பெரியோரை நிந்தனை செய்தல் கூடாது.

 

 

பெரியோரை நிந்தை செய்தல் ஆகாது

-----

 

     திருக்குறளில் "பெரியாரைப் பிழையாமை" என்னும் அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்தல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் நாயனார்.

 

     காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்கு உண்டான கோபத் தீயில் இருந்து ஒருவன் தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது என்பதைக் காட்ட,

 

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

 

என்று அருளிச் செய்தார் திருவள்ளுவ நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, "விவேக சிந்தாமணி" என்கின்ற பழம்பெரும் நூலில் ஒரும் ஒரு பாடலைப் பார்ப்போம்....

 

வில்லது வளைந்தது என்றும்,

     வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும்

     வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப்

     பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா

     நஞ்சு எனக் கருதலாமே.  

 

இதன் பதவுரை ---

 

     (உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து) வில்லது வளைவுற்றது என்றும் --- இந்த வில்லானது வளைந்து போனது (அது தீங்கு செய்யாது) என்றும்; (காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து) வேழம் அது உறங்கிற்று என்றும் --- இந்த யானையானது உறங்கிவிட்டது (அதனால், அது தீங்கு செய்யாது) என்றும், (ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து) வல்லியம் பதுங்கிற்று என்றும் --- இந்த புலியானது பதுங்கி விட்டது (அதனால் இது தீங்கு செய்யாது) என்றும், (தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து) வளர் கடா பிந்திற்று என்றும் --- இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது (அதனால் இது பினும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது) என்றும், (தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும்) பெரியோர்கள் புல்லர் தம் சொல்லுக்கு அஞ்சிப் பொறுத்தனர் என்றும் --- இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள் (எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள்) என்றும், எண்ணிக் கொண்டு, நல்லது என்று இருக்க வேண்டா --- (இச் செய்கைகளால் வருவது) நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம்; நஞ்சு எனக் கருதலாம் --- (இவற்றால் வருவது) நிச்சயம் நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

 

     Do not remain complacent by thinking that a curved bow, a slepping elephant, a hiding - tiger, a back-stepping ram, forbearing elders who endure the taunts of the foul-mouthed are innocuous. They may prove to be destructive. The tolerant elders, especially, shall not be reckoned as disposed to forgiveness of insults under the mistaken notion that their patience is due to the dread of the scoffers. They should know that those who scold the elders will, definitely and automatically, come to grief in due course.

 


தாய் தந்தை இல்லாத குறை சிவனுக்கு

 

 

    தில்லை நடராசப் பெருமானை வணங்கி, அவரைப் பழிப்பது போலப் புகழ்ந்து, காளமேகப் புலவர் பாடிய பாடல்....

 

வில்லால் அடிக்க, செருப்பால் உதைக்க, வெகுண்டு ஒருவன்

கால்லால் எறி, பிரம்பால் அடிக்க, இக் காசினியில்

அல்லார் பொழில் தில்லை அம்பலவாணற்குஓர்அன்னைபிதா

இல்லாத தாழ்வு அல்லவோ? இங்ஙனே எளிது ஆனதுவே.

 

இதன் பொருள் ---

 

இருள் செறிந்த சோலைகளால் சூழப்பட்டுள்ள தில்லையில் அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிகின்ற அம்பலவாசப் பெருமானுக்கு, இந்த உலகத்தில் ஒப்பற்ற தாய், தந்தை இல்லாத குறைவினால் அல்லவா, அருச்சுனன் வில்லால் அடிக்கவும்,

கண்ணப்பர் தமது செருப்புக் காலை திருக்கண்ணிலே வைக்கவும், பாண்டிய நாட்டு மன்னனாகிய பாண்டியன் வெகுண்டு பிரம்பினால் அடிக்கவும், சாக்கிய நாயனார் கல்லால் அடிக்கவும் நேர்ந்தது (என்று பழிப்பது போலவும்). இவ்வளவும் இறைவன் எல்லோர்க்கும் எளியனாகத் தோன்றி அருள் புரிவதால் ஆகும். (என்று இறைவனது அடியார்க்கு எளியனாம் தன்மையைப் புகழ்வது போலவும் பாடபட்டது.)

