குளிர் காய நேரம் இல்லை.

 

 

 

சருகு அரிக்க நேரம் உண்டு, குளிர் காய நேரம் இல்லை.

-----

 

"நரைவரும் என்று எண்ணி, நல்அறிவாளர்

குழவி இடத்தே துறந்தார்; --- புரைதீரா

மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி

இன்னாங்கு எழுந்திருப் பார்".   

 

     "நாலடியார்" என்னும் நூலில் வரும் இப் பாடலின் பொருள் ---

 

     தலைமுடி நரைத்துப் போய், முதுமை வந்துவிடும் என்பதை எண்ணித்தான், பழுதற்ற அறிவினை உடைய பெரியோர் , இளமையிலேயே கேடு தரத்தக்க செயல்களில் பற்று வைப்பதை விட்டு ஒழித்தார். குற்றம் நீங்குதல் இல்லாததும், நிலை இல்லாததும் ஆகிய இளமைக் காலத்தை அறவழியில் பயன்படுத்தாமல், இளமையானது என்றும் நிலைத்திருக்கும் என்று எண்ணி, உல்லாசமாக வாழ்ந்து களித்தவர்கள், முதுமை வந்து, தலைமுடியும் நரைத்த போது, (மூன்றாவது காலாக) கையில் கோல் ஒன்றினை ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள்.

 

     இளமைப் பருவத்தை அறவழியில் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள் என்பது கருத்து.

 

     இளமையில் கருத்து இருந்த தலைமயிர், முதுமையில் பஞ்சுபோல் நரைத்து வெண்மை ஆகிவிடும். தலைமயிர் கொக்குப் போல் வெண்மை ஆகிவிடும் என்பதை "தலைமயிர் கொக்குக்கு ஒக்க நரைத்து" இந்த நரையை உடையவன் மனிதன். ஆதலால், அவன் "நரன்" என்ற நாமத்தை உடையவன் ஆயினான். மனிதனைத் தவிர வேறு எந்த உயிர்களுக்கும் நரைப்பது இல்லை. காக்கை, பன்றி, யானை, கரடி முதலிய உயிர்கட்கு மயிர் எப்போதும் கருமையாக இருப்பதை உற்று நோக்கினால் தெரியும்.

 

     சிலர் நரைக்கத் தொடங்கியவுடன் வருந்தவும் செய்கின்றனர். சிலர் வெட்கப்படுகின்றனர். "வயது என்ன எனக்கு முப்பது தானே ஆகின்றது?  இதற்குள் நரைத்து விட்டதே? தேன் பட்டுவிட்டது போலும்" "பித்த நரை" என்பார். எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையால் நிகழ்கின்றன என்பதை அவர் அறியார்.

 

     "அவனன்றி ஓரணுவும் அசையாது", "அரிது அரிது மானுடராய்ப் பிறத்தல் அரிது",  "எண்ணரிய பிறவி தனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது" என்ற ஆன்றோர்களது திருவாக்குகளின்படி, உயர்ந்த பிறவியாகிய இம் மனிதப் பிறவிக்கு நரையை ஏன் ஆண்டவன் தந்தான்?  மற்ற உயிர்களுக்கு உள்ளதுபோல் மனிதனுக்கும் மரண பரியந்தம் மயிர் கருமையாக இருக்கும்படி ஏன் அமைக்கக் கூடாது? அது ஆண்டவனுக்கு அருமையும் அல்ல. அதானல் ஆண்டவனுக்கு நட்டமும் இல்லை.  சிலர் வெளுத்த மயிரைக் கருக்க வைக்கப் பெரிதும் முயல்கின்றனர். அதற்காகவும் தமது அரிய நேரத்தைச் செலவழிக்கின்றனர். அன்பர்கட்கு இது நன்கு சிந்தித்து உய்வதற்குரிய சிந்தனையாகும்.

 

     மனிதனைத் தவிர ஏனைய பிறப்புக்கள் எல்லாம் பகுத்தறிவு இன்றி உண்டு உறங்கி வினைகளைத் துய்த்துக் கழிப்பதற்கு மட்டும் உரியனவாம். மனிதப் பிறவி அதுபோன்றது அன்று.  எத்தனையோ காலம் அரிதின் முயன்று ஈட்டிய பெரும் புண்ணியத்தால் இப் பிறவி கிடைத்தது. "பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கு அரிய பிரான்அடி பேணார்" என்பார் திருமூலர். இவர்களை, "பிராணிகள்" என்பார் திருமூலர். பிராணன் மட்டும் உள்ளது. அதற்கு ஏற்ற அறிவு இல்லை.

