திருச் சிற்றேமம்
(சிற்றாய்மூர் -
சித்தாய்மூர்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
வழக்கில் மக்கள் 'சித்தாய்மூர் ' என்று அழைக்கின்றனர்.
திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில்
ஆலத்தம்பாடி வந்து, அங்கிருந்து
சித்தாய்மூர் செல்லும் பாதையில் 3 கி. மீ. செல்ல
வேண்டும்.
இறைவர்
: சுவர்ணதாபனேசுவரர், பொன்வைத்தநாதர்.
இறைவியார்
: அகிலாண்டேசுவரி.
தல
மரம் : ஆத்தி.
தீர்த்தம் : சுவர்ண புஷ்கரணி.
தல
விநாயகர் : ஆத்திமர விநாயகர்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் -
நிறைவெண்டிங்கள்
தல
வரலாறு
திருச்சிற்றேமத்திற்கு
வடபாலுள்ள முத்தரசபுரத்தை ஆண்டு வந்த மன்னனுக்கு நாடொறும் இவ்வூர் வழியாகப்
பாற்குடம் செல்வது வழக்கம். சில நாள்களில் அப்பாற்குடம் ஒரு குறிப்பிட்ட இடத்தில்
விழுந்து உடையலாயிற்று. அரசன் அவ்விடத்தை வெட்டிப் பார்க்க, சிவலிங்கத் திருமேனியைக் கண்டான்.
அவ்விடத்துக் கோயில் எழுப்பினான் என்பது வரலாறு. இதன் அடையாளமாக சிவலிங்கத்தின்
மீது வெட்டுக்காயம் உள்ளது.
இவ்வூரில் வாழ்ந்த
சங்கரன் செட்டியார், மனைவி கருவுற்ற மிக்க
அண்மைக் காலத்தே பொருளீட்டும் முயற்சி மேற்கொண்டு வெளியூர் சென்றார். சிவப்பற்று
கொண்டு, சிவத் தொண்டு செய்து
வாழ்ந்து வந்த அம்மங்கைக்கு இறைவன் நாடொறும் ஒரு பொன் காசு வைத்து உதவ, அவள் அதை விற்று வாழவு நடத்தி வந்தாள்.
மகப்பேறு காலம் நெருங்கியது; இறைவனை நோக்கி அழுது
வேண்ட, அகிலாண்டேஸ்வரியே
தாயாக வந்து உதவி, மகவினைப் பெற்றெடுத்தாள்.
செட்டியார் ஊர் திரும்பினார்; புல்லறிவினர் சிலர்
அம்மாதின் மேல் பொய் ஒழுக்கக் குற்றச் சாட்டுக்களைச் செட்டியாரிடம் கூறினர்.
அம்மங்கை இறைவனிடம் சென்று பல்லோர் முன்னிலையிலும் வேண்டி, தன் கற்பை வெளிப்படுத்துமாறு கலங்கி
வேண்ட, இறைவன் - கோயிற்
கதவைத் தானே திறக்கச் செய்தும்,
ஆத்திமரத்தை
இடம் பெயர்ந்து முன்புறம் வரச்செய்தும், நந்திதேவரைப்
பலிபீடத்தின் பின் போகச் செய்தும் - பல அற்புதங்களை நிகழ்த்தி அப்பெண்ணின்
கற்புத்திறத்தை ஊரறியச் செய்தார் என்பர்.
இவ்வூரின் மேற்கே 6 கி. மீ. தொலைவிலுள்ள இடம் - செட்டிப்
பெண்ணிற்கு இறைவன் அன்றாடம் பொன் நிறுத்துத் தந்த இடமாகும்; தற்போது, [பொன் + நிறை] - 'பொன்னிறை' என்னும் பெயருடையது.
இக்கோயிலில் உள்ள
தேன் கூடு வியப்பானது - நாடொறும் அர்த்த சாமத்தில் வழிபட்டு வந்த பிரமரிஷி ஒருநாள்
காலம் தாழ்ந்து வர, ஆலயக்கதவு காப்பிடப்பட்டுவிட்டது.
அப்போது அவர் தேனி உருக்கொண்டு உள்ளே சென்று பெருமானை வழிபட்டு அங்கேயே வசிக்கத்
தொடங்கினார் என்பர்.
இத்தலத்தின் தென்பால் அரிச்சந்திர நதியும், அருகில் செண்பக நதியும் ஓடுகின்றன.