 

     காசினி --- உலகம். அல் ஆர் பொழில் (அல்லார் பொழில்) --- இருள் செறிந்த சோலை. மரங்களும் செடிகளும் அடர்ந்து வளர்ந்து,  பகலில் சூரியனது ஒளியும், இரவில் சந்திரனது ஒளியும் புகாதபடி உள்ளதால், "இருள் செறிந்த சோலை" என்றார்.  அம்பலவாணன் --- பொன்னம்பலம் என்னும் அருள்வெளியில், உயிர்களுக்கு அருள் புரிவதற்காக, அனவரதமும் ஆனந்தத் திருநடனம் புரிந்து அருளுகின்ற சிவபெருமான். இறைவன் பிறப்பு இறப்பு அற்றவன். எனவே,தாய் தந்தை அற்றவன். எல்லா உயிர்க்கும் தாயாகவும், தந்தையாகவும் இருந்து அருள் புரிபவன். தாழ்வு --- குறைவு. எளிது ஆனது --- எளிதாய் முடிந்தது.


இல்லறம் அல்லது நல்லறம் அன்று

 

இல்லறமே நல்ல அறம்

-----

 

     "இல்லறம் அல்லது நல்லறம் அன்று" என்கின்றது ஔவைப் பிராட்டியார் அருளிய "கொன்றைவேந்தன்".

 

     இல்வாழ்வில் உள்ள ஒருவன், மற்ற நிலையில் உள்ள மூன்று தரத்தாருக்கும் உரிய துணை ஆவான். இயல்பு நெறியான பிரமச்சரியம் அல்லது மாணாக்கர் நிலை, வானப்பிரஸ்தம் என்னும் தவநிலை, சந்நியாசம் என்னும் துறவு நிலை, ஆக மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் நல்ல துணையாக விளங்குபவன். இதனைத் திருவள்ளுவ நாயனார், பின்வரும் ஒரு திருக்குறளால் காட்டுகின்றார்..

 

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்

நல்ஆற்றின் நின்ற துணை.

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     திருக்குறள் அறத்துப்பாலுக்கு அரியதொரு உரை விளக்கம் கண்டவர், கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தமது உரையில் மூவர் என்னும் சொல்லுக்கு, "தாய், தந்தை, தாரம்" என்னும் மூவரையே குறித்தருளினார்.

 

     இதனையே திருவள்ளுவ நாயனார், வேறுவகையில் ஒருவனுக்கு இல்லறக் கடமைகள் எவை என்பதை உணர்த்துகின்றார்..

 

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.

 

     இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் வருகின்ற திருக்குறள் இது. மறைந்த முன்னோர், கடவுள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐவகையினரிடத்தும் செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்து வருதலே சிறப்பு என்பது இதன் பொருள்.

 

     கப்பல் ஓட்டிய தமிழர் என்னும் சிறப்புப் பெற்ற வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தமது உரையில் "தென்புலத்தார்" என்னும் சொல்லுக்கு, "மெய்யறிவு உடையவர்" என்றே உரை கண்டருளினார். இதுவே, எனக்கும் உடன்பாடானது.

 

     இல்லறமே சிறந்தது என்பதனை மேலும் நமக்குத் தெளிவாக்குவது அறப்பளீசுர சதகம் என்னும் நூலில் வரும் ஒரு பாடல். இல்லறம் என்பதன் இலக்கணத்தையும், அது துறவறத்தை விடச் சிறந்தது என்பதையும் அற்புதமாக விளக்குவது.

 

தந்தைதாய் சற்குருவை, இட்டதெய் வங்களை,

சன்மார்க்கம் உளமனை வியைத்

தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

தனைநம்பி வருவோர் களைச்

 

சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

தென்புலத் தோர் வறிஞரைத்

தீதுஇலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

தேனுவைப் பூசுரர் தமைச்

 

சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

தான்புரிந் திடல்இல் லறம்;

சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

தம்முடன் சரியா யிடார்!

