இயல்வது கரவேல்

 

 

ஆத்திசூடி --- 03. இயல்வது கரவேல்

-----

 

     "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு" என்பது, ஆத்திசூடி என்னும் நூலில் மூன்றாவதாக ஔவைப் பிராட்டியார் கூறும் நல்லுரை.

 

கரத்தல் --- கொடுக்காது இருத்தல், ஒளித்தல். மறைவு, வஞ்சனை, களவு, பொய்.

 

இயல்வு --- கூடியது ஆதல், செய்யப்படுதல், உடன்படுதல், நடத்தல், செயல்படுதல்.

 

     பிறக்கின்ற எல்லா உயிர்களுக்கும் வளர்ச்சி உண்டு. உடம்ப நாளாக நாளாக வளருகின்றது. மனிதனுக்கும் அப்படித்தான். ஆனால், எந்த உயிரும் சிரிக்கவும், பேசவும் அறிந்து கொள்வது இல்லை. மனிதன் மட்டும்தான், குழந்தையாக உள்ளபோதே, பிறர் சொல்லும் சொற்களின் பொருள்களைக் குறிப்பால் உணர்ந்து தெரிந்து கொள்ளுகின்றான். கல்வி பயிலுவதன் மூலம் அறிவு வளர்ச்சி பெறுகின்றான். "யாம் ஓதிய கல்வியும் எம் அறிவும் தாமே பெற வேலவர் தந்தது" என்பதை உணர்ந்து, "பூ மேல் மயல் போய் அற" வாழ்ந்து, மெய்ப்பொருளைப் புணர அறியாமல், பெற்ற அறிவைக் கொண்டு, பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை கொண்டு அலைகின்றான். "மூ ஏடணை என்று முடிந்திடுமோ?" என்று இரங்குகின்றார் அருணகிரிதாநப் பெருமான். மூவாசைகளுக்கும் பொருளே ஆதாரம் என்பதால், பொருளாசை கொண்டு மனிதன் அளக்கமுடியாத பாவங்களை எல்லாம் துணிந்து பயன்றுகொண்டே இருக்கின்றான். "பொருள் இருந்தால் எல்லாம் ஆகும்" என்ற அறிவு மயக்கத்தில் அலைகின்றான்.

 

     உடுப்பதற்கு உடை வேண்டும்; பெரிய பசியைத் தணிப்பதற்குக் கெட்டியான பானகம் முதலிய சுவையான நீர் வேண்டும்; உடலின் அழுக்கு நீங்கி ஒளிபெற நீரும், நல்ல ஆடையும் வேண்டும்; உடலுக்கு உற்ற நோய்களை ஒழிப்பதற்கு மருந்துகள் வேண்டும்; வீட்டுக்குள் இருப்பதற்கு இளம் மனைவி வேண்டும்; படுப்பதற்கு ஒரு தனி வீடு வேண்டும்; இவ்வாறான நலன்கள் யாவும் கிடைத்துக் குடும்பத்தனாகி, அந்த வாழ்வு என்ற மயக்கக் கடலில் முழுகி, பெரிய சுற்றத்தாரைக் காப்பவனாயிருந்து, முடிவில், அவனது உயிர் வீணே அழிந்து போகின்றது.

 

         இந்த அழிநிலையை, பின்வரும் திருப்புகழ்ப் பாடலின் மூலம் உணர்த்தி, முருகன் திருவருளைப் பெற்று உய்ய அருணகிரிதாப் பெருமான் வழிகாட்டி அருளுகின்றார்.

 

உடுக்கத் துகில் வேணும், நீள்பசி

     அவிக்கக் கனபானம் வேணும், நல்

     ஒளிக்குப் புனல் ஆடை வேணும், மெய்..உறுநோயை

 

ஒழிக்கப் பரிகாரம் வேணும், உள்

     இருக்கச் சிறுநாரி வேணும், ஒர்

     படுக்கத் தனிவீடு வேணும், இவ் ....வகையாவும்

 

கிடைத்துக் க்ருகவாசி ஆகிய

     மயக்கக் கடல்ஆடி, நீடிய

     கிளைக்குப் பரிபாலனாய் உயிர் ....அவமே போம்.

