையுமோதான்

அயில்வாங்கி யெற்றி யுததி யிற்கொக்
     கன்ற னைப்பி ளந்து ...... சுரர்வாழ

அகிலாண்ட முற்று நொடியி னிற்சுற்
     றுந்தி றற்ப்ர சண்ட ...... முழுநீல

மயில்தாண்ட விட்டு முதுகு லப்பொற்
     குன்றி டித்த சங்க்ர ...... மவிநோதா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்


சயில அங்கனைக்கு உருகி, இடப் பக்-
     கம் கொடுத்த கம்பர், ...... வெகுசாரி

சதி தாண்டவத்தர், சடை இடத்துக்
     கங்கை வைத்த நம்பர், ...... உரைமாள,

செயல்மாண்டு, சித்தம் அவிழ, நித்தத்
     த்வம் பெற, பகர்ந்த ...... உபதேசம்,

சிறியேன் தனக்கும் உரை செயில் சற்-
     றும் குருத்துவம் ...... குறையுமோ தான்?

அயில்வாங்கி எற்றி, உததியில் கொக்-
     கன் தனைப் பிளந்து, ...... சுரர்வாழ,

அகிலாண்டம் முற்றும் நொடியினில் சுற்-
     றும் திறல் ப்ரசண்ட ...... முழுநீல

மயில் தாண்ட விட்டு, முது குலப்பொன்
     குன்று இடித்த சங்க்ரம ...... விநோதா!

மதுராந்தகத்து வட திருச் சிற்-
     றம்பலத்து அமர்ந்த ...... பெருமாளே.


பதவுரை


      அயில் வாங்கி எற்றி --- வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி,

     உததியில் கொக்கன் தனைப் பிளந்து --- கடலில் மாமரமாக ஒளிந்த சூரபன்மனைப் பிளந்து,

      சுரர் வாழ --- தேவர்கள் தங்கள் சுவர்க்க உலகில் இருந்து வாழும் பொருட்டு,

      அகில அண்டம் முற்றும் நொடியினில் சுற்றும் --- சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வரும்

      திறல் ப்ரசண்ட முழுநீல மயில் தாண்ட விட்டு --- வலிமையும், மிக்க வேகமும், சிறந்த நீல ஒளி வீசுவதும் ஆகிய மயிலைத் தாண்டிப் பறக்குமாறு செலுத்தி,

      முதுகுலப் பொன் குன்று இடித்த சங்க்ரம விநோதா --- வலிமையில் முதிர்ந்து உயர்ந்த கிரவுஞ்ச மலையைத் துகள் படுத்திய போரை விளையாட்டாகக் கொண்டவரே!

      மதுராந்தகத்து வட திருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே --- மதுராந்தகம் என்னும் திருத்தலத்துள் வடதிருச்சிற்றம்பலம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

      சயில அங்கனைக்கு உருகி --- மலைமகளாகிய உமையம்மையாருக்கு அவர் புரிந்த வழிபாட்டிற்கு உள்ளம் உருகி,

     இடப்பக்கம் கொடுத்த கம்பர் --- தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய ஏகாம்பரநாதரும்,

     வெகுசாரி சதி தாண்டவத்தர் --- பலவகையாகச் சுழன்று தாள வரிசையுடன் திருநடனம் புரிகின்றவரும்,

     சடை இடத்துக் கங்கை வைத்த நம்பர் --- சடா மகுடத்தில் கங்கா நதியை முடித்தவரும், ஆன்மாக்களால் விரும்பப்படுகின்றவரும் ஆகிய சிவபெருமான்,

      உரைமாள --- பேச்சற்றுப் போய்,

     செயல்மாண்டு --- செயல் இழந்து,

     சித்தம் அவிழ --- மனமும் ஒடுங்கவும்,

      நித்தத் த்வம் பெறப் பகர்ந்த உபதேசம் --- என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெறவும் கூறியருளிய உபதேச மொழியை

     சிறியேன் தனக்கும் உரை செயில் --- அறிவு ஆற்றலில் சிறியவனாகிய அடியேனுக்கும் தேவரீர் உபதேசித்து உதவினால்

     சற்றும் குருத்துவம் குறையுமோ தான் --- கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் தன்மை குறைந்திடுமோ என்ன? (ஒருபோதும் குறையாது.)