 

அந்தரி உயிர்க்குஎலாம் தாய்தனினும் நல்லவட்கு

அன்பனே! அருமை மதவேள்

அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

அறப்பளீ சுரதே வனே!

 

இப் பாடலின் பொருள்....

 

     அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு

அன்பனே --- பார்வதி தேவியும், எவ்வுயிர்க்கும் தாயினும் நல்லவளும் ஆன உமாதேவியின் அன்புக்கு உகந்தவனே!, எமது அருமை மதவேள் --- எம் அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு --- எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- சதுர கிரியில் எழுந்தருளி உள்ள அறப்பளீசுர தேவனே!

 

     தந்தைதாய் சற்குருவை --- தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை --- வழிபாட்டிற்கு உரிய தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை --- நல்லொழுக்கமுடைய இல்வாழ்க்கைத் துணையையும், தவறாத சுற்றத்தை --- நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை --- ஒரு செயலைச் சொல்லும் முன்னரேயே சொல்லுகின்றவரின் குறிப்பை அறிந்து செயல் செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை --- தன்னை நம்பி வருகின்றவர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை --- மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும்,

 

     தென்புலத்தோர் --- மறைந்த முன்னோரையும், , வறிஞரை --- ஏழைகளையும், தீது இலா அதிதியை --- குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை --- அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை --- பசுக்களையும், பூசுரர் தமை --- அந்தணர்களையும், (ஆதரித்தலும்)

 

     சந்ததம் செய் கடனை --- எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை --- (ஆகிய) இவைகளை, சந்ததம் பிழையாது --- எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் --- ஒருவன் செய்து வருவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரி ஆயிடார் --- பொருந்திய நன்மையை உடையவர்களாகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இப்படிப்பட்ட இல்லறத்தானுக்கு ஒப்பாகமாட்டார்கள்.

 

     இல்லறத்தின் சிறப்பை மேலும் தெளிவுபடுத்தும் விதத்திலே இன்னொரு பழம் பாடலையும் காண்போம். பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்....

 

புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார்

     வளம்தழைத்த பொன்னி நாட்டில்,

சொல்லறமா தவம்புரியும் சௌபரியும்

     துறவறத்தைத் துறந்து மீண்டான்!

நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை

     மனைவியுடன் நடத்தி நின்றான்!

இல்லறமே பெரிதாகும்! துறவறமும்

     பழிப்புஇன்றேல் எழில தாமே!

 

இதன் பொருள்.....

 

     புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார் வளம் தழைத்த பொன்னி நாட்டில் --- சிற்றறிவு உடையவர்களால் காணமுடியாத தண்டலையாரின் வளம் மிகுந்த காவிரி (பாயும் சோழ) நாட்டில், சொல் அற மாதவம் புரியும் சௌபரியும் --- பேச்சு அற்ற நிலையில் பெருந்தவம் செய்து வந்த சௌபரி என்பவனும், துறவறத்தைத் துறந்து மீண்டான் --- துறவறத்தை விட்டு இல்வாழ்க்கைக்குத் திரும்பினான், வள்ளுவர் போல மனைவியுடன் நல்லறம் ஆம் குடிவாழ்க்கை நடத்தி நின்றான் --- திருவள்ளுவ நாயனாரைப் போல இல்லாளுடன் நல்ல அறமாகிய குடிவாழ்க்கையை இனிதே கழித்தான். (ஆகையால்), இல் அறமே பெரிது ஆகும் --- மனையறமே சிறந்தது ஆகும், துறவு அறமும் பழிப்பு இன்றேல் எழிலது ஆம் --- துறவறமும் (பிறரால்) பழிக்கப் படாமல் இருந்தால் அழகியதாகும்.