இத் திருக்கோயிலின் அருகில் திருமால் திருக்கோயில்
ஒன்றும் உள்ளது.
இத் திருத்தலத்திற்குத் தெற்கில் திருவாய்மூர்
உள்ளது. மேற்கில் திருக் கைச்சினம் உள்ளது. வடக்கில் திருவலிவலம், திருக்குவளை, திருக் குண்டையூர் ஆகிய திருத்தலங்கள்
உள்ளன. வடகிழக்கில் எட்டுக்குடி உள்ளது.
இத் திருக்கோயில் தினந்தோறும் காலை 9-30 மணி முதல்
11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு
8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், மேன்மை தரும் முற்றேமம் வய்ந்த முனிவர் தினம்
பரவும் சிற்றேமம் வாய்ந்த செழுங்கதிரே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 575
மற்றுஅவ்வூர்
தொழுதுஏத்தி மகிழ்ந்து பாடி,
மால்அயனுக்கு
அரியபிரான் மருவும் தானம்
பற்பலவும்
சென்று பணிந்து ஏத்திப் பாடி,
பரவுதிருத்
தொண்டர்குழாம் பாங்கின் எய்தக்
கற்றவர்வாழ்
தண்டலைநீள் நெறிஉள் ளிட்ட,
கனகமதில்
திருக்களரும், கருதார் வேள்வி
செற்றவர்சேர்
பதிபிறவும் சென்று போற்றி,
திருமறைக்காட்டுஅதன்
மருங்கு சேர்ந்தார் அன்றே.
பொழிப்புரை : திருவெண்துறை என்ற
நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு
அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று
போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண்டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண்டலை
நீள்நெறி முதலான திருப்பதிகளும்,
பொன்மதிலை
உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை
அழித்த இறைவர் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திருமறைக்காடு என்ற பதியின்
அருகே சேர்ந்தனர்.
குறிப்புரை :
திருவெண்துறையில்
அருளிய பதிகம், `ஆதியன்' (தி.3 ப.61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த
பதிகம் ஆகும்
`மருவும் தானம் பற்பலவும்' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர்
சிவக்கவிமணியார்.
திருச்சிற்றேமத்தில் அருளிய பதிகம், `நிறை வெண்திங்கள்' (தி.3 ப.42) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப்
பண்ணிலமைந்த பதிகமாகும்.
மற்ற இரண்டு பதிகளில் அருளிய பதிகங்கள்
கிடைத்தில.
திருத்தண்டலை
நீள்நெறியில்
அருளிய பதிகம் `விரும்பும் திங்களும்' (தி.3 ப.50) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில்
அமைந்ததாகும்.
திருக்களரில் அருளிய பதிகம் `நீருளார்' (தி.2 ப.51) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில்
அமைந்ததாகும்.
3. 042 திருச்சிற்றேமம் பண்- கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
நிறைவெண்திங்கள்
வாள்முக
மாதர்பாட, நீள்சடைக்
குறைவெண்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய கொள்கையான்,
சிறைவண்டுயாழ்செய்
பைம்பொழில்
பழனம்சூழ்சிற்
றேமத்தான்,
இறைவன்என்றே
உலகெலாம்
ஏத்தநின்ற பெருமானே.
பொழிப்புரை :வெண்மையான முழுநிலவு
போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச்
சூடி, நடனம் புரிகின்ற இயல்
புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள்
யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.
பாடல்
எண் : 2
மாகத்திங்கள்
வாள்முக
மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய பண்டங்கன்
மேகத்துஆடு
சோலைசூழ்
மிடைசிற்றேமம்
மேவினான்
ஆகத்துஏர்கொள்
ஆமையைப்
பூண்டஅண்ணல் அல்லனே.
பொழிப்புரை : ஆகாயத்தில் விளங்கும்
சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப்
பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம்
திகழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான்
திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?
பாடல்
எண் : 3
நெடுவெண்திங்கள்
வாள்முக
மாதர்பாட, நீள்சடைக்
கொடுவெண்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய கொள்கையான்
படுவண்டுயாழ்செய்
பைம்பொழில்
பழனம்சூழ்சிற்
றேமத்தான்
கடுவெங்கூற்றைக்
காலினால்
காய்ந்தகடவுள்
அல்லனே.
