மேலான செல்வம் எது?
-----
வித்து முளையாகிறது. முளை செடியாகிறது. செடி மரமாகிறது. மரம் பூக்கிறது. மலர் காயாகிறது. காய் கனியாகிறது. இது போன்றே மனித வாழ்க்கையும் வளர்ந்து கனியாக வேண்டும். வித்து முளைத்துப் பயன் தருவதற்கு மண், நீர், உரம் மனிதன் ஒருவனின் கவனிப்பு ஆகியவை தேவைப்படுகிறத். கனிந்த பிறகு எந்தத் தொடர்பும் கனிக்குத் தேவைப்படுவது இல்லை. கனி நிலைக்கு முன்பு, சுவையிலும் தரத்திலும் வேறுபாடுகள் உண்டு. கனி நிலையில் சுவை வேறுபாடு இல்லை. இறைவனை, "பழத்திடைச் சுவை ஒப்பாய்” என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.
"அது பழச்சுவை என” என்று மணிவாசகம் கூறுகிறது. அது என்பது இறைவனைக் குறிக்கும். அது எப்படி இருக்கும் என்றால், "பழச்சுவை" போன்று இருக்கும். மனிதனுக்கும் பல்வேறு பொருள்களின் தொடர்பும் மனிதர்களின் கூட்டுறவும் தேவைப்படுகிறது. தனிமரம் தோப்பு ஆவது இல்லை என்பது போலவே, மனிதனுக்கும் சமுதாயம் என்பது தேவைப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவனை நன்னெறிப்படுத்த அறிவு நூல்களும் அருள் நூல்களும் அவசியம் தேவைப்படுகிறது. கருவுயிர்த்த நாள் முதல் தனி மனிதனைத் தொடர்ந்து வளர்த்து, அவனை அன்பு நெறியில் பயில, குடும்பத்தில் சேர்ப்பித்து, அன்புநெறியில் பயிற்றுவித்துப் பின் மேலான அருளியல் வாழ்க்கைக்கு உயர்த்துகிறது திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள். உலகில் மனிதர்களுக்குச் செல்வங்கள் பலப்பல வேண்டும். ஆயினும் அருட்செல்வமே தலையாய செல்வம் ஆகும் என்பதால்,
"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள."
என்று நிறுவுகிறார் திருவள்ளுவ நாயனார்.
"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றும் நாயனார் கூறி உள்ளாரே, எதுதான் உயர்ந்த செல்வம்? என்னும் வினா எழலாம். ஞானாசிரியன் செவி வழியாக உபதேசித்து அருளிய செல்வத்தால் அருட்செல்வம் விளைவதால், உபசார வழக்கமாகச் செவிச்செல்வத்தைச் சிறப்பித்தார் நாயனார் என்றே கொள்ளுதல் வேண்டும். அறிவின் பயன் அன்பு. "அறிவினால் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை" என்றார் நாயனார். அன்பின் முதிர்ச்சியில் அருள் தோன்றுகிறது என்பதை "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்னும் திருக்குறள் வழி நிறுவினார்.
நிலையாமையை உடைய உடலை விட்டு உயிர் பிரிந்தபின் உயிருக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள் அனைத்தும் நிலையாமையை உடையனவே. மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருந்து, உயிருக்கு உறுதியைத் தேடிக் கொள்வதற்கே பொருட்செல்வம் பயன்படவேண்டும். அருட்செல்வத்தைத் தேடிக் கொள்வதற்கே அது பயன்படவேண்டும்.
நிலையில்லாத செல்வத்தை அமாவாசை நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.
"இயக்கு உறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்
துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா;
மயக்கு அற நாடுமின் வானவர் கோனை,
பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வம் ஆமே."
இதன் பொருள் ---
வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் அமாவாசை நாளில் இருட்பிழம்பு போல ஆகிவிடுகிறது. துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. நேற்று அரசனாய் இருந்தவன் இன்று ஆண்டியாய் ஆயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே. ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து, சுவர்க்கச் செல்வத்தினரான தேவர்கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள். அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவன் ஆகின்றான்.
உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று பின்வரும் பாடலின் மூலம் அறிவுறுத்துகின்றார் திருமூல நாயனார்.
"ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே."
இதன் பொருள் ---
ஈக்கள் தேனைச் சேர்ப்பதற்குப் பூக்களின் மணங்களை அறிந்துப, அதன் வழியே பூக்களை அணுகி, தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும், வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள, தேனீக்கள் யாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும்.
மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனைச் சேர்த்துத் தமது கூட்டில் வைக்கும். அத் தேனைப் பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே அது பிறரால் கவரப்படுகிறது.
செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்கலம் கவிழ்வது போல அழிந்தொழியும் எனச் செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடி உள்ளார் திருமூல நாயனார்.