 

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை; அஃதும்

பிறன்பழிப்ப(து) இல்லாயின் நன்று'

 

என்னும் திருக்குறளின் பொருள் இங்கு வந்துள்ளது.

 

 

ஆத்திசூடி --- 06. ஊக்கமது கைவிடேல்

 

 

ஆத்திசூடி --- 6. ஊக்கமது கைவிடேல்.

 

இதன் பொருள் ---

 

ஊக்கம் --- மன எழுச்சி, கைவிடேல் --- தளரவிடாதே.

 

     நீ எத்தொழில் செய்யும் பொழுதும் மனவலிமையினைக் கைவிட்டு விடாதே.

 

     முதலில் அறத்தைச் செய்ய விருப்பம் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி, அதன் பின்னர் நான்கு சூத்திரங்களைக் கொண்டு, அறம் எனப்படுவது, மனத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே என்பதை அறிவுறுத்த, அறத்திற்கு இழுக்காக அமைந்துள்ள குற்றங்களாகிய கோபம், அவா, அழுக்காறு எனப்படும் பொறாமை, இன்னாச் சொல் ஆகியவை உள்ளத்தில் குடிகொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     அவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றால், அறத்தைச் செய்ய முயலும்போது இயல்பாக உண்டாகின்ற இடையூறுகள் காரணமாக உள்ளத்தில் தளர்ச்சி கொண்டு மெலிந்து விடாமல் இருக்கவேண்டும் என்று கூறும் முகத்தான், "ஊக்கமது கைவிடேல்" என்று அறிவுறுத்தினார்.

 

     எந்த ஒரு செயலையும் செய்யப் புகும் அளவிலேயே அது முடிவதில்லை. அது முடியவேண்டும் என்னும் ஊக்கம் உள்ளத்தில் இருக்கவேண்டும். இடையில் வரும் ஊறுகளால் தளர்ச்சி அடைந்து, ஊக்கத்தைக் கைவிட்டு விடுதல் கூடாது.

 

     தமக்கு உயர்வு வேண்டி மனத்தில் எழுச்சி கொள்ளுதல் இனிமையைத் தரும் என்னும் பொருளில் "உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே" என்கின்றது "இனியவை நாற்பது" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

     உடல் வலிமையும், பொருள் வலிமையும், பிற வலிமைகளும், மனத்தில் ஊக்கம் இல்லாதபோது பயனற்றவை ஆகிவிடும். எனவே, உள்ளம் தளர்ந்து ஓய்ந்து விடுதல் கூடாது.

 

     மன எழுச்சி என்னும் ஊக்கம் அனைவருக்கும் அவசியமானது என்பதை வலியுறுத்த, திருவள்ளுவ நாயனார், "ஊக்கம் உடைமை" என்று ஓர் அதிகாரத்தை வைத்தார். ஒருவனுக்கு நிலைத்த செல்வம் எனப்படுவது ஊக்கம் உடைமையே ஆகும். மற்றபடி, அவன் பெற்றிருக்கும் பொருட்செல்வமானது நிலைத்து இராமல் நீங்கிவிடும் தன்மையை உடையது என்பதை உணர்த்த, "உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்" என்றும், மனவலிமையே ஒருவனுக்குச் செல்வம் ஆகும்; அது இல்லாதவன் உருவத்தால் மனிதனாக இருந்தாலும், அவன் உணர்ச்சி இல்லாத மரமாகவே கருதப்படுவான் என்பதை அறிவுறுத்த, "உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார் மரம், மக்கள் ஆதலே வேறு" என்று அருளினார்.

 

     அறத்தைச் செய்து உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்வதற்கு ஊக்கம் இன்றியமையாதது ஆகும். ஆசைப்பட்டது எதுவும், முயற்சியின்றி உடனே கைகூடுவது இல்லை. எனவே, நல்ல செயல்களைச் செய்வதற்கு ஊக்கம் கொள்ளவேண்டும். எளிதில் பெறக் கூடிய பொருள் நலங்களைக் கருதி, பேராசை காரணமாக, அறச் செயல்களைச் செய்வதில் மனத் தளர்ச்சி தோன்றுதல் கூடாது என்கின்றது, "இனியவை நாற்பது" என்னும் நூல்.

