அறிவில்லாதவர் நட்பு அறவே கூடாது

 

 

 

அறிவில்லார் நட்பு அறவே கூடாது

---- 

     திருக்குறளில், "நட்பு ஆராய்தல்" என்னும் ஓர் அதிகாரம். முந்திய அதிகாரத்தில் நட்பினது இலக்கணம் கூறிய நாயனார் இதில், அந்த இலக்கணம் உடையாரை ஆராய்ந்து அறிந்து நண்பராகக் கொள்ளுவது பற்றிக் கூறினார்.

     ஒருவனோடு நட்புக் கொள்ளவேண்டுமானால், தான் நண்பனாகக் கொள்ளுகின்றவனது குணங்களையும், அவனது செய்கைகளையும் ஆராய்ந்து, குணமும் செயலும் நன்மையாக இருக்குமானால், நட்புக் கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் அவ்வாறு நட்புக் கொண்ட பிறகு நண்பர்க்கு இடையில் எவ்வித வேறுபாடும் இல்லாமல் இருக்கவேண்டும். பழகிய பின்னர்  பிரிவு என்பது யாருக்கும் துன்பத்தையே தரும். "பேயோடு ஆயினும் பிரிவு இன்னாது" (பேயோடு பழகிவிட்டாலும், பிரிவது துன்பத்தேயை தரும்) என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "பேய்வயினும் அரிது ஆகும் பிரிவு" (பேயோடு நட்புக் கொண்டாலும் பிரிவது அரிது ஆகும்) என்று மணிவாசகப் பெருமானும் பாடி அருளியதையும் எண்ணுதல் நலம் தரும்.

     "இணக்கம் அறிந்து இணங்கு" என்பது ஆத்திசூடி. நட்புக்கு ஏதுவாகிய நற்குண நற்செய்கைகளை ஆராய்ந்து அறிந்த பின் ஒருவரோடு நட்புக் கொள்ளவேண்டும். உள்ளத்தால் ஒத்த பண்பு உடையாரே நட்புக் கொள்ளத் தகுதி உடையவர்.

     "பாம்பொடு பழகேல்" என்பதும் ஆத்திசூடி. பாம்பானது பால் கொடுத்தவருக்கும் விடத்தைக் கொடுக்கின்ற தன்மையினை உடையது. தமக்கு நன்மையையே ஒருவர் செய்தாலும், அதைக் கருதி நன்றி பாராட்டாமல், தீமையையே செய்வர்கள் பாம்பினைப் போன்றவர்கள். அத்தகையவர்களோடு பழக்கத்தைக் கொள்ளாதே என்பது நமது பெரியபாட்டியின் அரிய அறிவுரை. 

     இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது, அறிவில்லாதவரிடம் கொண்ட நட்பை விட்டுவிடுதலே ஆகும்" என்கின்றார் நாயனார்.

     மூங்கில் காடு பற்றி எரியும்போது, அந்தக் காட்டில் உள்ள சந்தன மரம், வேங்கை மரம் முதலானவைகளும் வெந்து அழிவது போல, தீயவனுடன் கொண்ட நட்பால் தானும் அழியவேண்டி வரும். எனவே, அந்த நட்பை விட்டொழிக்கவேண்டும். அதுவே ஒருவன் பெரும் பாக்கியம் ஆக அமையும் என்பதை உணர்த்த,

 

ஊதியம் என்பது ஒருவற்கு, பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.                  

 

என்று அருளிச் செய்தார் நாயனார்.

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

 

போற்றும் சுசீலன் புயபெலனை நீத்துஅகன்றான்

தோற்றுஇறைவி தும்மிடவும், சோமேசா! - ஏற்றதே

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

கேண்மை ஒரீஇ விடல்.

 

இதன் பொருள்---

 

         சோமேசா! ஒருவற்கு ஊதியம் என்பது --- ஒருவனுக்குப் பேறு என்று சொல்லப்படுவது; பேதையார் கேண்மை ஒரீஇ விடல் --- அறிவில்லாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரை விட்டு நீங்குதல்.

 

         போற்றும் சிசீலன் --- யாவரானும் போற்றித் துதிக்கப்பெறும் சுசீலன் என்னும் அந்தணன், தோற்று இறைவி தும்மிடவும் --- அவனைத் தடுத்தற்கேற்ற புத்தி தோன்றிய அரசி தும்மலைச் செய்யவும், புயபெலன் நீத்து அகன்றான் --- வங்கதேசத்து அரசனாகிய புயபலன் என்பவனை நீங்கிச் சென்றான் ஆகலான், ஏற்றதே --- அது அவனுக்குத் தக்கதே என்றவாறு.

 

         ஊதியம் --- இலாபம், பேறு. ஒன்றைப் பெறுவதால் உண்டாவது பேறு. அது ஊதியம். இங்கே பொல்லாதார் நட்பை விடுதலே ஊதியம் என்றார்.

