அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பிறவியான சடம்
(சிறுவை - சிறுவாபுரி)
முருகா!
ஞானமலர்களால் தேவரீரது
திருவடியை வழிபட்டு,
மோன நிலையை அடைந்து,
நன்மை பெற அருள்வாய்
தனன
தான தனன தந்த
தனன
தான தனன தந்த
தனன தான தனன தந்த ...... தனதான
பிறவி
யான சடமி றங்கி
வழியி
லாத துறைசெ றிந்து
பிணிக ளான துயரு ழன்று ...... தடுமாறிப்
பெருகு
தீய வினையி னொந்து
கதிக டோறு மலைபொ ருந்தி
பிடிப டாத ஜனன நம்பி ...... யழியாதே
நறைவி
ழாத மலர்மு கந்த
வரிய மோன வழிதி றந்த
நளின பாத மெனது சிந்தை ...... யகலாதே
நரர்சு
ராதி பரும்வ ணங்கு
மினிய
சேவை தனைவி ரும்பி
நலன தாக அடிய னென்று ...... பெறுவேனோ
பொறிவ
ழாத முனிவர் தங்கள்
நெறிவ
ழாத பிலனு ழன்று
பொருநி சாச ரனைநி னைந்து ...... வினைநாடிப்
பொருவி
லாம லருள்பு ரிந்து
மயிலி
னேறி நொடியில் வந்து
புளக மேவ தமிழ்பு னைந்த ...... முருகோனே
சிறுவ
ராகி யிருவ ரந்த கரிப
தாதி கொடுபொ ருஞ்சொல்
சிலையி ராம னுடனெ திர்ந்து ...... சமராடிச்
செயம
தான நகர மர்ந்த
அளகை போல வளமி குந்த
சிறுவை மேவி வரமி குந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பிறவி
ஆன சடம் இறங்கி,
வழி
இலாத துறை செறிந்து
பிணிகள் ஆன துயர் உழன்று, ...... தடுமாறி,
பெருகு
தீய வினையின் நொந்து,
கதிகள்
தோறும் அலை பொருந்தி,
பிடி படாத ஜனனம் நம்பி ...... அழியாதே,
நறை
விழாத மலர் முகந்த
அரிய மோன வழி திறந்த
நளின பாதம் எனது சிந்தை ...... அகலாதே,
நரர்
சுர அதிபரும் வணங்கும்
இனிய
சேவை தனை விரும்பி
நலன் அதுஆக அடியன் என்று ...... பெறுவேனோ?
பொறி
வழாத முனிவர் தங்கள்
நெறி
வழாத பிலன் உழன்று
பொரு நிசாசரனை நினைந்து, ...... வினைநாடி,
பொரு
இலாமல் அருள் புரிந்து,
மயிலின்
ஏறி நொடியில் வந்து,
புளகம் மேவ தமிழ் புனைந்த ...... முருகோனே!
சிறுவர்
ஆகி இருவர் அந்த கரி ப-
தாதி கொடு பொரும் சொல்
சிலை இராமன் உடன் எதிர்ந்து ...... சமர் ஆடிச்
செயம்
அதுஆன நகர் அமர்ந்த,
அளகை போல வளம் மிகுந்த
சிறுவை மேவி, வரம் மிகுந்த ...... பெருமாளே.
பதவுரை
பொறி வழாத முனிவர் --- ஐம்பொறிகளும் நல்
நெறியில் வழுவாமல் ஒழுகி வந்த நக்கீரதேவர் என்னும் முனிவர்,
தங்கள் நெறிவழாத பிலன்
உழன்று
--- தமது அன்றாட வழிபாடுகளை, குகையில்
அடைபட்டு இருந்தபோதும் தவறாமல் நடத்தி மனவருத்தமுற்று,
பொரு நிசாசரனை
நினைந்து வினை நாடி --- குகையில் அகப்பட்டவர்களை எல்லாம் கொல்லவிருந்த அரக்கனை நினைந்து, உய்யும் வழியை நாடி
இருந்தபோது,
பொரு இலாமல் அருள் புரிந்து --- ஒப்பற்ற அருளைப்
புரிந்து,
மயிலின் ஏறி நொடியில் வந்து --- மயிலின்
மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து,
புளகம் மேவ தமிழ்
புனைந்த முருகோனே --- மனம் மிக மகிழுமாறு நக்கீரதேவர் பாடி அருளிய திருமுருகாற்றுப்படை
என்னும் தமிழ் மாலையைப் புனைந்த முருகப் பெருமானே!
அந்த சிறுவர் ஆகி இருவர் --- இராம பிரானின்
மைந்தர்களாகிய லவ, குசர் என்னும் அந்த இருவரும்
கரி பதாதி கொடு பொரும் சொல்
--- யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, போரில் வீர வசனங்களுடன்
சிலை இராமனுடன் எதிர்ந்து
சமர் ஆடி
--- வில் ஏந்திய இராம பிரானுடன் எதிர்த்துப் போர் புரிந்து,
செயம் அதான நகர்
அமர்ந்த அளகை போல வளமிகுந்த --- குபேரப் பட்டிணம் போல வளம் மிக்க, வெற்றி பெற்ற
நகரமாகிய
சிறுவை மேவி வரம் மிகுந்த
பெருமாளே ---
சிறுவை என்னும் சிறுவாபுரியில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, வரங்களை நிரம்பத் தரும் பெருமையில்
மிக்கவரே!
பிறவியான சடம் இறங்கி --- இந்தப்
பிறப்புக்கு என்று விதிக்கப்பட்ட உடலிலே புகுந்து,
வழி இலாத துறை
செறிந்து
--- நல்வழி அல்லாத வழிகளிலே செறிந்து இருந்து,
பிணிகள் ஆன துயர் உழன்று
தடுமாறி
--- நோய் முதலிய துயரங்களில் உழன்று மனமானது தடுமாறி,
பெருகு தீய வினையின்
நொந்து
--- பெருகும் தீய வினைகளினால் நொந்து,
கதிகள் தோறும்
அலை பொருந்தி
--- அதனால் விளையும் பிறவிகள் தோறும் பொருந்தி அலைந்து,
பிடி படாத ஜனன நம்பி அழியாதே --- உண்மைத் தன்மை
ஏதும் விளங்காத இந்தப் பிறவியையே நம்பி அழியாமல்,
நறை விழாத மலர் முகந்த --- தேன் நீங்காத
மலர்கள் நிரம்பியதும்,
அரிய மோன வழி திறந்த --- அருமையான மோன
நெறியைக் காட்டுகின்ற
நளின பாதம் எனது
சிந்தை அகலாதே
--- தேவரீரது பாதகமலங்கள் எனது மனத்தை விட்டு நீங்காமல்படிக்கு,
நரர் சுராதிபரும்
வணங்கும் இனிய சேவை தனை விரும்பி --- மனிதர்களும், தேவர்கள் தலைவர்களும் வணங்குகின்ற
இனிமையான உமது திருக்காட்சியைக் கண்டு வணங்குவதை விரும்பி
நலன் அது ஆக அடியன் என்று
பெறுவேனோ
--- நன்மை விளையும்படியான நிலையை அடியேன் பெறுவது என்று கூடுமோ?
