திரு ஆக்கூர் தான்தோன்றி மாடம் - 0808. சூழ்ந்து ஏன்ற துக்கவினை






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சூழ்ந்து ஏன்ற துக்க (தான் தோன்றி)

முருகா!
தேவரீரது திருவடிகளைத் தொழுது உய்ய அருள் புரிவாய்.


தாந்தாந்த தத்ததன தாந்தாந்த தத்ததன
     தாந்தாந்த தத்ததன ...... தனதான
  
சூழ்ந்தேன்ற துக்கவினை சேர்ந்தூன்று மப்பில்வளர்
     தூண்போன்ற இக்குடிலு ...... முலகூடே

சோர்ந் தூய்ந்து மக்கினியில் நூண்சாம்பல் பட்டுவிடு
     தோம்பாங்கை யுட்பெரிது ...... முணராமே

வீழ்ந்தீண்டி நற்கலைகள் தான்தோண்டி மிக்கபொருள்
     வேண்டீங்கை யிட்டுவர ...... குழுவாரபோல்

வேம்பாங்கு மற்றுவினை யாம்பாங்கு மற்றுவிளை
     வாம்பாங்கில் நற்கழல்கள் ...... தொழஆளாய்

வாழ்ந்தான்ற கற்புடைமை வாய்ந்தாய்ந்த நற்றவர்கள்
     வான்தோன்று மற்றவரு ...... மடிபேண

மான்போன்ற பொற்றொடிகள் தாந்தோய்ந்த நற்புயமும்
     வான்தீண்ட வுற்றமயில் ...... மிசையேறித்

தாழ்ந்தாழ்ந்த மிக்ககடல் வீழ்ந்தீண்டு வெற்பசுரர்
     சாய்ந்தேங்க வுற்றமர்செய் ...... வடிவேலா

தான்தோன்றி யப்பர்குடி வாழ்ந்தீன்ற நற்புதல்வ
     தான்தோன்றி நிற்கவல ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில்வளர்
     தூண்போன்ற இக்குடிலும், ...... உலகு ஊடே

சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு
     தோம் பாங்கை உள் பெரிதும் ...... உணராமே,

வீழ்ந்து ஈண்டி, நல்கலைகள் தான் தோண்டி, மிக்கபொருள்
     வேண்டி ஈங்கை இட்டு வரகு ...... உழுவார்போல்,

வேம் பாங்கும் அற்று, வினையாம் பாங்கும் அற்று, விளை-
     வாம் பாங்கில் நல்கழல்கள் ...... தொழஆளாய்.

வாழ்ந்து ஆன்ற கற்பு உடைமை வாய்ந்து ஆய்ந்த நல்தவர்கள்,
     வானதோன்றும் மற்றவரும் ...... அடிபேண,

மான்போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல்புயமும்,
     வான்தீண்ட உற்றமயில் ...... மிசை ஏறித்

தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு, சுரர்
     சாய்ந்து, ங்க உற்று, மர்செய் ...... வடிவேலா!

தான்தோன்றி அப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நற்புதல்வ!
     தான்தோன்றி நிற்க வல ...... பெருமாளே.


பதவுரை

      வாழ்ந்து --- வாழவேண்டிய நெறியில் வாழ்ந்து,

     ஆன்ற கற்பு உடைமை வாய்ந்து --- பெருமைக்கு உரிய மனத்திண்மை வாய்க்கப் பெற்று,

     ஆய்ந்த நல் தவர்கள் --- ஆராய்ந்து அமைந்த நல்ல தவத்தினைப் புரிபவர்களும்,

      வான் தோன்றும் மற்ற அவரும் அடிபேண --- வானுலகில் வாழும் பிறரும் உமது திருவடியைப் போற்றி வழிபட,

      மான் போன்ற பொன் தொடிகள் தாம் தோய்ந்த நல்புயமும் --- மான் போலும் மருண்ட பார்வையினை உடையவர்களும், பொன் வளையல்களை அணிந்தவர்களும் கொடி போன்ற மெல்லியலை உடையவர்களும் ஆகிய வள்ளிநாயகியும், தெய்வயானை அம்மையும் தழுவி உள்ள திருத்தோள்கள் விளங்க,

      வான் தீண்ட உற்ற மயில்மிசை ஏறி --- வான் அளாவிப் பறந்த மயிலின் மீது ஏறி,

      தாழ்ந்து ஆழ்ந்த மிக்க கடல் வீழ்ந்து ஈண்டு வெற்பு அசுரர் சாய்ந்து ஏங்க உற்று --- கீழே பரந்து ஆழ்ந்துள்ள கடலில் இருந்த மலையில் வாழ்ந்திருந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி

     அமர் செய் வடிவேலா --- போர் செய்த கூரிய வேலையுதத்தை உடையவரே!

