திருவிடைக்கழி - 0805. பெருக்கம் ஆகிய

அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பெருக்கம் ஆகிய (திருவிடைக்கழி)

முருகா!
தேவரீரது திருவடிகளைத் தொழுது உய்ய அருள்வாய்.


தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன ...... தனதான

பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
     நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
     பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப்

பிதற்றி யேயள விடுபண மதுதம
     திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
     பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய்

முருக்கி னேரித ழமுதுப ருகுமென
     வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
     முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் .....பொருள்தீரின்

முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
     மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
     முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்

நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
     வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
     நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா

நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
     புரத்தி லேநகை புரிபர னடியவர்
     நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே

செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
     மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
     திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே

சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
     யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
     திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பெருக்கம் ஆகிய நிதியினர் வரின், மிக
     நகைத்து, வாம் என, அமளி அருகு, விரல்
     பிடித்து போய், வர் தொடையொடு தொடைபட ......உறவாடிப்

பிதற்றியே, அளவு இடு பணம் அது, தமது
     இடத்திலே வரும் அளவு, நல் உரைகொடு
     பிலுக்கியே, வெகு சரசமொடு அணைகுவர், ...... கனமாலாய்

முருக்கின் நேர் இதழ் அமுது பருகும் என
     உரைத்து, லீலைகள் அதி விதமொடு, மலை
     முலைக்கு உளே துயில் கொள, மயல் புரிகுவர், .....பொருள்தீரின்
  
முறுக்கியே உதை கொடு வசை உரைதரு
     மனத் துரோகிகள் இடுதொழில் வினை அற,
     முடுக்கியே உனது இருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்.

நெருக்கியே வரும் அவுணர்கள் குலம்அற
     உறுக்கியே, மயில் முதுகினில், விசைகொடு
     நிலத்திலே சமர் பொருது அவர் உயிர்பலி ...... கொளும்வேலா!

நெகத்திலே அயன் முடி பறி இறை, திரி
     புரத்திலே நகை புரி பரன், டியவர்
     நினைப்பிலே அருள் தருசிவன் உதவிய ...... புதல்வோனே!

செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை
     மருக் குலாவிய மலர் அணை மிசைபுணர்,
     திருக் கை வேல் வடிவு அழகிய குருபர! ...... முருகோனே!

சிறக்கும் மாதவ முனிவரர், மகபதி,
     இருக்கு வேதனும், இமையவர் பரவிய
     திருக்குரா அடி நிழல்தனில் உலவிய ...... பெருமாளே.


பதவுரை


      நெருக்கியே வரும் அவுணர்கள் குலம் அற உறுக்கியே --- நெருங்கி வந்த அவுணர்களின் குலம் அற்றுப் போகுமாறு சினந்து,

     மயில் முதுகினில் --- மயிலின் முதுகில் ஏறி,

     விசை கொடு நிலத்திலே சமர் பொருது --- வேகமாக வந்து, இந்தப் பூமியில் போர் புரிந்து,

     அவர் உயிர் பலி கொளும் வேலா --- அவுணர்களின் உயிரைப் பலி கொண்ட வேலாயுதக் கடவுளே!

      நெகத்திலே அயன் முடி பறி இறை --- கைந் நகத்தால் பிரமதேவனுடைய தலையைக் கிள்ளி எறிந்த இறைவரும்,

     திரிபுரத்திலே நகை புரி பரன் --- முப்புரங்களைச் சிரித்தே எரித்த பரம்பொருளும்,

     அடியவர் நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே --- தன்னை நினைத்துத் தொழும் அடியவருக்கு அவர் நினைத்ததை அருள் புரிபவரும் ஆன சிவபெருமான் அருள் புரிந்த புதல்வரே!

      செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை --- பெருமிதம் கொண்டிருந்த வேடர்களிடத்தே வளர்ந்த ஒப்பற்ற சிறுமியாகிய வள்ளிநாயகியை,

     மருக் குலாவிய மலர் அணைமிசை புணர் --- மணம் நிறைந்த மலர்கள் தூவப் பட்டுள்ள படுக்கையில் புணர்ந்தவரும், மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த,

     திருக்கை வேல் --- திருக்கையில் வேலாயுதத்தினைக் கொண்டவரும்,

     வடிவு அழகிய --- திருமேனி அழகரும்

     குருபர --- ஆகிய எனது குருநாதரே

     முருகோனே --- முருகப் பெருமானே!  

      சிறக்கும் மாதவ முனிவரர் --- சிறப்புப் பொருந்திய பெரும் தவத்தைப் புரிகின்ற முனிவர்களும்,

     மகபதி --- இந்திரனும்

     இருக்கு வேதனும் --- இருக்கு வேதத்தில் வல்ல பிரமதேவனும்

     இமையவர் பரவிய --- தேவர்களும் போற்றிப் பரவுகின்றவரும்,

     திருக்குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே --- (திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில்) திருக் குரா மரத்தின் நிழலில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!!