பொழிப்புரை
ஐம்பொறிகளும் நல் நெறியில் வழுவாமல் ஒழுகி
வந்த நக்கீரதேவர் என்னும் முனிவர்,
தமது
அன்றாட வழிபாடுகளை, குகையில்
அடைபட்டு இருந்தபோதும் தவறாமல் நடத்தி மனவருத்தமுற்று, அடைபட்டவர்களை எல்லாம் கொல்ல இருந்த அரக்கனை
நினைந்து, உய்யும் வழியை நாடி
இருந்தபோது, ஒப்பற்ற
அருளைப் புரிந்து, மயிலின் மீது ஏறி ஒரு நொடிப் பொழுதில் வந்து, மனம் மிக மகிழ்ந்து
நக்கீரதேவர் பாடி அருளிய திருமுருகாற்றுப்படை என்னும் தமிழ் மாலையைப் புனைந்த முருகப்
பெருமானே!
இராமபிரானின் மைந்தர்களாகிய லவ, குசர் என்னும் அந்த இருவரும் யானைப்படை, காலாட்படை இவற்றைக் கொண்டு, வீர வசனங்களுடன் வில் ஏந்திய இராமபிரானுடன் எதிர்த்துப் போர் புரிந்து, குபேரப்பட்டிணம் போல
வளம் மிக்க, வெற்றி பெற்ற
நகரமாகிய சிறுவை என்னும் சிறுவாபுரியில்
திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருந்து, வரங்களை
நிரம்பத் தரும் பெருமையில் மிக்கவரே!
இந்தப் பிறப்புக்கு என்று விதிக்கப்பட்ட
உடலிலே அடியேன் புகுந்து, நல்வழி அல்லாத
வழிகளிலே செறிந்து இருந்து, நோய் முதலிய துயரங்களில்
உழன்று மனமானது தடுமாறி, பெருகும் தீய
வினைகளினால் நொந்து, அதனால் விளையும் பிறவிகள் தோறும் பொருந்தி அலைந்து, உண்மைத் தன்மை ஏதும் விளங்காத
இந்தப் பிறவியையே நம்பி அழியாமல்,
தேன்
நீங்காத மலர்கள் நிரம்பியதும், அருமையான மோன
நெறியைக் காட்டுகின்ற தேவரீரது பாதகமலங்கள்
எனது மனத்தை விட்டு நீங்காமல்படிக்கு, மனிதர்களும், தேவர்கள் தலைவர்களும் வணங்குகின்ற
இனிமையான உமது திருக்காட்சியைக் கண்டு வணங்குவதை விரும்பி நன்மை
விளையும்படியான நிலையை அடியேன் பெறுவது என்று கூடுமோ?
விரிவுரை
பிறவியான
சடம் இறங்கி
---
பிறப்புக்கு
என்று விதிக்கப்பட்ட உடலிலே உயிரானது எவ்வாறு இறங்குகின்றது என்பதைப் பார்ப்போம்.
இறைவன்
மேற்பொருள் ஆவான். இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு
நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெரு நிறைவை ஓர் எடுத்துக்காட்டின் மூலம்
அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது
வானமே. வானம் தான் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி
நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும்,
விண்மீன்களையும்
தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே
அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான்.
எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.
இடைப்பொருள்
என்பது உயிரைக் குறிக்கும். உயிரை வடமொழியில்
ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள்
எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கி இருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி
நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம். உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம்.
உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித்
துன்புறும். பின் அவற்றின்
பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு
மேற்பொருள், கீழ்ப்பொருள் ஆகிய
இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும்
இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப்பொருள் ஆயிற்று.
கீழ்ப்பொருள்கள்
எவை? மேற்பொருளாகிய
கடவுளும், இடைப்பொருளாகிய
உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை.
இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக்
கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு
அழுக்கு என்று பொருள்.
கடவுளும்
உயிரும் சித்து என்னும் அறிவுப் பொருள் வகையில் ஓர் இனம் என்றாலும் அறிவு நிலையில்
தம்முள் வேறுபட்டன ஆகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு.
கடவுளது அறிவு தானே அறிவது. உயிரினது அறிவு அறிவித்தால்
மட்டுமே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது
அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று
அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. எனவே, இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும்
உயிரும் ஒரு நிகரன அல்ல.
கடவுட்பொருள்
மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க
உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று. இதற்கு ஓர்
எடுத்துக்காட்டுக் கூறலாம். கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர்
முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான
உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த
உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள். கடல் வெளியைப் போன்றவன்
இறைவன். மலங்கள் இறைவனைப் பற்ற மாட்டாமல் உயிரையே பற்றியிருப்பதற்கான காரணத்தை
இவ்வுவமையிலிருந்து ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.
இறைவன்
இல்லாத இடம் எதுவும் இல்லை. பார்க்குமிடம் எங்கும் நீக்கமற்ற நிறைகின்ற பரிபூரணப்
பொருள் அவன். அவன் எங்கும் இருக்கிறான் என்ற எண்ணம் நமக்கு இருப்பதில்லை. அந்த
எண்ணம் இருந்தால் நாம் தவறு செய்வோமா? தீமை
செய்வோமா? "எங்கும்
உளன்ஒருவன் காணும் கொல் என்று அஞ்சி
அங்கம்
குலைவது அறிவு" என்றார் குமரகுருபர
அடிகள். இந்த எண்ணம் எழவொட்டாதபாடி ஆன்மாவினது அறிவைத் தடுத்து நிற்பதாகிய பொருள்
ஒன்று உண்டு. அதுவே ஆணவ மலம் எனப்படுகிறது. எல்லா உயிர்களும் முதலிலிருந்தே ஆணவ
மலத்தை உடையவாயின. ஆணவம் நீரை மூடும் பாசி போலவும், கண்ணை மறைக்கும் இருள் போலவும், உயிர்களின் அறிவை மறைத்து நிற்பது.
கடவுளுக்கு அடுத்த படியாகப் பெரும் பொருளாய் நிற்கும் உயிரைத் தனது சத்தியால்
சிறுமைப்படுத்தி நிற்பது ஆணவ மலமேயாகும். உயிர் அடையும் எல்லாப்
பெருங்கேட்டிற்கும் இது மூலம் ஆதலின் மூலமலம் எனப்படும். உயிர் என்று உண்டோ அன்றே
அதனோடு இயற்கையாய்க் கலந்து நிற்றலின் சகச மலம் எனப்படும். கண்ணை மறைக்கும் புற
இருள் போல இது அறிவை மறைக்கும் அக இருள் ஆகும். அது பற்றி இருள் மலம் எனப்படும்.
