ஆறுவது சினம்

 

 

ஆத்திசூடி --- 02. ஆறுவது சினம்

-----

 

     பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் எவ்வளவு அவசியமோ, அவ்வளவுக்குப் பிறந்து வளர்ந்த ஒவ்வொரு மனிதனுக்கும் நமது பெரியபாட்டியாகிய ஔவைப் பிராட்டியார் அருளிச் செய்த முதன்மை அறநூலாகிய "ஆத்திசூடி" அவசியமானதொன்றாகும் என்பதை மறுப்பதற்கு இல்லை. வாழ்நாள் முழுதும் ஓதித் தெளியவேண்டியதொரு அற்புதான நூல் இது.

 

     அறமானது உயிர்களின் துன்ப நீக்கத்திற்கும் இன்ப ஆக்கத்திற்கும் காரணமாக அமைந்ததால், அது வாழ்வியலின் இன்றியமையாமையை உணர்த்தும்.

 

     "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அறம்" என்று அருளிய திருவள்ளுவ நாயனார், அறத்துக்கு இழுக்கைத் தருவன ஆக நான்கு பாவச் செயல்களைக் காட்டினார். அவை அழுக்காறு, அவா, வெகுளி, இன்னச்சொல் என்னும் நான்கு ஆகும். "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்னும் திருக்குறளை ஓதி உணர்தல் நலம்.

 

     எனவே, உயிருக்குத் துன்ப நீக்கத்தையும், இன்ப ஆக்கத்தையும் தருகின்ற அறத்தை ஒருவன் செய்வதில் விருப்பம் கொள்ளவேண்டும் என்னும் கருத்து இளமையிலேயே உள்ளத்தில் பதியவேண்டும் என்பதால், "அறம் செய விரும்பு" என்றார் நமது பெரியபாட்டியார்.

 

     அறத்துக்கு இழுக்காக அமைந்த குற்றம் சினம் ஆகும். இது ஒருவனுடைய மன நிலையில் தடுமாற்றத்தை உண்டாக்க வல்லது. உயிர்களில் விலங்குகளுக்கும் கூடச் சினம் உண்டாவதைக் காண்கின்றோம். "குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது" என்று நாயனார் அருளிய திருக்குறளைக் காண, குணம் என்று குன்றில் ஏறி நின்ற உத்தமர்க்கும் ஒரோவழி சினம் உண்டாகும் என்றும் அறியலாம். அவ்வாறு உண்டாகிய சினமானது அவருடைய தவத்தை அழித்து, அவரது இனத்தையும் அழிக்கும் என்பதையும் திருக்குறள் வழி அறியலாம். துறவறத்தில் நின்றோருக்கே சினம் உண்டாவது போல, இல்லறத்தார்க்கும் சினம் என்பது உண்டாகத்தான் செய்யும். ஆனால், அது தணியவேண்டும்.

 

     ஒரு பொருளில் தீப் பற்றியபோது, அதனை அவித்தால் ஒழிய அதனால் விளையும் கொடுமை தவிர்க்கப்படாது. தீயானது சிறிது எஞ்சி நின்றாலும், அது மேலும் வளர்ந்து கெடுப்பது போல, சினமானது சிறிது எஞ்சி நின்றாலும் தனக்கும் பிறர்க்கும் தீமையையே விளைவிக்கும்.

 

     பொங்கி எழுகின்ற கடலும் அடங்கினால்தான் நன்மை. கரை புரண்டு ஓடுகின்ற ஆற்று வெள்ளமும் அடங்கினால்தான் நன்மை.

 

     "சினம் என்னும் நேர்ந்தாரைக் கொல்லி, இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும்" என்றார் திருவள்ளுவ நாயனார். மனத் தெளிவு இல்லாதவனை எப்படி நம்புதல் கூடாதோ, அதுபோலவே, ஆறாத சினம் கொண்டவனோடு பழகுதலும் கூடாது என்கின்றது, "பழமொழி நானூறு" என்னும் பதினெண் கீழ்க்கணக்கு நூல். "ஆறாத சினம்" என்று சொல்லியதை நன்கு சிந்திக்கவேண்டும். ஆறாத சினம் கொண்டவனுக்கு, அறவில் தெளிவு இருக்காது. சினம் தணியத் தணியத் தெளிவு பிறக்கும்.

 

ஆறாச் சினத்தன் அறிவிலன், மற்று அவனை

மாறி ஒழுகல் தலை என்ப; - ஏறி

வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப!

தெளியானைத் தேறல் அரிது.

 

இதன் பொருள் ---

 

     காற்றினால் அலைகள் கரையின் மீது ஏறி வீசுகின்ற மிக்க நீர்வளம் உடைய கடற்கரைக்கு உரியவனே! மனத்தின்கண் தெளிவு இல்லாத ஒருவனை, தெளிந்த அறிவு உடையவனாக நம்புதல் கூடாது. அதுபோலவே, மாறாத கோபத்தை உடையவனும் அறிவு இல்லாதவன் என்பதால், அவனோடு சேர்ந்திருத்தல் முடியாது, ஆதலால், அவனை நீங்கி ஒழுகுதல் சிறந்தது என்று சொல்லுவர் நல்லோர்.

 

     "ஆத்திரம் அறிவுக்குச் சத்துரு". அறிவு விளங்காதபோது, மனத்தில் தெளிவு இருக்காது.

 

     எனவே, ஔவைப் பிராட்டியார், அறம் செய்ய விரும்புகின்ற உன் மனத்துள் ஆறவேண்டியது நீ கொள்ளுகின்ற சினம் ஆகும் என்பதை அறிவுறுத்த,

 

"ஆறுவது சினம்"

 

என்றார். எனவே, கோபமானது ஒருவனுக்குத் தணிய வேண்டுவது ஆகும் என்பதை அறிதல் வேண்டும். காரணம், சினம் மிகுந்து தீராமல் இருந்தால், அது போராக முடியும் என்பதை அறிவுறுத்த,

 

"தீராக் கோபம் போராய் முடியும்"

 

என்று கொன்றைவேந்தன் மூலமாக விளக்கம் தந்தார் ஔவைப் பிராட்டியார்.

 

     கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும். இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்.

 

 

    


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...