அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
மருக்குலாவிய
(திருவிடைக்கழி)
தனத்த
தானன தனதன ...... தனதான
மருக்கு
லாவிய மலரணை ...... கொதியாதே
வளர்த்த
தாய்தமர் வசையது ...... மொழியாதே
கருக்கு
லாவிய அயலவர் ...... பழியாதே
கடப்ப
மாலையை யினிவர ...... விடவேணும்
தருக்கு
லாவிய கொடியிடை ...... மணவாளா
சமர்த்த
னேமணி மரகத ...... மயில்வீரா
திருக்கு
ராவடி நிழல்தனி ...... லுறைவோனே
திருக்கை
வேல்வடி வழகிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
மருக்
குலாவிய மலர் அணை ...... கொதியாதே,
வளர்த்த
தாய் தமர் வசை அது ...... மொழியாதே,
கருக்கு
உலாவிய அயலவர் ...... பழியாதே,
கடப்ப
மாலையை இனிவர ...... விடவேணும்.
தருக்
குலாவிய கொடி இடை ...... மணவாளா!
சமர்த்தனே!
மணி மரகத ...... மயில்வீரா!
திருக்
குரா அடி நிழல்தனில் ...... உறைவோனே!
திருக்கை
வேல் வடிவு அழகிய ...... பெருமாளே.
பதவுரை
தருக் குலாவிய கொடி இடை மணவாளா --- (நினைத்தவை
எல்லாம் தருகின்ற) கற்பக மரத்தினை உடைய தேவலோகத்தில் வளர்ந்த, கோடி போன்ற இடையினை உடைய தேவயானை அம்மையின்
மணவாளரே!
சமர்த்தனே --- சர்வ வல்லமை பொருந்தியவரே!
மணி மரகத மயில் வீரா --- ஒளி மிக்க பச்சை
நிற மயிலின் மீது வரும் வீரரே!
திருக் குரா அடி நிழல்தனில்
உறைவோனே
--- (திருவிடைக்கழியில் உள்ள)
திருக்குராமரத்தின் அடி நிழலில் வீற்றிருப்பவரே!
திருக் கைவேல் வடிவு
அழகிய பெருமாளே --- திருக்கையில் வேலை ஏந்திய, திருமேனி அழகரே!
மருக் குலாவிய மலர் அணை கொதியாதே
--- நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை விரகத்தின் காரணமாக கொதித்துச் சூடு தராமலும்,
வளர்த்த தாய் தமர்
வசையது மொழியாதே --- வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும்,
கருக்கு உலாவிய
அயலவர் பழியாதே --- அறிவும் நேர்மையும் உடைய அயலவர்கள் பழிச்சொல் கூறாமலும்
கடப்ப மாலையை இனிவர
விடவேணும்
--- தேவரீர் அணிந்துள்ள கடம்பமலர் மாலையை இனியாவது தந்து அருள வந்து அருளவேண்டும்.
பொழிப்புரை
நினைத்தவை எல்லாம் தருகின்ற கற்பக மரத்தினை உடைய
தேவலோகத்தில் வளர்ந்த, கொடி போன்ற இடையினை உடைய
தேவயானை அம்மையின் மணவாளரே!
சர்வ வல்லமை பொருந்தியவரே!
ஒளி மிக்க பச்சை நிற மயிலின் மீது வரும் வீரரே!
திருவிடைக்கழியில் திருக்குராமரத்தின் அடி நிழலில்
வீற்றிருப்பவரே!
திருக்கையில் வேலை ஏந்திய, திருமேனி அழகரே!
நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை
விரகத்தின் காரணமாக கொதித்துச் சூடு தராமலும், வளர்த்த தாயும் சுற்றத்தாரும் வசை மொழிகளைப் பேசாமலும், அறிவும் நேர்மையும் உடைய அயலவர்கள்
பழிச்சொல் கூறாமலும் தேவரீர் அணிந்துள்ள கடம்பமலர் மாலையை இனியாவது தந்து அருள வந்து
அருளவேண்டும்.