 

     இத்தகைய அருமையினும் அருமையாகிய பிறவியைப் பெற்று, பிறவியின் பயனாகிய பிறவாமையைப் பெறுதற்குரிய சாதனங்களை மறந்து, அவநெறியில் சென்று அலைந்து உழலாவண்ணம், இவ் உடம்பு ஒரு படித்தாக இராது என்றும், முதுமையும் மரணமும் விரைந்து நெருங்கி வந்துகொண்டு இருக்கின்றன என்றும் நினைவு கூர்தல் பொருட்டு இறைவன் நமக்கு நரையைத் தந்து இருக்கின்றான்.

 

     நரை ஒரு பெரிய பரோபகாரமான சின்னம் ஆகும். நரைக்கத் தொடங்கியதில் இருந்தாவது மனிதன் தன்னை மாற்றி அமைக்கவேண்டும். மனிதனுடைய வாழ்க்கை மாறுதல் அடைந்து, சன்மார்க்க நெறியில் நிற்கவேண்டும். அல்லது இளமையில் இருந்தே சன்மார்க்க நெறியில் நிற்போர் நரைக்கத் தொடங்கிய பின் அதில் உறைத்து திட்பமாக நிற்க வேண்டும். "ஐயனே நரை வந்து விட்டதே? இனி விரைந்து முதுமையும் மரணமும் வருமே? கூற்றுவன் பாசக் கயிறும் வருமே? இதுவலையிலும் என் ஆவி ஈடேற்றத்திற்கு உரிய சிந்தனையை அறிவில்லாத நான் செய்தேனில்லை. இதுகாறும் உன்னை அடையும் நெறியை அறிந்தேனில்லை. இனியாவது அதில் தலைப்படுவேன். என்னைத் திருவருளால் ஆண்டு அருள்வாய்" என்று துதிக்க வேண்டும்.

 

     மூப்பு எப்படியும் வந்து சேரும் என்பதை அறியாத நிலையை, அரைத்த மஞ்சளோடு வைத்துக் காட்டி அருளினார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். மஞ்சளை அரைத்து வைக்க அப்போது அழகாக இருக்கும். நேரம் செல்லச் செல்ல, சிறிது சிறிதாக வெளுத்து, பின் கருத்துப் போகும். அழகாக இருந்த இந்த உடம்பில் முதுமை எப்படியும் வந்து சேரும். முதுமை நெருங்க நெருங்க, அழகிழந்து போகும். நோய்களும் வந்து சேரும். "பல நோயும் நிலுவை கொண்டது, பாய்க்கிடை கண்டது" என்பார் அருணகிரிநாதப் பெருமான். இயமனும் காலத்தே வந்து, உடம்பில் இருந்து உயிரைக் கூறுபடுத்திக் கொண்டு செல்வான். இதை உணர்ந்து உயிருக்கு ஆக்கம் தருகின்ற நற்செயல்களில் மனத்தைச் செலுத்தி வாழுதல் வேண்டும். வாழ்வும் இளமையும் எப்போதும் நீடித்து இருக்கும் என்று எண்ணி, நன்மை தராத செயல்களிலேயே மனத்தைச் செலுத்துதல் கூடாது.

 

     இந்த உண்மையை வைத்து, திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் மீது, சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியருளிய பாடலைக் காண்போம்...

 

 

நரைப்பு மூப்பொடு பிணிவரும் இன்னே,

         நன்றியில் வினையே துணிந்து எய்த்தேன்,

அரைத்த மஞ்சள் அதுஆவதை அறிந்தேன்,

         அஞ்சினேன் நமனார் அவர் தம்மை,

உரைப்பன் நான்உன சேவடி சேர

         உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத

இரைப்பனேனுக்கு ஒர் உய்வகை அருளாய்,

         இடைமருது உறை எந்தைபிரானே!.

 

இதன் பொருள் ---

 

     நரையும் மூப்பும் பிணியும் இப்பொழுதே வரும். அவற்றால் இவ்வுடம்பு  அரைக்கப்பட்ட மஞ்சள் போல அழகு இழந்து ஒழிந்து போகும். இவற்றை நான் அறிந்து இருந்தும், நன்மை இல்லாத செயல்களிலேயே பற்று வைத்து, அவற்றையே துணிந்துசெய்து இளைத்துப் போனேன். அதனால், இப்போது எமனுக்கு அஞ்ச வேண்டியவனாக உள்ளேன். ஆகவே,  நான் உன் திருவடிகளை அடைய உன்னை வேண்டுவதானேன். அறிவதை அறிந்து வாழும் வாழ்க்கையைச் சிறிதும் அறியாத, ஆரவாரச் சொற்களை உடையவனாகிய எனக்கு, திருவிடைமருதூரில் எழுந்தருளியிருக்கின்ற எமது தந்தையே! உய்யும் நெறியை அருள் செய்வாயாக.

