மார்க்கம் அறியாக் குருடர்கள்

 

 

மார்க்கம் அறியாக் குருடர்கள்

-----

 

பிறவி ஆன சடம் இறங்கி,

வழி இலாத துறை செறிந்து

     பிணிகள் ஆன துயர் உழன்று, ...... தடுமாறி,

பெருகு தீய வினையின் நொந்து,

கதிகள் தோறும் அலை பொருந்தி,

     பிடி படாத ஜனனம் நம்பி ...... அழியாதே,

 

நறை விழாத மலர் முகந்த

அரிய மோன வழி திறந்த

     நளின பாதம் எனது சிந்தை ...... அகலாதே,

நரர் சுர அதிபரும் வணங்கும்

இனிய சேவை தனை விரும்பி

     நலன் அதுஆக அடியன் என்று ...... பெறுவேனோ?

 

என்பது "சிறுவாபுரி" என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் மீது அருணகிரிநாதர் பாடி அருளிய திருப்புகழ்ப் பாடலின் ஒரு பகுதி ஆகும்.

 

     சடம் ஆகிய இந்த உடம்பைக் கொண்டு ஆன்மா பிறவியில் வருகின்றது. இயல்பாகவே அறியாமையில் முழுகிக் கிடக்கும் ஆன்மாவானது, நல்லறிவைப் பெற்று, நல்வினைகளைச் செய்து, நற்கதியை அடைந்து இன்புற்று இருக்கவேண்டும் என்னும் பெருங்கருணை கொண்டு இறைவன் உயிர்களுக்கு உடம்பைப் படைத்து அருளுகின்றான்.

 

     உயிர்கள் அறிவைப் பெறுவதற்கு உண்டான வழியும், அந்த வழியில் அமைந்த துறைகளும் வகுக்கப்பட்டு உள்ளன. அந்த வழியில் பொருந்தி இருந்து நல்லறிவைப் பெற்று உய்தி பெறுதல் வேண்டும். நன்மை பெருகுகின்ற அருள் நெறியில் ஒழுகாமல், நன்மை போலக் காட்டி, இறுதியில் துன்பத்தையே தருகின்ற அவநெறிகளில் பொருந்தி இருந்து வாழ்நாளை வறிதாகக் கழித்தல் கூடாது.

 

     பாவத்திற்கு இடமாக இருந்து துன்பத்தைத் தருகின், தீவினைகளை முக்கரணங்களாலும் இழைப்பதால், அவற்றின் பயனாக, உள்ளத் துன்பமும், உடல் துன்பமும் விளைக்கும் நோய்கள் மிகுக்கும். பிணித்து இருப்பதால் பிணி எனப்பட்டது. பிணிப்பு எப்போது நீங்கும் என்றால், வினையானது கழிந்தால் நீங்கும்.

 

     தீய வினைகளைப் புரிவதில் மனத்தைச் செறித்துக் கொண்ட ஒருவனுக்கு, அறிவு மயக்கம் காரணமாக மேலும் மேலும் தீவினைகளையே பயிலத் தோன்றும். அதில் இருந்து விடுபட வழி தோன்றாதவாறு காம, வெகுளி, மயக்கங்கள் ஆகிய முக்குற்றங்கள் தடுக்கும். தீவினைகளின் பயனாக மனம் நொந்து வாட்டமுறும்.

 

         வாழ்வில் ஒவ்வொரு நலத்தைப் பெறுவதற்கும் ஒரு வழி உண்டு. வழி என்றாலும், நெறி என்றாலும், மார்க்கம் என்றாலும் ஒரு பொருளே. அந்த அந்த வழிக்கு உரிய பண்பில் ஒழுகினால், அதற்குரிய பலனைப் பெறலாம்.

 

         எடுத்துக் காட்டாக, கல்வி அறிவைப் பெறுவதற்கு, பள்ளிகோ அல்லது உயர் கல்வி நிலையங்களுக்கோ ஒருவன் செல்லுகின்றான் என்றால், அதற்கு உரிய சீருடையை அணிந்து கொண்டு, உரிய நூல்களை எடுத்துக் கொண்டு சென்று, அங்கே எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி இருந்தால் கல்வி அறிவை ஒருவன் பெறலாம். கல்விச்சாலைக்குச் சென்ற பிறகு வேறு சிந்தனை இருக்கக் கூடாது. கல்விச் சாலைக்குச் சென்றும், அதன் பயனை அடையாதவன், "மார்க்கம் அறியாக் குருடன்".

 

         திருக்கோயிலுக்குச் செல்கின்ற போதும், அதற்கு உரிய நிலையில் செல்லவேண்டும். வீட்டில் உள்ளபடி, அங்கே இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. திருக் கோயிலுக்குச் சென்றும், அதன் பயனை அடையாதவன், "மார்க்கம் அறியாக் குருடன்".

 

         அலுவலகத்திற்குச் செல்கின்ற போதும், அதற்கேற்ற நிலையில் சென்று, அங்கே விதித்த பணிகளைச் செய்து வரவேண்டும். அலுவலகத்திற்கு ஒவ்வாத செயல்களைச் செய்தல் கூடாது. இவனும் "மார்க்கம் அறியாத ஒரு குருடன்".

 

         ஒவ்வொரு பயனைப் பெறுவதிற்கும், ஒருவன் தான் வாழுகின்ற வீட்டை விட்டுச் செல்லவேண்டும். செல்கின்ற இடத்திற்கு ஏற்பச் செயல்பட வேண்டும். எங்கெங்கு எப்படி இருந்து, உரிய பயனைப் பெறவேண்டும் என்பதை அறியாதவர்கள் வாழ்வு பயனற்றுக் கழியும்.

