ஆத்திசூடி --- 05. உடையது விளம்பேல்

 

 

ஆத்திசூடி --- 5. உடையது விளம்பேல்.

-----

 

     ஆத்திசூடி என்னும் அறநூலில், ஐந்தாவதாக ஔவைப் பாட்டி சொல்லும் அறிவுரை, "உடையது விளம்பேல்" என்பது.

 

இதன் பொருள் ---

 

     உடையது --- (உனக்கு) உள்ள பொருளை,  விளம்பேல் --- (பிறர் அறியும்படி) சொல்லாதே. (என்று சொல்லப்பட்டு உள்ளது)

    

     "விளம்பல்" அல்லது "விளம்புதல்" என்னும் சொல்லுக்கு, வெளிப்படக் கூறுதல், பரப்புதல் என்று பொருள்.

 

     தன்னிடத்து உள்ள பொருளை ஒருவன் வெளிப்படக் கூறுதல் கூடாது என்று பொருள் கொள்ளுவது சிறப்பாகாது. யாரும் தன்னிடத்தில் உள்ள பொருளை வெளிப்படக் கூறுவது இல்லை. தன்னிடத்து உள்ள அறிவு, வீரம் முதலியவற்றை வெளிப்படக் கூறினாலும், தன்னிடத்து உள்ள செல்வத்தை வெளிப்படையாக யாரும் விளம்புதல் இல்லை என்பது உலகறிந்த உண்மை.

 

     அறிவு விளங்கப் பெற்றவர் யாரும் தன்னிடத்தில் அறிவு மிகுந்துள்ளது என்று கூறிக் கொள்ளமாட்டார்கள். தன்னிடத்து உள்ள பராக்கிரமத்தை, தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காக வெளிப்படுத்துகின்றவர்கள் உண்டு. மேலும், தன்னைப் பிறர் மதிக்கவேண்டும் என்பதற்காக, பிறரிடத்தில் உள்ள குறைகளைத் தூற்றிக் கூறுவார்கள். குற்றம் கண்டே பேர் வாங்கும் பேர்வழிகள் உலகில் இல்லாமல் இல்லை.

 

     ஒருவன் தன்னைத் தானே வியந்துகொள்ளுதல் கூடாது என்பதை அறிவுறுத்த, "வியவற்க எஞ்ஞான்றும் தன்னை" என்றும், அவ்வாறு தன்னைத் தானே வியந்து கொள்ளுகின்றவன் விரைந்து அழிந்து போவான் என்பதை அறிவுறுத்த, "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" என்றும், பிறரிடத்து உள்ள குற்றம் குறைகளைப் பிறர் அறியச் சொல்லாது இருப்பது சான்றாண்மை என்பதை அறிவுறுத்த, "பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு" என்றும் திருவள்ளுவ நாயனார் அருளி இருத்தல் காண்க.

 

     தன்னிடத்து உள்ள பெருமையை ஒருவன் எப்போதும் பிறர் அறியக் கூறிக் கொண்டே இருப்பானாயின், அதனைப் பிறர் விரும்பாமல் வெறுக்கவே செய்வர். அதுபோலவே, எப்போதும் பிறரது குற்றம் குறைகளை விரித்துக் கூறிக்கொண்டே இருந்தாலும் விரும்பத் தக்கதாக இராது.

 

     எனவே, ஒருவன் தன்னிடத்தில் உள்ள நன்மைகளைப் பெரிதாக மதித்துப் பிறரிடம் கூறி விளம்பரப்படுத்துதல் வேண்டாம் என்றும், பிறரிடத்தில் உள்ள குறைகள் தன்னிடத்தும் இருக்கும் என்பதை ஆராயாமல், பிறரது குற்றங்களையே பரக்கப் பேசிக் கொண்டு இருக்க வேண்டாம் என்பதாக ஔவைப் பாட்டி அறிவுறுத்தியாகக் கொள்வதே பொருத்தம் உடையதாக இருக்கும்.