 

"உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்

ஒற்கம் இலாமை இனிது" 

 

இதன் பொருள் ---     

 

         மிக்க பேராசையைக் கருத்துள் கொண்டு, அற வழியில் இருந்து நீங்குதற்கு ஏதுவாகிய மனத்தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.

 

     பேராசையானது மிகுந்தால், அது நிறைவுறும் வரையில் துன்பம். நிறைவேறாவிட்டாலும் துன்பம். ஆனால், அறவழியில் முயலுவது எப்போதும் உயிருக்குத் துன்பத்தைத் தராது; முயன்ற வரையில் நன்மையே விளையும் என்பதை அறிதல் வேண்டும். இம்மை மறுமை நலங்களைத் தந்து, முடிவில் அந்தம் இல்லாத இன்பத்தைத் தருகின்ற அழிவில்லாத வீட்டின்பத்தையும் தருதலால், அறத்தைக் கைவிடுதல் கூடாது.

 

     எனவே, அறச்செயல்களைச் செய்கையில் உள்ளத் தளர்ச்சி கொள்ளுதல் அறவே கூடாது என்று கூறும் முகத்தான், "ஊக்கமது கைவிடேல்" என்று அருளினார் நமது பெரியபாட்டி.


ஆத்திசூடி --- 05. உடையது விளம்பேல்

 

 

ஆத்திசூடி --- 5. உடையது விளம்பேல்.

-----

 

     ஆத்திசூடி என்னும் அறநூலில், ஐந்தாவதாக ஔவைப் பாட்டி சொல்லும் அறிவுரை, "உடையது விளம்பேல்" என்பது.

 

இதன் பொருள் ---

 

     உடையது --- (உனக்கு) உள்ள பொருளை,  விளம்பேல் --- (பிறர் அறியும்படி) சொல்லாதே. (என்று சொல்லப்பட்டு உள்ளது)

    

     "விளம்பல்" அல்லது "விளம்புதல்" என்னும் சொல்லுக்கு, வெளிப்படக் கூறுதல், பரப்புதல் என்று பொருள்.

 

     தன்னிடத்து உள்ள பொருளை ஒருவன் வெளிப்படக் கூறுதல் கூடாது என்று பொருள் கொள்ளுவது சிறப்பாகாது. யாரும் தன்னிடத்தில் உள்ள பொருளை வெளிப்படக் கூறுவது இல்லை. தன்னிடத்து உள்ள அறிவு, வீரம் முதலியவற்றை வெளிப்படக் கூறினாலும், தன்னிடத்து உள்ள செல்வத்தை வெளிப்படையாக யாரும் விளம்புதல் இல்லை என்பது உலகறிந்த உண்மை.

 

     அறிவு விளங்கப் பெற்றவர் யாரும் தன்னிடத்தில் அறிவு மிகுந்துள்ளது என்று கூறிக் கொள்ளமாட்டார்கள். தன்னிடத்து உள்ள பராக்கிரமத்தை, தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காக வெளிப்படுத்துகின்றவர்கள் உண்டு. மேலும், தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காக, பிறரிடத்தில் உள்ள குறைகளைத் தூற்றிக் கூறுவார்கள். குற்றம் கண்டே பேர் வாங்கும் பேர்வழிகள் உலகில் இல்லாமல் இல்லை.

 

     ஒருவன் தன்னைத் தானே வியந்துகொள்ளுதல் கூடாது என்பதை அறிவுறுத்த, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை" என்றும், அவ்வாறு தன்னைத் தானே வியந்து கொள்ளுகின்றவன் விரைந்து அழிந்து போவான் என்பதை அறிவுறுத்த, "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்றும், பிறரிடத்து உள்ள குற்றம் குறைகளைப் பிறர் அறியச் சொல்லாது இருப்பது சான்றாண்மை என்பதை அறிவுறுத்த, "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றும் திருவள்ளுவ நாயனார் அருளி இருத்தல் காண்க.