"மகிழ்கின்ற செல்வமும் மாடும், உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்,
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர் வீடு பேறாகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே."
இதன் பொருள் ---
மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந்து ஒழிதலைப்போல, விழுந்து ஒழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினையால் கூட்டுவிக்கப்பட்டு இருத்தலை உலகவர் அறிந்திலர்.
உடலுயிர் வாழ்க்கை இடையீடின்றி நடைபெறவே பொருள் தேவைப்படுகிறது. உயிரானது உள்ளிருந்து ஊர்ந்து செல்லுகின்ற உடலாகிய வண்டிக்கு எரிபொருளாக செல்வம் உள்ளது. உடல் வளம் பெற்று உயிர் நலம் பெறுவதற்குத் துய்க்கும் பொருள்களாக காய்களும், கனிகளும் மற்ற பொருள்களும் தேவை. அதுபோல, உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அருள் தேவைப்படுகிறது என்பதை மிக அழகாக
"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு
இவ்வுலகும் இல்லாகி யாங்கு"
என்று திருவள்ளுவ நாயனார் கூறுவதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.
அருள், அன்பின் முதிர்ச்சியில் தோன்றுகிறது. எந்த மொழியிலும் எந்தச் சமயத்திலும் அருள் நெறியே நெறி என உணர்த்தப்படுகிறது. உலகியலில் இருள் சூழ்ந்த நிலை துன்பத்தைத் தருகிறது. இருள் நிலையில் மேடும் பள்ளமும் தெரிவது இல்லை. பழுது எது? பாம்பு எது? என்று தெரிவதில்லை. எங்கும் செறிந்த இருள்நிலையைக் கடிந்து எழுகின்றது ஞாயிறு. ஞாயிறு எழுந்தவுடன் இருள் அகலுகிறது. உயிர்களுக்கு அறிவும் ஆள்வினையும் தோன்றுகின்றது. அதுபோலவே, அருட்சார்பு அற்றவர்கள் மனத்தில் இருட்செறிவால் நன்மையும் தீமையும் தெரிவது இல்லை. அருளியலில் ஈடுபட்டவுடன் அறியாமை அகலுகிறது: மயக்கம் தெளிகிறது. தெளிவு பிறக்கிறது.
இந்த நிலையை மணிவாசகப் பெருமான் மிக அழகாகத் திருவாசகப் பாடல் ஒன்றில் அமைத்துக் காட்டி உள்ளார்.
"இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்றநின் தன்மை, நினைப்பு அற நினைந்தேன்;
நீ அ(ல்)லால் பிறிது மற்று இன்மை
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
திருப்பெருந்துறை உறை சிவனே!
ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை,
யார் உன்னை அறியகிற் பாரே."
இதன் பொருள் ---
உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை. உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? இப்பொழுது எனக்கு அருள் புரிந்து, அறியாமை இருளைப் போக்கி, என் மனத்தே தோன்றுகின்ற சூரியனே போல வெளிவந்து நின்ற உன்னுடைய இயல்பை, தற்போதத்தினையே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்
அருள் தன்மையால் மனிதன் செடிகளையும் மரங்களையும்- பேணுகிறான். பக்கத்தில் வாழும் மனிதர்களைப் பேணுகின்றான். தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். ஆதலால், துன்பம் அவனை அணுகுவதில்லை. அப்படிப்பட்ட அவன் தன்னுயிர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. எல்லார்க்கும் தனது உயிர் அருமையானதே. அப்பர் பெருமான், "என்னினும் இனியான் ஒருன் உளன்" என்று இறைவனைக் குறிப்பிட்டார். ஆனால், பிறர் தனது உயிரைக் காதலிப்பர். பிற உயிரைத் துன்புறுத்துவர். இது அருள் நிலை அல்ல.
உயிர் யாதொன்றையும் சாராமல் இருக்க முடியாது. ஆதலால், உயிர் தனது சார்பிற்கு உரியனவாகிய பிற உயிர்களையும் அருட்கண்ணோடு காணும் தன்மையைப் பெறுதல் வேண்டும். அதுவே அருட்செல்வம். அந்தச் செல்வம்தான் செல்வத்துள் செல்வம் என்றார் திருவள்ளுவ நாயனார்.
தெருக்கோடியிலுள்ள வீடு தீப்பற்றி எரிந்தால், அந் நெருப்பினை மற்ற வீடுகளுக்குப் பரவாமல் அணைப்பதே எல்லாருக்கும் தீமையை விலக்கி, நன்மையைத் தருவது. அவ்வாறு செய்யாமல் தன் வீட்டின்மீது மட்டும் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க ஒருவன் முற்படுவான் என்றால், அது பயனற்றதாகவே முடியும். ஊற்றிய முயற்சியும் பாழாகி, அவனும் அவன் வீடும் அழிவது உறுதி. எவன் ஒருவன் தன்னுயிர்க்குத் துன்பம் வரக்கூடாது என்று கருதித் தன்னுயிரைக் காதலிக்கின்றானோ, அவன் பிற உயிர்க்கும் அன்பு காட்ட வேண்டும்.
