ஆத்திசூடி --- 06. ஊக்கமது கைவிடேல்

 

 

ஆத்திசூடி --- 6. ஊக்கமது கைவிடேல்.

 

இதன் பொருள் ---

 

ஊக்கம் --- மன எழுச்சி, கைவிடேல் --- தளரவிடாதே.

 

     நீ எத்தொழில் செய்யும் பொழுதும் மனவலிமையினைக் கைவிட்டு விடாதே.

 

     முதலில் அறத்தைச் செய்ய விருப்பம் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி, அதன் பின்னர் நான்கு சூத்திரங்களைக் கொண்டு, அறம் எனப்படுவது, மனத்தில் குற்றம் இல்லாமல் இருப்பதே என்பதை அறிவுறுத்த, அறத்திற்கு இழுக்காக அமைந்துள்ள குற்றங்களாகிய கோபம், அவா, அழுக்காறு எனப்படும் பொறாமை, இன்னாச் சொல் ஆகியவை உள்ளத்தில் குடிகொள்ளாமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

 

     அவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்றால், அறத்தைச் செய்ய முயலும்போது இயல்பாக உண்டாகின்ற இடையூறுகள் காரணமாக உள்ளத்தில் தளர்ச்சி கொண்டு மெலிந்து விடாமல் இருக்கவேண்டும் என்று கூறும் முகத்தான், "ஊக்கமது கைவிடேல்" என்று அறிவுறுத்தினார்.

 

     எந்த ஒரு செயலையும் செய்யப் புகும் அளவிலேயே அது முடிவதில்லை. அது முடியவேண்டும் என்னும் ஊக்கம் உள்ளத்தில் இருக்கவேண்டும். இடையில் வரும் ஊறுகளால் தளர்ச்சி அடைந்து, ஊக்கத்தைக் கைவிட்டு விடுதல் கூடாது.

 

     தமக்கு உயர்வு வேண்டி மனத்தில் எழுச்சி கொள்ளுதல் இனிமையைத் தரும் என்னும் பொருளில் "உயர்வு உள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே" என்கின்றது "இனியவை நாற்பது" என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்.

 

     உடல் வலிமையும், பொருள் வலிமையும், பிற வலிமைகளும், மனத்தில் ஊக்கம் இல்லாதபோது பயனற்றவை ஆகிவிடும். எனவே, உள்ளம் தளர்ந்து ஓய்ந்து விடுதல் கூடாது.

 

     மன எழுச்சி என்னும் ஊக்கம் அனைவருக்கும் அவசியமானது என்பதை வலியுறுத்த, திருவள்ளுவ நாயனார், "ஊக்கம் உடைமை" என்று ஓர் அதிகாரத்தை வைத்தார். ஒருவனுக்கு நிலைத்த செல்வம் எனப்படுவது ஊக்கம் உடைமையே ஆகும். மற்றபடி, அவன் பெற்றிருக்கும் பொருட்செல்வமானது நிலைத்து இராமல் நீங்கிவிடும் தன்மையை உடையது என்பதை உணர்த்த, "உள்ளம் உடைமை உடைமை; பொருள் உடைமை நில்லாது நீங்கிவிடும்" என்றும், மனவலிமையே ஒருவனுக்குச் செல்வம் ஆகும்; அது இல்லாதவன் உருவத்தால் மனிதனாக இருந்தாலும், அவன் உணர்ச்சி இல்லாத மரமாகவே கருதப்படுவான் என்பதை அறிவுறுத்த, "உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை; அஃது இல்லார் மரம், மக்கள் ஆதலே வேறு" என்று அருளினார்.

 

     அறத்தைச் செய்து உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்வதற்கு ஊக்கம் இன்றியமையாதது ஆகும். ஆசைப்பட்டது எதுவும், முயற்சியின்றி உடனே கைகூடுவது இல்லை. எனவே, நல்ல செயல்களைச் செய்வதற்கு ஊக்கம் கொள்ளவேண்டும். எளிதில் பெறக் கூடிய பொருள் நலங்களைக் கருதி, பேராசை காரணமாக, அறச் செயல்களைச் செய்வதில் மனத் தளர்ச்சி தோன்றுதல் கூடாது என்கின்றது, "இனியவை நாற்பது" என்னும் நூல்.

 

"உற்ற பேராசை கருதி அறன் ஒரூஉம்

ஒற்கம் இலாமை இனிது" 

 

இதன் பொருள் ---     

 

         மிக்க பேராசையைக் கருத்துள் கொண்டு, அற வழியில் இருந்து நீங்குதற்கு ஏதுவாகிய மனத்தளர்ச்சி இல்லாதிருத்தல் இனிது.

 

     பேராசையானது மிகுந்தால், அது நிறைவுறும் வரையில் துன்பம். நிறைவேறாவிட்டாலும் துன்பம். ஆனால், அறவழியில் முயலுவது எப்போதும் உயிருக்குத் துன்பத்தைத் தராது; முயன்ற வரையில் நன்மையே விளையும் என்பதை அறிதல் வேண்டும். இம்மை மறுமை நலங்களைத் தந்து, முடிவில் அந்தம் இல்லாத இன்பத்தைத் தருகின்ற அழிவில்லாத வீட்டின்பத்தையும் தருதலால், அறத்தைக் கைவிடுதல் கூடாது.

 

     எனவே, அறச்செயல்களைச் செய்கையில் உள்ளத் தளர்ச்சி கொள்ளுதல் அறவே கூடாது என்று கூறும் முகத்தான், "ஊக்கமது கைவிடேல்" என்று அருளினார் நமது பெரியபாட்டி.


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...