 

         உயிரானது உடம்பில் இயங்கும் வரையில், இந்த நிலை. பிறந்த உயிர் எப்படியும் ஒரு நாள் இந்த உடம்பை விட்டுச் செல்ல வேண்டி வரும். அதைத் தொலையா வழி என்றும் நெடுவழி என்றும் பெரியவர்கள் கூறுவார்கள். அப்படிப் போகின்ற போது, அந்த வழிக்குப் பயன்படுகின்ற பொருளைக் கொண்டு செல்லவேண்டும். இல்லாவிட்டால் அந்த நெடுவழிப் பயணம் இனிமையாக இராது.

 

     உடம்போடு வாழும் காலத்தில் உடன் இருந்த எதுவும், உடம்பை விட்டுப் போகும்போது உடன் வராது. சேர்த்து வைத்து பாவமும், புண்ணியமுமே வரும்.

 

"அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு

கைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே"

 

என்றார் பட்டினத்து அடிகள்.

 

     "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று நாயனார் அருளியது போல, பொருள் இல்லாமல் இவ்வுலக வாழ்வு இல்லை. எனவே, பொருளை மிகவும் பாடுபட்டு ஈட்டுகின்றோம். (பொருளை நல்வழியில் ஈட்டுதல் வேண்டும்). ஈட்டிய பொருளை, போகும் வழிக்குத் துணையாக வருகின்ற அருளாக மாற்ற அறியாமல் மயங்குகின்றோம். பொருளே பிரதானம் என்று எண்ணி, தேடித் தேடி, புதைத்து வைத்துப் பயனில்லாமல் அழிகின்ற மனிதர்களை "மார்க்கம் அறியாக் குருடர்கள்" என்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல்.

 

புண்ணிய வசத்தினால் செல்வம் அது வரவேண்டும்;

     பொருளை ரட்சிக்க வேண்டும்

  புத்தியுடன் அது ஒன்று நூறாக வேசெய்து

     போதவும் வளர்க்க வேண்டும்;

 

உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்ர ஆபரணம்

     உடலில் தரிக்க வேண்டும்;

  உற்ற பெரியோர், கவிஞர், தமர், ஆதுலர்க்கு உதவி

     ஓங்கு புகழ் தேட வேண்டும்;

 

மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும்; உயர் மோட்ச

     வழிதேட வேண்டும்; அன்றி,

  வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே

     மார்க்கம் அறியாக் குருடராம்;

 

அண்ணலே! கங்கா குலத்தலைவன் மோழைதரும்

     அழகன்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!

 

 இதன் பொருள் ---

 

     அண்ணலே --- தலைவனே!, கங்காகுலத் தலைவன் மோழைதரும் அழகன் --- கங்கை மரபில் முதல்வனான மோழை ஈன்றெடுத்த அழகு மிக்கவனான,  எமது அருமை மதவேள் --- எம் அரிய மதவேள் என்பான், அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே --- நாள்தோறும் உள்ளத்தில் கொண்டு வழிபடுகின்ற, - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

 

     செல்வமது புண்ணிய வசத்தினால் வரவேண்டும் --- செல்வமானது ஒருவனுக்கு அவன் சென்ற நல்ல நெறியின் பயனாக வந்து சேர வேண்டும்; பொருளை ரட்சிக்க வேண்டும் --- அவ்வாறு சிறுச் சிறிதாக வந்த செல்வத்தைக் காப்பாற்றி வைக்க வேண்டும்; புத்தியுடன் அது ஒன்று நூறாகவே செய்து போதவும் வளர்க்க வேண்டும் --- அறிவோடு சிந்தித்து, அந்தப் பொருளை ஒன்று நூறாகுமாறு நன்றாகப் பெருக்கும் உபாயத்தைத் தேட வேண்டும்; உண்ண வேண்டும் --- உலோப குணம் இல்லாமல் வயிறு ஆர உண்ண வேண்டும்; பின்பு நல்ல வத்(தி)ர ஆபரணம் உடலில் தரிக்க வேண்டும் --- பிறகு அழகிய ஆடைகளையும், அணிகலன்களையும் உடலிலே தரித்துக் கொள்ள வேண்டும்;

உற்ற பெரியோர், கவிஞர், தமர், ஆதுலர்க்கு உதவி ஓங்குபுகழ் தேடவேண்டும் --- தம்மை அடைந்த பெரியோர்க்கும் கவிஞருக்கும் உறவினர்க்கும் வறியவர்க்கும் கொடுத்து மிக்க புகழைத் தேடிக் கொள்ள வேண்டும்; மண்ணில் வெகு தருமங்கள் செயவேண்டும் --- உலகிலே பல வகையான அறச் செயல்களையும் செய்தல் வேண்டும்; உயர் மோட்ச வழி தேட வேண்டும் --- (அறங்களைச் செய்ததன் பலனாக) மேலான வீடுபேற்றினை அடையும் வழியைத் தேடிக் கொள்ள வேண்டும்; அன்றி --- இவ்வாறு அல்லாமல், வறிதில் புதைத்து வைத்து ஈயாத பேர்களே மார்க்கம் அறியாக் குருடராம் --- தேடிய செல்வத்தை வீணிலே மண்ணில் புதைத்து வைத்துவிட்டு (தானும் துய்த்து) பிறர்க்கு அளிக்காதவர்களே நெறி அறியாத குருடர்கள் ஆவர்.

 

          குறிப்பு --- "கங்கை" என்பது இங்கே தண்ணீரைக் குறிக்கும். வேளாளர்கள் தமது உழவுத் தொழிலுக்குத் தண்ணீரையே சார்ந்து இருப்பதனால் அவர்களை "கங்காகுலத்தவர்" என்றார்.

 

 

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...