திருக்களர்





திருக் களர்

         சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மீ. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலம் இருக்கிறது.


இறைவர்     : களர்முளை நாதர், பாரிஜாதவனேசுவரர்

இறைவியார் : இளங்கொம்பன்னாள், அமுதவல்லி, அழகேசுவரி

தல மரம் : பாரிஜாதம் (பவளமல்லி)

தீர்த்தம்      : துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், ருத்ர தீர்த்தம்,                                                                                  ஞான தீர்த்தம்

தேவாரப் பாடல்கள்    : சம்பந்தர் - நீருளார்கயல் வாவி.

         ஆலய அமைப்பு: காவிரி தென்கரைத் தலங்களில் 105 தலமாக விளங்கும் இத்தலம் ஊரின் நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே நான்கு பக்கங்களிலும் நான்கு படித்துறைகளைக் கொண்ட பெரிய திருக்குளம் உள்ளது. 80 அடி உயரமுள்ள இராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. இவ்வாலயம் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் பிரகாரத்தில் இருந்து உள்ளே செல்ல சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு தனித்தனியே கோபுர வாயில்கள் உள்ளன. சிவன், அம்மன் இருவரும் கிழக்கு நோக்கி தனி சன்னதிகளில் அருளுகின்றனர். சுவாமி மற்றும் அம்மன் சந்நிதிகளுக்கு நடுவில் பாரிஜாத மரம் (பவள மல்லிகை) தலமரமாக உள்ளது. அம்மன் சந்நிதி கருவறைச் சுற்றில் சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அஷ்டபுஜ துர்க்கை சந்நிதி உள்ளது. வலம்புரி விநாயகர் சந்நிதியும், துர்வாசர் சந்நிதியும், விஸ்வநாதர், கஜலட்சுமி, 63 நாயன்மார்கள் சந்நிதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. துர்வாச தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம் ஆகியவை இவ்வாலயத்திலுள்ள தீர்த்தங்கள் ஆகும்.

         இத்தலத்தில் உள்ள முருகப் பெருமான் மிக்க அழகுடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானை உடன் இல்லாமல் தனியே குரு மூர்த்தமாக அருள் புரிகிறார். முருகப் பெருமான் 60000 முனிவர்களுக்கும், துர்வாசருக்கும் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்தது இத்தலத்தில் தான் என்பது ஐதீகம். கல்வியில் மேன்மை பெற இவரை வழிபடுவது சிறப்பு. இத்தலம் முருகப் பெருமானின் திருப்புகழ் வைப்புத் தலமாக உள்ளது.

         தல வரலாறு: பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற விரும்பினார். துர்வாச முனிவர் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாதத்தை இங்கு கொண்டு வந்து வைத்து வளர்க்கலானார். அது நாளடைவில் மிகவும் பெருகி பாரிஜாத வனமாயிற்று. பிறகு துர்வாச முனிவர் ஒரு சிவலிங்கம் அமைத்து பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் தாபித்து தேவதச்சன் மூலமாக இக்கோயிலை எடுப்பித்தார் என்று தலவரலாறு கூறுகிறது. இத்தலத்தில் துர்வாச முனிவருக்கு இறைவன் நடராஜர் பிரமதாண்டவ தரிசனம் கொடுத்தருளியதால் துர்வாசர் இத்தலத்தில் எப்போதும் நடராஜ பெருமானின் பிரமதாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இதன் அடையாளமாக இவ்வாலயத்தில் துர்வாசர் சந்நிதியும், நடராஜர் சந்நிதியும் எதிரெதிரே அமைந்துள்ளது. நடராஜ பெருமானின் 8 தாண்டவ தலங்களுள் இரண்டாவது தலமாக திருக்களர் தலம் அமைந்திருக்கிறது.

         இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.