மலம் என்று சொன்னாலே அது ஆணவ மலத்தையே குறிப்பதாகும்.
ஆணவ
மலமாகிய இருளை நீக்கும் விளக்குப் போன்றது மாயை. மாயையே உயிருக்கு உடம்பாகவும்
உடம்பில் உள்ள கருவிகளாகவும் அமைந்து. ஆணவ இருளைச் சிறிது நீக்கி அறிவை
விளக்குகிறது. மாயையின் சேர்க்கையால் ஆணவத்தின் சத்தி சிறிது மடங்கிய போது ஆன்மா
நுண்ணறிவைப் பெறாது பருமையான அறிவையே பெறுகிறது. அகநோக்கு இன்றிப் புறநோக்கையே
உடையதாகிறது. அதாவது உள் நோக்கித் தன்னையும் தன்னுள்ளே இருக்கும் தலைவனாகிய
இறைவனையும் உணரமாட்டாமல், புறத்தே உள்ள உலகப்
பொருள்களையே நோக்கி நிற்கிறது. இந்நிலையில் ஆணவ மலம்
திரிபுணர்வைத் தருகிறது. திரிபுணர்வு எனினும், விபரீத அறிவு எனினும், மயக்கவுணர்வு எனினும் ஒன்றே, இத்திரிபுணர்வால் ஆன்மா தன்னையே
எல்லாவற்றிற்கும் வினைமுதலாகக் கருதி நான் நான் என்று முனைத்து எழுகிறது. அம்
முனைப்போடு செய்யும் செயலே வினை அல்லது கன்மம் எனப்படும்.
மாயை
உடம்பாயும் உலகப் பொருள்களாயும் நின்று உயிரைக் கவர்ந்து மயக்குகிறது. கன்மம் சடமாகிய
அவ்வுலகப் பொருள்களை உயிரோடு கூட்டி இன்பத் துன்பங்களைத் தந்து மயக்குகிறது. ஆணவம்
யான் எனது என்னும் பற்றினை உண்டாக்கி உலக நுகர்ச்சியில் ஈடுபடுத்தி மயக்குகிறது.
இவ்வாறு இவை மூன்றும் உயிரறிவை உலகத்தோடு பிணிக்கின்றன. இது பற்றியே இவை பாசம்
(கட்டு) என்றும், தளை என்றும்
கூறப்படுகின்றன. இம் மூன்றனுள் ஆணவம் என்பது உயிருக்குப் பகையாகிய கட்டு, மாயையும் கன்மமும் அப்படியல்ல. அவிழ்க்க
முடியாத ஒரு கட்டினை எப்படி அவிழ்ப்பது? அதற்கு
ஒரு வழி உண்டு. அதனோடு வேறு சில கட்டுக்களை இட்டு இறுக்கினால் அம் முதற்கட்டு
நெகிழ்ந்துவிடும். அதுபோல, உயிரைப் பிணித்துள்ள
ஆணவ மலமாகிய வலிய கட்டினை நெகிழ்விப்பதற்காகவே இறைவன் மாயை, கன்மங்கள் என்று வேறு இரண்டு கட்டுக்களை
உயிரோடு சேர்ப்பிக்கின்றான். எனவே ஆணவம் உயிருக்கு முற்கட்டும், மாயை கன்மங்கள் பிற்கட்டும் ஆகின்றன.
உலகில்
உள்ள சடப் பொருள்கள் அனைத்தும் அழிந்துபோகும் இயல்பினை உடையன. மாயையில் இருந்தே
உலகத்தில் உள்ள சடப்பொருள்கள் அனைத்தும் தோற்றுவிக்கப்பட்டன. சடத்தில் இருந்து
சடம்தான் தோன்றும். சடப்பொருள்களுக்குத் தானே இயங்கும் ஆற்றல் இல்லை. உயிருக்கு
அறியாமையைச் செய்யும் ஒரு பொருள் தானே சென்று எதையும் பற்ற முடியாது.
எனவே, இறைவன் தனது பெருங்கருணையால் உயிர்களுக்கு
உடம்பைப் படைத்து அளிக்கின்றான். உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு உடையனவாகப்
படைக்கப்பட்டுள்ளன.
இதனை, "கந்தர் கலிவெண்பா" என்னும் அருள்நூலில்
குமரகுருபர அடிகள் காட்டி இருக்குமாறு காண்க...
--- ஏகத்து
உருவும், அருவும், உருஅருவும் ஆகி,
பருவ
வடிவம் பலவாய், - இருள் மலத்துள்
மோகம்
உறும் பல்லுயிர்க்கு முத்தி அளித்தற்கு, மல
பாகம்
உறவே கடைக்கண் பாலித்து, - தேகம்உறத்
தந்த
அருஉருவம் சார்ந்த விந்து மோகினி மான்
பெந்தம்
உறவே பிணிப்பித்து, - மந்திரமுதல்
ஆறுஅத்துவாவும், அண்டத்துஆர்ந்த அத்துவாக்களும், முற்
கூறத்
தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து,
– மாறிவரும்
ஈர்இரண்டு
தோற்றத்து, எழுபிறப்புள், யோனி எண்பான்
ஆரவந்த
நான்கு நூறுஆயிரத்துள், - தீர்வுஅரிய
கன்மத்துக்கு
ஈடாய், கறங்கும் சகடமும்
போல்
சென்மித்து, உழலத் திரோதித்து, - ---- கந்தர் கலிவெண்பா.
ஒன்றாகிய
பரமசிவம் (ஆன்மாக்களுக்கு அருள் புரியும் பொருட்டுத் தமது மேனிலையில் இருந்து
கீழிறங்கி) அருவத் திருமேனியாயும், அருவுருவத் திருமேனியாயும், உருவத் திருமேனியாயும், அடியார்களின் பக்குவ
நிலைக்கு ஏற்ப, அவ்வக் காலங்களில்
கொள்ளப் பெறும் திருவுருவங்கள் (மகேசுர வடிவங்கள்) பலவாயும் நின்று, அறியாமையை
உண்டாக்கும் ஆணவ மலத்துள் அழுந்தி மயங்கிக் கிடக்கின்ற பல உயிர்களுக்கு மோட்சம்
கொடுத்து அருளும் பொருட்டு அவ் உயிர்களின் ஆணவ மல நீக்கத்திற்கான பக்குவம் அடைய
கருணை பொருந்திய திருக்கடைக்கண் நோக்கத்தை
அவ் உயிர்களின் மேல் செலுத்தி அருளி, அவ்
உயிர்கள் தூல, சூக்கும உடலைப்
பொருந்தும்படி தருவதற்குக் காரணமான அருவுருவமுடைய சதாசிவமூர்த்தி, தொழில்படுத்த அடுத்து நின்ற
மூலப்பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்தமாயை என்ற மூன்றினோடு அவ்வந்நிலைக்கு
ஏற்பப் பற்று உண்டாகும்படி இறுகக் கட்டுவித்து, பிண்டத்தில்
(சரீரத்தில்) பொருந்திய மந்திரம்,
பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்ற ஆறு அத்துவாக்களையும், அண்டத்தில் (உலகத்தில்) பொருந்திய ஆறு
அத்துவாக்களையும், முன்னே சொல்லப்பட்ட கட்டில் ஒன்றுபடச்
சேர்ப்பித்து, ஒன்று ஒன்றாக மாறி மாறி வருகின்ற
நால்வகைத் தோற்றத்தினை உடைய, ஏழுவகைப் பிறப்பினுள், எண்பத்து நான்கு
இலட்சம் யோனி பேதமுடைய உயிர்களில்,
அனுபவித்தால்
அன்றி ஒழித்தற்கு அருமையான
இருவினைகளுக்குத் தக்கபடி, காற்றாடியும், வண்டிச் சக்கரமும் போல, பிறந்து பிறந்து உழலும்படி செய்து, பின்பு தத்தம் நிலைகளை அறியா வண்ணம்
மறைப்பை விளைவித்து அருள்கின்றது.