      பெருக்கம் ஆகிய நிதியினர் வரின் --- திரண்ட செல்வத்தைப் படைத்தவர்கள் வந்தால், (அவரைக் கண்டவுடன்)

     மிக நகைத்து --- மிகவும் சிரித்து,

     வாம் என --- வாருங்கள் என்று அழைத்து,

     அமளி அருகு --- படுக்கையின் அருகில்

     விரல் பிடித்துப் போய் --- (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு) போய்

     அவர் தொடையொடு தொடை பட உறவு ஆடி --- அவர் தொடை தமது தொடை மீது பொருந்த இருந்து, உறவு கொண்டாடி,

      பிதற்றியே --- அன்பு மொழிகளை உணர்வு இன்றிக் குழறிக் குழறிப் பேசி

     அளவு இடு பணம் அது தமது இடத்திலே வரும் அளவு --- தமது மனத்தில் அளவு செய்து வைத்திருந்த பணம் முழுதும் தமது வசம் வந்து சேரும் வரை

     நல் உரை கொ(ண்)டு பிலுக்கியே --- நல்ல சொற்களைக் கவர்ச்சியாகப் பேசி,

     வெகு சரசமோடு அணைகுவர் --- மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள்.

      கன மாலாய் --- மிக்க ஆசை வயப்பட்டவர்களாய்,  

     முருக்கின் நேர் இதழ் அமுது பருகும் என உரைத்து --- முள்முருக்கம் பூவைப் போலச் சிவந்த தமது வாயில் ஊறுகின்ற எச்சிலை "உண்ணுங்கள்" என்று கூறி,

     லீலைகள் அதிவிதமொடு --- காம விளையாட்டுக்களை பலவகையிலும் செய்து,

     மலை முலைக்கு உ(ள்)ளே துயில் கொள --- மலை போலப் பருத்துள்ள தமது முலைகளின் மீது சாய்ந்து உறங்குமாறு

     மயல் புரிகுவர் --- அறிவு மயக்கம் கொள்ளச் செய்வர்.

      பொருள் தீரின் --- பொருள் தீர்ந்துபோன பிறகு,

     முறுக்கியே --- முன்பு காட்டிய அன்பில் மாறுபட்டு, கடுமை காட்டி

     உதைகொடு வசை உரை தரு மனத் துரோகிகள் --- உதைப்பதோடு வசைச் சொற்களைப் பேசுகின்ற துரோக மனத்தவர் ஆகிய விலைமாதர்கள்

     இடு தொழில் வினை அற முடுக்கியே --- இட்ட தொழில்களில் விரும்பி ஈடுபடும் செயல்கள் அற்றுப் போகுமாறு, எனது மனத்தைத் தூண்டி உணர்ச்சி மிகும்படிச் செய்து,

     உனது இரு கழல்மலர் தொழ அருள் தாராய் --- இம்மை மறுமை ஆகிய இருவகை நலன்களைத் தருகின்ற தேவரீரது திருவடி மலர்களைத் தொழுது உய்யும்படிக்குத் திருவருளைத் தந்து அருள்வீராக.

பொழிப்புரை 

     நெருங்கி வந்த அவுணர்களின் குலம் அற்றுப் போகுமாறு சினந்து, மயிலின் முதுகில் ஏறி, வேகமாக வந்து, இந்தப் பூமியில் போர் புரிந்து, அவுணர்களின் உயிரைப் பலி கொண்ட வேலாயுதக் கடவுளே!

      கைந் நகத்தால் பிரமதேவனுடைய தலையை கிள்ளி எறிந்த இறைவரும், முப்புரங்களைச் சிரித்தே எரித்த பரம்பொருளும், தன்னை நினைத்துத் தொழும் அடியவருக்கு அவர் நினைத்ததை அருள் புரிபவரும் ஆன சிவபெருமான் அருள் புரிந்த புதல்வரே!

      பெருமிதம் கொண்டிருந்த வேடர்களிடத்தே வளர்ந்த ஒப்பற்ற சிறுமியாகிய வள்ளிநாயகியை, மணம் நிறைந்த மலர்கள் தூவப் பட்டுள்ள படுக்கையில் புணர்ந்தவரும், மலர்ப் படுக்கையின் மேல் அணைந்தவரும், திருக்கையில் வேலாயுதத்தினைக் கொண்டவரும், திருமேனி அழகரும் ஆகிய எனது குருநாதரே

     முருகப் பெருமானே!  

      சிறப்புப் பொருந்திய பெரும் தவத்தைப் புரிகின்ற முனிவர்களும், இந்திரனும், இருக்கு வேதத்தில் வல்ல பிரமதேவனும், தேவர்களும் போற்றிப் பரவுகின்றவரும்,
திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் திருக் குரா மரத்தின் நிழலில் எழுந்தருளி உள்ள பெருமையில் மிக்கவரே!!

