தேன் புளித்தது, பால் கசந்தது.

 

 

 

தேன் புளித்தது, பால் கசந்தது

----

 

     "தேன், உந்து முக்கனிகள், பால், செங்கரும்பு, இளநீர் சீரும் பழித்த சிவம்" என்கின்றார் திருக்கயிலைத் திருப்புகழில் அருணகிரிநாதப் பெருமான்.

 

     தேன் மிகவும் இனிமையானது. உணவாகவும் மருந்தாகவும் பயன்படுவது. முக்கனிகள் ஆகிய மா, பலா, வாழை ஆகியவை அமுதம் போன்றவை. பால் யாவருக்கும் உணவாவது. கருப்பஞ்சாறும் மிகவும் இனிமையானது. இளநீர் எப்படிப்பட்டது என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவை யாவும் உண்ணுகின்ற நாவுக்கு இனிய சுவையைத் தந்து, உடல் நலத்தைப் பேணத் துணை புரிபவை. சிறப்பு மிக்க, இனிமையான இந்தப் பொருள்களை எல்லாம் பழித்து, உயர்ந்து நிற்கும் சுவை ஒன்று உண்டு.

 

     தலைவன், தலைவி இருவரிடத்தே உண்டான அனுபவத்தை எப்போது நினைத்தாலும் உள்ளம் இனிக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலானதும், உயிருக்கு ஆக்கம் தருவதும், நிலையான இன்பத்தைத் தருவதும் ஆகிய ஒப்பற்ற பொருள் ஒன்று உண்டு. அதுவே இறை அனுபவம். இறைவனைச் சிந்தித்து திருவருள் மயமாகி நிற்கும்போது, அளவிட்டுச் சொல்லவும், எழுதவும், இப்படிப்பட்டது என்று நினைக்கவும் முடியாத ஓர் இன்ப உணர்ச்சி உண்டாகும். அந்த அனுபவ இன்பம் எப்படிப்பட்டது, என்பதைப் பிறர் அறியக் கூறுதல் இயலாது.

 

"செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று

ஒவ்வாதது என உணர்வித்தது தான்

அவ்வாறு அறிவார் அறிகின்றது அ(ல்)லால்

எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே?"

 

என்பது கந்தர் அனுபூதி.

 

     இன்பத்துக்கே தலைவன் இறைவன். இன்ப நாயகனாகி இறைவனை மெல்ல மெல்ல நினைக்கத் தொடங்கும்போது, இணையற்ற ஒரு தனிப் பரமானந்தம் அரும்பும். அந்த இனிமையைச் சுவைத்து அறிந்தவர்க்குக் கரும்பு துவர்க்கும். தேன் புளிக்கும். பிற எல்லாம் கசக்கும். தொடக்க இன்பமே இப்படி என்றால், அதன் முதிர்ச்சியில் உண்டாகும் இனிமையின் திறத்தை அளவிட்டு வார்த்தைகளால் சொல்லவும், எழுதவும் முடியாது.

 

"பெரும்பைம் புனத்தினுள் சிற்றேனல் காக்கின்ற  பேதைகொங்கை

விரும்பும் குமரனை, மெய்யன்பினால் மெல்ல மெல்ல உள்ள,

அரும்புந் தனிப் பரமானந்தம் தித்தித்து அறிந்த அன்றே,

கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே". -கந்தரலங்காரம்.

 

இதன் பொருள் ---

 

     பெரிய பசுமை தங்கிய தினைப்புனத்தில், சிறிய தினைக் கொல்லையைக் காவல் புரிகின்ற வள்ளநாயகியாரின் தனபாரங்களை விரும்புகின்ற குமாரக் கடவுளை, உண்மையான அன்புடன், மெல்ல மெல்ல நினைக்க, அந்த நினைப்பினால், ஒப்பற்ற பெரிய இன்பமானது தோன்றும். அந்த ஒப்பற்ற பேரின்பத்தை அடியேன் அனுபவித்து, அதன் இனிமையை உணர்ந்த அந்தக் கணத்திலேயே, இனிமை மிக்க கரும்பும் துவர்த்துப் போனது, செவ்விய தேனும் கூடப் புளித்து, மிகவும் கசந்து போனது.

 

     இந்த அனுபவத்தையே நமது கருமூலம் அறுக்க வந்து அவதரித்த திருமூல நாயனாரும் திருமந்திரம் ஆகக் காட்டுவது காண்க.

