ஆத்திசூடி --- 04. ஈவது விலக்கேல்

 

 

ஆத்திசூடி

4. ஈவது விலக்கேல்.

-----

 

     ஆத்திசூடியின் தொடக்கத்தில் ஔவைப் பாட்டி, "அறம் செய விரும்பு" என்று அறிவுறுத்தினார். அறமே ஒருவனுக்கு ஆக்கம் யாவையும் தருவது. ஆக்கம் என்பது உலகியல் ஆக்கமும், அருளியல் ஆக்கமாகிய வீடுபேறும். அறத்தைக் காட்டிலும் ஆக்கத்தைத் தருவது வேறு இல்லை என்பதால், "அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை" என்றும், அந்த அறத்தைச் செய்ய மறத்தலைக் காட்டிலும் அழிவைத் தருவதும் வேறு இல்லை என்பதால், "அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பது காண்க.

 

     அறம் என்றதுமே தன்னிடத்தில் உள்ள பொருளைப் பிறருக்கு அள்ளிக் கொடுப்பது முதலான காரியங்கள் என்று கொள்ளவேண்டுவது இல்லை. அறச் செயல்கள் பலவாறாக விரியும். அறம் என்பது உள்ளத்தில் விளங்கவேண்டிய இன்றியமையாத பண்பு ஆகும்.

 

     அறத்திற்கு இழுக்கைத் தருவன, அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்குமே. இழுக்கைத் தரும் இந்த நான்கு தீயவைகளும் உள்ளத்தளவில் இல்லாது நீங்குமானால், அதுவே அறத்தைச் செய்ய விரும்புகின்ற ஒருவனுக்கு இலக்கணமாக அமையும். எனவே, மனத்தில் மாசு இல்லாமல் இருப்பதே உண்மையான அறம் ஆகும். அறம் என்பது, மனம் வாக்கு காயங்களால் புரியப்படுகின்ற நல்ல எண்ணமும், நல்ல சொல்லும், நல்ல செயலுமே ஆகும். "நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின்" என்கின்றது புறநானூற்றுப் பாடல்.

 

     "அச்சமே கீழ்களது ஆசாரம்" என்று திருவள்ளுவ நாயனார் அருளி இருப்பதை எண்ண, அறிவில் தெளிவு இல்லாத கீழ்மக்கள் தெய்வத்தாலும், அரசாலும், உயர்ந்தோராலும், பிறராலும் உண்டாகும் அச்சம் காரணமாகவும், இதைச் செய்தால், அதைப் பெறலாம் என்னும் பொருளாசை காரணமாகவும், வேறு சிலர் புகழ் காரணமாகவும் அறச் செயல்களைப் புரிவதால், அதன் மறுமைப் பயனாகிய வீடுபேற்றை எய்தமாட்டார். எனவே,

 

மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்,

ஆகுல நீர பிற.

 

அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

 

எனத் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்துள்ள திருக்குறட்பாக்களை எண்ணுதல் நலம்.

 

     எனவே, ஔவைப் பிராட்டி, மனத்தளவில் தூயவனாக விளங்கும் உண்மை அறத்தினை, விரும்பி ஒருவன் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்த, "அறம் செய விரும்பு" என்றார். மனத்தில் அழுக்காறு முதலிய குற்றங்கள் தோன்றாமல் காத்துக் கொள்பவனுக்கு, தன்னிடத்தில் உள்ள பொருளைத் தானே துய்க்கவேண்டும் என்னும் ஆசையும் அதன் காரணமாகப் பற்றும், அதன் காரணமாக உலோபத்தனமும் உண்டாகாது. அறச் செயல்களில் செலவிட்டு, தன்னிடத்தில் உள்ளபொருளை, போகின்ற வழிக்குத் துணையான அருளாக மாற்றிக் கொண்டு வாழ்வான். பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்கும் கேடு கெட்ட மனிதனாக வாழமாட்டான்.