         காலை 6 மணி முதல் 11-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

     வள்ளல்பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓங்கு புத்தி மான் களரில் ஓட்டி மகிழ்வோடு இருந்து ஏத்தும் வான் களரில் வாழும் மறை முடிபே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 575
மற்றுஅவ்வூர் தொழுதுஏத்தி மகிழ்ந்து பாடி,
         மால்அயனுக்கு அரியபிரான் மருவும் தானம்
பற்பலவும் சென்று, பணிந்து, ஏத்திப் பாடி,
         பரவுதிருத் தொண்டர்குழாம் பாங்கின் எய்த,
கற்றவர்வாழ் தண்டலைநீள் நெறிஉள் ளிட்ட,
         கனகமதில் திருக்களரும், கருதார் வேள்வி
செற்றவர்சேர் பதிபிறவும், சென்று போற்றி,
         திருமறைக்காட்டுஅதன் மருங்கு சேர்ந்தார் அன்றே.

         பொழிப்புரை : திருவெண்துறை என்ற நகரத்தை வணங்கிப் போற்றி மகிழ்ந்து பதிகம்பாடி, நான்முகன் திருமால் இவர்களுக்கு அறிவதற்கு அரியவரான இறைவர் வீற்றிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் சென்று போற்றிப் பதிகங்களும் பாடிப் பரவும் தொண்டர் கூட்டம் அருகில் வர, கற்றவர் வாழ்வதற்கு இடமான திருத்தண்டலை நீள்நெறி முதலான திருப்பதிகளும், பொன்மதிலை உடைய திருக்களரும், பகைவரின் வேள்வியை அழித்த இறைவர் எழுந்தருளிய மற்றப் பதிகளையும் சென்று போற்றி, அதுபொழுதே திருமறைக்காடு என்ற பதியின் அருகே சேர்ந்தனர்.

         குறிப்புரை : திருவெண்துறையில் அருளிய பதிகம், `ஆதியன்' (தி.3 ப.61) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகம் ஆகும் `மருவும் தானம் பற்பலவும்' என்பது குன்றியூர், திருச்சிற்றேமம், மணலி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.

         திருச்சிற்றேமத்தில் அருளிய பதிகம், `நிறை வெண்திங்கள்' (தி.3 ப.42) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணிலமைந்த பதிகமாகும். மற்ற இரண்டு பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.

         திருத்தண்டலைநீள்நெறியில் அருளிய பதிகம் `விரும்பும் திங்களும்' (தி.3 ப.50) எனத் தொடங்கும் கௌசிகப் பண்ணில் அமைந்ததாகும்.

         திருக்களரில் அருளிய பதிகம் `நீருளார்' (தி.2 ப.51) எனத் தொடங்கும் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.

         பதி பிறவும் என்பதால், மங்களம், திருமுகத்தலை, களப்பாள் தகட்டூர், திருக்குன்றளூர், திருக்கடிக்குளம், திருஇடும்பாவனம், திருஉசாத்தானம், முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார். இவற்றில் முதல் ஐந்து பதிகட்குப் பதிகங்கள் கிடைத்திலது. மற்ற மூன்று பதிகளை வணங்கிய செய்தியைப் பின்னர் 623, 624ஆம் பாடல்களில் ஆசிரியர் சேக்கிழார் குறிக்கின்றார்.