 

க்ருபைச் சித்தமும், ஞான போதமும்

     அழைத்துத் தரவேணும், ஊழ்பவ

     கிரிக்குள் சுழல்வேனை ஆளுவது ....ஒருநாளே.

 

     கரவு உள்ளத்தில் கொண்டுள்ளவர்க்கு எல்லாம் கடுமையான நரகங்கள் வாய்க்கும் என்றும் அப்பர் பெருமான் அருளி உள்ள தேவாரப் பாடலைக் காண்போம்...

 

இரப்பவர்க்கு ஈய வைத்தார்;

     ஈபவர்க்கு அருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட்கு எல்லாம்

     கடு நரகங்கள் வைத்தார்

பரப்பு நீர்க் கங்கை தன்னைப்

     படர் சடைப் பாகம் வைத்தார்

அரக்கனுக்கு அருளும் வைத்தார்,

     ஐயன் ஐயாறனாரே.

 

இதன் பொருள் ---

 

     தலைவராகிய ஐயாறனார், பிச்சை எடுப்பவருக்கு வழங்கும் உள்ளத்தை நன்மக்களுக்கு அருளியவராய், அங்ஙனம் கொடுப்பவர்களுக்குத் தம் அருளை வழங்கியவராய், நிறைய வைத்துக் கொண்டு இரப்பவர்களுக்கு வழங்காது மறைப்பவர்களுக்குக் கொடிய நரகத் துன்ப நுகர்ச்சியை வழங்குபவராய், பரவிய நீரை உடைய கங்கையைப் பரந்த சடையின் ஒரு பகுதியில் வைத்தவராய், இராவணனுக்கு அருள் செய்தவராய் விளங்குகின்றார்.

 

     "கடுநரகங்கள்" என்று சுவாமிகள் அருளிச் செய்ததனால், கரத்தல் கடுமையான பாவம் என்பதும், அப் பாவத்திற்கு, ஒரு நரகம் அல்ல, பலவிதமான நரகங்களில் சென்று துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.

 

கெடுவாய் மனனே! கதிகேள், கரவாது

இடுவாய்: வடிவேல் இறைதாள் நினைவாய்:

சுடுவாய் நெடுவேதனை தூள்படவே:

விடுவாய், விடுவாய், வினை யாவையுமே.

 

என்று கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதப் பெருமான், நாமெல்லாம் உய்தி பெறுவதற்கான நல்வழியைக் காட்டி அருளுகின்றார்...

 

     கெட்டுப் போகின்ற நிலையில் உள்ள எனது மனமே,  நீ அடைய வேண்டிய கதியைப் பெற உனக்கு நான் சொல்லுவதைக் கேட்பாயாக. மனதில் வஞ்சனை, அதாவது ஒளிவு மறைவு இல்லாமல் பிறருக்கு உதவி செய்வாயாக. கூர்மை பொருந்திய வேலாயுதத்தை உடைய முருகப்பெருமானின் திருவடிகளை நினைப்பாயாக. பெருந்துன்பத்தை விளைக்கும் வினைகளை ஞானாக்கினியால் சுட்டு எரிப்பாயாக. வினையை விளைக்கின்ற செயல்களை விட்டு ஒழிப்பாயாக.

 

     எனவே, நமது பெரியபாட்டி, ஆத்திசூடியில், "இயல்வது கரவேல்" என்று சுருங்கச் சொல்லி அறிவுறுத்தினார்.

 

     தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுத்தல் கூடாது என்னும் கரத்தல் ஆகிய காரியம், உள்ளத்தில் ஆசை இருப்பதன் காரணமாக உண்டாகின்றது. ஒருவன் தன்னிடத்தும், தனது பொருளினிடத்தும் உண்டான ஆசை காரணமாகவே,கரப்பு என்னும் எண்ணம் உண்டாகும்.