      தான் தோன்றி அப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ --- தான் தோன்றி அப்பர் ஆகிய சிவபரம்பொருள் உமாதேவியுடன் வீற்றிருந்து பெற்றருளிய நல்ல புதல்வரே!

      தான் தோன்றி நிற்க வல்ல பெருமாளே --- தான் தோன்றியாய் தான்தோன்றி மாடத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

      சூழ்ந்து --- பிறவிகள்தோறும் உயிரைச் சூழ்ந்து,

     ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் --- பிறவித் துன்பத்திற்கு இடமான பிராரத்த வினைகள் பொருந்துவதற்கு இடமானதும்,

      அப்பில் வளர் --- நீரால் வளர்வதுமான

     தூண் போன்ற இக்குடிலும் --- தூணை ஒத்ததும், குடில் போன்றதும் ஆன இந்த உடம்பும்,

     உலகு ஊடே சோர்ந்து --- உலகியலில் சோர்வு பட்டு,

      ஊய்ந்தும் --- பதன் அழிந்து,

     அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு --- தீயில் நுண்ணிய சாம்பல் ஆகி அழிகின்ற

     தோம் பாங்கை --- குற்றம் பொருந்திய தன்மையை

     உள் பெரிதும் உணராமே --- உள்ளத்தில் நன்கு ஆய்ந்து உணராமல்,

      வீழ்ந்து ஈண்டி --- விரைந்து சென்று,

     நல்கலைகள் தான் தோண்டி --- நல்ல நூல்களைத் தேடிக் கற்று,

     மிக்க பொருள் வேண்டி --- மிக்க பொருளை வேண்டி,

     ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் --- பொன்னால் ஆன கலப்பையைக் கொண்டு வரகு விளைக்க வயலை உழுபவர்கள் போல,

      வேம் பாங்கும் அற்று --- மனம் புழுங்குகின்ற தன்மை அற்று,

     வினை ஆம் பாங்கும் அற்று --- வினைகள் விளைகின்ற தன்மையும் அற்று,

     விளைவு ஆம் பாங்கில் --- நல் கதி விளைகின்ற தன்மையில் நின்று,

     நல் கழல்கள் தொழ ஆளாய் --- தேவரீரது நன்மை தரும் திருவடிகளைத் தொழுது உய்ய ஆண்டு அருள் புரிவீராக.


பொழிப்புரை


      வாழவேண்டிய நெறியில் வாழ்ந்து, பெருமைக்கு உரிய மனத்திண்மை வாய்க்கப் பெற்று, ஆராய்ந்து அமைந்த நல்ல தவத்தினைப் புரிபவர்களும், வானுலகில் வாழும் பிறரும் உமது திருவடியைப் போற்றி வழிபட, மான் போலும் மருண்ட பார்வையினை உடையவர்களும், பொன் வளையல்களை அணிந்தவர்களும் கொடி போன்ற மெல்லியலை உடையவர்களும் ஆகிய வள்ளிநாயகியும், தெய்வயானை அம்மையும் தழுவி உள்ள திருத்தோள்கள் விளங்க, வான் அளாவிப் பறந்த மயிலின் மீது ஏறி, கீழே பரந்து ஆழ்ந்துள்ள கடலில் இருந்த மலையில் வாழ்ந்திருந்த அசுரர்கள் தளர்வுற்று வருந்தும்படி போர் செய்த கூரிய வேலையுதத்தை உடையவரே!

     தான் தோன்றி அப்பர் ஆகிய சிவபரம்பொருள் உமாதேவியுடன் வீற்றிருந்து பெற்றருளிய நல்ல புதல்வரே!

     தான்தோன்றியாய்த் தான் தோன்றி மாடத்தில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!

