சிறுவாபுரி - 0739. வேல் இரண்டெனும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

வேல் இரண்டு (சிறுவை - சிறுவாபுரி)
  
முருகா!
சிவபோகத்தைத் தருகின்ற அருள்நூல்களை ஆராய்ந்து ஓதி, தேவரீரது திருவடி இணைகளை நாளும் வழிபட அருள்வாய். அடியேனது துன்பங்களைக் களைவாய்.


தான தந்தன தானன தானன
     தான தந்தன தானன தானன
     தான தந்தன தானன தானன ...... தனதான


வேலி ரண்டெனு நீள்விழி மாதர்கள்
     காத லின்பொருள் மேவின பாதகர்
     வீணில் விண்டுள நாடிய ரூமைகள் ...... விலைகூறி

வேளை யென்பதி லாவசை பேசியர்
     வேசி யென்பவ ராமிசை மோகிகள்
     மீது நெஞ்சழி யாசையி லேயுழல் ...... சிறியேனும்

மால யன்பர னாரிமை யோர்முனி
     வோர் புரந்தர னாதிய ரேதொழ
     மாத வம்பெறு தாளிணை யேதின ...... மறவாதே

வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி
     யேவி ரும்பி வினாவுட னேதொழ
     வாழ்வ ரந்தரு வாயடி யேனிடர் ...... களைவாயே

நீல சுந்தரி கோமளி யாமளி
     நாட கம்பயில் நாரணி பூரணி
     நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... யுமைகாளி

நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ
     காம சுந்தரி யேதரு பாலக
     நீர்பொ ருஞ்சடை யாரருள் தேசிக ...... முருகேச

ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற
     மாநி லங்களெ லாநிலை யேதரு
     ஆய னந்திரு வூரக மால்திரு ...... மருகோனே

ஆட கம்பயில் கோபுர மாமதி
     லால யம்பல வீதியு மேநிறை
     வான தென்சிறு வாபுரி மேவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


வேல் இரண்டு எனும் நீள்விழி மாதர்கள்,
     காதலின் பொருள் மேவின பாதகர்,
     வீணில் விண்டுஉள நாடியர், ஊமைகள், .....விலைகூறி

வேளை என்பது இலா வசை பேசியர்,
     வேசி என்பவராம் இசை மோகிகள்
     மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் ...... சிறியேனும்,

மால் அயன் பரனார் இமையோர் முனி-
     வோர் புரந்தரன் ஆதியரே தொழ,
     மாதவம் பெறு தாள்இணையே தினம் ...... மறவாதே,

வாழ்தரும் சிவ போகநல் நூல்நெறி-
     யே விரும்பி வினா உடனே தொழ
     வாழ் வரம் தருவாய், டியேன்இடர் ...... களைவாயே,

நீல சுந்தரி கோமளி யாமளி
     நாடகம் பயில் நாரணி பூரணி
     நீடு பஞ்சவி சூலினி மாலினி ...... உமை காளி

நேயர் பங்கு எழு மாதவியாள், சிவ-
     காம சுந்தரியே தரு பாலக!
     நீர் பொரும் சடையார் அருள் தேசிக! ...... முருகேச!

ஆலில் நின்று உலகோர் நிலையே பெற
     மாநிலங்கள் எலா நிலையே தரு
     ஆயன் அம்திரு ஊரக மால்திரு ...... மருகோனே!

ஆடகம் பயில் கோபுர மாமதில்
     ஆலயம் பல வீதியுமே நிறைவு
     ஆன தென் சிறுவாபுரி மேவிய ...... பெருமாளே.


பதவுரை

      நீல சுந்தரி --- நீலநிறத் திருமேனி கொண்டவள்,

     கோமளி --- அழகும் இளமையும் உடையவள்,

     யாமளி --- பச்சை நிறம் படைத்தவள்,

     நாடகம் பயில் நாரணி --- அருள் திருக்கூத்து இயற்றுபவள்,

     பூரணி --- எங்கும் நிறைவானவள்,

      நீடு பஞ்சவி --- பாண்டியன் திருமகளாக வந்தவர்,

     சூலினி --- சூலத்தை ஏந்தியவள்,

     மாலினி --- அட்சர மாலையை அணிந்தவள்,

     உமை --- உமாதேவியார்,

     காளி --- காளி தேவி,

      நேயர் பங்கு எழு மாதவியாள் --- அன்பர்களுக்கு அருந்துணையாய் இருப்பவள்,

     சிவகாம சுந்தரியே தரு பாலக ---  சிவபெருமானை மிகவும் விரும்பி உள்ள உமாதேவியார் அருளிய குழந்தையே!

      நீர் பொரும் சடையார் அருள் தேசிக --- கங்கை நீர் தங்கியுள்ள சடையை உடையவர் அருளிய குருநாதரே!