 

         வங்கதேயத்து அரசனாகிய புயபலன் என்பான், முறை கோடாது அரசு செலுத்தும் நாளில், ஓராண்டு உத்தராயண புண்ணிய காலம் வர, அற்றை நாள் அந்தணர்க்குத் தானம் செய்ய எண்ணி அறிவித்தான். அதனைக் கேள்வியுற்ற சுசீலன் என்னும் பிராமணோத்தமன் விதர்ப்ப நாட்டினின்றும் அங்கு வர,  மற்றைப் பிராமணர்கள் யாவரும் அவனைக் கண்டு போற்றி அழைத்துச் சென்று அரசற்கு அவன் பெருமை கூறி, "முன்னர் அவற்கே தானம் செய்க" என்றார்கள். அரசன் மகிழ்ந்து தானம் வழங்கும்போது, சுசீலன் அவன் முகம் நோக்கி விபூதி இல்லாமை கண்டு, "நீ விபூதி அணியவில்லை. எனவே, நீ தரும் தானத்தை நான் கொள்ள மாட்டேன்" என மறுத்தும்,

 

"செய்யதிரு நீறுதொட்டுத் தரியாதார்

         பெரும்செல்வம் சிதையும், மன்னர்

கொய்யுளைய பரித்திரளும் கரித்திரளும்

         மறுமன்னர் கொள்வர், வேட்ட

தையல் ஒழிந்து, அருமகவு தணந்து

         பெரும் பிணியுடனாய்ச் சரிப்பர், அன்றி,

மெய்யின் உறுப்புக் குறைந்து

         புலையரினும் கடைப்பிறவி மேவுவாரால்"

 

(கொய்யுளைய பரித் திரள் --- பிடரியில் மயிர் உடைய குதிரைகளின் திரள்.  கரித் திரள் --- யானையின் திரள். மறு மன்னர் --- பகை அரசர். வேட்ட தையல் --- விரும்பி மணம் செய்து கொண்ட மனைவி. அருமகவு தணந்து --- அருமையாகப் பெற்ற புதல்வன் நீங்குதல் (சாதல், பிரிதல்) சரிப்பர் --- வசிப்பர், உலவுவர். உறுப்புக் குறைதல் --- குட்ட நோய் அடைதல்)

 

என அவ்வாறு கொள்வதால் உண்டாகும் விளைவும் கூறியும், அரசன் ஓரே பிடிவாதமாய் விபூதி பூசிக் கொள்வதற்கு இசையவில்லை. சுசீலன் உடன் எழ, அதுகண்ட அரசன் தேவி, தனது நாசித் தொளையில் ஒரு துரும்பு திருகித் தும்மி, "இது தடை, நிற்க" என்று கூறினாள். மறையவன் ஆகிய சுசீலன், அரசியின் வார்த்தையைப் பொருட்படுத்தாது, தனது நாட்டுக்குக் திரும்பினான். பின்னர், அவன் கூறியவாறே அரசன் செல்வம் சிதைந்து நாடிழந்து, காடு புகுந்து, மனைவி ஒழிந்து, மகவு தணந்து, குட்டநோய் பெற்று, உறுப்பு அரியுண்டு கிடக்கும் நிலையில், அவனைச் சந்தித்து வணங்கி, விபூதி பெற்றுப் பழைய நிலைமை அடைந்தான்.

 

     இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பின் வரும் பாடல்கள் அமைந்துள்ளமை காண்க...

                 

மனத்தான் மறுவு இலரேனும், தாம் சேர்ந்த

இனத்தால் இகழப்படுவர்; --- புனத்து

வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே,

எறிபுனம் தீப்பட்டக் கால்.            --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     புனத்து வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேம் எறிபுனம் தீப்பட்டக்கால் --- காட்டில் உள்ள மணம் கமழ்கின்ற சந்தனமரமும் வேங்கைமரமும் பெருங்காற்று வீசுகின்ற அக்காடு தீப்பிடித்தால் வெந்து அழிந்துவிடும்; மனத்தால் மறு இலரேனும் தாம் சேர்ந்த இனத்தால் இகழப்படுவர் --- ஆதலால், சான்றோர் தம் மனநலத்தால் மாசு இல்லாதவர் ஆயினும் தாம் சேர்ந்த தீய இனத்தினால் பெருமை குன்றிப் பழிக்கப்படுவர்.

 

         சான்றோர் மனநலம் நன்குடையராயினும் தீயினச் சேர்க்கையால் பெருமை குறைந்து கெடுவர்.

 

        

சந்தனத்தைச் சேர்தருவும் தக்கமணம் கமழும்,

சந்தனத்தைச் சார்வேய் தழல்பற்ற - அந்தவனம்

தானும்அச் சந்தனமும் தன்இனமும் மாள்வதுஅன்றித்

தானும் கெடச்சுடுமே தான்.         --- நீதிவெண்பா.

 

         சந்தன மரத்தை ஒட்டி வளர்ந்துள்ள மரங்களும் அந்தச் சந்தன மரத்தைப் போல் அதன் சார்பினால் நல்ல மணத்தைப் பரப்பும். ஆனால், அந்தச் சந்தன மரத்தைச் சார்ந்துள்ள மூங்கில்கள் தீப்பற்றிக் கொள்ள, அந்தக் காடு முழுவதும் உள்ள இருவகை மரங்களும் அழிந்துவிடும். அல்லாமலும், நன்மை தரக்கூடிய பலவகை மரங்களைக் கொண்ட அந்த வனமும் பற்றி எரிந்து சாம்பல் ஆகிவிடும்.

 

         நல்லவர்களைச் சார்ந்து இருப்பவர்களில் சிலர், எல்லாருக்கும் நன்மை உண்டாக்கித் தாமும் நல்லவர் ஆவர். ஆனால், அப்படிச் சார்கின்றவர்களில் வேறு சிலர், மற்றவர்களுக்கும் தமக்கும் கேடு தேடிக் கொள்வர். அத்துடன், பல பேருக்கும் நன்மையாய் இருக்கக்கூடிய தம்மைச் சார்ந்த நல்லவர்களையும் கெடுத்து விடுவர்.

 

     எனவே, அறிவில்லாத பேதைகளோடு நட்புக் கொள்வதை விட்டுவிடுவதே ஒருவன் பெறக் கூடிய இலாபம், பாக்கியம், பேறு ஆகும் என்பதை அறிக.

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...