      திரண்ட செல்வத்தைப் படைத்தவர்கள் வந்தால், அவரைக் கண்டவுடன், மிகவும் சிரித்து, வாருங்கள் என்று அழைத்து, படுக்கையின் அருகில் வந்தவரின் விரலைப் பிடித்து அழைத்துக் கொண்டு போய், அவர் தொடை தமது தொடை மீது பொருந்த இருந்து, உறவு கொண்டாடி, அன்பு மொழிகளை உணர்வு இன்றிக் குழறிக் குழறிப் பேசி, தமது மனத்தில் அளவு செய்து வைத்திருந்த பணம் முழுதும் தமது வசம் வந்து சேரும் வரை
நல்ல சொற்களைக் கவர்ச்சியாகப் பேசி, மிக்க சல்லாபத்துடன் அணைவார்கள். மிக்க ஆசை வயப்பட்டவர்களாய்,  முள்முருக்கம் பூவைப் போலச் சிவந்த தமது வாயில் ஊறுகின்ற எச்சிலை "உண்ணுங்கள்" என்று கூறி, காம விளையாட்டுக்களை பலவகையிலும் செய்து, மலை போலப் பருத்துள்ள தமது முலைகளின் மீது சாய்ந்து உறங்குமாறு அறிவு மயக்கம் கொள்ளச் செய்வர். பொருள் தீர்ந்துபோன பிறகு, முன்பு காட்டிய அன்பில் மாறுபட்டு, கடுமை காட்டி உதைப்பதோடு வசைச் சொற்களைப் பேசுகின்ற துரோக மனத்தவர் ஆகிய விலைமாதர்கள் இட்ட தொழில்களில் விரும்பி ஈடுபடும் செயல்கள் அற்றுப் போகுமாறு, எனது மனத்தைத் தூண்டி உணர்ச்சி மிகும்படிச் செய்து, இம்மை மறுமை ஆகிய இருவகை நலன்களைத் தருகின்ற தேவரீரது திருவடி மலர்களைத் தொழுது உய்யும்படிக்குத் திருவருளைத் தந்து அருள்வீராக.


  விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார், பொருளுக்காகத் தமது உடலை விலை பேசுகின்றவர்கள் ஆகிய விலைமாதர்கள் புரியும் செயல்களை எடுத்துக் காட்டி, நம்மைத் தெளிவு படுத்துகின்றார்.

"குயில்மொழி நன் மடவியர்கள், விழியால் உருக்குபவர்,
     தெருவில் அநவரதம் அனம் எனவே நடப்பர், நகை
     கொளும் அவர்கள் உடைமை மனம் உடனே பறிப்பவர்கள் ..... அனைவோரும்
தமது வசம் உற வசிய முகமே மினுக்கியர்கள்,
     முலையில் உறு துகில் சரிய நடு வீதி நிற்பவர்கள்,
     தனம் இலியர் மனம் முறிய நழுவா உழப்பியர், கண் ...... வலையாலே

சதிசெய்து, அவர் அவர் மகிழ அணை மீது உருக்கியர்கள்,
     வசம் ஒழுகி, அவர் அடிமை என, மாதர் இட்ட தொழில்
     தனில் உழலும் அசடனை, உன் அடியே வழுத்த அருள் ......தருவாயே".

எனப் பிறிதொரு திருப்புகழிலும் "மாதர் இட்ட தொழில் தனில் உழலும் அசடன்" என அடிகளார் அருளி இருத்தலைக் காண்க.

விலைமாதர்களின் பண்புகள் இன்னின்ன என்று அடிகளார் பல இடங்களிலும் நாம் தெளிவு பட எடுத்துக் காட்டி உள்ளார்...

"அங்கை மென்குழல் ஆய்வார் போலே,
     சந்தி நின்று அயலோடே போவார்,
     அன்பு கொண்டிட, நீரோ போறீர்? ......    அறியீரோ?
அன்று வந்து ஒரு நாள் நீர் போனீர்,
     பின்பு கண்டு அறியோம் நாம், தே?
     அன்றும் இன்றும் ஒர் போதோ போகா, ......துயில்வாரா,

எங்கள் அந்தரம் வேறு ஆர் ஓர்வார்?
     பண்டு தந்தது போதாதோ? மேல்
     இன்று தந்து உறவோதான்? துஏன்? ......இதுபோதாது?
இங்கு நின்றது என்? வீடே வாரீர்,
     என்று இணங்கிகள் மாயா லீலா
     இன்ப சிங்கியில் வீணே வீழாது ...... அருள்வாயே"

என்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில்.

"அம்கை நீட்டி அழைத்து, பாரிய
     கொங்கை காட்டி மறைத்து, சீரிய
     அன்பு போல் பொய் நடித்து, காசுஅளவு ......    உறவாடி
அம்பு தோற்ற கண் இட்டு, தோதக
     இன்ப சாஸ்த்ரம் உரைத்து, கோகிலம்
     அன்றில் போல் குரல் இட்டு, கூரிய ...... நகரேகை

பங்கம் ஆக்கி அலைத்து, தாடனை
     கொண்டு வேட்கை எழுப்பி, காமுகர்
     பண்பில் வாய்க்க மயக்கிக் கூடுதல் ...... இயல்பாகப்
பண்டு இராப் பகல் சுற்றுச் சூளைகள்,
     தங்கள் மேல் ப்ரமை விட்டு, பார்வதி
     பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ ......   அருள்வாயே".

என்றார் திருச்சிராப்பள்ளித் திருப்புகழில்.

"உயிர்க்கூடு விடும் அளவும் உமைக் கூடி மருவு தொழில்
     ஒருக்காலும் நெகிழ்வது இலை ...... எனவே, சூள்
உரைத்தே, முன் மருவினரை வெறுத்து, ம திரவியம்
     அது உடைத்தாய் பின் வருகும் அவர் ......எதிரேபோய்ப்

பயில் பேசி, ரவுபகல் அவர்க்கான பதமை பல
     படப்பேசி, உறுபொருள் கொள் ...... விலைமாதர்,
படப்பார வலைபடுதல் தவிர்த்து ஆள, மணிபொருவு
     பதத் தாள மயிலின்மிசை ...... வரவேணும்".

என்றார் திருப்பழநித் திருப்புகழில்.

"களபம் ஒழுகிய புளகித முலையினர்,
     கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்,
     கழுவு சரி புழுகு ஒழுகிய குழலினர், ...... எவரோடும்
கலகம் இடுகயல் எறிகுழை விரகியர்,
     பொருளில் இளைஞரை வழிகொடு, மொழிகொடு,
     தளர விடுபவர், தெருவினில் எவரையும் ...... நகையாடி,

பிளவு பெறில்அதில் அளவுஅளவு ஒழுகியர்,
     நடையில் உடையினில் அழகொடு திரிபவர்,
     பெருகு பொருள் பெறில் அமளியில் இதமொடு, ......குழைவோடே,
பிணமும் அணைபவர், வெறிதரு புனல்உணும்
     அவச வனிதையர், முடுகொடும் அணைபவர்,
     பெருமை உடையவர், உறவினை விட,அருள்......புரிவாயே".

என்றார் திருச்செந்தூர்த் திருப்புகழில்.

"சிந்துர கூர மருப்புச் செஞ்சரி
     செங்கை குலாவ நடித்துத், தென்பு உற
     செண்பக மாலை முடித்து, பண்புஉள ...... தெருஊடே
சிந்துகள் பாடி முழக்கி, செங்கயல்
     அம்புகள் போல விழித்து, சிங்கியில்
     செம்பவள ஆடை துலக்கிப் பொன் பறி ......விலைமாதர்,

வந்தவர் ஆர் என அழைத்து, கொங்கையை
     அன்புற மூடி, நெகிழ்த்தி, கண்பட
     மஞ்சள் நிர் ஆடி மினுக்கி, பஞ்சணை ...... தனில்ஏறி

மந்திர மோகம் எழுப்பிக் கெஞ்சிட,
     முன்தலை வாயில் அடைத்துச் சிங்கிகொள்,
     மங்கையர் ஆசை விலக்கிப் பொன்பதம்....அருள்வாயே".

என்றார் திருப்பழநித் திருப்புகழில்.

"பழிப்பர் வாழ்த்துவர் சிலசில பெயர்தமை,
     ஒருத்தர் வாய்ச் சுருள் ஒருவர் கை உதவுவர்,
     பணத்தை நோக்குவர், பிணம் அது தழுவுவர்,......அளவளப்பு அதனாலே,
 படுக்கை வீட்டின் உள் அவுஷதம் உதவுவர்,
     அணைப்பர், கார்த்திகை வருது என உறுபொருள்
     பறிப்பர், மாத்தையில் ஒருவிசை வருக என,......அவரவர்க்கு உறவாயே

அழைப்பர், ஸ்திகள் கருதுவர், ருவரை
     முடுக்கி ஓட்டுவர், ழிகுடி அரிவையர்,
     அலட்டினால் பிணை எருது என, மயல் எனும்.....நரகினில் சுழல்வேனோ?
அவத்தமாய்ச் சில படுகுழி தனில் விழும்
     விபத்தை நீக்கி, உன் அடியவருடன் எனை
     அமர்த்தி, ஆட்கொள மனதினில் அருள்செய்து, ......கதிதனைத் தருவாயே".

என்றார் மதுரைத் திருப்புகழில்.

நெகத்திலே அயன் முடி பறி இறை ---

"நகம்" என்னும் சொல் "நெகம்" என வந்தது.

அயன் - பிரமதேவன்.

இறை - இறைவன்.

பிரமதேவன் “நாம் உலகைப் படைக்கின்றோம்” என்று அகந்தை கொண்டார். அதனை உணர்ந்த சிவபெருமான் பிரமனை விளித்து, அவனது நடுத்தலையை, தனது கைந் நகத்தால் கிள்ளி எடுத்து “நீ உனது ஆற்றலால் உலகினைப் படைப்பது உண்மையானால், உனது தலையினை நீயே படைத்துக் கொள்" என்றார். அந்த ஆற்றல் இல்லாமல் பிரதேவன் இதுவரையிலும் இருக்கின்றான்.

படைப்பானும் காப்பானும் பார்க்கில் அருணேசன்
படைப்பான்அயன் என்னல் பாவம், - படைக்கில்அயன்
தன்தலையைச் சோணேசன் தான்அரிந்த போதினிலே
தன்தலையைப் பண்ணஅறியான் தான்.    --- அருணகிரியந்தாதி

நல்ல மலரின் மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஉஎன்று உந்தீபற
உகிரால் அரிந்தது என்று உந்தீபற.           --- திருவாசகம்

சிவபெருமான் தமது கரத்தில் மழுவாயுதத்தை ஏந்தியிருந்தும், அம்மழுப் படையால் பிரமன் தலையை அறுக்காது, தமது பெருமையும் பிரமனது சிறுமையும் புலப்படுமாறு நகத்தாலேயே கீரையைக் கிள்ளுவதுபோல் கிள்ளி எடுத்தார் என்பதால் சிவம் ஒன்றை பரம்பொருள் என்பதும், மற்றத் தெய்வங்கள் எல்லாம் சிவத்தின் திருவருளாணைப்படி செயல்படுகின்றவை என்பது பெறப்பட்டது.


திரிபுரத்திலே நகை புரி பரன் ---

முப்புரங்களைச் சிரித்தே எரித்த பரம்பொருள் சிவபெருமான்.

கமலாட்சன், வித்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். அன்னவர்கள் பிரமதேவனை நோக்கி அநேக காலம் பெருந்தவம் புரிகையில் கலைமகள் நாயகன் அவர்கட்கு முன்தோன்றி யாது வரம் வேண்டுமஎ என்றார். மூவரும் பிரமதேவரைப் பணிந்து நின்று, பலவகையாகத் துதித்து “அண்ணலே! அடியேங்களுக்கு அழியா வரம் அருள வேண்டும்?” என்றனர். மலரவன், “மைந்தர்களே! அழியாதவர்களும் அழியாதவைகளும் உலகில் ஒருவரும் ஒன்றும் இல்லை. கற்ப காலங்கழிந்தால் நானும் கூட இறப்பேன். எமது தந்தை ஆகிய திருமாலும் அப்படியே! கங்கைக்கரையில் உள்ள மணல்கள் எத்துணையோ அத்துணை இந்திரர் அழிந்தனர். ஏனைய தேவர்களைப் பற்றிக் கூறுவானேன். ஈறில்லாதவர் ஈசனார் ஒருவரே! தோன்றியது மறையும். மறைந்தது தோன்றும். தோற்றமும் மறைவும் இல்லாதவர் சிவபரஞ்சுடராகிய செஞ்சடைக்கடவுள் ஒருவரே! ஆதலால் அது நீங்க வேறு ஒன்றை வேண்டில் தருகின்றோம்” என, தானவர் "பொன், வெள்ளி இரும்பினால் அமைந்த மதில்கள் பொருந்திய முப்புரம் பூமி, அந்தரம், சுவர்க்கம் என்னும் மூவுலகங்களிலும் வேண்டும். அவை ஆயிரம் வருடத்திற்கொரு முறை விரும்பிய இடத்திற்குப் பெயரவேண்டும். அப் புரம் மூன்றும் ஒன்றுபட்ட பொழுது சிவபெருமானே ஒரு கணையால் அழித்தாலன்றி வேறொருவராலும் மாளாத வரம் வேண்டும்” என்று கேட்க திசைமுகன் அவர்கள் விரும்பியவாறு வரம் தந்து தனது இருக்கை சேர்ந்தனர்.

தாரகாட்சன் முதலிய மூவசுரர்களும் அளவில்லாத அவுண சேனைகளை உடையவராய், மயன் என்னும் தேவதச்சனைத் தருவித்து தங்கள் விருப்பின்படி மண்ணுலகில் இரும்பு மதிலும், அந்தர உலகில் வெள்ளிமதிலும், விண்ணுலகில் பொன் மதிலுமாக, பல வளங்களும் பொருந்திய முப்புரங்களை உண்டாக்கிக் கொண்டு குறைவற வாழ்ந்து சிவபூசையினை காலம் தவறாது புரிந்து வந்தார்கள். ஆயினும் அசுர குலத்தின் தன்மைப் படி வைகுந்தம் முதலிய தேவ நகரங்களையும், உலகிலுள்ள பலபதிகளையும் திரிபுரத்தோடு சென்று சிதைத்து தேவர் கூட்டங்களுக்கு இடுக்கண் பலவிளைத்தனர்.

அது கண்ட அரவணைச் செல்வராம் நாராயணர், இந்திரன் முதலிய இமையவர் கணங்களுடன் சென்று எதிர்த்து திரிபுரர்களிடம் தோல்வியுற்று மிகவும் களைத்து, சிவபரஞ்சுடரே கதி என்று மனத்தில் கொண்டு, தேவர் குழாங்களுடன் திரும்பி மேருமலையின் வடபாலில் பலகாலம் தவம் செய்தனர். அத்தவத்திற்கு இரங்கிய விரிசடைக் கடவுள் விடையின் மேல் தோன்ற, விண்ணவர்கள் பன்முறை பணிந்து திரிபுரத்தவர் புரியும் தீமையை விண்ணப்பம் புரிய, கண்ணுதற் கடவுள், “அவர்கள் நமது அடியாராதலின், அவர்களைச் செருத்தல் அடாது” என்றருளி மறைந்தனர்.

திருமால் "தேவர்களே அஞ்சாதீர்கள்" என்று, புத்த வடிவு கொண்டு, நாரத முனிவர் சீடராக உடன் வரத் திரிபுரம் அடைந்து பிடகாகமம், பிரசங்கித்து அவரை மருட்டிப் பவுத்தராக்கினர். அம்மாயையில் அகப்படாதார் மூவரே. ஆதலின் திருமால் ஏனையோரைப் பார்த்து “நீங்கள் அம்மூவர்களையும் பாராது ஒழிமின்கள். அவர்கள் இழிதொழில் பூண்டோர் என்று கூறி, நாரதருடன் மேருமலை அடைந்து தேவகூட்டத்துடன் சிவபிரானைச் சிந்தித்து தவத்திருந்தனர். ஆலமுண்ட அண்ணல் அது அறிந்து அருள்வடிவாகிய திருநந்தி தேவரை விளித்து “அமரர் பால் சென்று திரிபுரத்தவரைச் செயிக்க இரதம் முதலிய யுத்தக் கருவிகளைச் சித்தம் செய்யக் கட்டளையிடுக” என, நந்தியண்ணல் மேருவரை சேர்ந்து, சிவாக்ஞையை தேவர்பால் கூறிச்சென்றனர். அதுகேட்ட அமரர் ஆனந்தம் உற்று இரதம் சிங்காரிக்கலாயினர்.

மந்தரகேசரி மலைகள் அச்சாகவும், சந்திர சூரியர் சக்கரங்களாகவும், இருதுக்கள் சந்திகளாகவும், பதினான்கு லோகங்கள் பதினான்கு தட்டுகளாகவும், உதய அத்த கிரிகள் கொடிஞ்சியாகவும், நதிகளும், நதங்களும் நாட்டுங் கொடிகளாகவும், நட்சத்திரங்கள் நல்ல விதானமாகவும், மோட்ச லோகம் மேல் விரிவாகவும், மகங்கள் சட்டமாகவும், நாள் முதலியன எண்ணெயூற்றும் இடுக்கு மரமாகவும், அட்டப் பருவதங்கள் தூண்களாகவும், எட்டுத் திக்கு யானைகள் இடையில் தாங்கவும், ஏழு சமுத்திரங்கள் திரைச்சீலையாகவும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்கள் கலன்களாகவும், கலைகள் முனைகளாகவும், புராணம் வேதாங்கம், சாத்திரம் மனுக்கள் மணிகளாகவும், மருத்துகள் படிகளாகவும், அமைந்த திவ்வியமான ஒரு இரதத்தைச் செய்து, சதுர்முகனை சாரதியாக நிறுத்தி, பிரணவ மந்திரத்தையே குதிரை தூண்டுங்கோலாகக் கொண்டு, கங்கை அதிதி முதலிய தேவநங்கையர் நாற்புறமும் சாமரை இரட்டவும், தும்புரு நாரதர் இசை பாடவும், அரம்பை முதலிய அப்சரசுகள் நடனமாடவும் அமைத்து மேருமலையை வில்லாகவும், நாகராஜன் நாணாகவும், பைந்துழாய் அலங்கல் பச்சை வண்ணன் பாணமாகவும், சரஸ்வதி வில்லில் கட்டிய மணியாகவும், அக்கினிதேவன் அம்பின் கூர்வாயாகவும், வாயுதேவன் அற்பில் கட்டிய இறகாகவும், ஏற்படுத்தி திருக்கைலாய மலையை அடைந்து திருநந்தி தேவரை இறைஞ்சி, “அமரர் அமர்க் கருவிகளை அமைத்துக் கொண்ணு அடைந்திருப்பதாக அரனாரிடம் விண்ணப்பம் புரியுமாறு வேண்டி நின்றனர்.

வண்டிஇரு சுடராக,வையகம் தேராக, மாவாத நாலுமறையும்
வானவர்கற் அனைவரும்பரிவார மாக,மலர் வாழ்பவன் பாகனாக,
கொண்டுமலை சிலைஅகஅரவுநா ணாகமால் கோலாக அழலாகவாய்
கோல்இறகு காலாகவெந்து முப்புரமெரி கொளுந்த எய்தவர் குமரனே.
                                                           ---  திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

நந்தியம்பெருமான் சந்நிதியுள் சென்று தேவர்கள் போர்க் கருவிகளுடன் வந்திருப்பதைக் கூற, இறைவர் இமவரை தரும் கருங்குயிலுடன் இடப ஆரூடராய் இரதத்தை அடைந்து இமையவர் எண்ணத்தின் படி அதிற் கால் ஊன்ற, அதன் அச்சு முறிந்தது.

"தச்சு விடுத்தலும் தாம்அடி இட்டலும்
அச்சு முறிந்தததுஎன்றுஉந்தீபற,
அழிந்தன முப்புரம் உந்தீபற"                  --- திருவாசகம்.

உடனே நாராயணர் இடபமாக, அவ்விடபமேல் எம்பெருமான் ஏறுதலும் திருமால் தாக்குஞ் சக்தி அற்றுத் தரைமேல்விழ, சிவபெருமான் திருவருள்கொண்டு இறங்கி இன்னருள் புரிந்து சக்தியை நல்கினர். திருமால் திரிபுர சம்மாரகாலத்தில் சிவபெருமானை இடபமாய்த் தாங்கினர் என்பதை மணிவாசகனார் மறைமொழியாலும் காண்க.

"கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பு ஏடி,
தடமதில்கள் அவைமுன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ".

பிரமதேவன் விநாயக பூசனை புரிய, அவர் அருளால் இரதம் முன்போல் ஆக, சிவபெருமான் தேவியாருடன் தேர் மேல் எழுந்தருளினார். மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார், நாராயணர், நான்முகன், அயிராவதன் முதலியோர் தத்தம் ஊர்திகளில் ஊர்ந்து இருமருங்கும் சூழ்ந்து வரவும், இருடிகள் எழுவரும் வாழ்த்தவும், திருநந்திதேவர் பொற்பிரம்பு தாங்கி முன்னே செல்லவும், பானுகம்பன், வாணன், சங்குகன்னன் முதலிய சிவகணநாதர்கள் வாச்சியம் இசைக்கவும், கறைமிடற்று அண்ணல் இரத ஆரூடராய்த் திரிபுரத்தைச் சரத்கால சந்த்ர புஷ்ய நக்ஷத்திரத்தில் சமீபித்தனர்.

அண்டர்கள் அக்காலை அரனாரைப் பணிந்து “அண்ணலே! வில்லை வளைத்துக் கணை விடவேண்டும்” என்று பிரார்த்திக்க அழல் உருவாகிய சிவபெருமான் தமது திருக்கரத்து ஏந்திய மேருமலையாகிய வில்லில் பணியரசாகிய நாணை ஏற்றினர். அதில் அம்பு பூட்டித் திரிபுரத்தை அழிப்பின் அந்தரர் அந்தமில்லா அகந்தை உறுவர் என்றும், தனக்கோர் ஆயுதமேனும் படையேனும் துணை வேண்டுவதில்லை என்பதை தேவர்கள் தெரிந்து உய்தல் வேண்டுமென்றும், சங்கல்ப மாத்திரத்தாலேயே சகலமும் செய்ய வல்லான் என்பதை உலகம் உணருமாறும் இடப்பால் வீற்றிருக்கும் இமயவல்லியைக் கடைக்கணித்துப் புன்னகை புரிந்தனர். அக்கணமே புரங்கள் மூன்றும் சாம்பராயின. பெருந்தவராய் இருந்து சிவனடியே சிந்தித்து வந்த மூவரும் யாதொரு தீமையுமின்றிப் பெருமான்பால் வந்து பணிய, நீலகண்டர் அவர்களைத் துவாரபாலகராக அருளி, தேவர்களை அரவரிடத்திற்கு அனுப்பி வெள்ளிமாமலைக்கு எழுந்தருளினார். இமையவர் இடுக்கண் அகன்று இன்புற்றனர்.

பின்வரும் பிரமாணங்களை ஓதி உணர்ந்து தெளிக...

"பூஆர் மலர்கொண்டு அடியார் தொழுவார்; புகழ்வார், வானோர்கள்;
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவர்க்கு அருள்செய்தார்,
தூ மாமழை நின்று அதிர, வெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே".
                                                           --- திருஞானசம்பந்தர்.

"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்
எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப
வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்
வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”.
                                                                        ---  திருஞானசம்பந்தர்.

"வரிஅரவே நாண்ஆக, மால்வரையே வில்லாக,
எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்
பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்
கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே".
                                                            ---  திருஞானசம்பந்தர்.

"குன்ற வார்சிலை நாண் அராஅரி
         வாளி கூர்எரி காற்றின் மும்மதில்
வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே
தென்ற லார்மணி மாட மாளிகை
         சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்
அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே".
                                                          ---  திருஞானசம்பந்தர்.

"கையில்உண்டு உழல்வாரும் சாக்கியரும்
         கல்லாத வன்மூடர்க்கு அல்லாதானைப்
பொய் இலாதவர்க்கு என்றும் பொய் இலானைப்
         பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்
கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்
         கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த
செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய
         திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே".  ---  அப்பர்.

"வரும்பயனை எழுநரம்பின் ஓசையானை,
     வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம் செய் அவுணர் புரம் எரியக் கோத்த
     அம்மானை, அலைகடல் நஞ்சு அயின்றான் தன்னை,
சுரும்பு அமரும் குழல்மடவார் கடைக்கண் நோக்கில்
     துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனை, பெரும்பற்றப் புலியூ ரானைப்
     பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே".         --- அப்பர்.

"அலைஅடுத்த பெருங்கடல்நஞ்சு அமுதா உண்டு
         அமரர்கள்தம் தலைகாத்த ஐயர், செம்பொன்
சிலைஎடுத்து மாநாகம் நெருப்புக் கோத்துத்
         திரிபுரங்கள் தீஇட்ட செல்வர் போலும்,
நிலஅடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட
         நிரைவயிரப் பலகையால் குவை ஆர்த்து உற்ற
மலைஅடுத்த மழபாடி வயிரத் தூணே
         என்று என்றே நான்அரற்றி நைகின்றேனே". --- அப்பர்.

"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா
நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்
வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்
புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,
சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்
தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்
கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே". --- சுந்தரர்.

"மூவெயில் செற்ற ஞான்று உய்ந்த
     மூவரில்இருவர் நின்திருக் கோயில் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை,
     ஒருவ நீ கரிகாடு அரங்காக
மானை நோக்கியோர் மாநடம் மகிழ
     மணிமுழா முழக்கஅருள் செய்த
தேவ தேவ! நின்திருவடி அடைந்தேன்,
     செழும்பொழில் திருப்புன்கூர் உளானே".  --- சுந்தரர்.

"வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
   உளைந்தன முப்புரம் உந்தீபற
   ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற".    --- மணிவாசகர்.

"ஈர்அம்பு கண்டிலம் ஏகம்பர் தம்கையில்
     ஓர்அம்பே முப்புரம் உந்தீபற,
     ஒன்றும் பெருமிகை உந்தீபற".        --- மணிவாசகர்.

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி
     இருகு தையுமுடி தமனிய தனுவுடன்
     உருளை இருசுடர் வலவனும் அயன்என   மறைபூணும்
உறுதி படுசுர ரதமிசை அடியிட
     நெறுநெ றெனமுறி தலு,நிலை பெறுதவம்
     உடைய ஒருவரும் இருவரும் அருள்பெற  ஒருகோடி
தெருவு நகரிய நிசிசரர் முடியொடு
     சடச டெனவெடி படுவன, புகைவன,
திகுதி கெனஎரி வன,அனல் நகையொடு முனிவார்தம் சிறுவ”
                                                                      --- (அருவமிடை) திருப்புகழ்.

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்
மாளாது பாதகப் புரத்ரயத்தவர்
தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.

அடியவர் நினைப்பிலே அருள்தரு சிவன் உதவிய புதல்வோனே ---

தன்னை நினைத்துத் தொழும் அடியவருக்கு அவர் நினைத்ததை அருள் புரிபவர் சிவபெருமான். அவர் அருளால் அவதரித்த அறுமுகப் பரமனும் அவ்வாறே அடியவர்கள் சித்தத்தில் எழுந்தருளி இருந்து, அவர் வேண்டுவதை எல்லாம் வேண்டியவாறே அருள் புரிவான்.

"வேண்டும் அடியர் புலவர், வேண்ட அரிய பொருளை,
     வேண்டும் அளவில் உதவும் ...... பெருமாளே".
                                                                        ---  கழுகுமலைத் திருப்புகழ். 
 
"வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது
     வேண்ட வெறாது உதவு ...... பெருமாளே".
                                                                        --- திருவேங்கடத் திருப்புகழ்.


திருக்கை வேல், வடிவு அழகிய குருபர ---

திருக்கையில் வேலாயுதத்தினைக் கொண்டவரும், திருமேனி அழகரும் ஆகிய முருகப் பெருமான் அருணகிரிநாதருக்கு உறதேசம் புரிந்து அருளியவர்.

"முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வு என்று அருள்வாய்
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே"!

என்னும் கந்தர் அனுபூதி வாக்கால் அறியலாம்.

முருகன் என்றதனால் தெய்வத் தன்மை பொருந்தியவர் ஆகவும்,
குமரன் என்றதனால் இளம்பூரணன் ஆகவும்,  குகன் என்றதனால் அனைத்து உயிர்களிலும் உறையுகின்ற சர்வாந்தரியாமியாகவும்,
குருபரன் என்றதனால் குருமூர்த்தியாகவும் முருகப் பெருமான் விளங்குகின்றார்.

"முகம் எலாம் நெய் பூசி, தயங்கு
     நுதலின் மீதிலே பொட்டு அணிந்து,
     முருகு மாலை ஓதிக்கு அணிந்த ...... மடமாதர்,
முதிரும் ஆர பாரத் தனங்கள்
     மிசையில், ஆவியாய் நெக்கு அழிந்து,
     முடிய மாலிலே பட்டு அலைந்து, ...... பொருள்தேடி,

செகம் எலாம் உலாவிக் கரந்து,
     திருடன் ஆகி ஏசற்று உழன்று,
     திமிரன் ஆகி ஓடிப் பறந்து ...... திரியாமல்,

தெளியும் ஞானம் ஓதிக் கரைந்து,
     சிவ புராண நூலில் பயின்று,
     செறியுமாறு தாளைப் பரிந்து ...... தரவேணும்"

என்னும் அடிகளாரின் வேண்டுகோளின்படிக்கு முருகப் பெருமான் குருநாதராக எழுந்தருளி அருணகிரிநாதப் பெருமானுக்கு உபதேசம் புரிந்து அருளினார். அந்த அருளினை நினைந்து, "ஜெபமாலை தந்த சற்குருநாதா! திருவாவினன் குடிப் பெருமாளே" என்று போற்றினார்.

திருக்குரா அடி நிழல்தனில் உலவிய பெருமாளே ---

திருவிடைக்கழி என்னும் திருத்தலத்தில் திருக் குரா மரத்தின் நிழலில் எழுந்தருளி உள்ளார் முருகப் பெருமான்.

மயிலாடுதுறையிலிருந்து தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி" திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.

இறைவர்                   : காமேசுவரர்.
இறைவியார்               : காமேசுவரி.
தல மரம்                    : குரா, மகிழம். 
தீர்த்தம்                     : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.

தெய்வயானை அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
   
அம்பாள் தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
   
மூலத்தானத்தில் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.

சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம் முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின் துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய் இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

முருகப் பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
   
சேந்தனார் முத்தி பெற்ற தலம். திருமுறைகளில் இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
   
இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தலமரங்களாம். திருத்தல மரமாகிய "குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில் நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அர்ந்து பலரும் தியானம் செய்கின்றனர்.

முருகப் பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
   
சண்டேசுவர மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும் முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.

கருத்துரை

முருகா! தேவரீரது திருவடிகளைத் தொழுது உய்ய அருள்வாய்.
No comments:

Post a Comment

சத்தியம் வத, தர்மம் சர.

  வாய்மையே பேசு - அறத்தைச் செய் -----        சத்யம் வத ;  தர்மம் சர ;  என்பவை வேதவாக்கியங்கள். வாய்மையாக ஒழுகுவதைத் தனது கடமையாகக் கொள்ளவேண்...