 

     இண்டாவதாக, "ஆறுவது சினம்" என்றார். அறத்திற்கு இழுக்கான சினம் ஒருவனுக்குத் தோன்றினால், அது தணியவேண்டும். தீராத கோபம் கூடாது என்றார்.

 

     மூன்றாவதாக, அறத்திற்கு இழுக்கான "அவா" ஒருவனுக்கு இருத்தல் கூடாது என்பதைக் காட்ட, உள்ளத்தில் கரவு கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்து உதவவேண்டும் என்பதை, "இயல்வது கரவேல்" என்று அறிவுறுத்தினார்.

 

     அடுத்து, அறத்திற்கு இழுக்கான "அழுக்காறு" என்னும் "பொறாமை" கூடாது என்பதை அறிவுறுத்த, "ஈவது விலக்கேல்" என்று சொன்னார். பிறருக்கு உண்டாகின்ற ஆக்கத்தைப் பொறுக்காத மனம் "அழுக்காறு" அல்லது "பொறாமை" உள்ள மனம் ஆகும். தானாக மனம் உவந்து ஒருவருக்கு ஒன்றைக் கொடுக்க மனம் எழவில்லையானாலும், பொறாமை காரணமாகப் பிறர் ஒருவர் கொடுப்பதையும் தடுக்கவேண்டும் என்னும் எண்ணம் தோன்றும். அது கூடாது என்கின்றார் பாட்டியார்.

 

     ஒரு பொருளை ஒருவருக்குக் கொடுப்பத்தைத் தடுத்தால், கொடுப்பவனுக்குப் புகழ் உண்டாதலைத் தடுக்கின்ற பாவத்தோடு, பெறுகின்றவனுக்கு உண்டாகின்ற பொருள் முதலான நன்மையையும் தடுக்கின்ற பாவமும் வந்து சேரும்.

 

     இந்தப் பொறாமை என்னும் அழுக்காறு ஒருவனை எல்லாவகையிலும் கெடுத்துவிடும் என்பதை, "அழுக்காறு என ஒரு பாவி, திருச்செற்றுத் தீ உழி உய்த்துவிடும்" என்றும் "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும் உண்பதும் இன்றிக் கெடும்" என்றும் திருவள்ளுவ நாயனார் காட்டினார். கொடுப்பது அழுக்கறுத்தலாவது, கொடுக்கப்படும் பொருள்களைப் பற்றிப் பொறாமை செய்தல் என்று பொருள் காட்டினார் பரிமேலழகர். பொறாமை கொள்ளுவதே ஒருவனது சுற்றத்தைக் கெடுக்குமானால், கொடுப்பதைத் தடுப்பவன் எப்படியெல்லாம் கெடுவானோ என்று எண்ணிய ஔவைப் பாட்டிக்கு, அச்சம் மிகுந்ததால், "கொடுப்பதைத் தடுக்காதே" என்னும் பொருளில், "ஈவது விலக்கேல்" என்று அறிவுறுத்தினார். "ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று நீ தடுக்காதே" என்பது இதன் பொருள்.

 

     உள்ளத்தில் பொறாமை என்னும் தீய குணம் பொருந்தி இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் அடையும் தீங்குகள் என்ன என்பது குறித்துப் பின்வரும் பாடல்கள் கூறுவதைக் காணலாம்...

 

மாங்கனி வாயில் கவ்வி

     மரத்திடை இருக்கும் மந்தி,

பாங்கர் நீர் நிழலை வேறோர்

         பழம் உணும் குரங்கு என்று எண்ணித்

தாங்க அரும் அவாவில் தாவிச்

         சலத்திடை இறந்தது ஒப்ப,

நீங்க அரும் பொறாமை உள்ளோர்

         நிலத்திடைக் கெடுவர் நெஞ்சே.     --- நீதிநூல்.

 

 இதன் பொழிப்புரை --- 

 

     ஒரு குரங்கு மாம்பழத்தை வாயில் பற்றிக்கொண்டு மரத்திடை இருந்தது. பக்கத்து நீரில் தன் நிழல் தோன்றிற்று. அதை வேறொரு குரங்கு பழம் வாயில் வைத்திருப்பதாக நினைத்தது. அதைப் பிடுங்க ஆசைகொண்டது. நீரில் பாய்ந்து இறந்தது. இதைப்போன்று பொறாமைப் படுகிறவர்கள் உலகத்தில் கேடு அடைவார்கள்.

