பசுவைக் கொன்று, செருப்புத் தானம் செய்தல்

 

 

பசுவைக் கொன்று, செருப்புத் தானம் செய்தல்

-----

 

     திருக்குறளில் "பொருள் செயல்வகை" என்னும் ஓர் அதிகாரம்.  இதனுள் வரும் நான்காம் திருக்குறளில், "பொருள் செய்யும் வகையினை அறிந்து, தீமை இல்லாமல், நல்ல வழியில் வந்த பொருளானது, அறத்தையும் கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்" என்கின்றார் நாயனார்.

 

     அறநெறியில் வந்த பொருள் ஒருவனுக்கு இம்மையில் புகழைத் தரும். அவ்விதம் தேடிய பொருளை கடவுள் பூசைக்கும், தானங்களைச் செய்வதற்கும் செலவழிப்பானானால், அதனால் உண்டாகிய இம்மை மறுமை வீடு என்கின்ற மூன்று வகையான இன்பங்களையும் தரும். அதனால் அவனிடத்தில் பொருள் மேன்மேலும் உண்டாகும் என்பது இத் திருக்குறள் உணர்த்துவது.

 

     "செப்பம் உடையவன் ஆக்கம், சிதைவு இன்றி எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து" என்று நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் நாயனார் அருளிச் செய்ததை, இதனோடு வைத்து எண்ணுதல் நலம்.

 

அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து,

தீது இன்றி வந்த பொருள்.                    

 

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமா, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

தந்தை பொருட்டு எந்தைபிரான் சம்பந்தர்க்கு ஈந்தகிழி

நந்திப் பயன் அனைத்தும் நல்கிற்றே, ---  முந்தும்

அறன் ஈனும், இன்பமும் ஈனும், திறன் அறிந்து,

தீது இன்றி வந்த பொருள்.

 

இதன் பொருள் ---

 

         திருஞானசம்பந்தர் திருவாவடுதுறையில் தங்கி இருந்தபொழுது அவருடைய தந்தையார் சிவபாதஇருதயர், தாம் சீகாழிக்குச் சென்று வழக்கம்போல் செய்ய இருக்கும் வேள்விக்குப் பொருள் வேண்டுமென்று கேட்க,  திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருவாவடுதுறைப் பெருமான் மீது "இடரினும் தளரினும்" எனத் தொடங்கும் திருப்பதிகம் ஓதி, இறைவர் அருளால் ஆயிரம் பொன் அடங்கிய கிழியைப் பெற்று, அதனைத் தந்தையாரிடம் சேர்ப்பித்தனர். "பழமையும் பெருமையும் வாய்ந்த வேதங்களில் விதித்த முறைப்படி, கங்கையை முடித்த சடையை உடைய முழுமுதற் பொருளான சிவபெருமானையே தலைமையாகக் கொண்டு செய்கின்ற நல்ல சிவ வேள்வியைத் தீமை நீங்கி இன்பம் அடையும் பொருட்டு நீவிர் செய்திடவும், சீகாழியில் உள்ள மறையவர் அனை வரும் செய்திடவும் குறைவில்லாமல் மிகும்" என்று திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்து அருளினார்.

 

     சிவபாத இருதயர் மட்டும் அன்றி, சீர்காழியில் இருந்த அந்தணர்களும் வேள்வி செய்யக் கூடிய அளவில் அப்பொற்கிழியில் பொருள் இருந்தது. இறையருளால் வந்த பொருள் என்பதால், அது எல்லோருக்கும் பயன்படும் பொருளாக அமைந்தது.

 

"நச்சி இன்தமிழ் பாடிய ஞானசம்பந்தர்

இச்சையே புரிந்து அருளிய இறைவர் இன் அருளால்,

அச்சிறப்பு அருள் பூதம் முன் விரைந்து அகல் பீடத்து

உச்சி வைத்தது பசும்பொன் ஆயிரக் கிழி ஒன்று".

 

"பணிந்து எழுந்து கைதொழுது, முன்

     பனிமலர்ப் பீடத்து

அணைந்த ஆடகக் கிழி தலைக்

     கொண்டு, அருமறைகள்

துணிந்த வான்பொருள் தரும்பொருள்,

     தூய வாய்மையினால்,

தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு

     அளித்து, உரை செய்வார்.

 

"ஆதிமாமறை விதியினால் ஆறுசூழ் வேணி

நாதனாரை முன் ஆகவே புரியும் நல் வேள்வி

தீது நீங்க நீர் செய்யவும், திருக்கழுமலத்து

வேதவேதியர் அனைவரும் செய்யவும் மிகுமால்”.

 

எனவரும் பெரியபுராணப் பாடல்களை ஓதி உணர்க.