விரிவுரை
சிவம் கதிரவனும் அதன் கதிரும் போலத் தானும் தன் திருவருளும் என இரு
திறப்பட்டு நிற்கும் என்பது சித்தாந்தம். கதிரவன் தோன்றுவதற்கு முன்னே அதன்
கதிர்கள் தோன்றிப் பரவுதலால் இருள் நீங்கும். அதுபோலச் சிவனை அடைதற்கு முன்னே
திருவருளைப் பெறுதலால் ஆணவ இருள் நீங்கும். இவ்வாறு திருவருளை முதலில் அறிந்து
அதனோடு ஒன்றுபடும் நிலையே அருள்நிலை என்றும், துரியநிலை என்றும் சொல்லப்படுகிறது. சிவயோகம் என்ற பெயரையும் இது பெறும்.
திருவருள் சிவத்தின் வேறாகாது அதன் குணமே. ஆதலால், சிவயோகம் என்பதில் உள்ள சிவம் என்ற சொல் திருவருளைக் குறிக்கும். யோகம்
என்பதற்கு ஒன்றுதல் என்பது பொருள். எனவே, திருவருளோடு ஒன்றுதல் சிவயோகம் எனப்பட்டது. திருவருளோடு ஒன்றுபடுதலால் மலம்
ஆகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறுதலால், சிவயோகம் ஆன்ம சுத்தியாகும்.
அருள் நிலையை எய்தினார் பாச நீக்கம் பெறுவர் என்பது இதனால் விளங்கும். பாச
நீக்கம் என்பது துன்பம் அற்ற நிலையாகும். துன்ப நீக்கமே முடிந்த பயன் ஆகாது.
அதற்கும் அப்பால் உள்ள இன்பப் பேற்றைப் பெறுதல் வேண்டும். அதுவே உயிர் அடைதற்குரிய
முடிவான பயனாகும்.
அருள்நிலை என்பது கண்ணில்லாதவன் கண் பெற்றால் போன்றது. கண்ணில்லாதவன்
கண்ணைப் பெற்ற அளவிலே இன்பத்தை அடையமுடியாது. கண் பெற்றதன் பயனாகப் பொருள்களை
எல்லாம் கண்டு அவற்றுள் வேண்டாத பொருளை விட்டு நீங்கி, வேண்டும் பொருளை அடையும் பொழுதே இன்பம் உண்டாகும்.
அதுபோலத் திருவருளைப் பெற்ற அளவிலே இன்பம் உண்டாகாது. திருவருளைப் பெற்றதன்
பயனாக முப்பொருள்களின் இயல்புகளை உள்ளவாறு அறிந்து, வேண்டாத உலகியலினின்றும் நீங்கி, வேண்டும் பொருளாகிய சிவத்தை அடையும் போதே பேரின்பம் உண்டாகும். அருள்நிலை
திருவருட்பேறு ஆகும். சிவத்தை அடையும் நிலை சிவப்பேறு ஆகும். திருவருட்பேறு ஆன்ம
சுத்தியாகும் எனமேலே கூறினோம். சிவப் பேறாகிய இதுவே ஆன்ம லாபமாகும். அஃதாவது ஆன்மா
பேரின்பத்தைத் துய்க்கும் நிலையாகும்.
அருள்நிலை துரியநிலை எனப்படுதலால், அதற்கு அப்பால் உள்ள இந்தப் பேரின்ப நிலையாகிய சிவப்பேறு துரியாதீத நிலை
எனப்படுகிறது. இதனை அதீதநிலை எனச் சுருக்கமாகக் கூறுவர். இந்த அதீத நிலையே நிட்டை
நிலை எனப்படுவது.