       பிறவிகள் தோறும் உயிரைச் சூழ்ந்து, பிறவித் துன்பத்திற்கு இடமான பிராரத்த வினைகள் பொருந்துவதற்கு இடமானதும், நீரால் வளர்வதுமான, தூணை ஒத்ததும், குடில் போன்றதும் ஆன இந்த உடம்பு, உலகியலில் சோர்வு பட்டு, பதன் அழிந்து,
தீயில் நுண்ணிய சாம்பல் ஆகி அழிகின்ற குற்றம் பொருந்திய தன்மையை உள்ளத்தில் நன்கு ஆய்ந்து உணராமல், விரைந்து சென்று, நல்ல நூல்களைத் தேடிக் கற்று, மிக்க பொருளை வேண்டிபொன்னால் ஆன கலப்பையைக் கொண்டு வயலை உழுபவர்கள் போல, மனம் புழுங்குகின்ற தன்மை அற்று, வினைகள் விளைகின்ற தன்மையும் அற்று, நல் கதி விளைகின்ற தன்மையில் நின்று, தேவரீரது நன்மை தரும் திருவடிகளைத் தொழுது உய்ய ஆண்டு அருள் புரிவீராக.


விரிவுரை

சூழ்ந்து ஏன்ற துக்க வினை சேர்ந்து ஊன்றும் அப்பில் வளர் தூண் போன்ற இக்குடில் ---

சூழ்ந்து --- பிறவிகள் தோறும் சூழ்ந்து.

ஏன்ற துக்க வினை --- அனுபவத்திற்கு எடுத்து வந்த துன்பத்தைத் தருகின்ற வினை.

தூண் போன்ற இக் குடில் ---- கல் தூண் போலும் வலிதாக உள்ளது தான் இந்த உடம்பு.

வயது ஏற ஏற தளர்ச்சி அடையும். ஒரு கூரை வீடானது எதிர்பாராமல் விழுந்து அழிவது போல இந்த உடம்பு அழிந்து ஒழியும்.

வினை தோன்றி வளரும் முறை :

இப்பிறப்பில் நாம் நல்லனவும், தீயனவும் ஆகிய செயல்களைச் செய்கின்றோம். அச்செயல்களைச் சில பயன்களை விரும்பிச் செய்கின்றோம். நன்மைகளை வருவித்தற்காகச் சில செயல்களை செய்கின்றோம். தீமைகளைப் போக்கிக் கொள்வதற்காகச் சில செயல்களைச் செய்கின்றோம். இப்படிச் செய்யும் செயல்கள் "ஆகாமியம்" அல்லது "ஏறுவினை" எனப்படும். அவை உடனே அழிந்து விடுவதாக நாம் நினைக்கிறோம். அப்படி அல்ல. அவை நிகழும் பொழுது கண்ணுக்குப் புலப்படுகின்ற நிலையில் உள்ளன. பின், புலப்படாத நிலையை அடைந்து நிற்கின்றன. எனவே அவை அடியோடு இல்லாமல் அழிந்து போய் விடவில்லை. புலப்படுகின்ற தூல நிலையிலிருந்து நீங்கிப் புலப்படாத சூக்கும நிலையில் உள்ளன என்பதே உண்மையாகும். புலப்படாத அந்நிலையில் அவை "சஞ்சிதம்" அல்லது "இருப்பு வினை" எனப் பெயர் பெறுகின்றன. பலப்பல பிறப்புக்களில் செய்யப்பட்டுக் கிடக்கும் வினைகளின் தொகுப்பே சஞ்சிதம் ஆகும்.

சஞ்சிதம் முழுதும் ஒரே பிறப்பில் பயனாய் வருதல் இல்லை. அத்தொகுப்பிலிருந்து ஒரு சிறு பகுதியை முகந்து கொண்டு ஒரு பிறப்புத் தோன்றும். அவ்வாறு பழவினையினின்றும் முகந்து கொண்ட வினைகள் "பிராரத்தம்" அல்லது "ஏன்ற வினை" என்ற பெயரைப் பெறும். அவை இன்பத் துன்பமாகிய பயனை விளைவிக்கும். இவ்வாறு வினைகள் ஆகாமியமாய்த் தோன்றி, சஞ்சிதமாய்க் கிடந்து, பிராரத்தமாய் வந்து பயன் கொடுக்கும்.

