பொது - 1052. அமல வாயு ஓடாத

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அமல வாயு (பொது)


முருகா!

சிவயோகப் பெருநிலையை அடியேனுக்கு அருளுவீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


அமல வாயு வோடாத கமல நாபி மேல்மூல

     அமுத பான மேமூல ...... அனல்மூள


அசைவு றாது பேராத விதமு மேவி யோவாது

     அரிச தான சோபான ...... மதனாலே


எமனை மோதி யாகாச கமன மாம னோபாவ

     மெளிது சால மேலாக ...... வுரையாடும்


எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

     இதய பாவ னாதீத ...... மருள்வாயே


விமலை தோடி மீதோடு யமுனை போல வோரேழு

     விபுத மேக மேபோல ...... வுலகேழும்


விரிவு காணு மாமாயன் முடிய நீளு மாபோல

     வெகுவி தாமு காகாய ...... பதமோடிக்


கமல யோனி வீடான ககன கோள மீதோடு

     கலப நீல மாயூர ...... இளையோனே


கருணை மேக மேதூய கருணை வாரி யேயீறில்

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பரித்தல்


அமல வாயு ஓடாத கமல நாபி மேல், மூல

     அமுத பானமே, மூல ...... அனல் மூள,


அசைவு உறாது, பேராத விதமும் மேவி ஓவாது

     அரிசம் அதான சோபானம் ...... அதனாலே,


எமனை மோதி, ஆகாச கமனம் ஆம் மனோபாவம்

     எளிது, சால மேலாக ...... உரையாடும்


எனது யானும் வேறு ஆகி, எவரும் யாதும் யான்ஆகும்

     இதய பாவன அதீதம் ...... அருள்வாயே.


விமலை தோடி மீது ஓடு யமுனை போல, ஓர்ஏழு

     விபுத மேகமே போல, ...... உலகு ஏழும்


விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல,

     வெகு விதா முக ஆகாய ...... பதம்ஓடிக்


கமல யோனி வீடான, ககன கோள மீது ஓடு

     கலப நீல மாயூர! ...... இளையோனே!


கருணை மேகமே! தூய கருணை வாரியே! ஈறு இல்

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

விமலை தோடி மீதோடு யமுனை போல --- மலமக் அற்றவர் ஆகிய உமாதேவியாருடைய வளையல் அணிந்த திருக்கரத்தினின்றும் தோன்றி உலகு எங்குமாய் விரிந்து பரந்து விளங்கிய யமுனைநதி போலவும்,

ஓர் ஏழு விபுத மேகமே போல --- ஒப்பற்றதாய், எங்கும் வியாபித்து நின்ற ஏழு மேகங்களைப் போலவும்,

உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் --- ஏழு உலகங்களையும் அதன் அகல நீளத்தை ஆராய்கின்ற பெருமை மிக்க திருமால், 

முடிய நீளுமாறு போல --- அண்ட முகடு வரை நீண்டு நின்ற விசுவரூபம் போலவும்,

வெகு விதா முக --- அநேக திசைகளிலும், 

ஆகாய பதம் ஓடி ---  ஆகாய அளவுக்கும் ஓடிப் பரந்தும்,

கமல யோனி வீடான --- பிரமதேவரது உலகமான 

ககன கோள மீது ஓடும் --- பிரம்மாண்டத்தின் மீதும் தோகையை வீசிப் பறந்து ஓடுகின்ற

கலப நீல மாயூர --- தோகையையும், கடப்பமலர் மாலையையும் உடைய மயிலை வாகனமாக உடையவரே!

இளையோனே --- இளம்பூரணரே!

கருணை மேகமே ---  கருணையை மேகம்போல் பொழிகின்றவரே!

தூய கருணை வாரியே ---  தூய்மையான கருணைப் பெருங்கடலே!

ஈறு இல் கருணை மேருவே --- முடிவில்லாத கருணையில் மேருவாக விளங்குபவரே!

        தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

அமல வாயு ஓடாத கமல நாபி மேல் --- தூய்மையான பிராணவாயு அதன் இயல்புப்படி ஓடாவண்ணம் மூலாதார மகலத்தின் மீது அடங்கி நிற்க,

மூல அமுத பானமே மூல அனல் மூள --- அதனால் அமுத பானம் பருகுவதற்கு ஏதுவாக மூலாதாரத்தில் மங்கி நிற்கும் அனலை மூளுமாறு செய்து,

அசைவு உறாது ---  உள்ளமும் உடலும் உணர்வும் அசையாமல்படி நிறுத்தி,

பேராது விதமும் மேவி --- அந்தச் சமாதி நிலையினின்றும் சிறிதும் விலகாமல் நின்று,

ஓவாது --- ஒழியாமல் சாதனை செய்து,

(அரி சதான) அரிசம் அதான சோபானம் அதனாலே --- அப் பிராணவாயு நிற்கும் இடங்களாகிய ஆறு ஆதாரங்களாகிய படிகளின் மீது மகிழ்வோடு ஏறி அதனால் வந்த சிவயோக முறையாலே,

எமனை மோதி --- உயிரை உடலினின்றும் பிரித்து அடக்க வரும் கூற்றுவனை வென்று,

ஆகாச கமனம் ஆம் மனோபாவம் சால எளிது --- ஆகாச கமனம் ஆக மனத்தை அடக்கித் தியான பாவனையை எளிதாக அடைந்து,

மேலாக உரையாடும் எனது யானும் வேறு ஆகி ---  மேலானதாகச் சொல்லுகின்ற எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் வேறாகச் செய்து,

எவரும் யாதும் யான் ஆகும் --- எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் யானாகப் பார்த்து அவற்றுடன் ஒன்றுபட்டு நிற்கும்,

இதய பாவன அதீதம் அருள்வாயே --- உள்ளத்தில் நினைப்பதற்கு அரிய அப் பெருநிலையை அடியேனுக்கு அருள் புரிவீர்.

பொழிப்புரை

மலம் அற்றவர் ஆகிய உமாதேவியாருடைய வளையல் அணிந்த திருக்கரத்தினின்றும் தோன்றி உலகு எங்குமாய் விரிந்து பரந்து விளங்கிய யமுனைநதி போலவும், ஒப்பற்றதாய், எங்கும் வியாபித்து நின்ற ஏழு மேகங்களைப் போலவும், ஏழு உலகங்களையும் அதன் அகல நீளத்தை ஆராய்கின்ற பெருமை மிக்க திருமால், அண்ட முகடு வரை நீண்டு நின்ற விசுவரூபம் போலவும், அநேக திசைகளிலும்,  ஆகாய அளவுக்கும் ஓடிப் பரந்தும், பிரமதேவரது உலகமான பிரம்மாண்டத்தின் மீதும் தோகையை வீசிப் பறந்து ஓடுகின்ற, தோகையையும், கடப்பமலர் மாலையையும் உடைய மயிலை வாகனமாக உடையவரே!

    இளம்பூரணரே!

கருணையை மேகம்போல் பொழிகின்றவரே!

தூய்மையான கருணைப் பெருங்கடலே!

முடிவில்லாத கருணை மேருவாக விளங்குபவரே!

தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

தூய்மையான பிராணவாயு அதன் இயல்புப்படி ஓடாவண்ணம் மூலாதாரத்தில் அடங்கி நிற்க, அதனால் அமுத பானம் பருகுவதற்கு ஏதுவாக மூலாதாரத்தில் மங்கி நிற்கும் அனலை மூளுமாறு செய்து, உள்ளமும் உடலும் உணர்வும் அசையாமல்படி நிறுத்தி, அந்தச் சமாதி நிலையினின்றும் சிறிதும் விலகாமல் நின்று, ஒழியாமல் சாதனை செய்து, அப் பிராணவாயு நிற்கும் இடங்களாகிய ஆறு ஆதாரங்களாகிய படிகளின் மீது மகிழ்வோடு ஏறி அதனால் வந்த சிவயோக முறையால்,  உயிரை உடலினின்றும் பிரித்து அடக்க வரும் கூற்றுவனை வென்று,  ஆகாச கமனம் ஆகிய மனத்தை அடக்கித் தியான பாவனையை எளிதாக அடைந்து, மேலானதாகச் சொல்லுகின்ற எனது யான் என்ற புறப்பற்றையும் அகப்பற்றையும் வேறாகச் செய்து, எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும் யானாகப் பார்த்து அவற்றுடன் ஒன்றுபட்டு நிற்கும், உள்ளத்தில் நினைப்பதற்கு அரிய அப் பெருநிலையை அடியேனுக்கு அருள் புரிவீர்.