ஈர்
இரண்டு தோற்றம் - அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்ற நால் வகைத் தோற்றம். அவையாவன :-
அண்டசம் - முட்டையில்
தோன்றுவன. (அண்டம் - முட்டை, சம் - பிறந்தது) அவை
பறவை, பல்லி, பாம்பு, மீன், தவளை முதலியன.
சுவேதசம் - வேர்வையில்
தோன்றுவன. (சுவேதம் - வியர்வை) அவை பேன், கிருமி, கீடம், விட்டில் முதலியன.
உற்பிச்சம் - வித்து. வேர், கிழங்கு
முதலியவற்றை மேல் பிளந்து தோன்றுவன (உத்பித் - மேல்பிளந்து) அவை மரம், செடி, கொடி, புல், பூண்டு முதலியன.
சராயுசம், கருப்பையிலே தோன்றுவன (சராயு -
கருப்பாசயப்பை) இவை தேவர், மனிதர், நாற்கால் விலங்குகள் முதலியன.
எழு
பிறப்பு
- தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற எழுவகைப் பிறப்பு. இவற்றுள் முதல் ஆறும் இயங்கியல்பொருள். (இயங்குதிணை, சங்கமம், சரம்) எனவும், இறுதியில் நின்ற
ஒன்று நிலையியல் பொருள் (நிலைத்திணைப் பொருள், தாவரம், அசரம்) எனவும் பெயர்
பெறும்.
ஆரவந்த
என்பது, எண்பான் என்பதனோடு
நான்கு நூறு ஆயிரம் என்பதனை சேர்ப்பதற்கு வந்தது. யோனி எண்பான் ஆரவந்த நான்கு நூறு
ஆயிரம் - 84 இலட்சம் யோனி
போதங்கள். உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்து
அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் என்பது திருஞானசம்பந்தப் பெருமானார்
திருவீழிமிழலைத் தேவாரத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துவது.
யோனி - கருவேறுபாடுகள்.
தேவர் - 14 இலட்சம்,
மக்கள் - 9 இலட்சம்,
விலங்கு - 10 இலட்சம்,
பறவை - 10 இலட்சம்,
ஊர்வன - 11 இலட்சம்,
நீர்வாழ்வன – 10 இலட்சம்,
தாவரம் - 20 இலட்சம்,
ஆக, 84 இலட்சம் பேதம் ஆகும், இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானிடம்
நீர்பறவை நாற்கால் ஒர் பப்பத்தாம் -
சீரிய
பந்தமாம் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில் தாவரம் நால்ஐந்து.
என்னும்
பழம் பாடலால் அறியலாம்.
கன்மம்
- இது ஆன்மாவினால் மன வாக்குக் காயங்களினால் அறிந்தும் அறியாலும் செய்யப்படும்
நல்வினை தீவினைகள். புண்ணிய பாவங்களான சுகதுக்கங்களை உடையது. நெல்லுக்குள் உமிபோல
ஆன்மாவைப் பற்றி நிற்பதாய் இருப்பது. இது, நல்வினை, தீவினைகளாகிய ஆகாமியமும், பின்பு புண்ணிய பாவங்களாகிய சஞ்சிதமும், அதன்பின்பு இன்ப துன்பங்களாக வரும் பிராரத்துவமும்
என மூவகை ஆகும். இது காரியப்படும் போது ஆயுளும், போகமும், சாதியுமாக நின்று காரியப்படும். அது
தெய்விக கன்மம், பௌதிக கன்மம், ஆன்மிக கன்மமாகவும் வரும். ஆன்மாக்களுக்கு இவையெல்லாம் ஊழ்வினையாக
ஆர்ச்சித்த ஒழுங்கிலே வரும். அன்றியும் வன்மை மென்மைகளுக்கு ஈடாக மாறியும் வரும்.
பின்வரும்
மேற்கோள் பாடல்களின் கருத்தை எண்ணுக.
"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருகம்
ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய்
மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுரராகி
முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ
நின்றஇத் தாவர் சங்கமத்துள்
எல்லாப்
பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்"
---
மணிவாசகம்.
அருள்பழுத்து
அளிந்த கருணை வான்கனி,
ஆரா
இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு
அமிர்த வாரி, நெடுநிலை
மாடக்
கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு
கிழிக்கும் கழுமல வாண!நின்
வழுவாக்
காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன்
இருந்த பரம யோகி!
யான்ஒன்று
உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில
லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந்
தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல
யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும்
யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர்
ஆகியும், தந்தையர் ஆகியும்
வந்து
இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர்
ஆகியும், தாயர் ஆகியும்
வந்து
இராததும் இல்லை, முந்து
பிறவா
நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா
நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத்
தின்னா உயிர்களும் இல்லை,
யான்
அவை
தம்மைத்
தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே
காலமும் சென்றது, யான்இதன்மேல்இனி
இளைக்குமாறு
இலனே, நாயேன்,
நந்தாச்
சோதி!நின் அஞ்செழுத்து நவிலும்
தந்திரம்
பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப்
பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றது
ஓர் பொழுதின் இட்டது மலரா,
சொன்னது
மந்திரம் ஆக, என்னையும்
இடர்ப்பிறப்பு
இறப்புஎனும் இரண்டின்
கடல்
படா வகை காத்தல்நின் கடனே. ---பதினோராம் திருமுறை.
வழி
இலாத துறை செறிந்து ---
வழி
- நெறி. வேதநெறி.
துறை
- சைவத் துறை.
செறிதல்
- நெருங்குதல், இறுகுதல், அடங்குதல், பொருந்தி
இருத்தல்.