உலகத்தோடு தொடர்புற்று நில்லாமல், உலகை மறந்து, அறிகின்ற
தன்னையும் மறந்து, சிவம்
ஒன்றையே அறிந்து அதில் அழுந்தி நிற்பதாகிய நிலையை உடம்பு உள்ள காலத்தில் அடைவதே
நிட்டையாகும். இந்நிலையில் பகல் இரவு முதலிய காலவேறுபாடுகள் தோன்றுவதில்லை. பிற
நினைவுகள் எழுவதில்லை. இந்நிலையில் நிற்பார்க்கு எல்லையில்லாததோர் இன்பம்
தோன்றும். அவ்வின்பம் மேலும் மேலும் பெருகி அவரை விழுங்கி நிற்கும். இதுவே
பரமசுகம் எனப்படும். முடிந்த இன்பம் என்பது அதன் பொருள். மலரிலுள்ள மதுவினைப்
பருகிய வண்டு எப்படி அம்மலரிலேயே மயங்கிக் கிடக்குமோ அப்படியே இறைவனது
வியாபகத்துள் அடங்கி அழுந்திப் பேரின்ப வாரிதியில் திளைத்து நிற்பர்.
இந்நிலையைத் தலைப்பட்டவர் எவ்வாறு இருப்பர் என்பதைக் காதல் வயப்பட்ட ஒரு
பெண்ணின் நிலையில் வைத்துக் காட்டுகிறார் திருநாவுக்கரசர்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம்
கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்தும் அவனுக்கே பிச்சி
ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன்
தாளே.
பெண் ஒருத்தி ஒருநாள் திருவாரூர்ப் பெருமானின் திருப்பெயரைக் கேட்டாள்.
அவனது பெயரைக் கேட்ட அளவிலேயே அவன் மீது அவளை அறியாமலே ஓர் ஈடுபாடு உண்டாயிற்று.
அந்தப் பெயருக்கு உரியவன் எப்படி இருப்பான் என்பதை அறிய அவள் உள்ளம் விழைந்தது.
தன் தோழியிடம் இதுபற்றி வினவினாள். அவன் கண்ணைக் கவரும் கட்டழகன். அவனது வடிவழகைச்
சொற்களிலே வடித்துக் காட்ட முடியுமா? அடடா! என்ன அழகு! பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
என்று தோழி கூறினாள்.
முதலில் அவனது பெயரைத் தெரிந்து கொண்ட தலைவி இப்பொழுது அவனது வண்ணத்தைக்
கேட்டறிந்தாள். பின்னும் அவளது உள்ளத்தில் வேட்கை கிளர்ந்தெழுந்தது. நித்தம்
மணாளன், நிரம்ப
அழகியன் என்றெல்லாம் சொல்கிறாயே, அந்தச் செம்பவள மேனியன் எங்கே இருக்கிறான் என்பது பற்றிச் சொல் என்று
தோழியிடம் கேட்டாள். அவன் இருக்குமிடம் திருவாரூர் என்று சொன்னாள் தோழி. இவ்வாறு
பெயர், வண்ணம், ஊர் இவற்றைக் கேட்டறிந்தவுடன் அத்தலைவன் மீது
அவள் தீராக் காதல் கொண்டு விட்டாள். எப்பொழுதும் அவனைப் பற்றிய நினைவுதான்!
காதலினால் அவள் பிச்சியாகவே ஆகிவிட்டாள். பெற்று வளர்த்த தாய் தந்தை எல்லோரையும்
தன் மனத்திலிருந்து அகற்றி விட்டாள். உலகத்தார் வகுத்து வைத்த ஆசாரத்தையும் கடக்கத் துணிந்து விட்டாள். அதாவது, தலைவனைத்தேடி அவனிருப்பிடத்திற்குத் தனியே
செல்லத் துணிவு கொண்டாள். உணவை மறந்தாள். உறக்கத்தை மறந்தாள். தன்னையே மறந்தாள். தன்வசம் அழிந்து, தலைவன் வழிப்பட்டு விட்டாள்.