"பிராரத்தம்" என்னும் "ஏன்ற வினை" இப்பிறப்பில் நன்மையாகவோ, தீமையாகவோ வந்து பொருந்தும் பொழுது, நாம் முன்பு செய்த செயலே இவ்வாறு பிராரத்தமாய் விளைகிறது என்று யாரும் எண்ணுவதில்லை. அதனை இறைவன் ஊட்டுகிறான் என்றும் எண்ணுவதில்லை. அந்த நேரத்தில் அதற்குக் காரணமாய் நிற்பவர் யாரோ அவர் மேல் விருப்போ வெறுப்போ கொள்ளுதல் மனிதர் இயல்பு. அவ்விருப்பு வெறுப்புக்கள் சொல்லாய் வெளிப்படும். செயலாய் நிகழும். அவையே ஆகாமிய வினையாய்ப் பின் சஞ்சிதமாகும். இவ்வாறு வினைகள் ஏறிக் கொண்டே போகும். பிராரத்தத்தை விருப்பு வெறுப்போடு அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றும்.

ஞானிகளாகிய சீவன் முத்தர்க்கு உடம்பு உள்ள வரையில் பிராரத்த வினை இருக்கும். அது இருக்கின்ற வரையில் அதனது தாக்கமும் இருக்கும். அங்ஙனம் பிராரத்த வினை தாக்கும்பொழுது அதனை அனுபவிக்கின்ற நிலையில் ஆகாமியம் தோன்றவே செய்யும். அவ்வாறாயின் ஞானிகள் வினைத் தொடர்பிலிருந்து எங்ஙனம் நீங்க முடியும் என்னும் ஐயம் எழக்கூடும். அவர்கள் தமக்கு வரும் பிராரத்தத்தை எப்படி அனுபவிப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் இதற்கு விடை கிடைத்து விடும்.
  
பிராரத்த வினையின் தாக்கம் :

பிராரத்தம் நேரே உயிரைத் தாக்குவதில்லை. அது உடலில் நோய் முதலியவற்றைத் தோற்றுவித்து உடல் மூலமாகவே உயிரைத் தாக்கும். ஒருவர் ஒழுக்கமாக வாழ்க்கை நடத்துகிறார். ஒழுங்கான உணவுப் பழக்கம் வைத்திருக்கிறார். எந்தத் தீய பழக்கமும் அவரிடம் இல்லை. ஆயினும் அவர் உடலில் எப்படியோ நோய் வந்து பற்றி வாட்டி வருத்துகிறது. முன்னை வினையாகிய பிராரத்தம் இப்பொழுது இவ்வாறு வந்து தாக்குகிறது.

பட்டினத்தார் அவ்வாறு தான் நினைத்தார். அவர் அறிய எந்தத் தவறும் செய்யவில்லை. ஆயினும் அவர்மேல் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டது. அந்தத் துன்பத்தை அனுபவிப்பதற்குரிய எந்தச் செயலையும் இந்தப் பிறவியில் அவர் செய்ததாகத் தெரியவில்லை. ஆகவே முந்திய பிறவியிற் செய்த வினையே இதற்குக் காரணமாக இருக்கவேண்டும் என்று தெளிந்தார். இறைவனே, என் செயலென ஒன்றும் இல்லை. எல்லாம் உன் செயல் என்று உணர்ந்து கொண்டேன். இந்த உடம்பு எடுத்த பிறகு நான் செய்த தீவினை ஒன்றும் இல்லையே. நான் முன் பிறவியில் செய்த தீவினையே இப்படி வந்து மூண்டது போலும் என்று கூறினார்.

உயிர் ஊழாய்க் கழிதல் :

முன்னை வினையாகிய பிராரத்தம் இவ்வாறு உடலுக்கு ஊறு விளைவிக்கும் பொழுது உடம்பே நாம் என்று மயங்கி இருப்பவர்களே உடலுக்கு வந்த துன்பத்தை உயிராகிய தமக்கு வந்ததாகக் கருதித் துவண்டு போவார்கள். பிராரத்தம் உடல் வழியாக இப்படி உயிரைத் தாக்குகிறது. இங்ஙனம், வினைகள் உயிரைத் தாக்கித் தம் பயனைக் கொடுத்து நீங்குதலை உயிர் ஊழாய்க் கழிதல் என்பார்கள்.