நன்மை
பெருகு அருள் நெறியில் ஒழுகாமல், நன்மை போலக் காட்டி, இறுதியில் துன்பத்தையே
தருகின்ற அவநெறிகளில் பொருந்தி இருந்து வாழ்நாளை வறிதாகக் கழித்தல் கூடாது.
புண்ணியம்
ஆம்,
பாவம்போம், போனநாள் செய்த அவை
மண்ணில்
பிறந்தார்க்கு வைத்தபொருள், - எண்ணுங்கால்
ஈது
ஒழிய வேறு இல்லை, எச்சமயத்தோர் சொல்லும்
தீது
ஒழிய நன்மை செயல்' --- ஔவையார்.
பிணிகள்
ஆன துயர் உழன்று தடுமாறி ---
தீவினைகளை
முக்கரணங்களாலும் இழைப்பதால், அவற்றின் பயனாக, உளத் துன்பமும், உடல் துன்பமும்
விளைக்கும் நோய்கள் மிகுக்கும். பிணித்து இருப்பதால் பிணி எனப்பட்டது. பிணிப்பு
எப்போது நீங்கும் என்றால், வினையானது கழிந்தால் நீங்கும்.
பெருகு
தீய வினையின் நொந்து ---
தீய
வினைகளைப் புரிவதில் மனத்தைச் செறித்துக் கொண்ட ஒருவனுக்கு, அறிவு மயக்கம் காரணமாக மேலும் மேலும்
தீவினைகளையே பயிலத் தோன்றும். அதில் இருந்து விடுபட வழி தோன்றாதவாறு காம, வெகுளி, மயக்கங்கள் ஆகிய
முக்குற்றங்கள் தடுக்கும். தீவினைகளின் பயனாக மனம் நொந்து வாட்டமுறும்.
கதிகள்
தோறும் அலை பொருந்தி ---
உயிர்கள்
அடைகின்ற நிலைகள் என்னும் கதிகள், மனித கதி, திரியஞ்ச கதி, நரகதி, தேவ கதி, பர கதி என ஐந்து வகைப்படும்.
இதில்
மேலானது பரகதி ஆகும். இந்த நிலைக்குச் சென்ற உயிர் மீளவும் பிறவிக்கு வராது. மற்ற
கதிகளில் பொருந்திய உயிர் மீளப் பிறக்கும். பல பிறவிகளை அடைந்து அல்லல் உறும்.
நறை
விழாத மலர் முகந்த, அரிய மோன வழி திறந்த, நளின பாதம் எனது
சிந்தை அகலாதே
---
இறைவன்
திருவடியை அடியவர்களும் வானவர்களும் எப்போதும் அன்றலர்ந்த மலர் தூவி வழிபட்டுக்
கொண்டு இருப்பார்கள். அந்த மலர்களில் தேன் நிறைந்து மடம் பொருந்தி இருக்கும்.
நாளடைவில் அவை வாடி விடும். நறை விழுந்த மலர்கள் அவை.
நறை
விழாத மலர் என்பது ஞானமலர்களைக் குறிக்கும். அந்த மலர்களில் எப்போதும் மணம் மாறாது
இருக்கும்.
ஆனந்தத் தேன் சொரியும்.
அட்ட
புட்பங்கள் என்று அவற்றைக் குறிப்பர் அருளாளர். அப்பர் பெருமான் அட்டபுட்பம்
குறித்து அரு திருப்பதிகத்தையே அருளி உள்ளார்.
திருச்சிற்றம்பலம்
எட்டு
நாள்மலர் கொண்டுஅவன் சேவடி
மட்டு
அலர்இடு வார்வினை மாயுமால்,
கட்டித்
தேன்கலந்து அன்ன கெடிலவீ
ரட்ட
னார்அடி சேரும் அவருக்கே. ---
1.
கன்னல்
கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாள் மலர்களாகிய தேன் அவிழும்
மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும் .
நீளமா
நினைந்து எண்மலர் இட்டவர்
கோள
வல்வினையும் குறைவிப்பரால்,
வாள
மால்இழி யுங்கெடி லக்கரை
வேளி
சூழ்ந்த அழகாய வீரட்டரே. ---
2.
வட்டமாகவும்
, பெரிதாகவும் ஓடுகின்ற
கெடில நதிக்கரை வேலிபோல் சூழ்ந்த வீரட்டத்திறைவர் , தம்மை இடை விடாது நினைந்து எண்வகை மலர்களால்
வழிபடுபவர்களின் கொடிய வல்வினையை நீக்குவர் .
கள்ளின்
நாள்மலர் ஓர்இரு நான்குகொண்டு
உள்குவார்
அவர் வல்வினை ஓட்டுவார்,
தெள்ளு
நீர்வயல் பாய்கெடி லக்கரை
வெள்ளை
நீறு அணி மேனிவீ ரட்டரே. ---
3.
தெள்ளிய
நீர் வயலில் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளி இருப்பவராகிய
வெண்ணறு அணிந்த திருமேனி உடைய பெருமான் , தேன்
ஒழுகுகின்ற புதிய எட்டு மலர்களைக் கொண்டு அருச்சித்துத் தம்மை உள்குவார்களுடைய வல்வினைகளை
ஓட்டுவார் .
பூங்கொத்து
ஆயின மூன்றொடு ஒர்ஐந்து இட்டு
வாங்கி
நின்றவர் வல்வினை ஓட்டுவார்,
வீங்கு
தண்புனல் பாய்கெடி லக்கரை
வேங்கைத்
தோல்உடை ஆடைவீ ரட்டரே. --- 4.
செறிந்த
குளிர் நீர் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவராகிய
புலித்தோலை ஆடையாக உடுத்த பெருமானே , எட்டுவகைப்பட்ட
பூங்கொத்துக்களை இட்டு வணங்கிநிற்கும் அடியார்களுடைய வல் வினைகளை ஓட்டுவார் .
தேனப்
போதுகள் மூன்றொடு ஓர்ஐந்துடன்
தானப்
போது இடுவார் வினை தீர்ப்பவர்,
மீனத்
தண்புனல் பாய்கெடி லக்கரை
வேனல்
ஆனை உரித்த வீரட்டரே. ---
5.
மீன்களை
உடைய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக் கரையில் உள்ள திருவதிகைவீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும்
, ஆனை உரித்தவருமாகிய பெருமான்
, தேன் உடைய அழகிய போதுகளாகிய
எட்டுவகைப்பட்ட மணமலர்களை இட்டு வணங்குவார் வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .
ஏழித்
தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித்
தொல்வினை ஓட அகற்றுவார்,
பாழித்
தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத்தின்
உரி போர்த்த வீரட்டரே. ---
6.
வன்மை
உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும்
, வேழத்தின் உரியைப் போர்த்தவருமாகிய
பெருமானே , இதழி (ஏழி)யாகிய கொன்றை
மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி
நீக்குவார் .