 

     கொடுக்க முடிந்ததைக் கரவாமல் கொடுத்தலும், கொடுக்க இயலாததை இல்லை என்று மறுப்பதும் செய்யலாம். கொடுக்க முடியாததைக் கொடுப்பதாகச் சொல்லுவதும், கொடுக்க முடிந்ததைக் கொடுக்காமல் மறுப்பதும், இல்லை ஒருவனுடைய புகழைக் கெடுப்பது மட்டும் அல்லாமல், இல்லை என்று வருவோர்க்குத் துன்பத்தை விளைப்பதும் ஆகும்.

 

"ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்என மறுத்தலும், இரண்டும்

ஆள்வினை மருங்கில் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே

 இரப்போர் வாட்டல்; ன்றியும் புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில்..."

 

என்பது புறநானூறு.

 

இதன் பொருள் ---

 

    கொடுக்க முடிந்ததைக் கொடுக்கின்றேன் என்று தருவதும், கொடுக்க இயலாததைத் தருவதற்கு இல்லை என்று கூறித் தர மறுப்பதும் ஆகிய இரண்டுமே, நல்ல உயர்ந்த நட்புக்கான அடையாளங்கள். தர முடியாததைத் தருவதாகச் சொல்லுவதும், தரக் கூடியதைக் கூட இல்லை என மறுப்பதும் ஆகிய இரண்டுமே இல்லை என்று வருவோரை மிகவும் வருந்தச் செய்யும். மேலும், இவை தருவோர் பெறுகின்ற புகழை அடைக்கும் வாயில்களும் ஆகும்.

 

    இப் பிறவியில் இல்லை என்று வந்தோருக்கு ஏதும் கொடுத்து வாழாதவன், அடுத்த பிறவியில், அடுப்பு இருந்தும் சமைத்து உண்ண முடியாமல், பிச்சை எடுக்கவேண்டி வரும் என்கின்றது நாலடியார்...

 

இம்மி அரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்து உண்மின், - உம்மைக்

கொடாஅ தவர் என்பர் குண்டுநீர் வையத்து

அடாஅ அடுப்பி னவர்.           --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒரு சிறிதளவு அரிசியையாவது நாள்தோறும் (ஏழைகளுக்குக்) கொடுத்து, பின் நீங்கள் உண்ணுங்கள். இப்படி, முற்பிறப்பில் கொடுத்து உதவி வாழாதவர்களை, இப் பிறப்பில் சமைத்தல் இல்லாத அடுப்பினை உடையவர்களாகப் பிச்சை எடுப்பவர்கள்.

 

     இப்பிறப்பில் ஒருவருக்குக் கொடுத்த உதவுவது, மறுபிறப்பில் வந்து உதவும் என்பதை உணர்ந்து, கூடிய மட்டும் உதவவேண்டும் என்பதை நாலடியார் வலியுறுத்துவதைக் காணலாம்...

 

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமா றியைவ கொடுத்தல் --- வறுமையால்

ஈதல் இசையாது எனினும் இரவாமை

ஈதல் இரட்டி உறும்.                   --- நாலடியார்.

 

         மறுமை இம்மை நிலைகளைக் கருதி, கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும், பிறரிடம் சென்று இரவாமலிருப்பது, அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு சிறப்பானது ஆகும்.

 

         வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாது இருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை ஆகும்.

 

     தம்மால் கொடுக்க முடியாத ஒரு பொருளை இல்லை என்பது குற்றம் இல்லை. ஆனால், தருவதாக வாக்களித்து, நம்பவைத்து, பின்னர் இல்லை என்பது, நன்றி கொன்றது போன்ற மன்னிப்பே (கழுவாய்) இல்லாத குற்றம் ஆகும் என்கின்றது நாலடியார்...

 

 

இசையா ஒருபொருள் இல் என்றல், யார்க்கும்

வசை அன்று, வையத்து இயற்கை; --- நசைஅழுங்க

நின்று ஒடிப் பொய்த்தல் நிரைதொடீஇ! செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து.          --- நாலடியார்.