 

கரும்பும் செந்தேனும் கலந்தது ஓர் காயத்தில்

அரும்பும் அக் கந்தமும் ஆகிய ஆனந்தம்

விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்

கரும்பும் முன் கைத்தது, தேனும் புளித்ததே.

 

இதன் பொருள் ---

 

     கருப்பஞ் சாற்றையும், தேனையும் கலந்து உண்டபோது, அதன் இனிப்பு இத்தகையது என வரையறுத்துச் சொல்ல வாராதது போல, இன்னது என வரையறுத்துச் சொல்ல வாராத ஓர் இன்பனாது இந்த உடம்பிலும் உண்டாகின்றது. (அது அரிவையர் தரும் இன்பம். அதனால், அந்த இன்பத்தை மக்கள் வெறுக்காமல் மேலும் மேலும் விரும்புகின்றனர்.) ஆயினும், மலரில் மணம் போல அறிவினுள் அறிவாய் எழுகின்ற ஓர் ஆனந்தம் உண்டு. (அதுவே சிவானந்தம்) அதனை அடையவே உயர்ந்தோர்கள் விரும்புகின்றார்கள். அவர்கள் விரும்பியபடி அந்த ஆனந்தம் அவர்களது முயற்சியால் அவர்கள் அறிவிலே வெளிப்பட, வெளிப்பட, அதனை அவர்கள் அனுபவித்த பின், அவர்களுக்கு மேலே, குறிப்பிட்ட கருப்பஞ்சாறு போன்ற இன்பங்களும் கசந்து விடுகின்றன. தேன் போன்ற இன்பங்களும் புளித்துவிடுகின்றன.

 

     மக்கள் விரும்புவது அரிவையர் இன்பம். மக்களில் உயர்ந்தோர் விரும்புவது அதனினும் மேலான ஆண்டவன் இன்பம் என்பது சிந்திக்கத்தக்கது.

 

     இளநீரை உலையாக வைத்து, அதில் நல்ல ஆவின் பாலையும் முப்பழச் சாற்றையும் பிழிந்துவிட்டு, கருப்பஞ் சாற்றையும் கூட்டி, பதத்தில் இறக்கி, வடித்தெடுத்த கொம்புத் தேனையும் விட்டுக் குழைத்துச் செய்த ஒரு மதுவர்க்கம் மிகவும் இனிமையாகவே இருக்கும். ஆனால், நுனி நாவில் மட்டுந்தான் இனிக்கும். அதை எடுத்துக் கண்ணிலும் காதிலும் மூக்கிலும் விட்டால் இனிக்குமா? இன்பத்தை அளிக்குமா? துன்பத்தையே தரும். அந்த மதுவர்க்கத்தை முதுகிலோ மார்பிலோ வைத்தால் இனிக்குமா? இவ்வளவு பாடுபட்டு முயன்று செய்த அது, நாவின் நுனியில் மட்டுமே இனிக்கும். ஆனால், இறைவன் தியானத்தினால் உண்டாகும் ஒப்பில்லாத அமுதமானது, நாவிற்கும், கண்ணிற்கும், காதுக்கும், பிற உறுப்புகட்கும் உள்ளத்திலும் உணர்விலும் உயிரிலும் கலந்து தெவிட்டாத இனிமையைத் தந்து பிறவி நோயையும் போக்கும்.

 

     வெம்மை பொறாத கோடைக் காலத்திலே வழி நடப்போருக்குக் குளிர்ந்த மரநிழலும், ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணிரும், மெல்லென வீசுகின்ற தென்றல் காற்றும் ஒருசேர இணைந்த நிலையில் ஏற்படும் இன்பத்தினை, இறைவன் அருளால் விளையும் இன்பத்திற்கு உவமையாக எடுத்துரைக்கும் முறையில்,

 

"மாசில்வீணையும், மாலை மதியமும்,

வீசுதென்றலும், வீங்கு இளவேனிலும்,

மூசுவண்டு அறை பொய்கையும் போன்றதே,

ஈசன் எந்தை இணையடி நீழலே"

 

என வரும் அப்பர் தேவாரம் அமைந்துள்ளது அறிந்து மகிழத் தக்கது ஆகும்.