 

     தன்னிடத்து உள்ள பெருமையை ஒருவன் எப்போதும் பிறர் அறியக் கூறிக் கொண்டே இருப்பானாயின், அதனைப் பிறர் விரும்பாமல் வெறுக்கவே செய்வர். அதுபோலவே, எப்போதும் பிறரது குற்றம் குறைகளை விரித்துக் கூறிக்கொண்டே இருந்தாலும் விரும்பத் தக்கதாக இராது.

 

     எனவே, ஒருவன் தன்னிடத்தில் உள்ள நன்மைகளைப் பெரிதாக மதித்துப் பிறரிடம் கூறி விளம்பரப்படுத்துதல் வேண்டாம் என்றும், பிறரிடத்தில் உள்ள குறைகள் தன்னிடத்தும் இருக்கும் என்பதை ஆராயாமல், பிறரது குற்றங்களையே பரக்கப் பேசிக் கொண்டு இருக்க வேண்டாம் என்பதாக ஔவைப் பாட்டி அறிவுறுத்தியாகக் கொள்வதே பொருத்தம் உடையதாக இருக்கும்.

 

     ஒருவனிடத்துப் பொருந்தி உள்ள அறிவு, அழகு முதலான நன்மைகளைப் பிறர் மதித்துப் போற்றவேண்டும். தன்னுடைய பெருமைகளை ஒருவன் தானே வெளிப்படுத்தித் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவனை, மருந்தாலும் தெளிவிக்கமுடியாத பைத்தியம் என்றே பிறர் எள்ளி நகையாடுவார்கள் என்கின்றது நாலடியார்....

 

கற்றனவும், கண்அகன்ற சாயலும், இல்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்.             

 

இதன் பொருள் ---

 

     தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  அவ்வாறு அன்றித் தானே புகழ்ந்து கொண்டால், தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

 

     தீ வளரும் என்று நீர் விட்டால், முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ? அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பு மிகாது அழிந்தே போகும் என்பதை, குமரகுருபர அடிகள் அருளிய "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் காணலாம்.

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்.  

 

இதன் பொருள் ---

 

     தன்னைப் பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், நல்ல குளிர்ந்த நீரைக் கொட்டி நெருப்பை வளர்த்தது போல் ஆகும். நீரால் நெருப்பு வளராது அவிந்து போகும். எனவே, தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளாமையே அவனுக்கு நன்மதிப்பைத் தருவது. இன்பத்தை விரும்பாமை தான் இன்பம் தருவது.

 

     தன்னைப் பிறர்மதிக்க வேண்டும் என்று எண்ணுபவன், தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமல் தன்னைத் தாழ்மையாகவே உரைத்துக் கொண்டு, பிறரிடத்தில் காணப்படும் உயர்ந்த செயல்களைப் பிறர் அறியப் புகழ்ந்து கூறி, அவரது தாழ்ந்த செயல்களை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கின்றார் குமரகுருபர அடிகள் "நீநிநெறி விளக்கம்" என்னும் நூலில்.

 

பிறரால் பெரும்சுட்டு வேண்டுவான் யாண்டும்

மறவாமே நோற்பது ஒன்று உண்டு, - பிறர்பிறர்

சீர்எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து,

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.                

 

இதன் பொருள் ---

 

     மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுவதற்காக, பெருமதிப்பை விரும்புகின்ற ஒருவன், எப்போதும்  மறவாமல் பின்பற்ற வேண்டியது ஒன்று உள்ளது. அது யாதெனில்,  மற்றவருடைய பெருமைகளை எல்லாம் மறைக்காமல் வெளியே பரப்பி, அவர்களிடத்து உள்ள தீயவொழுக்கத்தை மட்டும் அங்ஙனம் வெளியே பரப்பாமல் காத்து, எல்லாரிடத்திலும் வணக்கமான மொழிகளையே பேசுதலாம்.

