நல்லோர் சொல் அமுதம், தீயோர் சொல் விடம்.

 

 

நல்லோர் சொல் அமுதம்

தீயோர் சொல் விடம்

-----

 

     திருக்குறளில் "கூடாநட்பு" என்னும் ஓர் அதிகாரம். ஒருவரோடு கொண்டிருக்கும் பகைமை உணர்வு காரணமா, அது முடிக்கும் காலம் வரை உள்ளத்தால் கூடாது இருந்து, அவரோடு கூடிப் புறத்தில் நண்பர் போல் நடிக்கின்றவரின் நட்பை, "கூடாநட்பு" என்றார்.

 

     இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "நட்புப் பூண்டவரைப் போன்று நன்மை தரும் சொற்களைச் சொன்னாரானாலும், உள்ளத்தளவில் பகைமை பூண்டவரது சொற்கள் நன்மை தராமையை விரைவிலேயே அறிந்துகொள்ளப்படும்" என்கின்றார் நாயனார்.

 

     மனத்திலே பகைமை உணர்வைக் கொண்டுள்ளவர்கள் நன்மை தரும் சொற்களைச் சொல்லுவதில்லை. ஒருக்கால், வஞ்சகமாக, நன்மை தருவது போன்று சொன்னாலும், அச் சொல்லைக் கொண்டு நடப்பவனுக்கு நன்மை விளையாமல், தீமையே விளையும் என்பதனை விரைவிலேயே அறிந்து கொள்ளலாம் என்பதை உணர்த்த,

 

நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.                        

 

என்று அருளினார் திருவள்ளுவ நாயனார்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தாய்தீண்டத் தூசுஉடுத்துச் சார்எனுஞ்சொல் தீதுஎன்றாள்

தூய சுயோதனற்குச் சோமேசா! --- வாய்அதனால்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! நட்டார்போல் நல்லவை சொல்லினும் --- நட்புப் பூண்டவர் போன்று நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார் சொல் 'ஒல்லை உணரப்படும்'  --- பகைவர் சொற்கள் அது பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும். ஆயதனால் --- அதனால், தூய சுயோதனற்கு --- மனக் களங்கம் இல்லாத துரியோதயனனுக்கு, தாய் --- தாயாகிய காந்தாரி என்பவள், தீண்ட --- அவன் உடம்பு முழுவதும் தடவி அதனால் வயிர உடம்பு பெறும்பொருட்டு ஆடையின்றி வருக எனக் கூற, தூசு உடுத்துச் சார் எனும் சொல் --- தாயினிடத்துச் செல்லினும் ஏதேனும் கோவண ஆடையாவது உடுத்துச் செல்க என்று மாமனாகிய சகுனியானவன் சொல்லிய சொல், தீது --- தீமை உடைத்து ஆகலான் என்றவாறு.

 

     குடிப்பிறப்பாலும் குணத்தாலும் ஒழுக்கத்தாலும் மனத்தாலும் அறிவுடைமையாலும் பிறவாற்றாலும் தமது நெஞ்சுக்குப் பொருந்தாத ஒருவரை நட்புச் செய்யலாகாது என்பது விளங்கும்.

 

         துரியோதனன் தாயாகிய காந்தாரி ஒருநாள் அவனை நோக்கி, "நீ நிருவாணமாய் என்பால் வருக. நான் உனது உடம்பு முற்றும் தடவுவேன். அதனால் உனது உடம்பு வயிர உடம்பு ஆம்" என்றாள். அவன் அதற்கு ஒருப்பட்டு இருக்கும் தருவாயில், சகுனி அதனை அறிந்து, "அது அடாத செயல். தாய் சொல்லினும் அவளிடம் நீ கோவணமேனும் இன்றிச் செல்லுதல் தகுதியன்று" என, அச்சொற்கள் நல்லவை எனக் கொண்டு, அவனும் அவ்வாறே கோவணம் ஒன்றுடன் செல்ல, அவள் தடவிப் பார்த்து, "ஆ! என்ன காரியம் செய்தனை? ஆடையுடுத்துச் சார் என்று உனக்கு யாரோ கூறிய மாற்றம் தீமை பயப்பது என்று அறிந்தாய் இல்லையே. உனக்கு யான் கூறியபடி வயிர உடம்பு பெறுதல் இனிக் கூடாதே" என வருந்தினாள்.