விரிவுரை


அமல வாயு ஓடாத ---

அமலவாயு - தூய்மையான பிராணவாயு. காமக்ரோதம் உடையார்க்கு பிராணவாயு சூடாகவும், தூய்மை அற்றும் வெளிப்படும்.  காமக்ரோதம் இல்லாத யோகிகளுடைய சாந்தமான பிராணவாயு குற்றும் அற்று இருக்கும்.

அப் பிராணவாயு வெளிமுகப்படாமல் உள்ளடங்கி நிற்கச் செய்தல் சிவயோக சாதனையாகும்.

அமுத பானமே மூல அனல் மூள ---

அவ்வாறு பிராணவாயு ஒடுங்கியபடியால் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி எழுந்து, அதனால் அங்குள்ள மூலாக்கினி மூளும். அந்த அக்கினியின் தாக்குதலால் மதிமண்டலம் வெதும்பி அமுதம் பெருகும். அதனை உண்டு யோகிகள் தன்மயம் அற்று சின்மயமாக வீற்றிருப்பார்கள்.

"நாலு சதுரத்த பஞ்சறை, மூலகமலத்தில் அங்கியை,

     நாடியின் நடத்தி, மந்திர ...... பந்தியாலே,

நாரண புரத்தில், இந்துவின் ஊடுஉற இணக்கி, நன்சுடர்

     நால்திசை நடத்தி, மண்டல ...... சந்தி ஆறில்


கோலமும் உதிப்ப, கண்டு உள நாலினை மறித்து, இதம்பெறு

     கோ என முழக்கு சங்கு ஒலி, ...... விந்துநாதம்

கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு, ஒரு

     கோடி நடனப் பத அம் சபை ...... என்றுசேர்வேன்?"     --- திருப்புகழ்.


"நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட

     வாசி அனலூடு போய்ஒன்றி வானின்கண்

          நாம மதி மீதில் ஊறும் கலாஇன்ப ...... அமுதுஊறல்


நாடி, அதன் மீது போய்நின்ற ஆநந்த

     மேலைவெளி ஏறி, நீஇன்றி நான் இன்றி,

          நாடி இ(ன்)னும் வேறு தான் இன்றி வாழ்கின்றது .....ஒருநாளே."--- (மூளும்வினை) திருப்புகழ்.


"...வாயுவை அடக்கியும், மனதினை அடக்கியும்,

மெளனத்திலே இருந்தும்

மதிமண்ட லத்திலே கனல்செல்ல அமுது உண்டு

வனம் ஊடு இருந்தும், அறிஞர்

ஆயும் மறை முடிவான அருள்நாடினார், அடிமை

அகிலத்தை நாடல் முறையோ?

அண்டபகிர் அண்டமும் அடங்க ஒரு நிறைவாகி

ஆனந்த மானபரமே." ---  தாயுமானார்.

   

ஆணிலே பெண்ணிலே என்போல ஒருபேதை

        அகிலத்தின் மிசை உள்ளதோ?

      ஆடிய கறங்குபோல் ஓடிஉழல் சிந்தையை

        அடக்கி, ஒரு கணமேனும் யான்

காணிலேன், திருவருளை அல்லாது மௌனியாய்க்

        கண்மூடி, ஓடுமூச்சைக்

      கட்டி, கலாமதியை முட்டவே மூலவெங்

        கனலினை எழுப்ப, நினைவும்

பூணிலேன், இற்றைநாள் கற்றதும் கேட்டதும்

        போக்கிலே போகவிட்டு,

      பொய்யுலகன் ஆயினேன், நாயினும் கடையான

        புன்மையேன், இன்னம்இன்னம்

வீணிலே அலையாமல், மலை இலக் காகநீர்

        வெளிப்படத் தோற்றல் வேண்டும்.

      வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

        வித்தகச் சித்தர்கணமே. ---  தாயுமானார்.


அசைவு உறாது ---

உள்ளமும் உணர்வும் உடம்பும் அசையாது சித்திர தீபம் போல், காற்று அறியாத் தீபம் போல், சமாதியில் நிலைத்து நிற்றல்.  அவ்வாறு நின்றால் திருவருளைக் காணலாம்.