 

     தன் உயர்வு கருதிப் பிறரை இழித்துப் பேசாமலும், தனது உடைமையைப் பிறர் அறிய வெளிப்படுத்தாமலும் வாழ்வதை ஒழுக்கமாகக் கொண்டு, வறியார்க்கு இட்டு உண்பவன், தேவர் தலைவனாகப் போற்றபடுவான் என்று, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஏலாதி" என்னும் நூல் கூறுவதால், பிறரைப் பழித்துப் பேசாமலும், தனது உடைமைகளைப் பிறர் அறியக் கூறாமலும் இருத்தல் வேண்டும் என்பது புலனாகும்.

 

உரையான் குலன்குடிமை; ஊனம் பிறரை

உரையான்; பொருளொடுவாழ்வு, யு - உரையானாய்,

பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய்! ஈத்து உண்பான்

தேவாதி தேவனாத் தேறு.      

 

இதன் பொருள் ---

 

     வண்டுகள், மலர்கள் முதலியவற்றை ஆராய்ந்து மொய்த்து உண்ணுகின்ற கூந்தலையுடைய பெண்ணே!, தன் குலத்தின் உயர்வையும், தன் குடிப்பிறப்பின் உயர்வையும், பெருமை பாராட்டிச் சொல்லிக் கொள்ளாமல், அவ் இரண்டு வகையான உயர்வும் இல்லாத மற்றவரை, குற்றம் சொல்லாமல், தன் பொருளும் வாழ்வும், வாழ்நாள் எல்லையும், பிறர் அறிய வெளிப்படுத்தாதவன் ஆகி, வறியார்க்குக் கொடுத்துத் தானும் உண்பவனைத் தேவர்கள் தலைவன் என்று தெளிவாயாக.

 

     இக் கருத்தையே "ஏலாதி" என்னும் நூல் மேலும் வலியுறுத்தவது காண்க...

 

 

பொய்யுரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,

மெய்யுரையான் உள்ளனவும் விட்டு உரையான் - எய் உரையான்,

கூந்தல் மயில் அன்னாய்! குழீஇய வான் விண்ணோர்க்கு

வேந்தன் ஆம் இவ்வுலகம் விட்டு.  

 

இதன் பொருள் ---

 

     மயில் தோகையைப் போன்ற கூந்தலை உடைய பெண்ணே!, பொய் சொல்லான்; எவரையும் இகழான்; ஒருவரையும் புறம்பாக இழித்துப் பேசான்; பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான்; தன்மாட்டு உள்ள பொருள்களையும் வெளிப்படுத்துச் சொல்லான், நண்பன் இடத்திலேயும் தனக்கு உள்ள வறுமையை வெளிப்படுத்தாதவனாகிய ஒருவன், இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி, மேலுவலகத்தில் கூடியுள்ள, தேவர்களுக்குத் தலைவன் ஆவான்.

 

     ஒழுக்கத்தில் இருந்து தவறாத உள்ளத்தை உடையவர் பண்பு குறித்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஆசாரக் கோவை" கூறுவதையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

 

படிறும் பயனிலவும் பட்டி உரையும்

வசையும் புறனும் உரையாரே, என்றும்

அசையாத உள்ளத் தவர்.            

 

இதன் பொருள் ---

 

     எக்காலத்தும் ஒழுக்கத்தினின்றும் தவறாத மனம் உடையோர், வஞ்சனைச் சொல்லையும், பயனற்ற சொல்லையும், நாவடக்கம் இல்லாத சொல்லையும், பழிச் சொல்லையும், புறங்கூறுதலையும் சொல்லார்.

 

     எனவே, "உடையது விளம்பேல்" என்று ஔவைப் பாட்டி அறிவுறுத்தியது, தன்னுடையதாகிய பெருமையையும், பிறருடையது ஆகிய சிறுமையையும் பிறர் அறியுமாறு விரித்துக் கூறுதல் கூடாது என்பதாகும்.


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...