                                                     

     ஆற்று வெள்ளமானது கரையை உடைத்துக் கொண்டு நாற்புறங்களிலும் பெருகி அழிவினை உண்டாக்காமல், ஒழுங்காகச் சென்று ஏரி குளங்களில் நிரம்பினால் நன்மை விளையும். தொண்டை நாட்டில் உள்ளது பாலாறு. அதனை வெள்ளமானது பெருகி, கரையை உடைத்துக் கொண்டு பெருகி வீண்போகாமல் சென்றது. பழியில்லாத நல்வழியில் வந்த செல்வமானது, வீண் போகாமல், எல்லோருக்கும் அறவழியில் பயன்படுவதாக அமைந்தது என்பதைக் காட்டுவதாக பாலாற்றின் வெள்ளம் அமைந்திருந்தது என்று "காஞ்சிப் புராணம்" கூறுகின்றது.

 

பழியில் நீங்கி, நன்கு ஈட்டிய பசும்பொருள் சிறிதும்

கழி படாது நல் வழிப்பயன் படுவது கடுப்பக்

கொழி திரைச்சுவைப் பாலியின் குளிர்புனல் முழுதும்

வழுவு உறாதுகால் வழிச்சென்று வளவயல் நிறைக்கும்.       --- காஞ்சிப் புராணம்.  

 

இதன் பொருள் ---

 

     நூலோர் விலக்கியன ஒழிந்து, விதித்தன செய்து நன்கு தொகுத்த பெரும் பொருள் சிறிதும் வீண்போகாது அறவழியில் பயன்படுதலை ஒப்ப, நீர் சிறிதும் மடை உடைத்து வெளியேறாது முழுதும் கால்வாயில் சென்று வளம் நிறைக்கும் வயல்களை நிறைக்கும்.

 

     பசும்பொருள் --- சிந்தையில் இரக்கம் வைத்துத் தேடிய பொருள்.

 

     அருளோடும் அன்போடும் வாராத பொருளைக் கொண்டு தான தருமங்களைச் செய்வது, எப்படிப்பட்டது எனத் "தண்டலையார் சதகம்" கூறுமாறு காண்க.

 

விசையம்மிகும் தண்டலையார் வளநாட்டில்

     ஒருத்தர் சொல்லை மெய்யாய் எண்ணி,

வசைபெருக, அநியாயம் செய்து, பிறர்

     பொருளை எ(ல்)லாம் வலிய வாங்கி,

திசைபெருகும் கீர்த்தி என்றும், தன்மம் என்றும்,

     தானம்என்றும் செய்வது எல்லாம்,

பசுவினையே வதைசெய்து, செருப்பினைத்

     தானம் கொடுக்கும் பண்பு தானே!

 

இதன் பொருள் ---

 

     விசையம் மிகும் தண்டலையார் வளநாட்டில் ஒருத்தர்  சொல்லை மெய்யாய் எண்ணி --- வெற்றியில் மேம்பட்ட  திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டிருக்கும் நீள்நெறிநாதரின்  வளம் மிகுந்த  நாட்டிலே  ஒருவர்  கூறுவதையே உண்மை என்று நம்பி, வசை பெருகப் பிறர் பொருளை அநியாயம் செய்து வலிய வாங்கி --- பழி வளரும்படி மற்றவர் செல்வத்தை ஒழுங்கு அல்லாத செயல்களைச் செய்து வற்புறுத்திக் கவர்ந்து, திசை பெருகும் கீர்த்தி என்றும் தன்மம் என்றும் தானம் என்றும் செய்வது எல்லாம் --- எட்டுத் திக்கிலும் புகழ் வளரக் கூடிய செயல் என்றும், அறச் செயல் என்றும், தானம் என்றும் செய்து வாழுகின்ற இச் செயல்கள் யாவும் (எப்படிப்பட்டவை என்றால்), பசுவினையே வதை செய்து செருப்பினைத் தானம் கொடுக்கும் பண்பு தானே --- பசுவினைக் கொன்று (அதன் தோலால் தைக்கப்பட்ட) செருப்பைத் தானம் கொடுத்த தன்மையைப் போன்றது.

 

     "பசுவைக் கொன்று செருப்பைத் தானம் கொடுத்தல்" என்பது பழமொழி. பசுவதை என்பது பஞ்சமாபாதகங்கள் (ஐம்பெரும்பாவங்கள்) என்று சொல்லப்படும் பெரும்பாவங்களுக்கு எல்லாம் மேலான பெரும்பாவம். பசுவின் மேன்மை குறித்து, பெரியபுராணத்தில் வரும் சண்டீச நாயனார் வரலாற்றில் காணலாம். "பசு மிக நல்லதடி பாப்பா" என்று பாரதியார் அருளியதை எண்ணுக. அந்தப் பெரும்பாவத்தைச் செய்து, அதன் தோலால் ஆன செருப்பைத் தானமாகப் பிறருக்குக் கொடுத்து, புண்ணியத்தைத் தேடுவது அறியாமையிலும் அறியாமை ஆகும்.

 

     தீது இன்றி வந்த பொருள் --- தீய வழியில் அல்லாமல், (நல்வழியில்) வந்த பொருளால் செய்யும் அறச் செயல்களே ஒருவனுக்கு அறத்தின் பயனாகிய புண்ணியத்தையும், அதன் பயனாகிய இம்மை மறுமை இன்பத்தையும் கொடுக்கும் நாயனார் அருளிய திருக்குறள் கருத்து இதனால் தெற்றென விளங்கும்.

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...