நட்டாற்றில் கைவிடுவார் நட்பு கூடாது

 

நட்டாற்றில் கைவிடுவார் நட்பு கூடாது

-----

 

     திருக்குறளில், "நட்பு ஆராய்தல்" என்னும் ஓர் அதிகாரம். முந்திய அதிகாரத்தில் நட்பினது இலக்கணம் கூறிய நாயனார் இதில், அந்த இலக்கணம் உடையாரை ஆராய்ந்து அறிந்து நண்பராகக் கொள்ளுவது பற்றிக் கூறினார்.

 

     ஒருவனோடு நட்புக் கொள்ளவேண்டுமானால், தான் நண்பனாகக் கொள்ளுகின்றவனது குணங்களையும், அவனது செய்கைகளையும் ஆராய்ந்து, குணமும் செயலும் நன்மையாக இருக்குமானால், நட்புக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் அவ்வாறு நட்புக் கொண்ட பிறகு நண்பர்க்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இருக்கவேண்டும். பழகிய பின்னர்  பிரிவு என்பது யாருக்கும் துன்பத்தையே தரும். "பேயோடு ஆயினும் பிரிவு இன்னாது" (பேயோடு பழகிவிட்டாலும், பிரிவது துன்பத்தேயை தரும்) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "பேய்வயினும் அரிது ஆகும் பிரிவு" (பேயோடு நட்புக் கொண்டாலும் பிரிவது அரிது ஆகும்) என்று மணிவாசகப் பெருமானும் பாடி அருளியதையும் எண்ணுதல் நலம் தரும்.

 

     "இணக்கம் அறிந்து இணங்கு" என்பது ஆத்திசூடி. நட்புக்கு ஏதுவாகிய நற்குண நற்செய்கைகளை ஆராய்ந்து அறிந்த பின் ஒருவரோடு நட்புக் கொள்ளவேண்டும். உள்ளத்தால் ஒத்த பண்பு உடையாரே நட்புக் கொள்ளத் தகுதி உடையவர்.

 

     "பாம்பொடு பழகேல்" என்பதும் ஆத்திசூடி. பாம்பானது பால் கொடுத்தவருக்கும் விடத்தைக் கொடுக்கின்ற தன்மையினை உடையது. தமக்கு நன்மையையே ஒருவர் செய்தாலும், அதைக் கருதி நன்றி பாராட்டாமல், தீமையையே செய்வர்கள் பாம்பினைப் போன்றவர்கள். அத்தகையவர்களோடு பழக்கத்தைக் கொள்ளாதே என்பது நமது பெரியபாட்டியின் அரிய அறிவுரை.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "அழிவு நேரும் காலத்தில் தம்மைக் கைவிட்டுச் செல்கின்றவர் நட்பை, இறக்கும் காலத்தில் எண்ணிப் பார்த்தாலும் மனத்தை வருத்தும்" என்கின்றார் நாயனார்.

 

     நண்பனாக இருந்து ஒருவன், துன்பம் வந்த காலத்தில் கைவிட்டு நீங்குவானானால், அது மிகவும் கொடிய செயல் ஆகும். அதனை எண்ணும்போதெல்லாம் மனம் சுடும். அது மரண வேதனையால் துடிக்கின்ற காலத்தில் எண்ணினாலும் கூட உள்ளத்தை வருத்தும் என்பதைக் காட்ட,

 

கெடும்காலைக் கைவிடுவார் கேண்மை, அடும்காலை

உள்ளினும்  உள்ளம் சுடும்.               

 

என்னும் திருகக்குறளை அருளினார் நாயனார்.

 

     பின் வரும் பாடல், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை காண்க...

 

பொருளிலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;

நெடுமாட நீள்நகர்க் கைத்து இன்மை இன்னா;

வருமனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா

கெடும்இடம் கைவிடுவார் நட்பு. --- இன்னா நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா --- செல்வம் இல்லாதவன் பிறர்க்கு உதவி புரிதலை விரும்புதல் துன்பமாம்; நெடு மாடம் நீள் நகர் கைத்து இன்மை இன்னா --- நெடிய மாடங்களை உடைய பெரிய நகரத்திலே வாழ்கின்றவன், கையில் பொருளின்றி இருத்தல் துன்பமாம்; வரு மனை பார்த்து இருந்து ஊண் இன்னா --- வரப்பட்ட மனையில் உள்ளாரை, எதிர்நோக்கி இருந்து, உணவு உண்ணுதல் துன்பமாம்; கெடும் இடம் கைவிடுவார் நட்பு இன்னா --- வறுமை வந்த காலத்தில், கைவிட்டு நீங்குவாரது நட்பு துன்பமாம்.

 

     வளமாக வாழுகின்றபோது கூடி இருந்து மகிழ்ந்து, எல்லாவற்றையும் ஒன்றாக அனுபவித்து விட்டு, கேடு வந்த போது, விட்டு நீங்குகின்றவர்களது நட்பானது, எண்ணும் போதெல்லாம் உள்ளத்தைத் துன்புறுத்தும். எனவே, ஆராய்ந்து ஒருவரிடம் நட்புக் கொள்ளுதல் நல்லது.

No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...