 

     சகுனியின் நடவடிக்கைகளும், சொல்லும் துரியோதனனுக்கு நன்மையைச் செய்வனவாக இருந்தாலும், உள்ளத்தளவில் அவன் கவுரவர் குலத்தை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு இருந்தான் என்பது வரலாறு.

 

     அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தாய்போல் வரும்அலகை தன்நட்பு அறிந்தும்அவள்

சேய்போல் இருந்தான், சிவசிவா! --- மாயன்எதிர்

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்

ஒல்லை உணரப் படும்.

 

இதன் பொருள் ---

 

     சிவசிவா --- சிவபரம்பொருளே! தாய் போல் வரும் அலகை தன் நட்பு அறிந்தும் --- தாயைப் போல அன்போடு பாலைத் தர வந்த பேயாகிய பூதனையின் பொய் நட்பினை அறிந்திருந்தும், அவள் சேய் போல் இருந்தான் மாயன் --- அவளது குழந்தைபோல் இருந்தான் மாயவனாகிய கண்ணன், (இந்த நிகழ்வு) எதிர் --- தனது எதிரில், நட்டார் போல் நல்லவை சொல்லினும் --- நட்புப் பூண்டவரைப் போல இருந்து நன்மை தரும் சொற்களைச் சொன்னாலும், ஒட்டார் சொல் --- உள்ளத்தில் பகைமை பூண்டவரது சொற்களின் வஞ்சகப் பேச்சுக்களை, ஒல்லை உணரப்படும் --- விரைவில் அறிந்து கொள்ளப்படும் (என்பதை விளக்கி நின்கின்றது)

 

     கம்சன் தன்னைக் கொல்லும் பொருட்டு, எங்கேயோ ஒருவன் பிறந்து இருக்கின்றான் என்று, மாயையாகிய குழவி சொல்லக் கேட்டு அஞ்சினான். அக் குழந்தை எங்கே உள்ளது என்று அறியாதவனாய், உலகில் உள்ள குழந்தைகளை எல்லாம் கொல்லுமாறு பூதனை என்ற அரக்கியை அனுப்பினான். அவள் தேவமாது போல் வடிவு கொண்டு, கண்டார் மயங்கிக் காதல் கொள்ள நடந்து, பால் கொடுப்பதுபோல் பாவனை செய்து குழந்தைகளைக் கொன்று குவித்துக்கொண்டு, கண்ணபிரான் வளர்கின்ற ஆயர்பாடிக்கு வந்தாள்.

 

கண்டவர் மனம்புகு காவிபுரை கண்ணாள்,

வண்டுபடு தாமரை மலர்க்கையின் விளங்கப்

புண்டரிக மாதுவரல் போலஅருள் மாரிக்

கொண்டல்விளை யாடல்புரி கோயிலின் அடைந்தாள்.

 

குண்டலம் இலங்கவொர் குறங்குஇனிது இருத்தி

வெண்தளவு அரும்புஅனைய மென்னகை விளைத்து,

மண்டுபுனல் வேலிதிகழ் மண்ணும்உயர் விண்ணும்

உண்டவனை வெய்யமுலை ஊட்டினள் அணைத்தே.

 

     யசோதையின் திருமாளிகையின் முன், இளங்கொண்டல் மேகம்போல் அழகின் கொழுந்தாக ஆடல் புரியும் கண்ணபிரானைக் கண்டாள். கல்லும் கரையும் அக் குழந்தையைக் கண்டு அவள் மனம் கரையவில்லை. இருகரங்களால் எடுத்தாள். மடியில் இருத்தி, நஞ்சுடன் கூடிய தனது முலையை, மண்ணும் விண்ணும் உண்ட வாசுதேவனுக்கு உண்ணக் கொடுத்தாள். நீலமேகம் போன்ற பாலகிருஷ்ணர், அவளுடைய வஞ்சகத்தை உணர்ந்து, அவளுடைய பால், உணர்வு, உயிர் எல்லாவற்றையும் ஒருங்கே உண்டனர்.  பூதனை மலைபோலே கீழே வீழ்ந்து மாண்டனள். அம் மாயப் பேயாகிய பூதனை மாண்டும், அவள் மீது அஞ்சாது குழந்தையாகிய கோபாலமூர்த்தி விளையாடி அருளினார்.