பொழிப்புரை


         வேலாயுதத்தை எடுத்துச் செலுத்தி, கடலில் மாமரமாக ஒளிந்த சூரபன்மனைப் பிளந்து, தேவர்கள் தங்கள் சுவர்க்க உலகில் இருந்து வாழும் பொருட்டு, சகல அண்டங்களையும் ஒரு நொடிப் பொழுதில் வலம் வரும் வலிமையும், மிக்க வேகமும், சிறந்த நீல ஒளி வீசுவதும் ஆகிய மயிலைத் தாண்டிப் பறக்குமாறு செலுத்தி, வலிமையில் முதிர்ந்து உயர்ந்த கிரவுஞ்ச மலையைத் துகள் படுத்திய போரை விளையாட்டாகக் கொண்டவரே!

         மதுராந்தகம் என்னும் திருத்தலத்துள் வடதிருச்சிற்றம்பலம் என்ற திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள பெருமையின் மிக்கவரே!

         மலைமகளாகிய உமையம்மையாருக்கு அவர் புரிந்த வழிபாட்டிற்கு உள்ளம் உருகி, தமது இடது பாகத்தையே கொடுத்தருளிய ஏகாம்பரநாதரும், பலவகையாகச் சுழன்று தாள வரிசையுடன் திருநடனம் புரிகின்றவரும், சடா மகுடத்தில் கங்கா நதியை முடித்தவரும், ஆன்மாக்களால் விரும்பப்படுகின்றவரும் ஆகிய சிவபெருமான், பேச்சற்றுப் போய், செயல் இழந்து, மனமும் ஒடுங்கவும்,  என்றும் உள்ளதாகிய தன்மையைப் பெறவும் கூறியருளிய உபதேச மொழியை, அறிவு ஆற்றலில் சிறியவனாகிய அடியேனுக்கும் தேவரீர் உபதேசித்து உதவினால் கொஞ்சமேனும் உனது குருமூர்த்தியாம் தன்மை குறைந்திடுமோ என்ன? (ஒருபோதும் குறையாது.)


விரிவுரை


சயில அங்கனைக்கு உருகி இடப்பக்கம் கொடுத்த கம்பர் ---

திருக்கயிலாய மலையிலே, பரம கருணாநிதியாகிய சிவபெருமான் மாணிக்க மணிமண்டபத்தில் உமாதேவி சமேதராக வீற்றிருந்தருளினார். மால் அயன் முதலிய வானவரும், திசை பாலகரும், சித்தர்களும், முத்தர்களும், வசுக்களும், இருடியரும் ஒருசமயம் திருக்கயிலையை அடைந்து, திருநந்தி தேவர்பால் விடைபெற்று, உள்ளே சென்று அம்மையாரையும் ஐயரையும் கண்குளிரக் கண்டு, வாயார வாழ்த்தி, தலையாரக் கும்பிட்டு திருவருள் பெற்றுத் திரும்பினார்கள். முனிவரராகிய பிருங்கி முனிவர் மட்டும் அம்மையைப் பணியாது சிவபெருமானை மட்டும் பணிந்து பரவி வழிபட்டனர். உமையம்மையார் அதுகண்டு, "எம்பெருமானே! என்னைச் சிறிதும் மதியாத இம் முனிவன் யாவன்?” என்று வினவினார்.

சிவபெருமான் திருவிளையாடல் காரணமாக, "தேவீ! எல்லாம் சிவமயமே என்று தீவிரமாக நினைக்கின்ற தீரன் இவன்.  பிருங்கி முனிவன் இவன் பேர்" என்று அருளிச் செய்தனர்.

இமயகுமாரியார், இருடியின் செருக்கை அகற்றுவான் வேண்டி, அவரது உடம்பில் சத்தியின் கூறாவுள்ள, உதிரம் தசை முதலியவை சிறிதுமின்றிக் கவர்ந்தனர். பிருங்கி முனிவர் சிவத்தின் கூறாகிய எலும்பும் நரம்பும் உடையவராய் நிற்க இயலாது தள்ளாடித் தவித்தனர். கருணைக் கடலாகிய கண்ணுதற்பெருமான், எக்காலையும் தன்னை வணங்கும் அவருக்கு ஒரு காலை உதவினார். பிருங்கி முனிவர் களிப்புற்று, மூன்று காலுடன் சிவத்தை வணங்கித் துதித்துச் சென்றனர்.