"கரும்பும் துவர்த்துச் செந்தேனும் புளித்து அறக் கைத்ததுவே"
என்னும் நிலையினை ஆன்மா அடையும்.
தலை அன்பினை உடைய இத் தலைவியின் நிலையில் உள்ளவர் சத்திநிபாதம் வாய்க்கப்
பெற்ற உத்தமர். அவள் முதலில் தலைவனது பெயரைக் கேட்டாள் என்பது, ஞானாசிரியரிடம் உபதேசத்தைக் கேட்டு இறைவனது
இயல்பைப் பொதுவாக உணர்ந்த நிலையைக் குறிப்பதாகும். இது கேட்டல் என்றபடி
நிலையாகும். அந்நங்கை அடுத்துத் தலைவனது வண்ணத்தைக் கேட்டறிந்தாள் என்பது, பின்னர் இறைவனது இயல்பை ஆராய்ந்து உணர்ந்த
நிலையைக் குறிப்பதாகும். இது சிந்தித்தல் என்றபடி நிலையாகும். உலகியலில் ஒரு பெண்
ஓர் இளைஞனைச் சந்தித்துப் பழக நேரிடும்போது முதலில் பொதுவாக நட்பு ஏற்படுகிறது.
அவ்வளவில் நில்லாமல் அப்பெண் அவ் இளைஞனைப் பற்றி அடிக்கடி நினைக்கிறாள் என்றால்
அந்நட்புக் காதலாக மலர்கிறது என்பது பொருளாகும். அதற்கும்மேல், அவள் அவ் இளைஞனுடைய இருப்பிடம், அவனது சூழ்நலை முதலியவற்றை அறிந்து அங்கே செல்ல
மிகுந்த ஆர்வம் காட்டுகிறாள் என்றால் அவள் காதலில் உறுதிகொண்டு விட்டாள் என்பது
பொருள்.
அவ்வாறே தலைவி தலைவனது திருவாரூர் பற்றிக் கேட்டறிந்தாள் என்பது அவன் மீது
கொண்ட காதலின் உறுதிப்பாட்டைப் புலப்படுத்தும். இது ஞானாசிரியரிடம் கேட்டு அதைப்
பலகாலும் சிந்தித்துப் பின்னர் தெளிவுணர்வு பெற்ற நிலையைக் குறிப்பதாகும். இது
தெளிதல் என்றபடி நிலையாகும். அந்நங்கை அவனுக்கே பிச்சியானாள் என்பது, தெளிவுணர்வின் பயனாக இறைவனிடத்தில் அழுந்தி
நிற்பதாகிய நிலையைப் பெற்றதைக் குறிப்பதாகும். இது நிட்டை கூடுதல் என்றபடி
நிலையாகும். அன்னையையும் தந்தையையும் நினைவிலிருந்து அகற்றினாள் அந் நங்கை என்பது
ஞானநெறியில் என்ன பொருளைக் குறிக்கும் என்பதைக் காண்போம். ஞான நெறியில் அன்னையாக
இருப்பது திரோதான சத்தி. அத்தனாக இருப்பவன் அச் சத்திக்குரிய தடத்த சிவன். திரோதான
சத்தியே தாயாக நின்று பாசமாம் பற்றினை அறுத்து உயிரைப் படி முறையில் வளர்த்து
வருகிறது. சத்தி நிபாதம் என்ற பரிபக்குவ நிலையில் திரோதான சத்தி நீங்கி விடுகிறது.
தடத்த சிவன் என்ற நிலையும் அவ்வாறேயாம். இதுவே ஞானநெறியில் அன்னையையும் அத்தனையும்
நீத்த நிலையாகும்.