 

     பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு விளக்கமாக அமைந்துள்ளதை அறியலாம்...

 

இனியவர் என்சொலினும் இன்சொல்லே, இன்னார்

கனியும் மொழியும் கடுவே, - அனல்கொளுத்தும்

வெங்காரம் வெய்துஎனினும் நோய்தீர்க்கும், மெய்பொடிப்பச்

சிங்கிக் குளிர்ந்தும் கொலும்.   --- நீதிநெறி விளக்கம். 

 

 இதன் பொருள் ---

 

     நெருப்பைப் போலச் சுடுகின்ற வெங்காரம் என்னும் மருந்தானது, வெம்மையாக இருந்தாலும், நோயினை நீக்கி உடலைக் குளிர்வித்து வளர்க்கும். சிங்கி என்னும் கொடிய நஞ்சானது, உடல் புளகாங்கிதம் கொள்ளுமாறு முதலில் குளிர்ச்சியைக் கொடுத்தாலும், பின்னர் கொன்று விடும். அதுபோல, நல்ல குணம் உடையோர் கேட்பவருக்கு விருப்பத்தைத் தராத கடுமையான சொற்களைச் சொன்னாலும், அவை யாவும் முடிவில் நன்மையையே தருவதால், அவை இனிய சொற்களே ஆகும். தீய குணம் படைத்தவரது கனிவான சொற்கள், மனத்திற்கு இதமாய், இனிமையாய் இருந்தாலும், முடிவில் தீமையையே தருவதால், தீயவருடைய இனிய சொற்கள் நஞ்சு போன்றவையே ஆகும்.

        

மாசற்ற நெஞ்சு உடையார் வன்சொல்இனிது, ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிது என்க, - ஈசற்கு

நல்லோன் எறிசிலையோ? நன்னுதால்! ஓண்கருப்பு

வில்லோன் மலரோ? விருப்பு.            --- நன்னெறி.

 

இதன் பொருள் ---

 

     அழகிய நெற்றியினை உடையவளே! குற்றம் அற்ற மனத்தை உடையவர் கடுஞ்சொல் கூறினாலும், அது இனிமை தருவதாகும். குற்றம் பொருந்திய மனத்தை உடைய பிறர் கூறும் இன்சொல்லோ தீமை தருவதாகும். சிவபெருமானுக்கு நல்ல குணம் உடையவராகிய சாக்கிய நாயனார் அன்போடு தினமும் மலராக எண்ணி எறிந்த கல்லோ? சிறந்த கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அன்பில்லாமல் எறிந்த பூவோ?  எது விருப்பாயிற்று. சாக்கிய நாயனார் எறிந்த கல்லே விருப்பாயிற்று.

 

     எனவே, நல்லோர் சொல்லும் சொற்கள் தொடக்கத்தில் நன்மையைத் தராதவை போன்று தோன்றும். ஆனால், அவை முடிவில் நன்மையையே தரும். தீயவர் சொல்லும் சொற்கள், தொடக்கத்தில் இனிமையாக இருந்தாலும், முடிவில் துன்பத்தையே தரும் என்பதை அறிதல் வேண்டும். இதமாகப் பேசுபவர்தான் நல்லவர் என்று எண்ணுவதை விடுதல் வேண்டும்.

 

     அறிவிலே மூத்தவர்கள் நமது நன்மையை மட்டுமே கருதிச் சொல்லுகின்ற வார்த்தைகள் நமக்குக் கசக்கும். ஆனால், அதுதான் அமுதம் போல இருந்து நம்மைக் காக்கும் என்பதை, "மூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்" என்று ஔவைப் பிராட்டி அறிவுறுத்தினாள்.

 

     "மூத்தோர் சொல்லும், முதுநெல்லிக் காயும், முன் துவர்க்கும், பின் இனிக்கும்" என்னும் அமுத வாசகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் ஊரில் எழுந்தருளி இருந்து சித்தர் சிவானந்த மவுன சுவாமிகள் அவர்களால் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. நெல்லிக் காய் முதலில் துவர்ப்பாக இருக்கும். நீரைப் பருகப் பருக, இனிமையாக இருக்கும். அதுபோலத்தான், பெரியவர்கள் சொல்லும் சொல்லும், நமக்குக் கடுப்பாக இருக்கும். ஆனால் நன்மையையே தரும். அனுபவத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

    

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...