உடல் ஊழாய்க் கழிதல் :

சீவன் முத்தராகிய ஞானிகள் உடல் நாமல்ல எனத் தெளிந்து, உடலில் பற்று இன்றி இருப்பர். அதனால் பிராரத்தம் அவரது உடலை நலிகின்ற போது அவர் கவலை அற்று இப்பர். மேலும் அவர் பிராரத்தம் விளையும் போது நன்மையைக் கண்டு விரும்புதலும் இல்லை.  துன்பத்தைக் கண்டு வெறுத்தலும் இல்லை. அப்படிப்பட்ட அவரைப் பிராரத்தம் தாக்காது. இங்ஙனம் பிராரத்தம் உயிரைத் தாக்க மாட்டாது அவரது உடல் அளவில் பயனைக் கொடுத்து நீங்குதலை உடல் ஊழியாய்க் கழிதல் என்பார்கள்.

மூவகை வினையும் ஒழிதல் :

ஞானிகள் பிராரத்தவினை தோன்றினால் அதனை அவனது அருளாகவே கருதி அனுபவிப்பதல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொள்வதில்லை. இங்ஙனம் பற்றின்றி அனுபவிக்கவே, அது உடல் ஊழாய்க் கழியும். அது அவர்களது உணர்வைத் தாக்காமல் உடல் அளவாய் ஒழிதலால், ஆகாமியத்தை உண்டாக்காது. எப்போதாயினும் சோர்வு காரணமாக விருப்பு வெறுப்புத் தோன்றி அது காரணமாக ஆகாமியம் தலை எடுக்குமானால், திருவருளே அதனைச் சுட்டு அத்து விடும். மூவகை வினையுள், சஞ்சிதமாகிய கிடைவினை முழுதும், முன்னே ஞானகுரு நிருவாண தீக்கை செய்து ஞானத்தை அளித்த காலத்தில் அவரது அருட் பார்வையால் எரிக்கப்பட்டு ஒழிந்தது. சஞ்சிதம் போக, பிராரத்தமும் ஆகாமியமும் உள்ளன.

ஏன்றவினை என்றது பிராரத்த வினையே. இடையில் ஏறு வினை என்றது ஆகாமியத்தை. பிராரத்தம் அனுபவத்தால் தீரும். அதனை விருப்பு வெறுப்பின்றி அனுபவிப்பதனால் ஆகாமியம் தோன்ற வழியில்லை. ஒருக்கால் தோன்றுமாயின் அருளே அதனைச் சுட்டழிக்கும். வினையினால் உண்டாவதே பிறப்பு.

ஏன்ற வினை என்பது நல்வினை தீவினை இரண்டையும் கொண்டதாக இருக்கும். நல்வினையும் பிறவிக்கு ஏதுவாக அமைவதால், அதனையும் சேர்த்து ஏன்ற வினையை, "சூழ்ந்து ஏன்ற துக்க வினை" என்றார் அடிகளார்.

நல்வினை தீவினை என்று இரு வினைகளினால் இந்த உடம்பு வந்தது. அவ் வினைப்போகம் துய்க்கும் அளவும் இது நிலைபெறும். துய்ப்பு முடிந்தவுடன் தினை அளவு நேரம் கூட இவ்வுடம்பு நில்லாது. வீழ்ந்து படும்.

பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது.

அப்பு நீரைக் குறிக்கும். ஐம்பூதங்களில் ஒன்று நீர் ஆகும். மேலும், "துப்பார்க்கு துப்பு ஆயதூஉம் மழை" எனத் திருவள்ளுவ நாயனார் காட்டியபடி நீரே உணவாகவும் பயன்படுவதால் "அப்பில் வளர்" என்றார் அடிகளார் என்றும் கொள்ளலாம். "ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.

பின்வரும் பிராணங்களை எண்ணித் தெளிக....

செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர்,
கல்வியில் சிறந்தோர், கடுந்திறல் மிகுந்தோர்,
கொடையில் பொலிந்தோர், படையில் பயின்றோர்,
குலத்தின் உயர்ந்தோர், நலத்தினின் வந்தோர்,
எனையர் எம் குலத்தினர் இறந்தோர், அனையவர்
பேரும் நின்றில போலும், தேரின்
நீயும் அஃது அறிதி அன்றே, மாயப்
பேய்த் தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப் பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்து, காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதி, பொல்லாத்
தன்மையர் இழிவு சார்ந்தனை நீயும்.. --- பதினோராம் திருமுறை.