     முருக ஈச --- முருகக் கடவுளே!

      ஆலில் நின்று --- ஆல் இலையில் அறிதுயில் பொருந்தி இருந்து,

     உலகோர் நிலையே பெற --- உலகில் உள்ள உயிழர்கள் யாவும் நிலைபெற்று வாழுமாறு,

     மாநிலங்கள் எல்லாம் நிலையே தரு ஆயன் --- அவைகள் வாழிடங்களை எல்லாம் இயக்கிக் காக்கின்ற ஆயர் குலத்தில் தோன்றியவனாகிய,

     நம் திருவூரகம் மால் திருமருகோனே --- நம்மால் வணங்கப்படுகின்ற திருவூரகம் என்னும் திருத்தலத்தில் விளங்கும் திருமாலின் திருமருகரே!

     ஆடகம் பயில் கோபுரம் --- ஆடகம் என்னும் பொன்னால் ஆன கோபுரங்கள்,

     மாமதில் --- பெரிய மதில்கள்,

     ஆலயம் பல வீதியுமே நிறைவு ஆன --- திருக்கோயில்கள் பல வீதிகளிலும் நிறைந்து விளங்கும்

      தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே --- அழகிய சிறுவாபுரி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் --- வேல் இரண்டு என்னும்படியாக நீண்ட கண்களை உடைய மாதர்கள்

     காதலின் பொருள் மேவின பாதகர் --- பொருளின் மீது ஆசை கொண்ட பாதகிகள்.

      வீணில் விண்டு உள நாடியர் --- வந்தவரிடம் வீணாகப் பகைத்து அவரது உள்ளத்தை ஆராய்பவர்.

     ஊமைகள் --- வாயால் பேசா மடந்தைகள்.

     விலை கூறி --- உடலின்பத்தை விலை பேசுபவர்கள்.

     வேளை என்பது இலா வசை பேசியர் --- நேரம் என்பது இல்லாமல் எப்போதும் பழிப்புச் சொற்களைப் பகர்பவர்கள்.

      வேசி என்பவராம் --- பரத்தையர்கள் எனப்படும்

     இசையிலே மோகிகள் மீது --- இசையால் மயக்குகின்ற இவர்கள் மீது,

     நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் --- எனது நெஞ்சமானது பொருந்தி, அழிவைத் தருகின்ற அவர்களது ஆசையிலே உழலுகின்ற சிறியவன் ஆகிய நான்,

      மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே --- திருமால், பிரமதேவன், சிவபெருமானார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழுவதற்குப் பெரிய தவத்தைப் பெற்ற தேவரீரது திருவடிகளை இணைகளை நாள் தோறும் மறவாமல்,

      வாழ்தரும் சிவபோக நல்நூல் நெறியே விரும்பி --- வாழத் தகுந்த, சிவபோகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய நன்னெறியினேயே அடியேன் விரும்பி

     வினாவுடனே தொழ வாழ் வரம் தருவாய் --- ஆராய்ச்சி அறிவுடன் தொழுது வாழுகின்ற பெருவரத்தைத் தந்து அருளுவாயாக.

      அடியேன் இடர் களைவாயே --- அடியேனுடைய துன்பங்களைக் களைவாயாக.


பொழிப்புரை


     நீலநிறத் திருமேனி கொண்டவள். அழகும் இளமையும் உடையவள். பச்சை நிறம் படைத்தவள். அருள் திருக்கூத்து இயற்றுபவள். எங்கும் நிறைவானவள். பாண்டியன் திருமகளாக வந்தவள். சூலத்தை ஏந்தியவள். அட்சர மாலையை அணிந்தவள்.
உமாதேவியார் . காளி தேவி. அன்பர்களுக்கு அருந்துணையாய் இருப்பவள். சிவபெருமானை மிகவும் விரும்பி உள்ள உமாதேவியார் அருளிய குழந்தையே!

      கங்கை நீர் தங்கியுள்ள சடையை உடையவர் அருளிய குருநாதரே!

     முருகக் கடவுளே!

     ஆல் இலையில் அறிதுயில் பொருந்தி இருந்து, உலகில் உள்ள உயிழர்கள் யாவும் நிலைபெற்று வாழுமாறு, அவைகள் வாழிடங்களை எல்லாம் இயக்கிக் காக்கின்ற ஆயர் குலத்தில் தோன்றியவனாகிய, நம்மால் வணங்கப்படுகின்ற திருவூரகம் என்னும் திருத்தலத்தில் விளங்கும் திருமாலின் திருமருகரே!