 

     ஒருவனிடத்துப் பொருந்தி உள்ள அறிவு, அழகு முதலான நன்மைகளைப் பிறர் மதித்துப் போற்றவேண்டும். தன்னுடைய பெருமைகளை ஒருவன் தானே வெளிப்படுத்தித் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவனை, மருந்தாலும் தெளிவிக்கமுடியாத பைத்தியம் என்றே பிறர் எள்ளி நகையாடுவார்கள் என்கின்றது நாலடியார்....

 

கற்றனவும், கண்அகன்ற சாயலும், இல்பிறப்பும்

பக்கத்தார் பாராட்டப் பாடு எய்தும்; தான் உரைப்பின்

மைத்துனர் பல்கி மருந்தின் தணியாத

பித்தன் என்று எள்ளப் படும்.             

 

இதன் பொருள் ---

 

     தான் கற்ற கல்விகளும், காட்சிபரந்த தனது சாயலும், தனது உயர் குடிப் பிறப்பும் அயலவர் பாராட்டப் பெருமை அடையும்;  அவ்வாறு அன்றித் தானே புகழ்ந்து கொண்டால், தனக்கு முகமன் மொழிந்து விளையாடுவோர் மிகப் பெருகி அதனால், மருந்தினால் தெளியாத பித்தன் இவன் என்று உலகத்தவரால் இகழப்படும் நிலையை ஒருவன் அடைவான்.

 

     தீ வளரும் என்று நீர் விட்டால், முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ? அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பு மிகாது அழிந்தே போகும் என்பதை, குமரகுருபர அடிகள் அருளிய "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் காணலாம்.

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல், தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால், –  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்.  

 

இதன் பொருள் ---

 

     தன்னைப் பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காகத் தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளுதல், நல்ல குளிர்ந்த நீரைக் கொட்டி நெருப்பை வளர்த்தது போல் ஆகும். நீரால் நெருப்பு வளராது அவிந்து போகும். எனவே, தன்னைத் தானே ஒருவன் புகழ்ந்து கொள்ளாமையே அவனுக்கு நன்மதிப்பைத் தருவது. இன்பத்தை விரும்பாமை தான் இன்பம் தருவது.

 

     தன்னைப் பிறர்மதிக்க வேண்டும் என்று எண்ணுபவன், தன்னைத் தான் புகழ்ந்து கொள்ளாமல் தன்னைத் தாழ்மையாகவே உரைத்துக் கொண்டு, பிறரிடத்தில் காணப்படும் உயர்ந்த செயல்களைப் பிறர் அறியப் புகழ்ந்து கூறி, அவரது தாழ்ந்த செயல்களை வெளிப்படுத்தாமல் இருக்கவேண்டும் என்கின்றார் குமரகுருபர அடிகள் "நீநிநெறி விளக்கம்" என்னும் நூலில்.

 

பிறரால் பெரும்சுட்டு வேண்டுவான் யாண்டும்

மறவாமே நோற்பது ஒன்று உண்டு, - பிறர்பிறர்

சீர்எல்லாம் தூற்றிச் சிறுமை புறங்காத்து,

யார்யார்க்கும் தாழ்ச்சி சொலல்.                

 

இதன் பொருள் ---

 

     மற்றவர்களால் நன்கு மதிக்கப்படுவதற்காக, பெருமதிப்பை விரும்புகின்ற ஒருவன், எப்போதும்  மறவாமல் பின்பற்ற வேண்டியது ஒன்று உள்ளது. அது யாதெனில்,  மற்றவருடைய பெருமைகளை எல்லாம் மறைக்காமல் வெளியே பரப்பி, அவர்களிடத்து உள்ள தீயவொழுக்கத்தை மட்டும் அங்ஙனம் வெளியே பரப்பாமல் காத்து, எல்லாரிடத்திலும் வணக்கமான மொழிகளையே பேசுதலாம்.