அகலிடத்தார் ஆசாரம் என்பது திருமணப் பருவம் வந்த பெண் இல்லினை இகந்து
செல்லாதிருத்தல் என்ற பழைய மரபாகும்; தலைவி அதனை அகன்றாள். அஃதாவது, இல்லிறந்து செல்லத் துணிந்தாள். ஞானநெறியில் அகலிடத்தார் ஆசாரம் என்பது, உலக மாந்தர் தன் முனைப்போடு கூடி வினைகளை
ஈட்டியும் வினைப்பயனை நுகர்ந்தும் உழலுதல். நிட்டை கூடிய ஞானியர்க்குத் தன்
முனைப்பும் இல்லை; வினைகளை
ஈட்டுதலும் இல்லை. வினைப்
பயனால் தாக்குறுதலும் இல்லை. ஆதலால் அவர் அகலிடத்தார் ஆசாரத்தை அகன்றவர் ஆவார்.
நங்கை தலைவன் ஒருவனையே நினைத்து தன்னை மறந்து நின்றாள். அவ்வாறே நிட்டை கூடியவரும்
தம்மையும் உலகையும் மறந்து, இறைவன் ஒருவனையே அறிந்து நிற்பர். கன்னிப் பெண் என்ற பெயர் நிறை
அழியாதிருக்கும் நிலையைக் குறிக்கும். இவள் தலைவனையே நினையும் நினைவினால்
நிறையழிந்து நின்றாள் ஆதலால், தன் நாமம் கெட்டாள் எனப்பட்டாள். நிட்டை கூடியவரும் சீவத் தன்மை கெட்டு
நிற்பர். ஆதலால் நாமம் கெடுதல் அவர்க்கும் பொருந்துவதேயாம். நங்கை தலைவன் தாளைத்
தலைப்பட்டாள் என்பது, அவள்
தனக்கென ஒன்று இன்றி அவன் வழிப்பட்டு விட்டாள் என்பதைக் குறிக்கும். ஞான நெறியில்
தாளைத் தலைப்படுதல் என்பது நிட்டையில் நின்றார் எய்தும் இன்புறு நிலையை
உணர்த்தும்.
இந்த இன்புறு நிலையைத் தலைப்பட்ட ஞானியர் சிவத்தை இறுகப் புல்லிப்
புணர்ந்து தம்மை மறந்து தமது அறிவையும் மறந்து பேரின்ப வெள்ளத்துள் மூழ்கித்
திளைப்பர்.
திருவாசகத்தில் "புணர்ச்சிப் பத்து" இந்த நிலையை அறிவுறுத்தும்.
நுகர்பவன், நுகர்ச்சி
அறிவு, நுகரப்படும்
பொருள் ஆகிய மூன்றும் வேறு வேறாய் உள்ள தன்மை தோன்றாத, உரை உணர்வுக்கு எட்டாத இன்ப நிலை அது. இதனை, "யான் ஆகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே" என்று
அருணகிரிநாதப் பெருமான் காட்டினார். இன்புறு நிலைக்கு அடிப்படை இறைவனிடத்துச்
செய்யும் அன்பாகும். இறைவன் செய்து வரும் இடையறா உதவியை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் நனைந்து நனைந்து அவனிடத்து இடையறாப் பேரன்பு
செய்தலே பேரின்பத்திற்கு வழி.
இத் திருப்புகழ்ப் பாடல் மேற்குறித்த தத்துவத்தில் அகத்துறையில் அமைந்தது.
தலைவனை நினைந்து வருந்துகின்ற தலைவிக்கு மாலைப் பொழுது தொடங்கி விரகதாபம்
மிகுந்திருக்கும். அதற்குத் துணை புரிவது மன்மதனின் கணைகள். குளிர்ந்த நிலவொளி வெப்பத்தைத்
தருவதாக அமையும். உடம்பிற்குக் குளிர்ச்சியையும், உள்ளத்திற்கு மகிழ்வையும் தருகின்ற கடலில் எழும் அலைகளின் ஓசையானது நாராசம்
போல் துன்பத்தைத் தரும். தலைவியின் நிலையை அறியாத தாயும், அயலவர்களும் வசைமொழிகளைப் பொழிவார்கள். இரவுப் பொழுது என்பது விடியாமல், ஒரு
ஊழிக் காலம் போல் நீண்டு துன்ப மிகுதிக்குத் துணை புரிகின்றது. அந்த விரகதாபம்
தணியும்படிக்கு முருகப் பெருமான் தான் அணிந்துள்ள கடப்பமலர் மாலையைத் தனக்குத்
தந்து அருளவேண்டும் என்னும்படியாக இப் பாடல் அமைந்துள்ளது.
"குளிர் மாலையின் கண், அணி
மாலை தந்து குறை தீர வந்து குறுகாயோ" என்று திருச்செந்தூர்த் திருப்புகழிலும், "மால் கண்ட பேதைக்கு உன் மணம் நாறும் மார் தங்கு
தாரைத் தந்து அருள்வாயே" எனப் பொதுத் திருப்புகழிலும் அடிகளார் அருளி
இருத்தல் காண்க. இன்னும் பிற இடங்களிலும் அடிகளார் இக் கருத்துப் பொதிந்த பாடல்களை
அருளி உள்ளார்.
இரவி என, வடவை
என, ஆலால விடம் அது என,
உருவுகொடு, ககனமிசை மீது ஏகி, மதியும்வர,
இரதிபதி கணைகள் ஒரு நால் ஏவ, விருதுகுயில் ......அதுகூவ,
எழுகடலின்,
முரசின் இசை, வேய்
ஓசை,
விடையின்மணி,
இசை குறுகி, இருசெவியில் நாராசம் உறுவது என,
இகல் புரிய, மதனகுரு
ஓராத அனையர்கொடு ....வசைபேச,
அரஅர என வநிதைபடு பாடு ஓத அரிது அரிது,
அமுதமயில் அதுகருதி யாரோடும்
இகல்புரிவள்,
அவசம்உற அவசம்உற ஆர்ஓமல்
தரவும் மிக ......மெலிவு ஆனாள்,
அகுதி இவள் தலையில்விதி, ஆனாலும்
விலக அரிது,
அடிமைகொள உனதுபரம், ஆறாத ஒரு தனிமை
அவளை அணை தர இனிதின் ஓகார
பரியின்மிசை ......வருவாயே.
--- திருப்புகழ்.
மருக்
குலாவிய மலர் அணை கொதியாதே ---
காதல்
வயப்பட்டோருக்கு நறுமடம் வீசும் மலர்களால் ஆன படுக்கையும் வெப்பத்தைத் தருவதாக அமையும்.
வளர்த்த
தாய் தமர் வசையது மொழியாதே ---
தமர்
- சுற்றத்தார்.
தன்னை
வளர்த்த தாயும், சுற்றத்தார்களும்
வசைமொழியைக் கூறுவார்கள்.
"மாதா
மாறு ஆனாள்" எனத் திருவாரூர்த் திருப்பகழில் அடிகள் காட்டி உள்ளார்.
கருக்கு
உலாவிய அயலவர் பழியாதே ---
கருக்கு
- அறிவுக் கூர்மை. நேர்மை.
ஊரவர்
கௌவை எருவாக அன்னைசொல்
நீராக
நீளும் இந்நோய். --- திருக்குறள்.
தருக்
குலாவிய கொடி இடை மணவாளா ---
தரு
- மரம். தோவலோகத்தில் உள்ள கற்பக மரத்தைக் குறிக்கும். இது மனத்தில் நினைத்தவற்றைக்
கொடுப்பது.
கொடியிடை
- கொடி போன்ற நுண்ணிய உடையினை உடைய தெய்வயானை அம்மையாரைக் குறிக்கும்.
சமர்த்தனே ---
சமர்த்து
- திறமை, வல்லமை.
இறைவன்
நர் வல்லமை பொருந்தியவன்.
மணி
மரகத மயில் வீரா ---
மணி
- ஒளி.
மரகதம்
- பச்சை நிறம்.
