பொது - 1053. அயிலின் வாளி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அயிலின் வாளி (பொது)


முருகா! 

விலைமாதர் வலைப் படாமல் நன்னெறியில் ஒழுக அருள்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச

     ரமுத ளாவு மாவேச ...... மதுபோல


அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி

     னளவு மோடி நீடோதி ...... நிழலாறித்


துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத

     துறவ ரான பேர்யாரு ...... மடலேறத்


துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு

     துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய்


பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான

     பவதி யாம ளாவாமை ...... அபிராமி


பரிபு ரார பாதார சரணி சாம ளாகார

     பரம யோகி னீமோகி ...... மகமாயி


கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி

     கனத னாச லாபார ...... அமுதூறல்


கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                       பதம் பிரித்தல்


அயிலின் வாளி, வேல்வாளி, அளவு கூரிது ஆய், ஈசர்

     அமுது அளாவும் ஆவேச ...... மதுபோல,


அறவும் நீளிதாய், மீள அகலிது ஆய், வார்காதின்

     அளவும் ஓடி, நீடு ஓதி ...... நிழல் ஆறி,


துயில் கொளாத வானோரும், மயல் கொளாத ஆவேத

     துறவர் ஆன பேர் யாரும் ...... மடல் ஏறத்


துணியுமாறு உலா, நீல நயன மாதராரோடு

     துவளுவேனை ஈடேறும் ...... நெறி பாராய்.


பயிலும் மேக நீகார சயில ராசன் வாழ்வான

     பவதி, யாமளா, வாமை, ...... அபிராமி,


பரிபுர ஆர பாதார சரணி, சாமள ஆகார,

     பரம யோகினீ, மோகி, ...... மகமாயி,


கயிலை ஆளர் ஓர்பாதி, கடவுள் ஆளி, லோக ஆயி,

     கனதன அசலா பார ...... அமுது ஊறல்


கமழும் ஆரணா! கீத கவிதை வாண! வேல்வீர!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி --- மேகக் கூட்டங்கள் தவழுகின்ற இமயமலைக்கு அரசனுக்குப் பெருவாழ்வாக அமைந்த மகளான உமாதேவியாரும்,

யாமளா --- பச்சை நிறம் உடையவளும்,

வாமை --- சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் அமர்ந்தவளும்,

அபிராமி --- பேரழகியும், 

பரிபுர ஆர பாதார சரணி --- சிலம்பு அணிந்த திருவடித் தாமரைகளை உடையவளும்,

சாமள ஆகார --- மரகதப் பச்சை வண்ணத்தை உடையவளும்,

        பரம யோகினீ --- மேலான யோகினியும்,

மோகி --- உயிர்களிடத்தில் அன்பு உள்ளவளும்,

மகமாயி --- பெரிய அம்பிகையும், 

கயிலையாளர் ஓர் பாதி --- திருக்கயிலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருமேனியில் ஓர் பாதியினை உடையவளும்,

கடவுள் ஆளி --- எல்லாத் தேவர்களையும் ஆள்பவளும்,

லோக ஆயி --- உலக அம்மை ஆனவளும், (ஆகிய அம்பிகையின்)

கன தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத --- மலைபோலப் பருத்து உள்ள தனபாரங்களில் ஊறிய அமுதத்தை உண்ட திருவாயால் வேதகீதங்கள் ஆகிய தேவாரப் பாடல்களை அருளியவரே!

கவிதை வாண --- கவியில் வல்லவரே!

வேல் வீர --- வேலாயுதத்தை உடைய வீரரே! 

கருணை மேருவே --- கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! 

அயிலின் வாளி --- அம்பின் கூர்மை,

வேல் வாளி --- வேலின் கூர்மை,

அளவு கூரிதாய் --- ஆகியவைகளை ஒத்த அளவு கூர்மை பொருந்தியதாய்,

ஈசர் அமுது அளாவும் --- சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளிய ஆலகால விடத்தினை ஒத்ததாய், 

ஆவேச மது போல --- உணர்வை மழுங்கச் செய்யும் கள்ளைப் போன்றதாய்,

அறவு(ம்) நீளிதாய் --- மிக நீண்டு உள்ளதாய்,

மீள அகலிதாய் --- பின்னும் அகலமாக உள்ளதாய்,

வார் காதின் அளவும் ஓடி --- நெடிய காது வரைக்கும் ஓடி,

நீடு ஓதி நிழல் ஆறி --- கூந்தலின் நிழலில் இளைப்பாறுவதாய்,

துயில் கொளாத வானோரும் --- கண் இமைக்காத வானவர்களும்,

மயல் கொளாத ஆவேத துறவரான பேர் --- காம மயக்கம் கொள்ளாத துறவினர்களும்,

யாரும் மடல் ஏற --- மற்ற யாரும் மடல் ஏறும்படியாக,

துணியுமாறு உலா --- துணிவு கொள்ளுமாறு உலவுகின்ற,

நீல நயன மாதராரோடு துவளுவேனை --- மையிட்ட கண்களை உடைய பொதுமாதரோடு இணங்கித் துவண்டு வாடுகின்ற அடியேனை,

ஈடேறும் நெறி பாராய் --- ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக.