         ஆடகம் என்னும் பொன்னால் ஆன கோபுரங்கள், பெரிய மதில்கள், திருக்கோயில்கள் பல வீதிகளிலும் நிறைந்து விளங்கும் அழகிய சிறுவாபுரி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         வேல் இரண்டு என்னும்படியாக நீண்ட கண்களை உடைய மாதர்கள். பொருளின் மீது ஆசை கொண்ட பாதகிகள். வந்தவரிடம் வீணாகப் பகைத்து அவரது உள்ளத்தை ஆராய்பவர். வாயால் பேசா மடந்தைகள். உடலின்பத்தை விலை பேசுபவர்கள்.
நேரம் என்பது இல்லாமல் எப்போதும் பழிப்புச் சொற்களைப் பகர்பவர்கள். பரத்தையர்கள் எனப்படும் இசையால் மயக்குகின்ற இவர்கள் மீது, எனது நெஞ்சமானது பொருந்தி, அழிவைத் தருகின்ற அவர்களது ஆசையிலே உழலுகின்ற சிறியவன் ஆகிய நான், திருமால், பிரமதேவன், சிவபெருமானார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர் தொழுவதற்குப் பெரிய தவத்தைப் பெற்ற தேவரீரது திருவடிகளை இணைகளை நாள் தோறும் மறவாமல் வாழுகின்ற வாழ்வைத் தருகின்ற, சிவபோகத்தை விளக்கும் சிறந்த நூல்கள் கூறிய நன்னெறியினேயே அடியேன் விரும்பி ஆராய்ச்சி அறிவுடன் தொழுது வாழுகின்ற பெருவரத்தைத் தந்து அருளுவாயாக. அடியேனுடைய துன்பங்களைக் களைந்து அருளுவாயாக.


விரிவுரை


வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் ---

பெண்களின் கண்களை வேலுக்கும், வாளுக்கும் ஒப்பாக நூல்கள் உரைக்கும்.

வெல்லுகின்ற தன்மை உடையதால் வேல் என்றும், ஒளி பொருந்திய தன்மை உடையதால் வாள் என்றும் சொல்லப்படும்.

பக்குவம் அடையாத உயிர்களின் அறியாமையைத் தன்னுடைய அருட்பார்வையால் வென்று பக்குவப்படுத்துவதால் வேல் என்று சொல்லப்பட்டது. அறியாமையாகிய இருளை அறுத்து, அறிவு என்னும் ஒளியைப் பரப்புவதால் வாள் எனப்பட்டது.

ஆனால், விலைமாதரின் கண்களாகிய வேல், காமுகரின் உள்ளத்தை வெல்லும் தன்மை கொண்டன. அவர் கண்களாகிய வாள், காமுகரின் உள்ளத்தைக் காம மிகுதியால் அறுத்துத் துன்புறுத்துவது.

காதலின் பொருள் மேவின பாதகர் ---

பொருள் மீது வைத்த பற்றுக் காரணமாகப் பாதஙகங்களைச் செய்பவர்கள் விலைமாதர்கள்.

வீணில் விண்டு உள நாடியர் ---

உள்ளம் என்னும் சொல் உளம் எனக் குறுகி வந்தது. தம்மை நாடி வந்தவரிடம் வீணாகப் பகைத்து விலகி இருப்பது போல் காட்டி, வந்தவருடைய உள்ளக் கருத்தை நாடுபவர்கள் விலைமாதர்கள்.

ஊமைகள் ---

வாயால் பேசாமல் விழியால் மயக்குபவர்கள்.

விலை கூறி ---

அற்றடி மயக்கிய பின்னர், தமது உடலின்பத்திற்கான விலையை வாயால் பேசுபவர்கள்.

வேளை என்பது இலா வசை பேசியர் ---

பொருள் ஒன்றே குறிக்கோள். ஆகையால் பொருள் கிடையாதபோது எப்போதும் யாரையாவது வசை பேசிக் கொண்டே இருப்பார்கள்.

வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் ---

பரத்தையர்கள் எனப்படும் இவர்கள் இனிமையான இசையாலும், இனிமையான இசை போலும் பேச்சாலும், பொருள் படைத்த ஆடவரைத் தம் மீது மோகம் கொள்ள வைப்பவர்கள். அவர்கள் மீது கொண்ட ஆசையால் காமுகரின் உள்ளமானது, அவர்களிடத்திலேயே உழன்று சுழலும். அறிவு சிறுமைப்படும்.
  
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்திரன் ஆதியரே தொழ மாதவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே ---

இறைவனுடைய திருவடிகளைத் தொழுவதற்கு, அரும் பெரும் தவங்களைப் புரிந்து பேறு பெற்றவர்கள் திருமால், பிரமதேவன், சிவபெருமானார், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானோர்.

வானோரும் ஏனோரும் வணங்கும் திருவடிகளை மறவாமல் நாள்தோறும் தொழுது வணங்குதல் வேண்டும்.  பெரியவர்கள் எல்லாம் வணங்கிப் பேறு பெற்றார்கள். சிறியவர்களாகிய நாமும் வணங்கி வழிபட்டு வந்தால், பெருநிலையைப் பெறலாம்.