 

     தன் உயர்வு கருதிப் பிறரை இழித்துப் பேசாமலும், தனது உடைமையைப் பிறர் அறிய வெளிப்படுத்தாமலும் வாழ்வதை ஒழுக்கமாகக் கொண்டு, வறியார்க்கு இட்டு உண்பவன், தேவர் தலைவனாகப் போற்றபடுவான் என்று, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஏலாதி" என்னும் நூல் கூறுவதால், பிறரைப் பழித்துப் பேசாமலும், தனது உடைமைகளைப் பிறர் அறியக் கூறாமலும் இருத்தல் வேண்டும் என்பது புலனாகும்.

 

உரையான் குலன்குடிமை; ஊனம் பிறரை

உரையான்; பொருளொடுவாழ்வு, யு - உரையானாய்,

பூவாதி வண்டுதேர்ந்து உண்குழலாய்! ஈத்து உண்பான்

தேவாதி தேவனாத் தேறு.      

 

இதன் பொருள் ---

 

     வண்டுகள், மலர்கள் முதலியவற்றை ஆராய்ந்து மொய்த்து உண்ணுகின்ற கூந்தலையுடைய பெண்ணே!, தன் குலத்தின் உயர்வையும், தன் குடிப்பிறப்பின் உயர்வையும், பெருமை பாராட்டிச் சொல்லிக் கொள்ளாமல், அவ் இரண்டு வகையான உயர்வும் இல்லாத மற்றவரை, குற்றம் சொல்லாமல், தன் பொருளும் வாழ்வும், வாழ்நாள் எல்லையும், பிறர் அறிய வெளிப்படுத்தாதவன் ஆகி, வறியார்க்குக் கொடுத்துத் தானும் உண்பவனைத் தேவர்கள் தலைவன் என்று தெளிவாயாக.

 

     இக் கருத்தையே "ஏலாதி" என்னும் நூல் மேலும் வலியுறுத்தவது காண்க...

 

 

பொய்யுரையான், வையான், புறங்கூறான் யாவரையும்,

மெய்யுரையான் உள்ளனவும் விட்டு உரையான் - எய் உரையான்,

கூந்தல் மயில் அன்னாய்! குழீஇய வான் விண்ணோர்க்கு

வேந்தன் ஆம் இவ்வுலகம் விட்டு.  

 

இதன் பொருள் ---

 

     மயில் தோகையைப் போன்ற கூந்தலை உடைய பெண்ணே!, பொய் சொல்லான்; எவரையும் இகழான்; ஒருவரையும் புறம்பாக இழித்துப் பேசான்; பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான்; தன்மாட்டு உள்ள பொருள்களையும் வெளிப்படுத்துச் சொல்லான், நண்பன் இடத்திலேயும் தனக்கு உள்ள வறுமையை வெளிப்படுத்தாதவனாகிய ஒருவன், இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி, மேலுவலகத்தில் கூடியுள்ள, தேவர்களுக்குத் தலைவன் ஆவான்.

 

     ஒழுக்கத்தில் இருந்து தவறாத உள்ளத்தை உடையவர் பண்பு குறித்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான "ஆசாரக் கோவை" கூறுவதையும் கருத்தில் கொள்ளுதல் நலம்.

 

படிறும் பயனிலவும் பட்டி உரையும்

வசையும் புறனும் உரையாரே, என்றும்

அசையாத உள்ளத் தவர்.            

 

இதன் பொருள் ---

 

     எக்காலத்தும் ஒழுக்கத்தினின்றும் தவறாத மனம் உடையோர், வஞ்சனைச் சொல்லையும், பயனற்ற சொல்லையும், நாவடக்கம் இல்லாத சொல்லையும், பழிச் சொல்லையும், புறங்கூறுதலையும் சொல்லார்.

 

     எனவே, "உடையது விளம்பேல்" என்று ஔவைப் பாட்டி அறிவுறுத்தியது, தன்னுடையதாகிய பெருமையையும், பிறருடையது ஆகிய சிறுமையையும் பிறர் அறியுமாறு விரித்துக் கூறுதல் கூடாது என்பதாகும்.


No comments:

Post a Comment

பொது --- 1084. முழுமதி அனைய

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முழுமதி அனைய (பொது) முருகா!  திருவடி அருள்வாய். தனதன தனன தனதன தனன      தனதன தனன ...... தந்ததான முழுமதி ய...