பொழிப்புரை

மேகக் கூட்டங்கள் தவழுகின்ற இமயமலைக்கு அரசனுக்குப் பெருவாழ்வாக அமைந்த மகளான உமாதேவியாரும், பச்சை நிறம் உடையவளும், சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் அமர்ந்தவளும், பேரழகியும், சிலம்பு அணிந்த திருவடித் தாமரைகளை உடையவளும், மரகதப் பச்சை வண்ணத்தை உடையவளும், மேலான யோகினியும்,உயிர்களிடத்தில் அன்பு உள்ளவளும், பெரிய அம்பிகையும், திருக்கயிலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருமேனியில் ஓர் பாதியினை உடையவளும், எல்லாத் தேவர்களையும் ஆள்பவளும், உலக அம்மை ஆனவளும் ஆகிய அம்பிகையின் மலைபோலப் பருத்து உள்ள தனபாரங்களில் ஊறிய அமுதத்தை உண்ட திருவாயால் வேதகீதங்கள் ஆகிய தேவாரப் பாடல்களை அருளியவரே!

கவியில் வல்லவரே!

வேலாயுதத்தை உடைய வீரரே! 

கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! 

அம்பின் கூர்மை, வேலின் கூர்மை ஆகியவைகளை ஒத்த அளவு கூர்மை பொருந்தியதாய், சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளிய ஆலகால விடத்தினை ஒத்ததாய், உணர்வை மழுங்கச் செய்யும் கள்ளைப் போன்றதாய், மிக நீண்டு உள்ளதாய், பின்னும் அகலமாக உள்ளதாய், நெடிய காது வரைக்கும் ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறுவதாய், கண் இமைக்காத வானவர்களும், காம மயக்கம் கொள்ளாத துறவினர்களும், மற்ற யாரும் மடல் ஏறத் துணிவு கொள்ளுமாறு உலவுகின்ற மையிட்ட கண்களை உடைய பொதுமாதரோடு இணங்கித் துவண்டு வாடுகின்ற அடியேனை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக.


விரிவுரை


அடிகளார் இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்களின் கண்களைப் பற்றிக் கூறுகின்றார்.

ஈசர் அமுது அளாவும் --- 

திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை, சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளினார். எனவே, ஆலகால விடம் ஈசர் அமுது எனப்பட்டது.


ஆவேச மது போல --- 

ஆவேசத்தை உண்டாக்குவதால் மதுவை ஆவேச நீர் என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.


அறவு(ம்) நீளிதாய் --- 

அறவும் - மிகவும். முற்றும்.

மீள அகலிதாய் --- பின்னும் அகலமாக உள்ளதாய்,

துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏறத் துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை --- 

வானவர்களின் கண்கள் இமைக்காத தன்மை உடையவை. எனவேர, துயில் கொள்ளாத வானோர் என்றார். துறவினர்கள் காம மயக்கத்துக்கு ஆட்படாதவர்கள்.

முற்றும் துறந்த முனிவர்களும் தங்களைக் கண்டு மயங்கித் தியங்கி உருகி நிற்குமாறு அழகில் மிகுந்து நிற்பர் பொதுமகளிர்.

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே? "         --- கந்தலங்காரம்.


"மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம், - ஓத அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு."     --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்."

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி --- 

பயிலும் - தங்குகின்ற, பொருந்துகின்ற.


மேக நீகாரம் - மேகக் கூட்டங்கள்.


சயில ராசன் - மலையரசன்.

கயிலையாளர் ஓர் பாதி கடவுள் ஆளி லோக ஆயி கன தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத --- 

முருகப் பெருமான் உமாதேவியாரது திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதை உண்டு ஞானபண்டிதன் என்று நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச் செய்கின்றனர்.

அறுமுகனார் அம்மை முலைப்பாலை விரும்பிச் செய்த திருச்செயலை அடியில் கண்ட அருட்பாடலில் கண்டு மகிழ்க.

"எள்அத் தனைவருந்து உறுபசிக்கும்

இரங்கி, பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய்

இதழைக்குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

தோளின் மகரக்குழைதவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

விளைத்து, மடியின் மீதுஇருந்து,

விம்மிப் பொருமி முகம்பார்த்து,

வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

மழலைச் சிறுவா! வருகவே!

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா! வருகவே!"     ---திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.

உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே.  ஒருவர் இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அமைந்தது. மற்றொருவர்

ஆளுடைய பிள்ளையார். உமையம்மை அருளிய ஞானப் பாலை உண்டதனால், சிவஞானசம்பந்தர் ஆனார். வேதப் பொருள் நிறைந்த தேவாரப் பாடல்களைத் திருஞானசம்பந்தராக வந்து திருவாய் மலர்ந்து அருளினார்.


"எண்ணரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட, உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்து அருளிக் கையிற்பொற் கிண்ணம்அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்."


"யாவருக்கும் தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.

ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய் அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்

தாவில்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்."


"சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்,

தவ முதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்."    ---  பெரிய புராணம்.


கருத்துரை

முருகா! விலைமாதர் வலைப் படாமல் நன்னெறியில் ஒழுக அருள்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...