உமையம்மையார் சிவத்துடன் பிரிவு அறக் கலந்து நிற்கும் பெற்றியைப் பெறும்பொருட்டு, தவம் புரிவதற்கு இறைவர்பால் அனுமதியைப் பெற்று, ஆனைமுகக் கடவுளும், ஆறுமுகக் கடவுளும், சத்தமாதர்களும் புடை சூழ, மேருகிரியின் சாரலை அடைந்து நெடுங்காலம் தவம் புரிந்தனர். அம்மையின் தவத்திற்கு இரங்கிய அந்திவண்ணர், நந்திமேல் தோன்றி, காட்சி அளித்தனர். பார்வதியம்மை பரமனது பாதமலர் மீது வீழ்ந்து பலகாலும் பணிந்து, கண்ணீர் சொரிந்து, மிகவும் பரிந்து துதி செய்து நின்றனர்.

இறைவர், "தவக்கொழுந்தே! உனக்கு யாது வரம் வேண்டும், கேள்" என்று அருளினர். உமையம்மையார், "அருட்கடலே! தேவரீரது திருமேனியில் பிரிவு அற ஒன்றுபட்டுக் கலந்து இருக்கும் வண்ணம் இடப்பாகம் தந்தருளல் வேண்டும்" என்று வேண்டினர்.   அவ்வண்ணமே அரனார் அம்மைக்கு இடப்பாகத்தைத் தந்து, மாதொரு கூறனாக நின்று, காட்சி அளித்தனர்.

வெகுசாரி சதி தாண்டவத்தர் ---

இறைவர் அகிலலோக உயிர்களும் உய்யும் பொருட்டு அருட்சிதாகாசத்தில் அநவரத ஆனந்த தாண்டவம் புரிந்தருளுகின்றார். அந்தத் திருநடனத்திற்கு முதலும் முடிவும் இல்லை. அம்பலவாணருடைய தூக்கிய திருவடியின் பாதுகையின் புறத்து எழுந்த அணுக்களின் பெருமை அளவிடற்கரியது.

மாதேகேள், அம்பலத்தே திருநடஞ்செய் பாத
     மலர்அணிந்த பாதுகையின் புறத்தெழுந்த அணுக்கள்,
மாதேவர், உருத்திரர்கள் ஒருகோடி கோடி,
     வளைபிடித்த நாரணர்கள் ஒருகோடி கோடி,
போதுஏயும் நான்முகர்கள் ஒருகோடி கோடி,
     புரந்தரர்கள் பலகோடி ஆக,உருப் புனைந்தே
ஆதேயர் ஆகி,இங்கே தொழில்புரிவார் என்றால்,
     ஐயர்திரு வடிப்பெருமை யார்உரைப்பார் தோழி.      ---  திருவருட்பா.

இறைவருடைய திருநடனம் பஞ்சாக்கர மயமானது.  திருவடியிலே நகரமும், உந்தியிலே மகரமும், திருத்தோள்களிலே சிகரமும், திருமுகத்திலே வகரமும், திருமுடியிலே யகரமும் அமைந்துள்ளன.

ஆடும் படிகேள்நல் அம்பலத்தான், ஐயனே,
நாடும் திருவடியிலே நகரம், ---  கூடும்
மகரம் உதரம், வளர்தோள் சிகரம்,
பகருமுகம் வா,முடியப் பார்.             --- உண்மை விளக்கம்.

அம்பலவாணருடைய அருட்கூத்தில் இருந்தே ஐம்பெருந்தொழில்களும் நிகழ்கின்றன. நடராஜமூர்த்தியின் திருக்கரத்துள்ள உடுக்கையில் படைப்பும், அபயத் திருக்கரத்தில் காப்பும், பிறிதொரு திருக்கரத்தில் உள்ள நெருப்பில் அழிப்பும், ஊன்றிய திருவடியில் மறைப்பும், தூக்கிய திருவடியில் அருளலும் நிகழ்கின்றன.

தோற்றம் துடிஅதனில், தோயும் திதி அமைப்பில்,
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ---  ஊற்றமா
ஊன்றும் மலர்ப்பதத்தில் உற்ற திரோதம், முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.               --- உண்மை விளக்கம்.

நடேசப் பெருமானுடைய திருவாசி ஓங்காரம் ஆகும்.  ஓங்காரத்தை நீங்காத திருவைந்தெழுத்தே அத் திருவாசியின் நிறைந்த ஒளியாகும். நடராஜமூர்த்தியின் உண்மை நிலையை ஆங்காரம் அற்றவரே அறிவார்.  அறிந்து அதைத் தெரிசித்தவர் பிறப்பு அற்றவராவார்.