பேராது ---

மேலே கூறிய சிவயோக நிலையினின்றும் ஒருபோதும் விலகாமல் நிலைத்து நிற்றல். பிரிந்து விலகி இடர்ப்பட்டோர் பலர். அங்கு நிகழும் சித்திகளைக் கண்டு மயங்கினார் பலர். உலகவர் புகழுரை கேட்டுத் தியங்கினார் பலர். ஆகவே அதினின்றும் சிறிதும் பிறழாமல் உறுதியாக நிற்றல் வேண்டும்.


ஓவாது ---

யோகநிலை எய்தினாலும் கூட அதை ஒழியாமல் சாதனை செய்தல் வேண்டும். சிவஞானபோதத்தில் 7, 8, 9 -ஆம் சூத்திரங்கட்கு சாதன இயல் என்று பேர்.

சாதனம் செய்யும் முறை, அதற்குரிய அங்கம், அதனால் ஆகும் பயன் ஆகிய இம் மூன்றையும் தெரிந்துகொண்டு இடையறாது சாதனை செய்து மெய்ப்பொருளை அடையவேண்டும்.

அரி சதான சோபானம் அதனாலே ---

சோபானம் - படி.  அரி - காற்று. ச – உடன். தானம் - இடம்.

அரிசம் + அது ஆன என்றும் பிரித்துப் பொருள் கொள்ளலாம். அரிசம் - மகழ்ச்சி.

பிராணவாயு யோகசாதனையில் தங்குதற்கு இடமாகியவை ஆறு ஆதாரங்கள். சாதார யோகம், நிராதார யோகம் என்று இரு வகையான யோக சாதனைகளில் முதலில் கூறிய சாதார யோகத்தைப் பயில்பவர், மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்று ஆறு ஆதாரங்களிலும் பிராணவாயுவை நிறுத்தி, ஆங்காங்குள்ள ஆதார தேவதையைக் கண்டு வணங்கி, அவர்களது அருளால் ஏழாவது இடமாகிய பிரமரந்திரத்தைத் திறந்துகொண்டு, சகஸ்ராரப் பெருவெளியை அடைந்து சிவமயமாக இருப்பர்.

“நாளும் அதிவேக கால்கொண்டு தீமண்ட

வாசிஅனல் ஊடுபோய் ஒன்றி, வானின்கண்

நாமமதி மீதில் ஊறும் கலாஇன்ப அமுதுஊறல்

நாடி, அதன்மீது போய் ஒன்றி, ஆனந்த

மேலை வெளிஏறி, நீஇன்றி நான்இன்றி

நாடி,இனும் வேறு தான்இன்றி வாழ்கின்றது ஒருநாளே". --- (மூளும்வினை) திருப்புகழ்.


நீவேறு எனாது இருக்க, நான்வேறு எனாது இருக்க,

     நேராக வாழ்வ தற்குஉன் ...... அருள்கூர

நீடார் சடாத ரத்தின் மீதேப ராப ரத்தை

     நீகாண் எனா அனைச்சொல்...... அருள்வாயே... ---  (நாவேறு) திருப்புகழ்.


எமனை மோதி ---

எமனைத் தாக்கி வெற்றி பெறுவது என்பதன் கருத்து முடிவைச் செய்கின்ற காலத்தை வென்று நித்தியராக சிவயோகிகள் தமது விருப்பப்படி இருக்க வல்லவர் என்பதாகும்.

"நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும்

கோலக் குறத்தியுடன் வருவான், குருநாதன் சொன்ன

சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே

காலத்தை வென்றுஇருப்பார், மரிப்பார் வெறும் கர்மிகளே."  


என்று வரும் கந்தரலங்காரப் பாடலையும் இங்கு காண்க.


"இரவுபகல் போன ஞான பரமசிவ யோக தீரம்

           எனமொழியும் வீசு பாச     கனகோப

     எமபடரை மோது மோன உரையில்உப தேச வாளை

           எனதுபகை தீர நீயும்        அருள்வாயே.".  --- (ஒருவழிபடாது) திருப்புகழ்.


ஆகாச கமன மா மனோபாவம் ---

ஆகாச கமனம் - விண்ணிடை சஞ்சரித்தல். சிவயோக சாதனையால் உடம்பினுடைய கனம் குறைந்து, ஒளி மயம் ஆவதால், ஆகாசகமனம் முதலியவைகள் எளிதில் உண்டாகும்.