பொழிப்புரை : வெண்ணிறப் பூரண
சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி
நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று
ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான
சிவபெருமான் அல்லனோ?
பாடல்
எண் : 4
கதிர்ஆர்
திங்கள் வாள்முக
மாதர்பாட, கண்ணுதல்
முதிர்ஆர்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய முக்கணன்
எதிர்ஆர்புனல்அம்
புன்சடை
எழில்ஆரும்சிற்
றேமத்தான்
அதிர்ஆர்பைங்கண்
ஏறுஉடை
ஆதிமூர்த்தி அல்லனே.
பொழிப்புரை : கதிர்வீசும்
சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான்
இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர்
ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும்
கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட
ஆதிமூர்த்தி அல்லரோ?
பாடல்
எண் : 5
வான்ஆர்திங்கள்
வாள்முக
மாதர்பாட, வார்சடைக்
கூன்ஆர்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய கொள்கையான்
தேன்ஆர்வண்டு
பண்செயும்
திருஆரும்சிற்
றேமத்தான்
மான்ஆர்விழிநன்
மாதொடும்
மகிழ்ந்தமைந்தன்
அல்லனே.
பொழிப்புரை : வானில் விளங்கும் சந்திரனைப்
போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த
பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு
இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய
உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?
பாடல்
எண் : 6
பனிவெண்திங்கள்
வாள்முக
மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன்
புள்இனத்
தாமம்சூழ்சிற்
றேமத்தான்
முனிவு
மூப்புநீக்கிய
முக்கண்மூர்த்தி
அல்லனே.
பொழிப்புரை :குளிர்ந்த
வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச்
சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும்
சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு
வெறுப்பு அற்றவராய், மூப்பினை
அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?
பாடல்
எண் : 7
கிளரும்திங்கள்
வாள்முக
மாதர்பாடக் கேடுஇலா
வளருந்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய மாதவன்
தளிரும்கொம்பும்
மதுவும்ஆர்
தாமம்சூழ்சிற்
றேமத்தான்
ஒளிரும்வெண்நூல்
மார்பன்என்
உள்ளத்துஉள்ளான்
அல்லனே.
பொழிப்புரை :கிளர்ந்து எழுந்த
பூரண சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய
பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ
விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும்
முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?
பாடல்
எண் : 8
சூழ்ந்ததிங்கள்
வாள்முக
மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள்
சூடிஓர்
ஆடலேமேய புண்ணியன்
தாழ்ந்தவயல்சிற்
றேமத்தான்
தடவரையைத்தன்
தாளினால்
ஆழ்ந்தஅரக்கன்
ஒல்கஅன்று
அடர்த்தஅண்ணல்
அல்லனே.
பொழிப்புரை :சந்திரனைப் போன்று
ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித்
திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய
கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல்
அல்லரோ?
பாடல்
எண் : 9
தனிவெண்திங்கள்
வாண்முக
மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற்
றேமத்தான்
அலர்மேல்அந்த ணாளனும்
மணிவண்ணனும்முன்
காண்கிலா
மழுவாள்செல்வன்
அல்லனே.
பொழிப்புரை :ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன்
போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச்சந்திரனைச்
சூடித் திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில்
வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும்
காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?
பாடல்
எண் : 10
வெள்ளைத்திங்கள்
வாள்மு
மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள்
சூடிஓர்
ஆடல்மேய பிஞ்ஞகன்,
உள்ளத்தார்சிற்
றேமத்தான்
உருஆர்புத்தர்
ஒப்பிஉலாக்
கள்ளத்தாரைத்
தான்ஆக்கிஉள்
கரந்துவைத்தான்
அல்லனே.
பொழிப்புரை :வெண்ணிறச் சந்திரன்
போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி
வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும்
விளங்குபவர்.
பாடல்
எண் : 11
கல்லில்ஓதம்
மல்குதண்
கானல்சூழ்ந்த
காழியான்
நல்லவாய
இன்தமிழ்
நவிலும்ஞான சம்பந்தன்
செல்வன்ஊர்சிற்
றேமத்தைப்
பாடல்சீரார் நாவினால்
வல்லர்ஆகி
வாழ்த்துவார்
அல்லல் இன்றி
வாழ்வரே.
பொழிப்புரை : கற்களால் ஆகிய
மதிலில் கடல்அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச்
சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய
சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment