திருவிடைக்கழி - 0804. பழியுறு சட்டகமான






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பழியுறு சட்டகமான (திருவிடைக்கழி)

முருகா!
உன் புகழே பாடி,
நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட,
வீண் நாள் படாது அருள் புரிவாய்.


தனதனனத் தனதான தனதனனத் தனதான
     தனதனனத் தனதான ...... தனதான
  
பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான
     பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப்

படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது
     பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர்

உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி
     யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன்

உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற
     உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே

தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு
     திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத்

திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர்
     ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே

அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல
     அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா

அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை
     அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பழி உறு சட்டகம் ஆன குடிலை எடுத்து, ழிவான
     பகரும் வினைச் செயல்மாதர் ...... தரும் மாயப்

படு குழி புக்கு, னிது ஏறும் வழி தடவித் தெரியாது
     பழமை பிதற்றிடு லொக ...... முழுமூடர்

உழலும் விருப்புடன் ஓது பல சவலைக் கலைதேடி,
     ஒரு பயனைத் தெளியாது, ...... விளியாமுன்,

உன கமலப் பதம் நாடி, உருகி உளத்து அமுது ஊற,
     உனது திருப்புகழ் ஓத ...... அருள்வாயே.

தெழி உவரிச் சலராசி மொகுமொகு என, பெருமேரு
     திடுதிடு என, பலபூதர் ...... விதமாகத்

திமிதிமு எனப் பொருசூரன் நெறுநெறு என, பலதேவர்
     ஜெயஜெய என, கொதிவேலை ...... விடுவோனே!

அழகு தரித்திடு நீப! சரவண உற்பவ! வேல!
     அடல்தரு கெற்சித நீல ...... மயில்வீரா!

அருணை, திருத்தணி, நாகமலை, பழநிப் பதி கோடை
     அதிப! இடைக்கழி மேவு ...... பெருமாளே.


பதவுரை

      தெழி உவரிச் சலராசி மொகுமொகு என --- முழங்குகின்ற கடல் மொகு மொகு எனக் கொந்தளிக்கவும்,

      பெரு மேரு திடுதிடு என --- பெரிய மேருமலையான திடுதிடு என்று இடிபட்டுப் பொடிபடவும்,

      பல பூதர் விதமாகத் திமிதிமு என --- பலவகையான பூதகணங்களும் விதவிதமாகக் கூத்தாடவும்,

      பொரு சூரன் நெறுநெறு என --- போர் புரிந்து மாமரமாக நின்ற சூரபதுமன் நெறுநெறு என்று முறிந்து விழவும்,

      பல தேவர் ஜெயஜெய என --- பல தேவர்களும் வெற்றி முழக்கம் இடவும்,

      கொதி வேலை விடுவோனே --- கொதித்து எழுந்த வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!,

      அழகு தரித்திடு நீப --- அழகு நிறைந்த கடப்பமலர் மாலையை அணிந்தவரே!

      சரவண உற்பவ --- சரவணப் பொய்கையில் தோன்றியவரே!,

     வேல --- வேலாயுதக் கடவுளே!

      அடல்தரு கெற்சித நீலமயில் வீரா --- வல்லமை பொருந்தியதும், பெருமிதம் மிக்கதும் ஆன நீல நிற மயிலை வாகனமாக உடைய வீரரே!

      அருணை திருத்தணி நாகமலை பழநிப்பதி கோடை அதிப --- திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநியம்பதி, வல்லக்கோட்டை ஆகிய திருத்தலங்களில் எழுந்தருளி உள்ள தலைவரே!

      இடைக்கழி மேவு பெருமாளே --- திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

      பழி உறு சட்டகமான குடிலை எடுத்து --- பழிப்புக்கு  இடமான இந்த உடலாகிய குடிசையை எடுத்து

      இழிவான பகரும் வினைச் செயல் மாதர் தரும் மாயப் படுகுழி புக்கு --- இழிவான சொற்களைப் பயில்பவரும், இழிவான செயல்களை உடையவரும் ஆகிய விலைமாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் விழுந்து,

      இனிது ஏறும் வழி --- இனிதே கரை ஏறும் வழியானது,

     தடவித் தெரியாது --- தடவிப் பார்த்தும் தெரியாத குருடன் ஆகி,

      பழமை பிதற்றிடு லோக முழுமூடர் --- பழமையான மூடக் கொள்கைகளையே பிதற்றித் திரியும் முழுமூடர்கள் ஆனவர்கள்,

      உழலும் விருப்புடன் ஓது --- மனம் போல் திரிந்து, விரும்பி ஓதுகின்ற  

     பல சவலைக் கலை தேடி --- மன வருத்தம் தரும் நூல்களைத் தேடி

      ஒரு பயனைத் தெளியாது விளியா முன் --- ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் அடியேன் இறந்து போவதன் முன்னம்,

      உன கமலப் பதம் நாடி --- உமது திருவடித் தாமரைகளே கதியைத் தருவது என நாடி,

     உருகி உளத்து அமுது ஊற --- உருகுவதால் உள்ளத்தில் இன்பமானது அமுதமாக ஊறும்படியாக

      உனது திருப்புகழ் ஓத அருள்வாயே --- தேவரீரது திருப்புகழை ஓதுவதற்கு அருள் புரிவீராக.


பொழிப்புரை

         முழங்குகின்ற கடல் மொகு மொகு எனக் கொந்தளிக்கவும், பெரிய மேருமலையானது திடுதிடு என்று இடிபட்டுப் பொடிபடவும், பலவகையான பூதகணங்களும் விதவிதமாகக் கூத்தாடவும், போர் புரிந்து மாமரமாக நின்ற சூரபதுமன் நெறுநெறு என்று முறிந்து விழவும், பல தேவர்களும் வெற்றி முழக்கம் இடவும்,
கொதித்து எழுந்த வேலாயுதத்தை விடுத்து அருளியவரே!,

       அழகு நிறைந்த கடப்பமலர் மாலையை அணிந்தவரே!

       சரவணப் பொய்கையில் தோன்றியவரே!,

     வேலாயுதக் கடவுளே!

      வல்லமை பொருந்தியதும், பெருமிதம் மிக்கதும் ஆன நீல நிற மயிலை வாகனமாக உடைய வீரரே!

     திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநியம்பதி, வல்லக்கோட்டை ஆகிய திருத்தலங்களில் எழுந்தருளி உள்ள தலைவரே!

         திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமையில் மிக்கவரே!

         பழிப்புக்கு  இடமான இந்த உடலாகிய குடிசையை எடுத்து, இழிவான சொற்களைப் பயில்பவரும், இழிவான செயல்களை உடையவரும் ஆகிய விலைமாதர்கள் தருகின்ற மாயமான படுகுழியில் விழுந்து, இனிதே கரை ஏறும் வழியானது, தடவிப் பார்த்தும் தெரியாத குருடன் ஆகி, பழமையான மூடக் கொள்கைகளையே பிதற்றித் திரியும் முழுமூடர்கள் ஆனவர்கள், மனம் போல் திரிந்து, விரும்பி ஓதுகின்ற மன வருத்தம் தரும் நூல்களைத் தேடி ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் அடியேன் இறந்து போவதன் முன்னம், உமது திருவடித் தாமரைகளே கதியைத் தருவது என நாடி உருகுவதால் உள்ளத்தில் இன்பமானது அமுதமாக ஊறும்படியாக தேவரீரது திருப்புகழை ஓதுவதற்கு அருள் புரிவீராக.


விரிவுரை


பழி உறு சட்டகமான குடிலை எடுத்து ---

சட்டகம் - வடிவு, உடல், பிணம்.

பிணமாகிப் பயன்படாதாகிய உடல். இது பழிப்புக்கு இடமானது.

"உயிர்புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும்
பழவினை புகுந்த பாடகம் போல
முதிர்புயல் குளிறும் எழுமலை புக்க
கட்டு உடைச் சூர் உடல் காமம் கொண்டு
பற்றி உள் புகுந்து பசுங்கடல் கண்டு              

மாவொடும் கொன்ற மணிநெடும் திருவேல்
சேவலங் கொடியோன்"

என்பது கல்லாடம். இதனுள் "உயிர் புகும் சட்டகம்" என, இந்த உடம்பு குறித்து தெளிவு படுத்தி உள்ளது காண்க.

இதன் பொருள் ---

உயிர் புகும் சட்டகம் உழிதொறும் உழிதொறும் - உயிர் பொருந்துதற்கு இடமாகிய உடம்பு இடந்தொறும் உடம்பு இடந்தொறும்;

பாடகம் போல பழவினை புகுந்த - இடைவிடாது காலைப் பாடகம் சூழ்ந்து கிடந்தால் போலச் சூழ்ந்து கிடந்த பழவினை கொல்லும் விருப்பம் கொண்டு தொடர்ந்து உள் புகுந்தால் போல;

முதிர் புயல் குளிரும் எழுமலை புக்க - சூல் முதிர்ந்த முகில் முழங்கா நின்ற ஏழு மலையினும் புகுதற்குக் காரணம் ஆன;

கட்டு உடைச் சூர் உடல் - கட்டினை உடைய சூரபன்மனது உயிரினைப் பருகும்;

காமம் கொண்டு பற்றி உள் புகுந்து - விருப்பம் கொண்டு அவனைத் தொடர்ந்து சென்று கடலினுள் புகுந்து;

 பசுங் கடல் கண்டு - பசிய அக் கடலிடத்தே அவனைக் கண்டு;

மாவொடும் கொன்ற - அவன் மறைதற்கு இடமான மாமரத்தோடே கொன்ற;

மணி நெடுந் திருவேல் சேவலங் கொடியோன் - வீரமணி கட்டிய நெடிய அழகிய வேலினையும் கோழிச் சேவற் கொடியினையும் உடையோனாகிய முருகப்பெருமான்.

இனி, திருவிளையாடல் புராணத்துள், பழியஞ்சின படலத்துள்,

"மட்டு அவிழ் தாரான் வாயில் மருங்கே வந்து எய்தா
உள் துகள் இல்லா வேடனை முன்விட்டு. உயிரன்னாள்
சட்டகம் நேரே இட்டு எதிர் மாறன் தமர்கேட்பக்
கண்துளி சிந்தா முறையிடுகின்றான் கை ஓச்சா".

என வருவதும் காண்க.

"புற்புதக் குரம்பை, துச்சில் ஒதுக்கிடம்
என்ன நின்று இயங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை,  இதன்உள்
பீளையும் நீரும் புறப்படும் ஒரு பொறி,
மீளும் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி,
சளியும் நீரும் தவழும் ஒரு பொறி,
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி,
வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி,
சலமும் சீயும் சரியும் ஒரு வழி,
உள்உறத் தொடங்கி, வெளிப்பட நாறும்
சட்டகம், முடிவில் சுட்டு எலும்பு ஆகும்"...

எனக் கோயில் திருஅகவலில் பட்டினத்தடிகள் பாடியருளியதையும் எண்ணுக.

பழிக்கு இடமான செயல்களையே புரிந்து, பழிபாவங்களின் பயனை அனுபவித்துத் துன்புற்று, பிறந்து இறந்து உழல்வதினால் இது, "பழி உறு சட்டகம்" ஆனது.

இழிவான பகரும் வினைச் செயல் மாதர் தரும் மாயப் படுகுழி புக்கு இனிது ஏறும் வழி தடவித் தெரியாது ---

காம வயப்பட்டோரைத் தமது வசப்படுத்த விலைமாதர்கள் இழிவான சொற்களையே பேசுவார்கள். நன்மை தரும் சொற்களை அவரிடத்தில் கேட்கமுடியாது. சொல் பிறப்பது எண்ணத்தின் அடிப்படையிலே ஆகும். எண்ணம் நன்றாக இருக்குமானால் சொல்லும் நன்றாகவே வெளிப்படும்.

விலைமாதர்கள் மனதாலும் தீமையே புரிபவர்கள். நன்மை புரிவது போல் தீமை தரும் சொற்களைப் பேசி, தீமை தரும் செயல்களைப் புரிந்து, காமமாகிய படுகுழியில் தம்மிடத்து வந்தவரை வீழ்த்துவார்கள். அவ்வாறு காமப் படுகுழியில் விழுந்தவர்கள், அரிவுக் குருடர்கள் ஆகி, அதினின்றும் கரை ஏறும் வழி காணாது அலமருவார்கள் என்பதால் "இனிது ஏறும் வழி தடவித் தெரியாது" என்றார் அடிகளார்.

மன்மதனின் காமசாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள விளையாடல்கள் எல்லாம் உண்டாகும், முக்கோணமான வடிவுள்ள பெண்குறி என்னும் குழியில் ஆசை மிகும். ஆனால் அந்தக் குழியானது பெருந்துன்பத்திற்கு இடமாகும். அந்தப் படுகிழியில் இருந்து கரை ஏறும் வழி தெரியாமல் காமக் குருடர்கள் தொட்டுத் தடவிப் பார்ப்பார்கள். அந்தக் காமக் குருடர்க்கு பட்டினத்து அடிகள் பின்வருமாறு அறிவுறுத்துகின்றார்..

திருமால் பயந்த திசைமுகன் அமைத்து
வரும் ஏழ் பிறவியும் மானுடத்து உதித்து,
மலைமகள் கோமான் மலர் அடி இறைஞ்சிக்
குலவிய சிவபதம் குறுகாது, அவமே
மாதரை மகிழ்ந்து காதல் கொண்டாடும்  
      
மானிடர்க்கு எல்லாம் யான் எடுத்து உரைப்பேன்,
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்;
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சு என உரைத்தும்,
வெள் எலும்பாலே மேவிய கணைக்கால்

துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும்,
தசையும் எலும்புந் தக்க புன் குறங்கை
இசையும் கதலித் தண்டு என இயம்பியும்,
நெடும் உடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி என்று சொல்லித் துதித்தும்,  
      
மலமும் சலமும் வழும்பும் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை என்றும்,
சிலந்தி போலக் கிளைத்து முன் எழுந்து
திரண்டு விம்மிச் சீப் பாய்ந்து ஏறி
உகிரால் கீறல் உலர்ந்து உள் உருகி      
      
நகுவார்க்கு இடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட்டு என்றும்,
குலையும் காமக் குருடர்க்கு உரைப்பேன்;
நீட்டவும் முடக்கவும் நெடும் பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவும் உதவி இங்கு இயற்றும்
      
அலங்கையைப் பார்த்துக் காந்தள் என்று உரைத்தும்,
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினில் இனிய கமுகு எனப் பகர்ந்தும்,
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மலர் என்றும்,        
      
அன்னமும் கறியும் அசைவிட்டு இறக்கும்
முன்னிய பல்லை முத்து என மொழிந்தும்,
நீரும் சளியும் நின்று நின்று ஒழுகும்
கூறிய மூக்கைக் குமிழ் எனக் கூறியும்,
தண்ணீர் பீளை தவிராது ஒழுகும்        
      
கண்ணைப் பார்த்துக் கழுநீர் என்றும்,
உள்ளுங் குறும்பி ஒழுகுங் காதை
வள்ளைத் தண்டின் வளம் என வாழ்த்தியும்,
கையும் எண்ணெயும் கலவாது ஒழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத் 

தக்க தலை ஓட்டில் முளைத்து எழுந்த
சிக்கின் மயிரைத் திரள் முகில் என்றும்
சொல் பல பேசித் துதித்து, நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்,
தோலும் இறைச்சியும் துதைந்து சீப்பாயும்
      
காமப் பாழி; கருவிளை கழனி;
தூமைக் கடவழி; தொளைபெறு வாயில்;
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி!
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்;
நச்சிக் காமுக நாய்தான் என்றும்         
      
இச்சித்து இருக்கும் இடைகழி வாயில்;
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி;
புண் இது என்று புடவையை மூடி
உள் நீர் பாயும் ஓசைச் செழும்புண்;         
      
மால்கொண்டு அறியா மாந்தர் புகும்வழி;
நோய் கொண்டு ஒழியார் நுண்ணியர் போம்வழி;
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி;
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி;
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி;    
      
மலம் சொரிந்து இழியும் வாயிற்கு அருகே
சலம்சொரிந்து இழியும் தண்ணீர் வாயில்;
இத்தை நீங்கள் இனிது என வேண்டா;
பச்சிலை இடினும் பத்தர்க்கு இரங்கி
மெச்சிச் சிவபத வீடு அருள்பவனை      
      
முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சியில் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்,
போக மாதரைப் போற்றுதல் ஒழிந்தே!   
   
பழமை பிதற்றிடு லொக முழுமூடர் உழலும் விருப்புடன் ஓது பல சவலைக் கலை தேடி ---

"பழமையான மூடக் கொள்கைகளையே பிதற்றித் திரியும் முழுமூடர்கள் ஆனவர்கள் மனம் போல் திரிந்து, விரும்பி ஓதுகின்ற மன வருத்தம் தரும் நூல்களைத் தேடி" என்கின்றார் அடிகளார்.

பழமை என்பது உயிருக்குத் தொன்று தொட்டுப் பழமையாக இருந்து வரும் ஆணவமலம் ஆகும். ஆணவம் அறிவினை மறைக்கும். உடம்பினையே பெரிதாக எண்ணும். உடம்பு வந்த வகையினை அறியாது. தான் உணர்ந்த்தையே அறிவு எனப் பேசும். உலகாயதம் மேலிடும். நல்லறிவு விளங்காமல் ஆணவத்தால் மூடப்பட்டு இருத்தலால், "முழுமூடர்" என்றார் அடிகளார். நல்லறிவு விளங்காத முழுமூடர்கள் விரும்பி ஓதுவது உலக நூல்களையே. அறிவு நூல்களை அவர்கள் மனமானது நாடாது. சாத்திரங்க்ளையும் அவர் சிறுதும் விரும்பார்.

பிறவியாகிய பெருங்கடலில் வாழ்ந்த உயிர்கள், ஆசாரியனாகிய மீகாமனோடு கூடிய சாத்திரமாகிய கப்பலில் ஏறவேண்டும்.  ஏறினால் முத்தியாகிய கரை ஏறலாம்.

உலகிலே உள்ள நூல்கள் யாவும் நம்மை உய்விக்காது. கற்கத் தகுந்த நூல்களையே கற்கவேண்டும். அதனாலேயே, திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என்றனர். அறிவு நூல்களாவன பன்னிரு திருமுறைகளும் பதினான்கு மெய்கண்ட நூல்களும், அதன் வழி நூல்களும் ஆகும். சிவஞானபோதம் முதலிய ஞான சாத்திரங்களே நமது ஐயம் திரிபு மயக்கங்களை அகற்றி சிவப் பேற்றை அளிக்கும்.

அநபாயன் என்ற சோழ மன்னன், சீவகசிந்தாமணி என்ற அவநூலைப் படித்தபோது, அமைச்சராகிய சேக்கிழார் அடிகள், "ஏ! மன்னர் பெருமானே! இது அவ நூல். இதனை நீ பயில்வதனால் பயனில்லை.  சிவநூலைப் படிக்கவேண்டும். கரும்பு இருக்க இரும்பு கடித்தல் கூடாது" என்று தெருட்டினார் என்பர்.

ஆதலின், அட்டைப் பகட்டுடன் கூடி வெளிவந்து உலாவும் அறிவை மயக்கும் நூல்கள் பல. அறநெறியைத் தாங்கி நிற்கும் நூல்கள் சில. ஆதலின், அறநெறியைத் தாங்காத நூல்களை வாங்கிப் படிக்காமல், ஆன்றோர்கள் கூறிய அறிவு நூல்களைப் படித்து உலகம் உய்வதாக.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே" என்பது நன்னூல்.  இதனை நன்கு சிந்திக்கவும்.

திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்திக் கூறியது "கற்க கசடற கற்பவை, கற்றபின் நிற்க அதற்குத் தக”. இதற்குப் பரிமேலழகர் பெருமான் கண்டுள்ள உரையையும் நன்கு சிந்திக்கவும்.  "கற்பவை என்பதனால், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள் உணர்த்துவன அன்றி, பிற பொருள் உணர்த்துவன, சின்னாள், பல்பிணி, சிற்றறிவினர்க்கு ஆகாது”.  "கசடு அறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்”.

பிறவியை நீக்க வேண்டின் ஒருவன் செய்ய வேண்டியது என்ன என்பதனை அறநெறிச்சாரம் என்னும் நூல் உணர்த்துவது காண்க.

"மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
பிறஉரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை
கேட்கும் திருவுடை யாரே பிறவியை
நீக்கும் திருவுடையார்".

இதன் பொருள் --- பாவத்தினை வளர்க்கும் நூல்களும்,  ஆசையினை வளர்க்கும் நூல்களும், பிறவற்றினை வளர்க்கும் நூல்களும், கலந்து நிறைந்த உலகில், அறத்தினை வளர்க்கும் நூல்களைக் கேட்கின்ற நற்பேற்றினை உடையவர்களே பிறப்பினை நீக்குதற்கேற்ற, வீட்டுலகினையுடையவராவர்.

அறநூல்களைப் பயில வேண்டிய நெறி இதுவென்று அறநெறிச்சாரம் கூறுமாறு..

"நிறுத்து அறுத்துச் சுட்டுஉரைத்துப் பொன்கொள்வான் போல
அறத்தினும் ஆராய்ந்து புக்கால், --பிறப்பறுக்கும்
மெய்ந்நூல் தலைப்பட லாகும்,மற்று ஆகாதே
கண்ணோடிக் கண்டதே கண்டு".

இதன் பொருள் ---   பொன் வாங்குவோன் அதனை நிறுத்தும் அறுத்தும் சுட்டும் உரைத்தும் பார்த்து வாங்குதல்போல, அறநூல்களையும் பலவற்றாலும் ஆராய்ந்து தேடினோமானால் பிறவியினை நீக்கும்படியான உண்மைநூலை அடையலாம். கண்சென்று பார்த்ததையே விரும்பி உண்மையெனக் கற்பின் உண்மை நூலை அடைய இயலாது.

பொய் நூல்களின் இயல்பு இன்னது என அறநெறிச்சாரம் கூறுமாறு...

"தத்தமது இட்டம் திருட்டம் எனஇவற்றோடு
எத்திறத்தும் மாறாப் பொருள்உரைப்பர்--பித்தர்,அவர்
நூல்களும் பொய்யே,அந் நூல்விதியின் நோற்பவரும்
மால்கள் எனஉணரற் பாற்று".

இதன் பொருள் ---   தாம் கூறும் பொருள்களைத் தங்கள் தங்கள், விருப்பம், காட்சி, என்ற இவையோடு, ஒரு சிறிதும் பொருந்தாவாறு உரைப்பவர்களைப் பைத்தியக்காரர் எனவும், அவர் கூறும் நூல்களைப் பொய்ந் நூல்களே எனவும், அந்நூல்கள் கூறும் நெறியில் நின்று தவஞ்செய்வோரும் மயக்கமுடையார் எனவும் உணர்தல் வேண்டும்.

மக்களுக்கு அறிவு நூல் கல்வியின் இன்றியமையாமை குறித்து அறநெறிச்சாரம் கூறுமாறு....

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு
மக்கட் பிறப்பில் பிறிதுஇல்லை, --- அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்",

இதன் பொருள் ---   மக்கட் பிறப்பில், கற்றற்குரியவற்றைக் கற்றலும், கற்றவற்றைப் பெரியோர்பால் கேட்டுத் தெளிதலும், கேட்ட அந்நெறியின்கண்ணே நிற்றலும் கூடப் பெற்றால், வேறு எந்தப் பிறப்பானாலும், மக்கட் பிறப்பினைப் போல, ஒருவனுக்கு இன்பம் செய்வது வேறு ஒன்று இல்லை. 

விழு தாது எனவே கருதாது, டலை
     வினை சேர்வதுவே ...... புரிதாக,
விருதாவினிலே உலகாயதம் மேல்
     இடவே, மடவார் ...... மயலாலே,

அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்
     அடைவே கழியாது, ...... உனை ஓதி
அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,
     ஓர் அழியா வரமே ...... தருவாயே". ---  திருப்புகழ்.


ஒரு பயனைத் தெளியாது விளியா முன் ---

உடம்பு எடுத்ததன் பயன், வாழும் வாழ்க்கையின் பயன் ஆகிய யாதும் தெளிந்து ஆறியாமல், வாழ்க்கையை அவமே கழித்து இறந்து போதல் நேரும். அவ்வாறு நேராத முன்னர் இறைவன் திருவருளைப் பெறத் துணை புரியும் அருள் நூல்களை ஓதி, அடியார் திருக்கூட்டத்தில் இருந்து நல்ல கதியைப் பெறுதல் வேண்டும்.