 

     உலக வாழ்க்கையில் மக்கள் விரும்பி நுகர்தற்குரிய முக்கனிகளின் சாறுகள், சர்க்கரை, கற்கண்டு, தேன், பசும்பால், தேங்காய்ப்பால், இனிய வாதுமை, முந்திரிப் பருப்பின் பொடி நல்லநெய் இவற்றையெல்லாம் கலந்து காய்ச்சிப் பதமறிந்து இறக்கிய நறும்பாகின் கட்டியைக் காட்டிலும் இன்சுவை தரும் தெள்ளிய அமுதமாகத் திகழ்பவன் அம்பலவாணப்பெருமான் என்பதனை விரித்து உரைத்துப் போற்றுவது,

 

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து ஒன்றாய்க் கூட்டி,

     சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறுந் தேன்பெய்து, பசும்பாலும் தெங்கின்

     தனிப்பாலும் சேர்த்து, ருதீம் பருப்பிடியும்விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சுட்டின் இறக்கி

     எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள்ளமுதே!

அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கும் நடத்தரசே!

     அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்தருளே.

 

எனவரும் வடலூர் வள்ளல்பெருமான் அருளிய திருவருட்பா.

 

     தேன், முக்கனிகள், பால், கருப்பஞ்சாறு, இளநீர் ஆகியவற்றின் சுவையானது உண்டபோது மட்டுமே இனிமை தரும். அந்த சுவையும் நாக்கோடு நின்று விடும். மேலும் உண்ண ஆவலைத் தூண்டும். அளவுக்கு மேல் உண்டால் தெவிட்டும். அளவுக்கு மீறினால் நஞ்சாகவும் மாறும். ஆனால், இறைவன் திருவடித் தரிசனத்தாலும், திருவடி தியானத்தினாலும் உண்டான இன்பமானது எப்போதும் உள்ளத்தில் தித்திக்கும், எலும்பும் உருகும்படியான ஆனந்தம் என்னும் தேனை இடையறாது சொரிந்து கொண்டே இருக்கும் என்பதை,

 

தினைத்தனை உள்ளது ஓர்!

    பூவினில்தேன் உண்ணாதே,

நினைத்தொறும் காண்தொறும்

    பேசுந்தொறும் எப்போதும்

அனைத்து எலும்பு உள்நெக

    ஆனந்தத் தேன்சொரியும்

குனிப்பு உடையானுக்கே

    சென்று ஊதாய் கோத்தும்பீ!

 

என்னும் மணிவாசகத்தால் அறியலாம்.

 

இதன் பொருள் ---

 

     அரச வண்டே! தினை அளவு இருக்கின்றதை ஆராய்ந்து அறிவாயாக. மலரிலுள்ள தேனைப் பருகாமல், நினைக்குந்தோறும், காணுந்தொறும், சொல்லுந்தொறும், மற்று எல்லாக் காலத்தும், எல்லா எலும்புகளும், உள்ளே நெகிழும்படி, பேரின்பத் தேனைப் பொழிகின்ற, கூத்து உடைய பெருமானிடத்திலேயே போய் ஊதுவாயாக.

 

     ஓர் பூ என்பதற்கு, ஒரு மலர் என்று உரை சொல்லுவது உண்டு. பூவில் தினையளவு மட்டுமே தேன் இருக்கும் என்பதை ஆராய்ந்து பார் என்பதாகப் பொருள் கொள்வது பொருத்தமாக இருக்கும். (ஒர்தல் --- ஆராய்தல்) ஒரு பூவில் தினையளவு தேன் இருக்கும். எல்லாப் பூக்களிலும் தேன் இருக்காது. எனவே, தேன் உள்ள பூக்களைத் தேடித் தேடிச் சென்று வண்டானது மதுவை மாந்தும்.

 

     அரசவண்டு என்பது ஆன்மாவைக் குறித்தது. ஆன்மாவுக்கு அறிவுறுத்தலாக அமைந்தது இத் திருவாசகப் பாடல். உண்டால் மட்டும் சுவையைத் தருகின்றதைப் போன்றது உலக இன்பங்கள். தேன் என்பது உலக இன்பம். அது சிறிது காலமே நீடிப்பதால் சிற்றின்பம் எனப்படும். காலத்தே உவர்த்தும் விடும். தேனை அதிகமாக உண்டால் இன்பம் பயக்காது. அதுபோலவே, உலக இன்பங்களை அளவு கடந்து துய்த்தாலும் கேடு உண்டாகும்.

 

     அருணகிரிநாதப் பெருமான் அருளிய அற்புதமான திருப்புகழைக் காண்போம்...