மனோபாவம் - மனத்தில் மெய்ப்பொருளை நினைத்து நினைப்பு அற நிற்றல் - தியானம். இதை மணிவாசகர் "தேனிப்பு" என்று கூறுகின்றார்.


"சிரிப்பார், களிப்பார், தேனிப்பார்,

திரண்டு திரண்டுஉன் திருவார்த்தை

விரிப்பார், கேட்பார், மெச்சுவார்,

வெவ்வேறு இருந்துஉன் திருநாமம்

தரிப்பார், பொன்னம் பலத்தாடும்

தலைவா என்பார், அவர்முன்னே

நரிப்பாய் நாயேன் இருப்பேனோ?

நம்பி இனித்தான் நல்காயே."


எனது யானும் வேறு ஆகி ---

எனது - புறப்பற்று.  யான் - அகப்பற்று.

பற்று அற்றார்க்கே பிறப்பு அறும். "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்பார் நம்மாழ்வார்.


"பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும், மற்று

நிலையாமை காணப் படும்."


"யான்எனது என்னும் செருக்கு அறுப்பான், வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்."


"பற்றுக பற்றுஅற்றான் பற்றினை, அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு."


என்னும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் திருவாக்குகளையும், அதற்குப் பரிமேலழகர் வரைந்துள்ள உரையையும் இங்கு உய்த்து உணர்க. புறப்பற்று அகப்பற்று என்பதனை வடநூலார் மமகாரம் அகங்காரம் என்பர்.

என்னது யான் என்ற இரண்டும் அற்றார்க்கு எல்லா இடங்களும் சிவசந்நிதியாகவே தோன்றும். அவர்கட்கு சுட்டறிவு இன்றி, அருளறிவு தோன்றும்.

"என்னதுயான் என்னல் அற்றோர் எங்கிருந்த பார்க்கினும்நின்

சந்நிதிஆம், நீபெரிய சாமி பராபரமே." --- தாயுமானார்.


"என்னதுயான் என்பதுஅற எவ்விடமும் என்ஆசான்

சந்நிதியாக் கண்டு,நிட்டை சாதிப்பது எந்நாளோ." --- தாயுமானார்.

'யான்' என்னும் அகங்காரம் என்பது அற்ற இடம் ஒரு திருவடி. 'எனது' என்னும் மமகாரம் என்பது அற்ற இடம் ஒரு திருவடி. ஆகவே, இறைவனுடைய இரண்டு திருவடிகளும் இருவகைப் பற்றும் அற்ற இடங்கள் ஆகும். திருவடி பெற்றான், திருவடிப் பேறு என்பதற்கெல்லாம் பொருள் பற்றற்ற நிலையடைதல் என்பதாகும்.

இக் கருத்து கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் கூறுமாறு காண்க.

"யான்எனது என்று அற்ற இடமே திருவடியா,

மோன பாரானந்தம் முடியாக."

யான் யான் என்றும், என்னது என்னது என்றும் இறுமாந்து கருமாந்திக் கொண்டு கெடுகின்றனர் பலர். தனது அல்லாததை, எனது என்பது பேதைமை ஆகும். ஆகவே, இதனை அறவே துறந்து உய்வுபெறல் வேண்டும்.

எவரும் யாதும் யான் ஆகும் இதய பாவன அதீதம் ---

எவரும் - உயர்திணை.  யாதும் - அஃறிணை.

சராசரங்கள் எல்லாம் தானாகும் தன்மை. அவ்வாறு ஆனோர் சிந்தனை எங்கும் தங்கும். அவர்கள் செயல் எங்கும் நிகழும்.

"அங்கமே நின்வடிவம் ஆனசுகர் கூப்பிடநீ

எங்கும்ஏன் ஏன்என்றது என்னே பராபரமே." ---  தாயுமானார்.

இந்த நிலை மிகப் பெரிய நிலை. அதனால் இதை இதயபாவனாதீதம் என்றார். மனதில் நினைப்பதற்கும் கூட முடியாத அத்துணைப் பெருமை உடையது. "உலகேழும் யானாக" என்று அருணகிரிநாதர் "ஆனாத ஞான புத்தியை"  எனத் தொடங்கும் திருப்புகழிலும் இந் நிலையைத் தான் பெற்றதாகக் கூறியிருக்கின்றார்.

"எனதுயானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்

இதயபாவ னாதீதம் அருள்வாயே.".

என்ற இத் திருப்புகழ் அடி, எப்போதும் மறவாமல் நினைந்து உணர்ந்து உய்வு பெறத்தக்கது.


விமலை தோடி மீது ஓடு யமுனை போலவே ---

விமலை - பார்வதி, மலம் இல்லாதவள்.

'தொடி' என்ற சொல் சந்தத்தை நோக்கி, 'தோடி' என்று நீட்டல் விகாரம் பெற்றது.

தொடி - வளையல். வளையல் அணிந்த கரத்தினை இது குறிக்கின்றது. ஆகு பெயர்.

கங்கை யமுனை முதலிய நதிகள் உமையம்மையாருடைய வளையல் அணிந்த திருக்கரங்களினின்றும் தோன்றின.

கங்கை பிறந்த வரலாறு

திருக்கயிலாய மலையில் மணித். தவிசின் மீது பவளமலை போலே சிவபெருமான் வீற்றிருந்தருளினார். மரகதக் கொடி போன்ற உமாதேவியார் ஒரு திருவிளையாடல் காரணமாகச் சிவபெருமானுடைய பின்புறமாக வந்து, மெல்ல அவரது திருக்கண்களைத் தமது திருக்கரங்களால் மூடினார். அதனால், அகில உலகங்களும் இருண்டுவிட்டன. உலகில் உள்ள ஒளிப் பொருள்கள் யாவும் இறைவனுடைய கண்களின் ஒளியே என்பதை உலகம் அப்போது உணர்ந்தது. இறைவனுக்கு ஒரு கணமாகிய அந்த நேரம், ஏனைய தேவர்கட்கும் மனிதர்கட்கும் பல யுகங்கள் ஆயின. ஆன்மாக்கள் இருளில் இடர்ப்பட்ட போது, இறைவர் தமது நெற்றியில் உள்ள ஞானாக்கினிக் கண் மலரைச் சிறிது திறந்தருளினார். அதனால் ஒளி உண்டாக உலகங்களின் இடர் நீங்கியது. அப்போது, அம்மை அஞ்சி, தமது மலர்க்கரங்களை எடுத்தனர். அக் கரமலர்களின் பத்து விரல்களினின்றும் பத்து கங்கைகள் தோன்றின. அவைகள் அகில உலகங்களிலும் ஓடிப் பரந்து வியாபித்தன. அதனைக் கண்ட அமரர்கள் இறைவனிடம் ஓடி முறையிட்டனர். கருணை வள்ளலாகிய சிவபெருமான், அக் கங்கையைத் தமது சடையில் ஏற்று அருளினார். உலகமெல்லாம் பரவி அழிக்கத் தொடங்கிய கங்கை இறைவருடைய சடையில் ஒரு உரோமத்தில் அடங்கியது.

மாலயனாதி வானவர்கள் சிவபெருமானை வணங்கி நின்று, ஞானாம்பாளுடைய திருக்கரங்களில் தோன்றியதனாலும், தேவரீருடைய திருச்சடைமுடியில் தங்கியதனாலும் உயர்ந்த இக் கங்கை நீரில் சிறிது எமது உலகங்கட்கும் தந்து உதவவேண்டும் என்று இரந்தார்கள்.

"மேதினி அண்டம் முற்றும் விழுங்கி கங்கை உன்தன்

பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி

மீதினில் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கள்

மூதெயில் நகரம் வைகச் சிறிதுஅருள் முதல்வ என்றார்." ---  கந்தபுராணம்.

அவ்வண்ணமே சிவமூர்த்தி தமது திருமுடியில் விளங்கிய கங்கையில் சிறிது அமரர்க்கு வழங்கி அருளினார். அதைப் பெற்ற திருமால் பிரமன் முதலியோர் தத்தம் உலகில் கொண்டுபோய் அமைத்து, கங்கையால் புனிதம் பெற்றார்கள்.