திருக்
குரா அடி நிழல்தனில் உறைவோனே ---
திருவிடைக்கழி
என்னும் திருத்தலத்தில் திருக்குராமரத்தின் அடி நிழலில் வீற்றிருப்பவர் முருகப் பெருமான்.
மயிலாடுதுறையிலிருந்து
தில்லையாடி (தில்லையாடி வள்ளியம்மை வளைவுக்குள் நுழைந்து) சென்று அங்கிருந்து 3 கி.மீ. சென்றால் "திருவிடைக்கழி"
திருத்தலத்தை அடையலாம். கோயில் வரை பேருந்து செல்கிறது. அண்மையில் உள்ள
திருமுறைத் தலம் திருக்கடவூர் ஆகும்.
இறைவர்
: காமேசுவரர்.
இறைவியார்
: காமேசுவரி.
தல
மரம் : குரா, மகிழம்.
தீர்த்தம் : சரவண தீர்த்தம், கங்கைக் கிணறு.
தெய்வயானை
அம்மையார் இறைவனிடம் திருப்பரங்குன்றம் செல்ல விடை கேட்டதாலும், முருகனுக்கு இரணியாசுரனைக் கொன்ற பழி
கழிந்ததாலும் இத்தலம் விடைக்கழி என்னும் பெயர் பெற்றதாகக் கூறுவர்.
அம்பாள்
தரங்கம்பாடிக்குச் சென்றதால் இக்கோயிலில் அம்பாள் சந்நிதி இல்லை.
மூலத்தானத்தில்
பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க
மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கும் உள்ள தனித்தனி
விமானங்களில், முருகனுடைய விமானம்
சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம்
சற்று தாழவும் உள்ளது.
சேந்தனார் பாடியுள்ள "திருவிசைப்பா" திருப்பதிகம்
முருகனைப் பற்றியது. அந்தாதி அமைப்பில் பாடப்பட்டுள்ளது. இப்பதிகம், தலைவனிடம் அன்பு கொண்ட தலைவியின்
துன்பத்தையும் - ஆற்றாமையையும் கண்டு, நற்றாய்
இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.
முருகப்
பெருமான் மூலத்தான மூர்த்தியாக விளங்கும் இத்தலத்திற்கு 'மகிழவனம்' என்ற பெயரும் உண்டு. தெய்வயானை அம்மை தனிச் சந்நிதியில் தவக்கோல தரிசனம்.
சேந்தனார்
முத்தி பெற்ற தலம். திருமுறைகளில்
இடம்பெற்றுள்ள முருகன் தலம்.
இத்தலத்தில்
இரண்டு வெவ்வேறு திருத்தல மரங்கள் உள்ளன; இவற்றுள்
குரா மரம் முருகப் பெருமானுக்கும்,
மகிழ
மரம் இறைவனுக்கும் தல மரங்களாம். திருத்தல மரமாகிய
"குரா மரம்" தழைத்துக் காட்சித் தருகிறது. பங்குனியில் பூக்கும் என்று
கூறுகின்றனர். மலைகளில் மட்டுமே தோன்றக்கூடிய இக்குரா மரம் இத்தலத்தில்
நிலத்திலும் தோன்றி வளர்ந்துள்ளது. இதன் கீழ் அமர்ந்து பலரும் தியானம்
செய்கின்றனர்.
முருகப்
பெருமான் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கு அமர்ந்து
தியானம் செய்தல் சிறப்புடையது ஆகின்றது - மனமும் ஒன்றி, சாந்தத்தையும், சத்துவகுணங்களையும் அருளுகின்றது.
சண்டேசுவர
மூர்த்தங்களும் இரண்டு உள்ளன. சிவச்சண்டேசுவரர், குகச்சண்டேசுவரர் என்று இறைவனுக்கும்
முருகனுக்கும் உரியவர்களாக பெயர்கள் சொல்லப்படுகின்றன.
கருத்துரை
முருகா!
அடியேனை ஆட்கொண்டு அருள் புரியவேணும்.
No comments:
Post a Comment