2.051    திருக்களர்                       பண் - சீகாமரம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நீருள் ஆர்கயல் வாவி சூழ்பொழில்
         நீண்ட மாவயல் ஈண்டு மாமதில்
தேரின்ஆர் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளார்இடு பிச்சை பேணும் ஒருவ
         னே, ஒளிர் செஞ்ச டைம்மதி
ஆரநின் றவனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :நீருட் பொருந்திய கயல் மீன்களோடு திகழும் வாவிகளும், பொழிலும், நீண்ட வயல்களும் நெருங்கிய மதில்களும் தேரோடும் வீதிகளும் சூழ்ந்துள்ள, விழாக்கள் பல நிகழும் திருக்களரில் ஊரவர் இடும் பிச்சையை விரும்பி ஏற்பவனாய் விளங்கும் இறைவனே! ஒளிபொருந்திய பிறைமதியைச் செஞ்சடை மீது பொருந்த அணிந்து நிற்பவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 2
தோளின் மேல்ஒளி நீறு தாங்கிய
         தொண்டர் வந்துஅடி போற்ற மிண்டிய
தாளினார் வளரும் தவமல்கு திருக்களருள்,
வேளின் நேர்விச யற்கு அருள்புரி
         வித்த கா,விரும் பும் அடியாரை
ஆள்உகந் தவனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :தோளின்மேல் ஒளிநீறு பூசிய தொண்டர்கள் அடி போற்றப் பெருமிதம் கொண்ட திருவடி உடையவனாய்த் திருக்களருள் எழுந்தருளியவனே! முருகவேட்கு நிகரான அருச்சுனனுக்கு அருள் புரிந்த வித்தகனே! தன்னை விரும்பும் அடியவரை ஆளாகக் கொண்டு உகந்தவனே! உன்னை அடைந்த அன்பர்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 3
பாட வல்லநன் மைந்த ரோடு
         பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னே,அடி
         நிரைக ழல்சிலம்பு ஆர்க்க மாநடம்
ஆடவல் லவனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :பாடவல்ல நன்மக்களோடு நறுமலர்கொண்டு போற்றும் உயர்ந்தோர் வாழும் பொழில் சூழ்ந்த செழுமையான மாடவீடுகளைக் கொண்டுள்ள திருக்களருள் பலகாலமாக எழுந்தருளியுள்ள நிமலனே! கழலும் சிலம்பும் ஆரவாரிக்க நடம் புரியவல்ல பெருமானே! உன்னைச் சரணாக அடைந்தவர்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 4
அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
         ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொன் ஆர் பொழில் சூழ்ந்துஅழகாய திருக்களருள்,
என்பு பூண்டது ஓர் மேனி எம், இறை
         வா, இணையடி போற்றி நின்றவர்க்கு
அன்பு செய்தவனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :வாள் போன்று கூரிய விசாலமான கண்களை உடைய மகளிரோடு ஆடவர் மகிழும் செம்பொன் நிறைந்த மாடமாளிகைகளோடு பொழில் சூழ்ந்து அழகுற விளங்கும் திருக்களருள் என்புமாலை பூண்ட மேனியை உடைய எம் இறைவனே! உன் திருவடிகளைப் போற்றி நிற்பாரிடம் அன்பு செய்பவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 5
கொங்கு உலாமலர்ச் சோலை வண்டுஇனம்
         கெண்டி மாமது உண்டு இசைசெயத்
தெங்கு பைங்கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்,
மங்கை தன்னொடும் கூடிய மண
         வாளனே, பிணை கொண்டொர் கைத்தலத்து
அங்கை யில்படையாய், அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :தேன்நிறைந்த மலர்ச்சோலைகளில் வண்டினங்கள் மகரந்தங்களைக் கெண்டி மதுஉண்டு இசைபாட, தென்னை பசிய கமுகுகள் புடைசூழ்ந்து விளங்கும் திருக்களருள் எழுந்தருளிய மங்கையொடும் கூடிய மணவாளனே! மானையும் மழுவையும் அழகிய கைகளில் கொண்டுள்ளவனே! உன்னை அடைந்தார்க்கு அருள் புரிவாயாக.