 

 

தாரணியில் எவரேனும் துயர் உறில், ன்

          தலையின் முடி தரித்தது ஒப்பாம்,

சீரணியுஞ் செல்வம் அவர் படைத்திடில் தன்

          தாய்மனைசேய் செத்தது ஒப்பாம்,

காரணமே ஒன்றும் இன்றிச் சுகதுக்கம்

          தன்வலியால் கணத்துக்கு உள்ளே

பூரணமா ஆக்கிடுவோன் பொறாமை உளோன்

          அன்றி, வர் புவியின் கண்ணே.     ---  நீதிநூல்.

        

இதன் பொழிப்புரை ---

 

     பிறர் வாழ மனம் பொறுக்காத தீயோருக்கு உலகில் பிறர் துன்புறுவதைக் காணும்போது, தமது தலையில் முடி சூடியது போன்ற மகிழ்ச்சி உண்டாகும். பிறர் செல்வம் பெற்றார்களானால் தங்கள் தாய், மனைவி மக்கள் செத்ததைப் போல வருந்துவார்கள். இப்படி ஒரு காரணமும் இன்றி நொடிப் பொழுதினுள் தங்கள் மனத்துள்ளே இன்ப துன்பங்களை ஆக்கிடும் வல்லமை பொறாமை உள்ளவர்க்கு அன்றி எவர்க்கு முடியும்?

 

     பொறாமை உள்ளத்தில் நிறைந்து இருப்பதற்கு அறிவின்மையே காரணம் என்கின்றது பின்வரும் பாடல்...

                          

நிறையும் நீர்க்கு அசைவு இல்லை, நீணிலத்து

அரையும் கல்வியில் அறிவின் மேன்மையில்

குறை உளார்க்கு அலால் கோதின் மண்பினார்க்கு

இறையும் அவ்வியம் இல்லை இல்லையே.   ---  நீதிநூல்.

        

 

 இதன் பொழிப்புரை ---

 

     கலம் நிறைய நீர் இருப்பின் அந்நீர் அசைந்து ஓசை இடாது. உலகத்துக் கல்வி அறிவினால் மேன்மையுற்றோர் பொறாமை கொள்ளார். அவற்றால் குறையுடையவரே பொறாமை கொள்வர்.

 

     மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி ஆண்டான். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். இந்திரன் பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டான். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால், அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தார்.

 

     திருமாலுக்கு நெடியோன் என்று ஒரு பேர். நெடியோனாகிய திருமால், மாவலிபால் குறியவனாகச் சென்றனர். ஒருவரிடம் சென்று ஒரு பொருளை யாசிக்கின்ற போது, எண் சாண் உடம்பு ஒரு சாணாகக் குறுகி விடும் என்ற இரவச்சத்தை இது உணர்த்துகின்றது.

 

     மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த "இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன்" என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி, தன்னை நாடி வந்தோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

 

     வாமனர் மாவலியிடம் வந்து அவனைப் புகழ்ந்தார். மாவலி உள்ளம் மகிழ்ந்து "வேண்டுவதைக் கேள்" என்றான். "எனது காலடியால் மூன்று அடி மண் வேண்டும்" என்றார் வாமனர். மாவலி மூன்றடி மண் தர இசைகிறான். வானமராக வந்துள்ளவர் இன்னார் என்று அறிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், "தலைவனாகிய மாவலியே! ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம்   கபடமானது. இதனை, மேகம் போன்ற நிறமுடைய குறள்  வடிவம் (வாமன வடிவம்) என நினைக்காதே. இந்தப் பூமியையும் அதனைச் சூழ்ந்துள்ள பெரிய அண்டங்களையும் முன் ஒரு காலத்திலே உண்டவனாகிய திருமால்தான் இந்த வாமனன் என்பதை அறிந்து கொள்வாய்" என்று கூறித் தடுத்தார். இதை மாவலி விரும்பவில்லை. தமது குலகுரு ஆகிய சுக்கிராச்சாரியாரை நோக்கி, மாவலிச் சக்கரவர்த்தி கூறுவதாக, கம்பநாட்டாழ்வார் வடித்துள்ள அருமையான இப்பாடல்களின் மூலம், ஔவையார் கருத்து வலியுறுத்தப்படுவதை அறியலாம்.     