 

     இந்த உடம்பும் இளமையும் என்றும் நிலைத்து இருக்கும் என்று எண்ணி, அதனைப் போற்றிப் பாதுகாப்பதற்கும், அழகு செய்தகொள்வதற்கும், உடம்பால் சுகத்தை அனுபவிப்பதற்கும் பொருளைத் தேடி வாழ்நாள் முழுதும் உழைக்கின்றோம். தேடிய பொருளைக் கொண்டு, நாமும் உண்மையில் சுகித்து இருப்பதில்லை. உயிருக்கும் ஆக்கமாக உடன் வருகின்ற புண்ணித்தையும் தேடி பொருளைக் கொண்டு செய்துகொண்டது இல்லை. இறைவனைப் பணிந்து அருளைப் பெறவும் முயன்றது இல்லை. வாழ்நாளில் மற்ற செயல்களுக்கு எல்லாம் நீண்ட நேர்த்தைச் செலவழிக்க அறிந்து, இறையருளைப் பெறுவதற்கு, ஒரு அரை நிமிட நேரத்தையாவது ஒழுங்காகச் செலவழிப்பது இல்லை. "சரண கமல ஆலயத்தை, அரை நிமிட நேரம் மட்டில் தவமுறை தியானம் வைக்க அறியாத சட கசட மூட மட்டி"யாக இருக்கின்றோம். என்பதை அருணகிரிநாதப் பெருமான் அழகாகக் காட்டினார். இது எப்படி இருக்கின்றது என்பதை, "தண்டலையார் சதகம்" என்னும் நூல் அறிவுறுத்துவது காண்க.

 

உரு எடுத்த நாள்முதலா ஒருசாணும்

   வளர்க்கஉடல் உழல்வது அல்லால்,

மரு இருக்கும் நின்பாத மலர்தேடித்

   தினம் பணிய மாட்டேன்! அந்தோ!

திருவிருக்கும் மணிமாடத் தண்டலைநீள்

   நெறியே! என் செய்தி எல்லாம்

சருகு அரிக்க நேர் அன்றி, குளிர்காய

   நேரம் இல்லாத் தன்மை தானே!

 

இதன் பதவுரை ---

 

     திரு இருக்கும் மணிமாடம் தண்டலைநீள் நெறியே --- செல்வம் நிலைத்த மணிமாடங்கள் நிறைந்த திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளிய நீள்நெறிநாதரே!  உரு எடுத்த நாள் முதலா ஒருசாணும்  வளர்க்க உடல் உழல்வது அல்லால் --- இந்த உருவைத் தாங்கிய நாள் முதலாக ஒருசாண் வயிற்றைக் காக்கவே இவ்வுடம்பைக் கொண்டு உழைத்து  இழல்வது அல்லாமல், மரு இருக்கும் நின் பாதமலர் தேடித் தினம் பணியமாட்டேன் அந்தோ --- மணங்கமழும் தேவரீரது திருவடி மலரை நாடி ஒவ்வொரு நாளும் வணங்காமல் விட்டு விட்டேன்! ஐயோ!, என் செய்தி எல்லாம் --- என் செயல்கள் எல்லாம் (எப்படி அமைந்தன என்றால்) சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய நேரம் இல்லாத் தன்மை தானே --- குளிரைப் போக்க எண்ணியவனுக்கு சருகு அரிக்க நேரம் போனதே ஒழியக் குளிர்காய்வதற்கு நேரம் இல்லாத இயல்பு போல் அமைந்தது.

 

     சருகு அரித்தல் --- இலைச் சருகுகளைச் சேகரித்தல். அடுப்பு எரிப்பதற்கும், குளிர் காய்வதற்கும், நாள்தோறும் சருகுகளை அரித்து எடுத்து வந்து, வீட்டின் புழைக்கடையில் போர் போலக் குவித்து வைத்திருப்பார்கள். சுள்ளிகளையும் சேகரித்து வந்து குவித்து வைத்து இருப்பார்கள். இது நாளும் நிகழ்கின்ற ஒரு செயல். ஊர்ப்புறங்களில் இன்றும் இதைக் காணலாம். சேகரித்த சருகுகளை எல்லாம் முழுதாகப் பயன்படுத்திக் குளிர் காய்ந்தவர்கள் யாரும் இல்லை. காலமெல்லாம் பொருளைத் தேடித் தேடி, சேர்த்து வைக்க மக்கள் முயற்சிப்பது தவிர, சேர்த்துவைத்த பொருளில் சிறிது கூட அனுபவிக்காமல் மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே சாகிறார்கள். "சருகு அரிக்க நேரமின்றி தீக்காய நேரமில்லாத் தன்மை" இது தான்.

 

     "பாடுபட்டுப் பணத்தைத் தேடி, புதைத்து வைக்கும் கேடுகெட்ட மானிடராக" ஆகாமல், உடம்பு உள்ளபோதே அறச்செயல்களைச் செய்து, போகின்ற வழிக்குப் புண்ணித்தையும் தேடிக் கொள்ளுதல் வேண்டும்.

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...