உரைசெய்
நூல்வழி ஒண்மலர் எட்டு இடத்
திரைகள்
போல்வரு வல்வினை தீர்ப்பரால்,
வரைகள்
வந்து இழியும் கெடி லக்கரை
விரைகள்
சூழ்ந்த அழகாய வீரட்டரே. ---
7.
மலைகளினின்று
வந்து இழிவதாகிய கெடில நதியின் கரையில் உள்ளதும் , நறுமணஞ் சூழ்ந்து எழில் பெற்றதுமாகிய திருவதிகைவீரட்டத்தில்
எழுந்தருளியிருக்கும் பெருமானே ,
ஆகம
நூல்கள் உரைக்கின்ற நெறியின்படி எட்டு வகைப்பட்ட ஒளியுடைய மலர்களை இட்டு வணங்கும் அடியார்களின்
அலைகள்போல் வருகின்ற வல்வினைகளைத் தீர்ப்பவர் ஆவர் .
ஓலி
வண்டுஅறை ஒண்மலர் எட்டினால்
காலை
ஏத்த வினையைக் கழிப்பரால்,
ஆலி
வந்து இழியும் கெடிலக் கரை
வேலி
சூழ்ந்த அழகாய வீரட்டரே. ---
8.
மழைநீர்
வந்து இழிகின்ற கெடில நதியின் கரையில் உள்ளதும் , வேலிகள் சூழ்ந்து எழில் உடையதுமாகிய திருவதிகை
வீரட்டத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே , ஓலமிடும் வண்டுகள் ஒலிக்கும் எட்டுவகைப்பட்ட
மலர்களால் தம்மைக் காலத்தேவந்து வழிபடுவார்களின் வினையைத் தீர்ப்பவர் .
தாரித்து
உள்ளித் தடமலர் எட்டினால்
பாரித்து
ஏத்த வல்லார் வினை பாற்றுவார்,
மூரித்
தெண்திரை பாய்கெடி லக்கரை
வேரிச்
செஞ்சடை வேய்ந்தவீ ரட்டரே. ---
9.
வலிமை
உடையதாய்த் தெளிந்துவரும் அலைகளை உடையதாய்ப் பாய்கின்ற கெடிலநதியின் கரையின்கண் உள்ள
வீரட்டத்தில் எழுந்தருளியுள்ள மணம் வீசும் செஞ்சடையை நன்கு கட்டிய பெருமான் , மனத்தே இறைவன் திருவுருவைத்தாங்கிச் சிந்தித்து
எட்டு வகைப்பட்ட மலர்களால் ஏத்தும் வல்லமை உடைய அடியார்களின் வினைகளைக் கெடுப்பார்
.
அட்ட
புட்பம் அவைகொளும் ஆறுகொண்டு,
அட்ட
மூர்த்தி அனாதி தன் பால் அணைந்து,
அட்டுமாறு
செய்கிற்ப அதிகைவீ
ரட்டனார்
அடி சேரும் அவர்களே. ---
10.
திருவதிகைவீரட்டனார்
திருவடி சேரும் அடியார்கள் , அட்டபுட்பங்களை விதிமுறைப்படி
கொண்டு அட்ட மூர்த்தியும் , ஆதியற்றவரும் ஆகிய பெருமானின்பால்
அணைந்து பொருந்துமாறு வழிபாடு செய்யும் திறம் உடையவர் ஆவர் .
திருச்சிற்றம்பலம்
நாள்
மலர் என்றது அன்று அலர்ந்த மலர்களை. எட்டு நாள் மலர் என்றது அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்
எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன :- புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள். இவை
புறப்பூசைக்கு அமைந்தவை.
பூசையால்
"பவன்" முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபும் இங்கு நினைக்கத்தக்கது.
ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத்திருப்பதிகம்
.
அகப்பூசைக்குரிய
அட்டபுட்பங்கள் - கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் "நலம் சிறந்தார் மனத்
தகத்து மலர்கள் எட்டும்". இதனைத் தண்டகம் என்பர்.
அருணகிரிநாதப்
பெருமான் அறுமுகப் பரமனுடைய அடிமலருக்கு ஒரு மாலை தொடுத்துப் புனையக்
கருதுகின்றார். பூ மாலை வாடும் தன்மை உடையது. ஆதலின் வாடாத தன்மையும் மென்மையும்
உடைய மந்திர மலர்மாலை சூட்டத் துணிந்தனர்.
மலர்மாலைக்கு
இடையே குஞ்சம் ஒன்று தொங்கவேண்டும். அதுதான்
மாலையை அழகு படுத்தும். அது பெரிய ஒரு பூங்கொத்தாக அமைந்திருக்கும்.
அடிகளார்
தொடுக்கும் மந்திர மலர்மாலைக்கு இடையே "மனம்" என்ற தாமரைப் பூவை
குஞ்சமாகக் கட்டித் தொங்கவிடுகின்றனர்.
மனமே
பந்தத்திற்கும் முத்திக்கும் காரணமாகும். தண்ணீரே மனிதனை வாழ்விக்கின்றது. தண்ணீரே
மனிதனைக் கொல்கின்றது. மனதை ஆண்டவனுடைய திருவடியில் சேர்த்து விடுவதே துன்ப
நீக்கத்திற்குச் சிறந்த சாதனமாகும். அதுவே
எளிய வழியுமாகும்.
காற்றும்
கறங்கும்போல் சதா இடையறாது ஓடி ஓடி உழல்வதுவே மனத்தின் இயல்பு. அதனால் எண்ணில்லாத
இடர்கள் எய்துகின்றன. ஆதலின், அம் மனதை இறைவன்
திருவடியில் சேர்த்துவிட்டால் இன்பம் பயக்கும்.
மந்திர
மலர்களைத் தொடுப்பதற்கு நூல் வேண்டும். "அன்பு" என்ற நூலினால் அழகுற
மந்திர மலர்களைத் தொடுக்க வேண்டும். அன்பு ஒன்றுடன் ஒன்றை இணைத்து வைக்கும் இயல்பு
உடையது. இறைவனுடன் ஆன்மாவை ஒன்றுபடுத்துவதும் அன்பே ஆகும். சகாதேவன் கண்ணபிரானை
அன்பு என்ற கயிற்றினால் உள்ளமாகிய மண்டபத்தில் உறுதியாகிய தூணில் கட்டினான்.
அத்
திருமாலையைக் கட்டுவதற்குரிய இடம் எது. அதற்குரிய சிறந்த இடம் "நாவே"
ஆகும். வேறு எந்த உயிர்களுக்கும் அமையாத சிறப்பு மனிதனுடைய நாவுக்கு
அமைந்துள்ளது. நன்கு பேசும் தகைமையுடன்
கூடிய நாவை இறைவர் நமக்குத் தந்துள்ளார். அந்த நாவிலே பரமனுடைய திருநாமங்களை
அன்புடன் நவில வேண்டும். "கற்றுக் கொள்வன வாய்உள நாஉள" என்பார்
அப்பரடிகள். "நாமேல் நடவீர் நடவீர் இனியே" என்று அநுபூதியில்
அருணகிரிநாதரும் கூறுமாறு காண்க.