வாழ்தரும் சிவபோக நல்நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ வாழ் வரம் தருவாய் ---

அப்படி வாழ்வதற்குத் தகுந்த சிவபோகத்தை அருளுகின்ற அருள் நூல்களைக் கற்று, அவை உணர்த்திய நெறியில் உள்ளத்தை வைத்து, ஆராய்ச்சி அறிவுடன் தொழுது வாழுகின்ற பெருவரத்தைத் தந்து அருளுவாயாக என்று அடிகளார் முருகப் பெருமானிடம் வரம் கேட்கின்றார்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவநூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை. சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினர்.

அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அவை உலக நூல்கள்.

அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. அவை அருள் நூல்கள்.

ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்தி பெறவேண்டும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல். இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்.

பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு.

பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக்கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று.

தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்,

மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத்தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

நெறி என்பது வழி எனப்படும். ஒரு ஊருக்குப் போகவேண்டும் என்று நடப்பவன், கண்ணில் கண்ட வழிகளில் எதுவாயினும் அதிலே நடக்கமாட்டான். எந்த வழியில் சென்றால் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரலாமோ, அந்த வழியில் தான் நடப்பான்.  அதுபோல், பரகதியை நாடி வந்த நாம், உலகில் காணப்படும் அவநெறிகளில் செல்லாது, தவநெறியில் செல்லுதல் வேண்டும். அத் தவநெறி இறைவன்பால் வேண்டிப் பெறுதல் வேண்டும்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூரில் இறைவர்பால் தவநெறியை வேண்டிப் பெற்றனர்.

"தவநெறி தனை விடு தாண்டு காலியை" என்றார் அடிகள், கூந்தலூர்த் திருப்புகழில். கால்போன வழியிலே நடக்கும் பேதையைப் போல், மனம்போன வழியிலே சென்று இடர்ப்படுவோர் மூடர்கள் ஆவார்கள்.


அடியேன் இடர் களைவாயே ---

உடலுக்கு இடர் செய்யும் நோய்கள். மனதுக்குத் துன்பத்தைத் தரும் நிகழ்வுகள். உயிருக்குத் துன்பத்தைத் தரும் பிறவி நோய். இவை எல்லாவற்றையாமு களைந்து அருளவேண்டும் என்று இறைவன்பால் அடிகளார் வேண்டுகின்றார். நாமும் அவ்வாறே வேண்டி, நெறியில் நின்று வழிபட்டு உய்வோமாக.

நம் திருவூரகம் மால் திருமருகோனே ---

சிறுவாபுரியில் பெருமாளுக்குத் திருவூரகப் பெருமாள் என்று பெயர். திருவூரகம் என்பது காஞ்சிபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில்' - என்பர். திருமழிசை யாழ்வார். திருமங்கை யாழ்வார் . இவர்களால் சொல்லப்பட்ட தலம்

குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும், ஊரகத்தும்
நின்று இருந்து, வெஃகணைக் கிடந்ததது என்ன நீர்மையே. --- திருமழிசை ஆழ்வார்.

நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!
     நிலாத்திங்கள் துண்டகத்தாய்! நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! ஒண்துறை நீர் வெஃகா உள்ளாய்!
     உள்ளுவார் உள்ளத்தாய்! உலகம் ஏத்தும்
காரகத்தாய்! கார்வானத்து உள்ளாய்! கள்வா!
     காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராது என் நெஞ்சின் உள்ளாய்!
     பெருமான்! உன் திருவடியே பேணினேனே.          --- திருமங்கை ஆழ்வார்.

தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே ---

தென் என்னும் சொல்லுக்கு அழகு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு.  வழிபடும் அடியவருக்கு அருள்ஞானச் செல்வத்தை வாரி வழங்கும் திருத்தலம் என்பதால் "தென்" என்னும் அடையைச் சிறுவாபுரிக்குச் சேர்த்து அருளினார் அடிகளார்.

தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற முருகன் திருக்கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33 - ஆவது கிலோமீட்டரில் இடதுபக்கம் மேற்கே பணுமையான வயல்களைக் கடந்து 3 கிலோமீட்டர் போனால், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென் சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.

சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி இருக்கிறார்.  இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில் செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை.

கருத்துரை

முருகா! சிவபோகத்தைத் தருகின்ற அருள்நூல்களை ஆராய்ந்து ஓதி, தேவரீரது திருவடி இணைகளை நாளும் வழிபட அருள்வாய். அடியேனது துன்பங்களைக் களைவாய்.

No comments:

Post a Comment

திரு ஏகம்ப மாலை - 14

"வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்குஉரைப்பார், தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடிஒன்று மாதுக்கு அளித்து மயங்கிடுவார்...