உன கமலப் பதம் நாடி உருகி உளத்து அமுது ஊற உனது திருப்புகழ் ஓத அருள்வாயே ---

இறைவன் திருவடியே உயிருக்கு கதியைத் தருவது என்று தெளிந்து, அவன் திருவடியை அடையும் நெறியை நாடி நின்று வழிபடுதல் வேண்டும். இறைவன் திருப்புகழை ஓதுவதே உயர்ந்த வழிபாடு ஆகும். இருளாகிய துன்பத்திலே உய்க்கும் இருவினைகளும் சேராமல் காத்து அருள் புரிவது இறைவனுடைய பொருள் சேர் புகழை ஓதும் நெறியே ஆகும்.

"இருள்சேர் இருவினையும் சேரா, இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு"

என்று நாயனார் அருளிய திருக்குறள் காட்டும். "புரிதல்" என்னும் சொல்லுக்கு, "எப்பொழுதும் சொல்லதுல்" என்று பரிமேலழகர் வகுத்துக் காட்டிய உரைவளத்தை சிந்தித்துத் தொளிதல் நலம் தரும்.

இறைவன் புகழை ஓதும் அருள் நூல்கள் எல்லாம் திருப்புகழே ஆகும். திருப்புகழ் என்று சொல்லப்படும் இது ஒன்றையே குறிப்பது அல்ல. திருப்புகழுக்கு ஏற்றம் தரக் கருதுபவர்கள் அவ்வாறு சொல்லலாம். அது பொருத்தம் அற்றது.

வடதிருமுல்லைவாயில் என்னும் திருத்தலத்தில், சிவபெருமான் மீது சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடி அருளிய தேவாரத்தினைச் சிந்தித்தால் இது தெளிவாகும்.

"கூடிய இலயம் சதி பிழையாமைக்
         கொடிஇடை உமையவள் காண
ஆடிய அழகா! அருமறைப் பொருளே!
         அங்கணா! எங்குஉற்றாய்? என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
         வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்,
         பாசுப தாபரம் சுடரே"

"பொன்நலம் கழனிப் புதுவிரை மருவிப்
         பொறிவரி வண்டுஇசை பாட
அந்நலம் கமலத் தவிசின்மேல் உறங்கும்
         அலவன்வந்து உலவிட அள்ளல்
செந்நெல்அம் கழனி சூழ்திரு முல்லை
         வாயிலாய்! திருப்புகழ் விருப்பால்
பன்னலம் தமிழால் பாடுவேற்கு அருளாய்
         பாசுப தாபரம் சுடரே"

, இறைவனது பொருள்சேர் புகழே "திருப்புகழ்" ஆகும் என்பது அறிக. அதனை ஓதுவதே நாம் பிறவி எடுத்த பயன் ஆகும் என்பதையும் அறிக.

தெழி உவரிச் சலராசி மொகுமொகு என, பெரு மேரு திடுதிடு என, பல பூதர் விதமாகத் திமிதிமு என, பொரு சூரன் நெறுநெறு என, பல தேவர் ஜெயஜெய என கொதி வேலை விடுவோனே ---

தெழி, தெழித்தல் - முழக்குதல், ஆரவாரித்தல்.

உவரி - உப்புத் தன்மை கொண்ட நீரை உடைய கடல்.

சலராசி - கடலில் வாழும் உயிரினங்கள்.

தீயரை அழிக்கவும், நல்லோரைக் காக்கவும் தொழிற்பட்டது வேலாயுதம்.

வேல் ஞானசத்தி ஆகும். ஞானம் அஞ்ஞானத்தை அழிக்கும். ஞானத்தை அடைந்தோருக்கு வீடுபேற்றை அருளும்.

முருகப் பெருமான் வேலாயுதத்தை விடுத்து அருளியபோது, சூர்பேரணி கெட்டது. தேவேந்திர லோகம் பிழைத்தது.

பின்வரும் பிரமாணத்தால் வேலாயுதத்தின் பெருமையை நன்கு உணரலாம்....