நாவினால்
இறைவனுடைய நாமங்களை நவில்பவர் எல்லா நலன்களையும் பெறுவர். அல்லாதவர் அவமே அழிவர்.
பூக்கைக்
கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்,
நாக்கைக்
கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்,
ஆக்கைக்கே
இரை தேடி அலமந்து,
காக்கைக்கே
இரை ஆகிக் கழிவரே. --- அப்பர்.
நாவுக்கு
முதலிடம் தந்து, "கூறும் நாவே முதலாகக்
கூறும் கரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுமாறும்
காண்க.
இம்
மந்திர பூமாலையில் ஒப்பற்ற மெய்ஞ்ஞானமாகிய நறுமணம் கமழ்கின்றது. மற்ற மணம் சில நேரமே
கமழும். ஞானமணம் எப்போதும் இடையறாது
கமழும். மணம் கண்களுக்குத் தோன்றாது. மென்மையாக வீசும் இயல்பு உடையது. ஞானம்
அத்தகையது. ஞானம் மிகவும் நுண்மையானது. "கூர்த்த மெய்ஞ்ஞானம்" என்பது
மணிவாசகம். ஞானவாசனை எவ்வுலகினும்
பரிமளிக்கத் தக்கது.
ஞானமணம்
கமழும் இம் மந்திர மலர்மாலையில் துளிக்கும் அருள் தேனைப் பருக, "புத்தி" என்ற
வண்டு வந்து மொய்த்து, இனிய நாதத்துடன்
ஒலிக்கின்றது. மலரிலே உள்ள மதுவைப் பிரித்து எடுத்து அருந்தும் ஆற்றலும் அறிவும்
வண்டுகளுக்கே உண்டு. வண்டினாலேயே இனிய தேன் கிடைக்கின்றது. புத்திக்கு வண்டு உவமை ஆயது.
புத்தியே எல்லா நூல்களிலிருந்தும் உயர்ந்த தத்துவங்களாகிய தேனைப் பிடித்து
உணரும். "புத்திமான் பலவான்"
என்ற பழமொழியும் கருதத் தக்கது.
புத்திமான் எங்கும் எச் சபையிலும் நடுநாயகமாக வீற்றிருப்பான். புத்திகாரகன் புதபகவான். ஏழு நாள்களின்
தலைவர்களாகிய ஏழு கிரகங்களின் நடுவில் புதன் அமைந்திருப்பதை உன்னுக.
இறைவனும்
புத்தியில் உறைகின்றான் என்று அருணகிரியார் முதல் பாடலில் கூறுகின்றனர். "கற்றிடும்
அடியவர் புத்தியில் உறைபவ".
இங்கே
புத்தி என்று கூறியது அந்தக் கரணங்களுள் ஒன்றான புத்தி அன்று.
ஆறு
ஆதாரங்களிலும் அகாராதி க்ஷகாராந்தமாக ஐம்பத்தொரு அட்சரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த
அட்சரங்களை "மாத்ருகா மந்திரம்" என்றும், "மாலா மந்திரம்" என்றும் கூறுவர்.
இந்த மாத்ருகா மந்திரங்களை மலர்களாகத் தொடுத்து மாலை புனையவேண்டும் என்கின்றனர்.
இந்த
மாத்ருகா மந்திரங்கள் ஐம்பத்தொன்றின் பரிணாமமே "கந்தர் அநுபூதி". ஐம்பத்தொரு
பாடல்களாக அது அமைந்திருப்பதை ஓர்க. "செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே"
என்று காப்புச் செய்யுளில் அடிகள் கூறுகின்றனர்.
உடம்புக்குள்
ஆறு ஆதாரங்கள் உள. மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆதாரங்கள் ஆறுக்குள்
அகரமுதலாக க்ஷகரம் இறுதியாக ஐம்பத்தோர் அக்ஷரங்கள் அடங்கி இருக்கின்றன. இந்த அக்ஷரங்கட்கு "மாத்ருகா மந்திரம்"
என்றும், "மாலாமந்திரம்"
என்றும் கூறுவர். இம் மாத்கருகா மந்திரமே
எல்லா மந்திரங்களினும் உயர்ந்தது. அம் மந்திரத்தின் பெருமை அளவிடற்கரியது.
மந்திரங்கள்
விந்துவினின்றும் தோன்றியவாம்.
சுத்தமாம்
விந்துதன்னில் தோன்றிய ஆதலானும்...
--- சிவஞானசித்தியார்.
உலகத்திற்கு
முதற்காரணம் விந்து மோகினி மான் என மூன்றாகும். இந்து விந்து சத்தியே சுத்தம் என்றும், பிராகாசம் என்றும், அபரவிந்து என்றும் சொல்லப்படும். ஆகவே, குண்டலி என்னும் பரவிந்து, விந்து முதலிய மூன்றிற்கும் காரணம்
என்க. விந்துவினிடம் உண்டான
சுத்தப்பிரபஞ்சம் சாந்தாத்மகம் எனப்படும். மோகினியிடம் உண்டாயவை கோரோத்மகம்
எனப்படும். மகானிலே உண்டாயவை மூடாத்மகம் எனப்படும்.
சுத்தமாயை
என்னும் இப் பரவிந்துவினிடத்தே கந்தவேளது ஞானசத்தி பதிய, நாதம் உண்டாகும். அந்த நாதத்தினின்றும் களங்கம் இல்லாத சரத் காலத்துச்
சந்திரன் போலக் குண்டலி வடிவாக அபரவிந்து தோன்றும். அவ் விந்துச் சத்தியினின்றும்
குமரவேளது இச்சையினாலே, அம்பிகை என்னும்
விந்துக் காரிய சத்தி தோன்றும். அதினின்றும், வாமை, சேட்டை, ரௌத்ரி என்னும் முச்சத்திகளும்
தோன்றும். அவற்றுள் வாமை நித்திரை செய்யும் குண்டலி வடிவாகவும், சேட்டை தண்டவடிவாகவும், ரௌத்ரி இரண்டு களைக் கொம்பு வடிவாகவும்
விளங்கும். அவற்றில் இருந்து ஜயை, விசயை, அதீதை, பராசிதை என்னும் நான்கு சத்திகள்
தோன்றும். அவற்றினின்றும் நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்யாகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்ற ஐந்து கலைகள்
காரணமாகச் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்ற நான்கு வாக்குகளும்
தோன்றும்.
சூக்குமை
என்னும் வாக்கைச் சாந்தி, சாந்தியாதீதம்
என்னும் இரு கலைகளும்,
பைசந்தி
என்னும் வாக்கை வித்யா கலையும்,
மத்திமை
என்னும் வாக்கை பிரதிட்டாகலையும்,
வைகரி
என்னும் வாக்கை நிவிர்த்தி கலையும் காரியப்படுத்தும்.