 

அடுப்ப அரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்,

கொடுப்பவர் முன்பு கொடேல் என நின்று

தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்

கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை என்றான்.

                                        ---  கம்பராமாயணம், வேள்விப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     பிறர் அழியும்படி பழிச்செயல் செய்யும் தீத்தொழில் உடையோர் பகைவர் அல்லர். ஒரு பொருளைக் கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு, கொடுக்காதே என்று கூறித் தடுப்பவரே பகைவர் ஆவார். அத்தகையோர்  கொள்வாரையும்  கொடுப்பாரையும் அல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர். எனவே, ஈவதை விலக்குவதை ஒத்த கேடு வேறில்லை என்றான்.

 

எடுத்து ஒருஒருக்கு ஒருவர் ஈவதனின் முன்னம்

தடுப்பது நினக்கு அழகிதோ? தகவு இல் வெள்ளி!

கொடுப்பது விலக்கு கொடியோய்! உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்..

                                         --- கம்பராமாயணம், வேள்விப் படலம்.

 

இதன் பொருள் ---

 

     "பெருந்தன்மை இல்லாத சுக்கிராச்சாரியரே! நாடி வந்திருக்கும் ஒருவருக்கு, உடையவர் ஒருவர் பொருளை  எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு, கொடுக்க வேண்டாம் எனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ? ஈவதை விலக்குகின்ற கொடிய குணம் கொண்டவரே! உம்மைச் சார்ந்து  நிற்கும் உமது சந்ததியானது உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல் விடுகின்றாய் என்பதை அறிவாயாக"

 

     தாமாகவும் ஒருவர்க்கும் ஒன்றும் கொடுக்காமல், கொடுக்கக் கூடிய நல்லவர்களையும், கொடுக்காதவாறு தடுத்துக் காவல் செய்பவரும் உலகில் சிலர் உள்ளனர். இவர்கள், இனிய நிழலைக் கொடுத்துப் பூவும் காயும் பழமும் தந்து உதவக்கூடிய நல்ல மரத்தைச் சுற்றிக் கொண்டுள்ள கருவேலமுள்ளைப் போன்றவர்கள் ஆவர் என்கின்றது "நீதி வெண்பா" என்னும் நூல்.

 

தாமும் கொடார், கொடுப்போர் தமையும் ஈயாதவகை

சேமம் செய்வாரும் சிலர் உண்டே, - ஏமநிழல்

இட்டுமலர் காய்கனிகள் ஈந்து உதவும் நன்மரத்தைக்

கட்டும் உடை முள் எனவே காண்.  

 

     ஊர்ப் புறங்களில், பழமரங்களைச் சுற்றிப் பாதுகாவலாக, கருவேல முள்ளைச் சுற்றி வைத்து இருப்பதைக் காணலாம்.

 

(சேமம் --- பாதுகாவல். ஏமம் நிழல் --- இனிய நிழல். உடைமுள் --- கருவேலமுள்.)

 

     எனவே, கொடுக்க மனம் இல்லையானாலும், பிறர் கொடுப்பதையாவது தடுக்கின்ற பெரும்பாவத்தைச் செய்யாமல் இருக்கவேண்டும். கொடுப்பவனுக்குச் சேரும் புகழையும் கெடுத்து, பெறுபவனுக்கு உண்டாகும் நன்மையைம் கெடுத்த பாவத்தையும் தேடிக் கொள்ளவேண்டாம் என்பது ஔவையார் அறிவுரை.

 

"ஈவது விலக்கேல்"


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...