 

இதன் பொருள் ---

 

     ஒழுங்காக அமைந்த வளையல்களை அணிந்த பெண்ணே! கொடுக்க இயலாத ஒரு பொருளை இரப்போர்க்கு இல்லை என்று கூறிவிடுதல், யார்க்கும் பழியாகாது. அது உலகத்தின் இயற்கையே ஆகும். ஆசையால் இரப்போரின் மனம் நையும்படி உதவுவார் போல் கூறி, கால நாட்டிப்புச் செய்து, பின் இல்லை என்று பொய் கூறுவது,  ஒருவர் செய்த நன்றியை அழித்தவரது குற்றத்தை ஒப்பத் தீது ஆகும்.

 

     பிறர்க்குக் கொடுக்கக் கூடியதை இல்லை என்று ஒளிக்காத அன்பைப் போன்று சிறந்தது வேறு இல்லை என்கின்றது "இனியவை நாற்பது" என்னும் நூல்...

 

 

நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பு இனிதே;

உட்குஇல் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே;

எத்திறத் தானும் இயைவ கரவாத

பற்றினின் பாங்கு இனியது இல்.  --- இனியவை நாற்பது.

 

இதன் பொருள் ---

 

     ஒரு பொருளைப் பெற விரும்பி,  தன்னை அடைந்தவரது விருப்பம் அழுங்குவியாத மாட்சிமை இனிது. மதிப்பு இல்லாத இடத்து வாழாமைக்கு ஏதுவாகிய மன எழுச்சி மிக இனிது. எப்படியாயினும் பிறர்க்குக் கொடுக்கக் கூடியவற்றை ஒளிக்காத அன்பினை விட நன்றாக இனியது வேறொன்று இல்லை.

 

         கொடுத்தற்கு இசைவு இல்லையாயின் உடனே மறுக்காமல், பல முறையும் தருவதாகப் பொய் கூறி, நாளடைவில் அந்த ஆசை தானாகவே அழியுமாறு செய்தல் கூடாது.

 

ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி

ஏற்றலும் இடுதலும் இரப்போர் கடன், வர்

மேற்சென்று அளித்தல் விழுத்தகைத்து என்றே 

நூற்பொருள் உணர்ந்தோர் நுனித்தனர்...

              

என்கின்றது மணிமேலை என்னும் காப்பியம்.

 

இதன் பொருள் ---

 

     வறியவர்க்கு உதவி புரியும் அருந்துணை ஆகி, அவர்க்குக் கொடுக்கவேண்டி, பிறரிடம் சென்று பொருளை வாங்குதலும், இல்லை என்று வருவோர்க்குக் கொடுத்தலும் இரப்பவரின் கடமை ஆகும். அவர் எவ்விடத்தும் வலிந்து சென்று கொடுத்தல் சிறப்புடையது என்று நூற்பொருள்களை அறிந்தோர் ஆராய்ந்து உரைத்தனர்....

 

     "கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு" என்பதா, ஆத்திசூடி என்னும் நூலில், "இயல்வது கரவேல்" என்று ஔவைப் பிராட்டியார் கூறிவைத்த நல்லுரையைக் கூர்ந்து நோக்கவேண்டும்.

 

     பிறரது துன்பத்தில் உதவ வேண்டும் என்னும் மனம் ஒருவருக்கு அமைதல் வேண்டும். பொருள் இருந்தால் பொருளாகப் பிறருக்கு உதவலாம். உடலால் முடிந்த உதவிகளைச் செய்யலாம். அதுவும் இயலாத போது, நல்ல வார்த்தைகள் மூலமாகவும் உதவலாம். எவ்விதத்திலாவது ஒருகாலத்தில் ஒருவருக்குச் செய்த உதவியானது, வேறு ஒரு காலத்தில் எவ்விதத்திலாவது திரும்ப வரும் என்பது உறுதி.

 

    

 


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...