செடி கொடிகளைப் பரிவோடு வளர்த்தால் உயிர் வாழ்க்கைக்குரிய வளப்பமான காய்களும், கனிகளும் கிடைக்கும். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசுவினுக்கு அன்பு காட்டினால் உயிர் வாழ்க்கைக்குரிய அமுதம் ஆகிய பால் கிடைக்கும். உயிர்க்கு இன்றியமையாத தேவையான மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடத்தில் காட்டும் இனிய முகத்தாலும், கூறும் இனிய சொற்களாலும் திரும்பப் பெறலாம். ஆதலால் தன்னுயிரைக் காதலிப்பவன் செய்யக் கூடிய அறிவுடைய செயல், அருள் உள்ளம் கொண்டு பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே ஆகும்.
"மன் உயிர் ஒம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன்உயிர் அஞ்சும் வினை"
என்று திருவள்ளுவ நாயனார் அச்சம் இல்லாமல் வாழுகின்ற அருள்நெறியை அழகுபடக் காட்டினார்.
அருள் நெறியில் ஒழுகாமல், தன்னலம் ஒன்றையே கருதிப் பிற உயிர்க்குத் துன்பம் செய்வர்கள், அருளை விட்டு விலகித் தீயநெறியில் வாழ்பவர்களே. அவர்கள் பொருளாகிய அறத்தை மறந்து வாழ்பவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
"பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர், அருள்நீங்கி
அல்லவை செய்து ஒழுகு வார்"
என்பது திருக்குறள்.
அருளை மறந்து, தீமையும் செய்து ஒழுகுதல் பரிதாபம். குளிக்கப் போனவன் குளிப்பதை மறந்து, அங்கு உள்ள சேற்றைப் பூசிக்கொண்டதைப் போல இருக்கிறது. அதனால்தான்,
"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான்
எல்லாரும் உவப்பது; அன்றியும்,
நல்லாற்றுப் படுஉம் நெறியுமார் அதுவே."
என்கிறது புறநானூறு.
அருள் உணர்வில் சிறந்து வாழ்வோருக்கு அல்லல் இல்லை. இதற்குச் சான்று, இந்த உலகில் ஏராளம் உண்டு. மணமிக்க மலர்களைத் தரும் செடிகளைப் பலர் விரும்பி வளர்க்கின்றனர். இனிய காய்களைக் கனிகளைத் தரும் மரங்களை வெட்டி அழிப்பவர் ஒருவருமில்லை. அப்படியே யாராவது இருந்தாலும் உலகம் அவர்களை மானிடராக ஒத்துக் கொள்வதில்லை. அவர்களை உலகம் கீழான கயவர்கள் என்று ஒதுக்குகிறது. அதுபோலவே, அருள் உணர்வு உடையவர்கள் வாழ்வார்கள்; வாழ்விக்கப் பெறுவார்கள். காரணம், அவர்கள் வாழ்வில் உலகம் வாழ்கிறது.
வாழ்க்கையின் அகத்திலும் புறத்திலும் அருளாட்சி உடையோர் அல்லல்பட மாட்டார்கள். அவர்களை அவலம் அடையாது. இது முக்காலும் உண்மை என்று திருவள்ளுவ நாயனார் சாதிக்கின்றார். இந்த உண்மைக்குத் திருவள்ளுவர் காட்டும் சாட்சி எது? காற்று வழங்கும் இந்தப் பெரிய உலகமே சாட்சி என்கிறார்.
"அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை, வளிவழங்கும்
மல்லன்மா ஞாலம் கரி." --- திருக்குறள்.
இந்த உலகத்தில் வலிமை உடையவர் வலிமை அற்றோரின் நிலத்தை அபகரித்துக் கொள்ளலாம். தண்ணீரை அணைகட்டித் தேக்கி வைத்துப் பிறருக்குத் தர மறுக்கலாம். கதிரொளியையும், நிலவொளியையும் கூடத் தடுத்து விடலாம். ஆனால், காற்றை யாரும் அப்படித் தடை செய்ய முடியாது. காற்றுக்கு வேலி இட முடியாது. தடுப்புச் சுவர் எழுப்ப முடியாது. யாரும் முயற்சி செய்து காற்றைசு சுவாசிப்பது இல்லை. அது இயல்பாகவே நிகழ்கிறது. அருள் ஆள்வார் பிறரை வாழ்வித்து வாழ்வர்; மகிழ்வித்து மகிழ்வர். அருளாட்சிக்கு ஊனாட்சித் தன்மை தடையாக இருக்கும்.