சத்திய உலகில் தங்கிய கங்கையைப் பகீரத மன்னன் வேண்ட மீண்டும் சிவபெருமான் அதனைத் தமது சென்னியில் ஏந்தி, பூமிக்கு அனுப்பி அருளினார். அது பாகீரதி என்ற பெயருடன் பாதலத்தில் பாய்ந்து கபிலரால் எலும்புக் குவியலாய்க் கிடந்த அறுபதினாயிரம் வீரர்களாகிய சகரர்கட்கு அருள் செய்தது.

இத்தகைய கங்கையின் ஒரு பிரிவு யமுனாநதி. அது கருமையாகவும் பரந்தும் இருக்கும். எம்பெருமானுடைய மயில் தனது பச்சைக் கலாபத்தை விரித்துப் பறக்கும் அழகு, உமையம்மையின் திருக்கரத்தில் தோன்றி எங்கும் பரவிய யமுனாநதி போல் காட்சி தருகின்றது என்கிறார் அடிகளார்.


ஓர் ஏழு விபுத மேகமே போல ---

விபு - வியாபகம், எங்கும் பரவி உள்ளது. ஆகாயம் எங்கும் வியாபித்து இருக்கின்ற ஏழு மேகங்களைப் போல மயில் எங்கும் நிழல் படுமாறு தோகையை விரித்துப் பறக்கின்றது. ஏழு மேகங்கள் ஆவன -- சம்வர்த்தம், ஆவர்த்தம், துரோணம், புட்கலாவர்த்தம், காளமுகி, சங்காரித்தம், நீலவர்ணம்.


உலகு ஏழும் விரிவு காணும் மாமாயன் முடிய நீளுமா போல ---

காத்தல் தொழிலைப் புரியும் நாராயணர் எங்கும் நிறைந்து இருப்பவர். விஷ்ணு என்ற சொல்லுக்கு வியாபகம் ஆனவர் என்பது பொருள். எனவே, வியாபகமாகிய திருமால் விசுவரூபம் கொண்டால் எப்படியோ, அப்படி மயில் உலகமெல்லாம் தனது மரகத ஒளியை வீசிப் பறந்து வருகின்றது.

மயிலுக்கு முன்று உவமைகள் கூறினார். ஒன்று யமுனை நதி. ஒன்று மேகம். ஒன்று திருமாலின் விசுவரூபம். மூன்றும் கருமை நிறம் உடையவை. மயில் பச்சை நிறம் உடையது.  மயிலின் பெருமையை இப்படி அருணகிரிநாதர் அழகாக எடுத்துக் கூறுகின்றார்.  

கருணை மேகமே, தூய கருணை வாரியே, ஈறுஇல் கருணை மேருவே, தேவர் பெருமாளே ---

முருகப் பெருமானையும் மூன்று சொற்றொடர்களால் இங்கு விளித்துக் கூறுகின்றார். "கருணைமேகம்", "கருணைவாரி”, "கருணைமேரு".

கருணை பொழிவதனால் "மேகம்" என்றார். கடல் இல்லையானால் மேகம் மழை பொழிய இயலாது. ஆகவே, மேகத்திற்குக் கடல் ஆதாரம். ஆதலினால், "கருணைவாரி" என்றார். கடல் உப்புக்கடல் ஆதலால், உவர்ப்பு இல்லாத கருணைப் பெருங்கடலை,  "தூய கருணைவாரி" என்றார். கடலுக்கும் உலகுக்கும் ஆதாரமாக இருப்பது மேருமலை ஆதலினால், "கருணைமேரு" என்றார். மேகம், வாரி, மேரு என்ற மூன்றாக, முருகவேளை உருவகம் செய்தனர். கைம்மாறு கருதாமல் உதவுவது மேகம். கரை இல்லாமல் நின்று விலை உயர்ந்து மணி முத்துக்களுக்கு உறைவிடமானது கடல். என்றும் சலியாமல் உயர்ந்த நிற்பது மேரு. இது போல்,  முருகப் பெருமானின் தன்மைகள் விளங்குகின்றன.


கருத்துரை


முருகா!  சிவயோகப் பெருநிலையை அடியேனுக்கு அருளுவீர்.


No comments:

Post a Comment

பொது --- 1088. மடவியர் எச்சில்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மடவியர் எச்சில் (பொது) முருகா!  அடியேனை ஆண்டு அருள்வாய். தனதன தத்த தந்த தனதன தத்த தந்த      தனதன தத்த...