மகரம்அளறு இடைபுரள, உரககண பணமவுலி
மதியும்இர வியும்அலையவே,
வளர்எழிலி குடர்உழல, இமையவர்கள் துயர்அகல,
மகிழ்வுபெறும் அறுசிறையவாம்

சிகரவரை மனைமறுகு தொறுநுளைய மகளிர்செழு
செநெல்களொடு தரளம்இடவே,
செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற,உததி
திடர்அடைய,  நுகரும்வடிவேல்...

வெங்காள கண்டர்கை சூலமும், திருமாயன்
வெற்றிபெறு சுடர்ஆழியும்,
விபுதர்பதி குலிசமும், சூரன்குலம் கல்லி
வெல்லா எனக்கருதியே,

சங்க்ராம நீசயித்து அருள்எனத் தேவரும்
சதுர்முகனும் நின்றுஇரப்ப,
சயிலமொடு சூரன்உடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்டநெடுவேல்...

ஆலமாய் அவுணருக்கு, அமரருக்கு அமுதமாய்,
ஆதவனின் வெம்மைஒளிமீது
அரியதவ முனிவருக்கு இந்துவில் தண்என்று
அமைந்து,அன் பருக்குமுற்றா

முலமாம் வினைஅறுத்து, அவர்கள்வெம் பகையினை
முடித்து, இந்திரர்க்கும் எட்டா
முடிவில்ஆ னந்தம்நல் கும்பதம் அளித்து,எந்த
மூதண்டமும் புகழும்வேல்.....

வலாரிஅலல் ஆகுலம் இலாது அகலவே, கரிய
மால்அறியும் நாலுமறைநூல்
வலான்அலைவு இலான், நசி விலான், மலை விலான் இவர்
மனோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய சலங்களும்
உலோகநிலை நீர்நிலைஇலா
ஒலாஒலி நிசாசரர் உலோகமதெலாம் அழல்
உலாவிய நிலாவுகொலைவேல்,
 

அடல்தரு கெற்சித நீலமயில் வீரா ---

அடல் --- வல்லமை.

கெற்சிதம் --- பெருமை.

உயிர்களின் இடரைத் தீர்ப்பது முருகப் பெருமானின் வேலும் மயிலுமே. "வேலும் மயிலும் நினைந்தவர் தம் துயர் தீர அருள் தரு கந்த!" என அடிகளார் பிறிதொரு திருப்புகழில் அருளி இருப்பது சான்று. "துங்க அனுகூலப் பார்வைத் தீர! செம்பொன் மயில் மீதிலே எப்போது வருவாயே" என்றும் அடிகளார் பிறிதோரிடத்தில் அருளி இருத்தல் காண்க.

இருவினை அஞ்ச, மல வகை மங்க,
     இருள் பிணி மங்க, ...... மயில் ஏறி,
இன அருள் அன்பு மொழிய, கடம்பு-
     வின் அது அகமுங்கொடு ...... அளிபாட,

கரிமுகன் எம்பி முருகன் என், அண்டர்
     களி மலர் சிந்த, ...... அடியேன் முன்
கருணை பொழிந்து, முகமும் மலர்ந்து,
     கடுகி நடம் கொடு ...... அருள்வாயே. --- திருப்புகழ்.

அருணை திருத்தணி நாகமலை பழநிப்பதி கோடை அதிப ---

அருணை - திருவண்ணாமலை.

நாகமலை - திருச்செங்கோடு.

கோடை - வல்லக்கோட்டை.

இங்கே அடிகளார் ஆறு திருப்பதிகளைக் குறித்துள்ளார்.

இடைக்கழி மேவு பெருமாளே ---

மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி" திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.

இறைவர்              : காமேசுவரர்.
இறைவியார்         : காமேசுவரி.
தல மரம்              : குரா, மகிழம். 
தீர்த்தம்               : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

தெய்வயானை அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
   
அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
   
மூலத்தானத்தில் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

முருகப் பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
   
சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
   
இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். திருத்தல மரமாகிய "குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அமர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.

முருகப் பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
   
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.

கருத்துரை

முருகா! உன் புகழே பாடி, நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட, வீண் நாள் படாது அருள் புரிவாய்.


No comments:

Post a Comment

பொது --- 1091. கருதியே மெத்த

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் கருதியே மெத்த (பொது) முருகா!  அடியேன் உமது திருவடிப் பெருமையையே பேசுமாறு அருள் புரிவாயாக. தனதனா தத்த தனத...