"ஊனினைப் பெருக்கி, உன்னை நினையாது ஒழிந்தேன், செடியேன், உணர்வு இல்லேன்" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தனது உடம்பின் உனைப் பெருக்க எண்ணுபவர் இறைவனை மறப்பர். அவர்கள் உணர்வு இல்லாதவர் ஆவார். உடல் பெருத்தால், உயிரின் ஆற்றல் முழுதும் ஊன் உடலுக்கு இரை தேடுவதிலேயே கழியும். இறை நினைவு எள்ளளவும் இருக்காது. அவனிடத்தில் உயிர் இரக்கம் என்பது சிறிதும் இருக்காது. உயிர் குடிகொண்டு உள்ள உடலை வளர்ப்பதற்கு எளிய மரக்கறி உணவே போதுமானது. நல்லூணர்வை வளர்க்க அதுவே துணை செயும். கதறக் கதறக் கழுத்தை அறுத்து இரத்தம் சொட்ட இரக்கமின்றிப் புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ஙனம் அருளாட்சி உடையவனாக இருக்க முடியும்? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.
"தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்,
எங்ஙனம் ஆளும் அருள்?
என்பது திருவள்ளுவ நாயனார் எழுப்பும் வினா.
மனிதன் உயிரைக் கொன்றுதான் ஊனைத் தின்கிறான். அவனால் பிரிக்கப்பட்ட உயிரை திருப்பித் தருகின்ற ஆற்றல் மனிதனிடத்தில் இல்லை. திருப்பித் தரமுடியாத நிலையிலுள்ள ஆற்றல் அற்ற மனிதன், உயிரைப் பிரித்து, ஊனைத் தின்பது பாவம். எப்படி அவன் தின்ற ஊனைத் திருப்பித் தரமுடியாதோ, அதுபோல நரகமும் அவனைத் திருப்பிவிடாது என்பதனை,
"உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு"
என்கிறார் திருவள்ளுவ நாயனார்.
புலால் உண்பவர் மீளா நரகத்தில் ஆழ்வர். இளங்கோவடிகளும் "ஊன் ஊண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்" என்றார். சிலர், தாம் கொல்லமாட்டார்கள். கடையில் விற்கும் புலாலை வாங்கி உண்பார்கள். இவர்கள் கருத்து கொன்றவனுக்கே பாவம். தமக்கு இல்லை என்பதாகும். கொலை செய்பவன் ஏன் செய்கிறான்? தான் வளர்த்த ஆட்டைத் தானே கொல்லவேண்டும் என்று எவனாவது எண்ணுவானா? புலால் உண்பவரின் விருப்பத்தை அறிந்தே அவன் கொல்லுகிறான். புலால் உண்பவர் இல்லையானால், கொல்பவரும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், புலால் உண்பவர்களே புலால் உண்ணும் குற்றத்தைச் செய்வதோடு அல்லாமல், பிறரைத் தம்முடைய புலால் இச்சையின் மூலம் கொலைக் குற்றம் செய்யத் தூண்டுகின்றனர். கொலை செய்பவரை விடக் கொலைக்குத் தூண்டுபவரே கொடியவர் என்று திருக்குறள் வன்மையாக எடுத்துக் கூறுகிறது.
"தினல்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்"
என்பது திருக்குறள்.
இறைவனை நினைந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒன்றன் உயிரைச் செகுத்து உண்ணாமையே மேலான அறம் என்று திருவள்ளுவ நாயனார் போதிக்கிறார்
"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"
என்பது திருக்குறள்.
"ஒன்றாக நல்லது கொல்லாமை” என்றும் திருவள்ளுவ நாயனார் வலியுறுத்துகிறார். தாயுமான அடிகளும், "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்று கூறினார். வள்ளல் இராமலிங்க அடிகள் வாடிய பயிரின் வாட்டத்தைக் கண்டு வாடினார். "கொல்லா நெறியே குருவருள் நெறி" என்றார்.
செல்வத்துள் செல்வம் ஆகிய அருட்செல்வத்தைப் பெறுவதற்கு புலால் உண்ணாமை இன்றியமையாத ஒன்று ஆகும். உயிர்களின்பால் நமக்கு அருள் இருந்தால், அருள் வடிவான இறைவனை நாம் எளிதில் அடையலாம். அப்படிப் பார்த்தால், புலால் உண்ணக் கூடாது என்னும் உணர்வை ஒருவன் பெறுவதே மேலான செல்வம் ஆகும். அவனை மேலான அருள் நிலையில் வைப்பதே அந்தச் செல்வம் ஆகும்.