அறம்பாவம் என்னும் அரும்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்து எங்கும் புழுஅழுக்கு மூடி
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை... ---  மணிவாசகம்.

வினைப்போகமே ஒருதேகம் கண்டாய், வினைதான் ஒழிந்தால்
தினைப்போதுஅளவு நில்லாது கண்டாய், சிவன்பாதம் நினை,
நினைப்போரை மேவு, நினையாரை நீங்கி நெறியில்நின்றால்
உனைப்போல் ஒருவர்உண்டோ, மனமே, எனக்கு உற்றவரே.
                                                                                 ---  பட்டினத்தார்.

இந்த உடம்பு ஒரு அகல். புண்ணியபாவம் அதில் விட்ட நெய்.  வாழ்நாள் அதில் இட்ட திரி. உயிர் எரிகின்ற விளக்கு. நெய் உள்ளவரை விளக்கு எரியும்.

புண்ணிய பாவம் இரண்டும் நெய் என்று, மனம் கரி,
பூட்டும் வாழ்நாள் அதில் போட்டு வைத்த திரி,
எண்ணிப் பார்க்கில் இதில் உயிர் விளக்கே சரி,
இரண்டும் போனால் விளக்கு இருக்குமோ அரிகரி  ---  அருணாசலக் கவி.

உலகு ஊடே சோர்ந்து ஊய்ந்தும் அக்கினியில் நூண் சாம்பல் பட்டுவிடு தோம் பாங்கை உள் பெரிதும் உணராமே ---

ஊய்ந்து உபோதல் - பதன் அழிதல்.

உலகியலில் உழலும்போது, இந்த உடம்பையே பெரிதாக எண்ணி, அதை வளர்க்கவும், அதனால் இன்பத்தைத் துய்க்கவும் எண்ணம் செல்லும். திண்ணிதாக இருந்த உடம்பு நாளடைவில் தளர்ந்து, சாய்ந்து போகும். உடம்பால் ஆகிய பயனைப் பெற்று, இனி ஒரு உடம்பு வராமல் காத்து, இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்னும் அறிவு விளங்காது. முடிவில் உடம்பை விட்டு உயிர் நீங்கிய பின்னர் இந்த உடம்பானது நெருப்பில் இட்டுப் பொடியாகிப் போகும்.

பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்து அளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது.

"ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.

எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை, - நல்லார்
அறிந்திருப்பார், ஆதலினால் ஆம் கமல நீர் போல்
பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு.                 --- நல்வழி.

"பஞ்சுஇட்ட அணைமிசை
கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு
          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்
          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்
     சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்
     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,
          சரத்தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்
          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத
     சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,
     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, து பினை
          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி
          பிடித்தி, னைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி,
தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,
உந்திக்கு அசனமும் மறந்திட்டு, ளமிக
          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி
          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்
     சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,
     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு
          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை
          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,
சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,
இரங்க, பிணம் எடும் என்றிட்டு, றை பறை
          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு
          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்...... உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.

தினமணி சார்ங்கபாணி என, மதிள் நீண்டு, சால
     தினகரன் எய்ந்த மாளி ...... கையில், ரம்
செழுமணி சேர்ந்த பீடிகையில், சை வாய்ந்த பாடல்
     வயிரியர் சேர்ந்து பாட, ...... இருபாலும்

இனவளை பூண் கையார் கவரிஇட, வேய்ந்து மாலை
     புழுகு அகில் சாந்து பூசி ...... அரசாகி,
இனிது இறுமாந்து வாழும் இருவினை நீண்ட காயம்
     ஒருபிடி சாம்பல் ஆகி ...... விடலாமோ?

எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளதை உணர்க.

"முடிசார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதும் கண்டு, பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால், பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவார் இல்லையே".

என்றார் பட்டினத்து அடிகள்.

"அடிசேர் முடியினர் ஆகி, அரசர்கள் தாம் தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்,
பொடிசேர் துகளாய்ப் போவர்கள், ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ".

என்னும் நம்மாழ்வார் திருமொழி அறிவுறுத்துகின்றது.
  
வீழ்ந்து ஈண்டி நல்கலைகள் தான் தோண்டி மிக்க பொருள் வேண்டி ஈங்கை இட்டு வரகு உழுவார் போல் ---

நல் கலைகள் --- நல்ல நூல்கள்.

