அறிவுடையாரின் பகைமை நல்லது

 

 

அறிவுடையாரின் பகைமை நல்லதே

அறிவில்லாரின் நட்பு தீயதே.

-----

 

     நட்பும் பகையும் அவரவர் அறிவின்படியும், விருப்பத்தின்படியும் அமைவது. அறியாமை மூடி இருக்கும் நிலையை "மூடத்தனம்" என்பர். உண்மை அறிவினை விளங்கவொட்டாமல், அறியாமையானது மூடி இருக்கின்றது என்று பொருள். இந்த நிலையில், அவரவர் விருப்பம் போல் எதுவும் நடந்து விட்டால், நல்லதைத் தீயதாகவும், தீயதை நல்லதாகவும் கொள்ளுகின்ற தன்மை உண்டாகும். எனவேதான், "நட்பு ஆராய்தல்" என்னும் ஓர் அதிகாரத்தைத் திருவள்ளுவ நாயனார் வைத்து அருளினார். ஆராய்ந்து நட்புக் கொள்ளவேண்டும். ஆராயமல் நட்புக் கொண்டால், அது கூடாநட்பாக இருந்து, கேட்டில் முடியும்.

 

     அறிவுடையவரை நட்பாகக் கொள்ளுதல் நலம் மிக்கது. அறிவில்லாதவரோடு தொடர்பு கொள்வதை விடுத்து விலகி இருப்பது நல்லது. அறிவுடையோர் ஒருக்கால் பகைவர் ஆக  நேர்ந்தாலும், அவரால் ஒரு துன்பமும் விளையாது. அறிவில்லாத புல்லரோடு நட்புக் கொண்டு இருந்தால், அது துன்பத்தையே விளைக்கும் என்பதைக் காட்ட, "நீதி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

 

அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்,

சிறுவன் பகையாம், செறிந்த - அறிவுடைய

வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான், முன்

கொன்றதுஒரு வேந்தைக் குரங்கு.

 

இதன் பொருள் ---

 

         முன் ஒரு காலத்தில் அறிவும் வெற்றியும் உடைய வேடன் ஒருவன், ஒரு அந்தணன் உயிரைக் காத்தான். ஒரு குரங்கு ஓர் அரசனை அறிவில்லாமையால் கொன்றுவிட்டது. அதுபோல, அறிவு உடையவன் பகைவன் ஆனாலும் அன்புள்ள நண்பனாக விளங்குவான். அவனால் யாதொரு தீங்கும் நேராது. ஆனால், அறிவு இல்லாதவன் நண்பனாக இருந்தாலும், அவனால் நன்மை இல்லை. அவன் பகைவனாக மாறவும் கூடும்.

 

( அறிவன் --- அறிவுடையவன். சிறுவன் --- அறிவில்லாதவன். செறிந்த --– நிறைந்த. வென்றி --- வெற்றி. வனசரன் --- காட்டில் திரிபவன், வேடன். வேதியன் --- பார்ப்பனன்.)

 

வனசரன் கதை.

 

         முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒர் அந்தணனுக்கு ஒரு மாணிக்க மணியை வழங்கினான். மணியை வாங்கிய அந்தணன்  அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்லுகையில், வழியில் யாரேனும் கள்வர் கவர்ந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, வீட்டிற்குச் சென்றதும் மணியைக் கக்கி எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணி அம் மணியை வாயில் போட்டுக் கொண்டான்.  இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தணனைத் தொடர்ந்து போய் வழிமறித்து, "உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான். அந்தணன் அதனைக் கேட்டு அஞ்சி, "மாணிக்கம் உன் வயிற்றில் தானே உள்ளது" என்று சொன்னான். இருவரும் இவ்வாறு வாதிட்டுக் கொண்டு இருக்கும்போது,  திருடர்கள் வந்து அந்தணனைப் பிடித்துக் கொண்டு மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள். அந்தணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அவன் அறிவு உள்ளவன். ஆதலால், அவன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு, அவனைக் காக்க எண்ணி, திருடர்களைப் பார்த்து, "ஐயா நாங்கள் விளையாட்டாகப் பேசிக்கொண்டு இருந்தோம். மாணிக்கம் வயிற்றில் எப்படி இருக்கும்.  வேண்டுமானால் என் வயிற்றை அறுத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான். வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்த திருடர்கள் மாணிக்கம் இல்லாதது கண்டு, வேடனை வீணாகக் கொன்றுவிட்டோமே என்று எண்ணி, அந்தணனை விட்டுவிட்டார்கள். அந்தணன் உயிர் பிழைத்தான் மாணிக்கத்தோடு. வேடன் அந்தணனுக்குப் பகைவனாக இருந்தாலும் அவன் அறிவு உள்ளவனாக இருந்ததால், அந்தணன் மீது அன்பு கொண்டு அவனைக் காக்கத் தனது உயிரை விட்டான்.

  

குரங்கின் கதை

 

         ஓர் அரசன், ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.  ஒரு நாள் அரசன் அக் குரங்கிடம் ஒரு கத்தியைக் கொடுத்து, "இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே" என்று ஆணையிட்டு உறங்கச் சென்றான். அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது ஓர் ஈ வந்து அமர்ந்தது. குரங்கு அதனைப் பார்த்து, அந்த ஈயைக் கொல்லத்தான் அரசன் தன்னிடம் கத்தியைக் கொடுத்துள்ளான் என எண்ணியது. அதன் அறிவின்மை தான் காரணம். அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஓங்கிக் குத்தியது.  ஈ பறந்து விட்டது. ஆனால் அரசன் மாண்டான். அரசனிடம் குரங்கு அன்புடனிருந்தாலும், அறிவின்மையால் இத் தீங்கு அரசனுக்கு நேர்ந்தது.

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...