 

தேன்,உந்து முக்கனிகள், பால், செங் கருப்பு, இளநிர்,

     சீரும் பழித்தசி வம் ...... அருள் ஊற,

தீதும் பிடித்த வினை ஏதும் பொடித்து விழ,

     சீவன் சிவச்சொருபம் ...... என தேறி,

 

நான் என்பது அற்று, உயிரொடு ஊன்என்பது அற்று, வெளி

     நாதம் பரப்பிரம ...... ஒளிமீதே

ஞானம் சுரப்ப, மகிழ் ஆநந்த சித்தியொடெ

     நாளும் களிக்க, பதம் ...... அருள்வாயே.

 

வானம் தழைக்க, அடியேனும் செழிக்க, அயன்

     மாலும் பிழைக்க, அலை ...... விடம் மாள

வாரும் கரத்தன், எமை ஆளும் தகப்பன், மழு

     மானின் கரத்தன் அருள் ...... முருகோனே!

 

தானந் தனத்ததன னா வண்டு சுற்றி, மது

     தான் உண் கடப்ப மலர் ...... அணிமார்பா

தானம் குறித்து எமை ஆளும் திருக்கயிலை

     சாலும் குறத்திமகிழ் ...... பெருமாளே.

 

இதன் பொழிப்புரை ---

 

         கடலில் தோன்றிய ஆலாலவிடத்தின் கொடிய வலிமை கெட, அதனை வாரி எடுத்த திருக்கரத்தை உடையவரும், அடியேங்களை ஆட்கொள்ளும் பரமபிதாவும், மழுவையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினருமாகிய சிவபெருமான், பொன்னுலகம் செழிப்புற்று ஓங்குமாறும், அடியேன் உய்ந்து ஈடேறுமாறும், மாலயனாதி வானவர் மாயாமல் பிழைக்குமாறும் பெற்றருளிய முருகக் கடவுளே!

 

         தானந் தனத்த தனனா” என்று ஒலிசெய்து வண்டுகள் வட்டமிட்டுத் தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற அழகிய திருமார்பை உடையவரே!

 

         அடியேங்களை ஆட்கொள்வதற்கு தக்க இடமாகக் குறித்து திருக்கயிலாய மலையின் மீது எழுந்தருளியுள்ள வள்ளிநாயகியார் மகிழ்கின்ற பெருமையில் மிக்கவரே!

 

         சிறந்த தேன், உயர்ந்த மா, பலா, வாழை என்ற முக்கனிகள், பால், செங்கருப்பஞ்சாறு, இளநீர் முதலியவைகளின் இனிமையைத் தனது இணையற்ற உயிரினும் உணர்விலும் இனிக்கும் பெருஞ்சுவையால் பழிக்கும் சிவத்தின் திருவருட்பெருக்கு உண்டாகவும், நன்மையும் தீமையும் ஆகிய வினைகள் முழுவதும் தூள் பட்டொழியவும், சீவன் சிவவடிவு என்பதைத் தெளிந்தும், அகங்காரத்தை ஒழித்து பரவெளியில் அருள்நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில் சிவஞானம் பெருகி வரவும் உவட்டாத இன்பத்துடன் கூடிய முத்தியில் என்றும் நிலைத்து மகிழவும் தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.

 

     தீதும் பிடித்த வினை என்று அடிகளார் குறித்திருப்பது சிந்தனைக்கு உரியது. வினை என்பது நல்வினை தீவினை இரண்டையும் குறிக்கும். இரண்டுமே தீமையைத் தருவன என்று அடிகளார் குறிப்பதை நுனித்து உணரவேண்டும். நல்வினை தீவினை இரண்டும் கெட்டால் அன்றி பிறவி அறாது. பிறவி அற்றால் ஒழிய, உயிருக்குத் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் இல்லை. நல்வினை என்பது பொன்னால் செய்த விலங்கு. தீவினை என்பது இரும்பால் செய்த விலங்கு போலும். விலங்கு என்னும் தன்மையால் இரண்டும் ஒன்றுதான்.  இரண்டு தன்மையான விலங்குளும் துன்பத்தையே தருவன. ஆதலால் இரு வினையும் அறவேண்டும்.

 

 

 


No comments:

Post a Comment

ஆமையும் மனிதனும்

  ஆமையும் மனிதனும் ----- உடலைப் பற்றி நின்று துன்புறுத்தும் நோய் போல, உயிரைப் பற்றி நின்று துன்புறுத்துவது ஆகலின் பிறவி நோய் எனப்பட்டது. ந...