நல்ல நூல்களைத் தேடி, கற்று அறிவு பெற்றும், பொருள் வேண்டி அதனைத் தேடுவதிலேயே காலத்தைக் கழித்தல் கூடாது. கற்றதனால் ஆய பயன், வாலறிவன் நல் தாள் தொழுவதே ஆகும்.  

அறிவு மயக்கத்தால் விளையும் இந்தச் செயலை அடிகளார்,
"ஈங்கை இட்டு வரகு உழுவார் போல" எனக் காட்டினார்.

ஈங்கை - பொன்.

பொன்னால் செய்த கலப்பையைக் கொண்டு யாரும் நிலத்தை உழமாட்டார்கள். அதனால், பொன் தேய்வினை அடையுமே ஒழிய நிலம் பண்படாது. வரகு என்பது பொன்னை விடவும் மதிப்புக் குறைந்தது. ஏனவே, வரகு பயிரிடுவதற்காகப் பொன்னால் கலப்பை செய்து உழுவது அறிவற்ற செயல் ஆகும். "பொன் கலப்பை" என்பது திருவருளுக்கு உவமை. "வரகுக்கு உழுவது" திருவருளின் பெருமையினை அறியாமல் கிடைத்த பிறப்பை வீணாக்குவதற்கு உவமை.

"பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது என்?
அக்கொழு நீ அறிந்து உந்தீபற
அறிந்து அறியாவண்ணம் உந்தீபற".

, மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றான "திருவுந்தியார்" என்னும் நூல் இதனை ஓதும்.             

முதலில் வந்த "அறிந்து" என்பது, பிறப்பை வீணாக்கக் கூடாது என்பதை அருள் நூல்களை ஓதித் தெளிந்து என்பதைக் குறிக்கும். எனவே, திருவருளின் பெருமையை அருள் நூல்களை ஓதி உணர்ந்து தெளிந்து, தன்முனைப்பு அற்றுத் திருவருளின் வழி மனம் அடங்கி நின்று ஒழுகுதல் வேண்டும். "அறிந்து" என்பது திருவருளின் பெருமையை உணர்ந்து என்பதைக் குறிக்கும். "அறியாவண்ணம்" என்பது, உயிர் அறிவு முனைத்துத் தொன்றாதபடி திருவருளின் வழி அடங்கி நிற்பதைக் குறிக்கும்.

பொன்னால் ஆன கொழுவினைப் பெற்ற ஒருவன், அதனை நன்செய் நிலத்தினை உழுதற்கு உரிய வழிபாட்டு அளவுக்குத் துணை என ஒதித்துப் போற்றுதலை விடுத்து, அதன் மதிப்பினை உணராமல், வரகினை விதைத்தல் பொருட்டு அமைந்த புன்செய் நிலத்தினை உழுதற்குக் பயன்படுத்தினால், கொழுவும் தேய்ந்து, உழு தொழிலும் நிறைவேறாது. அது போல, குருவின் அருளாலே பெற்ற திருவருளைக் கொண்டு பிழையே பெருக்கி, அன்பினைச் சுருக்கி, பிறப்பு இறப்புகளில் போக்கு வரவு புரிதற்கு உரிய ஐம்புல நுகர்ச்சியில் செலுத்தி அழுந்தினால், அரிதில் கிடைத்த திருவருட் செல்வமும் நீங்க, பெறுதற்கு உரிய வீடு பேறு ஆகிய பேரானந்த விளைவினையும் இழந்து விடுவது ஆகும் என்பதால், "பொற்கொழுக் கொண்டு வரகுக்கு உழுவது என்" என்றார்.

கொழு என்பது உழவர்கள் நிலத்தை உழுவதற்கு, கலப்பையின் அடி முனையில் பொருத்தப் பெற்றுள்ள உழுபடை ஆகும். வரகு என்பது புன்செய் நிலத்தில் விளைத்தற்கு உரிய தானியம்.

முத்திகு ஏதுவாகிய மனவாக்குக் காயங்களைக் கொண்டு ஐம்புல விடயங்களுக்கு முயற்சி பண்ணுவது விடுத்து, மனவாக்குக் காயங்களின் அருமையை அறிந்து, அவற்றாலே சரியை, கிரியை, யோகங்களைச் செய்து, பின்பு திருவருளை அறிந்து வேறு ஒன்றையும் அறியாவண்ணம் நிற்கவேண்டும்.
  