இங்ஙனமாய
நாதகாரிய வாக்குகளினின்று சுரங்களும், அந்தச்
சுரங்கள் சோடசத்தினின்று ஐம்பத்தொரு அட்சரங்களும் தோன்றும் என்க.
ஐம்பது
எழுத்தே அனைத்து வேதங்களும்,
ஐம்பது
எழுத்தே அனைத்து ஆகமங்களும்,
ஐம்பது
எழுத்தின் அடைவை அறிந்தபின்
ஐம்பது
எழுத்தே அஞ்செழுத்து ஆமே. --- திருமந்திரம்.
ஆசைகூர்
பத்தனேன் மனோ பத்மம்
ஆன பூ வைத்து, ...... நடுவே அன்பு
ஆன
நூல் இட்டு, நாவிலே சித்ரம்
ஆகவே கட்டி, ...... ஒரு ஞான
வாசம்
வீசி, ப்ரகாசியா நிற்ப,
மாசு இல் ஓர் புத்தி ...... அளிபாட,
மாத்ருகா
புஷ்ப மாலை கோல ப்ர-
வாள பாதத்தில் ...... அணிவேனோ? ---
திருப்புகழ்.
இவ்வாறு
அகப்பூசை புரிவோருக்கு, அரிய மோன வழி திறக்கும்.
அறிவு
வடிவாக விளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில்
எல்லையாகத் திகழ்வது மோனம் என உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று
உபதேசிக்கின்றார் ஔவையார்.
மன
சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர்.
வாய்
பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது வாய்மௌனம்
எனப்படும்.
கைகால்
அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு காஷ்டமௌனம் என்று பேர்.
மனமே
அற்ற நிலைக்குத் தான் பூரண மௌனம் என்று பேர்.
அங்கே
தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.
அந்த
இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.
இந்த
மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை
வேண்டுகின்றார்.
அருவம்
இடைஎன வருபவர், துவர்இதழ்
அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார
அசல
முலைபுள கிதம்எழ, அமளியில்
அமளி படஅந வரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்
தருவை
நிகரிடு புலமையும் அலம்அலம்,
உருவும் இளமையும் அலம்அலம், விபரித
சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில
லிபியன சனனமும் அலம்அலம்,
இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் ......
அருள்வாயே..
--- திருப்புகழ்.
அகலம்
நீளம் யாதாலும், ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயில் ...... எனமேவி,
அசையவே
க்ரியா பீட மிசை புகா, மகா ஞான
அறிவின் ஆதர ஆமோத ...... மலர்தூவி,
சகல
வேதன அதீத, சகல வாசக அதீத,
சகல மா க்ரியா அதீத, ...... சிவரூப,
சகல
சாதக அதீத, சகல வாசனை அதீத
தனுவை நாடி, மா பூசை ...... புரிவேனோ? --- திருப்புகழ்.
அந்த
மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை
ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப் பெருந்தகையார்
கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...
ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடி வே.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுரு வே.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்றுஅறிந்தேன் ஆனந்த மே.
அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.
இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.
ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.
குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு
தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
கோயில்என வாழும் குரு.
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
அப்படிப்பட்ட
அரிய மோனத்தையே திருக்கோயிலாக இறைவன் கொண்டு அமர்ந்துவிட்ட பிறகு, இறைவனுடைய சிந்தனை
ஆன்மாவில் என்றும் நீங்காது நிலைபெற்று இருக்கும்.
பொறி
வழாத முனிவர் தங்கள் நெறிவழாத பிலன் உழன்று, பொரு நிசாசரனை நினைந்து வினை நாடி, பொரு இலாமல் அருள் புரிந்து, மயிலின் ஏறி நொடியில் வந்து, புளகம் மேவ தமிழ்
புனைந்த முருகோனே ---
பொரு
நிசாசரன் என ஒரு சொற்றொடர் வருவதால், இந்த
வரிகள் குறிக்கும் வரலாற்றை உய்த்து உணரமுடியவில்லை. ஒருவாறு, நக்கீரதேவருக்கு
முருகப் பெருமான் அருள் புரிந்ததைக் குறிப்பதாக எண்ண இடமுண்டு.
அந்த
சிறுவர் ஆகி இருவர், கரி பதாதி கொடு பொரும் சொல் சிலை இராமனுடன் எதிர்ந்து சமர் ஆடி ---
அசுவமேத
யாகம் செய்ய விருப்பம் கொண்ட இராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவி விட, அது வால்மீகி முனிவரின்
ஆசிரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த இராமபிரானின் பிள்ளைகளான லவனும்
குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த இலட்சுமணனாலும்
சிறுவர்களை வெல்ல முடியவில்லை. இராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது.
சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.
செயம்
அதான நகர் அமர்ந்த அளகை போல வளமிகுந்த, சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமாளே ---
அளகை
- அளகாபுரி = குபேரப் பட்டிணத்திற்கு அளகாபுரி என்று பெயர். செல்வச் செழிப்பு மிகுந்தது.
சங்கநிதி பதுமநிதி என்னும் இரண்டும் குபேரனிடம் உள்ளதாவும், அவன் சிவபெருமானுக்குத் தோழன் என்றும் புராணங்கள்
கூறும்.
சிறுவை
என்பது சிறுவாபுரி என்னும் திருத்தலத்தைக் குறிக்கும். தமிழ்நாட்டின்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னம்பேடு பகுதியில் அமைந்திருக்கும் புகழ் பெற்ற
முருகன் திருக்கோவில் ஆகும். சென்னைக்கு வட மேற்கே சென்னை - கல்கத்தா நெடுஞ்சாலையில்
சென்னையில் இருந்து 33 - ஆவது கிலோமீட்டரில் இடதுபக்கம் மேற்கே பசுமையான வயல்களைக்
கடந்து 3 கிலோமீட்டர் போனால், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய
சுவாமியின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து செங்குன்றம் காரனோடை
வழியாகவும், மீஞ்சூர் பொன்னேரி வழியாகவும்
இந்த ஊரை அடையலாம். இவ்வூர், சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
சிறுவாபுரி
முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க, பின் வலக்கரம் ஜபமாலை
ஏந்தியிருக்க, முன் இடக்கரம் இடுப்பிலும், பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி இருக்கிறார்.
இங்குள்ள சிலைகளில் பாலசுப்பிரமணிய சுவாமி, ஆதிமூலர், நவக்கிரகம் தவிர மற்ற சிலைகள் பச்சைக்கல்லில்
செய்யப்பட்டவை. கொடிமரத்துக்கு அருகில் முருகப்பெருமானின் மரகதப்பச்சை மயில் கொலுவாக
வீற்று இருக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர்
சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை.
கருத்துரை
முருகா! ஞானமலர்களால்
தேவரீரது திருவடியை வழிபட்டு, மோன
நிலையை அடைந்து, நன்மை பெற அருள்வாய்
No comments:
Post a Comment