பாடல் எண் : 6
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
         சேர்பொ ழிற்குல வும்வ யல்இடைச்
சேல்இளங் கயல்ஆர் புனல்சூழ்ந்த திருக்களருள்,
நீலம் மேவிய கண்ட னே,நிமிர்
         புன்ச டைப்பெரு மான் எனப்பொலி
ஆல நீழல்உளாய், அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :அழகிய மயில்கள் ஆட மேகங்கள் தங்கிய பொழில் சூழ்ந்து விளங்குவதும் வயல்களில் சேலும் கயலும் சேர்ந்த நீர் சூழ்ந்ததும் ஆன திருக்களருள் எழுந்தருளிய நீலகண்டனே! நிமிர்ந்த சடையை உடைய பெருமானே! என்று அடியவர் போற்ற ஆல நீழலில் எழுந்தருளியவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 7
தம்ப லம்அறி யாத வர்மதில்
         தாங்கு மால்வரை யால்அழல் எழத்
திண்பலம் கெடுத்தாய், திகழ்கின்ற திருக்களருள்,
வம்பு அலர்மலர் தூவி நின்அடி
         வானவர் தொழக் கூத்து உகந்துபேர்
அம்பலத்து உறைவாய், அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :தங்கள் பலத்தை அறியாத அசுரர்களின் முப்புரங்களை, உலகைத் தாங்கும் மேருமலையாகிய வில்லால் அழல் எழுமாறு செய்து அப்புரங்களின் திண்ணிய பலத்தைக் கெடுத்தவனே! திகழ்கின்ற திருக்களருள் புதிய மலர்களைத்தூவி வானவர் நின் திருவடிகளைப் போற்றப் பேரம்பலத்தில் உறையும் பெருமானாய் விளங்குபவனே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 8
குன்று அடுத்தநன் மாளி கைக்கொடி
         மாட நீடுஉயர் கோபு ரங்கள் மேல்
சென்று அடுத்துஉயர்வான் மதிதோயும் திருக்களருள்,
நின்று அடுத்துஉயர் மால்வ ரைத்திரள்
         தோளி னால்எடுத் தான்தன் நீள்முடி
அன்றுஅடர்த்து உகந்தாய், அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :மலைபோன்றுயர்ந்த நல்ல மாளிகைகளில் கட்டப்பட்ட கொடிகள் மாடங்களினும் நீண்டுயர்ந்த கோபுரங்களையும் கடந்து மேற்சென்றுயர்ந்து வானிலுள்ள மதியைப் பொருந்தும் திருக்களருள், நிலையாக நின்று பொருந்தி உயர்ந்த பெரிய கயிலை மலையைத் திரண்ட தோள்வலியால் எடுத்த இராவணனின் நீண்ட முடிகளை அன்று அடர்த்துப் பின் அவனை உகந்து விளங்கும் பெருமானே! உன்னை அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 9
பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
         பாடல் ஆடலொடு ஆர வாழ்பதி
தெள்நி லாமதியம் பொழில்சேரும் திருக்களருள்,
உள்நி லாவிய ஒருவ னே,இரு
         வர்க்கு நின்கழல் காட்சி ஆர்அழல்
அண்ணல் ஆயஎம்மான், அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :யாழில் இசைகூட்டிப் பயில்கின்ற மங்கையர் பாடியும் ஆடியும் மகிழ்கின்ற பதியாய்த், தெளிந்த நிலவைத் தரும் மதியைத் தோயுமாறு உயர்ந்த பொழில் சூழ்ந்த திருக்களருள் விளங்கும் ஆலயத்துள் எழுந்தருளிய ஒப்பற்றவனே! திருமால், பிரமர் நீண்ட திருவடி, திருமுடி தேடுமாறு அரிய அழலாய் நின்ற எம்மானே! அடைந்தவர்க்கு நின் திருவடித் தொண்டினை அருள் புரிவாயாக.


பாடல் எண் : 10
பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
         பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்குஇயல் குணத்தார் சிறந்துஆரும் திருக்களருள்,
வாக்கின் நான்மறை ஓதி னாய்,அமண்
         தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கி நின்றவனே, அடைந்தார்க்கு அருளாயே.

         பொழிப்புரை :நல்வினைகள் பல செய்த பத்தர்கள் பாடல்கள் பலபாடுவதோடு பணிகள் பலவற்றை விரும்பிச் செய்யவும், எரியோம்பும் இயல்பிரான அந்தணருட் சிறந்தார் வாழவும் விளங்கும் திருக்களருள் வாக்கினால் வேதங்களை அருளியவனே! சமணர் புத்தர் சொல்லும் உரைகளைப் பொய்யாக்கி எழுந்தருளி விளங்குபவனே! அடைந்தார்க்கு அருள்புரிவாயாக.


பாடல் எண் : 11
இந்து வந்துஎழு மாட வீதி
         எழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்,
செந்து நேர்மொழியார் அவர்சேரும் திருக்களருள்,
அந்தி அன்னதொர் மேனி யானை,
         அமரர் தம்பெரு மானை, ஞானசம்
பந்தன் சொல்இவை பத்தும்பாடத் தவமாமே.

         பொழிப்புரை :திங்களைத் தோய்ந்தெழும் மாடங்களைக் கொண்ட வீதியினை உடைய அழகிய காழி நகரில் கவுணியர் குடியில் தோன்றிய ஞானசம்பந்தன், செந்து என்ற பண்ணை ஒத்த மொழி பேசும் மகளிர் பலர் வாழும் திருக்களருள் அந்தி வானம் போன்ற செம்மேனியனை, அமரர் தலைவனைப்பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடத்தவம் சித்திக்கும்.

                                             திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...