ஓங்காரமே நல் திருவாசி, உற்று அதனில்
நீங்கா எழுத்தே நிறைசுடராம் --- ஆங்காரம்
அற்றார் அறிவர்அணி அம்பலத்தான் ஆடல்,இது
பெற்றார் பிறப்பு அற்றார் பின்.            ---  உண்மை விளக்கம்.

மாயைப் பாசத்தை உதறிவிட்டு, வல்வினைப் பாசத்தைச் சுட்டறுத்து, ஆணவமலத்தின் வலியை அறவே ஒழியும்படி செய்து, திருவருளினையே உயிர்க்கு ஆதாரமாக்கி, அன்பினில் விளைந்த ஆனந்தத்திலே ஆன்மாவை அழுத்துவதே அம்பலவாணருடைய அருட்கூத்தின் தன்மையாம்.

மாயைதனை உதறி, வல்வினையைச் சுட்டு,மலம்
சாயஅமுக்கி, அருள்தான் எடுத்து ---  நேயத்தால்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தான்அழுத்தல்
தான்எந்தையார் பரதம் தான்.             ---  உண்மை விளக்கம்.


சடை இடத்துக் கங்கை வைத்த நம்பர் ---

கோடி சூரியப் பிரகாசமாக விளங்கும் திருக்கயிலாய மலையில், தேவர்களும் முனிவர்களும் சீழ சிவமூர்த்தி உமாதேவியாருடன் வீற்றருளுவர்.இறைவரை நோக்கி, "பெருமானே! சூரிய சந்திரர் யாவர்?” என்று உமையம்மையார் உலகம் அறியும் பொருட்டு கேட்டனர். கண்ணுதற் பரமர், "பண்மொழிப் பாவாய்! இருசுடர்களும் நமது திருக்கண்கள் ஆகும்" என்று கூறியருளினார். எம்மையாளும் அம்மையார் திருவிளையாடலாக அண்ணலாரது திருக்கண்களைத் தமது இரு கரமலர்களால் மூடினார்.

அந்த வேலையில்என் அன்னை ஐயனை இறைஞ்சி, ஐயா
இந்துவும் இரவிதானும் யாவர்என்று இசைத்தாள், எந்தை
சுந்தரக் கனிவாய் மின்னே, சுடர்கள்எம் இருகண் என்றார்,
கந்தனைப் பயந்தாள் ஈசன் விழிகளைப் புதைத்தாள் கையால்.

உலகங்கள் யாவும் இருண்டன. உயிர்கள் மருண்டன. மூவரும் தேவரும் அஞ்சினர். திகைத்தனர். எங்கும் இருள் மூடியது.

அருட்பெருங்கடலாகிய அரனார், உலகங்கள் படும் துன்பத்தைக் கண்டு திருவுள்ளம் இரங்கி, தமது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து அருளினார்.  பேரிருள் நீங்கி, எங்கும் ஒளி உண்டாகியது.  உலகங்களுக்கு உற்ற இடர் நீங்கியது. உயிர்கள் உவகை உற்றன. தேவரும் மூவரும் மதியணிந்த மணிகண்டரைத் துதிசெய்தனர்.  இந்த அற்புதத்தைக் கண்ட அம்பிகை அஞ்சி, கண்மலர்களை முடிய இரு கரமலர்களையும் எடுத்தனர். அச்சத்தினால் அன்னையின் திருமேனி வேர்த்தது. திருக்கரங்களின் பத்து விரல்களில் இருந்தும் கங்கை தோன்றியது. அந்தக் கங்கையின் வெள்ளம் பற்பல முகங்களாகப் பெருகி விண்ணும் மண்ணும் ஏழு தீவுகளும் எங்கும் தண்ணீர் மயமாகியது.  பிரளய காலம் போல் யாண்டும் வெள்ளம் பெருகியதால், நாரணனும், பிரமனும், இந்திரனும், ஏனைய தேவர்களும், முனிவர்களும் திருக்கயிலாய மலையைச் சார்ந்து, சிவபெருமானை வணங்கி, "தேவதேவா! மகாதேவா! கருணைக்கடலே! இப் பெரிய வெள்ளத்தினின்றும் அடியேங்களையும் உலகங்களையும் காத்தருளல் வேண்டும்" என்று வேண்டி நின்றார்கள்.