வேம் பாங்கும் அற்று, வினை ஆம் பாங்கும் அற்று ---

இறை அருளால் அரிதில் பெற்ற இந்த உடம்பு, அதனில் பொருந்தி உள்ள மனம் வாக்கு ஆகியவற்றைக் கொண்டு, வாழவேண்டிய நெறியில் வாழாது, பொன்னால் ஆன கொழுவைக் கொண்டு வரகு விளைக்க புன்செய் நிலத்தை உழுவதைப் போல வீணாக்குதல் கூடாது. எப்படி இருந்தாலும், இந்த உடம்பு ஒரு நாள் விழப் போகின்றது. விழுந்தவுடன், சுற்றத்தார் சுட்டுவிடப் போகின்றார்கள்.

உடம்பு உள்ள போதே திருவருளை உணர்ந்து, வீடு பேற்றினை அடையும் நெறியில் ஒழுகுதல் வேண்டும். வினைகளைப் பெருக்குதல் கூடாது.

"இடுகாட்டில் என்னை எரியூட்டும் முன் உன் இருதாட்கள் தம்மை உணர்வேனோ" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் பாடி உள்ளது உணர்க.

"விட்டுவிடப் போகுது உயிர், விட்ட உடனே உடலைச்
சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார், பட்டது பட்டு
எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள்
சொன்னேன் அதுவே சுகம்".

என்னும் பட்டினத்து அடிகளாரின் அறிவுரை சிந்திக்கத்தக்கது.


விளைவு ஆம் பாங்கில் நல் கழல்கள் தொழ ஆளாய் ---

நல்கதி விளைகின்ற தன்மையில் நின்று,  இறைவனது திருவடிகளைப் பெறுதல் வேண்டும்.

தான் தோன்றி அப்பர் குடி வாழ்ந்து ஈன்ற நல் புதல்வ ---

தனக்கு ஒப்பார் மிக்கார் யாரும் இல்லாதது சிவபரம்பொருள். என்வே, "தான்தோன்றி" என்றார்.

தான் தோன்றி நிற்க வல்ல பெருமாளே ---

தான்தோன்றி மாடம் என்பது திரு ஆக்கூர் என்னும் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலுக்குப் பெயர். அங்கே எழுந்தருளி உள்ளவர் முருகப் பெருமான். சோழ நாட்டு, காவிரித் தென் கரைத் திருத்தலம்.

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து கிழக்கே 17 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆக்கூர் பேருந்து நிலையத்தின் வடபாகத்தில் இத்திருக்கோயில் அமையப்பெற்றுள்ளது. திருத்தலைச்சங்காடு என்ற பாடல் பெற்ற திருத்தலம் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இறைவர்     : தான் தோன்றி நாதர், சுயம்பு நாதர்
இறைவியார் : வாள்நெடுங்கண்ணியம்மை, கட்கநேத்ரி
தீர்த்தம்       : குமுத தீர்த்தம்

கோச்செங்கட் சோழ நாயனார் அமைத்த மாடக் கோயில்களில் இதுவும் ஒன்று.  திருஞானசத்பந்தப் பெருமானும் அப்பர் பெருமானும் வழிபட்டுத் திருப்பதிகங்களை அருளிச் செய்துள்ளனர்.

அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய தலங்களில் இத்தலமும் ஒன்றானதால் இறைவி வாள்நெடுங்கண்ணியின் சந்நிதி மூலவர் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்திருக்கிறது.

நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் அவதரித்த தலம் ஆக்கூர். கருவறை அர்த்த மண்டபத்தில் இடதுபுறம் சிறப்புலி நாயனார் சந்நிதியும் அவருக்கு நேர் எதிரே வலதுபுறம் திருஆக்கூரிலே வேதியர் குலத்தில் அவதரித்தவர்.  அடியவர்களுக்கு அமுது ஊட்டுவதும், பொருள் உதவுவதும் இவர்தம் திருத்தொண்டு. திருவைந்தெழுத்து ஓதுவதும், வேள்வி செய்வதும் இவருடைய வழக்கம். இவ்வாறு சிவப்பணி செய்து இறைவன் திருவடியை அடைந்தார்.

கருத்துரை

முருகா! தேவரீரது திருவடிகளைத் தொழுது உய்ய அருள் புரிவாய்.


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...