பரமகருணாநிதியாகிய பசுபதி திருவருள் சுரந்து, "அமரர்களே! அஞ்சன்மின் அருள் புரிவோம்" என்று அருளுரை கூறி, தேவியின் திருவிரல்களினின்றும் தோன்றிய கங்கை வெள்ளத்தைத் திருநோக்கம் புரிந்து, தமது சடாமுடியில் ஒரு உரோம நுனியில் தரித்தருளினார்.  அதுகண்ட மும்மூர்த்திகளும், அச்சம் அகன்று, இறைவரை வணங்கி, "எம்மையாளும் எந்தையே! எங்கள் இடரை நீக்கிய ஈசனே! கங்கையானது அம்மையின் திருக்கரத்தினின்றும் தோன்றியதாலும், தேவரீரது சடாமகுடத்தில் தரித்ததனாலும் சிறந்த புனிதம் பெற்றது. யாங்கள் புனிதம் பெறும்பொருட்டு எங்கள் இருப்பிடங்களுக்கு கங்கையில் சிறிது தந்து அருள வேண்டும்" என்று விண்ணப்பம் புரிந்தனர்.  கருணாநிதியாகிய கண்ணுதற்பெருமான் அவர்கள் இருப்பிடத்திற்கு கங்கையில் சிறிது செல்லுமாறு அருள் புரிந்தனர்.

விண்ணிற்கு அடங்காமல், வெற்புக்கு அடங்காமல்,
மண்ணிற்கு அடங்காமல் வந்தாலும் --- பெம்ணை
இடத்திலே வைத்த இறைவர் படாம
குடத்திலே கங்கைஅடங் கும்.            ---  காளமேகப் புலவர்.

உரைமாள ….... பகர்ந்த உபதேசம் ---

முருகவேள் முக்கட்பரமனுக்குப் பிரணவோபதேசம் செய்ததும், உரைமாண்டது. செயல்மாண்டது. சித்தம் அவிழ்ந்தது. அதனால் நித்தத்வம் உண்டாகியது. மனம் வாக்கு காயம் என்ற மூன்றின் தொழிற்பாடுகள் அற்றன என்கின்றார். அவை அற்ற இடத்தே ஆனந்தம் உண்டாகின்றது.

குறியைக் குறியாது குறித்து அறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவுஅற்று, உலகோடுஉரை சிந்தையும்அற்று,
அறிவுஅற்று, அறியாமையும் அற்றதுவே.       --- கந்தர் அநுபூதி.


சிறியேன் தனக்கும் உரைசெயில் சற்றும் குருத்துவம் குறையுமோ தான் ---

குமாரமூர்த்தி குன்றவில்லியாகிய கூத்தப் பெருமானுக்குச் செய்த உபதேசத்தை அடியேனுக்கு உபதேசித்தால், தேவரீரது குருபரனாம் தன்மை ஒருபோதும் குறைந்து போகாது.

சிவபெருமான் காமனை எரித்தவர்.
அடியேன் காமனால் கலங்குபவன்.
சிவபெருமான் காலனை உதைத்தவர்.
அடியேன் காலனால் கலங்குபவன்.

சிவபெருமான் ஆணவம் கன்மம் மாயை என்ற முப்புரங்களை எரித்த விமலன்.
அடியேன் மும்மலங்களால் வாடும் சமலன்.

ஆதலின், சிவமூர்த்திக்குச் செய்த உபதேசத்தை அடியேனுக்குச் செய்தால், மிகவும் நன்மை உண்டாகும்.  பசியாதவனுக்கு அன்னம் படைப்பதினும், நன்கு பசித்தவனுக்கு அன்னம் படைப்பது நன்மை என்று மிகவும் உருக்கமாக அடிகள் வேண்டுகின்றார்.

அயில் வாங்கி ---

ஐந்தாவது அடியில் சூரபன்மனைப் பிளந்த தன்மையும், ஆறாவது அடியில் மயிலின் ஆற்றலையும் கூறுகின்றனர்.


கருத்துரை


முருகா! சிவபெருமானுக்குச் செய்த உபதேசத்தை அடியேனுக்கும்  உபதேசித்து அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 15

"ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப் பெற்ற தாயாரை வைவர், சதி ஆயிரம் செய்வர், சாத்திரங்கள் ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்ய...